@font-face { font-family: TSCu_InaiMathi; font-style:normal; font-size: 10pt; font-weight:normal; src:url(http://mathy.kandasamy.net/fonts/TSCUINA1.eot); }

Tuesday, April 12, 2005

*நான் நீ நினைக்கும் பெண்ணல்ல



செய்தி: என்மேல் முத்திரை குத்தாதே!

I am not an
aunt jemima, ballbreaker, biker chick, bimbo, bitch, bombshell, bra burner, bull dyke, butch, call girl, carmen miranda, china doll, dumb blonde, fag hag, femme fatale, feminazi, geisha, girl next door, gold digger, good chatholic girl, harem girl, ho, home girl, hot tamale, indian princess, jewish princess, lady boss, lipstick lesbian, lolita, mother teresa, nympho, old hag, old maid, pinup girl, prude, slut, soccer mom, squaw, stage mom, supermodel, tokyo rose, tomboy, trophy wife, valley girl, vamp, wicked stepmother or yummy mummy!
DON’T STEREOTYPE ME!

- A message from the book, BITCHES, BIMBOS, AND BALLBREAKERS: The Guerrilla Girls' Illustrated Guide to Female Stereotypes (Penguin paperback original, 2003).

எங்களுடைய வீட்டுக்கு உறவுக்கார பையன்கள் (ஒத்த வயது பிற ஒன்ற விட்ட சகோதரங்கள், மச்சாங்கள்) வந்த சென்ற மறுநாளோ என்னவோ வீட்டுக் கணணியில்,
இணையத்தில், ஒரு விளையாட்டுத் தளத்துக்குப் போக, ஆங்கிலத்தில ‘விளையாட்டு’ எண்டு ரைப் பண்ணினா ‘பெடியன்’ எண்டிற சொல்லும் கூடவே வந்துது- அது ஏலவே ஆரோ போயிருந்த தளம். ஏதோ புதுத் தளமாக்கும் எண்டு, பெட்டை போனா... திரையில் வந்தவையைத்தான் அபச்சாரம்! என்பர். பட்ச, என்னதான் வில்லங்கம் பிடிச்சவள் எண்டாலும், பதிறியடிச்சு யாரும் பாத்தினையோ எண்டு திரும்பிப் பார்த்து அவசரஅவரமா அந்தக் கறுமத்த நிப்பாட்டி ‘அம்மாடா’ எண்டு பெருமூச்சு விட்டா, இந்த விஞ்ஞான வகுப்பில தொலைக்காட்சியில காட்டின இதயம் லப்ரப் அடிக்கிறமாதிரி Pop-up வந்து வந்து அடையுது, அமத்த அமத்த வருது... புதுசா கொணந்துவிட்ட ஆங்கிலப் பள்டங்கள்ல பூனை கண்ண மூடிக்கொண்டா உலகமே இருளுது எண்டிற றேஞ்சில யாராவது இரு சக மாணவர்கள் முத்தமிட்டுக்கொண்டிருந்தா கண்ணமூடி கலாச்சாரம் பேணிக்கொண்டிருந்தவளுக்கோ இது சொல்லொணா அனுபவம்.

அன்றைக்கு அந்த உடல்கள், சந்தையில் ஆணிலைப்பட்ட எதிர்பார்ப்பாய் மனதில் பதிந்து போயிற்று. அந்த உறவுக்காரப் பையன்களில் ஒருவனுடன், சிறுவயதில் விளையாடுகையில், அவன் ஒரு 'கெட்ட வார்தை' சொல்ல அதற்கு அர்த்தங் கேட்க அவன் சொல்ல மறுக்க, அதைச் சொல்ல வைப்பதற்காக, ‘உன்ர அம்மாதானடா அது’ எண்டு சீண்ட, மூஞ்சியில விட்டான் ஒரு குத்து ! இத்தகைய தன்மான உணர்ச்சிகளுடன், இப்படிப் ‘படங்கள்’ பார்ப்பதிலும் அவனுக்கு ஒன்றும் குற்ற உணர்ச்சி இல்லை என்பதும் புரிந்தது (குற்றஉணர்ச்சி அடையவேண்டும் என்றும் நினைக்கவில்லை). அவனுக்குஅது வேறு! இது வேறு!

எனது பிரச்சினை, தாய் தங்கை (மேலவும், அரசியல்ரீதியாக 'தனது' இனப் பெண்) ‘கற்பு’ காக்கக் குதிக்கும் ஆண்மனத்துடன்.


“அம்மா- மனைவி- வேசி”
இந்த மூன்றுக்குமான தொடர்புகள் பற்றியும், ஆனானப்பட்ட Immortal Technique ஏ தாண்டமுடியாதுபோன யாதோ ஒன்றின்மீதான புனிதப்படுத்தல் பற்றியும் எழுதியிருந்தேன். அங்கிருந்துதான் இந்த பத்தியையும் தொடர வேண்டும்.

எந்தப் பெண்ணிற்கும் ஒரு உடல் அடையாளம் உண்டு. அது மட்டுமே அவளது முகம். அம்மா, தங்கை, மனைவி, பத்தினி, வேசை/பெட்டை நாய் அல்லது சரக்கு, ஃபிகர், செமக்கட்டை அல்லது முலை, தொடை, சதை, இத்தியாதி.

அவனுடைய பெண்கள் தவிர சகல பிறவும் அவனுக்கான நடமாடும் போகப் பொருட்களாய் ஆகுவதில் பிரச்சினை இருக்கிறது. ஒரு பெண்ணைப் பார்த்து காமுறுவது அல்ல, name-callings (இதை ‘சிறிய கொலைகள்’ (Small murders) என மாயா ஆஞ்யலோ (Maya Angelou) ஒருமுறை தொலைக்காட்சி நிகழ்ச்சியொன்றில் குறிப்பிட்டா) போன்ற அவர்கள்மீதான வன்முறைக்கெல்லாம் தமக்கு உரிமை இருப்பதாய் நினைப்பதுதான் பிரச்சினை.

பள்ளிக்காலங்களில் நடந்த சம்பவமொன்று: ஒருநாள் யாரோ ஒரு பையன் யாரோ ஒரு பெட்டையைப் பார்த்து வேலை மெனக்கெட்டு ‘நல்ல சரக்கு’ என்றானாம். பாவி, பக்கத்தில் நின்றவன் யாரு இன்னார் என பக்கம் பார்த்தாவது பேசினானா ம்ஹீம்! விளைவு, பாவம்! அந்த சின்னப் பெடியனை போட்டு துவம்சித்து எடுத்துவிட்டான், கவரிமான் பரம்பரையைச் சோந்த ஒரு சகோதரன். தன்இரத்த உறவை ஒருத்தன் கேவலமாய் நோக்குகையில் என்னவாய்க் கோவம் வருகிறது?! பிறவிப்பெரும்பயனின் உன்னதங்களில் ஒன்றை காலங்காலமாய் பெட்டைகள் இந்தக் கணங்களில் எல்லாம் உணர்ந்திட வேணும்.
அதே காலங்களில் அவனது பருவ வயதுகளில், வீட்டுக் கணிணியில் அந்த “ஆபாசப்’ படங்கள் (பெரிய முலைகள், சிறிய இடைகள், பருத்த தொடைகள்) இடையிடையே தோகை விரித்து முன் வந்தவண்ணம்தான் இருந்திருக்கும்!

இன்றைக்கு, முதன் முதலில் அவற்றைப் பார்த்த கலாசார அதிர்ச்சியை கடந்தாயிற்று. இவற்றினூடாக பெண் உடலை -தான் காமத்தை அடையும்- ஒரு கருவியாக ஒருவன் பாத்திரக்கூடாதென்பதிலும், இவற்றினூடாக குற்றஉணர்ச்சி சார்ந்த வளர்இளம்பருவ தாழ்வுணர்ச்சிகளுக்கு பிள்ளைகள் ஆகிவிடக்கூடாதென்பதிலுமே கவனம் இருக்கிறது.
கூடவே இவற்றூடாக, பொதுவாக, இந்த “ஊடகங்கள்” கட்டிஎழுப்பிற உடல்சார் எதிர்பார்ப்புகள், உளவியல் சிக்கல்கள் பற்றியும்.
தன் வீட்டுப் பெண்களை காக்கிற கனவான்களான பண்பாளர்களான அவர்கள்,பிற பெண்களை தாக்குபவர்களாக உருவாகிறார்கள்.
சகோதரன்களால் கொண்டாடப்படுகிற நாமே, தெருக்களில், ஆண்பாலர்களால் வேறுவேறு பெயர்களில் உருவாக்கப்படுகிறோம். ஏதோ ஒரு முத்திரை குத்தப்பட்டுக்கொண்டே இருக்கிறது.

இந்தப் பின்னணியில், பல ஆண்டுகளுக்கு முன், எதேச்சையா Metro தினசரியில்தான் ‘கொரில்லா கே(G)ர்ள்ஸ்’ அறிமுகமானார்கள். கொறில்லாக்களில் முகமூடிகளைப் போட்டுக்கொண்டு, தமது செயற்பாட்டு வடிவங்களில் ஒன்றான, ஏதோ ஒரு புதிய நூலின் வெளியீட்டைப் பற்றி சொல்லியிருந்தார்கள். அவர்கள், சிமோன் டி பூவா, பிரைடா/ஃபிரீடா என நான் கேள்விப்பட்டிருந்த பெண்ணியப் பிம்பங்களா தங்கள கூப்பிட்டுக்கொண்டாலும், அவையள் அவுக அல்ல! அவர்கள் யாருமே இல்ல! இனி அடுத்தவருட வேறொரு நூல்வெளியீட்டு அறிவித்தலுடன் பத்திரிகையில் வருபவர்கூட ‘இதே’ முகமூடிப் பெண்களல்ல, வேறு யாரோவாம்...!
மிகவும் புதினமாக அதைப் படித்துவிட்டு, வீடு வந்து, தேடுபொறியில் தேடினேன்- அவர்களுடைய இணையத்தளத்திற்கு இட்டுச் சென்றது. அந்தத் தளத்தில், எல்லாத்தையுமே புதினத்துடன் நோண்டி நோண்டிப் பாத்தபடியே, யாராவது ஓடிப்போய் அப்படியே அந்த முகமூடியை கழட்டிக்கொண்டு ஓடினா இவையள் என்ன செய்வினம் எண்டும் ஜாலியா நினைச்சுக்கொண்டன்.
அப்புறம் யோசிச்சதில நிறைய விடயங்கள் தோன்றியது. ஒன்று: சில சிறுகதைகள் - கதைகள் - கவிதைகள் “அநாமதேயமாக” எழுதப்படுகையில் கருத்து மட்டுமே எடுபடுவதும் எழுதிய ‘இன்னார்’ பற்றிய வியப்புறல்களோ, புகார்களோ எழாமல் இருத்தல். இரண்டு: மிகவும் சுதந்திரமான வெளிப்பாடு. மனத்தடைகள் இல்லாமல், சமூகம் ‘பெயருடன்’ இணைத்த மரியாதை நிமித்தமான ‘சுயதணிக்கை’களில் ஈடுபடாமல் இயல்பாய் இருத்தல்.
மூன்று: மேற்கூறிய இரண்டாவது காரணங்களால், சுயதணிக்கையைக்கூடச் சகிக்கலாம், சுயதம்பட்டத்தை (இடைக்கிடை பெட்டை செய்வதற்குப் பெயர் அது அல்ல!) எப்படிச் சகிப்பது?
நான்கு: மேற்கூறிய 3 காரணங்களையும் சேர்த்த, ‘ஆசிரியள்(ன்) இறந்துவிட்டாள்(ன்)’ என்கின்ற பிரசித்திவாய்ந்த கூற்றுக்கு சிறந்த முன்மாதிரி வேறேது? இனிப் பிரதி மட்டுந்தான் பேசும்! எவ்வளவு புரட்சிகரமான ஏற்பாடு இது!

இப்படியான ஒரு தத்துவ விசாரத்தில, அப்ப, Guerilla Girls இட Concept வந்து நல்லாப் பிடிச்சுப் போயிற்று. அவர்களிட கொள்கை விளக்கம் பெட்டையிட மொழி(யைப்) பெயர்ப்பில கிட்டத்தட்ட இப்படி இருக்கும்:
1985 இல இருந்து இயங்கிக்கொண்டிருக்கிறோம்; Feminism (பெண்ணியம்) என்கிற “F" word ஐ மீள் கண்டுபிடிப்பு செய்துகொண்டிருக்கிறோம். நாம், இறந்துபோன பெண்கலைஞர்களின் பெயர்களை புனைபெயர்களாய் வைத்துக்கொண்டு (உதாரணம் ஃபிரீடா) பொதுஇடங்கள்ல ஒரு கொறில்லா முகமூடியையும் போட்டெண்டு நிக்கிற ஒரு அநாமதேய பெண்கள் குழாம்! இதுவரை நூற்றுக்கணக்கான எதிர்ப்பு போஸ்டர்கள், ஸ்டிக்கர்கள், நூல்கள் ஊடாக, அரசியல் உலகங்களிலும் கலை உலகங்களிலும் திரை உலகங்களிலும், ஒட்டுமொத்த சமூகத்திலும் நிலவும் பால்வாதம், இனவாதத்தை வெளிய தெரியப்படுத்திற செயற்பாடுகள் ஊடாக நாங்கள் செயற்பட்டிருக்கிறோம்.
அங்கதத்தை தகவல் பரிமாற்றத்திற்கான சாதனமாய் வைப்பதூடாக, விவாதங்களைத் தூண்டுவதும் பெண்ணியவாதிகளால் நகைச்சுவை உணர்வு மிக்கவர்களாகவும் இருக்க முடியும் என்பதை காட்டவும் செய்கிறோம். நாங்கள் கொறில்லா முகமூடிகளைப் போடுவதுக்கான காரணம், எங்கள் சுயஆளுமைகளுக்குப் பதில், நாங்கள் பேசுகிற விடயங்களில் (Issues) மட்டும் கவனங்கள் குவிய வேண்டுமென்பதுதான். இதுவரையில் அநாமதேயமாக ‘நல்லது செய்து வந்த’ robin Hood, Batman, Lone Ranger போன்ற ஆண் கதாபாத்திரங்களுக்குச் சமனான பெண்ணியப் பாத்திரங்களாக எங்களை அறிவிக்கிறோம். எங்களுடைய செயல்பாடுகள் உலகளாவிய ரீதியில் ஆதரவாளர்களால் கொண்டு செல்லப் படுகின்றன. அத்தகைய ஆதரவாளர்களை கொண்டிருப்பதற்காக நாம் மிகவும் பெருமைப் படுகிறோம். எங்களது அடையாளம் தொடர்பான மர்மம் பலரது கவனத்தை ஈர்த்துள்ளது. நாங்கள் யாராகவும் இருக்கலாம்; நாங்கள் எல்லா இடமும் இருக்கிறோம்”


பெட்டை சத்தியமா அப்படி ஒரு ஆதரவையும் இவையளுக்கு வழங்கேல்ல. அவையள் பெருமைப் படுறது வேற யாரோ பெட்டையள முன்வைச்சு (எந்தக் காலத்தில பெட்டை யாராவது பெருமைப்படுற விதமா நடந்திருக்கிறாள்?) ஆனா அந்த நேரம், இப்பிடி ஒண்டு நினைச்சனான் நான், அது: கொஞ்சப் பெண்கள ஒண்டுகூட்டி அவையளிட அந்தரங்கமான -எல்லாவிதமான- பிரச்சினைகளையும் free..............யா கதைக்கவிட்டா, அத அநாமதேயமாக ஒரு கூட்டுத் தொகுப்பாப் பிரசுரிச்சா எப்படி இருக்கும்? இது உடனடியான ஆர்வக்கோளாறில ஏற்பட்ட திட்டம். பிறகுதான் யோசிச்சா, 1- அந்த சில பெண்களுக்குள்ள (அந்த சில பெண்களை நம்பி) எல்லாவித பிரச்சினையளையும் எப்படிக் கதைக்கிறது?, 2- சரி, அதுக்கு, ஆளாளக் காணாம இருக்க முகமூடி போட்டெண்டு கதைச்சா, ஆள்-அளவு-பருமன்-குரல வச்சு ‘இவள் நாசகாரி இந்தக் கருத்தச் சொன்னவள்’ ‘இவள் ஆட்டக்காரி இந்தக் கருத்தச் சொன்னவள்’ எண்டு கண்டுபிடிச்சிர மாட்டாளவையோ எமகாதகத் தமிழச்சிகள்?! பாம்பின் கால் பாம்பறியும்.
பிறகுதான் இது மேற்குலக வெள்ளைக்காரியளுக்குத்தான் சரி எண்டிட்டு அந்த மகாதிட்டத்தையே கைவிட்டது. இப்ப பெண் எழுத்துக்களுக்கு வாற மகா வரவேற்புகளப் பாத்தா பெட்டை “தப்பினது அருந் தப்பு.” பிறகு பெண்ணியம் = மேலைத்தேய சிந்தனை, இவள் பெட்டை, இப்பிடி அப்பிடி, அது இது எண்டு தமிழ் கூறும் நல்லுலகம் சொற்களாலேயே வசைவசையாய் நேரிலையே பாத்தறியாத இவளிட குடும்பம், பிறப்பு இன்ன பிறவை அலசி ஆராய்ந்து நுணுக்கி நூறாக்கி அதை இதை எறிஞ்சுகொண்டிருக்க... ஏன் பொல்லாப்பு!
கொரில்லாப் பெட்டையளும் வேணாம் ஒரு கோதாரியும் வேணாம் எண்டு இருந்ததுக்குப் பிறகு இன்றுதான் மீண்டும் அவர்களது இணையத்தளம் வருகிறேன், நண்பரொருவருக்கு பிறந்தநாள் பரிசாக இவர்களது புத்தகத்தை அனுப்பலாமா என்ற அருட்டலில். அவர்களுடைய வெளியீடுகள் எல்லாம் சுவாரசியமானவை. சமீபத்திய நூல் ஒன்றின் பெயர்: BITCHES, BIMBOS, AND BALLBREAKERS: The Guerrilla Girls' Illustrated Guide to Female Stereotypes (Penguin paperback original; On Sale: Fall, 2003). அந்த நூல் தருகிற செய்திதான், இந்த பத்தியின் ஆரம்பத்தில் வருகிற போஸ்டர் வாசகங்கள்: எம்மேல் முத்திரை குத்தாதே!
அதிகம், பேச்சுவழக்குச் சொற்களாய் இருக்கிற இச் சொற்களின் அர்த்தங்களை இணைய அகராதியில் பார்த்துக்கொள்ளலாம். கீழே, எம்மிடையே ஊடகங்களில் புழங்குகிற சில சொற்கள்:

---> bombshell
இது புது நடிகைகளின் வரவை, மிகக் கவர்ச்சியான நடிகைகள் குறித்து பாவிக்கிற ஒரு சொல், என் சிறு பிராயம்முதல் படித்து வருகிற சொல். செக்ஸ் பாம்- என்றெழுதுவார்கள், எழுதுகிறார்கள்.

--> bra burner
பெண்ணியவாதிகளைப் பற்றிய ஒரு மேற்கத்தைய கண்ணோக்கு. தவறான கற்பிதம். அவர்கள் பற்றிய, பிரபலமான ஒரு மாயை (Myth). இவர்கள் பிராவை எரிப்பவர்கள், அதாவது பிரா போட விரும்பாதவர்கள்.

--> bull dyke, butch
ஆண் ஓரினச்சேர்க்கையாளர்கள்மேல் வெறுப்பும், லெஸ்பியன்கள் குறித்து ‘கவர்ச்சியான’ விம்பமும் இருப்பதாக சொல்வார்கள். இவை பெண் ஓரினச்சேர்க்கையாளர்களில் ‘ஆண்தன்மையையுடைய’வர்களைக் குறித்த வசைச் சொற்களாம்.

--> girl next door

எதிர் வீட்டுப் பெண்

இந்த சொற்றொடரை நிறையத் தடவைகள் பிறர் சொல்லவும், நானே சொல்லியும் கேட்டிருக்கிறேன். நடிகைகளை விபரிக்கிறபோது ‘ஹோம்லியான (குடும்பப் பாங்கான), கவர்ச்சியாய் நடிக்காதவர்களை’ இப்படிக் கூறுவது ‘தமது வீட்டுப் பெண் கற்பானவள்’ கருத்தியல்தானே? ‘நம் அடுத்தவீட்டுப் பெண்போல’ என்பதுகூட ஒரு ஆதிக்கரீதியான முத்திரைகுத்தல்தான் என்பது இதைப் படிக்கும்போதுதான் புரிகிறது.

--> geisha

சற்று முன்பிருந்த அன்பும்
புகையிலை விடுக்கும் புகையும்
சிறுகச் சிறுக
விடுத்துச் செல்வது சாம்பலை மட்டுமே.

ஓரு கெய்ஷா பாடல்
ஜப்பான்.

யுவன் சந்திரசேகரின் மொழிபெயர்ப்பில் வந்திருக்கிற ஜென் கவிதைகள் நூலில் உள்ள கவிதைகளில் ஒன்று இது.
கெய்ஷா! யப்பானில், தொழில்முறைப் பெண்களைக்கொண்ட ஒரு வர்க்கம், இதில் பெட்டைப்பருவமுதல் (Girlhood) பெண்கள் நன்றாக உரையாடல்களில் ஈடுபடவும், ஆடவும், பாடவும் கற்பிக்கப்படுகிறார்கள் - ஆண்களின் தொழில்சார் அல்லது சமூக ஒன்றுகூடல்களில் அவர்களைக் களிப்பூட்டுவதற்காக! எல்லா மரபிலும் இப்படி ஒரு வர்க்கம் உருவாக்கப்பட்டிருக்கிறது. எமதில் இதை ஒத்தது தேவதாசி முறையா?


--> good Chatholic girl

நல்ல கத்தோலிக்க மாது. இது மிக மிகப் பரிச்சயமான சொல். எங்களுடைய மணமகன் தேவை விளம்பரங்கள் முதல், எங்கும். ஒரு நல்ல இந்துப் பெண். நல்ல பிராமணப் பெண். இலங்கையில் தூய வேளாள பெண். இந்த பிம்பம் ஒரு எதிர்பார்ப்பு. மேற்கூறப்பட்ட பெண்கள் ‘நல்ல’ என முத்திரை குத்தப்படுகிறபோது அந்த ‘நல்ல’ வைத் தக்கவைத்துக்கொள்ள அதற்குரிய விதிகள் உள்ளன. அவைகளை மீறுபவள் கத்தோலிக்கத்தில் மட்டுமல்ல எல்லா மதங்களிலும் ‘கெட்ட’வள்; விபச்சாரம் செய்பவள்.
0

இவைகளைப் படிக்கிறபோது வெவ்வேறு மத, இன, மொழி அடையாளங்கள் இருந்தாலும் அடிப்படையில் பெண் தொடர்பான வசைகள்/பெயர்கள் பொதுவானவை என்பதைப் புரிய முடிகிறது.




(*தலைப்பு: ஈழத்துக் கவிஞை. சிவரமணியின் கவிதையிலிருந்து ஒரு வரியை அடியொற்றி. அசல் வரி: 'நான் நீ நினைக்கும் கவிஞன் அல்ல')

dec/2004

12 Comments:

Blogger -/பெயரிலி. said...

நல்ல பதிவு.

4/12/2005 08:48:00 p.m.  
Blogger இளங்கோ-டிசே said...

நல்ல பதிவு. The girl next doorல் உள்ள அரசியலைப் பற்றி நானும் சிலவேளைகளில் யோசித்ததுண்டு. நீங்கள் இவை குறித்து விரிவாகப் பதிந்தது நன்றாக இருக்கிறது.

4/12/2005 09:06:00 p.m.  
Blogger Voice on Wings said...

இன்று காலைதான் (இந்திய நேரப் படி) தொலைக்காட்சியில் திரு. சாலமன் பாப்பையா அவர்களின் சொற்பொழிவைக் கேட்டுக்கொண்டிருந்தேன். 'அறநெறிச் சாரம்' என்ற பழங்காலத்துப் பாடல் ஒன்றை விவரித்து / சிலாகித்துக் கொண்டிருந்தார். அதன் சாரம்: கணவன் அயலூர் சென்றிருக்கையில், மஞ்சள், கண் மை, 'கூந்தலை விட அதிகமான' பூச்சரம் என்று ஒப்பனைகள் செய்து தன்னை அழகு படுத்திக் கொண்டு வீதியில் உலா வரும் (திரு. பாப்பையாவின் வார்த்தைகள்: "வீட்டுக்குள்ளயாவது இருக்க வேண்டாமா? வீதியில வந்து நிக்கணுமா?") ஒரு பெண்ணின் செயல், ஆபத்தை / யமனை வா வா என்று அழைப்பு விடுவதற்கு ஒப்பானது (எனவே கண்டிக்கத் தக்கது)" என்பதே. பழமையான இந்த பாடல் வரிகளை விட, அதனை அப்படி போற்றிப் பாரட்ட விழையும் இன்றைய சமுதாயத்தின் அறிஞர்களும், முன்னணியில் இருக்கும் ஊடகங்களும் என்னை வியப்பில் ஆழ்த்தின. ஒருமுறை எந்த நூற்றாண்டில் உள்ளோம் என்ற சந்தேகம் வந்ததென்னவோ உண்மை. ஆணாதிக்கமெல்லாம் குறைந்து விட்டது என்று ஆறுதலடையக் கூட வாய்ப்புகள் அதிகமில்லை போலும்.

4/12/2005 09:38:00 p.m.  
Blogger -/பெயரிலி. said...

/இப்படிப் ‘படங்கள்’ பார்ப்பதிலும் அவனுக்கு ஒன்றும் குற்ற உணர்ச்சி இல்லை என்பதும் புரிந்தது (குற்றஉணர்ச்சி அடையவேண்டும் என்றும் நினைக்கவில்லை)/

Andrea Dworkin நினைவாகவோ இந்தப்பதிவு? ;-)
இப்படிப்பட்ட படங்கள் குறித்து தனியான பதிவொன்றிலே விவாதிக்க விழைவு.

4/12/2005 10:53:00 p.m.  
Blogger ROSAVASANTH said...

படித்தேன். நன்றி!

4/12/2005 11:14:00 p.m.  
Blogger Narain Rajagopalan said...

சில கோணங்களில், வார்த்தைகளின் பின்னிருக்கும் அரசியலை நன்றாக எழுதி உள்ளீர்கள். நல்ல பதிவு. கொரில்லா கேர்ள்ஸ் பற்றி இப்போதுதான் கேள்விப்படுகிறேன். சுட்டியமைக்கு நன்றி.

4/13/2005 01:04:00 a.m.  
Blogger Thangamani said...

நல்ல பதிவு.

கெய்ஷா பாடல் நன்று.

உடமை மனப்பான்மை ஒன்றைப்பாதுகாக்கையிலேயே ஒன்றை அழிக்கவும், சிதைக்கவும் செய்கிறது. இது எல்லா உடைமைகளின் மேலும் பொதுவாக அமைந்த ஒன்றுதானே!

இதில் காமத்தை/உடலை குற்றப்படுத்தியிருக்கும் மதம், அம்மாவை அசிங்கமாக(?) பார்க்க விரும்பாத மனம் வெளியில் அத்தனை பெண்களையும் பார்க்கவிரும்புகிறது.

4/13/2005 01:26:00 a.m.  
Blogger மதி கந்தசாமி (Mathy Kandasamy) said...

அடிச்சு தூள் கிளப்பிட்டீங்க!

கொரில்லா கேர்ள்ஸ் பற்றி நியூயார்க் டைம்ஸில் ஒரு கட்டுரை வாசித்த நினைவிருக்கிறது. யாராவது அந்த முகமூடியைப் பிடுங்கினா என்று 'எசகுபிசகா' நானும் யோசித்திருக்கிறேன். :P

4/13/2005 05:42:00 a.m.  
Blogger SnackDragon said...

This comment has been removed by a blog administrator.

4/13/2005 06:46:00 a.m.  
Blogger SnackDragon said...

// எமதில் இதை ஒத்தது தேவதாசி முறையா?//
இது இல்லை என்று நினைக்கிறேன். தேவதாசி முறை கோயிலும் அதைச் சார்ந்த துறவிகளுக்கு(? :)) முதன் முதலில் தோற்றுவிக்கப்பட்டதாய் வாசித்த நினைவு. ஆனால் பிற்காலத்தில் இதைத் தொடர்ந்தே எல்லா சமூகத்திலும் இப்படி ஒன்று ஆரம்பிக்கப்பட்டு பின்பற்றப்பட்டுவருகிறது. இன்றளவிலும் கூட. [தெரிந்தவர்கள் சொல்லலாம்]
ஆண் ஓரினச்சேர்க்கையாளர்களின் தேவைக்கேற்ப மேற்கு நாடுகளில் உருவாகும் "கே க்ளப்"கள் சமூகத்தில் மறைமுகமாய் ஒரு சமநிலையை கொண்டுவருவதை கவனிக்கவும். எனவே போற்றுதும் போற்றுதும் கே க்ளபை போற்றுதும்.

//இவற்றினூடாக குற்றஉணர்ச்சி சார்ந்த வளர்இளம்பருவ தாழ்வுணர்ச்சிகளுக்கு பிள்ளைகள் ஆகிவிடக்கூடாதென்பதிலுமே கவனம் இருக்கிறது.//
இன்ங்கே இரண்டு விஷயங்களில் கற்றலில் தேவைப்படுகிறது என்று நினைக்கிறேன்.
ஒன்று காமத்தைக்கற்றல் அல்லது; ம்கிழ்வை ப்பெற்ய்தல்.
இன்னொறு சக மனிதனை /மனுசியை/பெட்டையை(;-)) -க்கு ஏற்ற மரியாதையை /அங்கீகாரத்தை வழங்கல். முதலாவது மட்டும் போதிக்க்ப்பெறுபோதுதான் இந்தப்பிரச்சினை வருகிறது. இந்த மரியாதை அம்மாவுக்கு கொடுக்கப்படுவதால் [ஏதோ காரணமாகட்டும்] அவளை "பிட்ச்" ஆய் பார்க்க முடிவதில்லை.

இதற்கெல்லாம் ஆரம்பம் "புணர்வைப் போற்றுதலில் " தொடங்குகிறது. "புணர்வு + கடவுல்" என்கிற கலவை அணு ஆயுதத்தை விட மோசமான அழிவுகளைத்தருவதைத்தான் பார்க்கிறோம்.

4/13/2005 06:58:00 a.m.  
Blogger ஒரு பொடிச்சி said...

அனைவருக்கும் நன்றி. எழுதியதுபோல Guerrilla Girls' எனக்கும் தற்செயலான அறிமுகம்தான்.

பெயரிலி,கட்டாயம் இந்தப்படங்கள்பற்றி எழுதுங்கள், நான் Andrea Dworkin படிக்கவில்லை. ஆனால் pornography ஐ ஒழுக்கரீதியாக எதிர்க்கவேண்டுமென்றோ, பார்ப்பவர்களை குற்றஉணர்ச்சியில் ஆழ்த்தவேண்டும் என நினைக்கிற சார்பிலையோ நான் இல்லை. குற்ற உணர்ச்சியால் மற்றவர்களை குற்றஞ்சாட்டவோ அடக்கவோ மேலும் சிக்கல்களை உண்டுபண்ணவோ மட்டுமே முடியும் எனவே தோன்றுகிறது.
Of course இத்தகைய படங்களில் நிறையப் பிரச்சினைகள் இருக்கிறது.

முக்கிய பிரச்சினை: நாராயணனின் பதிவில் கவாச்சி நடிகைகள் பற்றிய விவாதத்தில் வந்த விடயம்தான். தாங்கள் இன்பம்உணர 'பாவிக்கிற' பெண் பிம்பங்களை/பெண்களை குறித்த 'இழிவான' எண்ணம்தான். அந்த எண்ணத்தை எதிர்க்கிற பெண்ணிலைவாதிகள் அனேகமாக அத்தகைய சிந்தனைகளிற்குக் காரணமானதான porno films ஐயும் எதிர்ககிறார்கள். அவர்களுக்கு அதற்கான நியாமும் இருக்கிறது.
நீங்கள் எழுதினால் இவற்றை முன்வைத்து விவாதிக்கலாம்..

கார்த்திக்: தேவதாசி முறையும் கெய்ஷாவும் ஒன்றோ என நினைக்கக் காரணம், பின்னதும் 'உயர்' வார்க்கதிற்கான 'ஏற்பாடு' என உணர்வதாலேயே.
கே கிளப்புகள் பற்றிய உங்களது கருத்தில் உடன்பாடே.

'உடமை மனப்பான்மை ஒன்றைப்பாதுகாக்கையிலேயே ஒன்றை அழிக்கவும், சிதைக்கவும் செய்கிறது' என்று தங்கமணி சொல்லியிருக்கார்.ஒன்றை
போற்றிக்கொண்டே ஆயிரம் குற்றஉணர்ச்சிகளை ஏற்படுத்தி வைத்திருக்கிறார்கள்.

4/14/2005 01:45:00 p.m.  
Blogger -/பெயரிலி. said...

/முக்கிய பிரச்சினை: நாராயணனின் பதிவில் கவாச்சி நடிகைகள் பற்றிய விவாதத்தில் வந்த விடயம்தான். தாங்கள் இன்பம்உணர 'பாவிக்கிற' பெண் பிம்பங்களை/பெண்களை குறித்த 'இழிவான' எண்ணம்தான். அந்த எண்ணத்தை எதிர்க்கிற பெண்ணிலைவாதிகள் அனேகமாக அத்தகைய சிந்தனைகளிற்குக் காரணமானதான porno films ஐயும் எதிர்ககிறார்கள். அவர்களுக்கு அதற்கான நியாமும் இருக்கிறது./
மறுக்கவில்லை (ஆனால், பெண்ணிலைவாதிகள் என்று கூறிக்கொள்ளும் இன்னொரு பகுதி, உலக அழகிப்போட்டிகள், பாலுறவுசார் படங்களைப் பெண்கள் தம்மை மையப்படுத்தி, அதிகாரத்தைத் தம் கையிலே கட்டுப்பாட்டினைக் கொண்டிருக்க உதவுகின்றதாலே, வரவேற்கிறனர் என்பதையும் நான் சுட்டவேண்டும் - அக்கூற்றிலே எனக்கு நம்பிக்கை இல்லாதபோதுங்கூட). எனது கருத்து வருவது வேறொரு காரணத்தினாலே; பாலுறவுசார்படங்களும் பெண்களின் ஆண்களின் நடவடிக்கை ஒத்த பார்வையும் (சிறிதளவிலேனும்) காலத்திலே மாற்றமடைந்த விதம் குறித்துச் சொல்கிறேன். விபரமாக, சமயம் வாய்ப்பின், பதிகிறேன்.

4/14/2005 07:12:00 p.m.  

Post a Comment

<< Home