@font-face { font-family: TSCu_InaiMathi; font-style:normal; font-size: 10pt; font-weight:normal; src:url(http://mathy.kandasamy.net/fonts/TSCUINA1.eot); }

Thursday, March 17, 2005

வெங்கட் இற்கான பதிலும்...

..மேலும் சிலவும்


வெங்கட்!
நான் ''மிகவும் முற்போக்கான பார்ப்பனர்களே இந்த 'திட்டுதலில்' sensitive ஆய் இருப்பது ஆச்சரியமாய் இருக்கிறது..." என எழுதியது, திட்டமிட்டு, வெங்கட் மீது 'வன்மங்' கொண்டு, எங்கடா அதைப் போட்டு உடைக்கலாம் எனக் காத்திருந்து, ரோசாவசந்த் கா.பிலிம்ஸ் இற்கு எதிர்வினையாற்ற, அப்பாடா என்று வந்த வாய்ப்பைக் கெட்டியாய்ப் பிடித்து அல்ல, இதை முதலே 'தெளிவாக' சொல்லிவிடுகிறேன்.
நான் நனவற்று இயல்பாகத்தான் அதை எழுதினேன், எனக்கு குறிப்பிட்டளவு அந்த வகைப்பிரிப்புக்குள் அடங்குகிற நபர்களைத் தெரியுமென்கிறபடியால். . . உங்களை என்று குறிப்பிட்டு நினைத்து எழுதவில்லை. இதை 'திட்டமிட்டு' செய்திருந்தால் நிச்சயம் எனது பதிவிலோ உங்களது பதிவிலோ மறுமொழி இட்டிருப்பேன். அது ரோ.வசந்தின் பதிவில் அவரது பதிவைப் படித்தபிற்பாடு உணர்ந்ததை எழுதியது மட்டுமே, no strings attached to it, at all.
அதற்காக நீங்கள் 'தவறாக' எண்ணி எனக்கு பதிலளித்ததாயும் நினைக்க வேண்டியதில்லை. அத்துடன் எதன் பொருட்டும் "நீங்கள் சொல்லுகிற கருத்து முட்டாள்த்தனமானது" என்று நான் நினைக்கவில்லை.குறிப்பாக நாரயணன் பதிவு பார்த்து பின் உங்களிற்கு பதிலாய் நான் எழுதவில்லை.
இவற்றை கூறிவிட்டு உங்களது கருத்துகள் தொடர்பான எனது கருத்துகளை எழுதுவது உசிதமென நினைக்கிறேன்.

"பாப்பார நாயே என்று திட்டப்படும்பொழுது "நறுமணமும், அழகும் பொருந்திய மலர்களைக் கரங்களால் எடுத்துப் பூசிப்பவனே" என்பதாகச் சொல்வதன் அபத்தம் புலப்படுகிறதா? உண்மையில் அதற்குப் "பூசை செய்பவனே" என்றுதான் அர்த்தமா? இந்த அணுகுமுறை வியப்பளிக்கிறது. "
-வெங்கட்

இந்தியாவில் பிராமணர்களை பார்ப்பான் என்பது தவிர வேறெப்படி வசைபாடப்படுவார்கள் என்பது எனக்குத் தெரியாது (தெரியாமல் ஏன் எழுதினாய் என்கிற ஒரு கருத்தை வாசிக்கிறவர்கள் யாரும் தயவுசெய்து பின்னூட்டமிட மெனக்கெடாதீர்கள்). அதனால்தான், அந்த இடத்தில் பூஜை செய்பவன் என வைவது அவமானமா அல்லது மலம் அள்ளுபவன் என வைவது அவமானமா என எழுதினேன், தவிர அதற்கு வேறொரு 'கற்பனையும்' என்னிடம் இல்லை. இரண்டும் இரண்டு சமூகத்தினரது 'தொழில்'கள். பிறப்பினால் ஒருவன்(ள்) கீழிறைக்கப்படக்கூடாது 'உங்கள் பிறப்பிற்காக நீங்கள் வருந்தவேண்டும்" என்கிற கருத்துக்கள் இல்லாத நான், மலம் அள்ளுபவர்களாக 'பிறப்பினால்' ஒரு சமூகம் கீழிறைக்கப்படுகிறது என்பதை -அந்த வித்தியாசத்தை சொல்ல மட்டுமே- அதை எழுதினேன். நீங்கள் பூஜை செய்பவன் எனுகிற வசைக்கான விளக்கத்தைக் கூறி வசையென்றமட்டில் அதுவும் இதுவும் ஒன்றுதானே எனக் கேட்டிருக்கிறீர்கள். (பின்னூட்டத்தில் ரெண்டு வலிக்குமான மாறுபாடு தெரியும் என எழுதியுள்ளீர்கள்).
வசைகள் மனதை துன்புறுத்தவும் ஒருவரை உதாசீனம் செய்யவும் எய்யப்படுகின்றன என்பது உண்மைதான். ஆனால் எல்லா வசையும் ஒன்றல்ல. எத்தனையோ வேறுபாடுகளை வைத்துக்கொண்டு 'நானும் நீயும் ஒன்று' என்று சொல்வதை ஏற்றுக்கொள்ளமுடியாது, 'சமமாக' ஆகியபிறகு சொல்லவேண்டிய வசனம் அது.
ரோ.வசந்தின் பதிவில், அவரது பதிவிற்கான இத்தகைய எனது கருத்துக்களைத்தான் எழுதியிருந்தேன்.
குறிப்பிட்ட சில விடயங்களில் சென்சிற்றிவ் ஆய் இருப்பதற்கான -உங்களுடையவோ யாருடையவோ- உரிமையையும் நான் மறுக்கவில்லை.

"கொலை பயத்தை ஈழத்திலிருந்து வருபவர்களுக்கு நான் விளக்க வேண்டியதில்லை. ஒரு கோடை நாளில் வெளியில் கட்டிலில் படுத்திருந்தவரின் பூணுல் அறுக்கப்பட்டது. அடுத்த வாரம் திண்ணையில் தூங்கியவரின் வலதுகரம் வெட்டப்பட்டது.
...கொலை நடந்தது! என் அடுத்த வீட்டில் வசித்த, எறும்புக்கும் தீங்கு நினைக்காத ஒரு சரித்திரப் பேராசிரியர் மதிய வேளையில் மிதிவண்டியிலிருந்து கீழே தள்ளப்பட்டு நெஞ்சில் குத்தப்பட்டு இரண்டு நாட்கள் அவதிக்குப் பிறகு மரித்துப் போனார். அந்தக் குடும்பம் சிதைவதை என் கண்ணால் கண்டிருக்கிறேன்.ஒரு அப்பாவியின் நெஞ்சில் கத்தியைச் செருகுமளவிற்கு வன்மம் இருந்தால் அது உருவாகக் காரணமாக என்ன தவறிழைக்கப்பட்டது என்று எனக்குப் புரியவேண்டுமென்பது அவர் எண்ணம். "...

புரிந்தது. கோபங்கொள்ள அவர்களுக்கு இருக்கும் தார்மீக உரிமை விளங்கியது. விளைவு - என் முன்னோர்கள் தவறுகளைச் செய்திருக்கச் சாத்தியமிருப்பதாக நான் முழுமனதாக நம்புவது. அந்த எண்ணம் எனக்குள் விளைவிக்கும் அருவருப்பும் அவமானமும். அதற்காக நான் செய்யக்கூடியது மனதார பாதிக்கப்பட்ட என் சகோதரனிடம் நான் மன்னிப்பு விழைவது. அதிலும் முக்கியமாக அவனுக்கு ஆகவேண்டியதைப் பற்றிச் சிந்தித்துச் செயல்படுத்துவது.

ஆமாம், இது ஒரு பெரிய சுழற்சி. இதற்கு ஒரே தீர்வு. இதைவிட்டு வெளியே வருவதான் என்று மனதார நம்புகிறேன். இதில் என்னாலானது கீழே இருப்பவனுக்குக் கைகொடுக்கும் அதே நேரம், மேலே இருப்பவனைக் கீழே தள்ள முயற்சிக்காமல் இருப்பது. எனவே எந்தவிதமான வன்முறையும், கொடுஞ்சொற்களும் எனக்கு ஒப்பானவை அல்ல. எனவேதான், அறிவாளிகளாக நான் நம்பும் ஒருசிலர் பாப்பார நாயே என்று சொன்னாலும், பற நாயே என்று சொன்னாலும் எனக்கு வருத்தமளிக்கிறது. அதேபோலவேதான் செருப்பாலடித்தலும், ஆண்குறி அறுக்க விடுக்கப்படும் அழைப்புகளும். அதையும் விடக் கொடுமையானது இதில் ஈடுபடாதவர்களை எல்லாம் If you are not with us, you are against us என்று புஷ்தனமாகப் பயமுறுத்துவது. "
-வெங்கட்

எனக்கு இந்தக் கருத்தில் உடன்பாடில்லை. காரணம் நீங்கள் பேசப்பட்ட -நீங்கள் முரண்படுகிற - எல்லாவற்றையும் ஒரே இடத்தில் இணைக்கிறீர்கள். ஆண்குறி அறுத்தல் பற்றிய பதிவில் பேசுகிற விடயத்திற்கும் சாதி குறித்த வசையாடல்கள் பற்றிய இவ் விவாதத்திற்கும் தொடர்பில்லை. எனக்கு வெங்கட், ரோசாவசந்த், மதி என ஒவ்வொருவருடைய வெளிப்பாட்டு பாணியும் மொழியும் வெவ்வேறாக இருப்பதில் பிரச்சினை இல்லை என்பதால் அந்த பதிவில் முரண்பட எனக்கொன்றுமில்லை.
அத்துடன் மற்றவர்களிடம் மட்டும்தான் புஷ் தனம் உள்ளதா? அப்படியொரு விவாதத்திற்கு நாங்கள் போனால் உங்களது பகுதியில் இருக்கிற (நீங்கள் அறியாத?) புஷ்தனங்களை மற்றபகுதி பேச வேண்டும். எழுத இருக்காதென்றா நினைக்கிறீர்கள், என்னிடமே நிறைய இருக்கிறது. வன்மமற்று, குழு மனப்பாங்கற்று, நிதானமாக, 'கெட்ட'வார்த்தை அற்று எழுதவும் முடியும்.
பொதுவாகச் சொல்கிறேன் (உங்களுக்கு அல்ல): அப்போதுமட்டும் கருத்துக்களை இலகுவாக, வளர்ந்த, புத்தியுள்ள, ஒருவர் மாற்றிக்கொள்ளமுடியுமா? எனக்குத் தெரியவில்லை.
ஒரு பிரச்சினை தொடர்பாக தம்மிடம் ஒரு முடிவை வைத்துக்கொண்டுஎப்போதும் மாறப்போகாத வாதத்தில் இறங்கும் ஒருவரை 'மாற்றுவதில்' எனக்கு திறமையில்லை.

'வெளியே வருவது' என்பதற்கு அவரவர்க்கு வழிமுறைகள் தெரிந்திருக்கும். விவாதங்களும் தொடர் கருத்துப்பரிமாறல்களுமே எனக்கு புரிதலுக்கான முறைகளாய் இருக்கின்றன. இதனால் இதுவரை இத்தகைய விவாதங்கள் ஊடாக ''என்னுடன் இரு அல்லது எதிரியாக இரு'' என்கிற ஒரு தொனியை உணரவோ, 400 பேர் எழுதும் வலைப்பதிவு சமூகத்தின் ஒற்றுமைக்குலைவு பற்றியோ எனக்கொரு முன்அனுமானமும் தோன்றவில்லை.
----------------------------------
மற்றப்படி இங்கு யாரும் தலித்துகளிற்காக போராடவில்லை. அனேகமாக வெளிநாட்டில் வாழுகிற அல்லது இணையத்தொடர்புள்ள இந்திய,இலங்கை நபர்கள்தான் இங்கு வாதித்துக்கொண்டிருப்பவர்கள். இந்த வலைப்பதிவுகளில் அமெரிக்காவில் புஷ் வருவதுதொடர்பாக கருத்துக்கள் பரிமாறப்படுவதுபோலவே இந்தியாவில்இலங்கையில் நடந்துகொண்டிருக்கிற இத்தகைய அடக்குமுறைகள் பற்றிய புரிதல்களை வளர்த்துக்கொள்ளவே இந்த விவாதங்கள் பயன்படுவதாக நான் நினைக்கிறேன் (சிலவேளை சொன்னதையே சொல்லுவதுபோல இருபுறமும் அயர்ச்சி தோன்றினாலுங்கூட). இந்த மாதிரியான விடயங்களில் முடிந்தளவு தீவிரத்துடன், இருக்கிற நாட்டில் அவை குறித்த தேடல்களுடன், உலகெங்கும் அடக்கப்படுகிற மனிதர்கள் பற்றிய அறிதலும் புரிந்துகொள்ளுதலும்தான் எனது நோக்கமாக இருக்கிறது.
அல்லாமல், கனடாவில் பாதுகாப்பான ஒரு மூலையில் இருந்து ஈழத்திலோ தலித்துகளிற்காகவோ பெண்களிற்காகவோ போராடுகிற கனவும் எண்ணமும் கொண்டு இல்லை.
நீங்கள் 'புஷ்' தனமாக பயமுறுத்துவது என்பது எனக்குத் தெரியவில்லை. ஒவ்வொரு மனிதருமே கருத்துக்களால் ஆனவர்கள் என்கிறபோது 'ஒற்றுமை குலைகிறது' என யோசிக்கவும் இல்லை. அது அப்படித்தான் என்றால் பிரச்சினைக்குரியவர்களை இந்த 'தமிழ்மணம்' என்கிற இணைப்பிலிருந்து எடுத்துவிடுகிற 'உரிமை' கூட உரியவர்களுக்கு இருக்கிறது. இதிலெல்லாம் யாருக்கும் (குறிப்பாக எனக்கு) பிரச்சினையுமில்லை.
--------------------------------
" தலித்துக்கள் தலித்தாய் பிறந்தது குற்றமாக்கப்படுவதுபோல் தாங்களும் சிந்திக்கத் தெரிந்த பார்ப்னாகப் பிறந்தது குற்றமே. இந்த வலியைத் தாங்கள் அனுபவித்தே தீரவேண்டும்
...
இப்படியான சமூகத்தை உருவாக்கியது பாப்பன்கள். அவர்களில் ஒரு சிலர் இறந்துதான் தலித்திற்கு விடிவு வருமென்றால் அதில் தவறென்ன?"
இப்படி கறுப்பி கூறியதுடன், எனக்கு ஒரு எளவு உடன்பாடுமில்லை. ஆனால் நீங்களோ 'ஈழம்' = கறுப்பி என வாதத்தைத் தொடரவழிவிட்டு 'காந்தி தேசம் என பதிலைத் முடித்துள்ளீர்க்ள. இப்போது, உடனடியாக உங்களிடமிருந்து இயல்பாக வருகிற இந்த பதில்களின் உளவியலைப் பற்றி விவாதிக்கவேண்டுமென்று எனக்குத் தோன்றுகிறது.
மரணம் என்பது மரணம்தான் வெங்கட். அதற்கு மதமும் இனமும் எந்த வித்தியாசமுமில்லை. செல்ல நாய் செத்துப் போனால் அழுகிற நாட்டில் வாழ்ந்துகொண்டு ஒரு எறும்புக்கே தீங்கு நினைக்காத ஒருவர் இறப்பதைப்பற்றி நாங்கள் So What என நினைப்போம் என நினைக்காதீர்கள். இறந்துபோனவர்கள் யாருக்கோ ஒரு 'அன்புக்குரிய' தான். இந்தக் கருத்தை, காந்தி பிறக்காத, 'பயங்கரமான' தேசம் எனது பூர்வீகமாக இருக்கிறபோதும் என்னால் வைத்திருக்க முடிகிறது.
அதேநேரம் கலவரம் நடந்துமுடிந்து, தலித்துகள் எண்ணற்று கொல்லப்பட்ட இடத்தில் போய் இதைச் சொன்னால் அவர்கள் 'சாகட்டும், செத்தால் என்ன?' எனக் கேட்டால் அதை, அந்தக் கோபத்தை, அதன் நியாயத்தை, நாங்கள் புரிந்துகொள்ள வேண்டும். அதைப் புரிந்துகொள்ள விரும்பாமல், 'படிப்பறியா தாழ்த்தப்பட்ட' சகோதரன்கள் அல்ல இப்போது இங்கே விவாதித்துக்கொண்டிருப்பது, நன்கு 'படிப்பறிவுள்ள' வர்கள்தான்.
பார்ப்பான் என்கிறபோது அதற்கான முழுமையான எதிர்ப்பும், வசையும் இந்தியாவில்/இலங்கையில் அதிகாரங்களில் (அரசியல், பத்திரிகை, etc) இருக்கிற பிராமண/வேளாள ஆதிக்கத்தையும் அவர்களது திட்டமிட்ட சிறுபான்மைமீதான வன்முறையையும் வைத்தே எழுப்பப்படுகிறது.
தவிர,
வறிய, அக்ரகார பிராமணர்களைப் பற்றி பூமணியின் கதைகளிலும் வேறு பல இடங்களிலும் படித்துள்ளேன், எனக்கு அவர்களில் எந்த வெறுப்பும் இல்லை. 'பார்ப்பானையும் பாம்பையும் கண்டால்' யாரை அடிக்கவேண்டுமென்று என்னிடம் சொல்லப்பட்டபோதும் 'நான் யாரை 'அடிக்க'வேண்டுமென்பது எனது பிரச்சினை' என்றுதான் சொல்லியிருக்கிறேன். அந்த அப்பாவிகளிடம் போய் 'பார்ப்பாரப் புத்தி' இத்தியாதி என ஒருவன்(ள்) திட்டினால் அதற்கு நானோ அப் பிராமண ஆதிக்க எதிர்பர்பாளர்களோ 'சபாஸ்' போட்டால் அது எங்களுடைய அறியாமை மாத்திரமே. நிச்சயம் நான் அதை செய்ய மாட்டேன். ஆனால் இந்த விவாதங்கள் படித்த/வெளிஉலகங்களில் வசிக்கிறவர்ககளுடன் இடம்பெறுகிறது என்பதுதான் மிகப் பெரிய வேறுபாடு. அவர்கள் தருகிற கருத்துக்கள் சிறுபான்மையினருக்கு எதிரானதாக இருக்கிறபோத அது 'பார்ப்பன ஆதிக்கப் புத்தி'யின் வெளிப்பாடாய்த்தான் பார்க்கப்படும்.
********************************************
கொலைபயத்தைப் பற்றி ஈழத்தவர்களிற்குச் சொல்லத் தேவையில்லை என்றுவிட்டு உங்களுடைய இளம்பருவ மரணபயத்தை எழுதியிருந்தீர்கள்.
நான் ஈழத்திலிருந்து வந்தாலும்
மரணத்தைப் பற்றி அறிந்திருந்தாலும்
நான் சார்ந்த இனத்தை கீழிறைக்கும் எந்த வசைக்கும் (இலங்கையில் என்ன நடக்கிறது என்பது குறித்து எதுவுமே தெரியாத/தெரிய விரும்பாத இந்தியத் தமிழ் சகோதரர்கள் தமது நாட்டை 'நிலைநிறுத்தும்' (இதை இந்தியாவை அமெரிக்காவாய்ப் போட்டு, இலங்கையை வறிய நாடுகளாய்ப்போட்டு, இலங்கை மீதான 'புஷ்'தனம் என நான் சொல்லுவேன்) ஒரே உயர் நோக்கோடு எப்படி சாடினாலும்) சென்சிற்றிவ் ஆனதில்லை, ஆனால் 'ஈழத்தவராய் இருந்தாலும்' தங்கள்தங்கள் நலனுக்காக 'அரசியல் தெரியாதவர்கள் அரசியல் பேசுகிறபோது" கோபம் வருகிறது. ஆனால் கொஞ்சமும் வருத்தமில்லை.

உங்களைவிட எவ்வளவோ காரணங்களுக்காக எனது 'அடையாளங்களை' நான் காவலாம் என்றாலும்,
எனது இன, சாதி, நாடு போன்றை 'நிலைநிறுத்தும்' பொருட்டு நான் ஒருபோதும் பேசப்போவதில்லை (அதற்கு நிறையப் பேர் இருக்கிறார்கள்). என்னிடம் வந்து, எனது நாட்டில் வசிக்கிற, என்னுடைய மொழியே பேசுகிற வேறு மத சகோதரன் வசைபாடி, 'உனது நலனுக்கான எங்களை உனது இடம் விட்டுத் திரத்தினியே' என்று கேட்டால், சென்சிற்றிவ் ஆய் இராமல் தான் இருப்பேன், அவன் வெளிநாட்டில் வசிக்கிற, படித்தவனாய் இருந்தால்கூட.

அதே பக்குவத்தை 'முற்போக்கான' பிராமணர்களிடம்தானே எதிர்பார்க்க முடியும்? 60, 80 வயது காலமாக தமது ஜாதீயில் ஊறி, கடவுளிடம் சரணடைந்தவர்களிடம் போய் கடவுள் கல்லு என்று சொல்லி எனது அறிவை நிலைநாட்டிக்கொள்ளவேண்டிய வக்கிரம் எனக்கில்லை. ஆதலால் உங்களைப்போன்றவர்களிடம் இதை (கல்லு என்பதை அல்ல) எதிர்பார்க்கிறேன், அதனால்தான் அவர்களிடம் (முற்போக்கான பார்ப்பனர்களிடம்) சென்சிற்றிவ்வான பதிலைக் காண நேர்கிறபோது ஆச்சரியமாயிருக்கிறது. அதை எழுதினேன்.
அதன் அர்த்தம் அப்பாவிகளிடம் போய் வசைபாடுவதை ஆதரிப்பது அல்ல. ரோ.வசந்த் உங்களுடைய பதிவில் அவசியமற்று வந்து உங்களை உங்களது ஜாதியை முன்வைத்து வசைபாடியிருக்க மாட்டார் என்றே நம்புகிறேன்.

நீங்கள் எழுதியதாகக்கூட இருக்கலாம். பிராமண பையன்களை ஹறாஸ் செய்வது பற்றி. மீன் சாப்பிடச் சொல்லி, இத்தியாதி. பெண்கள்மீதான குழந்தைகள் மீதான வன்முறைகள் எல்லாவற்றையும் பேசுகிறவர்கள் இப்படியான திணிப்புக்களை ஆதரிப்பார்கள் என எனக்குத் தோணவில்லை. ஆக, 'பெரிய அளவில்' நடக்கிற விடயங்களை எழுதுகிறபோது இந்த மாதிரி விசயங்கள் அவற்றின் அவசியமின்மை கருதியே விடுபடுகின்றன, வசதி கருதி இல்லை.

யாரையும் தனிமைப்படுத்துவது, அந்நியப்படுத்துவது தவறுதான்.

யாரையும் துன்புறுத்த வசை சொல்வது தவறுதான்.

இவையெல்லாம் பெரியளவில் பலமற்ற, ஒடுக்கப்படுகிற, சிறுபான்மையினர்மீது நடக்கிறது.

அதை வைத்து நடக்கிற வாதத்தில் உங்களை தொந்தரவு செய்கிற விடயம் எனக்கு ஆச்சர்யம், உங்களுக்கு வியப்பு! அவ்வளவே.


என்னால் முடிந்த அடியெடுத்துத் தருகிறேன். இன்னும் இருபது, ஏன் ஐம்பது வருடங்களில் சாதியற்ற சமூகத்தை நாம் நம்மில் காணவேண்டுமென்றால் அதற்கான வழிமுறைகளாக உங்கள் மனதில் தோன்றுவதை எழுதுங்கள்
-வெங்கட்

உங்களது முன்னெடுத்தலில் எனக்குத் தெரிந்தவை: குறிப்பிட்ட ('படிப்பறிவற்ற' சகோதரர்களின்) பாடல்கள் (அவை 'பழமை'யைப் பாடினாலும்) எழுத்துக்கள், அந்த மக்களின் கலாசாரம் இவை பற்றி எமது புரிதல்கள் விரிவடையவேண்டும். அது நேர விவாதங்களும் வாசிப்பும்தான் முக்கியமாக கல்விக்கூடங்களில் சொல்லித்தந்தார்கள்.
நான் முடிந்தவரையில் அவற்றைப் படித்து வருகிறேன். மூதாதையர்கள் ஒரே மொழி பேசிய மனிதர்களை பிறப்பால் பிரித்து 'பீமட்டை தோய்த்து அடித்த' வரலாற்றை வாசிப்பதை என்னை மனிதராக வைத்திருக்க நான் அறிய வேண்டிய விசயங்கள் என்பதில் எனக்கொரு சந்தேகமுமில்லை, எனது பிள்ளைகள், பிள்ளைகளின்பிள்ளைகள் கூட இவைகளை அறியவேண்டும், இது திரும்ப நிகழாமல் இருக்க இதுவும் ஒரு வழிதான். இந்தமுறைதான் எனக்குத் தெரிந்த முறை.


இதை எழுதிக்கொண்டிருக்கிறபோது மாலனின் பின்னூட்டம் இப்படி முடிகிறது "
வலைப்பதிவுகளில் பதிவர்கள் தாங்களே வரித்துக் கொண்ட அடையாளங்களின் பேரில் மற்றவர்களின் பேரில் கக்குகிற கசப்புகள் அதிகமாகத்தான் இருக்கின்றன. ஒரு universal outlookகை பெறாதவரையில் அவர்கள் இதிலிருந்து மீண்டு வர முடியாது. அந்தப் பார்வையைப் பெற முடியாமல் அவர்களது 'அடையாளங்களே' அவர்களைத் தடுக்கின்றன.

universal outlook என்றால் என்ன? எங்களுடைய நாட்டில் இருக்கிறதை விட்டுவிட்டு அமெரிக்க ஆதிக்கத்தைப் பற்றி சொல்வதா?
எனக்குத் தெரியவேண்டும். யூதர்கள் தமக்கு நடந்த இனப்படுகொலையை சொன்னால் அதை 'பழம் பெருமை' பேசுவதாக நீங்கள் சொல்வீர்களா? வரலாற்றில் வாழவேண்டியதில்லை யாரும். ஆனால் அதைத் தெரிந்து கொண்டு எங்களைப் பக்குவப்படுத்தவும், அதற்கு மனதார/இதயத்தால தயாராகவும் வேண்டும்.
இதயத்தில் 'உயிரேயில்லாத' தமது நாடு/ தமது நாட்டின் நலன்/ தமது நாட்டின் முன்னெடுப்பு இவற்றை வைத்திருப்பவர்கள் 'உயிருள்ள' மனிதர்களைப் பற்றி பேசுவதும், மனித வலிகளைப் பற்றிப் பேசுவதும் முரண்நகை.


ஒவ்வொரு கருத்துக்களையும் கூறுகிறபோது: 'இந்தியாவை' எதிர்த்தால் 'எனக்கு இந்திய நண்பர்கள் இருக்கிறார்கள்' என்றும், பார்ப்பனஆதிக்கத்தை எதிர்த்தால் 'நல்ல பார்ப்பனர்களும் இருக்கிறார்கள்' என்றும் ஆணாதிக்கத்தை எதிர்த்தால் 'நல்ல ஆண்களை எனக்குத் தெரியும்' என்றும் பதாகைகளின் துணையோடு அவற்றை சொல்ல வேண்டியதில்லை என்று நினைத்ததாலையே சுதந்திரமாக எழுதுவது. இதன் அர்த்தம் பார்ப்பானியத்தின் ஒருபக்கத்தை (வசதிப்படி) மட்டும் பார்க்கவிரும்பி அல்ல. அதன் மறுபக்கம் நமது நாடுகளின் ஏனைய வறிய குடிகளுடன் இணைந்ததாவே இருக்கிறது, அதை அவர்களுடன் இணைத்துத்தான் பேசமுடியும் என்பதாலையே.
நன்றி.

6 Comments:

Blogger Kasi Arumugam said...

இந்த தலைப்பிலாலான பதிவுகளில் என் எண்ணத்துக்கு அருகில் இருப்பது இதுவே. (எவர் எழுதுவதோடும் இன்னொருவர் முழுக்க ஒத்துப்போகவேண்டும், முடியும் என்ற கருத்திலேயே நம்பிக்கையில்லாதாதால் இதனோடும் முழுக்க ஒத்துப்போகவில்லயானாலும்)

பெட்டை , நீங்கள் அப்படியானால் புதிய ஆள்தான், பழைய ஆள்யாருமில்லை:-D

3/17/2005 09:08:00 p.m.  
Blogger Kasi Arumugam said...

//பெட்டை , நீங்கள் அப்படியானால் புதிய ஆள்தான், பழைய ஆள்யாருமில்லை:-D //

என்பது

'பொடிச்சி, நீங்கள் அப்படியானால் புதிய ஆள்தான், பழைய ஆள்யாருமில்லை:-D '


என்று வரணும்

3/17/2005 09:12:00 p.m.  
Blogger மாலன் said...

>>universal outlook என்றால் என்ன? எங்களுடைய நாட்டில் இருக்கிறதை விட்டுவிட்டு அமெரிக்க ஆதிக்கத்தைப் பற்றி சொல்வதா?<<

இல்லை. நான் அப்படிச் சொல்லவில்லை. ஆனால் உங்களுடைய நாட்டின் பிரசினைகளை, நான் இந்து, நான் பெண், நான் இந்த ஜாதியைச் சேர்ந்தவள், நான் இலங்கையைச் சேர்ந்தவள், நான் தமிழச்சி போன்ற கண்ணாடிகளை மாட்டிக் கொண்டு அணுகாமல் இது சக மனிதனுக்கு ஏற்பட்ட பிரசினை என்ற பார்வையோடு அணுகுவது.
பாமியான் புத்தர் சிலை தகர்ப்பையும், பாப்ரி மஸ்ஜித் இடிப்பையும் ஒரே நோக்கில் அணுகுவது. சிங்களர்கள் தமிழர்கள் மீது நடத்தும் படு கொலைகளையும், தமிழர்கள் தமிழர்கள் மீது நடத்தும் படுகொலைகளையும் ஒரே மாதிரி அணுகுவது. ஆதிக்க உணர்வை அமெரிக்க ஆதிக்கம், வேளாளர்கள் ஆதிக்கம், பார்ப்பன ஆதிக்கம் என்று பாகுபடுத்திக் கொள்ளாமல், ஆதிக்கம் யாருடையதனாலும் கண்டிக்கத் தக்கது என்று கருதுவது.

அடையாளங்கள், objective பார்வைக்குத் திரையிட்டுவிடும்.universal outlook திரைகளைத் தாண்டிப் பார்க்கும் துணிவைத் தரும்.

சுருக்கமாகச் சொன்னால், " பெரியோர் எனில் வியத்தலும் இலமே, அதனிலும் சிறியோர் எனில் இகழ்தலும் இலமே" என்ற மனோபாவம்.

நான் வரலாற்றில் வாழ்வதைத்தான் மறுதலிக்கச் சொல்கிறேன். வரலாற்றை அறிந்து கொள்வதை அல்ல. மகாகவி சொன்னதை மறுபடி சொல்கிறேன்: சரித்திரம் தேர்ச்சி கொள்".
மாலன்

3/17/2005 11:00:00 p.m.  
Blogger ROSAVASANTH said...

கருத்து சொல்ல வரவில்லை. ஒரு சின்ன தவறு நடந்துவிட்டது. வாசித்து முடித்ததும் வாக்களிக்க முடிவு செய்து, ஏதோ ஞாபகத்தில் +ற்கு பதில் -ஐ அழுத்திவிட்டேன். இது கவனக்குறைவால் ஏற்பட்ட தவறு. இது ஒரு தகவலுக்காக மட்டுமே! மிகவும் மன்னிக்கவும்!

3/18/2005 04:18:00 a.m.  
Blogger பத்மா அர்விந்த் said...

மாலன்
நீங்கள் கூறும் universal outlook ன் சக்தியை நானறிவேன். ஆனாலும், நீ பெண் என்ற கண்ணாடி மீண்டும் மீண்டும் வலிய அறந்து முகத்தில் சாத்தப்படும் போது, ஒரு முறை இல்லாவிட்டாலும் ஒரு முறை பாரபட்சமாகவே பார்க்க முடிகிறது. வலியும் வேதனையும் எல்லா இனத்தவருக்கும் பொது என்றாலும் ஆழ் மனதில் என்றோ காயம் பட்டு போய் இன்னமும் ஆறாமல் இ ருக்கும் புண், மீண்டும் வலியை கிளரி விடுவதும் அதுவே பிறகு போராட்டங்களுக்கு காரணமாவதும் உண்டு. சக மனிதருக்கான வலி என்ற கோணத்தில் பார்த்தும் உதவி செய்தும் எனக்கு பழக்கமுண்டு. வலியையும் வேதனையும் அனுபவிப்பவர் முதலில் தன்னைத்தானே குற்றம் சொல்வதும், அந்த மனப்பான்மையிலேயே வாழவதும், பிறகு அதற்கு இவர் தான் காரணம் என்று சொல்வதும் தவிர்க்க இயலாதது. மற்றவர்களால் நீங்கள் சொல்லும் பாரபட்சம் என்ற கண்ணாடியை கழட்ட முடியாமல் போவதற்கும் இதுவே காரணமாகிறது. It is better to let out the anger that is built in than let it grow as when it comes out the consequences will be very bad.

3/18/2005 06:00:00 a.m.  
Blogger ஒரு பொடிச்சி said...

நன்றி காசி , ரோசாவசந்த், மாலன்!
மாலன், விளக்கத்திற்கு மிக்க நன்றி. ஆதிக்க உணர்வில் "ஆதிக்க உணர்வை அமெரிக்க ஆதிக்கம், வேளாளர்கள் ஆதிக்கம், பார்ப்பன ஆதிக்கம் என்று பாகுபடுத்திக் கொள்ளாமல், ஆதிக்கம் யாருடையதனாலும் கண்டிக்கத் தக்கது என்று கருதுவது" என்பதுடன் இந்திய ஆதிக்கத்தையும் இணைத்து வாசித்துக்கொண்டு, அதை அப்படியே ஆமோதிக்கிறேன்.

நீங்கள் வெங்கட் இன் பதிவில் "வலைப்பதிவுகளில் பதிவர்கள் தாங்களே வரித்துக் கொண்ட அடையாளங்களின் பேரில் மற்றவர்களின் பேரில் கக்குகிற கசப்புகள் அதிகமாகத்தான் இருக்கின்றன" என்று பொதுவாக ஒரு அவதானத்தை எழுதியதால் அது வெங்கட் உள்ளிட்டிருந்த விவாதத்தைப் பற்றியதோ என எண்ணியதாலேயே அந்தக்கேள்வியைக் கேட்டேன். அவ் விவாதத்தைத் தொடங்கியவர்கள் நீங்கள் குறிப்பிட்ட (தேசம், ஜாதி, பால்) எல்லைக்குள் சிக்கிவிடாது, உலகளவில் 'சக மனித பிரச்சினை' என்கிறளவில் பிரச்சினைகளைப் பார்க்கிறவர்கள் என்றே எனது கண்களிற்குப் படுவதால் உங்களது பின்னூட்டத்திற்குப் பிறகு அது வெங்கட் குறிப்பிட்ட விவாதம் பற்றியதாக இருக்கமுடியாதென்பது தெளிவாகப் புரிகிறது. ஆகவே நன்றி.

மற்றப்படி, நான் எழுதாமல் விட்டது, யூதர்கள் இனப்படுகொலையை சொல்வது தொடர்பாக எழுதினாலும், தங்களது இனப்படுகொலையை நினைவுகூர்ந்தபடியே இன்னொரு இனப்படுகொலையை தொடர்ந்து நடத்திக்கொண்டிருக்கிற அவர்கள் அரசியலில் உடன்பாடில்லை.

3/18/2005 03:30:00 p.m.  

Post a Comment

<< Home