@font-face { font-family: TSCu_InaiMathi; font-style:normal; font-size: 10pt; font-weight:normal; src:url(http://mathy.kandasamy.net/fonts/TSCUINA1.eot); }

Monday, October 18, 2004

காத்திருப்புக்களும் கனடாப் பெட்டையளும்

  • ஒரு நண்பர், முன்பொருமுறை, பிரான்சிலிருந்து வருகிற அம்மா இதழ், கொழும்பிலிருந்து வருகிற மூன்றாவது மனிதன் மற்றும் சில இதழ்களை அனுப்பி வைத்திருந்தார். மூன்றாவது மனிதன் (இதழ்: 6) இல் கவிஞர் சேரனின் பேட்டி இருந்தது. அதில், அதன் ஆசிரியர் பௌசருக்கும் சேரனிற்கும் பெரிய கவலை. அது என்னெண்டா (பௌசர் கேள்வி: தமிழ்க் கவிதை வரலாற்றில் பாரதி, பாரதிதாசனுக்குப் பிறகு ஒரு “major poet” தோன்றவில்லை என்கிறார்கள். அவனதோன்றாமலே போய் விடுவானா?) யாராவது ஒரு மேயர் பொயற தோன்றிருவானா? இவையட காலத்தில அவன் தோன்றியிருவானா இல்லையா? அதுக்கு சேரன் ஒரு பெரிய வியாக்கியானம் -இச் சந்தர்ப்பத்தில் அவரது சிஷ்யர்கள் யாராவது கூட இருந்திருந்தால் “தலைவரே (சேரனே) ஒரு major poet தானே, பிறகென்ன” என "மெய்சிலிர்ப்புடன்" சொல்லியிருப்பர்-. அவர்கள் இல்லாத சோகத்தை இந்த நீண்ட வியாக்கியானத்தில்தான் சேரன் ஆத்தியிருப்பார் போலும். (சேரன்: ...இன்றைக்குப் பாரதிக்குப் பின் ஒரு Major Poet வரவில்லை என்று சொல்லுவர்கள் மதிப்பீடுகளில் காலத்தின் பங்கைச் சரியாக எடை போடாதவர்கள் எனலாம். இவ்விடயங்களை நாம் 10 வருடத்திற்குள் அல்லது 20 வருடத்திற்குள் தீர்மானிப்பது சாத்தியமில்லை. சிலவேளைகளில் நுாறுவருடங்கள் கூடக் காத்திருக்க நேரலாம். தருமுவோ, யெயபாலனோ அல்லது சோலைக்கிளியோ ஒரு Major Poetஆ என்பதனை இன்றோ அல்லது சில வருடங்களிலோ தீர்மானித்துவிட முடியாது.) அதிலும் செயபாலன், சோலைக்கிளி போன்றவர்களை சொல்லுகையில் தன்னைச் சொல்ல முடியாதிருப்பது பெரும்சோகம், ஆனா அதுவே -வாசகர்களைப் பொறுத்தவரையில்- தன்னடக்கம். கவிஞருக்கென்ன, ஒரு கல்லில இரண்டு மாங்காய். ஆனா
    யோசித்துப் பாருங்கள். கேட்டவருக்கு -இனிமேற்தான்- தோன்றப்போகிற ஒருவர் ஒரு "ள்" ஆ இருக்கலாம் என்கிற உணர்வு கொஞ்சங் கூட இல்லை. உணர்ச்சிவசப்பட்டுப்போய் கேட்டிருக்கிறார். சரி, கேட்கிறவர் -எத்தகையர்- பெண்ணியம் பற்றி அவர் எழுதாதா? தனது உட்கவலைகளுக்குள் (அதான் “அந்த major poet ஏ நான்தான் பௌசர்!” என்று சொல்ல முடியாத) மூழ்கிக்கிடந்த அவராவது அத மறுத்தாரா? ம்ஹீம். இந்த லட்சணத்தில பேட்டி தொடர்ந்து போகும் பௌசர் கேட்பார் “பெண்ணியம் தொடர்பாக தமிழ் சூழலில் அதிக பிரக்ஞையுடன் செயலாற்றி வருபவர் நீங்கள்! ஆனால் உங்களுடைய கவிதைகளிலும் கூட ஆங்காங்கே ஆண் சிந்தனை வெளிப்படுவது குறித்து...”
    இவர் பதில் சொல்லுவார்: “என்னுடைய ஆரம்ப காலக் கவிதைகளில் ஆண் நிலைப்பட்ட படிமங்களும் “ஆண்மை” சார்ந்த மொழிப் பிரயோகமும் இடம்பெற்றிருக்கின்றன என்பது உண்மை. எனினும் அதிலிருந்து நான் விடுபட்டு விட்டேன். 87க்குப் பிற்பாடு வெளியான கவிதைகளில் இந்த மாற்றத்தை நீங்கள் உணர முடியும். ஆரம்பத்திலிருந்து எனது வாழ்வு அனுபவங்களும் எனது சூழலும் ஆணாதிக்கம் மேலோங்கிய பரப்பிலேயே இடம்பெற்றது. மேல்ல மெல்ல “ஆண்மை”, “பெண்மை” கரத்தாக்கங்களையும், கட்டமைப்புகளையும் நான் உதறிவிட்டேன். நுளினமும், மென்மையும் பால் பொது இயல்புகள்தானே?
    எனது வாழ்விலும் சிந்தனையிலும் கவிதையிலும் பெண்ணியம் ஏற்படுத்தியுள்ள தாக்கமும் மாற்றமும் முக்கியமானது”
    இதத்தான் ஊமைக் குசும்பு எண்டிறதா? இவர் விடுபட்டாரா இல்லையா, உதறினாரா இல்லையா அதன் லட்சணங்களைச் சொல்ல வேண்டியது யார், அதுவும் இவரேதானா?! மெல்ல! மெல்ல! ரெண்டு வேரும் வரிஞ்சு கட்டி கதைக்கிற கதையளப் பாத்தா பெட்டைக்கு சிரிப்பு வருமா வராதா? இந்த பேட்டி நடந்த 1999 இல இருந்து அத நினைச்சு சிரிச்சுக்கொண்டிருந்தா எனக்கென்ன பெயர்?
    (87 இற்குப் பிறகு சேரன் எழுதிய கவிதைகளில் அவர் ‘உதறிய’ ஆண்நிலைச் சிந்தனைகள் பற்றி இன்னொருமுறை விரிவாக எழுதுவேன்)
  • பிறகு அம்மா இதழ். அதில மனோகரன் எழுதியிருப்பார்.
    ‘(இலக்கிய உலகம்) ஒரு கலகக்காரனின் வரவுக்காக காத்துக்கிடக்கிறது’
    அதேன்ன ஒரே “ஒரு” கலகக்காரன்? ஏன் இந்தக் கஞ்சத்தனம்? ரெண்டு மூண்டுவேர் வந்தா என்னவாம்? சண்டையும் கூட வந்திருமா? இதொரு தனிநபர்வாதம் என்பதோட, காலங்காலமாக ஒரு வேலை மெனக்கெட்ட ‘காவியக்’ காத்திருப்பை வெளிப்படுத்துது. அனேகமா மனோகரன்ர அந்த கலகக்காரனும் சோபாசக்தியாகத்தான் இருக்கும்...!

  • சுராவோ தனது ஜே. ஜே. சில குறிப்புகள் எண்டொரு புதினத்த எழுதிப்போட்டு பாவம் கன வருசமா ஒரு சிறந்த விமர்சகனுக்காக காத்துக் கொண்டிருக்கிறார்!
    இப்ப உங்களுக்குள்ள -காத்திருப்புகள் பற்றிய-ஒரு காட்சி வந்திருக்கும். ஒப்பற்ற காட்சி!
    ஆனாப் பாருங்க, இப்பிடி-
    ''பெரிய எழுத்தாளர்கள்'' போல எமது படைப்பிற்கான ஒரு சிறந்த விமர்சகனை எதிர்பார்த்தபடியோ, அல்லது ஒரு ''கலகக்காரனை'' எதிர்பார்த்தபடியோ பெட்டைகளாகிய நாங்கள் எமது காலத்தைத் தள்ளுவதில்லை (எமது என்றிறது ஒரு மோறல் சப்போர்ட்தான்). அது, அதுவா தள்ளுப்பட்டுக் கொண்டிருக்கு.


    ஆனா? சும்மா கிடந்த சங்க ஊதிக்கெடுத்தான் என்னவோ எண்டிற மாதிரி ஏன் எங்கள வம்புக் கிழுக்கோணும்?

    இந்த ஈரோப் முழுக்கிலும் தம்பட்டம் அடிச்ச வச்சிருக்கிறாங்கள் எங்களப் பற்றி (அதுதான் கனடாப் பெட்டையளப்பற்றி). முந்தியொருக்கா எனக்கு மின்னஞ்சல்ல ஒண்டு வந்தது லண்டன்ல புலிகளத் தடை செய்ததப்பற்றி. “கனடாப் பெட்டையள் -புலிகள் தடை தொடர்பாக” (Canada Girls' Opinion on Tigers' Ban” எண்டொரு அறிவார்ந்த தலைப்போட. ரொம்ப கௌரதையா இருந்திச்சு, கொஞ்சம் பெருமையா இருந்திச்சு. அதோட, கொஞ்சம் அசந்துபோய் என்னடா சொல்லுறாளுகள் எண்டு போய்ப் பாத்தா அங்க புல்லில மூண்டு பெட்டையள் குந்தியண்டு இருக்கினம். அவையளுக்குமேல வட்டம்போட்டு அந்த வட்டத்துக்குள் அவையள் கதைக்கிற மாதிரி வசனம் போட்டிருக்கு. ஒருத்தி சொல்றா ‘என்னடி பசுமதி அரிசியை (b)பான் பண்ணிப்போட்டங்களாம்” எண்டு. எப்பிடி? இதென்ன நக்கல்! (சிரிப்பு வந்ததுதான்).
    பெடியள் சிலபேர் ரைம் செலவளிச்சி இப்பிடி எங்கள பரிசுகேடாக்கோணுமா? பெண்களுக்கும் அரசியலுக்கும் சம்மந்தமில்லையெண்டிறத எவ்வளவு அழகா சொல்லுறாங்கள்? அதிலும் சமையலோட முடிச்சுப் போட்டாங்கள் பாருங்க அதுதான் ஆகிலும் ehhhhhh (நற! நற!) !
    இப்படியெல்லாம் ஒரு பின்புலத்தில ஒரு மாதிரி வாழ்க்கை போகேக்க (அது தா...னாப் போகும்), என்ர தூரத்து சொந்த அண்ணாப் புள்ளையார் ஒருத்தர் ஈரோப்பில எங்கையோ ஒரு நாட்டில இருந்து என்னோட கதைக்கிறார். அவருக்கு பிடிச்ச சிநேகா, அவருக்க பிடிச்ச மும்தாசு, ... கூடவே “கனடாவில பெட்டையள் அவ்வளவு செரியில்லையாம் என?”. என்னட்டயே அபிப்பிராயம் வேற கேட்டா எனக்குள்ள இருக்கிற பெட்டைக்கு எப்பிடி இருக்கும்? அவள் பாட்டுக்கு நாசமே எண்டு பறையாமக் கிடக்கிறாள். அவளிட்டப்போய் இப்பிடி ஒரு கேள்வி கேட்டா...?
    பெடியங்கள் மட்டும் திறமோ எண்டு சுதி ஏறிச்சு அவளுக்கு. அவர் அதுக்குத்தான் “எங்கட தங்கச்சியாக்களப் பற்றித் தெரியும்தானே, ஆனா” எண்டார். இதுக்குப் பேர்தான் பிரிச்சு வைச்சு கதை எடுக்கிறதெண்டிறது. நான் நல்லமெண்டா எனக்கு வாறப் புளுகில அடுத்தவளவையப் பற்றி சொல்லுவன் எண்டு! இந்த தந்திரத்தையெல்லாம் ஒரு புத்திசீவியா உருவாகிக்கொண்டு வாற (தெரியும்தானே) ஒரு பெட்டையிட்ட விட்டா எப்பிடி? “ஆனாவும் இல்ல ஆவன்னாவும் இல்ல இங்க ஒரு பெட்டையளும் ஒருத்தரையும் துவக்கால சுடையில்ல” எண்டன். அதுக்குப்பிறகு அண்ணை ஒண்டும் பறையேல்ல.
    இப்பிடி ஆளாளுக்கு வருவாங்கள். கனடாப் பெட்டையளைப்பற்றி ஒரு “மாதியான” அபிப்பிராயம் (நீங்கள் ஏதும் கேள்விப்பட்டனிங்களா?)-
    கனடாப் பெட்டையள் பாலியல் தொழில் செய்யினம் (2000 ஆம் ஆண்டு ஒரு பெரிய பிரச்சினை வந்ததென்னெண்டா ரொறன்ரோவில இருக்கிற ஒரு துவேசப் பத்திரிகை ஒண்டு தமிழீழ.விடுதலைப்.புலிகள் காசு சேக்கிறது தமிழ் பெட்டையள தொழிலுக்கு அமத்தித்தான் எண்டு எழுதிப்போட்டுது. பெட்டையும் பஸ் பிடிச்சு எதிர்ப்புச் கோசம் போடப் போனவதான், ஆனா போய் முடியிறக்கிடல கூட்டம் முடிஞ்சுது (உண்மையா)); கனடாப் பெட்டையள் நீலப் படம் நடிச்சிருக்கினம் (சோபாசக்தியின்ர பகுத்தறிவு பெற்ற நாள் சிறுகதையில பொடிப்பிள்ளையார் ஒராள் போய் கேப்பர், அண்ணை கனடாப் பெட்டையள் நடிச்ச படம் ஏதும் வந்திருக்கோ எண்டு); கனடாப் பெட்டையள் கனபேரோட சுத்திறாளவை. அட! அட! அட! ஒவ்வொரு ஒவ்வொரு நாடுகள்ள இருந்து வாற தொலைஅழைப்புகளுக்குள்ளாலதான் எனக்கு இதெல்லாம் தெரிய வந்ததே (அதென்னமோ சமூக நலன்களத் தவிர வம்பெண்டிற சாமனே பெட்டைக்குப் பிடிக்கிற இல்ல).
    -மொத்தத்தில அண்ணைமாற்ற பிரச்சினை எங்கையிருந்தாலும் தங்கட இனப் பெண்ணோட கற்புப் பற்றித்தான். அவையள் தங்கட விருப்பத்துக்கு ஒரு பக்கம் மும்தாசுவையும் தங்கட பொண்டாட்டி சிநேகமா மாரி எண்டும் ஒரு போமிலா வச்சிருப்பினம். ஆனா தங்கட பெண்களோட கற்பப்பற்றி ஒரு பக்கத்தில நடக்கும் ஆராய்ச்சி. இதெல்லாம் பெட்டைக்கு ரென்சன்தாற விசயம் (இப்ப வந்து எனக்கு கார்ட் கொஞ்சம் வீக்).
    உண்மையா ஒரு பெட்டை அல்லது ஒரு பெடியன் அல்லது யாரோ அவையன்ர சொந்த வாழ்க்கையை வாழ்றதில (அல்லது வாழாம இருக்கிறதில) யாருக்கு என்ன வந்தது? ஒரு மகாகவிஞன் அவன் தோண்டாட்டி என்ன, தோண்டினா என்ன? ஜே.ஜே.க்கு ஒரு விமர்சகன் வந்து விமர்சிச்சாப் பிறகு என்ன நடக்கும்? கனடாவில பெட்டையள் எப்பிடி இருந்தா உங்களுக்கு என்ன?
    (கேட்டாளே ஒரு கேள்வி! போட்டாளே ஒரு போடு!)

4 Comments:

Blogger ஈழநாதன்(Eelanathan) said...

நெத்தியடியாக அடித்திருக்கிறீர்கள்.சின்ன சந்தேகம் சேரன் மூன்றாவது மனிதனில் கேட்கப்பட்ட/ சொல்லப்பட்ட அந்த பாரதிக்குப் பின்னான மகாகவி ஏன் தோன்றவே இல்லை என்பதில் அவள் பெண்ணாக இருக்கக் கூடாது என்பது எப்படிப் புலப்படுகிறது? அந்த ஒருத்தர் என்பது ஆண் பெண் இருவருக்குமே பொருந்துமே எப்படி அது 'ன்'தான் 'ள்' இல்லை என்று சொல்வீர்கள்.அதிருக்கட்டும் அவ்வைக்குப் பின் ஏன் ஒரு மாபெரும் பெண் கவிஞர் தோன்றவில்லை என்று கேட்டிருக்கலாமோ?

10/18/2004 09:35:00 p.m.  
Blogger Balaji-Paari said...

பொடிச்சி (இப்படி சொல்றது சரியா?), உங்கள் இடுகை மிகவும் முக்கியமானது. உங்களுக்கு வாழ்த்துக்கள்.

இன்றைய ஆணாதிக்க சமூகத்தில் பெண்கள் அரசியலுக்கோ அல்லது அது சார்ந்த விடயங்களுக்கோ வரவேண்டும் என்றால் அவள் ஆணாதிக்க சமூகத்தின் கூறுகளை உள்வாங்கி அதைப் போற்ற தக்கவளாக வேண்டும் என்ற நிலை உள்ளது. இதை நான் கடுமையாக எதிர்க்கின்றேன். இத்தகைய போக்கை எதிர்த்து எழுதுவது காலத்தின் தேவை.

உங்கள் எழுத்துக்கள் எனக்கு பெரும் நம்பிக்கையை உண்டாக்குகின்றது. வாழ்த்துக்கள்

நன்றிகள். தொடர்ந்து எழுதவும்.

பாலாஜி-பாரி

10/19/2004 03:37:00 a.m.  
Blogger ஒரு பொடிச்சி said...

ஒரு “major poet” தோன்றவில்லை என்கிறார்கள். அவன் தோன்றாமலே போய் விடுவானா?
-பௌசர்

இதில் முதுல் பாதி சரி. ஒரு major poet தோன்றவில்லையே என்கிற ஆதங்கம். "அவன் தோன்றாமலே போய் விடுவானா?"
பிறகு 'அவன்' எனத்தானே விளிக்கிறார், பௌசர்? இது பெரிய விடயம் இலலையென்று சொல்லலாம். ஆனால் இலக்கிய உலகத்தில், இலக்கிய உரையாடல்களில் 1999 இல் இந்த விவாதங்கள் எல்லாம் வந்துவிட்டன. அப்போதே சேரன் போன்றவர்கள் அவள் அல்லது அவன், வாசகன் அல்லது வாசகி, என்று போட்டுத்தான் கட்டுரைகளில் 'மிகவும் கவனமாக" எழுதினான்கள்.

'அவ்வளவு' கவனமாக எழுதியவர்கள், அவன் என்கிற கேள்வியை மறுதலிக்க எண்ணவில்லையே? அது தோன்றாமலிருக்கலாம்தான் - ஆனால் இவர்கள் 'சாதாரணமானவர்களா?' இலலையே! இப்படி எத்தனையோ முரண்பாடுகள் இருக்கிறது, அதில் எல்லாவற்றையும் உதறிவிட்டேன் எனக்கதைப்பது முதிர்ச்சியையா காட்டுகிறது?

10/19/2004 09:22:00 a.m.  
Blogger மு. மயூரன் said...

பொடிச்சி,

என்ன நீண்ட நாளாய் ஆளைகாணவில்லை?
மற்றுமொரு தீவிரமான பதிவுக்காய் காத்திருக்கிறேன்.

;-0

10/25/2004 09:59:00 a.m.  

Post a Comment

<< Home