@font-face { font-family: TSCu_InaiMathi; font-style:normal; font-size: 10pt; font-weight:normal; src:url(http://mathy.kandasamy.net/fonts/TSCUINA1.eot); }

Monday, February 21, 2005

II- ஓரினச்சேர்க்கையாளர்களைப் புரிந்துகொள்ளுதல் பற்றி...

‘பெல்ஜியம், நெதர்லாந்து போன்ற ஆக இரண்டே நாடுகளைப்போல கனடாவும் விரைவில் ஒருபால்மணத்தை ஆதரிக்கிற நாடுகளில் ஒன்றாகும்’ என பழைய பிரதமர் ஜான் கிறச்சியன் (2003 இல்) ஒருமுறை சொன்னார். அதற்கு 50/50 ஆக சார்பாயும் எதிர்வாயும் அவரது கட்சிக்குள்ளேயே வாதங்கள் எழுந்தன; அப்போது பிரதமருடன் உடன்பட்டவர்களில் ஒருவர் தற்போதைய பிரதமர் போல் மார்ட்டின். இவர், இப்போ இத் தலைப்பை விவாதத்துக்கு (debate) விட்டிருக்கிறார் (இதைக் ‘கோழைத்தனமாக நிலைப்பாட்டு மாற்றம்’ என ஒருபால்திருமண ஆதரவாளர்கள் எழுதியுள்ளார்கள்); வரும் தேர்தலில் ஒருபால்மணத்தை ஆதரிப்பதில் தனது பதவி பாதிப்புக்குள்ளாகலாம் என்பதாலேயே இந்த மாற்றம். சில கணக்கெடுப்புகளில் இந்த ஒரேவிடயங் காரணமாக லிபரல் கட்சிக்கான ஆதரவும் குறைந்துள்ளதுதான். தற்சமயம், pass பண்ணப்பட்டுள்ள bill பலத்த விவாதங்களுக்கு உள்ளாகியிருக்கிறது. ஆளும் கட்சியினர் தமது லிபரலான கருத்துக்களை; தம்மீது திணிக்கும் மற்றொரு நிகழ்வாகவே தேவாலயங்கள் இதைப் பார்க்கின்றன; உதாரணம்: இச்சட்டம் அமுல்படுத்தப்படுமாயின், இது மத உரிமைகளை பாதுகாக்காது. ஒரு மதபோதகரோ அரசாங்க பதிவாளரோ ஒருபால் ஜோடிக்கு திருமணம் செய்து வைக்க மறுப்பாரானால், அவரை மனித உரிமைகமீறல் சட்டங்களின்கீழ் கொண்டுவந்து நிறுத்திவிடுவார்கள் ஓரினச்சேர்க்கை ஆதரவாளர்கள், இவ்வாறு அச்சம்(!) தெரிவிக்கிறார்கள். இதற்கு வலுசேர்க்கும் முகமாக பிரிட்டிஷ் கொலம்பியாவில் 2003 இல் ஓர் பெண் ஓரினச்சேர்க்கையாளரது திருமணத்திற்கு ஹோலை வாடகைக்குத் தர மறுத்தவரை அப் பெண்கள் sue பண்ணியது போன்ற சம்பவங்களை நினைவூட்டுகிறார்கள். இதற்கு நீதியமைச்சர் இர்வின் கொட்லர் இத்தகு பிரச்சினைகளை எப்படி எதிர்கொள்வது என்பதையிட்டு ஒவ்வொரு மாநிலமும் தயாராகவே இருக்கிறது, அதை பெரிதுபடுத்தத் தேவையில்லை என்று கூறியிருக்கிறார்.
பல்வித முரண்பாடுகளுள், இந்த ஜீன் மாதத்திற்குள் அதை சட்டமாக்கி அமுல்படுத்த முனைகிறார்கள். மார்ச் இல் நாடாளாவிய ஓரினச்சேர்க்கையாளர்களது திருமண-ஆதரவிற்கான பாராளுமன்றக் கணக்கெடுப்பு நடைபெறும். சாத்தியப்பட்டால் மனித உரிமையை ஒத்துக்கொள்வதில் கனடா மூன்றாவதாக ஆகிற பெருமை சேரும் (இதுவரையில் கனடாவில் 10 மநாநிலங்களிலும் (province) 3 territories இலும்-
Ontario, British Columbia, Quebec, Alberta, Nova Scotia, Manitoba, Newfoundland/Labrador ஆகிய (8) மாநிலங்களிலும், Yukon territory இலும் ஓரினச்சேர்க்கையாளர்கள் திருமணம் செய்ய உரிமை உள்ளது (திருமணத்தால் மற்றத் துணைக்கு வருகிற உரிமைகள் அல்ல, திருமண உரிமை மட்டும்)).

ரொறன்ரோவில இருந்தபோது, பொதுவாக ஒருமுறையேனும் இந்த gay/lesbian pride parade இற்கு போயிருப்பம், சும்மா விடுப்புப் பார்க்க எண்டாலும். எமக்கு அழகான ஆண்கள் கே(G)கள் என நாம் துக்கித்தும், மாறி, ஆண்கள் தமக்கு அழகான பெண்களை லெஸ்பியன்கள் என துக்கித்தும் அவர்களுடைய கொண்டாட்டங்களை பாத்துவருவதுதான்... மற்றவர்கள் உரிமைகளை மதித்தல் தொடர்பாய் நாங்கள் எங்களை எவ்வளவுதான் தயாரானவர்களாய் வைத்திருந்தாலும் ‘மதித்தலும்’ புரிதலும் வேற வேற கட்டங்கள்தான். மனதார, இதயத்தால ஒன்றை உள்வாங்குவது இலகுவல்ல.

அவர்களுடைய குரல் ஒலிக்கிற இலக்கியங்களோ படங்களோ வெகுசனஅளவில் சொற்பம். அதுவும் (மேற்கிலும்) உயர்பாடசாலைகளில் படிக்கிற மாணவர்கள் ‘இயோ(ஓ!)’ என ஒரு அருவருப்புறுதலுக்கும், சைகைகளுடன் கூடிய சிரிப்புக்குமுரிய விடயம்தான் ‘அவர்கள்’. கனடாவில் பெண்/ஆண் ஓரினச்சேர்க்கையாளர்களை மாணவர்கள் சேர்ந்து தாக்குவதும் செய்திகளில் வருகிற விடயமே. சின்னவகுப்புகளில் இந்த ‘வித்தியாசங்களை’ விளங்கப்படுத்த முயலாத பாடத்திட்டங்கள், பூர்வீகக்குடிகள் பற்றியும் பால்பேதங்கள் பற்றியும் பல்கலைக்கழகங்ளில் கற்பிக்கத்தொடங்குவதில் ஆரம்பிக்கிறது சமூக கட்டுமானத்தின் திட்டமிட்ட அசட்டையீனம்.

ஒரு காலத்தில், ‘அவர்கள்’ பற்றிய அறிதலை எனது ‘ஆகா நான் அவர்களை மதிக்கிற அளவு ‘உயர்ந்தவளாய்’ ஆகிவிட்டேனே’ மனோநிலையில், பூரிப்பில், சனநாயகவாதியாய் தென்பட்ட என்னிலும் பெரியவரிடம் பேசியபோது அது எனக்கு நல்ல அனுபவமாய் இருக்கவில்லை. அவர் சொன்னார்: "பிள்ளை, உனக்கு உதுகள் தெரியாது. உதுகளுக்கல்லாம் முறைகள் இருக்கு." நான், புரியாமல், ஏதோ அவர்களுக்கு உதவுவது தொடர்பாய், அவர்களுக்கு ‘சார்பாய்’ கதைக்கப்போறார் என, "என்ன அது?” எண்டு கேட்க, "பிள்ளை! நீ இதுகள் கதைக்கக்கூடாது. உனக்கு யாரையும் தெரியுமெண்டா சொல்லு. உரிய ‘முறையள்’ இருக்கு. ‘சரி’ப்படுத்தீரலாம்" என்று சொன்னார். என்னிடம், பதிலாய் ‘முறைகள்’ ஐ அவர் உச்சரித்த விதத்தில் மெல்ல பயம் பிடித்தது. அவரோ படு நிதானமாக அதைச் சொன்னார், ஏதோ அது அவரது கடமையைப்போலும்... (இப்பவும் அந்தத் தொனி, அதன் சாந்தம் பயமா இருக்கு!)

எமது -வெகுசன-சிற்றிதழ்- சூழலில்- பயர் (Fire) வந்ததும், கணிசமான அளவு பேசினார்கள்; எதிர்த்தோ நக்கலாவோ இது தொடர்பாய் உரையாடப்பட்டது. படத்தில், எனக்கு, உயிரியல்ரீதியாய் விட, ஒரு தேர்வா பெண் ஓரினச்சேர்க்கையை காட்டினது தொடர்பாய் கேள்வி இருந்தது (மோசமான ஆண் அனுபவங்களை உடைய மற்றும் பல அதிதீவிரப் பெண்ணிலைவாதிகள் மேற்கில் இந்தப் ‘பாலியல் தேர்வை’ தேர்கிறார்கள் என்பது உண்மையென்றபோதும், சாதாரண இரண்டு பெண்கள் அதை just like that ஆய் தேர்வது படத்தில் பொருந்த/சரியாய்வரவில்லை.) எதிர்ப்பு படத்திற்கு பெரியளவில் இருந்தபடியால் அதன் தரம் பற்றி யாரும் பேசவில்லை. குமுதத்திலோ ஆனந்தவிகடனிலோ நடந்த ஒரு விவாதத்தில் கலந்துகொண்ட ஒரு பெண்மணி கூறினா "அவ (தீபா மேத்தா) மேற்குக் கலாச்சாரப் பெண், அது இங்க தேவையில்ல. தடைசெய்யத்தான் வேணும்" என்று. அதற்கு அருமையான ஒரு பதில மங்கை சொன்னா: "மேற்கின் பெப்ஸி, கொக்கக் கோலா முகக் கிறீமுகள் எல்லாம் எங்களுக்கு வேணும் ஆனா இது வேணாமோ" என்று.

சரிநிகர் பத்திரிகை, புதிய கலாச்சாரமோ, நிறப்பிரிகையோ வெளியிட்ட கட்டுரையை மறுபிரசுரம் செய்தது (ஐயப்பனும் ஓரினச்சேர்க்கையாளரா இருக்கலாம் என்றெல்லாம் அதில எழுதியிருந்தார்கள்). புதிய புதிய அறிதல்கள். புதியவற்றுக்த் தயாரான மூளையுள் அவர்களது உரிமைகள் பதியப்பட்டு நான் அவர்களை புரிந்துவிட்டேன் என்றும் எனது புத்திஜீவிதத் தன்மைக்காகவும் மிகவும் சந்தோசப்பட்டுக்கொண்டுதான் திரிந்தேன் - எனது உறவுகள் சகோதரர்கள் யாரும் அப்படி வந்தால் அதற்கு என் மனம் எதிர்வினையாற்றாது என்றும்!

ஆனால் டவுண்ரவுன் மாதிரி ஒரு நெருக்கடி மிகுந்த ‘அவர்களை’ அடிக்கடி காண நேர்கிற நகரத்தில் வாழ ஆரம்பித்த பிறகு எனது அறிவு என்னை ஏமாற்றிவிட்டது, மிக மோசமாக! அங்கே வாழ ஆரம்பித்த ஆரம்பத்தில், அந்தநேரம் எனது சகோதரன்/பிள்ளை யாரும் அப்படியானால் நான் எப்படி மனமுடைந்து போவேன் என்பது எனக்குப் புரிந்தது. சப்வேயில் பயணிக்கையில் நான் காணுகிற அவர்கள், முக்கியமாக அவர்களிலிருந்து வருகிற அந்த -எனது பிரம்மையாவோ பயமாகவோ- பெண்மணம், அவர்களை நோக்கிய பெண்களதும் பொடியளினதும் கேலிச் சிலிப்பொலிகள், இவைகளை எனது பிள்ளை/எனது இரத்தம் எதிர்கொள்ளவேண்டுமென்றபோது மனசு பதறத் தொடங்கியது.

குறிப்பிட்டளவு inform பண்ணப்பட்டிருந்த எனது பதற்றம் பயங் காரணமாக வந்த விடயம் (பயம் ‘அறியாமை’யின் காரணமாக). அது அவர்களது ‘வித்தியாசத்தை’ அவர்களுக்கு பின்னே ஒலித்த குரல்களை, நேரடையாய் பார்த்ததன் விளைவும். அந்த சமயம், அந்தப் பதற்றத்தை தவிப்பை ஆற்ற தமிழில் இந்த சிறுபான்மை குரல்களால் எழுதப்பட்ட எந்த இலக்கியத்தையும் படிக்க கிடைக்கவில்லை. இதன் அர்த்தம் தமிழில் ஓரினச்சேர்க்கையாளர்கள் இல்லை என்பதா?! (பேசப்படாத எதுவுமே தமிழில் ‘இல்லை’ என்றுதான் பொதுமனம் நம்புகிறது. ஒருவரிடம் தந்தையால் பாலியல் வன்முறைக்குட்படுத்தப்பட்ட பெண் பற்றிக்கூற ‘எங்களிட ஆக்களுக்குள்ள இதுகள் இல்லை என!’ என்று பெருமைப்பட்டு அவர் வாய் மூடமுன், ‘எங்களுக்குள்ளதான்’ என நான் சொல்ல அவர் அதை ‘இருக்கவே இருக்காது’ என மறுத்துவிட்டுப் போனார்!) படிக்கிற காலத்தில், ஈழத்தில் பெண்கள் விடுதிகளில் இரண்டு பெண்கள் தொடர்ந்து ஒன்றாய் திரிந்தாலே கூப்பிட்டு ‘எச்சரிக்கை’ கொடுப்பார்கள். தொடர்ந்து ஒட்டிக்கொண்டு போனால், நெருக்கமாய் திரிந்தால் அது ‘ஒரு மாதிரி’ப் பார்க்கப்பட்டதோடு அப்படித் தனியே விடார்கள். ஆண்களிடையேயும்; இராணுவங்களில், விடுதிகளில் இந்த உறவு இருக்கிறது; பெண்களது விடுதிகளிலும் இந்த உறவு இருக்கிறது. ஒவ்வொரு பழைய மாணவர்களிடமும் கேட்டால், தங்களது ஆசிரியர்களிடமிருந்தோ வளர்ந்தவர்களிடமிருந்தோ உறவுக்காரிகளின் கணவர்களிடமிருந்தோ வந்த அதிர்ச்சி தரும் ‘அனுபவங்களில்’ ஒன்றேனும் நினைவுகூருவார்கள்.
ஆனால் நமது இலக்கியப் பிரதிகளில்?



1998 இல் சியாம் செல்வதுரை எழுதிய அவரது இரண்டாவது நாவல் படித்தேன். 1920 களில் வாழ்ந்த, ஒரு பெண்ணிற்கு மணமுடித்துவைக்கப்பட்ட ஓரினச்சேர்க்கையாளனின் அந்தக் காலப் பின்னணியில் எழுதப்பட்ட
Cinnamon Gardens என்கிற நாவலே அது. அது படித்தபிறகு ‘அவர்கள்’ பற்றிய எனது மனோநிலை, நியாயமற்ற வெறும் பயம் ((Homophobia) என்னிடமிருந்து போனது – அது தனது குரலை, எழுத்தாளரின் எந்த இடையீடும் இன்றி, ‘அப்படியே’ பதிவுசெய்திருந்தது.

காலம்: 1920கள்.
கதைக்களன்: கறுவாத்தோட்டம். கொழும்பில், உயர்வர்க்க, ‘தமிழ் தெரியாத’ தமிழர்கள் வாழுகிற ஒரு பகுதியின் பெயரே
Cinnamon Gardens. இவர்களை ‘கறுவாத் தோட்டத் தமிழர்கள்’ என அழைப்பார்கள். இங்கேதான் பாலேந்திரன் என்கிற ஓரினப்சேர்க்கையாளன் வாழுகிறான். அவனுடைய அப்பா முதலியார், லண்டனில் படிக்கப்போன மகன் இன்னொருவனுடன் வாழுகிறான் என்பதறிந்து அவனை பிரித்துக் கொண்டுவந்து, திருமணம் செய்துவைத்து, குடும்ப வியாபாரம் இன்ன பிறவை நிர்வகிக்க வைத்து விடுகிறார். பாலேந்திரன் -லண்டனில் நடந்ததுபோல மீண்டும் ஒருமுறை- தான் மிக மிக நேசிக்கிற, தனது அப்பாவின் கௌரவத்திற்கு பங்கம் விளைவிக்கக்கூடாதே என்று தனது பாலுணர்வு சார்ந்த குற்ற உணர்ச்சியுடனே –காதலனை லண்டனில் பிரிந்ததற்குப் பிறகான- மீதிக் காலத்தைக் கழிக்கிறான். தான் தனது அப்பாவின் எதிர்பார்ப்பை –முன்பு குறைத்ததுபோல- குறைத்துவிடவே கூடாது என முயன்று வெற்றியும் பெறுகிறான், தனது மனைவிக்கு சுற்றம் சூழலுக்கு தான் ஒரு ஓரி.சேர்க்கையாளன் என்கிற விடயத்தை மறைத்தும் விடுவதில் முதலியாருடன் சேர்ந்து வெற்றியும் காண்கிறான். அவனது ஆழ்மனம் விடுபட்ட நினைவுகளில் வாழ்ந்துகொண்டே இருக்கிறது. அவனைப் பொருட்டின்றி நகர்கிற காலத்தில் அவன் இல்லவே இல்லை. நண்பனுடன் பிறகு தொடர்பில்லை, இரவுகளில் எழுந்து கடற்கரைப் பகுதியில் ஒரு இளம்பெடியனுடன் தனது பாலுணர்வை தீர்த்துக்கொள்ளும் அவன் வீடு திரும்புகையில் குற்றஉணர்ச்சியுடனே திரும்புகிறான். தனது பாலியல்தேர்வு குறித்த, தான் ‘தவறாய்’ நடப்பது குறித்த, தான் தனது துணையை துரோகிப்பது குறித்த, குற்ற உணர்ச்சிகள்... இப்போது இவனுடைய மகன் லண்டனில் படிக்கிறான். தம்பதிகளுக்கிடையே தனிமை. ஏதோ நிமித்தம் வருகிற ‘லண்டன் காதலன்’ அப்போது அவனை மீள சந்திப்பது குறித்த இவனது மனஓட்டங்கள், அந்தத் தவிப்பு ... (அது எமது காதலை நாம் சந்திக்கும்போது இருக்கிறதுபோலவே இருக்கிறதே...).
...
இதற்கிடையில் 20களில் வீட்டைவிட்டு, வேலைக்காரப் பெண்ணுடன் இந்தியாவுக்கு ஓடிப்போன தகப்பனால் ‘தலைமுழுகப்பட்ட’ அண்ணனிற்கு வருத்தம் என்று தகவல் வருகிறது. தன்னைமீறிப் போனவனைப் பார்க்க, தகப்பன் தான் போகப்போவதில்லை என்று அவனது உடலை மட்டும் இங்கே கொண்டு வா, இங்குதான் ‘முதலியார் பையன்’ புதைக்க வேண்டும் என இவனை அனுப்புகிறார். நீண்ட வருடங்களிற்குப் பிறகு சந்திக்கப் போகிற அண்ணன் -அவனுடனும் அவனுடைய ‘வேலைக்கார’ மனைவியுடனும் சிறுவயதில் அவனுக்கு நல்ல உறவு இருந்ததில்லை- அவனுடைய குடும்பத்தினர் - அவர்களுடன் அவனுடைய இறப்பின்பின் பிணத்தை இங்கே கொண்டு வருவது பற்றி எப்படிக் கதைப்பது? குழப்பங்களுடன் போகிறான்.
இவனை அழைத்துப் போக வரும் அண்ணனின் மகன், புலமைப்பரிசில்களின் துணையுடன், லண்டனில் வைத்தியருக்கு படித்துக்கொண்டிருக்கிறான், இப்போது அப்பாவைக் கவனிக்க வந்திருக்கிறான். ஏழ்மையின் நெரிசடி மிகுந்த அந்தக் குடியிருப்பில் காண நேர்கிற அண்ணன். அவனது மரணம்வரையில் அவனது அண்ணனுக்கும் அவனுக்குமிடையே நிகழ்கிற உரையாடல்கள்... அண்ணன் ‘உனது வாழ்க்கை எப்படி இருக்கிறது’ எனக் கேட்க, இவன் ‘அதற்கென்ன நன்றாகப் போகிறது’ எனுவான். ‘இல்லை. நான் கேட்பது அதையில்லை’ என்ற அண்ணன் பதில் சொல்லுவான், இவனுடைய கண்களை கூர்ந்து பார்த்தபடி. இவன் ‘எதைப் பற்றிக் கேட்கிறாய்’ எனக்கேட்க, ‘எனக்குத் தெரியும்’ என அவன் சொல்லுவான்! அதற்குப்பிறகான அண்ணனுடனான உரையாடல்கள் தகப்பன் பற்றிய பாலேந்திரனின் எண்ணற்ற கற்பிதங்களை உடைக்கிறது. ஒவ்வொருவிடுமுறையும், யாழ்ப்பாணம் செல்கையில், ஏழைப் பெண்களை நாடுவதும், அப்படி ஏழையான விதவைப் பெண்ணை வீடு அழைத்து வந்து, அவர்களை 'கவனிக்கும்' நல்ல பெயரும் வாங்கி, இயலாமையை பயன்படுத்தி அவளுடன் உறவு(?) வைத்தபடி, பின்னர் அவளது மகளையும் உறவுகொள்ள திட்டம்வைத்திருந்தார். அவரது மகனோ, அந்த மகளை ‘காதலித்து’ விட்டான். இதுதான் அவன் செய்த குற்றம். ‘அப்பாவிற்கு நான் அவளுடன் அவளுடைய அம்மாவுடன் அவர் செய்ததுபோல ‘கள்ள உறவு’ வைத்திருந்தால் ஒத்துக்கொள்ளக்கூடியதா இருந்திருக்கும் (சிரிப்பு) அவளை நான் ‘காதலித்ததே’ நான் செய்த தவறு. இதனால் முதலியார் வம்சத்திற்கே பெரும் அவமானம்!”
அண்ணனுடனான உரையாடலின் பின் அவர்கள் வீட்டருகே இருக்கிற கடற்கரையில் கடலைப் பார்த்தவண்ணம் நிற்பான் பாலேந்திரன். பயங்கர மௌனம் கவ்விற பக்கங்கள்...
அந்தக் கணங்கள் -பாலேந்திரன் என்கிற- அவனைவிட எனக்குக் கொடுமையானதாயிருந்தது. இறக்கப்போகிற அண்ணன் வாழ்வின் முழுமையுடன் இறக்கப்போகிறான். இடுங்கிய சிறு அறைகளிலோ ஏழ்மையிலோ அவன் வஞ்சிக்கப்படவில்லை, காதல் துணை, பிள்ளையின் கல்வி, எல்லாம் சாத்தியப்பட்டு முடியப்போகிறது. ஆனால் பாலேந்திரன்?!
ஒரு சமூகக் கள்ளனான முதலியாரை please பண்ண பாலேந்திரன் இழந்தது அவனது காதல், அவனது இயற்கையான பாலுணர்வுவேட்கை, அவனது வாழ்க்கை. சமூகத்தின் ஒழுக்க விழுமியங்களை கட்டி எழுப்புகிற முதலியார் போன்ற கள்ளன்கள் எதையும் இழப்பதேயில்லை, துணைக்குத் தொடர்ந்தும் வேறும் துரோகங்கள் பல செய்துகொண்டே இருக்கிறார்; அது குறித்து குற்றஉணர்ச்சி அவனுக்கு இருக்கப் போவதுமில்லை.

பாலேந்திரனோ தனது வாழ்வின் நடுப்பகுதியிலும் குற்றஉணர்ச்சியால் உழல்கிறான். அது அவனை ஒரு வதைபோல தொடர்கிறது. இயற்கையாய் வந்த தனது பாலியல் தேர்வுக்காய் தன்னையே தண்டித்துக்கொள்கிறான்.

மறுபுறத்தில், காலகாலமாக பாலியல்சார் ஒழுக்கங்களை (ஒன்றே திருமணம் ஒருவளே துணை என்றபடியும்) அதை மீறிக்கொண்டே இருக்கிறார்கள் ‘சமூகக் காவலர்கள்’ . இந்தக் கள்ளன்கள் வாழ்வில் எல்லாவித உல்லாசங்களையும் அனுபவித்து –மற்றவர்களுடையதை நிர்மூலமாக்கி- த்தான் மடிந்துபோகிறார்கள்.

அண்ணா இறந்துபோகிறபின்பு நாடு திரும்புகிற பாலேந்திரன், தனக்கும் தனது தகப்பனுக்குமான உறவில் ‘இனிமேல் எதுவும் முன்பு போல இருக்கப்போவதில்லை’ என உணர்கிறான். அப்பாவிடம் எதிர்ப்பாக நிற்கிறான். வீடுவந்து லண்டன் நண்பனுக்கு மன்னிப்புக் கடிதமும் எழுதுகிறான். அப்புறம் தனது துணையை காதலிக்கவில்லையே ஒழிய தான் அவளை நேசிப்பதை வாஞ்சையுடன் நினைத்துக்கொள்கிறான். அவனிடம் ஒரு நிம்மதி பரவுகிறது. செற்றியில் சாய்ந்து கொள்கிறான்.

அத்துடன் அவன் பற்றிய அந்தக் கதை முடிகிறது (வேறு உபகதைகள் தொடர்கின்றன).

இந்த முடிவில் எனக்கு தாங்கமுடியாத கோபம் வருகிறது. பாலேந்திரனுக்கு அவனுக்குரியதான தான் விரும்பியவனுடன் உறவுகொள்ளும் உரிமை கிடைக்கப் பெறவே இல்லை. அதுவோ 1920 ஆம் ஆண்டு. இப்போதும் உரையாடல்கள், விவாதங்கள், அவர்கள் மணமுடித்தலை சம்மதிக்க ஆக இரண்டே நாடுகள்!

ஆங்கிலத்தின் வந்த இப் புதினம் மனிதர்களின் (ஓரினப்புணர்ச்சியாளர்களின்) உளரீதியான வலியைச் சொல்லுகிறது. அவர்களுடைய துயரம், தங்களை பாலியல்ரீதியாக கவராத பெண்ணுடலுடன் வாழ வேண்டிய சமூக நியமனம் எம்மோடும் கூட ஏறி அறுக்கிறது. இத்தகையதொரு கருவை சியாம்போன்ற ஒருவரைவிட வேறு யாரால் அறுக்கும் வலியுடன் சொல்ல முடிந்திருக்கும்? அது ஒரு ஓரினப்புணர்ச்சியாளரால் எழுதப்பட்டிருப்பதால் ஏற்படக்கூடிய உணர்ச்சியல்லவா?




இந்தக் கதை படித்துக் கொஞ்ச காலத்துக்குப்பிறகு மீண்டும் ஒரு சமூகக் காவலரோடு பயணம் செய்தேன். அவர் எனது உறவினர். கனடாவில் முக்கியமான மாநிலங்களில் ஓரினப்புணர்சசியாளர்கள் மணம்செய்துகொண்டிருந்த, அவர்களது pride parade கள் வருடாவருடம் கோலாகலமாக நடந்துகொண்டிருந்த காலம். இவர் ஒரு பயண முகவராய் (இதைத் தவிர நான் வேற என்ன சொல்லவேண்டும்?) உலகமெல்லாம் சுற்றி, எல்லா நாட்டுப் பெண்ணுடலும் கண்டு, களைத்து நாடு வந்து சேர்ந்தார். அன்றைக்கு X.FM இல் ஓரினச்சேர்க்கையாளர் பற்றிய உரையாடல் நடந்ததா? தெரியவில்லை. ஏதோ ஒரு புள்ளியில் உரையாடல் அங்கு வந்து நின்றது. அவர் சொன்னார்: “ஓமடி முந்தி நல்ல நாடடி கனடா. இப்ப வந்து பார்த்தா என்னடி நடக்குது இங்க? கடவுளே! அமெரிக்காவில இந்த கூத்தெல்லாம் இல்ல. இங்க இருக்கவே வெட்கமா இருக்கு. இதுகளெல்லாம் ஊர்வலங்கூட்டி...”

“இங்க சியாம் செல்வதுரை எண்டொராள். அவர் நாவலள் எழுதியிருக்கிறார். அவரும் கே(G) தான்.”

‘ஓமாடி... (கேலிச் சிரிப்பு) ஐயோ!”

‘அவர் வந்து, தன்ர முதல் நாவல்ல 1983 கலவரத்த பற்றி எல்லாம் எழுதியிருக்கிறார்"

“(தொனி மாறல்) ஓ..”

"...ம். முக்கியமாக தமிழர்களுக்கு சார்பா எழுதியிருக்கிறார். இதுகள எழுத்தாளர்கள் சொல்லும்போது அங்கேத்தையான் பிரச்சினையளப் பற்றி ‘இங்கு’ கவனிக்கிறார்கள்”

(தொனி இன்னும் சீரியஸாய் மாறி) ”ஓமடி என? இங்க ‘எங்கட பிரச்சினையைப் பற்றி கவனிப்பாங்கள்’ என? ம்ம்ம்... அவர் எந்த இடம்?''
"கொழும்பு. தமிழ் தெரியாது ஆனா தமிழ் படிக்க இங்க try பண்ணினவர்”

அருகில் வந்தவர் பிறகு மலைப்புடன் வந்தார். நாங்கள் மனிதர்கள்தானே? ‘எங்கட பிரச்சினை’யை பேசினால் மட்டும் அவனது பால்உறவுத் தேர்வு பற்றிய ஆட்சேபனைகளை நிறுத்திவிடுவோம் என்ன! அவரது மௌனம்- அதை கொஞ்சநேரத்து வெற்றியாக உணர்ந்தேன். இறுக்கமாக அவருக்குப் பக்கத்தில் இருந்தபோது ‘சமூக அங்கீகாரத்தால்’ மட்டும் பாதுகாக்கப்பட்ட அந்த எழுத்தாளரின் மென்மையான முகம் கண்ணுக்கு முன்னால வந்து நின்றது. ஆனால் சமூகத்தில் அது எம்மாத்திரம்? துக்கமாய் இருந்தது.
என்னுடைய பயண முகவர் போல கள்ளன்கள் சமூகக் காவலன்கள் போல கேலிச்சிரிப்பும் நக்கலும் பண்பாட்டு கூவல்களும்தானே பத்திரிகைகளில்கூட வியாபித்திருக்கிறது? பத்திரிகைகள் ‘உலகத்தில என்னென்ன நடக்குதப்பா!!!’ போன்ற, கொச்சையாய், பொது இடத்தில் பேசுகிற விடயங்களையே, ஆசிரியர் தலையங்கமாய் போட்டால், பொதுப்புத்தியிடம் என்ன எதிர்பார்ப்பது? எமது பத்திரிகைகள் என்றில்லை, ஆங்கிலப் பத்திரிகைகள்கூட மத நிறுவனங்களின் ‘ஒரே பால் திருமணம் சரியென்பவர்கள் “இனி பலபேர்/தார திருமணத்தையும் (polygamy) ஏற்கச்சொல்வார்கள்” என எழுதுகின்றன. ஓரினச்சேர்க்கையாளர்களும், சுயநலமான, ‘உனக்கு நான் எனக்கு நீ’ மற்றும் பொறாமையுணர்ச்சிகள் சாதாரண உறவிலுள்ளதான சகலவும் உடைய ஜோடிகள் தான் என்பதை கவனங்கொள்ளாத இவைகளை என்னதான் செய்ய முடியும்?

பதிவுகள் இணைய இதழில், ரொறன்ரோவில் வருகிற விளம்பரம் என்கிற பத்திரிகையில் பரம்ஜீ என்பவர் இது தொடர்பாய் “மனித மிருகங்களையும் ஒரு கட்டுப்பாட்டுக்குள் வைத்திருக்க வேண்டும்” என்கிற சாராம்சத்தின் கீழ் எழுதியது தொடர்பாய் நிருபமா ராஜேந்திரன் எதிர்த்தெழுதியிருக்கிறார். அவருடைய மொழியில் உள்ள தலித் விரோதத்தன்மையை கற்சுறா கவனப்படுத்தியிருந்தார். எனக்கு, நிருபமா ரா., “திருமணம் என்ற பந்தமே தவறானது. இது எனது அடிப்படைக் கருத்து" என தனது எதிர்வினையை ஆரம்பிப்பது அநாவசியமாய்ப்பட்டது. இவர் திருமணத்தை ஆதரிக்கிறாரா இல்லையா என்பது இப்போது முக்கியமில்லை. திருமணம் பற்றிய விவாதங்களை பேசுகிற இடமுமல்ல இது. முதலில் அந்த உரிமை கிடைக்கவில்லை என்பதைப் பற்றிப் பேசுவோம் பிறகு அதன் உடைவுகளைப்பறறி, அதன் மாற்றைப் பற்றி. அடிப்படையில்லாமல் எப்படிப் பேசுவது? இணையத்தல் உள்ளவை தவிர பத்திரிகையில் வந்தவை படிக்காததால் சொல்லமுடியவில்லை. ஆனால் பொதுமனத்தில் இதனால் 'திருமணம் என்கிற பந்தமே தவறானது' என்கிற ஒரு அதிர்ச்சியில் மற்றொரு 'அதிர்ச்சியான' தலைப்பான -பேசப்படுகிற- ஒருபால்திருமணம் பற்றிய வாதம் கவனிக்கப்படாமற்போக வாய்ப்புள்ளது. மேலெடுத்துச் செல்லப்படாத இந்த கருத்தாடல்கள் பற்றிய ஒரு நல்ல விடயம், பொதுத்தளத்தில் சற்றேனும் பேசப்படுகிறது என்பது. தொடர்ந்தும், இது தொடர்பாய்; கனேடிய பாராளுமன்றம் மற்றும் ஊடகங்களில் விவாதிக்கப்படுகையில், புரிதலை ஏற்படுத்தும் விவாதங்களை உரையாடல்களை கனேடிய தமிழ் ஊடகங்களும் தொடர்ந்தார்களென்றால் நல்லது.

எல்லாவற்றுக்கும் அடிப்படையாய் ஒரு புரிதலோடு ஆரம்பிக்க வேண்டும்; -அவர்களை (யாரையும்) நாம் புரிந்துகொள்வது நிச்சயம் அவர்களுக்கு ‘நாம்’ செய்யிற ‘பெருந்தன்மையான’ விடயமல்ல. அது ‘எம்மை’ மனிதர்களாய் ‘ஆக்குகிற’ செயல்.
-குற்றஉணர்ச்சிகள் அடையவேண்டியவர்கள் அவர்கள் அல்ல, அவர்களைப் பற்றிய செய்திகளை, கீழ்த்தரமான பாலியல் கதைகளை பேசும் சுகம்போல பேசிக்கொள்வதை இட்டுத்தான், ஒவ்வொரு பத்திரிகைகளும் ஒவ்வொரு தனிமனிதர்களும் குற்றஉணர்ச்சி அடையவேண்டும்.
மறுபுறத்தில், இலக்கியங்களில், அவர்களது உளரீதியான, உணர்வுரீதியான ஓராயிரம் பகிர்வுகளை தம் பதிவுகளூடாக ஒரினச்சேர்க்கையாளர்கள்தான் முன்வைக்கவேண்டும். அவைகள்தான் உளவியல்ரீதியான தடைகளிலிருந்து மனிதரை விடுதலை
செய்யும். செய்ய வேண்டும்.

7 Comments:

Blogger Thangamani said...

நல்ல பதிவு. பேசாப்பொருளை (அதுவும் தமிழில்)பேசத்துணிந்த பதிவு. //அவர்களை (யாரையும்) நாம் புரிந்துகொள்வது நிச்சயம் அவர்களுக்கு ‘நாம்’ செய்யிற ‘பெருந்தன்மையான’ விடயமல்ல. அது ‘எம்மை’ மனிதர்களாய் ‘ஆக்குகிற’ செயல்.// இது எல்லா தளத்திலும் ஏற்புடைய வரி. நன்றி!

2/21/2005 10:54:00 p.m.  
Blogger Balaji-Paari said...

நன்றிகள் பொடிச்சி.
இது நல்ல பதிவு. கனடாவில் இந்த நிகழ்வுகள் குறித்தான விவாதங்கள், ரேடியோ மூலமும், அதில் பங்கேற்க்கும் நேயர்கள் மூலமும் அறிந்தே வருகின்றேன்.

மேலும், முதன் முதலில் ஓரினச் சேர்க்கையாளர்கள் குறித்த எனது எண்ணம் தெளிவடைந்தது, "the world this week" என்ற நிகழ்ச்சியின் மூலம். அதில், ப்ரணாய் ராய், இது ஜீன் வெளிப்பாடே என்று அறிவியல் பகுதியில் அப்போது வந்த ஆய்வுகளை சுட்டிக்காட்டி கூறினார்.

2/23/2005 04:24:00 p.m.  
Blogger ஒரு பொடிச்சி said...

நன்றி தங்கமணி மற்றும் பாலாஜி.
இவைபற்றி பேச வேண்டாம், சட்டரீதியான அனுமதியின்றி 'மறைமுகமாக' இவை நடந்தால் பறவாயில்லை என்பதுபோலவே பெரும்பான்மையினர் சொல்லுகிறார்கள். அப்படிச் சொல்லச் சொல்ல நிறையப் பேர் மேலும் மேலும் இதுபற்றி எழுதினால் நல்லது. முடிந்தமட்டும் ஆங்கிலத்தில் வந்த கட்டுரைகள் தகவல்களை எழுத, மொழிபெயர்க்க ஆர்வமாயிருக்கிறது. பார்ப்போம்!

2/25/2005 08:47:00 p.m.  
Blogger மாமூலன் said...

Pls. try to find few tamil stories and articles written. In India and Europe. Do not blame without info.
As a usual say 'Nothing in Tamil' or 'every thing in Tamil'- both are archetypal, no use.

3/12/2005 09:13:00 p.m.  
Blogger ஒரு பொடிச்சி said...

தேடி பார்க்கத்தான் வேண்டும்.. பொதுவாக 'எனக்குத் தெரிந்த' பிரதிகளையே இதில் எழுதினேன். சமீபத்திய 'காலச்சுவடு' (www.kalachuvadu.com) இதழில் கரிச்சான் குஞ்சுவின் 'பசித்த மானுடம்' (பழைய) நாவலை 'நவீனத் தமிழ் இலக்கியத்தில் ஓரினப் புணர்ச்சசியைக் கையாண்ட முதல் பிரதி' என விளம்பரப்படுத்தி இருக்கிறார்கள். புதிய தகவல்! இப்படி உங்களுக்கும் தெரிந்தவற்றை பதிந்தால் பிரயோசனமாக இருக்கும். நான் 'ஆங்கிலலத்தில் எழுதப்பட்ட கட்டுரைகள்-தகவல்கள்' என்று சொன்னது தமிழை குற்றஞ்சாட்ட அல்ல. ஓரினப்புணர்ச்சி போன்ற விடயங்கள் வெளிப்படையாய் பேசப்படாத தமிழ்சூழலில், அவை குறித்த, அடுத்தகட்ட விவாதங்கள் தமிழில் இல்லை என்பதும் வெளிப்படையானது. அவை பிற மொழிகளிலேயேதான் எடுக்கக்கூடியதாக இருக்கும். இது யதார்த்தம், இதைத்தான் குறிப்பிட்டேன். மற்றப்படி எனக்குத் தெரிந்த தமிழ் பிரதிகளைப் பற்றி பகுதி III {http://peddai.blogspot.com/2005/02/iii.html) இல் குறிப்பிட்டிருக்கிறேன். ஐரோப்பாவில் பல பதிவுகள் தமிழில் இவை குறித்து இருக்கலாம். அதை தெரிந்தவர்கள்தான் பதிய வேண்டும்.
உங்களுக்குத் தெரிந்தவற்றை இங்கே பதியலாம் maappillaiyaar!

3/13/2005 10:14:00 p.m.  
Anonymous Anonymous said...

மிக நல்ல பதிவு,
தமிழிலே இது போன்ற பதிவுகள் வரவேற்கத்தக்கவை. ஓரினச்சேர்க்கை பற்றி இது வரை எந்த ஊடகத்திலும் சரியாக பதிய படவில்லை. பெறுகிவரும் ஓரின மற்றும் இருபாலினச்சேர்க்கையாளர்களின் எண்ணிக்கையை பார்க்கும் போது இதை பற்றி விவாதிப்பது தவிர்க்கவியலாதது.

11/05/2006 02:12:00 a.m.  
Blogger ஒரு பொடிச்சி said...

nantri anpae sivam..

11/17/2006 06:16:00 p.m.  

Post a Comment

<< Home