@font-face { font-family: TSCu_InaiMathi; font-style:normal; font-size: 10pt; font-weight:normal; src:url(http://mathy.kandasamy.net/fonts/TSCUINA1.eot); }

Wednesday, January 19, 2005

சூர்யா செ.மோ.வின் 'நல்ல' வாசகன்

Setting

நகரின் புறமாக இருக்கிற ஒரு பீட்ஸாக் கடை. அது ஒரு business plaza வின் கீழ்த்தளத்தில் அமைந்திருக்கிறது. அனேகமாக அங்கே வருகிறவர்கள் அதிகம்பேர் வெள்ளையர்கள், அதிலும் நடுவயது வியாபாரிகள், ஓய்வுபெற்ற முதியவர்கள்... இங்கே நாங்கள் பீட்ஸாவை ஓடர் பண்ணிவிட்டு பெரிதாய்க் கதைத்துச் சிரித்தபடி அது வந்ததும் ஒவ்வொருவரும் தம்தம் துண்டுகளை எடுத்து சோஸ் இல் தொட்டுச் சாப்பிடுவம். எம்மில், எவளுக்காவது பீட்சாவின் crust பகுதிதான் பிடிக்குமென்றால் மீதியைத் தின்றுவிட்டு அவளிடம் அதைத் கொடுக்க, அவளும் dipping sauce இல் crust ஐ நல்லாத் தொட்டுத் தொட்டு “ம் யம் யம்” எண்டு சொல்லிச் சொல்லிச் சாப்பிடுவாள்.


Fork and knife

எங்களுக்கு பக்கவா அந்த வெள்ளைக் கனவான்கள் கத்தியை ஒரு கையிலும் முள்ளுக்கறண்டியை இன்னொரு கையிலும் வைத்து, ஒரு கையால கத்தி துண்ட வெட்ட, மறு கையால முள்ளுக்கறண்டி அதக் குத்தி எடுக்க... எண்டு, என்ன லாவகம்! மெதுமெதுவாக வாய்மூடி மென்றுகொண்டிருக்க, நாங்கள் இப்ப எங்கள் விழுங்கலில் இரண்டாவது துண்டில் இருப்போம்.


Interruption 1: Blacks Vs. whites

அவர்கள் எங்களை ஒரு மாதிரியாய்ப் பார்ப்பினை, அப் பார்வையில கட்டாயம், ‘நாகரிகமற்றவர்கள், ‘ஒழுங்காய்’ச் சாப்பிடத் தெரியவில்லையே!’ இப்பிடி ஏதாவதொரு முறையிடல் இருக்கும். அந்த அற்புதமான timing இல எங்களில் எவளாவது வேணுமென்று சற்றுப் பெரிதாக இன்னமும் எரிச்சலூட்டும் சேஷ்டைகளைச் செய்வாள்கள், விரல்களில் படிந்திருக்கிற சீஷை நக்குவார்கள், வாயுக்கு வெளிய பரவி இருக்கிற சோசுகள எல்லாம் விரலால துடைச்சு வாய்க்குள்ள கொண்டு போவாளவ. இப்பிடி ஏதாவது!
இப்ப அவர்கள் பார்வையில் வடிவாய்த்தெரியும் அருவருப்பான ‘இப்பிடியும் இருக்குதுகளே’ ‘கறுப்புகள்!” என்ற கணிப்பீடு. இதனால் எங்களுக்கு நட்டமொன்றும் இல்லை. SOOOO What?! விடுவோமா சிங்கிகள்... நாங்களும் அப்படித்தான் அவர்களைப் பார்ப்பது ‘இப்பிடியும் இருக்குதுகளே!’


குறுக்கீடு 2: ஆழமற்றவர்கள் Vs. ஆழமானவர்கள்

யமுனா ராஜேந்திரன் பதிவுகள் இணையத்தளத்தில் ஸைபர் வெளியும் மனித உடல்களும்! என்றொரு விவாதத்தைத் தொடங்கியிருந்தார். அதைத் தொடர்ந்து ரவி ஸ்ரிநிவாஸ் உம் தனது கருத்தைத் தந்திருந்தார். இவற்றுக்கு பொதுவான எதிர்வினை ஜெயமோகனிடமிருந்து "யமுனா ராஜேந்திரனின் கட்டுரை கண்டேன். நான் யமுனா ராஜேந்திரன் ரவி ஸ்ரீனிவாஸ் போன்ற ஆழமற்ற, உள்நோக்கம் கொண்ட கட்டுரையாளர்களை பொருட்படுத்த விரும்பவில்லை. ஆனால் இது அவதூறு என்பதனால் மறுப்பு.“ என்பதாக இருந்தது. உண்மையில் பார்த்தால் வழமையாக மார்ச்சிய, மற்றும் பிற ‘இன்னார்கள்’ சொன்னதை திருப்பி (தமிழில்) தருகிற யமுனா ராஜேந்திரன் இம்முறை மிக நிதானமாக, முன்னோர்களின் உதவியற்றுத்தான் எழுதியிருக்கிறார். அத்துடன், சூர்யாவை முன்வைப்பதூடாக, ய.ரா, ரவி ஸ்ரீனிவாஸ் இருவருமே புனைபெயரில் எழுதுவது தவறென்று நிறுவவுமில்லை.
விவாதங்களை செ.மோ எதிர்கொள்கிற விதம் இவ்வாறுதான். இதாவது பறவாயில்லை, வேறு இடங்களில், தானாக ஒரு விவாதத்தில் பங்குகொண்டுவிட்டு, 'உங்களுடன் விவாதித்ததற்காக வருந்துகிறேன்' என்றெல்லாம் போடு போடுவார்.

முன்பு, பதிவுகள் விவாதக் களத்தில் இடம்பெற்ற விவாதத்தில் சூர்யா என்பவர் எழுதிய பதிவு எனக்கு படிக்கக் கிடைத்திருந்தது. அது பற்றி ஏதாவது எழுத எண்ணிவிட்டு, ‘இதுகளுக்கெல்லாம் என்ன எழுதுவது’ என்றொரு சலிப்பில் அது போய்விட்டது. இன்று யமுனா ராஜேந்திரன் மீள இப்பிரச்சினையை எடுத்துப்போடவும், சூர்யாவின் எழுத்துகளை திண்ணையில் படித்தபின், இதுபற்றி -‘சூர்யா’ என்கிற தமிழ் இலக்கிய சூழலுக்கு அநாமதேயமான ஒரு பெயர்/நபர் தொடர்பான எனது சிக்கலை எழுதத் தோன்றியது. எழுதக் காரணமான அந்த சூர்யா = செயமோகனா (இருக்கலாம்) என்பது சுவாரசியம் சேர்க்கிறது.

குறுக்கீடு 3: தன்னைப் பற்றித் தானே சொல்லுதல்

01.
...ஒரு தளத்தில், அது இலக்கியமோ கலையோ, அதில் ஆழ்ந்து செயல்படுபவர்களுக்கு தங்கள் அறிதல் என்று சொல்வதற்கு பல இருக்கும். அதை பிறரும் கவனிப்பார்கள். அவரது செயல்தளமே அதற்கு அடிப்படை. ஆகவேதான் ஒருமுறை எஸ்ரா பவுன்ட் சொன்னார், ஒரு நல்ல படைப்பாவது எழுதாதவரின் இலக்கியக் கருத்தை பொருட்படுத்த வேண்டாம் என்று . அது பொருத்தமற்றதாக இருக்கலாம். ஆனால் ஒரு துறையில் நீண்டநாள் ஈடுபாடு உழைப்பு சாதனை என்பவை மிக முக்கியமானவை என்றும் இலக்கியம் கலை போன்ற சப்ஜெக்டீவான தளங்களில் இம்மாதிரி அடித்தளம் இல்லாதவர்கள் எதையாவது அங்கே இங்கே படித்துவிட்டு எதைவேண்டுமானாலும் சொல்லிக் கொண்டிருக்கலாம் என்றும் பொதுவாகக் காணலாம். கூடவே ஒரு உள்ளீட்டற்ற சவடாலும் சேர்ந்துகொண்டால் கேட்கவே வேண்டாம்.
-சூரியா

02.
...
...தீராநதி இதழிலே விக்ரமாதித்யனின் பேட்டி. வழக்கம்போல விக்கி தன்னையும் தன் கவிதையையும் தூக்கி, தன் பலவீனங்களையும் சிக்கல்களையும் பலங்களாக நியாயப்படுத்தி, தண்ணிவாங்கித்தரும் அன்பர்களையெல்லாம் பெருங்கவிஞர்களாகத் தூக்கி சிலம்பமாடியிருக்கிறார். பட்டியலில் இடம்பெறும் லட்சுமி மணிவண்ணன், என் டி ராஜ்குமார், பாலைநிலவன் எல்லாம் என்னதான் அப்படி எழுதினார்கள் என்பதை தேடிப்பார்த்தும் தட்டுப்படவில்லை.
-சூரியா

03.
“...எஸ் ராமகிருஷ்ணனின் நெடுங்குருதி நாவலை படித்து முடித்தேன். ஆழமற்ற அகலமான நாவல். ஒரு திருடன் வாழ்வின் நிறைய சம்பவங்கள் என்று சுருக்கமாகச் சொல்லலாம். ...வெம்பாலை ஒரு உருவகமாக மாக்கெண்டா போல விஷ்ணுபுரம் போல இருக்கவேணும். அதுவும் இல்லை. சம்பவங்கள் எல்லாமே நுட்பமான ஆழங்களை காட்டவேணும் அதுவும் இல்லை. சும்மா நிறைய சம்பவங்கள். எதிலும் கவித்துவமும் இல்லை அனுபவ உக்கிரமும் இல்லை. படித்தபடியே போகலாம் அவ்வளவுதான். ...”
-சூரியா

04.
‘இந்த மூன்றுமாதங்களில் தமிழில் என்னைப்பற்றி முப்பத்துஎட்டு வசை, அவதூறுக் கட்டுரைகள் வந்துள்ளன என்று ஆய்வுமாணவரான நண்பர் ஒருவர் சொன்னார். ஒருவேளை நவீனத் தமிழின் ஐம்பதாண்டுகால வரலாற்றிலேயே ஒரு எழுத்தாளரைப்பற்றி இந்த அளவுக்கு தாக்குதல்கள் வந்தது இல்லை.
...
முதல் அவதூறு என்னை நானே வேறுபேரில் புகழ்கிறேன் என்பது. என் தலைமுறையில் என் அளவுக்கு விமரிசன அங்கீகாரம் பெற்ற எவரும் இல்லை. என்னைப்பற்றி எழுதப்படாமல் ஒரு மாதம் கூட தமிழில் இல்ல. எந்த இலக்கியக் கூட்டத்திலும் ஒருவாசகர் எனக்காக பேசுவார்.
-ஜெயமோகன், ‘அவதூறுகள் தொடாத இடம்’, திண்ணைக் கட்டுரை


சூரியா, செயமோகன் இருவருமே மற்றவர்களுடைய கட்டுரைகள் ஆழமற்றவை என்று சொல்லிக்கொள்கிறார்கள். கவலைக்குரிய வகையில், மற்றவர்களைப் பற்றி சொல்லுவது எல்லாம் அவர்களில் ஒருவருக்கே பொருந்தியும் போகிறது.

சுந்தர ராமசாமி பற்றி "எழுத அமர்ந்ததுமே அவர் மிக மிக ஜாக்கிரதையாகிவிடுகிறார் . பழங்கால ஆட்கள் போட்டோவுக்கு போஸ் அளிப்பதுபோல தசைகளை இறுக்கி விடைப்பாக உட்கார்ந்து விடுகிறார். அதை மறைத்துக்கொள்ள செயற்கையானதும் பெரியமனிதத்தனமானதுமான ஒரு நகைச்சுவையைக் கையாள்கிறார்” என செ.மோ எழுதுவது அவருக்கே பொருந்துகிறது (தன்னை முன்னிலைப்படுத்தல், பெரியமனித நகைச்சுவை (ஆனால் சிரிக்க முடிவதில்லை) இத்தியாதி). மற்றப்படி, செயமோகன் பற்றி 38 விமர்சனங்கள் வருவதில் அவரைப்போல எனக்கு ஆச்சரியமொன்றும் தோன்றவில்லை. இரு பெரும் கனதியான (கிட்டத் தட்ட ஒவ்வொன்றும் 750 (*2 = 1500 பக்கங்கள்) நாவல்கள், பிற நாவல்கள், சிறுகதைகள், அப்புறம் பேசுவதை எல்லாம் புத்தகமாக்கி வந்துகொண்டேடடடடடடடடட(ஏ) இருக்கும் நூல்கள் (குமரி உலா 1, 2, 3, ...). யாரோ, எப்படியோ, இதில் ஏதேனும் ஒன்றைப் பற்றியேனும் பேசித்தானே ஆகவேண்டும்? எங்கேனும் எழுதத்தானே வேண்டும்? மேலும், இத்தனை காலமாக (எத்தனை?) எழுதுகிற ஒரு நபருக்கு இந்தளவு கூட –வசையோ விமர்சனமோ- எழுதாத ஒரு சூழலில் இருந்தால் எனக்குச் செரியான கவலையாக இருந்திருக்கும்.
இப்போ, எனது கவலை அந்த 38 பேரையும் முன்வைத்துத்தான். எதிர்நிலையில் நின்று நான் இலகுவாக சொல்லலாம்: ‘தங்களது நால்களைஅந்த 38 பேரும்தான் படித்தனர்’ என (ஆஹா!). செயமோகனே அவர்களது எல்லாம் வசைகள், அவதூறுகள் ‘ஆழமற்றவை’ என எழுதினால், ‘அட! அவங்களும் முழுதாகப் படிக்கவில்லை’ எனலாம். இறுதியில் சூர்யா (தனது எழுத்துக்களில்) அடிக்கடி செயமோகனை மேற்கோள் காட்டிறார் என்றால் “அவர்(மட்டும்)தான்’ அவற்ற எழுத்த படிக்கிறார் எனக் கொள்ளலாம். மேலும்,அவரே செ.மோ தான் என்றால் செ.மோ மட்டும்தான் அவரது எழுத்துக்களைப் படிக்கிறார் என்று...ம் சொல்லலாம்.

நிலமை இவ்வாறிருக்க, சூரியா எஸ்.ராவின் நாவல்களில் வேண்டிநிற்கும் அனுபவத்தின் உக்கிரம் ‘சொந்த அனுபவம்’ கவித்துவம் எல்லாம் ஆச்சரியப்படுத்துகிறது. ஜெயமோகன், குறிப்பிடும்படியான புனைவுகளை உருவாக்கியிருந்தாலும், அவருடைய பெரும் நாவல்கள் அதிகம் தட்டையானாவை, வரட்சி மிகுந்தவை.
சூர்யா, குருவின் “ஆழமற்றவை’ என்ற கூற்றைத் தன(குருவு)க்கெதிராக எழுதுபவர் எல்லோர் மீதும் எற்றிக்கொண்டிருக்கிறார். ஆனால் அவருடைய (குருவினுடைய) பெரும்பாலான எழுத்துக்கள் மீதெல்லாம் தான் நீரள்ளி ஊத்தவேண்டும்போல இருக்கிறது, அப்பிடி ஒரு வரட்சி.

பின் தொடரும் நிழலின் குரல் அச்சொட்டாக உண்மைக்கு நெருக்கமானதாக இருக்கலாம். இப்படியான ‘தகவல் சேகரித்து’ நாவல் எழுதுதல் முறை நம்மிடை அரிதென்றாலும், மேற்கில் இது சாதாரணமானவிடயம்தானே. ஆனால் அதில் எங்க அனுபவத்தின் உக்கிரம்? செ.மோ வெறுப்பதாகக் கூறும் சனாதன மார்க்ஸ்ஸியரின் எழுத்தாகியல்லோ வந்துள்ளது அது. மருந்துக்கேனும் எள்ளலுண்டா, மனைவியிடம் ‘மார்க்ஸ் சொல்லண்டி’ எண்டு வதைப்பது தவிர, வேறு ம்ஹீம். பி.தொடரும் நிழலின் குரல் இன் பிரதான பாத்திரம் அருணாச்சலம் போல செயமோகனும் ஹாஹாஹா என்றுதான் சிரிப்பரா?! அதுவும் இல்லையா? இப்படி எண்ணுமளவுக்கு வரட்டுத்தனமும் தன் தர்க்கத்தை தனக்குச் சாதகமாய் கொண்டுசெல்வதில் குரூரமானதொரு இன்பமும் உள்ளதே பிரதியெங்கிலும். குரு நித்ய சைதன்ய யதியின் உரையாடல்களிலோ படைப்புகளிலோ இத்தகைய வன்மம் இல்லையே!

செயமோகனது வாசிக்கக்கூடிய புனைவுகளைத்தவிர மீதியெல்லாம் வரட்சிதான். கட்டுரைகள்? சுனாமி பற்றிய அவரது முதற் கட்டுரையை அவருக்குப் பிடித்த புராணகாலைய கதையொன்றோடுதான் பார்க்கமுடிகிறது. அது: தர்மரும் துரியோதனனும் நகர்வலம் போன காதை! பாடம்: உங்களது பார்வையின் அடிப்படையில்தான் எல்லாம் தென்படும். துரியோதனன் பார்வைதான் சனாதனவாதிகளால் தீயதாய் சொல்லப்பட்டுவந்தது. அதை எவ்வளவு அழகாய் உடைத்தார் எஸ்.ராமகிருஷ்ணன் உபபாண்டவத்தில்?

அவரிடம்போய் ‘விஷ்ணுபரம்போல எழுது’ என ஒரு குறிப்பு (அவர் நல்லா எழுதவே கூடாது என்று முடிவுபண்ணியாச்சா!). தனது (செயமோகனின்) நாவல்களைப் பற்றி எதுவுமே பேசாது, மோனத் தவம் புரிந்துகொண்டிருக்கும் சுந்தர ராமசாமி, எஸ்.ராமகிருஷ்ணனின் ‘நெடுங்கருதி’யைக் (காலச்சுவடில்) புகழ்ந்த எரிச்சலில்தான் இதை எழுதியிருப்பார். அல்லாமல்,
செயமோகனால் எஸ்.ராமகிருஷ்ணனில் இப்படி சொந்தப்பெயரில் எரிய முடியுமா?

செ.மோ தனது எதிர்வினையில் ஒரு அரசூழியனுக்கு சொந்தப் பெயரில் எழுதுவதில் இருக்கிற சிரமங்கள் பற்றி அழுதிருந்தாலும், எஸ்.ரா வையோ என்.டி.ராஜ்குமார் போன்றவர்களை போகிற போக்கில் சாடுவது, செயமோகனுக்கு எதிரானவர்களை எதிர்ப்பதால் எல்லாம் ஒரு அரசு உத்தியோகத்தில் இருப்பவருக்கு என்ன தீங்கு என்று தெரியப்படுத்தவில்லை. (மற்றப்படி, மணிரத்தினம் பற்றி, இன்ன பிற சினிமாக்காரர் பற்றி கிசுகிசு எழுதுவது என்ன பேரில் எழுதினால் யாருக்கென்ன).
மிகவும் வெளிப்படையாகத் தெரிகிற விடயம்,
என்.டி.ராஜ்குமாரைப் பற்றியெல்லாம் போகிறபோக்கில் செ.மோ என்கிற brand name ஆல் எழுத முடியாது என்பதும், இதுவே இஸ்லாம் தொடர்பான விவாதங்களிலும் அவருடைய நிலைப்பாடு என்பதும் தான்.

செயமோகனுக்கு அல்லது சூர்யாவிற்கு எஸ்.ராமகிருஷ்ணனில் இருப்பது எரிச்சலொன்றால், என்.டி.ராஜ்குமாரிடத்தே என்ன பிரச்சினை இருக்க முடியும்?
என்.டி.ராஜ்குமாரின் எந்தக் கவிதையில் என்ன இல்லை?

என்.டி.ராஜ்குமாரின் எழுத்துக்கள் பற்றி எழுத விருப்பம். அவர் தலித் என்பதால் மட்டும் அல்ல (பிறகு அதனாலதான் அவர் பேசப்படுகிறார் என சொல்லுவாகளே), அவருடைய கவிதைகள் தந்த அனுபவம, அவற்றை வாசிக்கையில் உணர்ந்ததில் எழுந்தவற்றில் கொஞ்சமேனும் பதியக்கூடியதாய், சிரத்தையெடுத்து எழுதவேண்டும். இந்த சுயமோக எழுத்தாளர்களைப் பற்றித்தான் விட்டேற்றியாக தெருவில் நின்று சண்டை போடலாம்.
இவர்கள் சொல்லுகிற மதசார்பின்மை/தான் சொல்வதற்குப் பொறுப்பெடுப்பவன்/நேர்மையாளன் இத்தியாதி எல்லாம் தான் வாய்ச் சவடால்கள். எழும்பி நடக்க ஆரம்பித்தால் மதசார்பின்மையும் இன்ன பிறவும் மடியால விழுந்திரும் என்பதேதான் ஒரே உண்மை.

இதுநாள்வரையில் கவித்துவம், கவிஞன் இத்தியாதிகளை தம்மகத்தே வைத்திருக்கிற கூட்டத்தினருக்கு என்.டி.ராஜ்குமாரின் கவிதைகள் எப்படி இருக்குமென்று தெரியாதா என்ன! ‘நாங்கள் ஒரு கவிதைக்காக மோனித்திருக்கிறோம்’ என்கிற றேஞ்சில இவர்கள் இன்றையநாள் வரை, (கவிதை தோன்றுவதை) கருத்தரிப்பு என்றார்கள், பின் அதன் பிரசவம் என்றார்கள், அதில் பிறந்த மரபுவழிக் குப்பைகள்தான் மீதி எல்லாம். இவங்கள விலத்தி,‘காணுமடா சாமி’ என்று,

என்.டி.ராஜ்குமார்,

ஊளமூக்கன் சிந்திப்போட்ட சளிபோலக் கிடக்கும்
வெண்பொங்கல்
நோய்வந்த பூனையின் கிளுகிளுத்த பீபோல இருக்கும்
சக்கரைப் பொங்கல்
சௌவரியமாயிருந்து வழித்துநக்கி
தீட்டுகாக்கும் நீ
சூண்டிப் பேசாதே
ஆட்டம் வந்தால் அறுத்துத் தள்ளுவேன்
ரணத்தில் முளைத்தவள் ரணதேவதை
அவளுக்கு வேண்டியது குருதிபூசை
பூசணிக்காயை வெட்டி தோலைசெதுக்கியெடுத்து
சின்னச்சின்த் துண்டுகளாக்கி சோப்புத் தண்ணியில் முக்கி
உனது குண்டிக்குள் சொருவிக்கொள்
மலமாவது ஒழுங்காப் பொகும்.
(காட்டாளன், என். டி. ராஜ்குமார்)

என்றால், அதை எப்படித் தாங்கிக் கொள்ள முடியும், ஒரு சனாதன கனவான் மூளையால், இதயத்தால்? இது எத்தகைய அதிர்ச்சி!



Climax

வெள்ளைக் கனவான்களால், கறுப்பர்களையும் அவர்கள்தம் களியாட்டங்களையும் கவலையற்ற வாழ்வையும் நக்கலையும் (அவர்களிடமிருந்து முழுமனே வேறுபடுகிற) பண்பாட்டையும் புரிந்துகொள்ள முடியாது. அவர்களைத் ‘திருத்த’ அல்லது அவர்களுக்கு திறமான பழக்கங்கைளப் ‘பழக்க’ தான் கனவான்கள் பெரு விருப்புக் கொள்கிறார்கள். ஆனால் கத்திசிரித்துக்கொண்டு அன்றைய நாள் அழுத்தங்களை கரைக்க முயன்றபடி, ஆடிப்பாடி நடந்துபோகிற அவர்களுக்கோ எங்களுக்கோ எங்களது பழக்கங்களை அவர்களுக்கு ‘பழக்க’ ‘நெறிப்படுத்த’ ஒரு பேரவாவும் இல்லை. அந்தவகையில் செயமோகன் மற்றவர்களிடம் எதிர்பார்க்கும் ‘ஆழமான’ விமர்சன ஙானங்கள் குறித்து எனக்கொரு விமர்சனமுமில்லை. செயமோகன் = சுயமோகம் என்பதுதவிர அவர்குறித்து மனப்பதிவில்லை. தன்னிடம் ஒரு வரம் தரப்படுமாயின் செயமோகனானால் எல்லா முரண்பாடானவர்களையும் ‘ஆழம்’பெறச் செய்துவிடுவார் (அதாவது அவரை முரண்பாடற்று ஏற்கல்). ஆனால் எமக்கு அவர் அவராகவே இருந்து, எழுதிவிட்டுப் போகட்டும்! தமிழ் இலக்கிய சூழலில் செயமோகனின் இடம் ஒரு வெள்ளைக் கனவானின் இடம்.

கொசுறு: கவலை

எனக்கு கனவான்களில் பிரியம் அதிகம். நான் செயமோகன் பக்கமிருந்து யோசிக்க விரும்புகிறேன். நீங்கள் ஒற்றைப்படையாய் யோசிப்பதைவிடுத்து பற்படையாய் யோசித்தால் புரியும். பீட்ஸா தின்பது என்பது தனியே அதைத் தின்பது மட்டுமல்ல. இந்த இடத்தில்தான் செ.மோ + சூர்யா வருகிறார்கள். சுகாதார முறைப்படி பார்த்தால், உணவு சமிபாடடைய கத்தி + முள்ளுக்கறண்டி முறைதான் சிறந்தது. நீங்கள் அவசரப்பட்டு அவக் அவக் கென்று விழுங்கிறபோது உணவு மெல்லுப்படாது.
கனவான்கள் என்ன செய்தாலும் அதிலொரு ஆழமான அர்த்தம் நிறைந்துள்ளதாய் உணர முடிகிறது. இதனால இன்றைய என்ர ஒரே கவலையெல்லாம்,
தனது எல்லா உழைப்பையும் (எழுத்து) புத்தகமாக்குகிற செயமோகன், சூர்யா என்ற பெயரில் எழுதுபவற்றை என்ன செய்யப் போகிறார்? சிலவேளை “செயமோகனின் ரசிகரான சூர்யா செயமோகனாகவே(ஏ!) அறியப்பட்டவர்" என்று பின்னட்டையில் போட்டா?! அதைத் தவிர, அவர் வேறெப்படி (IF)தான்தான் அவர் என காட்டப்போறார்? ‘அவர்’தான் ‘இவர்’ என்றெழும்பும் ‘ஆழமற்றவர்களின்’ வாதங்களே போதுமானதா? இல்லாவிட்டால், அவரைப்பற்றி இன்னமும் எழுதுங்கள் மக்காள். செயமோகனுக்கு உதவுங்கள்.

முடிவு


தம்மைப் பற்றித் தாமே பேசுவதுபோல ஒரு கொடுமை வேறொன்றும் இருக்கமுடியாது. 1999இறுதியில் பின்தொடரும் நிழலின் குரல் என்றொரு புதினம் வந்தது – அது பற்றிய அனேக வியாக்கியானங்களை நான் செயமோகனது பேட்டிகளில், கட்டுரைகளில் உரையாடல்களில் தான் படித்திருப்பேன். விஷ்ணுபரம் தொடங்கி அவரது பல படைப்புகளது நிலமை அதுதான் - அவை செயமோகனால் அதிகம் பேசப்பட்டது. இன்றைக்கு அவருக்குத் துணையாக, அவர் ‘புனையக்கூடிய’ ஒரு இணைய நபரால்கூட அவரைப் பற்றி ‘ஒரு சின்ன’ முரணும் கொள்ள முடியாதிருக்கிறது.
ஒரு மனிதன் -அனேகமாக முதுமையில்- தன்னைப் பற்றி தானே பேச வேண்டியதான சந்தர்ப்பத்துக்குள்ளாகிறான். தனித்திருக்கிற நமது வீட்டிலே, அப்போது பேசுவதற்கும் யாரும் இருப்பதில்லை, கேட்பதற்கும். வயதேற ஏற இது கூடிக்கொண்டே போகும். செயமோகன் இவ்வளவு கெதியாய், அதை ஆரம்பித்ததும், சேயமோகனும்/செயமோகனது ‘நல்ல’ வாசகனும் தான் அவரைப்பற்றிப் பேசிக்கொண்டு இருக்கிறார்கள் என்பதும் இன்னொருவகையில் மிகவும் துயரம் தருகிற செய்தி. ...அது என்னை துயரிலாழ்த்துகிறது’ என்று சொல்லி நிறுத்திக் கொள்கிறேன்.
0




(இந்த கட்டுரை வடிவத்தால் கவரப்பட்டீர்களென்றால் சூர்யாவினது ‘சில குறிப்புகள்’ கட்டுரையையும், நேசகுமாரின் ‘பதிவுகள்’ இணைய இதழ் எதிர்வினைக் கட்டுரையையும், செயமோகனின் சில கட்டுரைகளையும், அவற்றின் வடிவத்தையும் பார்த்துக்கொள்ளுங்கள் (நேரம் இருந்தால்!). மற்றப்படி மேலுள்ள எழுத்துபூராவும் ஒட்டியிருக்கிற வரட்சியை உணர்ந்தீர்களென்றால், அதை அப்படியே செயமோகனின் எழுத்துக்கு சமர்ப்பித்துக் கொள்ளுங்கள்.)