@font-face { font-family: TSCu_InaiMathi; font-style:normal; font-size: 10pt; font-weight:normal; src:url(http://mathy.kandasamy.net/fonts/TSCUINA1.eot); }

Saturday, February 19, 2005

I- யாருடைய துரோகம்?


thanks

‘வித்தியாசங்கள்’ உறுத்தலாக இருக்கின்றன; அவை கேலிக்கும் தனிமைப்படுத்தலுக்கும் உள்ளாகுகின்றன.


இந்த முறையும், ஒவ்வொருமுறையும் போல, விடுமுறையில் உறவுக்காரர் -ஆண்கள் குடிவகைளுடன் நிலக்கீழ்அறைகளுள்ளும் (Basement) பெண்கள் குழந்தைகளுடனும்- குழுமினார்கள். பலவகைப்பட்ட கதையாடல்கள். நீண்டநாளைக்குப் பிறகான சந்திப்பாகையால், இடையிடையே, ‘வியித்திரக்’ கதைகளை கேட்கமுடிந்தது. “சில கதையளக் கேட்க நம்பவும் முடியேல்ல’ என ஆரம்பிக்கின்றன அவை; இறுதியில் அவை, பெண்/ஆண் ஓரினச்சேர்க்கையாளர்கள், இருபாலுறவாளர்கள் (bisexuals), transgendered persons, நபுஞ்சகம் (hermaphrodite) (இவற்றுக்கான ‘அரசியல்ரீதியாகச் சரியான’ தமிழ் சொற்கள் தெரியவில்லை), இப்படி இவர்களில் யாரோ ஒரு சிறுபான்மையினர் பற்றியதாய் இருக்கும்.

இவற்றைச் சொல்கிறவர்களில் பலபேர் 20 வருடங்களாக கனடாவில் இருப்பவர்கள்கூட; தமது பிறந்த மண்ணைவிட, மேற்குலகவாசிகளாகவே உணர்கிற, சிறிய வயதில் கனடா வந்த மாணவ, மாணவியரும்கூட.

கொழும்பில் இருந்தபோது இந்த மனிதர்கள் பற்றி வருகிற கதைகளின் வியித்திரத்தன்மையில் மூழ்கியிருக்கிறேன்தான் - ஒரு நகைச்சுவையாய், புதினமாய், மிருகக்காட்சிசாலையின் வெவ்வேறு மிருகங்களைப் பார்வையிடுவதுபோல ‘இப்படியும் நடக்கிறது’ பகுதியிலோ ‘இப்படியும் உள்ளார்கள்’ என்றோ ‘முன்பு” “பின்பு’ என படங்கள் போடுவார்கள்; பார்த்து வியப்புற்றதுண்டு. அதே தொனிதான் எவ்வளவோ காலத்திற்குப் பிறகும் கனடாவில் உள்ள தமிழ் பத்திரிகைகளிலும் உள்ளது என்பதை என்னவென்பது?

கனடாவைப் பொறுத்தளவில், இவர்களை ஆங்கிலப் பத்திரிகைகளில் ‘பாரபட்சமாக’ சித்திரிப்பதில் அவதானமாக இருக்கின்றன (இருக்கின்றன என்றால் சம்மந்தப்பட்ட சிறுபான்மை ஆதரவுக் குழுக்கள் அதைக் கவனத்தில் கொண்டுவரும்/எதிர்க்கும் என்பது கருதி; அத்தகைய ‘சட்ட பலம்’ ஓரளவுக்காவது இருக்கிறது.) இவைகள்
Star, National post, Globe and mail போன்ற ‘படித்தவர்களது’ பத்திரிகைகளில்தான். பெரிதும் யூதர்களால் ஆளப்படுகிற பத்திரிகையுலகம் சிறுபான்மை அகதிக் குழுக்கள் மீது பாரபட்சமான பார்வைகளை தமக்குரிய தந்திரங்களில் வெளியிட்டுவந்தாலும், இத்தகைய சிறுபான்மைக் குழுக்கள் தொடர்பாய் கவனமாய் இருப்பார்கள். ‘தொழிற்சாலை’ அல்லது கீழ்த்தட்டு மக்களால் படிக்கப்படுகிற எனப்படுகிற (கொச்சையான மொழிப் பாவனை) Sun போன்ற பத்திரிகைகளில் இவற்றை எதிர்பார்க்க முடியாது. இவர்களது பத்திரிகையை பலர் எடுப்பதே மூன்றாவதோ நான்காவதோ பக்கத்தில் பெரிய அளவில் வருகிற அரைநிர்வாணப் பெண்உடலின் படத்திற்காகத்தான் (அந்தப் படம் ‘படிக்காத/கீழ்த்தட்டு’ மக்களுக்குத்தான் தேவை என நீங்களும் நம்பினால், கட்டாயம், இங்குள்ள பெருநிறுவனங்களின் ஆண்களின் கழிப்பறைக்கு ஒருமுறையாவது போய் வாருங்கள்!). Sun இலுங்கூட பாரபட்சமான செய்திகள் வந்தால் அதைத் தட்டிக் கேட்கிற உரிமை, நஸ்டஈடு கேட்கிற உரிமை இங்கே உள்ளதாகையால் முடிந்தளவு எதிர்க்கிற, போராடிற பலம் இன்றைக்கு உள்ளது. எங்களது நாடுகளில் இதற்கு எவ்வளவு காலங்கள் ஆகுமோ. முடிந்தவரையில் ஒவ்வொருவருக்கும் அறிவூட்டப்பட்டால் (இது உயிரியல்ரீதியானது, ‘இது ஒரு வருத்தம் அல்ல’, இயற்கையாகவே ஒருவர் ஒரே பாலான மற்றவரை நேசிக்கிறார் என்ப பற்றி முக்கியமாக) அதுவே பெரிய விடயம்.


உறவினர் கூடுகிற விருந்துவிழாக்களில் எப்போதும் இத்தகைய உறவுகள் பற்றிய உரையாடல்கள் 'இத்தகையவர்கள்' மற்றவர்களுக்கு இழைக்கிற 'துரோகங்கள்' பற்றியதாய்த் தொடரும்.

“எங்கடவீட்டு basement இல இப்ப இருக்கிற அக்காவ husband விட்டிட்டார். நல்ல அக்கா! அவட பிள்ளையைத் தரச் சொல்லி கொடுமைப் படுத்திறாராம்... அவர் வந்து... அவருக்கு வந்து ஒரு ... ஆம்பிளையோடைதான் தொடர்பாம்.’
இதைச்சொன்ன பெண், ஒரே பாலர்கள் திருமணம் செய்வது ‘நடக்கிற’ ஒரு நாட்டில் 15 வருடங்களிற்குமேலாய் வாழ்ந்து வருகிறார்.

நாங்கள்: எல்லாவிதமான துரோகங்களைப் பற்றியும் பேசலாம். எதுதான் துரோகமில்லை? காலங்காலமாக ஆண்களும் பெண்களுமாய் மனித இனமே தமக்கு நேர்ந்த துரோகங்களைப் பற்றிய வெஞ்சினத்தில்தான் ஆழ்ந்திருக்கிறது.

தற்சமயம் 50களில் இருக்கிற ஒரு பெண்மணி, கணவர்
தான் ஒரு ஓரினச் சேர்க்கையாளர் என அறிவித்துக்கொண்டபோது சொல்கிறார்: “ம்ம்ம்... நான் ஏமாற்றப்பட்டேனா? தெரியவில்லை. இ ப்போது என் 50களில் இருக்கிறேன். நான் இளமையாய் இருந்தபோது, துக்கமாய் இருந்தெனென்றும் இல்லை. பிள்ளைகள், இனிய கணவன்.. நான் மிகழ்ச்சியான பெண்தான். எனினும், எனது கணவருடான திருமண உறவில் ‘ஏதோ ஒன்று’ குறைவாய் இருப்பதுபோலவே இருக்கும். அவருக்கு நான் கவர்ச்சியாய் இல்லாததுபோல...! இந்த உணர்வுடன்தான் 25 வருடங்களிற்கு மேலாய் நான் அவருடன் இருந்தேன். இப்போது அதற்கான ‘காரணம்’ தெரிகிறது. வேறை என்ன சொல்ல?”

பார்த்துக்கொண்டிருந்தபோதே மிக வருத்தமாய் போய்விட்டது. அந்தப்பெண், அந்த 'ஏதோ ஒன்றை’யும் அனுபவித்தபடி, அவளை சர்வநிச்சயமாய் நேசித்தவனுடன், sexy ஆய் உணர்ந்தபடி வாழ்ந்திருக்க வேணாமோ?!

காதலித்து, தன்னுடன் கூடி இருந்து, பிள்ளைகள் பெற்று, பிறகு அவர்கள் வளர்ந்துவருகையில் -இவளது மத்திய வயதில்- பெண்ணாக பால்மாற்றம் செய்துவந்திருக்கிற கணவனை பார்த்துக்கொண்டிருந்த இன்னொரு பெண்ணினது முகத்தில் அதிர்ச்சி மறையவில்லை. அவர்கள் இன்னமும் ஒன்றாய்த்தான் வாழ்கிறார்கள். அவளில் 'புதிய அவளிற்கு' நேசமும் இருக்கிறது. ‘(பால்மாற்றத்திற்குப் பிறகு) எனது குறியற்ற உடலோடு உறவுகொண்டபோது எனது மனைவி அழுதாள்; எனக்கும் வலித்தது. என்ன செய்வது? அவள் லெஸ்பியன் இல்லையே.”

எதிர்பால் உறவாளர்களான இந்தப் பெண்கள், அவள்கள் விரும்புகிற ஒரு குடும்பத்தை சிருஸ்டிப்பதோ, தாம் காதலித்த ஆணை திருப்பப் பெறுவதோ, தன்னை ‘கவர்ச்சியாய்’ உணர்கிற ஒருவனுடன் வாழவோ இனிமேல்
அவர்களுக்கு கால அவகாசமில்லை, 'காதலிக்கப்பட்டதாய்' நம்பி , ஏதோ வகையில் ‘பயன்படுத்தப்பட்ட’ அந்தப் பெண்களது வலியை இவர்களது ‘தாமாக வாழ்தல்’ அழுத்துகிறது.

ஆனால் என்ன செய்வது?

இந்த சிறுபான்மையினரால் தாமாக வாழ முடிந்திருந்தால் இத்தகைய துரோகங்கள் நடந்திருக்கப் போவதில்லை. அவர்களைப் பற்றிய குற்றஉணர்ச்சிகள், வசைகளில், கேலிகளில் சமூகம் பிரித்து வைத்திருக்காதிருந்திருந்தால் அவர்கள் இதைச் செய்திருக்கப் போவதில்லை.

தன்னை ஒரு பெண்ணாக உணர்கிற கறுப்புப் பையனோ பொம்மைகளுடன் விளையாட விரும்புகிறான். கறுப்புத் தகப்பனார் அவனை ஒரு ‘விளையாட்டு வீரனாய்’ கொண்டுவர விரும்புகிறார் (விளையாட்டு ‘வீரன்’ என்றில்லாவிட்டாலும், ஆண் =‘வீரன்’ என்பதை அதற்கு அவர்கள்/நாம் ஒவ்வொருவரும் தருகிற முக்கியத்துவத்தை அவர்களது பண்பாட்டு வேர்களோடு பொருதிப் பார்க்கவேண்டும்). அந்த நிகழ்ச்சியில் ‘ஆணாய்’ வளர்க்கப்படுகிற அந்த –உள்ளே பெண்ணாய் உணர்கிற- குழந்தைகள் எப்படி அந்நியப்பட்டுப் போகிறார்கள் -தற்கொலை செய்துகொள்கிறார்கள்- என்பதை எல்லாம் காட்டினார்கள். இறுதியில் அந்தத் தகப்பனிடம் ‘இப்போது உன் மனோநிலை என்ன’ எனக் கேட்க, “வீட்டுக்குப் போகையில் அவனுக்கு சில கரடிப் பொம்மைகள் வாங்கிச் செல்லவேண்டும்’ என்றார். அவர் ஒரு சராசரியான, மத நம்பிக்கைகளும் ஒழுக்கக்கோட்பாடுகளும் உடைய தகப்பன்.
ஆனாலும் சொன்னார்: ‘எனக்கு கஸ்ரம்தான். ஆனால் எனது பிள்ளையின் மகிழ்ச்சி எதைவிடவும் முக்கியமானது”.


இங்கிருந்து தொடங்குவோம்.

15 Comments:

Blogger Thangamani said...

வன்முறையின் வேர்கள் மிக நுட்பமானவை. மனிதன் இன்னும் நுட்பமானவனாகையில் (subtle) அவன் இதுகாறும் செலுத்திவந்த வன்முறையின் வேர்களின் நுனிதேடி உணரமுடியும். தேசம், பண்பாடு,குடும்பம், மொழி, மதம், ஒழுக்கம், நன்மை, அறம் இவைகளின் பேரிலே நடக்கிற வன்முறைகள் மிக நுட்பமான புரிதலை வேண்டுகின்றன.

மரங்களை வரிசையாக வைப்பதும் கூட அவைகள் மேல் செலுத்தப்படும் வன்முறைதான் என்பது ஒரு கண்டுணர்தல்தான்.

மனிதனின் சுதந்திரத்தின், இன்பத்தின் மீது நசுக்கிக்கட்டப்படும் நமது நிறுவனங்களின் அஸ்திவாரத்தில் இருந்துதான் சகல வன்முறைகள், துன்பங்கள், துரோகங்கள், வலிகள், போர்கள், பொய்கள், ஏமாற்றங்கள், அச்சங்கள் தோன்றுகின்றன என்பதை உணருவதற்கு விடுதலையை அவாவுகின்ற இதயமும், ஏற்றுக்கொள்கிற பார்வையும் வேண்டுமல்லவா?

நன்றி பதிவுக்கு.

2/20/2005 01:13:00 a.m.  
Blogger இளங்கோ-டிசே said...

நல்ல பதிவு. இன்னும் கொஞ்சம் விரிவாக நீங்கள் எழுதியிருக்கலாமோ என்று வாசிக்கும்போது தோன்றியது.
//இவைகள் Star, National post, Globe and mail போன்ற ‘படித்தவர்களது’ பத்திரிகைகளில்தான். பெரிதும் யூதர்களால் ஆளப்படுகிற பத்திரிகையுலகம் சிறுபான்மை அகதிக் குழுக்கள் மீது பாரபட்சமான பார்வைகளை தமக்குரிய தந்திரங்களில் வெளியிட்டுவந்தாலும், இத்தகைய சிறுபான்மைக் குழுக்கள் தொடர்பாய் கவனமாய் இருப்பார்கள்.//
என்பதுவும்,
//‘தொழிற்சாலை’ அல்லது கீழ்த்தட்டு மக்களால் படிக்கப்படுகிற எனப்படுகிற (கொச்சையான மொழிப் பாவனை) Sun போன்ற பத்திரிகைகளில் இவற்றை எதிர்பார்க்க முடியாது. இவர்களது பத்திரிகையை பலர் எடுப்பதே மூன்றாவதோ நான்காவதோ பக்கத்தில் பெரிய அளவில் வருகிற அரைநிர்வாணப் பெண்உடலின் படத்திற்காகத்தான் (அந்தப் படம் ‘படிக்காத/கீழ்த்தட்டு’ மக்களுக்குத்தான் தேவை என நீங்களும் நம்பினால், கட்டாயம், இங்குள்ள பெருநிறுவனங்களின் ஆண்களின் கழிப்பறைக்கு ஒருமுறையாவது போய் வாருங்கள்!). //
என்பதுவும் முக்கியமான அவதானங்கள்.

கனடாவிலாவது Sun போன்ற ஒன்றிரண்டு பத்திரிகைகளில்தான் இந்த அரைநிர்வாணப்படங்கள் வருகின்றது. இலண்டனில் நின்றபோது கிட்டத்தட்ட 90% வீதமான தினசரிப்பத்திரிகைகளில் almost naked படங்கள் வந்ததைப்பார்த்து திகைத்திருக்கின்றேன். உலகில் அதி தீவிர conservative மக்கள் இருக்கும் (அல்லது இருப்பதாய் பிரேரிக்கும்) பிரிட்டனில் இதையெல்லாம் அசட்டைசெய்யாதிருப்பது எதற்கென்றெல்லாம் சொல்லித் தெரியத்தேவையில்லை. ம்...நானும் ஒருமுறை உள்ளே பக்கங்களை விரித்துப்பார்க்காமல் ஒரு தினசரிப்பத்திரிகையை சிறுவர்கள் அதிகம் புழங்கும் வீட்டிற்கு வாங்கிக்கொண்டு சென்று அதை ஒளிக்கவும் முடியாது, எறியவும் முடியாது பட்ட அவதி இன்னும் ஞாபத்திலிருக்கிறது.
...........
//நாங்கள்: எல்லாவிதமான துரொகங்களைப் பற்றியும் பேசலாம். எதுதான் துரோகமில்லை? காலங்காலமாக ஆண்களும் பெண்களுமாய் மனித இனமே தமக்கு நேர்ந்த துரோகங்களைப் பற்றிய வெஞ்சினத்தில்தான் ஆழ்ந்திருக்கிறது.//
சரியாகச்சொல்லியிருக்கின்றீர்கள்.

2/20/2005 09:11:00 a.m.  
Blogger ஒரு பொடிச்சி said...

நன்றி தங்கமணி மற்றும் டீ.ஜே.
இந்தப் பதிவு ஒரு intro மட்டுமே. விரிவாக இரண்டு பதிவுகள் உள்ளிட உள்ளேன்.
நேரமிருக்கும்போது பாருங்கள்.
நன்றி.

2/20/2005 10:55:00 a.m.  
Blogger -/பெயரிலி. said...

நல்ல பதிவு.

/தன்னை ஒரு பெண்ணாக உணர்கிற கறுப்புப் பையனோ பொம்மைகளுடன் விளையாட விரும்புகிறான். கறுப்புத் தகப்பனார் அவனை ஒரு ‘விளையாட்டு வீரனாய்’ கொண்டுவர விரும்புகிறார்/

Ma Vie en Rose கிட்டத்தட்ட இது மாதிரியான ஒரு கதையைச் சொல்லும் படம். பார்த்திராவிட்டால், பாருங்கள்.
ஒரு விதத்திலே, சு. சமுத்திரத்தின் அலிகள் பற்றிய கதையின் சில சம்பவங்களைக்கூட, இதற்குக் கிட்டே வைத்துப் பார்க்கலாம்.

டிஜே, உலகத்தின் மிகப் பழமைவாத நாடென்று பிரிட்டனைச் சொல்லமுடியுமாவென்று தெரியவில்லை; தொழில்சார்ந்த நிலையிலே முன்னேறிய நாடுகளிலே, அமெரிக்காவுக்கே அந்த இடமென்று படுகின்றது.

2/20/2005 12:33:00 p.m.  
Blogger ஈழநாதன்(Eelanathan) said...

நல்லதொரு பதிவு பொடிச்சி.புனைவு கலந்த இலக்கியக் குரல்கள் தமக்கான அங்கீகாரமாக இவ்வாறான மனிதரக்ளைப் பற்றிப் பேசும்போது உங்கள் பதிவு உண்மையை உள்ளபடி சொல்கிறது.
பெயரிலி குறிப்பிடுவது சு.சமுத்திரத்தின் வாடாமல்லி என நினைக்கிறேன்.

2/20/2005 04:25:00 p.m.  
Blogger மதி கந்தசாமி (Mathy Kandasamy) said...

// அந்த நிகழ்ச்சியில் ‘ஆணாய்’ வளர்க்கப்படுகிற அந்த –உள்ளே பெண்ணாய் உணர்கிற- குழந்தைகள் எப்படி அந்நியப்பட்டுப் போகிறார்கள் -தற்கொலை செய்துகொள்கிறார்கள்- என்பதை எல்லாம் காட்டினார்கள். இறுதியில் அந்தத் தகப்பனிடம் ‘இப்போது உன் மனோநிலை என்ன’ எனக் கேட்க, “வீட்டுக்குப் போகையில் அவனுக்கு சில கரடிப் பொம்மைகள் வாங்கிச் செல்லவேண்டும்’ என்றார். அவர் ஒரு சராசரியான, மத நம்பிக்கைகளும் ஒழுக்கக்கோட்பாடுகளும் உடைய தகப்பன்.
ஆனாலும் சொன்னார்: ‘எனக்கு கஸ்ரம்தான். ஆனால் எனது பிள்ளையின் மகிழ்ச்சி எதைவிடவும் முக்கியமானது”.


இங்கிருந்து தொடங்குவோம். //

Amen!

Remembered 'Boys dont cry'.

Expecting detailed posts podichchi.

2/20/2005 05:08:00 p.m.  
Blogger -/பெயரிலி. said...

/Remembered 'Boys don't cry'/
yeh! even when they become Million Dollar Babies ;-)

2/20/2005 06:29:00 p.m.  
Blogger ROSAVASANTH said...

நல்ல பயனுள்ள பதிவு!

2/20/2005 07:21:00 p.m.  
Blogger ஒரு பொடிச்சி said...

நன்றி பெயரிலி, ஈழநாதன், மதி, ரோசாவசந்த்!
அடுத்த பதிவு 'ஓரினச்சேர்க்கையாளர்கள்' பற்றியது. அவர்கள்குறித்து எழுத 'வித்தியாசங்கள்' இல் இருந்து ஆரம்பிக்கலாம் என்று இதை உள்ளிட்டேன்.

நானும் பெயரிலி குறிப்பிடுவது சு.சமுத்திரத்தின்
வாடாமல்லி என்றுதான் நினை்ககிறேன். அதுகுறித்து
விமர்சனங்கள்தான் படித்தது.
பெயரிலி குறிப்பிடுகிற படம் பார்க்க முயலுகிறேன்.
மதி! Boys don't cry என்னையும் பாதித்தது…

2/21/2005 02:49:00 a.m.  
Blogger -/பெயரிலி. said...

/சு.சமுத்திரத்தின் வாடாமல்லி /
yes

2/21/2005 03:09:00 a.m.  
Blogger Narain Rajagopalan said...

மிகவும் பயனுள்ள பதிவு. நேரமின்மையால் விரிவாக எழுத இயலவில்லை, ஒரு வாரம் கழித்து விரிவாக எழுத விருப்பம். ஒரினசேர்க்கையாளர்கள் பற்றிய பதிவினை இட வேண்டும் என்பதும், அவர்களுக்கான சமூக இருப்பை நிச்சயப்படுத்துவதும் எண்ணத்தில் ஒடிக் கொண்டிருக்கிறது. விரைவில் பதிவேன் என்று நினைக்கிறேன். பார்ப்போம்

2/21/2005 10:55:00 a.m.  
Blogger ஒரு பொடிச்சி said...

செய்யுங்கள் நாராயணனன். பின்னர் இது குறித்த விவாதங்களை நேரமிருக்கும்போது தொடரலாம். விரைவில் பதியுங்கள்!

2/21/2005 06:36:00 p.m.  
Blogger Balaji-Paari said...

அன்பின் பொடிச்சி,
உங்கள் பதிவு ஒரு தீர்க்கமான முறையில் பால் பாகுபாடுகளை அலசுகின்றது. இதில் எனது 2 சென்ட்ஸ்.
இப்போ நான் சொல்றத எப்படி சரியா சொல்றதுன்னு தெரியல. ஆனாலும் ஒரு முயற்சி.

boys don`t cryங்கற படத்த நான் பார்த்ததில்லை. ஆனால் இந்த தலைப்பு எனக்குள் உருவாக்கும் ஒரு பிம்பம் அழுகின்ற ஆண்களின் உள்ளத்தை குறித்ததான் ஒரு பதிவாக இருக்கும் என நினைக்கின்றேன்.
உண்மையிலேயே பார்த்தா எல்லார்க்குள்ளூம் ஆணும் பெண்ணும் இருக்கிறது கண்கூடு. இப்படி சொன்னது, ஆண் யார்? பெண் யார்? என்ற சமூக மதிப்பீட்டின் படி மட்டுமே. என்னளவில் நான் புரிந்து கொள்வது, பெண்கள் என்றும் ரியாலிட்டிக்கு நெருங்கி இருப்பவர்கள் என்பதும், அவர்களது நிகழ்வுகளின் மதிப்பீடுகள் pragmatic-ஆன ஒரு போக்கை கொண்டதாகவும் உணர்கின்றேன். இப்படி இருப்பதால் பல சமயங்களில் தங்களால் மிக்க அனலிட்டிகலாக இருக்க முடிந்தாலும், தேவையின் பாற்பட்ட, அது அவர்களதாகவோ அல்லது அவர்கள் சார்ந்த மக்களின் நலன்களை முன்னிறுத்தியோ, செயல்படும் பொழுது
அனிச்சையான ஒரு இன்ஸ்டிங்க்ட் பாற்பட்டு செயல் படுவதாக தோன்றுகின்றது. இதை போல் ஒரு ஆண் இறுக்கமாக இருப்பது ஒரு நிர்பந்தத்தின் குறியீடு என உணர்கின்றேன். மேலும் எழுத எண்ணம். விரைவில் எழுதுகின்றேன்.

2/23/2005 03:22:00 p.m.  
Blogger Balaji-Paari said...

சென்ற காமெண்ட்டின் தொடர்ச்சி...

ஆண்களின் "இறுகிய" என்பது பெரும் விழுக்காடுகள் இருக்கும் உணர்வை குறித்தானது. இதில் உள்ளதை மேலும் கவனித்தால், அவர்கள் தங்களை தாங்களே ஏமாற்றிக் கொள்ளும் ஒரு நிலையில் உள்ளனரோ என்ற ஐயம் எழும். இதில் பலரில் தாங்கள் தலைமுறை தலைமுறையாக தொடரும் எண்ணங்களின் வழி வாழ்தல் பெருமை என்ற கற்பிதத்தின் சாயலே பல்லிளிக்கும். இதை கடந்து போவதற்கான வழியை அவனுக்குள் இருக்கும் பெண்மையாலே சாத்தியம். இதை அவன் உணர்ந்தாலும், உணர்வுக்கு எதிராக வாழும் வாழ்க்கையை தேர்ந்தெடுத்துவிடுகிறான். இதில் எந்த ஒரு அசட்டுத்தனத்தையும் செய்ய துணிகிறான். தனக்குள், சுதந்திரம் என்பதை காண கண்ணிழந்து, pragmatic-ஆன பார்வையை தவிர்த்து, பல சமயங்களில், ஒரு ஆதிக்க முறையை தனதாக்குகின்றான். இதில் உள்ள நுட்பம் பின்னர் கழிவிரக்கமாகவோ அல்லது, உண்மையை உணரும் வழியாகவோ வெளிப்பட தோன்றும் சந்தர்ப்பத்தையும் வழிகளையும் அவனே அடைத்து விடுகின்றான். பயமும் இங்கே தோன்றுகின்றது அவனுள்.
சரியா சொன்னேனா என்று தெரியல. ஆனாலும் நினைச்சத எழுதிட்டேன்.

2/23/2005 04:14:00 p.m.  
Blogger ஒரு பொடிச்சி said...

பாலாஜி! ‘ஆணாக இருக்கவேண்டும்’ என்கிற அழுத்தம் ஆண்மீதான அடக்குமுறைதான். அவன் அதை அதிகாரமாக/ஆதிக்கமாக மாற்றி வைத்திருக்கிறான்...

2/25/2005 08:13:00 p.m.  

Post a Comment

<< Home