@font-face { font-family: TSCu_InaiMathi; font-style:normal; font-size: 10pt; font-weight:normal; src:url(http://mathy.kandasamy.net/fonts/TSCUINA1.eot); }

Friday, October 15, 2004

.....சுணைக்கிது

-நிரூபா (சிறுகதை)


கறுப்பு. அதில வெள்ளப் புள்ளி.
சிவப்பும் நீலமும் கலந்தது.
கறுப்பில மஞ்சள் ஊத்திவிட்டமாதிரி.
எத்தின வித விதமா. வண்ணாத்திப்பூச்சி!
பஞ்சு போல செட்டயள். அடிச்சு அடிச்சு பறக்க எவ்வளவு வடிவாக் கிடக்கு.
'வண்ணத்திப் பூச்சி வண்ணத்திப் பூச்சி பறக்கிது பார். பறக்கிது பார். அழகான செட்டை அடிக்கிது பார். அடிக்கிது பார்"
ரீச்சற சுத்திச் சுத்தி ஓடுறது. ரண்டு கையும் செட்ட. நேசறி ரீச்சர் சொல்லித் தந்த பாட்டுகளில இப்பவும் பிடிச்சது இதுதான்.
சில நேரங்களில கும்பலா வரும். எதப் பாக்கிறது எண்டுதெரியாமல் இருக்குமென்ன?
வண்ணாத்தி எண்டால் நல்ல விருப்பம். அதப் பிடிச்சு கிட்டவைச்சுப்பாக்கவேணும்.
பின் வளவில் ஒரு நாள் ரண்டு சிறகுகள கண்டனான். நீலமும் கறுப்பும் கலந்தது. உடம்பக் காணேல. என்ன நடந்துதோ தெரியாது.
உயிரோட ஒருநாளைக்கு பிடிச்சுப்பாக்கத்தான்வேணும். செட்டயளக் எடுத்துக்கொண்டுபோய் சமயப்புத்தகத்துக்குள்ள வைச்சிருக்கிறன். எந்தநாளும் பாக்கிறனான். நல்ல வடிவு. இந்தமுற தீபாவளிக்குத் தச்ச என்ர சட்டமாதிரி.

'மாவெடி மாவெடி. புளியெடி புளியெடி. மாவெடி மாவெடி. புளியெடி புளியெடி......"

சரியான கவலையா கிடக்கு. எங்க திரியிதோ? பாவம். இனிமேல் அப்பிடியெல்லாம் பிடிக்கக் கூடாது. ரண்டு கையளையும் சேத்துப்பிடிச்சு கூடுமாதிரிவைச்சுத்தான் பிடிக்கவேணும்.
அண்டைக்கு அந்தச் செந்வந்தியில ஒண்டு வந்து நிண்டிது. நல்ல வடிவானது. பிடிப்பம் எண்டு போனன். பறந்திட்டிது. எப்பிடியும் இண்டைக்கு பிடிக்கத்தான் வேணும். பின்னால ஓடினன். முருங்க மரத்தில போய் நிக்கிது. ஓடிப்போய் பிடிச்சிட்டன்.
ஒரு துண்டு செட்டமட்டும் பிஞ்சு வந்;திட்டிது. ஐயோ. பாவம். அதுக்கு நொந்திருக்குமென்ன? பாவம். சிலநேரம் செத்துப்போயிருக்குமே? பிஞ்ச செட்டயோட ஒருநாளும் வண்ணாத்திய பாக்கேல்ல. செட்ட பிரிஞ்சா செத்திடுமெண்டுதான் நினைக்கிறன். வளவு முழுதும் தேடிப் பாத்திட்டன். காணேல்ல. கவலையாக் கிடக்கும். செத்துத்தான் இருக்குமென்ன? இனிமேல் அப்பிடிப் பிடிக்கக்கூடாதென்ன? பாவம்.

'மாவெடி மாவெடி. புளியெடி புளியெடி. மாவெடி மாவெடி. புளியெடி புளியெடி......"

வேளைக்கு வேலையள முடிச்சிட்டா அம்மாவோடயே போயிடலாம்.
ஒரே இழுவயில முத்தம் கூட்டீற்றன். இனிச் சாணி தெளிக்கிறதுதான்.

சின்ன விரல்களுக்கிடையில் சாணி பிசிறித் தெறித்தது. அவளது மஞ்சள் பச்சை கலந்த பூப் பூ சட்டையிலும் சில சிதறல்கள் ஓடிவந்து ஒட்டிக்கொண்டன. வாளி நிறையத் தண்ணீர் நிரப்பியபோது கரிய நிறத்தில் வண்டுப் பிணங்கள் மிதந்தன. சிலதுகளைமட்டும் துக்கி வெளியே வீசமுடிந்தது. றொக்கட் வேகத்தில் முற்றம் முழுவதும் சாணி மழை. சரியாகக் கரைபடாமல் ஒரு இடத்தில் கட்டியாய். உயிர்தப்பிய வண்டொன்று அதன்மேல் மெல்ல மெல்ல உடலசைந்தது.
ஜீவிக்கு என்ன நடந்தது? தண்ணி அள்ளச் சென்ற பக்கத்து வீட்டு கலா யோசித்தாள்.

ராசமணி நீத்துப் பெட்டியிலிருந்து நான்காவது தடவையாக புட்டைக் கொட்டிக்கொண்டிருக்கும் போது குசினிச் சுவரோடு தேய்த்துக் கொண்டு நின்றபடி கேட்டாள் 'அம்மா! முத்தம் கூட்டி சாணியெல்லாம் தெளிச்சிட்டன். உங்களோடயே வரலாம்தானே?"
'இண்டைக்கு இவா ஒருத்தி நல்ல அடிவேண்டப் போறா. எத்தினதரமெண்டு உனக்குச் சொல்லுறது. ஒரு பிள்ளைக்குச் சொன்னா சொல்லுவளி கேட்கவேணும். விக்கிஅண்ணை மத்தியானம் வருவான். அவனோட வரலாமெண்டெல்லே சொன்னனான்."
'அதுவரைக்கும் சும்மாதானே நிக்கவேணும்" அம்மாவின்ர இளகிய மனம் எங்க போனது? கல்லு. கருங் கல்லு. இண்டைக்கு ஏன் இப்பிடி இருக்கிறா?
'நீர் சும்மாவோ நிக்கப் போறீர். என்ன அப்போத சொன்னனான்? எலுமிச்சம் மரத்தடியில குப்ப குவிஞ்சுபோய்க் கிடக்கு. பின்கோடி வளவு கூட்டவேணும்."
பேசாமல் பள்ளிக்கூடமே போயிருக்கலாம். ஏன் வீட்ட நிண்டனெண்டிருக்கு.
'எனக்கு விக்க pஅண்ணயோட வரவிருப்பமில்ல. அவர் எந்த நேரமும் குட்டுவார்"
'காலுக்குக் கீழ ரண்டு போட்டனெண்டால்தான் சரிவரும்போல கிடக்கு. அவனுக்கு வாய்க்கு வாய் காட்டினால் குட்டுவன்தானே"
பெரியாக்கள் தாங்கள் நினைச்சதைத்தான் செய்விப்பினம்.
எனக்கு விக்கி அண்ணையோட போக விருப்பமில்ல.

'மாவெடி மாவெடி புளியடி புளியடி..... இறுக்கிப் பிடிக்காத. நந்தினி. இறுக்கிப்பிடிக்காத கண்ணோகுதெண்டெல்லே சொல்லுறன். அதுதானே இவ்வளவு இறுக்கிப் பொத்திறது எண்டு பாத்தன். எப்ப கைமாத்தினனீங்கள்? நந்தினி எங்க?"

விளக்குமாற்றை இழுத்தபடி குப்பைகளிடம் போனாள் கோடிப்பக்கமாக. இனி அவர்களுடன்தான் பேச்சு. கிணத்தடியில் முகம் களுவச் சென்ற ராசமணி மகளை அதிகம் திட்டிவிட்டதாய் உணர்ந்தாள் போலும். ஆதலால் சிறிய உடன்படிக்கைக்கு வந்தாள்;.
'பின்னேரம் பிள்ளைக்கு ஐஞ்சுரூபா தருவன்."
ஐஞ்சு ரூபாய்கு கலாக்கா கடையில எத்தின இனிப்பு வேண்டலாம்? எண்ணி முடித்தபோது மனம் பறந்தது. ரண்டு கல்பணிஸ், ஒர்று}பாய்க்கு இனிப்பு. மிச்சம் நாளைக்கு. பின்னேரம் விளையாடப் போகேக்க வேண்டலாம்.
மத்தியானம்! விக்கியண்ணை! நினைத்தபோது இனிப்புக் கனவில் பறந்த மனம் முள்முருங்கையில் விழுந்தது.
ஊசி குத்தினமாதிரி நோகுது.
பனங்கொட்ட. நீட்டு நீட்டு விரலுகள். எந்தநேரமும் குட்டும். அல்லது நுள்ளும்.
நானும் விசயாவும் சேர்ந்துதான் பட்டம் வைச்சனாங்கள். நாங்கள் பட்டம் தெளிக்கேக்க பிரபாவும் ஜெகதீசும் காதுக்குள்ள ஏதோ சொல்லிச் சொல்லிச் சிரிக்கினம். அவன்கள் ரண்டுபேரும் இப்பிடித்தான். அவன்களுக்கும் பட்டம் வைச்சிருக்கிறம். முறுக்குச் சட்டி! உரிச்ச கோழி!

மத்தியானச் சாப்பாடு கடைப் பார்சல். விக்கிக்கே அந்தப் பொறுப்பு.
தகுந்தநேரத்தில் ராசமணி, விலாசய்யாவின் சுமைகளைத் தோளில் தாங்கி ஆண் மகன் இல்லாத குறையை தீர்த்துவைப்பான் விக்கி. நல்ல 'மரியாதையான பெடியன்". உதவி என்று எளிமையாகச் சொல்லிவிடமுடியாது. கடமையாகக் கருதினான். ஏன் இவனுக்கு இவ்வளவு அக்கறை என்றுதான் கலா மண்டையைப் போட்டுடைத்தாள். அவன் சொந்தக் காரணாக இருக்கலாம். இல்லாமற் போகலாம். எனக்கேன் தேவையில்லாத வம்பு? கலா யோசித்தாளோ இல்லையோ ஊருக்குள் ஆங்காங்கே வம்பு நடந்துகொண்டுதானே இருந்தது.
ராசமணி படலையைச் சாத்தும் சத்தம் மெல்லிதாகப் பின்வளவில் கேட்டது. மனம் இன்னமும் முருங்கையில் கிடந்தது. ஐPவி யோசித்து ஒரு வழி கண்டுபிடித்தாள். இது மனதிற்கு திருப்பதியானதாக இருந்தது.

'முருகனே நான் வகுப்பில இந்தமுறை முதலாம் பிள்ளையா வராட்டிலும் பறவாயில்ல. அந்த வேண்டுதல அடுத்த முறை பலிக்கச்செய்து தா. புதுசா இப்ப ஒண்டு கேக்கிறன். இண்டைக்கு விக்கி அண்ணை வரக்கூடாது. நான் நடந்தெண்டாலும் தோட்டத்துக்குப் போவன்."
விளக்குமாறு ஒவென்ற சத்தத்துடன் விழுந்ததுகூட அறியாமல் இரண்டு கைகiயும் கூப்பி முருகனிடம் சென்றுவிட்டாள்.

ஒவ்வொரு வருடத்திற்கான முதலாம் பிள்ளை வேண்டுகோள்! மாற்றப்பட்டுவிட்டது. கடவுள் கோவிச்சுக் கொள்வாரோ? பயமாக இருந்தது. ஆனாலும் முள்ளில் சிக்கிய மனம் மீண்டும் பக்குவமாக இருப்பிடம் வந்துசேர்ந்ததே! ஊசி நோவும் மறைந்துவிட்டது.

மொனிற்ரர் கொப்பியின் கிளிந்த முன்மட்டை, தேயிலைச் சாயம் பூசப்பட்ட கமலகாசன் முகம், அவன் தோளில் கைபோட்டிருந்த ஸ்ரீதேவியின் பாதி கிளிக்கப்பட்ட மார்பு, மூக்குடைந்தும், நொருக்கப்பட்டதுமான சில ஊர் முட்டைக்கோதுகள், முழுச்சாறும் பிழிந்தெடுக்கப்பட்டபின் வீசப்பட்ட தேசிக்காய்த் தோல்கள் மாவிடமிருந்து பிரிய மனமில்லா கடுதாசிப் பைத்துண்டுகள். விளக்குமாற்றினால் தட்டி எடுத்தாள். வரமறுத்தவைகளை சின்ன விரல்கொண்டு பிடுங்கி எடுத்தாள். தண்ணீருடனும் மண்ணுடனும் பல நாட்கள் சங்கமித்திருந்தவைகளல்லவா? புpரிவு வேதனையில் அழுதவாறு குவிந்தன கடகத்தினுள். அவர்களுக்கு பின் வளவில் பெரிய கிடங்கில் இறுதியாக அடக்கம் நடந்தது.

உருளைக்கிழங்கு பிடுங்கிற நாள் எப்பவருமெண்டு பாத்திருப்பம். அந்தநாள் பெரிய கொண்டாட்டம்தான். கடைசியில வெட்டுப்பட்ட கிழங்குகள் பொறுக்கத்தான் விடுவினம்.
மத்தியானம் பார்சல் சாப்பாடு. அம்மா எவ்வளவு ருசியாச் சமச்சாலும் பார்சல் சாப்பாடுபோல வராது. பின்னேரம் வடை. வாப்பன். குழையள் குவிஞ்சிருக்கும். மலை போல. அதில ஏறி இருந்தனெண்டா எல்லாரும் வீட்டபோகேக்கதான் இறங்குவன். நான் விளையாடிக் கொண்டிருக்கிறதப் பாத்திட்டு அப்பா சொல்லுவார் 'ஆட்டுக்குப் புல்லுக் கொஞ்சம் பிடுங்கன்" எண்டு. எரிச்சல்தான் வரும். பெரியாக்கள் தாங்கள் நினைச்சபடிதான் செய்விப்பினம்.
ஓடி ஓடிப் பிடுங்கிறன். வேளைக்குப் பிடிங்கினனெண்டால்தான் விளையாடலாம். இன்னுங் கொஞ்சமெண்டா ஒரு கடகம் நிறம்பிடும். ஆரது? ஏங்கிப் போனன். நிமிந்து பாக்கிறன். நிக்கிது. பனங்கொட்ட. து}க்கிக் கட்டின சாரத்தோட.
'காலில முள்ளுக் குத்தீட்டிது. ஊசி ஒண்டு தாறியே."
களட்டிக் குடுப்பன்தானே. அதுக்குள்ள தானே வந்து களட்டிறார்.

'மாவெடி மாவெடி. புளியெடி புளியெடி. மாவெடி மாவெடி. புளியெடி புளியெடி......"


பசிக்கிது. வெள்ளப் புட்டும் சம்பலும் நல்ல விருப்பம். கால் மேல் கழுவீட்டுவந்து பாக்கிறன். போனவருசம் தீபாவளிக்குத் தச்ச சட்டையை எடுத்துவைக்கச் சொன்னனான். இந்தக் கட்டைப் பாவாடசட்டையை எடுத்துவைச்சிட்டுப் போயிருக்கிறா.
வெள்ளப் புட்டோடு கலந்த சம்பல் இவள் காலையில் அணிந்திருந்த பூப்புச் சட்டைமாதிரி தெரிந்தது. சின்னச் சின்ன விரல்கள் இறுக்கிபிடிக்க அதுகள் உள்ளே தள்ளப்பட்டுக்கொண்டிருந்தன. விக்கி அண்ணை வரமாட்டான். முருகன் எப்பிடியும் வேண்டுதலை நிறைவேற்றிவிடுவார். ஒரே ஒரு முறையைத் தவிர ஏனைய வேண்டுகோள்களை இதுவரையில் முருகன் செய்து முடித்திருக்கிறார்.
அந்த ஒரு முறை குளிக்காமல் கும்பிட்டதாலதான்.

அப்பவே சொன்னனான் வெள்ளப்புட்டெண்டால் விருப்பமெண்டு. இன்னுமொரு கோப்ப போட்டுச் சாப்பிடுவம்.
படலை திறந்து சத்தம் கேட்கிது. ஐயோ! வந்திட்டார். து}க்கிக் கட்டிய சாரம். நெடுகலும் இப்பிடித்தான் வரும். பெட்டி பெட்டி. அதுக்குக்கீழ ரண்டு பனமரம். பாவக்காய்க் கொட்டையள் மாதிரியெல்லே பனமரத்தில அடையாளங்கள். அதுக்கு செருப்பு வேற. முருங்கக்காய்மாதிரி விரலுகள். அதில ஒரு நாளைக்கு பாம்பு கொத்தவேணும். அப்பதான் சரி. பனங்கொட்ட. நாக பாம்புதான் கொத்தவேணும்.
குசினிக்குள்ளதான் வாறார். தண்ணி எத்தின முடர்குடிக்கிறன். புட்டு கீழ இறங்கிதில்ல. ஐயோ. அம்மா. நெஞ்செல்லாம் எதோ செய்யிது. மூச்சடைக்கிது. தண்ணி குடிக்கிறன்.....கீழ இறங்குதேயில்ல.

'காத்தடிக்கிது. புயலடிக்கிது. அக்கக்கா கதவத்திற."
'இப்பதான் பிள்ளைக்குக் குளிக்கவாத்துக் கொண்டிருக்கிறன்"

நாலரைக்கு எல்லாரும் கஜன் வீட்டில சந்திக்கிறது எண்டுதான் சொன்னவன். விசயா, சோதி, குமரன், ஜெகதீஸ்வரன், பிரபா எல்லாரும் வருவினமாம். பந்தெடுத்துக்குடுத்து உதவிசெய்து எவ்வளவு நாளுக்குப் பிறது இப்பதான் தாச்சியில சேக்கிறதெண்டு சொன்னவங்கள். நேற்றுப் போகேல்ல எண்டு கோபமாம். இண்டைக்கும் வராட்டி இனிமேல் சேர்க்கவே மாட்டினமாம். பிரபா வந்து நேற்றுச் சொல்லீற்றுப் போனவன். அவன் சொன்னால் அப்பிடியேதான் செய்வான்.

கோடிவளவில் பிலா இலைகள் உதிர்ந்து கிடந்தன. ஒரு கிழமைக்குள் திரும்பவும் இவ்வளவு குப்பைகள். ராசமணியும் விலாசய்யாவும் தோட்டவேலைகளில் ஓடித் திரிந்தனர். இந்த முறை பேவிளைச்சலாம் எண்டு கலாக்கா யாரிடமோ வாயைப்பிளந்ததை ஜீவி கேட்டாள். அக்காமார்களுக்கு சோதினை நெருங்கிவிட்டது. காலை மாலையென்று மொனிற்ரர் கொப்பிகளுக்குள் கிடந்தார்கள். பஸ்ஸில் போய்ப் படிப்பவர்களல்லவா? பெரிய படிப்புக்காரர்தான்.
கோடிவளவ இந்த முறையும் நான்தான் கூட்டவேணுமாம். ஐஞ்சு ரூபா தருவியளோ எண்டு கேட்டன். காலுக்குக் கீழ ரண்டுதான் தருவன் எண்டா. இப்பிடித்தான் சொல்லுவா ஆனா பிறக தருவா.
ஆரவோ நிண்ட மாதிரிக் கிடந்திது. ஏங்கீட்டன். நிண்டமாதிரித்தான் கிடக்கு. பிறகு காணேல்ல. சொறிநாய் மாதிரித்தான் கிடந்திது. பயந்திட்டன்.

மூத்திரம் வாறமாதிரிக் கிடக்கு. போயிருந்தால் வருகிதில்லை. எரியிது. திரும்பவும் ஒருக்கால் கழுவுவம். தண்ணீக்குள்ளயே கிடக்கவேணும் போல இருக்கு. கிணறு கிட்ட இருந்தால் இறங்கி நிக்கலாம். கரன் வீட்ட கிடக்கிற தொட்டி மாதிரி இருந்தா எவ்வளவு நல்லம்?

'ஜயோ எரியிது. ஜயோ எரியிது." ஜீவனா இரவில் கத்தினாள். ராசமணி நிறையச் சீனி போட்டு விரலால் கரைத்து ஒரு ரம்ளரில் தண்ணி கொடுத்தாள். 'சலக்கடுப்பு. குளிக்கிறதுக்குப் பஞ்சி"

எட்டு நாளாச்சு. ஒன்றை விட்ட ஒரு நாளாக ஜீவனா ஒன்டு ரண்டு என்று இருபத்தைந்து வரும்வரை எண்ண கிணற்றடியில் விலாசய்யா சூடுபறக்க தலைக்கு ஊற்றிவிட்டார். சூடு பறந்தது.

எரியிறதுதான் நிக்குதில்ல. சில நேரம் ஊசிகுத்திறமாதிரி. கொஞ்ச நேரம் அமத்திப் பிடிப்பம். சுகமாக்கிடக்கு.
'என்ன ஜீவி விளையாடப் போகேல்லையே?"
தண்ணி அள்ளப் போகேக்க கலாக்கா ஏதாவது கவனிச்சிருப்பபாவே? எரிவு நிண்டிட்டிதெண்டு அம்மாவுக்குச் சொல்லிப் போட்டன். 'கொக்காளவைக்கும் சலக்கடுப்பு வாறதுதான். உனக்குமட்டும் ஒரு கிழமையா நிக்கிதில்லை. என்ன இது புதினமாக்கிடக்கிது."

'காத்தடிக்கிது. புயலடிக்கிது. அக்கக்கா கதவத்திற."
"இப்பதான் பிள்ளைக்குச் சாப்பாடு தீத்துறன்"

நான் பின்னுக்கு ஏறுறன் எண்டுதான் சொன்னனான். சாப்பாடு ஏத்தவேணும் எண்டு முன்னுக் ஏறச் சொல்லீற்ரார். முந்தியும் ஒருநாள் இப்பிடித்தான். பனங்கொட்டை. பெரியாக்கள் தாங்கள் நினைச்சபடிதான் செய்வினம். பாறில இருந்து கனக்க நேரம் ஓடினால் குண்டி வெட்டும். அப்பான்ர சயிக்கிளில பின்னுக்கிருந்துதான் போறனான்.

குறுக்கு வளியால வேளைக்குப் போயிடலாம். இவர் சுத்திச் சுத்தித்தான் ஓடுவார். பனையன். அந்தத் தென்னந்தோட்டம் இருக்கெல்லே அது தாண்டி பிறகு பெரியப்பாக்களின்ர தோட்டமடியால போய். இவ்வளவு ஆறுதலா ஆராவது சயிக்கிள் ஓடுவினமே?
விடுங்கோ விக்கி அண்ணை.
எனக்குப் பயமாக் கிடக்கு. நான் வேண்டாம் வேண்டாம் எண்டு சொல்லத்தான் பாவாட ஊசியெல்லாம் களட்டிப்போட்டார். ஆரேன் வரேக்க வெளியால கையை எடுக்கிறார். இது கெட்டபழக்கம். ஆரேன் வரமாட்டினமோ? சொல்லச் சொல்லக் கேக்கிறார் இல்லியே. இது கெட்டபழக்கம். விக்கிஅண்ணை. நிகம் கீறிது. நோகுது விக்கி அண்ணை. கையை எடுங்கோ. எனக்கு அழுகதான் வருகிது. இதிலும்பாக்க பள்ளிக்கூடமே போயிருக்கலாம். முந்தியும் ஒருநாள் இப்பிடித்தான். எனக்கு சரியான அழுகதான் வருகிது.

'காத்தடிக்கிது. புயலடிக்கிது. அக்கக்கா கதவத்திற."
'இப்பதான் பிள்ளைய நித்திரையாக்கிறன்"

கலாக்கா ஒவ்வொரு செவ்வாயும் துர்க்கை அம்மனுக்குப் போட்டுவாறா. தன்ர புருசனோட சேரவேணுமெண்டுதான் வேண்டுதலாம். அம்மாவும் விரதம் இருக்கிறவா. வேண்டுதல மாத்தினது முருகனுக்குப் பிடிக்காமல் இருக்கலாம். சரஸ்வதி பூசைக்கு விரதம் இருக்கிறன் எண்டு வேண்டியிருக்கலாம். முருகன் கோவிச்சிருக்கமாட்டார்.

நேற்றும் விக்கியண்ணை அங்க வந்தவராம். நான் போமாட்டன். நாங்கள் விளையாடிக்கொண்டிருக்கேக்குள்ள நெடுகலும் வந்து சொறிதேச்சுக்கொண்டிருப்பார். சொறிநாய். ஒருநாள் இப்பிடிச் சொன்னதுக்கு கன்னத்தப்பொத்தி தந்திட்டிது. பத்துநாள் அவரோட கதைக்கேல்ல. 'கோவங் கோவங் கோவம். கண்ணக்கட்டிக் கோவம். செத்தாலும் பாவம். நடுச்சாமத்தில பாம்புவந்து கொத்தும்" பிறகு வலிய வலிய வந்து கதைக்சிது.
தாச்சி விளையாட்டில இனிமேல் என்னச் சேர்க்கவும்மாட்டிம்தானே. பிரபா விழுந்து நேற்றுக் கால் தேச்சிட்டுதாம்.

வீடெல்லாம் இண்டைக்கு நான் தான் கூட்டினான். கோடியும் கூட்டியள்ளீற்றன். இப்ப எரிவு கொஞ்சம் நிண்டமாதிரிக் கிடக்கு. மூத்திரம்பெய்யேக்குள்ள மட்டும்தான் எரியிது.

இவளுக்கு என்னதான் நடந்தது? கலா மட்டுமல்ல மொனிற்ரர் கொப்பிக்குள் கிடந்த அக்காமாரும் கண்களை வெளியெடுத்து அதிசயமாக பார்த்துக் கொண்டனர். போய்ஸ் பஸ் கேர்ள்ஸ் பஸ்சை முந்தியதா அல்லது நேற்றுப் போலவே தோற்றுவிட்டதா என்று அக்காமாரிடம் ஒட்டுக்கேட்டு அம்மாவுக்குக் கோழ் சோல்லும் ஜீவனாவுக்குத்தான் என்ன நடந்தது? நீண்ட நாட்களாக அவர்கள் ஆராயவில்லை. கிடைத்த சுதந்திரத்தை கொண்டு பெடியள்பற்றி சுவைத்தார்கள். சோதனைக்குப் படிக்கும் பிள்ளைகளுக்கு ஊர்முட்டை வாங்கியல்லோ கை உளை உளைய அடித்தாள் ராசமணி முட்டைக்கோப்பி!

மாதுளம்மரம். பலாவுக்குப் பக்கத்தில் நின்றது. இலைகள் மஞ்சள் அடித்துவிட்டிருந்தது. 'பட்டுப்போடும் போல கிடக்கு" எண்டு விலாசய்யா கவலைப்பட்டார். ஜீவியும்தான். இன்றும் ஒரு வாளி தண்ணீர் ஊற்றினாள்.
கறுப்பு நிறத்தில் சிகப்புப் புள்ளிகள். ஒரு வண்ணத்துப் பூச்சி. மாதுளையில் வந்து ஒய்யாரமாக அமர்ந்து கொண்டது. அது தன்னையே பார்ப்பதாக உணர்ந்தாள்.

மசுக்குட்டியிலிருந்துதான் வண்ணத்துப்ப10ச்சி வருகிறது என்பது அவளுக்கு அண்மையில் கிடைத்த செய்தி. பிரபா சொன்னது.
மசுக்குட்டி! முருங்கையில் அப்பிக்கிடக்கும். பார்த்துவிட்டாலே பத்து அடி தள்ளித்தான் போவாள்.
சனியன் பிடிச்சதுகள். என்னெண்டுதெரியாது ஒண்டு வெள்ளச் சட்டயால ஊர்ந்து களுத்தில வந்து கடிச்சிட்டிது. மண்ணெண்ணையைக் கொண்டுபோய் ஊத்திவிட்டன்.
வண்ணாத்திப்பூச்சிக்கும் மயிர்; இருக்குமே? அதுவும் சுணைக்குமே? தொட்டால் பட்டுப்போல. பாவம் அந்த வண்ணாத்திக்கு என்ன நடந்திதோ? சில நேரம் பிடுங்குப்பட்ட செட்டத்துண்டு வளந்திருக்கும்.

ஆர்வமுடன் இரண்டு கைகளையும் கோர்த்து வளைத்துப் பிடித்தபடி நெருங்கியபோதுதான் அது நிகழ்ந்தது.
இப்பிடித்தான் நெடுகலும் பறந்திடிது.

'காத்தடிக்கிது. புயலடிக்கிது. மரங்களெல்லாம் சுழண்டு ஆடுது. அக்கக்கா கதவத்திற."
தகர வீட்டுக்குள் சத்தம் இல்லை. தீடிரென்று நந்தினி திறந்துகொண்டு ஓடிவந்தாள். 'ஐயோ" எல்லோரும் தலைதெறிக்க ஓடினார்கள். 'பிடிச்சிட்டன். ஜீவியைப் பிடிச்சிட்டன்."

தோட்டவேலைகள் இப்போதைக்கு முடிந்தபாடில்லை. உருளைக் கிழங்கும், வெங்காயமும் பிடுங்கிய நாளிலிருந்து தொடர்ந்து தோட்டத்தில் ஏராளம் வேலைகள். சமையல் சாப்பாடுகள்;, குளிப்புமுழுக்குகள் தவிர்ந்து ஏனை நேரங்களை பெரும்பாலும் தோட்டத்திலேயே தம்பதியினர் செலவழித்தனர். முட்டைக்கோப்பியில் விழித்து காலை ரயூசன், பாடசாலை, பின்னேர ரியூசன் முடிந்து எட்டுமணியாகும் அக்காமார் வீடுவந்துசேர. இருவரும் கடினமாகப் படிப்பதாகத்தான் ராசமணி, விலரசய்யா மட்டுமல்ல கலாவும் நம்பினாள்.

தாச்சியில சேர்க்கவும் மாட்டாங்கள். போகவும் ஏலாதுதானே. ஒருக்கா வேலிக்குள்ளால பாத்தனான். அந்தச் சொறிநாய் நிக்கிது. போமாட்டன். கோவங் கோவங் கோவம் கண்ணக் கட்டிக்கோவம். செத்தாலும் பாவம் நடுச்சாமத்தில நாகபாம்பு வந்து கொத்தும். நாகபாம்பு போய்க் கொத்தத்தான் வேணும்.
அக்கக்கா அலுத்துப்போச்சு. எப்பவும் நான்தான் பிடிபடுறது. என்னால மற்றவயள்மாதிரி ஓடேலாது. அதுக்கு நான் என்ன செய்யிறது?

ஒருநாள் பொழுது பட்டுக்கொண்டிருந்தது...

இண்டைக்கு நட்சத்திரம் எண்ணலாம். இன்னுங் கொஞ்ச நேரம் போகவேணும். அப்பதான் இருட்டில வடிவாத் தெரியும். வெள்ளி நட்சத்திரம். வால் நட்சத்திரம். குட்டி நட்சத்திரம். குடும்ப நட்சத்திரம்.
தாச்சிச் சத்தம் து}ரத்தில் கேட்டது. பிரபாவின் சத்தம்தான். யாரோ அளாப்பியாக்கப்பட்டான்.
சிமிளியை பக்குவமாகத் துடைத்துவைத்துவிட்டு மாட்டுக்குப் புல்லுப் போடுவதற்காக கடகத்துடன் கொட்டில்பக்கம் வந்தாள். காய்ந்து போன புல்லுதான். ஆனால் இந்த மாடு என்னவென்றாலும் தின்னும்.

'ஜீவி இப்ப நீ ஏன் விளையாட வாறேல்ல?" விக்கியன் வந்த சத்தம் கூடக் கேட்கவில்லை.
கடகத்தைப் போட்டுவிட்டு ஓடுவதற்குமுன்......
விடுங்கோ..... விக்கி அண்ணை.....விடுங்கோ....
இறுக்கமான மாட்டுப்பிடி. இல்லையில்லை. ஐயோ! இது மோட்டுப்பிடி. இம்மியளவும் அசையமுடியவில்லை ஜீவியால். பனைமரத்திற்கு இடித்துப்பார்த்தது சின்னக் கால்கள். அசையவேயில்லை.
விடடா. விடு. என்ன இப்ப விடு. பனங்கொட்டை. சொறி நாய். இப்ப என்ன விடு. நாயே.

அவள் அள அள பூப் பூ யங்கியை கீழேவிழுத்திவிட்டு றோக்கற்வேகத்தில் மசுக்குட்டி....
0


நன்றி:
நிரூபா
(2000)
பெண்கள் சந்திப்பு மலர்' என்றுதான் நினைக்கிறேன், வெளிவந்த இதழ் மறந்துவிட்டது.

8 Comments:

Blogger மு. மயூரன் said...

இந்தக்கதையை ஏற்கனவே படித்திருக்கிறேன்.
இப்போது உங்கள் மூலம் மீண்டும் படிக்க வாய்ப்பு கிடைத்திருக்கிறது.

அப்போதும்சரி இப்போதும்சரி இதனைபடிக்கும்போது மனதை என்னவோசெய்கிறது.
விபரிக்கமுடியாத அந்தர உணர்வு.

இது , போகப்பொருளாக சிறுவர்களை பயன்படுத்துவது பற்றிய பிரக்ஞையாலோ அல்லது சிறுவர்கள் மீதான பால்ரீதியான தாக்குதலையிட்டோ அல்ல.
இது வேறு ஏதோ உளவியல் தாக்கம் என்பது மட்டும் நன்றாகவே தெரில்கிறது.

ஒருமுறை சிவத்தம்பி சேர் வீட்டில் சாருநிவேதிதாவின் சனதருமபோதினி கதை வாசிக்கும்போதும் இதே பிரச்சனைதான். ஏன் அன்றாடம் தினக்குரலில் இந்தவகை செய்திகள் படிக்கும்போதும்.

ஆண் மனநிலை பற்றிய பார்வை ஆண் உளவியல் பக்கம் திரும்புமேயானால் பல மிகச்சிறந்த பெறுபேறுகள் கிடைக்கும் என்று நம்புகிறேன்.

இந்த உளவியல் பற்றி விரிவாக எழுதவும் பகிரவும் விருப்பம்.
உங்களைப்போன்று வெளிப்படையாய் எழுதும் துணிச்சல் இன்னமும் கைவரவில்லை.

பார்ப்போம்.
நீண்ட உரையாடல் தேவைப்படுகிற உளவியல் பக்கமிது என்பதை மட்டும் உறுதியாக கூறமுடிகிறது இப்போதைக்கு.

10/15/2004 09:20:00 a.m.  
Blogger ஒரு பொடிச்சி said...

மயூரன்!
இந்தக் கதையின் தாக்கம்/பாதிப்பு சார் எல்லாவற்றுக்கும் நிருபாவும் ஒரு காரணம். அவரது எழுத்து இன்றைய புகலிட எழுத்தாளர்களில் (ஆண்களிலும் சேர்த்துத்தான்) முக்கியமானது. சோபாசக்தி போன்ற ஆண்களுக்குக் கிடைக்கிற "புத்திஸீவிகள் அங்கீகாரம்" "மகுடம்" பெண்களுக்கு கிடைப்பதில்லை. அதெல்லாம் யாருக்கு வேண்டும்? atleast நிருபாவின் படைப்புகள் தொகுப்பாக்கப்பட வேண்டும். அதிகம் புகலிட சஞ்சிகைகளில் வெளிவந்தவைதான்.
ஆண்களின் உளவியல் பற்றி - நபக்கோவும் அவரது புதினத்தில் உளவியல்சார்ந்துதான் எழுதியிருக்கிறார். இது உளவியல் பிரச்சினைதான்.

10/15/2004 06:28:00 p.m.  
Blogger ஈழநாதன்(Eelanathan) said...

நீங்கள் இருவரும் சுட்டிக் காட்டுவது உண்மையே இந்த ஆண்மனநிலை என்பது உளவியல் ரீதியாக அணுகப்படவேண்டிய பிரச்சனை.அதிலும் பதின்ம வயதுகளிலோ அதற்கும் குறைவான வயதிலோ இவ்வாறு பாலியல் ரீதியான துன்புறுத்தலை அனுபவித்த சிறுவர்கள் பிற்காலத்தில் குற்றவாளிகளாக ஆகிவிடவும் வாய்ப்பிருக்கிறது அவ்வகையில் வீட்டுக்கு வீடு ஒளிவு மறைவாக நடக்கும் இவ்வாறான சம்பவங்களை விவாதப் பரப்புக்கு இட்டு வந்திருப்பதற்காக உங்களுக்கும் எழுதிய நிரூபாவிற்கும் நன்றி.அவரின் ஏனைய படைப்புகள் பற்றிக் கொஞ்சம் கூற முடியுமா?

10/18/2004 10:39:00 p.m.  
Blogger ஒரு பொடிச்சி said...

This comment has been removed by a blog administrator.

10/19/2004 06:36:00 p.m.  
Blogger ஒரு பொடிச்சி said...

நிருபா குறிப்பிடத்தகுந்த பல சிறுகதைகள் எழுதியுள்ளா. ஏலவே சொன்னதுபோல இன்று எழுதுகிறவர்களில் 'தனித்தன்மை'
எண்டு ஒன்றிருப்பவர்.

பாரிய அளவில வாசகர்ளது வாசிப்புக்குட்பட்டிருக்காது ஏனெண்டா எல்லாமே பெண்கள் சந்திப்பு மலரில இடம்பெற்றவைதான் (அதிகம்). நான் முதல்ல வாசிச்ச சிறுகதை: தஞ்சம் தாருங்கோ. புலம்பெயர்வில ஏஜென்சி ஊடா வாற பெண்கள்ட அனுபுவங்கள வச்சு. இவட வேற சிறுகதைகள்: "வந்தவர் வருவாரா"இ "பயந்தாங்கொள்ளி" "மழை ஏன் வந்தது" - இணுவில் வட்டார வழக்கை இவரது எழுத்துக்களில் காணலாம்! இவரது கதைகள் தந்த அனுபவத்தைப் பற்றி எழுத எண்ணியதுண்டு. ஆனால் அதற்கொரு அவசரமுமில்லை! 'படான்" எழுத்தாளர்களை விமர்சனம் பண்ணினால் பறவாயில்லை, அவர்களிடம் எதிர்பார்க்க என்ன இருக்கிறது? நிருபா நிறைய எழுதவேண்டும், பிடித்தமான எழுத்தாளர்களை விமர்சிக்கும்போது ஒரு சங்கடம், அவர்கள் பிறகு 'விமர்சனத்துக்கிணங்க" கதை எழுத ஆரம்பித்துவிடுவார்களோ என்று! ஆறுதலாய் விமார்சிக்கலாம். அவரது கதைகள் நேரங்கிடைக்கும்போது இங்கே உள்ளிடுகிறேன். 'தோழியர்" வலைப்பதிவில் வெளிவந்த ஒரு கதை: (Under Stories)
http://womankind.yarl.net/archives/001290.html#more

10/19/2004 07:30:00 p.m.  
Blogger ஈழநாதன்(Eelanathan) said...

நன்றி(உங்களை எப்படி விளிப்பது?)
தோழியர் பதிவில் வந்த நிரூபாவின் கதை வாசித்திருக்கிறேன் இதையும் படித்தபின் தான் தனித்தன்மையுடைய எழுத்தாளர் என்பது புலப்பட்டது.
தொடர்ந்தும் இவ்வாறன எழுத்தாளர்களை அடையாளம் காட்டுங்கள்.அது விமர்சனமாகத் தான் இருக்க வேண்டும் என்றில்லை.

10/20/2004 06:05:00 a.m.  
Blogger ஒரு பொடிச்சி said...

ஈழநாதன்! பொடிச்சி என்றே விளிக்கலாம்! பிரச்சினையில்லை. நிச்சயமாக பிடித்த எழுத்தாளர்கள் பற்றி எழுதுகிறேன். நன்றி!

10/21/2004 03:31:00 p.m.  
Blogger ஆதிபன் சிவா said...

அற்புதமான கதை இத்தனை நாட்களாக இந்தக்கதைகயைப்படிக்காமல் விட்டுவிட்டோமே இது போல எத்தனை படைப்புகளை படிக்கத்தவறி விட்டேனோ கவலையாக உள்ளது. இப்போதுதான் நுழைந்துள்ளேன். கதையின் நகர்வு எவ்வளவு அருமையாக உள்ளது. எமது சிறுவயது நாட்களை எல்லாம் நினைவூட்டுகிறது. நிரூபா ஒரு அற்புதமான எழுத்தாளர். ஆனால் ஏனோ வெளித்தெரியாமல் இருக்கிறார். அவரது மற்ற ஆக்கங்களையும் படிக்க ஆசையாக உள்ளது.

பொடிச்சிக்கு நன்றி.

12/12/2004 04:06:00 a.m.  

Post a Comment

<< Home