@font-face { font-family: TSCu_InaiMathi; font-style:normal; font-size: 10pt; font-weight:normal; src:url(http://mathy.kandasamy.net/fonts/TSCUINA1.eot); }

Tuesday, March 15, 2005

கவிதை எழுதுவதை நிறுத்துங்கள்

Mission Possible: Boycott Poetry

வெளியே விடாது பெய்யும் மழை... இரவு. தனிமையில், கனத்திருந்தது மனம். அவள்/அவன் நினைவு. வீழ்ந்து. சூழ்ந்தது. உடலுள் என்னையறியாமல் ஏதோ ஒன்று; தீடீரென ஒருபொறி. அப்போது...


என்றைக்காவது நீங்கள் மேற்குறிப்பிட்ட தடிப்பெழுத்தில் உள்ள சூழலுக்கும் உணர்வுகளுக்கும் ஆட்பட்டீர்கள் என்றால், அவ்வளவுதான்! உடனே உசாராகிவிடுங்கள்! உங்களுக்கான பரீட்சை அது! அக் கணம் கட்டவிழும் கவிதையை எப்பாடு பட்டேனும் நிறுத்தி விடுங்கள்!

தொபுகடீர் எனப் பாய்ந்து விழத் தயராய் இருக்கும் கவிதைக்கு தடையிடுவது சிரமம்தான், எனினும் இதை ஒரு சமுதாயக் கடமையாய்ப் பாத்து, ஒத்துழையுங்கள். விளங்கிறது! லௌகீக வாழ்க்கையில் இயந்திரத்தனமான சுழற்சியில் நமக்குள்ளே நாம் சுருங்க, இக் கொடுஞ் சுவர்களுக்குள்ளான அடைப்பு, மூச்சுத் திணற... கவிதை அவற்றிலிருந்து வெளியேற அவகாசம் தருகிறது (தருகிறது?)...
அப்படியும் இப்படியுமாய்
நானும் உங்களைப்போலத்தான். இதுநாள்வரை சுரத்தற்கு இருந்துவிட்டேன். வரலாற்றிலும் சமூகவியலிலும் நித்திரைகொண்டு... (அந்தக் கதை கட்!) அதை ஏன் கேட்பான், 'சொன்னாக் கேடு சொல்லாட்டிச் சங்கேனம்', என் கவித்துவத்தைப் பாத்திட்டு ஒருக்கால் கொஞ்சம் பயிற்சி செய்தால் வரும் கவிதை என்று பரிந்துரைப்புகள் செய்தார்கள் (எங்கயும் இதுதான் வேலை). கனடாவின் மிக நீளமான வீதியான யங்வீதியால் நடந்து போனால் எத்தனை கவிதைகள் வருமென்று தெரியுமா உனக்கு சொன்னார் ஒருவர். காசா பணமா, சரி என்றுட்டு நீண்ட நெடும் தூரம் நடந்ததில்... பாத்ரூம்தான் வந்தது (அதற்கொன்றும் செய்யமுடியாது, குடித்த போப்கள் அத்தனை! களைப்பு வேறு!) எது எப்படியோ நீங்கள் தப்பினீர்கள்!
சொல்ல வந்தது அதல்ல.
இது கவிதைப் புத்தகங்களின் காலமாகிவிட்டது. முன்பாவது தமிழ்நாடு - இலங்கை என்று முடிந்தவரைக்கும் சிறு வட்டத்துள் கவிதைகள் எழுதப்பட்டுக் கொண்டிருந்தன (எங்களாலும் ரோதனையை கொஞ்சமேனும் தாங்கமுடிந்தது). இப்போது சிங்கப்பூர், மலேசியா ஐரோப்பா அமெரிக்கா என தமிழர் சென்ற புலங்களெல்லாம் கவித்திருப்பே எனப் பல்திசையுமிருந்து வருகிறது கவிதைகள், “ஏவுகணைகளைப்போல்” என்றால் மிகையில்லை. பதிப்பு நிறுவனங்கள் பெண் கவிகளையும் பிற கவிகளையும் போட்டோ போட்டி போட்டுப் பதிப்பிக்கின்றன. இதனால் மகிழ்ச்சி? தமிழ் இலக்கியந்தானும் வளர்கிறது?
கவிதைகளாலும் கவிஞர்களாலும் தமிழ் வளர்ந்ததென நம்புபவர்கள் என்றால் இதைத் தொடர்ந்து வாசிக்காதீர்கள். இத்தோடு நிறுத்திவிட்டு இன்னொரு கவிதையை எழுதீ... அதை மறக்காமல் *** க்கு அனுப்பி விட்டுத் தொலைந்து போங்கள்!!!
அல்லாதவர்கள் வாருங்கள். இந்த இயக்கத்தை முன்னெடுத்துச் செல்லத் தேவை ஒத்துழைப்பு, செயற்பாடோ மிகச் சுலபம். கொஞ்சம் வினயமாக இருத்தல் சிறு எதிர்பார்ப்பு, அவ்வளவே. மற்றப்படி வேலை இதுதான்: காணுகிற ‘கவிஞர்’களிடமெல்லாம் கீழ்வரும் கோரிக்கையை முன் வையுங்கள்-
பிளீஸ். தயவுசெய்து. வேறென்ன மொழியில் கெஞ்சுவது. சாஷ்டாங்கமாய் காலில் விழுந்தானாலும் கேட்கிறேன். நிப்பாட்டுங்கப்பா! நீங்களும்தான் பாடினிகளே! கொஞ்சக் காலம் ஓய்வெடுக்கலாமா? றூட்டை மாத்துவமா?

உடன, நீங்க நினைக்கக்கூடாது உனக்குக் கவிதை எழுதத் தெரியாததால நீ இப்படிச் சொல்ல வெளிக்கிடுறது சரியில்லை என... அது உண்மையில்லை. எதற்கும், ஒருமுறை, கமலாதாஸ், "அரசியல் எனக்குத் தெரியாது – ஆனால் அதிகாரங்களில் இருப்பவர்களின் பெயர்கள் தெரியும். நேருவிலிருந்து அவற்றை மாதங்களின் பெயர்கள்போல பருவங்களின் பெயர்கள் போல அடுக்க முடியும் என்னால்…" என்று சொன்னதை, அப்படியே மாற்றி, "கவிதை எனக்குத் தெரியாது. எல்லாக் கவிஞர்களது ‘மாதிரிகளும்’ தெரியும். ஆம் ஆரம்பத்திலிருந்து அவற்றை ஒரு மணி(த்தியாலத்திற்)க்கு பத்தாக எழுதிவிட முடியும் என்னால்” என்று தோளை நிமிர்த்தி உங்களுக்குச் சொல்லிக் கொள்ள விரும்புகிறேன், ஆமா!!!
வாழ்நாளில் நேசிக்கிற கவிஞர்களைவிட மொழிபெயர்ப்பாளர்களையும் புதிய ‘தகவல் தருவாளர்களையும்’ மிகவாய் நேசிக்கிறேன் - அவர்கள் தாக்கம் செலுத்துகிறார்கள், எம்மிடமிருந்து பிறிதொரு ‘செயற்பாட்டை’ குறைந்தபட்சமாயேனும் வாங்கத் தலைப்படுகிறார்கள். எல்லாவற்றிலும் மேலாக, அவர்கள் தருகிறவற்றில் இரண்டு உயிர்களது உழைப்பு இருக்கிறது தெரியுமா... அற்புதமானவர்கள் அவர்கள்!!
இது மிகையா?
நீங்கள் போயேயறியாத இடங்களில் எல்லாம் உங்களை உலவவிட்டு, பார்த்தேயறியாத மனிதர்களது வாழ்விற்கு மீள்உயிர் கொடுத்தவர்கள் பற்றி உங்களுக்கென்ன எண்ணம்? உங்களை ஆகர்ஷித்த ரஷ்யப் படைப்புக்கள் (மன்னிக்கவும், மொழிபெயர்ப்பாளர் பெயர்கள் தெரியவில்லை), ஜி.குப்புசாமி, அகமத்தோவாவின் ஈரத்தை உங்களுள் சுரத்த வ.கீதா, எஸ்.வி.ஆர், குட்டி இளவரசனை அறிமுகப்படுத்தி, அவனைப் பிரிந்த துயரத்தில் ஆழ்த்திய வெ.சிறீராம், இந்தியாவின் பிற மாநிலங்களின் தலித் படைப்புகளைத் பகிர்ந்துகொண்டிருக்கிற பாவண்ணன்... ரவிக்குமார்... விமர்சனங்கள் இருந்தாலும் முக்கிய பல பெண் படைப்பாளிகளை அறிமுகம் செய்த யமுனா ராஜேந்திரன்... --------- வேறு பெயர்கள் எனக்குத் தெரியவில்லை எனினும் உங்களுக்குத்தெரிந்தவர்களை எல்லாம் இங்கே குறிப்பிட்டு ஞாபகம் கொள்ளுங்கள்.
தமிழில் பாதிப்பு செலுத்திய பல, இலக்கியம் + அரசியல் மொழிபெயர்ப்புகள். ருஷ்யவீழ்ச்சிக்கு முன்பான வரவுகள்... இன்று தலித் இலக்கியம். மொழிபெயர்ப்பு மொழிக்குப் புத்துணர்ச்சி; மொழியைச் செழுமைப்படுத்திற முக்கிய பங்காளி. அதை செய்கிறவர்களில் உங்களுக்கு ஒரு இதாய் வரவில்லையா?!?
ஒரு சின்னப் புத்தகம் நீங்கள் நெஞ்சோடு காவிக்கொண்டு திரிவீர்கள், அது எத்தனை கதவுகளை உங்களுக்காய் திறக்கிறது; உங்களை மீண்டும் குழந்தையாக்கிறது, அது இன்னொரு மொழியிலிருந்து மீள உங்களது மொழியில் பிறக்கிறது.
ஆனால் அவர்களுக்கெல்லாம் தரப்படாத முக்கியத்துவம் ஏன் இந்தக் கவிஞர்களுக்கு?
அதுவும் ஜீவனேயற்று கிடைக்கிற நேரத்தில் கிறுக்கப்படுகிற கவிதைகளிற்கு?
அந்தக்காலத்தில் (எங்கட காலம்) ஒரு நகைச்சுவை நடிகன் (அப்படிச் சொன்னால் என்ன ஆனால் தேங்காப்பூ தலையா, இடியப்பத் தலையா வகை தான் அவரின்ர நகைச்சுவை) ஏதோ படத்தின்ர இடையில தேய்ச்சல்! தேய்ச்சல்! தேய்ச்சல்! எண்டு தலையைப் போட்டு ஆட்டோ ஆட்டெண்டு ஆட்டுவான். அதுபோல ஆயிற்று இப்ப எல்லாத்தையும் பாக்க.
வெறுங் கவிதைகள் குவிகின்றன. முன்அனுமானிக்கக்கூடிய வடிவங்களில் கவிதை ‘ஆக்கல்’ கள்... அதற்கு சர்ச்சையும் சர்ச்சைக்குள்ள புகைச்சலும். ஐயோ!!!!!!!!!!!!!!!!!!!!!!! ‘தோசையிட திறத்துக்கு ஆட்டுக்கல்லுக்கு மாலைபோட்டிருக்கு’ எண்ட கதைதான் மூளைக்குள்ள தொடர்ந்து ஒலிக்குது.
கவிதைகள்/கவிதைப் புத்தகங்கள் ‘கவிஞர்’களை மட்டுமே உருவாக்குகிறது. ஒரு பார்வையும் இல்லாமல், வெறுங் கவிஞர்களை. அவர்களது முகங்களையே பார்த்துக்கொண்டிருந்தால் அவர்கள் கக்குவதை தாங்கவே முடியவில்லை.
இம்முறை காலச்சுவடு ‘நீரோட்டம்’ பகுதியில் கவிஞை லதா, தான் கர்நாடகாவின் சிமோகாவில் உள்ள குவெம்பு பல்கலைக்கழகத்தில் ‘கவிதையும் சமூகமும்” என்கிற தலைப்பில் நடைபெற்ற கருத்தரங்கிற்கு போனது தொடர்பாக எழுதிக்கொண்டுபொகையில், ‘...குஜராத்தியரான மூத்த எழுத்தாளர் பேராசிரியர் கஞ்சி பட்டேல் ஹிந்தியிலும் வல்லமை பெற்றவர்...ஆழ்ந்து யோசித்துத் தீவிரமாகப் பேசும் சமயங்களில் தன்னை அறியாமல் ஹிந்தியில் பேசத் தொடங்கிவிடுவார்...’ என்ற தகவலை தந்துவிட்டு சொல்கிறார்:
“...இந்தியாவின் பல மாநிலங்களையும் சோந்த மூத்த கவிஞர்கள் அந்த கருத்தரங்கில் பங்கேற்றனர். எனக்கு ஒரு வார்த்தைகூட ஹிந்தி தெரியாதது மிக வருத்தமாக இருந்தது. அனைத்து இந்தியர்களும் பேசக்கூடிய மொழியாகத் தமிழ் ஆகப்போவதில்லை. அப்படி இருக்க இந்தியர்கள்(!) அனைவரும் ஹிந்தி பேசக் கற்றுக்கொள்ளவது நல்லது என்று தோன்றுகிறது. ஆங்கிலத்தில் பேசும்போது ஏற்படாத நெருக்கத்தையும் பிணைப்பையும் ஹிந்தி ஏற்படுத்தும் எனத் தோன்றுகிறது. இதைச் சொன்னால் தமிழ்நாட்டு ‘மொழிப்பற்றாளர்கள்” சண்டைக்கு வருகிறார்களோ இல்லையோ, சிங்கப்பூரில் உள்ள தமிழர்கள் என்னை உண்டு இல்லை என்று ஆக்கிவிடுவார்கள்”
(காலச்சுவடு. மார்ச் 2005 இதழ்)

இதைப்பற்றி, அவர் குறிப்பிட்ட, சிங்கப்பூரர்களும் தமிழக மொழிப்பற்றாளர்களும் கொதிப்பது ஒருபுறமிருக்கட்டும்.
வேறு புலத்தில் இருக்கிற தமிழக நண்பர்கள் ஹிந்தி என்றால் ‘பிணைப்பு’ என்று சொல்லிக் கேட்டதே இல்லை, அது தெரிந்தால் ‘வசதி’ என்பர்களே ஒழிய, பிணைப்பு? ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு பிணைப்பு. மலையாளம்? ஆங்கிலம்? ஏன் கூடாது?
தமிழ்நாட்டுக் கிராமங்களில் ஏதோ ஒரு மூலையில் இருக்கிற கிராமவாசிக்கு ஹிந்தி தெரியாது, இலங்கையின் இன்னொரு மூலையில் இருக்கிற பாமரத் தமிழருக்கு சிங்களம் தெரியாது, தெரியாதபோது பிணைப்பு எங்கிருந்துவரும்? மொழிகுறித்த இந்த குருட்டாம்போக்கான ‘சும்மா’ அபிப்பிராயங்களைப் பார்க்கிறபோது இலங்கைச் சூழலை முன்வைத்த ஒன்றையும் குறிப்பிடவேண்டும். இலங்கையில் சிங்கள புத்திஜீவிகள் (உதாரணம்: றெஜி சிறிவர்த்தன) ரஷ்ய, பிரெஞ்சு என பல் மொழி புலமை உடையவர்களாக இருக்க தமிழர்களோ சிங்களத்தோடையே நின்று மல்லுக்கட்டவேண்டிவந்தது! சிங்களம் கற்பதில் ஒரு நஸ்ரமுமில்லை, கூட இருக்கிற மனிதர்களது மொழியை அறிதலில் என்ன தீமை விளையும்? ஆனால் அதிலுள்ள ஒரே பிரச்சினை ஒரு சாரார் ‘கட்டாயமாக’ அல்லது 'பெரும்பான்மையோடு ஒத்தோடுவதற்காக (ஜோதியில் கலக்க!)' அதை செய்யவேண்டி இருப்பதுதான். அன்றி வேறென்ன?
உலகம் பரந்தது. பார்த்தால், இந்தியா போன்ற ஒரு நாட்டிலிருக்கிற பெரும்பான்மை மொழியைவிட உலகின் பிற பல மொழிகளிற்கு முக்கியத்துவமும் 'பிரயோஜனமும்' உண்டு. எல்லா மாநிலங்களிலும் ஆங்கிலம் இரண்டாம் மொழியாய் இருக்கிறபோது, வேறு உலக மொழிகளைப் படிப்பது, இன்னொரு இந்திய மொழியைவிட சிறப்பான தேர்வாக இருக்கும், முக்கியமாக இலக்கியத்திற்கு.
அதைவிட்டுட்டு
நான் மொன்றியலிற்கு ஒரு கருத்தரங்கிற்குப் போனால், அங்கே ஒரு பேராசிரியர் தான் உணர்ச்சிவசப்படுகையில் எல்லாம் பிரெஞ்ச் கதைத்தால், அவர் மொழி ‘தெரிந்தால் நல்லாய் இருக்கும்’ என நான் நினைக்கிறேனென்றால் பொத்தாம்பொதுவாய் கனேடியர்கள் அனைவரும் பிரெஞ்ச் கற்றுக்கொள்வது பற்றி ஒரு அவசியமற்ற தனிப்பட்ட ஏக்கத்தை கருத்தாக உதிர்ப்பதன் தேவை என்ன? அந்த மொன்றியல் பிரான்ங்கிளிக்கனிடம்(!) ‘பார்டன் மீ’ என்றுவிட்டு அதை ஆங்கிலத்தில் சொல்லக் கேட்டுவிட்டால் விசயம் முடியுது. கூடவே, நான் உணர்ச்சிவசப்படுகையில் செந்தமிழ் கதைக்கிறேனென்றால் அவர் அதில் மூழ்கி முத்தெடுக்கப் போதில்லை பாருங்கள்...
நிலமை இவ்வாறிருக்க, லதாவின் இந்த ‘சும்மா’ கருத்தை முன்வைத்து (எனக்குத் தெரிந்த ஹிந்தியிலையே சொன்னா, Baஸ்!) தமிழக மொ.பற்றாளர்கள் ஒருபுறம், கூடவே சிங்கப்பூரர்கள் மறுபுறம் ஒரு விவாதம் ஆரம்பித்து, லதாவை ‘உண்டு இல்லை என்று ஆக்கிவிடுவார்கள்’ என்றால்... கடவுளே தமிழ் சூழல் இத்தகு கவிஞர்களால் இத்தகு கருத்துக்களால் இவற்றைத் தொடர்கிற ‘விவாதங்களால்’ தான் இனிவரும் பத்தாண்டுகளுக்கு எடுத்துச் செல்லப்படப் போகிறதா? இதைப் படித்து வருகிற தமிழக இளம் தலைமுறையினர் (கண்ணன் போன்றவர்கள் ‘மெய்சிலிர்த்திருக்கிற’ புத்தகக்கண்காட்சிக்கு வர ஆரம்பித்திருக்கிற ‘சிற்றிதழ் ஈர்ப்புடை’ அதிக எண்ணிக்கையான இளம் தலைமுறையினர்) இந்தக் கருத்துக்களிலிருந்து என்னத்தை எடுத்துக்கொள்ளப் போகிறார்கள்? சரியோ தவறோ பொன்னான 10, 15 ஆண்டுகளுக்கு முன் குறைந்தபட்சம் புரட்சிகரமான கருத்துப் பகிர்வுகள், வாசிப்பு முயற்சிகள் ஆவது இருந்ததே.. செயற்பாடு மற்றும் இயக்கம் (எத்தகையதென்றாலும்) இல்லாத ஒரு சமூகமும் ஒரு சமூகமா. பின்னர் ‘அறிவியக்கம்’ என்பதுதான் என்ன?
‘எமது வரட்சியான காலத்தைத்தானே நாமும் பிரதிபலிக்க முடியும்’ என்று இந்தக் கவிஞர்கள் சொன்னால் - அது நியாயமான எதிர்வினைதான். ‘எமது காலம் வரட்சியானது’ ‘அது கவிதையிலும் பிரதிபலிக்கும்’ ‘பிரதிபலிக்கக்கூடாதெண்டு எப்படி நினைக்கலாம்’ இவ்வாறெல்லாம் சொல்லலாம். சரிதான்! ஆனால் நான் இங்க குறிப்பிடுகிற கவிஞர்கள் அசலான (Original) கவிஞர்கள் அல்லர். தமிழகத்தின் ஏலவே இருக்கிற பேர்போன கவிஞர் பெருமக்களின் சாயலை பிரதிபண்ணி எழுதப்படுகிற இவை பதிப்பிக்கப்படுகிற அழகிலும், முன்னுரையின் தாங்கலிலும் எவ்வளவு காலம் நிற்க முடியும்?
கனிமொழியின் கவிதைப் புத்தகத்தைத் திறந்தால் முன்னுரையில் நஞ்சுண்டன் அவவின் கவிதைகள் பற்றி ‘இல்லாததும் பொல்லாததும்’ சொல்கிறார். வாசிக்கிறவர்களிற்குப் புரியாதா தரம்? இடைத்தரகர் ஒருவர் நின்று சொன்னால்தான் அவை ‘தேறுமா’? லதாவின் கவிதைகள் படிக்கிற நேரம் டவுண்ரவுனில் தலையில துண்டப் போட்டெண்டு பிச்சை எடுக்கலாமோ என்று தோன்றுகிறது.
ஆண்கவிஞர்களோ எனில்... (பிறகொருக்கா தனிய கவனிப்பம்)
எப்பையோ பார்த்த அனிமேஸன்படம்தான் ஞாபகம் வருது. கவிதையளப் பாக்க. விந்துகள் பிறந்து பிறந்து இறக்கிறத குதிச்சு தற்கொலை செய்து இறக்கிறதா (????) அதில எடுத்திருந்தது. அதுமாதிரி படிக்கிற அவங்கட கவிதையெல்லாம் கண்முன்னால தற்கொலைதான் செய்யுது.ரசமா இருக்கு, கண் கொல்லாக் காட்சி.
குடும்ப அமைப்பின் உள்ளே இருக்கிற பெண்களை புரிந்துகொள்ளலாம், ஆனால் வெளியே வந்த 'பத்திரிகை' போன்று துறை சார்ந்து இயங்குகிறவர்கள்
தாங்கள் சார்ந்த துறைகளில் என்னென்ன மாற்றங்கள் நிகழ்ந்தவண்ணமுள்ளன என்கிற தேடல் இன்றி இருப்பதற்கும், கல்விக்கூடங்களில் ஒரே பாடத்திட்டத்தை ஒரு வரி பிசகாம காலாகாலமா 'ஒப்புவித்து'க் கொண்டிருக்கிற இயந்திரத்தனமான ஆசிரியர்களுக்கும் (இவர்களாற்தான் வரலாற்றிலும் சமூகவியலிலும் நான் நித்திரை கொண்டேன், தப்பா?) என்ன வேறுபாடு இருக்கிறது?
கவிதைகளிற்கு அப்பால் லதா போன்றவர்களின் செயற்பாடுகள் என்ன? செயற்பாடு என்றால் தனியே சமூகப் பிரக்ஞை அல்ல. தன்னுடைய படைப்பில் உழைப்பையும் தேடலையும் இணைப்பதுங்கூடத்தான். உள்ளழுந்தி, தனது தனிமையை எதிர்க்க எழுதிய சல்மா என்கிற பிரதியாளரின் ‘ஒரு மாலையும் இன்னொரு மாலையும்’ போன்ற தொகுப்பிலுள்ள பெண்ணினுடைய வாழ்வை பகிராத லதா, ‘சும்மா’ கவிதைகளை எழுதிவிடுவதோடு தனது சமூக பங்களிப்பு முடிந்துவிடுகிறதென நினைப்பதும், ஒரு கருத்தரங்கிற்குப் போகிறவர் இப்படிப்பட்ட ‘அவதானம்’ செய்து அறுப்பதும், இனி அதைப் பார்த்த ஒரு தலைமுறை ‘சும்மா’ கவிதை எழுதவே விருப்பமுறக்கூடும் என்பதும்... பேண்ணோ ஆணோ இன்று ‘கவிஞர்’ களென கட்டமைக்கப்படுகிறவர்களைப் பார்க்கப் பயமாய் இருக்கிறது.
லதாவை இங்கே குறிப்பிடுவது, அவரை அப்படிக் ‘கட்டமைப்பதை’ அவரது ‘தவறாய்’ நினைத்து அல்ல. நான் அப்படி நினைக்கவில்லை. காலச்சுவடிற்கு சிங்கப்பூரில் ஒரு விற்பனை முகவர் என்பது தவிர அவரது எழுத்துக்களில் எனக்கொன்றும் தெரியவில்லை. அந்த ஒரே காரணத்திற்காக ஒருவரை பிரமுகராக்கி புத்தகம் போடுகிறார்கள், ‘நான்கு -சல்மா, கனிமொழி, சுகிர்தாராணி, லதா- முக்கிய கவிஞர்களின் புத்தகவெளியீடு’ என்கிறரீதியில் காலச்சுவடு இதழில் இவர்களது பிரதியை மறைமுகமாக விளம்பரம் செய்யும் பதிவுகள் வருகிறது.
ஒருபுறமென்னெண்டா பெண்கள் தினமும் அதுவுமா (அப்ப மட்டும் என்ன கொம்பா) 'என்னதான் இருந்தாலும் முலைகள் எண்டு பெயர் வச்சிருக்கக்கூடாதுடி' (குட்டி ரேவதிக்கு இப்போதைக்கு விமோச்சனம் கிடையா!) எண்டு பெண்கள விட்டே சொல்ல வைக்கிறார்கள். மறுபுறம், காலச்சுவடு வகை பிம்பங்களை உருவாக்கும் வியாபார தந்திரங்கள்.
இத்தகு அணுகுமுறைகளால் உருப்படியான பெண் படைப்பாளிகள் வருவார்கள் என்று நீங்களும் நம்பினால்-
அம்மாத்தா அரைச்ச அம்மியில தலையை வைக்க.
உரலுக்குள்ள போட்டு மண்டையை இடிக்க.
தலையைப் பிய்த்துக்கொண்டு ஓடலாம் போல இருக்கிறது. ஏற்கனவே இந்த குட்டி முதலாளித்துவ வாழ்க்கை சுவர்களுக்குள் இறுக்கி அழுத்தி வைத்திருக்கிறது. மூளையை கிரைண்டரில் போட்டு அடித்து அடித்து கூழாகிப்போய்க் கிடக்கிறது அதுபாட்டில். வாசிப்பின் தேர்வும் ஆர்வமும் நேரமும் குறுகிக் கொண்டே போகிறது. அந்த நேரத்தை இத்தகைய அர்த்தமற்ற விவாதங்களும் வெறும் கவிதைகளும் பிம்பக் கட்டமைப்புகளும் எடுத்துக்கொள்ள விடலாமோ?
இந்த இடத்தில்தான் கவிதைகளை அழிக்கவேண்டிய வரலாற்றுத் தேவை வருகிறது. இந்தப் புள்ளியில்தான் நாம் சந்திக்கிறோம்!
நாங்கள் அப்படி என்ன பெரிதாய் எதிர்பார்த்தோம்?
தீ.....விரமாய் எழுதுகிறவர்களிடம் குறைந்தபட்சம் தாம் எழுதுகிற விடயங்கள் குறித்த Critical Thinking ஆவது இருக்க வேண்டாமா? அதைக்கேட்பது தவறா? வேறு யாரிடம் போய் இதைக் கேட்க முடியும்?
எங்கள் சிற்றறிவுகளைப் பரத்தி ம்.. அல்லது விரித்து யோசித்துப் பார்த்தால்,
அனுபவமிருக்கா? எந்த இலக்கிய/கல்லூரி/நினைவு மலருக்கோ கட்டுரை எழுதுவதாக சொல்லியிருப்பீர்கள். முடியாமல் போனால் ‘கவிதையாவது எழுதித் தர’க் கேடகிறவர்கள்? ஐந்தே நிமிடத்தில் நாவல் எழுதக் கேட்க முடியுமா? சிறுகதை (சிலவேளை?)?
கவிதை எண்டிற விசச்சாமான் தமிழர்களது எத்தனை சாத்தியங்களை அழித்திருக்கிறது? எழுதிக்குவிகிற கவிதைகளிற்கு முன் சிறுபான்மையாய், நோஞ்சான் குழந்தையாய், கட்டுரை – நாவல் என பரந்த அளவில் கைவைக்காத பிற துறைகள் பற்றாக்குறையாய் நிற்கிறது.
என்ன செய்யலாம்?
FOLLOW ME!
பிற மாற்று பரிசீலனைகள்:
5. நாவல்:
வந்த தேச நினைவுகளுடன், வாழ்ந்த வாழ்க்கையில் மீளப் போய் நின்று வாழ்ந்தபடி நிற்கும் நீங்கள் அனைவதும் ஒரே ஒரு நாவலை எழுதி உங்களைப் காலியாக்கிக்கொள்ளுங்கள். இந்த விடயத்தில் சு.ரா பின்பற்றப்பட வேண்டியவர். பசுவய்யா தன் படைப்புகளை ஒவ்வொன்றாக காலி பண்ணி, கடைசியில் குழந்தைகள் பெண்கள் ஆண்கள் நாவலில் தன்னை முற்றாகவே காலி பண்ணியதாகக் கூறியிருந்தார். அவர் புனைவுகள் எழுதாத காலத்தில் கவிதை எழுத மெனக்கெடாமல் சிறுசிறு கவிதைகளை மொழிபெயர்க்க முயல்கிற எண்ணம் முக்கியமானது.
4. சிறுகதைகள்:
கண்ணில் விழுந்த செய்தி: இப்போது கவிதைகளில் ‘கதை’ சொல்லும்போக்கு காணக்கூடியதா இருக்கிறது. இது நல்லமா? கூடாதா?
அட! இது கேள்வி, இதுதான் விசயம்! பொங்கி வரும் கவிக் கணத்தில் அதை அமுக்கி திசை மாற்றி விரித்து/விஸ்தரித்து கதையாக்கலாம். மனித உளவியலை-ஏக்கத்தை பொறாமையை – அலசலாம். 'உலகத்தரக் கதைகள் இல்லையே இல்லையே' எனக் கூவுவதை விடுத்து, முயன்றால் முடியாதா?
தட்டைக் கவிதைகளைவிட பலப் பல தேறாதா?
3. விமர்சன முயற்சிகள்
வாசிக்கிற எல்லாத்துக்கும் ஏற்கனவே சொல்லப்பட்டவைகளிலிருந்து அவை எப்படி வேறுபடுகின்றன என ஆரம்பித்து விமர்சிக்கத் தொடங்கலாம்.
முயற்சித்தால் பாவமில்லை! யோசித்துப் பாருங்கள், எங்களில் எத்தனைபேர் கவிதைக்கு விமர்சனம் எழுதத் தெரிந்தவர்கள்? கவிதை வரிகளை எடுத்து கவிஞர் இப்படிச் சொன்னார் அப்படிச் சொன்னார் எண்டு றிபீற் பண்ணாமல்? குறை சொல்லவில்லை, எமது எழுதுகிற சனத்தொகையில், நூத்துக்கு 99.999 வீதம் (சும்மா ஒரு துணைக்கு!) கவிதை எழுதுபவர்களாக இருக்கையில் எம்மால் ஒரு தொகுப்பிற்கு ஒழுங்காய் விமர்சனமே எழுதத் தெரியாமல் இருக்கென்றால், இது பற்றி நீங்கள் என்ன நினைக்கிறீர்கள்?
2. மொழிபெயர்ப்பு

**நூற்றாண்டுத் தனிமை (One hundred years of Solitude) பிற இந்திய மொழிகள் அனைத்திலும் வந்திட்டுதாமே, தமிழ்ல இல்லையாமே? உண்மையா?
ஒவ்வொரு புத்தகத்தையும் படிக்கப் படிக்க எவ்வளவு ஆசையாயிருக்கு, தமிழில மாத்தோணும் போல கிடக்கு. மொழிப் பாண்டித்தியம் பெற்றவர்கள் இவற்றை கணக்கெடுக்கக்கூடாதா? விடுத்து,
ஆசியா ஐரோப்பா அமெரிக்கா என்று கண்டங்கள் தாவி நின்று மொழி விகசிப்பில் கவிதைகளை மட்டும் எழுதுவது அநியாயம், துரோகம்!
1. வாசிப்பு
எவ்வளவு காலந்தான் எங்களுடையதை நாங்களே படிப்பது? மற்றவர்கள் எழுதுவதையேயயயயயய நாமும் எழுதாமல் இருக்க ஆவது, இதை நாம் செய்வோமாக.

இவற்றைச் செயலாக்க, அதிகாரம் மட்டும் தரப்பட்டிருக்குமானால் அந்தக் காலத்தில சீனாவில குருவிகளை அழித்ததுபோல கவிதைகளிற்குத் தடா போடலாம் (அதால அங்க சீனாவில பிறகென்ன நடந்ததெண்டு இங்க ஒருதரும் அரசியல் வகுப்பெடுக்க வேணாம்). ஒவ்வொரு கவிதையையும் ‘படித்திற்று படித்திற்கு கிழித்தெறி!’ என ஆணையிடலாம். கவிதை அருவிபோலப் பாய காத்திருக்கிற கணம் அப்பிடியே பே(b)ஸினுக்குள்ள கச் பிடிச்சு பேனா பேப்பரோட தயாராகி அதை கதையா நீட்டிக்க உதவிற உதவியாளர்களை கவிஞர்களுக்கு வழங்கலாம். அல்லது விழுந்த கவிதையை ஏந்தி அது எந்த ‘மாதிரி’, யாரின் ‘கொப்பி’ என பார்க்க ஆள் அமர்த்தலாம்.

வேறு ஏதாவது பரிசீலனை(கள்) இருந்தால் எழுதுங்கள்!

"...
எல்லாம் எதற்காக?
பாஸ்டர்நாக் கவிதை ஞாபகம் வந்தது.
'உனக்கு உரியவை அனைத்தையும் கொடுப்பது -
இதுதான் படைப்பு.
அப்படி இல்லாமல்,
காது செவிடாகக் கூக்குரலிட்டு ஆக்கிரமிப்பது
அது இல்லை.
எவ்வளவு கேவலம்
எழுதுவதற்கு ஒன்றும் இல்லாமல் எழுதிக்குவிப்பது,
..."
(நகுலன், பக்.26, கவிதை: கையெழுத்து.நூல்: கொங்குதேர் வாழ்க்கை-2)


இதுதான்
தமிழ் ‘உய்ய’
ஒரு சாமானிய பெட்டையால விட முடிந்த அறிக்கை

கவிதை அழிக!
தமிழ் உய், உய், உய்க!

வெறுத்துப்போய் Stand எடுத்த
Anti-poet
Afsrushka


(மகிழ்ச்சிப் பகர்வு: பாவண்ணனிற்கு மொழிபெயர்ப்பிற்கு சாகித்திய அகடமி விருது)

**'இந்திய மொழிகள் அனைத்திலும்' என்பது உறுதியான தகவல் இல்லை.

12 Comments:

Blogger சன்னாசி said...

//நூற்றாண்டுத் தனிமை (One hundred years of Solitude) பிற இந்திய மொழிகள் அனைத்திலும் வந்திட்டுதாமே, தமிழ்ல இல்லையாமே? உண்மையா?//

'பிற அனைத்து மொழிகளிலும்' என்பதை நம்பத் தயாராயில்லை!! ஹிந்தியில்? இருக்கலாம். பல வருடங்களுக்கு முன்பே ருஷ்டீயின் Midnight's children ஹிந்தியில் மொழிபெயர்க்கப்பட்டுவிட்டது. தமிழில்? ம்ஹூம். ஆனால், 'ஒரு நூற்றாண்டு காலத் தனிமை' நாவலின் முதல் அத்தியாயத்தை நாகார்ஜுனன் தமிழில் மொழிபெயர்த்துள்ளது மட்டும் உறுதியாகத் தெரியும். அந்த மொழிபெயர்ப்புக்கு உபயோகப்படுத்தப்பட்ட மொழி குறித்து வெவ்வேறு கருத்துக்கள். மற்றப்படி, க.நா.சு ஒருவராக எண்ணற்ற புத்தகங்களை முன்பு மொழிபெயர்த்தார் (சிலவை சுருக்கப்பட்டும், அவசரமாகச் செய்யப்பட்டும் இருப்பினும்கூட, அது ஒரு பெரும் பிரயத்தனமே).

3/16/2005 06:57:00 a.m.  
Blogger ஒரு பொடிச்சி said...

திருப்பிப் படிக்கையில்,'பிற அனைத்து மொழிகளிலும்'
அது நிறையவேவ ஓவராய்த்தான் தெரிகிறது, ஆனால் மலையாளத்திலம் வந்திருக்கும் என்று நினைக்கிறேன் (நிச்சயமாய் சொல்ல முடியவில்லை.). எஸ்.ரா வோ யாரோ இதைப் பற்றி எழுதினார்கள், எனக்கு சரியாய் ஞாபகம் இல்லை, அதனால் இணைப்புக் கொடுக்க முடியவில்லை, இந்த வசனத்தை அப்படி அர்த்தம் வருவதிலிருந்து எடுத்துவிடுகிறேன் அல்லது அது தொடர்பான இணைய சுட்டி கிடைத்தால இங்கே பதிகிறேன்.
நன்றி. நாகார்ஜுனன் கேள்விப்பட்டிருக்கிறேன். 'விடியல்' மற்றும் நிறப்பிரிகையில் நிறையப்பேர் மொ.பெயர்த்திருக்கிறார்கள். அவர்கள் பெயர்கள் எனக்குப் பரிச்சயமில்லை.

3/16/2005 03:44:00 p.m.  
Blogger வன்னியன் said...

பொடிச்சி!
அவசியமான பதிவு. வன்னியில் பல பெயர்களில் (வின்சன்ற் ஜோசப், அருளாளன், இன்னும் பிற..) மொழிபெயர்ப்புகள், ஆக்கங்கள் எழுதும் ஒருவர் ஒருக்கிறார். குழல் என்ற பெயரில் ஆபிரிக்கக் கவிதைகளின் மொழிபெயர்ப்புத் தொகுப்பு ஒன்று வெளியிட்டுள்ளார். மேலும் யுதர்களின் இஸ்ரேல் நாட்டின் உருவாக்கம், அவர்களின் போராட்டம் பற்றிய 'எக்ஸோடஸ்' (?) என்ற புத்தகத்தைத் தமிழில் "தாயகம் நோக்கிய பயணம்" என்ற பெயரில் மொழிபெயர்த்தவர். மேலும் (சிங்களம் உட்பட) 60 க்கும் மேற்பட்ட படைப்புக்கள், கையேடுகள் என்று மொழிபெயர்த்து வெளியிட்டவர். சொந்த ஆக்கமாகவும் தமிழில் சில கவிதைகள், கதைகள், கட்டுரைகள் எழுதியவர்.

இப்போதும் முழுநேர மொழிபெயர்ப்பாளனாக இருக்கும் அவரோடு எனக்குப் பழக்கமுண்டு. அவர் ஆபிரிக்கக் கவிதைத் தொகுப்பிலிருக்கும் போது சந்தித்துக் கதைத்தேன். அப்போது "ஏன் நீங்கள் தமிழில் படைப்புக்கள் எழுதுவதைக் குறைத்து விட்டீர்கள்" என்று நான் கேட்டபோது, படைப்பது என்பது என்னைப் பொறுத்தவரை மொழிபெயர்ப்பதைவிட இலகுவானது. எல்லாரும் அதத்தானே செய்யினம்? ஆனா எங்கட தேவை இப்ப மொழிபெயர்ப்புக்களில பெரிதும் தங்கியிருக்கு" என்று விளக்கிக் கொண்டு வந்தவர், இறுதியாகச் சொன்னார்:

'வரவேற்பு இல்லாவிட்டாலும் படைப்பாளியாக யாரும் இருந்துவிட்டுப் போகலாம்.
ஆனால் மொழிபெயர்ப்பாளனாக யாரும் "பாவனை" பண்ண முடியாது'

3/17/2005 12:42:00 a.m.  
Anonymous Anonymous said...

எழுதிக்கொள்வது: பொடிச்சி

நன்றி வன்னியன். என்னுடைய கணிணிக்கே நான் என்றால் அலேர்ஜுதான். அதை விடுங்கள், எனக்குச் சுவாரசியமாய் இருக்கிற விடயம்,
"யுதர்களின் இஸ்ரேல் நாட்டின் உருவாக்கம், அவர்களின் போராட்டம் பற்றிய 'எக்ஸோடஸ்' (?) என்ற புத்தகத்தைத் தமிழில் "தாயகம் நோக்கிய பயணம்" என்ற பெயரில் மொழிபெயர்த்தவர்."
இந்தப் புத்தகம் (Exodus by Leon Uris) என்னிடம் சில மாதங்களாகக் கிடக்கிறது. நண்பி ஒருவர் படித்துவிட்டு கட்டாயம் படிக்குமாறு சொல்லியும் புத்தகத்தின் தடிப்புக் காரணமாய் படிக்க ஆர்வம்வராமல் கிடக்கிறது. எனினும் கதைச் சுருக்கம் கேட்டு அதில் நிறைய பிரச்சினை/விமர்சனம் உண்டு, படித்துவிட்டு நிலாந்தனின் 'மண்பட்டினங்கள்' ஐ முன்வைத்து எழுத விருப்பமுங்கூட; சிலவேளை எழுதலாம் ஆனால் அந்த 599 பக்க நூலை ஈழத்தில் ஒருவர் மொ.பெயர்த்திருக்கார் என்பது மிகவும் ஆச்சரியமாயிருக்கிறது (இந்தப் புத்தகமாய்த்தான் இருக்கவேண்டுமென்பது ஊகம்). அரசியல் கொள்கைகள் எல்லாவற்றையும் முடியுமாய் ஆக்கிறது. புதிய தகவல் எனக்கு, அதற்கு நன்றி.

3/17/2005 12:44:00 a.m.  
Blogger வன்னியன் said...

நிச்சயமாய் அதேதான். Leon Uris அண்மையில் (இரண்டு வருடம்?) தான் இறந்து போனார். இவரின் இறப்பு வன்னியில் நன்றாக நினைவு கூரப்பட்டது. நீங்கள் சொன்னதுபோல் பெரிய புத்தகம் தான். இரண்டு பாகங்களாக ஈழநாதம் வெளியீடாக 1993 அல்லது 1994 இல் வந்தது. முழுவதும் வாசித்தேன். சில இடங்கள் சலிப்பைத் தந்தாலும் இடையில் வைக்க முடியாத புத்தகம். ஆனால் ஒரு விசயம் தெரியுமா? அந்தப் புத்தகத்தில் மொழிபெயர்ப்பு யாரென்று ஒரு தகவல்கூட இல்லை. (ஆனால் 2000 இன் பின் மொழிபெயர்த்தவரைப் பாராட்டிப் புகழ்ந்தார்கள்) ஒரு மிகக் கடினமான புத்தக மொழிபெயர்பைச் செய்தவரின் பெயர் அப்புத்தகத்தில் இல்லாமை குறித்து நான் அவரிடமும் பேசியுள்ளேன். அவரின் அனுமதியோடு தான் அப்படி நடந்ததாகச் சொன்னார்.

நீங்கள் சொல்வது மெத்தச்சரி. கொள்கைகள் சில அசாத்தியங்களைச் செய்ய வைக்கும். அவர் வெளியே தெரியாத பல மொழிபெயர்ப்புக்களைச் செய்துள்ளார். இம்மொழிபெயர்ப்புப் பற்றி வெளியில் தெரியாதது வேதனையாய்த் தானிருக்கிறது. உண்மையில் மூலப்பிரதியைக் கொண்டாடிய அளவுக்கு அதன் தமிழ் மொழிபெயர்ப்பைக் கொண்டாடவில்லை (தமிழ் வடிவத்தினூடகவே அறிந்தாலும்) என்பது விசித்திரமானது. உண்மையில் அவர் தன்னலமற்ற, புகழைத் தேடிப்போகாத அற்புதமான மனிதர். ஐம்பதைத் தாண்டிவிட்ட அவர் இன்னும் இளமையாகவே இருக்கிறார்.
சொல்ல மறந்துவிட்டேன். குழல் என்பவர் யாழ்ச்சமரில் வீரச்சாவடைந்த அவரது ஒரே மகள்.

3/17/2005 12:46:00 a.m.  
Blogger வன்னியன் said...

படித்துப் 10 வருடங்கள் ஆகிவிட்டபோதும், அதன் கதாநாயகன் அரி பென் கானான் இன்னும் என் மனதில் நின்று அகலவில்லை. அப்புத்தகத்தில் பாலுறவு சம்பந்தமான சில வர்ணனைகள் தணிக்கை செய்யப் பட்டுள்ளதாக ஜோசப் தெரிவித்திருந்தார்.

3/17/2005 12:47:00 a.m.  
Anonymous Anonymous said...

வன்னியன் முடிந்தால் நீங்கள் குறிப்பிடும் மனிதர் பற்றிய விபரங்களை அவரது மொழிபெயர்ப்புகள் ஆக்கங்கள் அடங்கலாக பதிவிட முடியுமா? இந்த நூலின் பெயரையே நான் அறிந்திருக்கவில்லை.

3/17/2005 12:48:00 a.m.  
Blogger வன்னியன் said...

நன்றி ஈழநாதன், பொடிச்சி! இந்நூல் யாழ்ப்பாணம் விடுதலைப்புலிகளின் கட்டுப்பாட்டிலிருந்தபோது வெளியிடப்பட்டது. ஆனால் யாழ்ப்பாண புத்திஜீவி வர்க்கத்துக்கே இந்நூல் பற்றித் தெரியாது. அதைவிட "ஈழநாத" வெளியீடுதானே? என்ற ஏளன மனோபாவமும் இருக்கிறது. அவர்களைச்சொல்லிக் குற்றமில்லை. பதிப்பகத்தின் பிரபலம் இன்று முக்கியமானது.

மன்னிக்க வேண்டும். இப்போது உடனடியாக படைப்புக்ளின் பெயரேதும் ஞாபகமில்லை. விடயங்கள் தெரிந்தால் பதிகிறேன்.

3/17/2005 01:00:00 a.m.  
Blogger வன்னியன் said...

ஆனால் ஒன்று. அப்படைப்பை வாசித்த "சிலரில்" நானும் ஒருவன் என்ற பெருமை எனக்குண்டு.

3/17/2005 01:01:00 a.m.  
Blogger ஒரு பொடிச்சி said...

நன்றி வன்னியன். நேரங்கிடைக்கும்போது இவற்றைப் பற்றி எழுதுங்கள். பொதுவாக யா.புத்திஜுவி வர்க்கத்திற்கு பிற இடங்கள் தொடர்பாக 'புறக்கணிப்பு' இருக்கிறதுதான். ஏ.ஜே.கனகரத்னா, நிலாந்தன் போன்றவர்கள் மொழிபெயர்ப்பு பற்றி ஏதும் சொல்லியிருக்கலாம்.

இந்தத் தகவல்களைத் தந்ததற்கும் மிகவும் நன்றி.



some probs regards viewthing this particular post, doanna why.. will see later.

3/17/2005 08:57:00 a.m.  
Blogger வன்னியன் said...

நீங்கள் முதல் போட்டிருந்த படம் தான் பிரச்சினைக்குக் காரணம் எண்டு நினைக்கிறேன். இப்ப வாசிக்க ஏலுது.

3/23/2005 02:29:00 p.m.  
Blogger ஒரு பொடிச்சி said...

நன்றி வன்னியன். படம்தான் பிரச்சினையாய் இருந்திருக்கிறது.
இது தொடர்பான உங்கள் கருத்துப் பரிமாற்றங்களிற்கு நன்றி.

மாண்ட்ரீஸர் அந்த இணைப்புச் சுட்டிகள் கிடைக்கவில்லை. பொதுவாக இந்த போஸ்ற்றே ஒரு திட்டமிட்ட மிகை சார்ந்ததுதான் என்றாலும் நான் மீளப் படிக்கிறபோது (!)சிலவற்றை மாற்ற முனைகிறேன். அதுவரை, இத்தகவலை யாரு சொன்னது எழுதினது என்பதை அறியப் பார்க்கிறேன்!

நன்றி

3/25/2005 12:58:00 p.m.  

Post a Comment

<< Home