அந்த இன்னொரு பெண்ணைப் பற்றி... -6-
ஊரறிந்துவிட்டது.
சந்திப்பின் மறைவிடங்களில்
தேம்பி அழுகிறது
அவர்கள் விட்டுச் சென்ற
அன்பு.
-மகுடேசுவரன்
(தொகுப்பு: ‘யாரோ ஒருத்தியின் நடனம்”)
நீங்கள் ஒருநாள் சாதாரணமாய்க் கடந்து சென்ற அனுபங்களாக அவை இருக்கலாம். அந்த அனுபவங்களில் வந்து சென்ற சொற்களாக அது இருக்கலாம். ஆனால் என்றைக்கோ நீங்கள் தட்டிச் சென்றிருக்கக்கூடிய -உங்களுக்குப்- பெறுமானம் அற்ற விடயம் அது!
எனது அப்பம்மாவோடு வசிக்கும் காலங்கள் எனக்கு வாய்த்தன. அவவிற்கு பிடித்தமான நாடகமொன்று: ‘மெட்டி ஒலி’. ‘மெட்டி, மெட்டி மெட்டி ஒலி- ஒரு குலமகள் வீட்டுக்குள்ள கொண்டு வரும் சீதனம் மெட்டி, மெட்டி, மெட்டி ஒலிதான்” என பாடலிலேயே ‘மங்களகரமான” விடயங்களைக்கொண்ட வெகுஜனங்களைக் கவர்ந்த ஒரு மெகாத் தொ...டர். அதை அவ வெகு ஆர்வமாப் பார்ப்பா. அப்படிப் பாக்கேக்குள்ள எப்பவும் அந்த நாடகத்தின் பிரதான பாத்திரம் மாணிக்கத்தோட ‘தொடுப்பு” வச்சிருக்கிற பெண்ணை வையோ வையெண்டு வைவா. நாடகம் போய்க்கொண்டிருக்கேக்குள்ளையே தொடர்ந்து நடக்கும் அது. இந்த நாடகத்தைத் தொடர்ந்திருந்து பாக்கிற அளவில்ல என்ர ஆர்வம், போக வரேக்குள்ள பாப்பன். அப்பிடி ஒருக்கா நாடகம் நடந்தெண்டு இருக்கிற இடத்த நான் கடக்கேக்குள்ள பாத்தா அப்பம்மா தொலைக்காட்சிக்குக் கிட்டவா நிண்டு அந்த “தொடுப்பு” வச்சிருக்கிற பெண்ணோட முகத்துக்கு நேர கையைக் காட்டிக் காட்டி “தோறை, தோறை” இன்ன பிறவாய் கடுமையாத் திட்டிக்கொண்டிருந்தா...
என்னோட யோசினையெல்லாம் இப்படியாய் இருந்தது: இந்தப் அப்பம்மா ஏன் சம்மந்தப்பட்ட ஆணை விட்டிட்டு அந்தப் பெண்ணைத் திட்டுறா?
இரண்டு மனைவியர் அல்லது அதற்கு மேலவும் பெண்களைக் கொண்டவர் கதைகள் எமக்குப் புதிதல்ல. பிடித்தமான எழுத்தாளர்கள் தொடங்கி சினிமா இயக்குநர்கள் வரை தெரியும் கதைகள். எமது தேசங்களிலும் பிற "முன்னேறாத" எனப்படுகிற தேசங்களில்தான் இவை "மனைவிகள்" அல்லது வப்பாட்டிகள் என "ஏற்றுக்"கொள்ளப்பட்டு நடைமுறையில் உள்ளது. மேற்குலகங்களில் இது ஒரு ("கள்ளத்") தொடர்புதான்.
இதில் அறா ீதியான பார்வை என்ன? ஒரு பெண் தனது மரபார்ந்த எண்ணங்களோடு மணமுடிக்கிறாள்; ஓரு குடும்பத்திற்கான வாரிசு மற்று
ம் குடும்ப வேலைகளை செய்வதுாடாக சொத்துடமை மற்றும் குடும்பத்தை உருவாக்குகிறாள். அப்போது அவளது கணவனுக்கு இன்னொரு பெண் தொடர்பு. அந்தக் கணவனால் முதலாவது பெண்ணை விட முடிவதில்லை. ஒரு சாதாரணமான, பிற்போக்கான, ஆண் மகனுக்க மட்டுமல்ல மிகவும் அசாதாரணமான சிந்தனைகளையுடைய ஒரு முற்போக்கான ஆண் மகனுக்குங்கூட. ஏனெனில் ஒரு குடும்பத்தைத் தாங்க, சமைத்துப் போட, "ஏற்பாடு" செய்யப்பட்ட ஒரு பெண் - அவளை 'இழக்க' அவர்கள் விரும்புவதேயில்லை.
இதில் மிகப் பெரிய கொடுமை தமது, இன்னொரு பெண்மீதான “காதலை” அல்லது ‘இயல்பாக வரக்கூடிய ப்ரியத்தை” மற்றப் பெண் “புரிந்துகொள்ள” வேண்டுமென நினைப்பது? ஓரு முற்போக்கானவனுக்கு இருக்கக்கூடிய அதே கொள்கைகள் கோட்பாடுகள், ஒரு பிற்போக்கான அல்லது மரபான சிந்தனையுடைய பெண்ணுக்கு இருந்தால் அதை மதிக்க வேண்டுமா வேண்டாமா?
இரண்டாவது மனைவியென்கிற, பல காதலிகளில் ஒருத்தி என்கிற, அங்கீகாரங்களிலும் இல்லை ஒரு தனி மனுசியின் வாழ்வு, அல்லது கள்ளத் தொடர்புகள் என்கிற துாற்றதல்களிலும் இல்லை அவளின் வாழ்வு. மாறாக, அவமானத்தில், குற்ற உணர்ச்சிகளில், தாழ்த்தப்பட்ட சுயமதிப்பில் தங்குகிறது அது.
ஆண்களும் பெண்களுமான நீங்கள் எல்லோரும்போலத்தான் நானும், அந்த இன்னொரு பெண்ணைப் பற்றி எனக்கு பெரிதாய் மனப்பதிவு இல்லை. என்னுடைய சொற்கள், நடத்தைகள் எல்லாமே ஆளப்பட்ட ஆண்களின் அதிகாரத்தின் சொல்லாடல்கள்தான். அதனால்தானோ என்னவோ, அந்த இன்னொரு பெண்ணைப் பற்றி எனக்கு பெரிதாய் மனப்பதிவு இல்லை. டயானா போன்ற சார்ல்ஸிலும் பல ஆண்டுகள் குறைந்த, மிக மிக இளமையான, அழகான சிறு பெண்ணுடன் ஒப்பிடுகையில் சார்ல்ஸிலும் பல வயதுகள் கூடிய, மிக முக்கியமாக "கன்னி" அல்லாத, இளமையின் பூச்சே படாத, மினுமினுப்பை உடலில் இழந்த, கன்னம் உள்ளே போன, அந்தப் பெண்ணில் யாருக்குத்தான் சிறந்த மனப்பதிவு ஏற்படும்? எம்மிடையே புழங்கிவரும் பல வாசகங்கள்போல "கிளிபோல பெண்டாட்டி இருந்தாலும் குரங்குபோல ஒன்று தேடும்" ஆண் மனதின் அடையாளமாகத்தான் கமீலா பார்க்கரை என்னால்ப் பார்க்க முடிந்தது. டயானாவின் துயரமான மனவாழ்விற்கு முழுமுதற் பொறுப்பாளனான சார்ல்ஸைவிட வசைபாட நேர்ந்தது கமீலாவைத்தான், மக்கள் மற்றும் ஊடகங்கள் உட்பட.
மிகவும் கலாச்சாரவாதிகளென மனதில் பதிந்த பிரித்தானிய மக்கள் பொது மேடையில் கமீலாவை எப்படி எதிர்கொள்வார்கள் என்றொரு எண்ணம் எனக்கு எப்போதுமே எழுந்ததில்லை, கமீலாவைப்பற்றி ஒரு பொருட்டே இல்லாதபோது அந்தத் திக்கில் மனம் ஏன் செல்லப் போகிறது...? மாறாக, ஊடகங்கள் தந்த, ஆரம்பத்தில் பெண்களுடன் மிகவும் கூச்சமாக இருந்த சார்ள்சிற்கு மன்மதக்கலையைக் கற்றுக்கொடுக்க அரண்மனையால் ஏற்பாடு செய்யப்பட்ட பெண் (அதுவும் அவரது கணவனின் ஒப்புதலோடு) போன்ற 'கிளுகிளுப்பான’ பிம்பங்களில்தான் மனம் நின்றது. சமீபத்தில் நான் பார்த்த ஒரு தொலைக்காட்சி நிகழ்ச்சி கமீலாவைப்பற்றிய பார்வையையே மாற்றிவிட்டது.
பொது இடங்களில் கமீலாவைக் காணும்போது மக்கள் எச்சிலால் துப்புவார்களாம். மோசமான வாசகங்களால் துாற்றுவார்களாம். இப்போதுதான் கமீலாவின் மீதான துவேசங்கள் "சற்றே" ஓய்ந்திருக்கின்றன என்றார் அந்தச் செய்தியாளர். அந்த "சற்றே" என்ற சொல் மிகவும் துன்புறுத்தி விட்டது.
உண்மையில் அப்படியொரு அவமானப்படுத்தலை பாரம்பர்யம்(?!) மிக்க பிரித்தானிய சமூகத்தினர் முடிக்குரிய இளவரசர் சார்ல்ஸிற்கு செய்திருக்கவே மாட்டார்கள், மாறாக பூங்கொத்துகளுடனும் சிலிர்ப்புடனும் “அவருடன்” கைகுலுக்கினர், படம் பிடித்தனர், ஆனால் அந்த இன்னொரு பெண்ணோ அவர்களது வெறுப்பிற்கு ஆளாக வேண்டி இருந்தது!
எனது அப்பம்மாவோ தலைமுறைகள் பின் தங்கியவர். ஒருவனையே கொன்றிருந்த(!) படியால் ஒரு ‘குலமகள்.’ வேசிகளையும் இரண்டாவது பெண்களையும் வைப்பாட்டிகளையும் தெருவில் வைத்து கேள்விகேட்க, கல்லெறிய, படுக்கைக்கு அழைக்க, யாரிடமும் அனுமதி தேவையற்ற “பின்தங்கிய” கண்டத்தைச் சேர்ந்தவர். பிரித்தானியாவோ ஒரு ‘வளர்ந்த’ நாடு.
உலகத்தின் நியாயங்களைப் பற்றி எனக்குப் பெரிதாய் ஒன்றும் ஏமாற்றங்கள் இல்லை, ஆனால் இந்த இரண்டாவது நபர்களைப்பறறி வாசிப்பவர்கள் ஏதாவது நினையுங்களேன்! குறைந்தபட்சம் துப்பாமல் ஆவது இருப்பீர்கள் அல்லவா!
9 Comments:
உங்கள் பதிவை நான் தொடர்ந்து வாசிக்கிறேன். நிறைய எழுதவும். நன்றி.
ரொம்பவும் நன்றாக இருக்கிறது..தொடர்ந்து எழுதவும்.
அருமையான பதிவு! தொடர்ந்து எழுதுங்கள்.
கமீலா பார்க்கர்-பௌல்ஸ் பிரிட்டன் டாப்லாய்டுகளால்தான் அசிங்கமாக அலைக்கழிக்கப்பட்டார். பிரிட்டனில் இந்த மோசமான கீழ்த்தரமான ஊடகங்கள் மக்கள் மனதை மாற்றும் பெரும் சக்தி வாய்ந்தவை. விடாது அவை செய்யும் சமரினால் யாரையும் கொடியவராகச் சித்தரித்து விட முடியும். இதில் உண்மை, பொய் என்றெல்லாம் கவலைப்பட மாட்டார்கள். திரித்துக் கூறுவது, செய்திக் கலப்படம், பொய்யாக கணினியில் மாற்றப்பட்ட படங்கள், கிசுகிசுக்கள் என்று எதை வேண்டுமானாலும் சேர்த்து என்னத்தை வேண்டுமானாலும் எழுதலாம்.
பிரிட்டன் மக்களும் இச்செய்தித்தாள்களை விரும்பிப் படிக்கின்றனர். அவை சொல்வதை வேதமாகவும் நினைக்கின்றனர்.
தமிழர் கலாச்சாரம் என்றில்லை, வேறெந்தக் கலாச்சாரத்திலுமே மணவாழ்வுக்கப்பால் பிற பெண்டிருடன் தொடர்பு வைத்திருக்கும் (பிரபலமான) ஆண்கள் மீது பொதுமக்கள் எந்தக் காழ்ப்புணர்ச்சியையும் காண்பித்ததில்லை. "காரணமான பெண்" மீது வெறுப்பும், "பாதிக்கப்பட்ட பெண்" மீது பரிவும், ஆண் மீது நியூட்ரலான பார்வையுமாகவே இருந்துள்ளது, தொடர்ந்தும் வருகிறது.
நல்லாகச் சொன்னீங்கள்.
நானும் பலரையும் கேட்ட கேள்விதான்.
இங்கு யேர்மனியிலேயே பெண்கள் பெரிதும் விசனப் படுவார்கள்.
ஆண் பல பெண்களுடன் தொடர்பு கொண்டால் அவன் கதாநாயகன்.
பெண் பல ஆண்களோடு தொடர்பு கொண்டால் அவள் நடத்தை கெட்டவள்.
இதுதான் உலகமென்று.
இந்த நியாயங்கள் என்று மாறுமோ..?
உங்கள் சிந்தனைகள் என்னைக் கவர்ந்துள்ளன.
தொடர்ந்தும் எழுதுங்கள்.
நட்புடன்
சந்திரவதனா.
உங்கள் கருத்துகள் ஆணித்தரமாக உள்ளன.பலவிதமான வாதப்பிரதிவாதங்களை எனக்குள் எழுப்பியுள்ளன.முதன் முதலாக தீவிரமான பத்தி எழுத்தாளினியை வலைப்பதிவுகளில் சந்திக்கிறேன் தொடர்ந்தும் எம்மவர்களுக்குள்ளே ஊறிப்போயிருக்கும் பிற்போக்குவாதக் கொள்கைகள் பற்றிய உங்கள் கருத்துகளை தாருங்கள்.இது உங்கள் மனத்திருப்திக்காக எழுதுவதாகக் கூறிக்கொண்டாலும் பல விவாதங்களை மையமாகக் கொண்டவை
வ்ர்ரே வா. இந்த மேல்kind பத்தியும் உங்க கருத்தைக் கொஞ்சம் எழுதுங்களேன்.
வ்ர்ரே வா. இந்த மேல்kind பத்தியும் உங்க கருத்தைக் கொஞ்சம் எழுதுங்களேன்.
நன்றி நண்பர்களே! தொடர்ந்தும் எழுதுவேன்...தொடர்ந்தும் வலையில் சந்திப்போம்!
BBC: Inside the HaremProgramme 1 Wednesday 13th October, 11:00 - 11:30 Polygamy - the positivesTo Listen
Post a Comment
<< Home