@font-face { font-family: TSCu_InaiMathi; font-style:normal; font-size: 10pt; font-weight:normal; src:url(http://mathy.kandasamy.net/fonts/TSCUINA1.eot); }

Monday, May 30, 2005

இரு ஆளுமைகளைச் சந்தித்தல்: ஆளுமை 02

முன்அனுமானங்கள், பரிந்துரைப்புகள் எதுவுமின்றி -ஒரு வெகுஜன இதழில்- படித்த சிறுகதையொன்றை எழுதியவராகவே கமலா தாஸ் (Kamala Das) அறிமுகமானார்.
அதுவரையில், கதையென்பதைத் தவிர சிறு சலனம், பதில்வினை எனவொரு அருட்டலையும் தந்திராத எத்தனையோ படைப்புகளை கடந்து சென்றதேயுண்டு; தனது கதைகளூடாக, துரோகத்தை அதன் கொடூரத்தை தயவுதாட்சண்யமே இல்லாத அதன் இருப்பை, கமலா தாஸ் போல அடித்தவர்கள் யாரும் தெரியாது.
பொய்கள் என்கிற அந்தக் கதையில் வந்த கதாபாத்திரங்கள் குடும்பம், காதல், உறவு இவை தொடர்பாக வெளியுலகம் புனைந்தவற்றிற்கு எதிரானதாக இருந்தது.
பிள்ளையை தகப்பனுடன் விட்டுவிட்டு வேலைக்குப்போகிற தாய். தாய் சென்ற பிறகு, வருகிற அப்பாவின் காதலி(கள்?);, அவர்கள் அப்பாவோடு இருப்பதை –அம்மா வருகிற நேரத்திற்குமுன் போய்விடுவதை- பார்க்கும் பிள்ளை; அந்தக் காதலிகள் பிள்ளையை அணைத்தும் கொஞ்சியும் இனிப்புகள் தந்து செல்வார்கள். பிள்ளையின் பார்வை மட்டும்தான் அங்கிருக்கும். இதை பிள்ளை தாயிடம் `தன்னுடைய மொழியில்` இனிப்புகளின்/அவர்கள் அணிந்து வந்த ஆடைகளின் வாசனையைக் குறிப்பிட்டுச் சொல்லும்போதெல்லாம், 'பொய்' சொல்வதாக வரவர அவன் பொய்கள் கூடுவதாக தகப்பன் சொல்லுவார், பொய் கூடக்கூட அடிப்பாரோ என்னவோ! தாய் அமைதியாக அவனிடம் அவன் சொல்லுகிற கதைகளைக் கேட்டபடி, ஏதேனும் கனவு கண்டடினியோடா என தடவிக் கொடுப்பாள். 'உண்மையாத்தான்' என அழுவான், கதையின் முடிவு வரை!

புரட்சிகரமான கண்ணோட்டத்தில் தென்பட்ட உலகிலே, ஒருபக்கம் அந்தக் கணவனை 'ஆம்பிளை' என நாலு வசனம் பேசி, இரண்டு சாத்து சாத்தி ஒரு புறமா தூக்கித் தொங்கவிட்டும், இன்னொரு பக்கம், அவனது 'கள்ளக்காதலிற்கான' சாப/பாப/பழி வார்த்தைகளை கதைபூரா இறைத்தும் வாசக (என்!) மனத்தைச் சாந்திப்படுத்தாமல், வாழ்வின் இயல்பாய், வலு சாந்தமாய், ஒரு கதையை அத்தகைய கருவில் படித்தது அதுதான் -போதாக்குறைக்கு- முதல் முறை. நெடுநாள் 'அந்தப் புள்ள எப்ப தாயிட்ட சொல்லீ... தாய் நம்பீ... (பிறகாவது என் மனச்சாந்திப்படும் 'உலுக்கல்கள்' நடக்காதா?)' எண்டு அருட்டிக்கொண்டே இருந்தது அது.
கதையைப் புரிந்துகொள்வது, தனியே தகப்பனோட பொய்கள்/களவு என்பதாக அல்ல; அந்தச் சிறுவன் வளர்ந்து, விபரம் புரிந்து, 'உண்மை'யைச் சொல்கையில் (காலம் தாமதமாகிவிடும்) அந்த உண்மை'க்கு பெறுமதி இருக்கப்போவதில்லை என்பதும், அப்படியானபோது, அதன்மேல் சாபங்களோ 'ஒழுங்காக்கும் தேவையோ' இல்லை என்பதும். அப்போ, குடும்பம், உறவுகள் இவைகளுPடாக உலகம் காவுற உண்மை என்ன அது எவ்வளவு போலியானது?

இந்தக் கேள்விகளாக, `உண்மை`யை/`உண்மை`யான எழுத்தைப் பற்றியதான உரையாடலில் கமலா தாஸ் வருகிறார். அம்பையின் கட்டுரைகள் மற்றும் சில படைப்புகள் எவ்வளவு கவர்ந்தனவோ, ஒப்பிடவியலா அளவில் மிகவாய்ப் பிடித்தது கமலா தாஸை, 'மலபாரில் பிறந்த பழுப்பு நிற இந்தியப் பெண்' என்று தன்னை அறிமுகப்படுத்திய கிறுக்குத்தனங்கள் நிறைந்த அவர், இயல்பு மிகுந்த மனிதர்களை நேசிக்கிற எல்லோருக்கும் பிடிக்கக்கூடியவராகவே இருப்பார். அதிலும் தம்முடைய கிறுக்குத்தனங்களை சமூகத்தின் பாசாங்குகளோடு ஒத்திசைந்து மறைக்க முனையாமல் வெளிப்படுத்துகிறபோது அது அந்த எழுத்தாளர்களை சுவாரசியமானவர்களாக நம்மை ஒத்தவர்களாக உணர வைக்கிறது. -விபரம் தெரியாத வயதுகளில் குளியலறை சொற்களை சொல்லி 'பெரியவர்களை' குழந்தைகள் அதிர்ச்சி ஊட்டுமாப்போல- பாசாங்கான உலகத்தின் மீது, தமது கிறுக்குத்தனங்களால் அதிர்ச்சி தருகிறார் இவர். பலவந்தமாய் தமக்கு ஒவ்வாத கருத்துகளுக்குள் தம்மை அடைத்துவைத்துக்கொண்டு தமக்கென ஒரு பிம்பத்தை உருவாக்குகிற எழுத்தாளர்கள் போரடிக்கக்கூடியவர்கள், தன்னை (சரியோ தவறோ) அத்தகைய அதிர்ச்சியூட்டல்களூடாக வெளிக்காட்டி வருபவர், தன் அறிமுகத்தில் இவ்வாறு எழுதுகிறார் (கவிதை: ஒரு முன்னுரை):

... நான் குழந்தையாயிருந்தேன்,
பிறகு அவர்கள் என்னிடம் சொன்னார்கள்
நான் வளர்ந்து விட்டதாக –
நான் உயரமானதால், கைகால்கள் பருத்ததால்,
ஓரிரண்டு இடங்கள் ரோமம் துளிர்த்ததால்.நான் காதலைக் கேட்டேன், வேறெதுவும் கேட்கத் தெரியாததால்.
பதினாறு வயது இளமையை அவன்
படுக்கையறைக்குள் இழுத்துச் சென்று மூடினான் கதவை.
அவன் என்னை அடிக்கவில்லை
ஆனால் சோகமான என் பெண்ணுடல் அடிபட்டதாய் உணர்ந்தது.
என் மார்பகங்களின், கருப்பையின் பாரம்
என்னை நசுக்கியது.
பரிதாபமாக சுருங்கினேன் நான்.

பிறகு... ஒரு சட்டையும்
என் சகோதரனின் கால்சட்டையையும் அணிந்தேன்,
என் தலைமுடியைக் கத்தரித்துக் கொண்டேன்,
என் பெண்மையை நிராகரித்தேன்.
அவர்கள் சொன்னார்கள்:
சேலை உடுத்து, பெண்ணாயிரு, மனைவியாகு.
பூத்தையல் வேலை செய், சமையல்காரியாகு,
வேலைக்காரிகளோடு சண்டையிடு.
பொருந்து, சமூகத்தோடு இணைந்துகொள்
என மனிதர்களை வகைப்படுத்துபவர்கள் கத்தினார்கள்:
''சுவர்களின் மீது உட்காராதே
திரைச்சீலையிட்ட ஜன்னல்களின் ஊடே நோட்டமிடாதே,
ஆமியாக அல்லது கமலாவாக இரு.
*மாதவிக்குட்டியாக இருப்பது இன்னும் நல்லது.
ஒரு பெயரை, ஒரு வாழ்க்கைப் பங்கைத்
தோந்தெடுக்கவேண்டிய நேரமிது.
பாசாங்கு விளையாட்டுகளில் ஈடுபடாதே.
மனநோயாளி மாதிரி நடந்துகொள்ளாதே,
காமம் நிரம்பியவளாக இருக்காதே.
காதலில் மோசம் போகும்போது
சங்கடம் தரும்படி அழாதே. "

...
விமர்சகர்களே, நண்பர்களே,
வீட்டிற்கு வரும் ஒன்றுவிட்ட சகோதர, சகோதரிகளே
என் வாழ்க்கையில் தலையிடாமல் இருக்கக் கூடாதா?

...
நான் பாவி
நான் புனிதமானவள்
அன்பிற்குரியவள் நான்
வஞ்சிக்கப்பட்டவள் நான்
உங்களுக்கில்லாத இன்பங்கள் எனக்கில்லை
உங்களுக்கில்லாத துன்பங்கள் எனக்கில்லை
...
-0-

நீங்கள் தவறான பால்த்தன்மையுடன் பிறந்துவிட்டதாகக் கூறினார்கள். ஆணாக இருந்திருந்தால் எழுத்தாளராக இருப்பது எளிதாக இருந்திருக்கும் என்று நினைக்கிறீர்களா?

ஆமாம், நிச்சயமாக. எனது மாமா நாலப்பாட் நாராயண மேனன் எல்லோரும் அறிந்த ஓர் எழுத்தாளராக இருந்தார். காலையிலிருந்து இரவு முடிய அவர் எழுதிக்கொண்டிருப்பதைக் கவனித்திருக்கிறேன். எழுதுவதைத் தவிர வேறெதையும் அவர் செய்யவேண்டியதில்லை. அது ஓர் ஆசிர்வதிக்கப்பட்ட வாழ்க்கை என்று நினைக்கிறேன்.
(பக். 31, பனிக்குடம், ஜீலை-ஆகஸ்ட் 2003)


பனிக்குடம், 1996 இல் Rediff இணையத்தளத்தில் ஷோபா வாரியர் (Shobha Warrier) கமலா தாஸைக் கண்ட நேர்காணலின் சில பகுதிகளது மொ-பெயர்ப்பைப் போட்டிருக்கிறது (இதழில் நேர்காணப்பட்ட ஆண்டு 1996 என்பது போடப்படவில்லை).
படைப்புகளில் மனசிலறையும் வலியை உண்டுபண்ணுபவர், நேர்காணல்களில் சிரிப்பையும் உண்டுபண்ணுவார். அம்பையிலும்விட, இந்த மனுசியிடமிருக்கிற நிறைய கிறுக்குத்தனங்கள் அவ்வாறு சிரிப்பைத் தூண்டும், கணவர், தன்னை 'கவிதை எழுதுவதைப் பற்றி யோசிப்பதை நிறுத்தச் சொன்னது' பற்றி...... இயல்பெனவே இவர் சொல்லுகிறவை '...என்னுள் கவிதை செத்துவிட்டது. ஏனெனில் நான் நேரத்தை வீணடிக்கிறேன் என்ற குற்றவுணர்வின்றியும் அது என்னுடைய கணவருக்கு உதவப்போவதில்லை என்ற உணர்வோடும் என்னால் சிந்திக்க முடியாது' என்றும், 'காதலன் கிடைத்தால் அவனிடமே போய்விடுவேன்' என்கிற, ‘உன்னை நான் காணும்வரை/கவிதை எழுதினேன், ஓவியம் தீட்டினேன்;/தோழிகளுடன்/உலவி வந்தேன்./இப்போது, நான் உன்னைக் காதலிக்கிறேன்./என்வாழ்க்கை ஒரு நாயைப்போல/ஒடுங்கிச் சுருண்டு கிடக்கிறது/உன்னில் மனநிறைவைக் கண்டு’ என கவிதை எழுதிற, கமலாவைப் படிக்கையில் -வரட்டுத்தனம் அற்ற- அங்கதத்திற்கு இடமிருக்கும், அவருடைய வாசகமான “ஆண்கள் தந்திரசாலிகளாகவும் சந்தர்ப்பவாதிகளாகவும் இருக்கின்றனர்; பெண்களோ திறந்த புத்தகங்களாக இருக்கின்றனர்“ (அதை நான் நம்பவில்லையென்ற போதும்!) போல 'அவர்' இருப்பதாய்ப் படும்; அத்தகைய பண்புகளாலேயே, அவரது, எனது கதை என்கிற சுயசரிதம் வந்தபோது ஒழுக்கமற்றவராகவும் nymphomaniac ஆயும் பார்க்க/விமர்சிக்கப்பட்டிருக்கிறார்.

எமது இடங்களில் Womanizer என்கிறபதம்கூட ஆண்களை நோக்கி சொல்லப்படுவதில்லை. இங்கே, ஆண்கள், பெண்டாளுதலும் பல உறவுகள் 'வைத்திருப்பதும்' அவனுடைய பண்பாக 'ஏற்கப்பட்டும்', பெண்கள் உறவுகளில் 'வீழ்வதையும்' அவ் உறவுகளை முன்வைத்து 'துரோகத்தை'ப் பற்றி பேசுவது சலனமூட்டக்கூடியதாய் இருப்பதும், ஆச்சரியமானதல்ல. இங்கே பெண்கள் விடயத்தில் ஆண் கொஞ்சம் பலவீனனாகவும், பெண்ணோ காம நோய் பிடித்தவளாயும் நிறுவப்படுகிறாள்.
இவற்றில் பொருட்டின்றி, கமலா தாஸ், காதல், கருணை, துரோகம், சரணடைதல், பழகுதல் என மனிதப் பொதுக் குணங்களின் முன்னால் தன்னை மறைப்பின்றி முன்வைக்கிறார். அந்த முன்வைப்பு, அதன் நேர்மை, எதிர்கொள்ள முடியாததாய் இருக்கிறது, ஏனென்றால் எல்லோருமே பாதுகாப்பான வளையங்களில் வளைய வந்துகொண்டிருக்கவே விரும்புகிறார்கள்/றோம். உண்மையை நெருங்குதல் முன்வைத்தல் என்பதானது பாதுகாப்பான வளையங்களை அகற்றுவது என்றாகிறது; அவற்றை என்ன காரணங்களுக்காக ("புகழுக்காக" "பணத்துக்காக") இவர்கள் அகற்றினாலும், அதில் பிறக்கிற இலக்கியப் பிரதிகள் முக்கியமானவை.

இந்த இரண்டு சுவாரசியமான பெண்களுக்குமிடையேயான இன்னொரு பொது ஒற்றுமை: இவர்கள் இருவருமே ஆதிக்க ஜாதிப் பின்னணியை உடையவர்கள் என்பது. பொருளாதாரரீதியாக கீழ் மட்டங்களில் ஒடுக்கப்படுகிற ஜாதிப் பின்னணியில் இருந்தெழுதுகிற பெண்களால் இவர்களது காலத்தில் -இவர்களை விமர்சனங்களுடனும் வாழ விட்ட இச் சமூகத்திலையே- இவர்கள் பேசிய விடயங்களை பேசியிருந்திக்க முடியுமா என்கிற கேள்வியும் உண்டு.

இவை தவிர்ந்து, அம்பையின் நேர்காணல் படித்துவிட்டு அம்பையைப் பார்க்க மும்பாய் செல்ல நினைத்திருந்திருந்திருக்கிறேன்; தத்துவங்கள் எல்லாவற்றையும் கோஷமாகவே சுருக்கிய நபர்களுள் அதை வாழ்வின் பிரிக்க முடியாத பகுதியாக தன்னுடன் இணைந்ததாக அவர் பேசியதாக உணர்ந்ததால்.

கமலா தாஸின் சிறுகதைகளின் ஈரத்தில் கேரளத்தில் அந்த அவரது வீட்டுப் படலையைத் திறந்து –hope fully- காவல் நாய்கள் இல்லாததான அவரது வீடு நோக்கி சென்றுகொண்டிருந்திருக்கிறேன், பாலசந்திரன் சுள்ளிக்காடின் சிதம்பர நினைவுகள் (மொ-பெ: கே.வி.ஷைலஜா, காவ்யா பதிப்பகம்) நூலில் அவர் எழுதிய, ''..அவளுடைய கதைகள் எனக்கு துர்சொப்பனங்களாக இருந்தன. அவை உலகத்தினுடையதும், வாழ்க்கையினுடையதுமான சூட்சுமமான அந்தரங்கத்தை எனக்கு அறிமுகப்படுத்தியது. மின்விசிறியில் அடிபட்டு துடிக்கும், அந்த சிட்டுக் குருவியின் ரத்தம் தெரிந்த கறை இப்போதும் என் இதயத்துள் ஒட்டிக் கிடக்கிறது" என்கிற அதே, அதே எண்ணத்தோடு.

இன்றைக்கு அவ்வாறான சந்திப்புகளில் ஆர்வம் போய்விட்டது; அப் பாதிப்புகளிலே நெடுநாள் தங்க முடிந்ததுமில்லை (தங்கித்தான் என்ன செய்வது?!). ஆனால் இப்போது சந்திக்கையிலும், விமர்சனங்களுக்கு அப்பால், இந்தப் பெண்கள் வியப்பிலும் நெகிழ்ச்சியிலும் ஆழ்த்துகிறார்கள். தம்முடன் இயல்பென இவர்கள் கொண்டிருக்கிற அவைதான் அவர்களுடைய ஆளுமையை நிலைநாட்டிக்கொண்டிருக்கிறது என்றும் தோன்றுகிறது.



நீங்கள் என் கதை எழுதியபோது ஏன் மக்கள்
அதிர்ச்சியடைந்தார்கள்?

இல்லை, அவர்கள் அதிர்ச்சியடையவில்லை. அதிர்ச்சியடைந்ததைப்போல் பாசாங்கு செய்தார்கள். மற்றவர்களிடம் தாங்கள் அறியாமை நிறைந்தவர்கள் என்றும் புனிதமான திருமணத்தின்பின் கட்டுப்பாடுகளை ஒருபோழுதும் மீறியதில்லை என்றும் நிரூபிப்பதற்குத்தான். எவருமே அதிர்ச்சியடையவில்லை. இம்மாதிரியான விஷயங்கள் வருடவருடங்களாக நடந்துகொண்டேயிருந்திருக்கின்றன. நான் நிலப்பண்ணை உரிமை சார்ந்த ஒரு பின்புலத்திலிருந்து வந்தவள். இரவில் ஆண்கள் எப்படித் திரிவார்கள். ஏழைகளின் வீட்டிற்கள் நுழைந்து அவர்களது பெண்களை எப்படிப் பாலியல் வல்லுறவுக்கு உட்படுத்துவார்கள் என்றும் நன்கு அறிவேன். அவர்கள் கர்ப்பமுற்றால் மூழ்கடிக்கப்படுவார்கள் இவையெல்லாம் நிகழ்ந்துகொண்டேயிருக்கின்றன. இவற்றை நாங்கள் அறிந்தவர்களாயிருந்தோம் ஆனால் இது இரவில் மட்டும்தான் நிகழும். நான் எப்பொழுதுமே அன்பொன்றையே விரும்பினேன். உங்களது வீட்டில் அன்பு கிடைக்கவில்லையென்றால் கொஞ்சம் கவனிப்பாரற்ற குழந்தையாக வெளியே திரிவீர்கள்.
(பக். 34, பனிக்குடம்)

  • *கமலா தாஸின் புனைபெயர்
  • கமலாதாஸ் சந்திப்பு மொழியாக்கம்: மாலினி
  • கவிதை தமிழாக்கம் எழுத்தாளர் ஆர். சிவக்குமார் (ஒழுங்கு மாற்றிப் போடப்பட்டுள்ளது)·
  • காதல், கவிதை பனிக்குடம், பக்.21, கமலா தாஸ், மொ-பெ:வேணுமாதவன்
  • தடிப்பெழுத்து என்னோடது

--------------------------------------------------------------------------

6 Comments:

Blogger பிச்சைப்பாத்திரம் said...

Dear Podichi,

Thanks for this post.

- Suresh Kannan

5/30/2005 01:07:00 a.m.  
Blogger Thangamani said...

பொடிச்சி இரண்டு பதிவுகளும் நன்றாக இருந்தன.நன்றி!

5/30/2005 02:45:00 a.m.  
Blogger சுந்தரவடிவேல் said...

ஆமா, *மாதவிக்குட்டி யாரு?
இந்த மாதிரி, ஆட்களையும் அவர்கள் எழுத்துக்களையும் அக்கு வேறு ஆணி வேறாகப் பிரித்துப் பார்த்து, அதையும் எழுத எங்குதான் கற்றீர்களோ!
கிறுக்குத்தனத்தைப் பற்றி: எனக்குத் தெரிந்த கிறுக்குத்தனமான ஆட்கள் சுவாரசியமும், நகைச்சுவையும் மிக்கவர்கள்; புத்திசாலிகளும், தைரியசாலிகளும் கூட. இன்னவர்களோடு இருந்தாலே பொழுதுகளில் பாசாங்குகள் கரைந்தோடிப் போகும்.

5/30/2005 06:32:00 p.m.  
Blogger ஒரு பொடிச்சி said...

நன்றி சுரேஸ்கண்ணன், தங்கமணி, சுந்தரவடிவேல்.

மாதவிக்குட்டி
கமலா தாஸின் புனைபெயர்.
மேலே இணைக்க மறந்துவிட்டேன். சேர்த்துவிடுகிறேன்.
ஆங்கிலத்தில் எழுதுகையில் கமலா தாஸ் என்றும், மலையாளத்தில் மாதவிக்குட்டி என்றும் எழுதினார். "...ஆமியாக அல்லது கமலாவாக இரு.
*மாதவிக்குட்டியாக இருப்பது இன்னும் நல்லது."கவிதை சொல்கிறபடி பார்த்தால்
சொந்தப் பெயரில் எழுதி (குடும்ப, சமூக) மானத்தை வாங்காமல், புனைபெயரில் எழுதினால் இன்னும் நல்லது
:-)

6/01/2005 08:30:00 a.m.  
Blogger ஒரு பொடிச்சி said...

Kamala Das: அவரது autobiography ஆன My story கனடாவிலும் யப்பானிலும் பாடத்திட்டமாக உள்ளதாப் படித்தேன் (நான் படிக்கும்போது இலலை, வேற மாநிலங்களில் இருக்கலாம்).. அரசநூலகங்களில் தேடிப்பாத்திருக்கிறேன் கிடைப்பதில்லை, பல்கலைக்கழக நூலகங்களில் இருக்கிறது.

6/01/2005 08:35:00 a.m.  
Blogger -/பெயரிலி. said...

சுரையா ஆனதையும் திரும்ப மாதவிக்குட்டி ஆனதையும் விட்டுவிட்டீர்களே? ;-)

6/01/2005 08:46:00 a.m.  

Post a Comment

<< Home