@font-face { font-family: TSCu_InaiMathi; font-style:normal; font-size: 10pt; font-weight:normal; src:url(http://mathy.kandasamy.net/fonts/TSCUINA1.eot); }

Monday, February 21, 2005

III - என் ஜன்னலுக்கருகே வா

----------------------------------
படைப்புகளில் ‘அவர்கள்’
---------------------------------


thanks

சியாம் செல்வதுரையின் முதல் நாவலான Funny Boy (1994) வந்தபோது அவர் ஒரு ஓரினச்சேர்க்கையாளர் என்பதாலேயே அதற்கு அதிக முக்கியத்துவம் தரப்பட்டது என விமர்சிக்கப்பட்டது. எப்போதும், சிறுபான்மைக் குரல்கள் ஒலிக்கையில் எல்லாம் ஒத்ததான இந்த விமர்சனத்தை காணலாம்.

பெண்ணென்பதால்
தலித் என்பதால் - இத்தியாதி.

ஏ.ஜே.கனகரத்னா எனக்குப் பிடித்தமான விமர்சகர். அவர்
Third Eye (ஆறாவது இதழ், யனவரி 2000) இதழில் இந்நூல் பற்றி எழுதுகையில் இப்படி எழுதுகிறார்:

The phenomenal success of Funny Boy when it was first published in Canada was due no so much to its literary merits (considerable as they are) but to the author’s going public about being a ‘gay’ and the attendant media hype”

(பக் 24. book review, Tales of Innocence and Experience, A.J.Canagaratna)


Funny boy ஐ எல்லோரும் ஒரு வாசிப்பிற்குட்படுத்தலாம் என்பதும், எமது சூழலில் இருந்து வந்த பிரதிகளில் இந் நாவல் எனக்கொரு முதல் அறிமுகமாக இருந்தது என்பதும் தவிர எனக்கு அதில் வேறு முக்கியத்துவங்கள் இல்லைத்தான். ஆனால் இவர் ஒரு ஓரினப்புணர்ச்சியாளர் என்பதால்தான் தரப்படுகிற கவனம் என்கிற கூற்று நெடுகிலும் வருவதால் நெருடுகிறது.

தொடர்ந்து ஏ.ஜே. இதைப்போலவே அடுத்த நாவலும் வருமா, அல்லது மேற்கின் இத்தகைய அணுகுமுறைகளுக்குள் அடிபட்டுப்போய்விடுமா எனக் கேட்டிருந்தார் (நாவலைப்பற்றிய அவரது விமர்சனமும் எதிர்மறையாக இருக்கவில்லை, அரசியல்தரீதியாக சில விமர்சனங்கள் இருந்தனவே தவிர.) அந்த இரண்டாவது நாவலான,
Cinnamon Gardens (1998) எனக்கு முதலாவதைவிட முக்கியத்துவம் மிக்கதாய் பட்டது.
Funny Boy: இலகுவான வாசிப்பை கோருகிற ஒரு பிரதி, ஓரினச்சேர்க்கையாளனான பையனின் வளரிளம் பருவம் (
adolescence) பற்றியது, தனது பாலியல் விருப்பை அவன் தன்னுடன் படிக்கும் இன்னொரு மாணவனூடாக கண்டடைகிறான் என்பது அந்தக் கதை. அத்துடன் 1983 கலவரத்தைப் பற்றியும் அதன்பின்பு அவன் கனடாவிற்கு புலம்பெயர்வதுவரை சொல்கிறது. அதற்கு தொடர்ச்சி இல்லை. இரண்டாவது பிரதியோ ஏலவே எழுதியதுபோல பிரதிக்குப் பிறகும் பேசுகிறது; சொல்லப்போனால் வாசித்து முடிந்தபிறகுதான் அது பேசவே ஆரம்பிக்கிறது.

அந்த வகையில் இந்தப் பிரதி முக்கியமானது; இதன் ஒப்பற்ற இலக்கியத்தரத்திற்காக அல்ல. இதிலும்விட கலைநேர்த்திமிக்க படைப்புகள் பிற மொழிகளில் நிறையவே வந்திருக்கும்தான் ஆனால் ஓரினச்சேர்க்கையாளர்களது உளவியல்ரீதியான பக்கங்களை அணுகுகிற தமிழ்ப்பிரதிகள் இல்லை. அவைக்கான தேவையோ மிக அதிகம். இதுபோன்ற, இலகுவான, எமது சூழலோடு இணைகிற பிரதி, தமிழில் மொழிபெயர்க்கப்படுமாயின் எல்லோராலும் வாசிக்கப்படும்.

தமிழில் சரிநிகர் இல் எஸ்.கே.விக்கினேஸ்வரன் Funny Boy இன் முதல் சில பாகங்களை மொழிபெயர்த்திருந்தார். சரிநிகர், நிகரி என வந்து பிறகு அதுவும் நின்றுவிட்டதால் அவர் அதைத் தொடரவில்லை போலும்! இந்த இரண்டு பிரதிகளுமே வாசிப்பைப்போலவே மொழிபெயர்க்கவும் மிகமிக இலகுவான பிரதிகள். எளிய ஆங்கிலம், கூடவே புட்டு, அம்மாச்சி போன்ற பல தமிழ் சொற்கள் மேலும் இலகுவாக்குகின்றன.


இது தவிர, எமது பரப்பில், படித்த ஒரு நூல்: ஹஸீன் என்கிற கிழக்குப் பகுதி தமிழ் இளைஞரின் ‘சிறியதும் பெரியதுமாய் எட்டுக் கதைகள்’ ( 2002 ). ரஞ்சகுமாரால் ‘முற்றுப்பெறாத நாவலின் முதற்படி’ என எழுதப்பட்டிருக்கிற இந் நூலின் இறுதிப் பகுதி ஒரு குறுநாவல்: அதன் பெயர் ‘பூனை அனைத்தும் உண்ணும்.” சொந்த அனுபவங்கள் ஆக இவை சொல்லப்பட்டிருந்தாலும், சியாம்போல இவர் ஓரினச்சேர்க்கையாளர் அல்ல. இந்தத் தலைப்பின் பிரகாரமே தொடர்ந்தோமானால், இக் குறுநாவலில் வருகிற கதாபாத்திரம் இருபால்உறவாளர். அவருக்கு ஒரு வயதுகூடிய ஆணுடன் உறவிருக்கிறது. அதேநேரம் பள்ளியில் படிக்கிற ஒரு மாணவிமீது ஈர்ப்பும் இருக்கிறது!

ஏற்கனவே சியாமைப் படித்திருந்ததால், அவரது முதல் நாவலில் ஒரு கதையான ‘பன்றிகளால் பறக்க முடியாது’ என்ற பிரதி ‘பூனை அனைத்தும் உண்ணும்’ என்பதை வாசிக்கிறபோது நினைவுவந்தது. ஹஸீன் Funny Boy படித்திருக்கவேண்டுமென்பதில்லை. ஆனால் சமூகத்தில் பேசப்படாத ஒரு பாலுறவை பேசும்போது (‘வக்கிரக் காமத்தை’ப் பேசுகிறதுபோதும்!) படைப்பாளிகள் தம்மை மிருகங்களுடன் ஒப்பிடுவதன் பின்னணி பற்றி நினைக்கத் தோன்றிற்று.

சியாமும் சரி, ஹஸீனும் சரி தங்களுடைய பாலியல் தேர்வை குறியீடாக்கும் போது ‘பன்றிகளால் பறக்க முடியாது’ என்றும், “பூனை அனைத்தும் உண்ணும்” என்றும் மிருகங்களுடன் அத்தேர்வை ஒப்பிடுகிறார்கள் (சியாம், தனது ‘சமர்ப்பணக்’குறிப்பில் ‘பன்றிகளால் பறக்க முடியும் என நம்பிய எனது பெற்றோருக்கு’ என்பதூடாக அதைத்
தான் முறியடித்ததைத் தெரிவிக்கிறார்). இரு பிரதிகளிலும் சியாமிடம் இருப்பது வலி மிகுந்த ‘புறக்கணிக்கப்பட்ட’ ஒரு குழந்தையின் தேடலும், தான் ‘வித்தியாசப்பட்டுப்போனதற்கான’ குற்றஉணர்ச்சிகளும். மாறாக, ஹஸீனின் பிரதியில் அத்தகைய உணர்வுகள் எதுவும் இல்லாததும் -இவை கலந்துபேசப்படாத தமிழ்ச் சூழலில்- படு அலட்சியமாக தனது கதாபாத்திரத்தின் பாலியல்தேர்வுகளை ஹஸீன் எழுதியிருப்பதும், அவரது சமூக அச்சமின்மையும் மகிழ்ச்சி அளிக்கிற விடயங்கள்.
இன்னொருபுறத்தில் இருபாலுறவாளர்கள் பாலியல் ஒடுக்குமுறைக்கு உள்ளாகிறவர்கள் என்கிற வகைப்பிரிப்புக்குள் அடங்கார்கள் என்பதையே இது காட்டுகிறது. ஏனெனில், அவர்களுக்கு சமூகத்துடன் ‘ஒத்துப்’ போகக்கூடிய உறவும் இருக்கிறது; அது அவர்களுக்கு ‘வதை’யும் இல்லை. தமிழில், பெண்களுடைய பிரதிகளில், உமா மகேஸ்வரி, யாரும் யாருடனும் இல்லை (தமிழினி பதிப்பகம், 200?) என்கிற நாவலில் அதில்வருகிற அண்ணி கதாபாத்திரத்திற்கும் பதினாறு பதினைந்து வயதுகளில் இருக்கக்கூடிய பெண்ணிற்குமிடையேயான உடல்ரீதியான உறவு மறைமுகமாக எழுதப்பட்டிருக்கிறது (ஓரினஈர்ப்பைப் பற்றி வெளிப்படையாக எழுதப்படவேண்டுமென்பது தவிர, இது ஒரு தனிநபரை
மற்ற சிறுபான்மையினர்போல பாதிப்புக்குட்படுத்தப்போவதில்லை என்றே நினைக்கிறேன்.).

மற்றப்படி, பெண்-ஓரினச்சேர்க்கையாளர்கள் என்றதும் மடோனாவும் பிரிட்னி ஸ்பியர்ஸ் உம் முத்தமிட்ட காட்சிதான பலருக்கு இவர்கள் பற்றிய ஒரு பதிவாக கண்முன் வரலாம்; இணையத்தில் எல்லையற்ற பக்கங்களில் காணக்கிடைக்கிற உறவுகொள்ளும் ‘கிளுகிளுப்பான’ இருபெண் உடல்களே பலருக்கு ‘இது’வாக இருக்கலாம். இன்னமும் அமெரிக்க பதின்மக்காரிகளிடையே தமது காதலன்களைப் பொறாமையூட்ட காதலிகள் வைத்திருப்பது பாஷன் என்றும் –அவர்கள் தம் தோழிகளை
முத்தமிட்டால்- ஆண்கள் பொறாமையடைவார்கள் என்றும் ஒரு myth இருக்கிறது.

இவற்றின் பின்னணியில், மாண்ட்ரீஸர் தனது பின்னூட்டமொன்றில் ஓரினச்சேர்க்கையாளர்களில் பெண்களை ‘sexy’ ஆயும் ஆண்களை விரோதத்துடனனும் பார்ப்பது தொடர்பாய்,
“...gays மீது உள்ள வெறுப்பு lesbians மீது இருப்பதில்லை. அது sexy என்பார்கள் - இது, ஆண்கள் சேர்ந்து உருவாக்கிய பிம்பம் என்றாலும், தவறிருக்கமுடிவதாகச் சொல்லமுடியாது” என்று எழுதியிருந்தார்.

ஜேன் றூல் போன்ற பெண்ஓரினச்சேர்க்கையாளர்களின் கட்டுரைகளைப் படிக்கிறபோது லெஸ்பியன்கள் அப்படியொன்றும் கவர்ச்சியான இடத்தில் இருப்பதுபோல படவில்லை (அவரது ஆரம்பம் 1970கள் என்பதையும் கவனிக்கவேண்டும்தான்). அவர்களும் தமது காதலிகளை மற்றவர்கள் (ஆண்களுங்கூட) ‘திருடிவிடுவதைப்’ பற்றி துயருறுகிறார்கள். இன்றைக்கும் பாரம்பரிய, கிறிஸ்தவ, மேற்கத்தையக் குடும்பங்களில் இது ‘ஏற்றுக்கொள்ளப்படாத’ ஒன்றுதான். தொலைக்காட்சியில் ‘ஓடிப்போன’ லெஸ்பியன்கள் பற்றிய செய்தி வருகிறபோது, தலையை ஆட்டி, தொலைக்காட்சியை நிறுத்திவிட்டு “யேசுவே! உலகம் எங்கு போய்க் கொண்டிருக்கிறது” என மறுகுகிற கறுப்பு/வெள்ளை நண்பர்களுள்ளார்கள்.
இணையத்தில் உள்ள பெருவாரியான போர்னோப் படங்கள் தருகிற லெஸ்பியன்கள்மீதான கவர்ச்சி முகம், அதன்மீதான ஆண்களின் ஈர்ப்பு, இதற்கு காரணமாய் ஒன்றிற்கு பதிலாக, இரண்டு பெண் உடல்கள் (சந்தையில் வடிவமைக்கப்பட்டவை!) புணர்வதை பார்க்கிற இன்பம் என்பது தவிர வேறொன்றும் இல்லை. இத்தகைய ‘கவர்ச்சியான’ பிம்பங்களை ஹோலிவூட் படங்களும் பொப் பாடகர்களும்தான் உருவாக்குகிறார்கள். ஆனால், பெண்களும் கூட
entertainment business இல் இருப்பவர்கள் தாம் பெண்ஓரினப்புணர்ச்சியினர் என்பதை அறிவிப்பதில்லை என்பதை கவனிக்கலாம் ((Rosie O.Donnell); ஆண்களுக்குத்தான் இது (பெண் இரசிகைகளை இழக்கிறது போன்ற) பிரச்சினை என்றால் ஏன பெண்கள் அதை பகிரங்கப்படுத்தத் தயங்குகிறார்கள்? என்கிற கேள்வி எழுகிறது.

இன்றைக்கு ‘அவர்கள்’ இல் ஒருவளான மெலிஸா எத்திறிட்ஸின் பாடல்கள் எனக்குப் பிடித்திருக்கிறது. தான் காதலுக்கு உரியவள், காதல்வசப்பட தகுதியானவள், தனக்கு காதலை நிராகரிக்க நீங்கள் யார் என்றெல்லாம் அவள் பாடுகிறாள். இதிலிருக்கிற காதல் என்னை/உங்களை காதல்வசப்படுகிற எல்லோரையும் அவளுடன் இணைக்கும்; அதற்கு வித்தியாசங்கள் இல்லை!


என் ஜன்னலருகே வா,
தவழ்ந்து, உள் நுழைந்து
நிலா வெளிச்சத்தில் காத்திரு
சீக்கிரம் வீடு வருவேன்!

நான் தொலைபேசியில் எண்களை சுழட்டுவேன்
உன் சுவாசத்தை கேட்டிருக்க மட்டுமாய்
என் நரகத்துள்ளே நின்றபடி
மரணத்தின் கரங்களை பற்றிநின்று
இந்த பிரத்தியேக வலியை லேசாக்க
உனக்குத் தெரியாது – நான்
எவ்வளவு தூரம் போவேன் என்பது.
உனக்கத் தெரியாது
உனக்கு
நான் எவ்வளவைத் தருவேன்
அல்லது எடுப்பேன் என்பது- எல்லாம்
உன்னை அடைய.
உன்னை அடைய
உன்னை அடைய

...
கண்கள் திறந்து வைத்தபடி
என்னால் தூங்கத்தை வாங்க முடியவில்லை
வாக்குறுதிகளைத் தருகையில்
தெரியும் அவற்றை காப்பாற்ற முடியாதென்பதும்.
என் நெஞ்சுள் வடிந்த இருளை
எதாலும் போக்க முடியவில்லை;
என் இரத்தத்துள் நீ வேண்டும்
எல்லாவற்றையும் நான் கைவிடுவேன்
உன்னை அடைய
உன்னை அடைய
ஓ! உன்னை அடைய

இவர்கள் என்னை நினைக்கிறார்கள் என்பது எனக்கு கவலையில்லை
இவர்கள் என்ன சொல்கிறார்கள் என்பது எனது கவலையில்லை
சரிதான்! இவர்களுக்கு இந்தக் காதலைப் பற்றி என்ன தெரியும்’


‘என் ஜன்னலருகே வா’ என்ற இந்தப்பாடல் லெஸ்பியன்கள் மத்தியில் மிகப் பிரபலமானது என்று ஒரு பேட்டியில் இவர் சொல்லியிருந்தார். முக்கியமாக, ‘இவர்களுக்கு ‘இந்தக் காதலைப் பற்றி’ என்ன தெரியும்’ என்ற பாடலின் இறுதி வரி அவர்களுக்குப் பிடிப்பதாக அவர் மேலும் சொன்னார். உண்மைதான் தமது காதலையே திருமணத்திற்குப் பிறகு முடித்துவிடுகிற, சொத்துக்களையும் வாரிசுகளையும் ‘சேர்க்கப்’ போய்விடுகிற ‘இவர்களுக்கு’ இந்தக் காதலைப் பற்றி மட்டும் என்ன தெரியும்?
===================

இந்த இவர்கள் குறித்த ‘உரையாடலை’ நான் முடிக்க நினைக்கிறபோது, எனது தோழியொருத்தி நான் ஏற்கனவே படித்த கவிதையை ‘இது ஒரு லெஸ்பியன் பெண்ணுக்காக எழுதப்பட்டது” என்று தந்தபோது, அதன் முழு அனுபவமும் மாறிப்போனதை பகிர்ந்து முடிக்கலாம் என நினைக்கிறேன். இதை விட முடிப்பதற்கு வேறு பிரதிகள் தேவையில்லை. இந்தக் கவிதையை மைதிலி எழுதியிருக்கிறார். எந்தக் குறிப்புமின்றி பார்க்கிறபோது இதற்கு வலு இல்லை. ஆனால் தனது ஆசிரியர் ஒருவரிடமிருந்து ‘பிரித்து’ பெற்றோரால் (சமூகக் காவலரால்?) வன்கூவர் (கனடாவில் இன்னொரு மாநிலத்திலுள்ள நகரம்) கொண்டு செல்லப்பட்ட அவ் ஆசிரியரின் காதலி பிரிவிலும் அடக்குதலின் அழுத்தத்திலும் அங்கே இறந்துபோய் (தற்கொலை?) விடுகிறாள். அவளது புதைகுழி இருக்கிற இடம்கூட கனடாவின் எதிர்முனையில், இந்த மாநிலத்தில் இருக்கிற இவரிற்கு தெரியாது (இன்னமும்).


நினைவு
-மைதிலி

கைகளில்
குளிர்மையாய் ஏதோ படத்
திடுக்கிட்டுப் போனேன்

உன் கண்ணீரோ?

இப்போது எங்கே இருக்கிறாய் நீ?
குளிர்காலம் முடிந்து விட்டது
நீர் நிறைந்த சிறு குட்டைகளிலெல்லாம்
லூண் பறவைகள்

வெப்பமும் வியர்வையும்
எல்லோரையும்
தூசும் மரங்களும் நிறைந்த
பூங்காக்களுக்கு விரட்டுகின்றன
போன கோடையில்
உன் கருப்பையில்
என் முலைகள் அழுந்த...
காமம் வற்றிப் போயிற்று
இன்று

கடைசியில்
ஒரு மலாச் செண்டையோ
ஒரு கவிதையையோ கூட
உன்னிடம் தர முடியவில்லை
எனைவிட்டு
உன்னுடல் சுமந்து சென்றது விமானம்
ஜோ-ஆன்
வான்கூவரில்
எந்தப் புதைகுழியில் தேடுவேன்
உன் உறைந்துபோன புன்சிரிப்பை
0
நன்றி: இரவில் சலனமற்றுக் கரையும் மனிதர்கள் (2003)
கவிதைத் தொகுப்பு, காலச்சுவடு பதிப்பகம்

II- ஓரினச்சேர்க்கையாளர்களைப் புரிந்துகொள்ளுதல் பற்றி...

‘பெல்ஜியம், நெதர்லாந்து போன்ற ஆக இரண்டே நாடுகளைப்போல கனடாவும் விரைவில் ஒருபால்மணத்தை ஆதரிக்கிற நாடுகளில் ஒன்றாகும்’ என பழைய பிரதமர் ஜான் கிறச்சியன் (2003 இல்) ஒருமுறை சொன்னார். அதற்கு 50/50 ஆக சார்பாயும் எதிர்வாயும் அவரது கட்சிக்குள்ளேயே வாதங்கள் எழுந்தன; அப்போது பிரதமருடன் உடன்பட்டவர்களில் ஒருவர் தற்போதைய பிரதமர் போல் மார்ட்டின். இவர், இப்போ இத் தலைப்பை விவாதத்துக்கு (debate) விட்டிருக்கிறார் (இதைக் ‘கோழைத்தனமாக நிலைப்பாட்டு மாற்றம்’ என ஒருபால்திருமண ஆதரவாளர்கள் எழுதியுள்ளார்கள்); வரும் தேர்தலில் ஒருபால்மணத்தை ஆதரிப்பதில் தனது பதவி பாதிப்புக்குள்ளாகலாம் என்பதாலேயே இந்த மாற்றம். சில கணக்கெடுப்புகளில் இந்த ஒரேவிடயங் காரணமாக லிபரல் கட்சிக்கான ஆதரவும் குறைந்துள்ளதுதான். தற்சமயம், pass பண்ணப்பட்டுள்ள bill பலத்த விவாதங்களுக்கு உள்ளாகியிருக்கிறது. ஆளும் கட்சியினர் தமது லிபரலான கருத்துக்களை; தம்மீது திணிக்கும் மற்றொரு நிகழ்வாகவே தேவாலயங்கள் இதைப் பார்க்கின்றன; உதாரணம்: இச்சட்டம் அமுல்படுத்தப்படுமாயின், இது மத உரிமைகளை பாதுகாக்காது. ஒரு மதபோதகரோ அரசாங்க பதிவாளரோ ஒருபால் ஜோடிக்கு திருமணம் செய்து வைக்க மறுப்பாரானால், அவரை மனித உரிமைகமீறல் சட்டங்களின்கீழ் கொண்டுவந்து நிறுத்திவிடுவார்கள் ஓரினச்சேர்க்கை ஆதரவாளர்கள், இவ்வாறு அச்சம்(!) தெரிவிக்கிறார்கள். இதற்கு வலுசேர்க்கும் முகமாக பிரிட்டிஷ் கொலம்பியாவில் 2003 இல் ஓர் பெண் ஓரினச்சேர்க்கையாளரது திருமணத்திற்கு ஹோலை வாடகைக்குத் தர மறுத்தவரை அப் பெண்கள் sue பண்ணியது போன்ற சம்பவங்களை நினைவூட்டுகிறார்கள். இதற்கு நீதியமைச்சர் இர்வின் கொட்லர் இத்தகு பிரச்சினைகளை எப்படி எதிர்கொள்வது என்பதையிட்டு ஒவ்வொரு மாநிலமும் தயாராகவே இருக்கிறது, அதை பெரிதுபடுத்தத் தேவையில்லை என்று கூறியிருக்கிறார்.
பல்வித முரண்பாடுகளுள், இந்த ஜீன் மாதத்திற்குள் அதை சட்டமாக்கி அமுல்படுத்த முனைகிறார்கள். மார்ச் இல் நாடாளாவிய ஓரினச்சேர்க்கையாளர்களது திருமண-ஆதரவிற்கான பாராளுமன்றக் கணக்கெடுப்பு நடைபெறும். சாத்தியப்பட்டால் மனித உரிமையை ஒத்துக்கொள்வதில் கனடா மூன்றாவதாக ஆகிற பெருமை சேரும் (இதுவரையில் கனடாவில் 10 மநாநிலங்களிலும் (province) 3 territories இலும்-
Ontario, British Columbia, Quebec, Alberta, Nova Scotia, Manitoba, Newfoundland/Labrador ஆகிய (8) மாநிலங்களிலும், Yukon territory இலும் ஓரினச்சேர்க்கையாளர்கள் திருமணம் செய்ய உரிமை உள்ளது (திருமணத்தால் மற்றத் துணைக்கு வருகிற உரிமைகள் அல்ல, திருமண உரிமை மட்டும்)).

ரொறன்ரோவில இருந்தபோது, பொதுவாக ஒருமுறையேனும் இந்த gay/lesbian pride parade இற்கு போயிருப்பம், சும்மா விடுப்புப் பார்க்க எண்டாலும். எமக்கு அழகான ஆண்கள் கே(G)கள் என நாம் துக்கித்தும், மாறி, ஆண்கள் தமக்கு அழகான பெண்களை லெஸ்பியன்கள் என துக்கித்தும் அவர்களுடைய கொண்டாட்டங்களை பாத்துவருவதுதான்... மற்றவர்கள் உரிமைகளை மதித்தல் தொடர்பாய் நாங்கள் எங்களை எவ்வளவுதான் தயாரானவர்களாய் வைத்திருந்தாலும் ‘மதித்தலும்’ புரிதலும் வேற வேற கட்டங்கள்தான். மனதார, இதயத்தால ஒன்றை உள்வாங்குவது இலகுவல்ல.

அவர்களுடைய குரல் ஒலிக்கிற இலக்கியங்களோ படங்களோ வெகுசனஅளவில் சொற்பம். அதுவும் (மேற்கிலும்) உயர்பாடசாலைகளில் படிக்கிற மாணவர்கள் ‘இயோ(ஓ!)’ என ஒரு அருவருப்புறுதலுக்கும், சைகைகளுடன் கூடிய சிரிப்புக்குமுரிய விடயம்தான் ‘அவர்கள்’. கனடாவில் பெண்/ஆண் ஓரினச்சேர்க்கையாளர்களை மாணவர்கள் சேர்ந்து தாக்குவதும் செய்திகளில் வருகிற விடயமே. சின்னவகுப்புகளில் இந்த ‘வித்தியாசங்களை’ விளங்கப்படுத்த முயலாத பாடத்திட்டங்கள், பூர்வீகக்குடிகள் பற்றியும் பால்பேதங்கள் பற்றியும் பல்கலைக்கழகங்ளில் கற்பிக்கத்தொடங்குவதில் ஆரம்பிக்கிறது சமூக கட்டுமானத்தின் திட்டமிட்ட அசட்டையீனம்.

ஒரு காலத்தில், ‘அவர்கள்’ பற்றிய அறிதலை எனது ‘ஆகா நான் அவர்களை மதிக்கிற அளவு ‘உயர்ந்தவளாய்’ ஆகிவிட்டேனே’ மனோநிலையில், பூரிப்பில், சனநாயகவாதியாய் தென்பட்ட என்னிலும் பெரியவரிடம் பேசியபோது அது எனக்கு நல்ல அனுபவமாய் இருக்கவில்லை. அவர் சொன்னார்: "பிள்ளை, உனக்கு உதுகள் தெரியாது. உதுகளுக்கல்லாம் முறைகள் இருக்கு." நான், புரியாமல், ஏதோ அவர்களுக்கு உதவுவது தொடர்பாய், அவர்களுக்கு ‘சார்பாய்’ கதைக்கப்போறார் என, "என்ன அது?” எண்டு கேட்க, "பிள்ளை! நீ இதுகள் கதைக்கக்கூடாது. உனக்கு யாரையும் தெரியுமெண்டா சொல்லு. உரிய ‘முறையள்’ இருக்கு. ‘சரி’ப்படுத்தீரலாம்" என்று சொன்னார். என்னிடம், பதிலாய் ‘முறைகள்’ ஐ அவர் உச்சரித்த விதத்தில் மெல்ல பயம் பிடித்தது. அவரோ படு நிதானமாக அதைச் சொன்னார், ஏதோ அது அவரது கடமையைப்போலும்... (இப்பவும் அந்தத் தொனி, அதன் சாந்தம் பயமா இருக்கு!)

எமது -வெகுசன-சிற்றிதழ்- சூழலில்- பயர் (Fire) வந்ததும், கணிசமான அளவு பேசினார்கள்; எதிர்த்தோ நக்கலாவோ இது தொடர்பாய் உரையாடப்பட்டது. படத்தில், எனக்கு, உயிரியல்ரீதியாய் விட, ஒரு தேர்வா பெண் ஓரினச்சேர்க்கையை காட்டினது தொடர்பாய் கேள்வி இருந்தது (மோசமான ஆண் அனுபவங்களை உடைய மற்றும் பல அதிதீவிரப் பெண்ணிலைவாதிகள் மேற்கில் இந்தப் ‘பாலியல் தேர்வை’ தேர்கிறார்கள் என்பது உண்மையென்றபோதும், சாதாரண இரண்டு பெண்கள் அதை just like that ஆய் தேர்வது படத்தில் பொருந்த/சரியாய்வரவில்லை.) எதிர்ப்பு படத்திற்கு பெரியளவில் இருந்தபடியால் அதன் தரம் பற்றி யாரும் பேசவில்லை. குமுதத்திலோ ஆனந்தவிகடனிலோ நடந்த ஒரு விவாதத்தில் கலந்துகொண்ட ஒரு பெண்மணி கூறினா "அவ (தீபா மேத்தா) மேற்குக் கலாச்சாரப் பெண், அது இங்க தேவையில்ல. தடைசெய்யத்தான் வேணும்" என்று. அதற்கு அருமையான ஒரு பதில மங்கை சொன்னா: "மேற்கின் பெப்ஸி, கொக்கக் கோலா முகக் கிறீமுகள் எல்லாம் எங்களுக்கு வேணும் ஆனா இது வேணாமோ" என்று.

சரிநிகர் பத்திரிகை, புதிய கலாச்சாரமோ, நிறப்பிரிகையோ வெளியிட்ட கட்டுரையை மறுபிரசுரம் செய்தது (ஐயப்பனும் ஓரினச்சேர்க்கையாளரா இருக்கலாம் என்றெல்லாம் அதில எழுதியிருந்தார்கள்). புதிய புதிய அறிதல்கள். புதியவற்றுக்த் தயாரான மூளையுள் அவர்களது உரிமைகள் பதியப்பட்டு நான் அவர்களை புரிந்துவிட்டேன் என்றும் எனது புத்திஜீவிதத் தன்மைக்காகவும் மிகவும் சந்தோசப்பட்டுக்கொண்டுதான் திரிந்தேன் - எனது உறவுகள் சகோதரர்கள் யாரும் அப்படி வந்தால் அதற்கு என் மனம் எதிர்வினையாற்றாது என்றும்!

ஆனால் டவுண்ரவுன் மாதிரி ஒரு நெருக்கடி மிகுந்த ‘அவர்களை’ அடிக்கடி காண நேர்கிற நகரத்தில் வாழ ஆரம்பித்த பிறகு எனது அறிவு என்னை ஏமாற்றிவிட்டது, மிக மோசமாக! அங்கே வாழ ஆரம்பித்த ஆரம்பத்தில், அந்தநேரம் எனது சகோதரன்/பிள்ளை யாரும் அப்படியானால் நான் எப்படி மனமுடைந்து போவேன் என்பது எனக்குப் புரிந்தது. சப்வேயில் பயணிக்கையில் நான் காணுகிற அவர்கள், முக்கியமாக அவர்களிலிருந்து வருகிற அந்த -எனது பிரம்மையாவோ பயமாகவோ- பெண்மணம், அவர்களை நோக்கிய பெண்களதும் பொடியளினதும் கேலிச் சிலிப்பொலிகள், இவைகளை எனது பிள்ளை/எனது இரத்தம் எதிர்கொள்ளவேண்டுமென்றபோது மனசு பதறத் தொடங்கியது.

குறிப்பிட்டளவு inform பண்ணப்பட்டிருந்த எனது பதற்றம் பயங் காரணமாக வந்த விடயம் (பயம் ‘அறியாமை’யின் காரணமாக). அது அவர்களது ‘வித்தியாசத்தை’ அவர்களுக்கு பின்னே ஒலித்த குரல்களை, நேரடையாய் பார்த்ததன் விளைவும். அந்த சமயம், அந்தப் பதற்றத்தை தவிப்பை ஆற்ற தமிழில் இந்த சிறுபான்மை குரல்களால் எழுதப்பட்ட எந்த இலக்கியத்தையும் படிக்க கிடைக்கவில்லை. இதன் அர்த்தம் தமிழில் ஓரினச்சேர்க்கையாளர்கள் இல்லை என்பதா?! (பேசப்படாத எதுவுமே தமிழில் ‘இல்லை’ என்றுதான் பொதுமனம் நம்புகிறது. ஒருவரிடம் தந்தையால் பாலியல் வன்முறைக்குட்படுத்தப்பட்ட பெண் பற்றிக்கூற ‘எங்களிட ஆக்களுக்குள்ள இதுகள் இல்லை என!’ என்று பெருமைப்பட்டு அவர் வாய் மூடமுன், ‘எங்களுக்குள்ளதான்’ என நான் சொல்ல அவர் அதை ‘இருக்கவே இருக்காது’ என மறுத்துவிட்டுப் போனார்!) படிக்கிற காலத்தில், ஈழத்தில் பெண்கள் விடுதிகளில் இரண்டு பெண்கள் தொடர்ந்து ஒன்றாய் திரிந்தாலே கூப்பிட்டு ‘எச்சரிக்கை’ கொடுப்பார்கள். தொடர்ந்து ஒட்டிக்கொண்டு போனால், நெருக்கமாய் திரிந்தால் அது ‘ஒரு மாதிரி’ப் பார்க்கப்பட்டதோடு அப்படித் தனியே விடார்கள். ஆண்களிடையேயும்; இராணுவங்களில், விடுதிகளில் இந்த உறவு இருக்கிறது; பெண்களது விடுதிகளிலும் இந்த உறவு இருக்கிறது. ஒவ்வொரு பழைய மாணவர்களிடமும் கேட்டால், தங்களது ஆசிரியர்களிடமிருந்தோ வளர்ந்தவர்களிடமிருந்தோ உறவுக்காரிகளின் கணவர்களிடமிருந்தோ வந்த அதிர்ச்சி தரும் ‘அனுபவங்களில்’ ஒன்றேனும் நினைவுகூருவார்கள்.
ஆனால் நமது இலக்கியப் பிரதிகளில்?1998 இல் சியாம் செல்வதுரை எழுதிய அவரது இரண்டாவது நாவல் படித்தேன். 1920 களில் வாழ்ந்த, ஒரு பெண்ணிற்கு மணமுடித்துவைக்கப்பட்ட ஓரினச்சேர்க்கையாளனின் அந்தக் காலப் பின்னணியில் எழுதப்பட்ட
Cinnamon Gardens என்கிற நாவலே அது. அது படித்தபிறகு ‘அவர்கள்’ பற்றிய எனது மனோநிலை, நியாயமற்ற வெறும் பயம் ((Homophobia) என்னிடமிருந்து போனது – அது தனது குரலை, எழுத்தாளரின் எந்த இடையீடும் இன்றி, ‘அப்படியே’ பதிவுசெய்திருந்தது.

காலம்: 1920கள்.
கதைக்களன்: கறுவாத்தோட்டம். கொழும்பில், உயர்வர்க்க, ‘தமிழ் தெரியாத’ தமிழர்கள் வாழுகிற ஒரு பகுதியின் பெயரே
Cinnamon Gardens. இவர்களை ‘கறுவாத் தோட்டத் தமிழர்கள்’ என அழைப்பார்கள். இங்கேதான் பாலேந்திரன் என்கிற ஓரினப்சேர்க்கையாளன் வாழுகிறான். அவனுடைய அப்பா முதலியார், லண்டனில் படிக்கப்போன மகன் இன்னொருவனுடன் வாழுகிறான் என்பதறிந்து அவனை பிரித்துக் கொண்டுவந்து, திருமணம் செய்துவைத்து, குடும்ப வியாபாரம் இன்ன பிறவை நிர்வகிக்க வைத்து விடுகிறார். பாலேந்திரன் -லண்டனில் நடந்ததுபோல மீண்டும் ஒருமுறை- தான் மிக மிக நேசிக்கிற, தனது அப்பாவின் கௌரவத்திற்கு பங்கம் விளைவிக்கக்கூடாதே என்று தனது பாலுணர்வு சார்ந்த குற்ற உணர்ச்சியுடனே –காதலனை லண்டனில் பிரிந்ததற்குப் பிறகான- மீதிக் காலத்தைக் கழிக்கிறான். தான் தனது அப்பாவின் எதிர்பார்ப்பை –முன்பு குறைத்ததுபோல- குறைத்துவிடவே கூடாது என முயன்று வெற்றியும் பெறுகிறான், தனது மனைவிக்கு சுற்றம் சூழலுக்கு தான் ஒரு ஓரி.சேர்க்கையாளன் என்கிற விடயத்தை மறைத்தும் விடுவதில் முதலியாருடன் சேர்ந்து வெற்றியும் காண்கிறான். அவனது ஆழ்மனம் விடுபட்ட நினைவுகளில் வாழ்ந்துகொண்டே இருக்கிறது. அவனைப் பொருட்டின்றி நகர்கிற காலத்தில் அவன் இல்லவே இல்லை. நண்பனுடன் பிறகு தொடர்பில்லை, இரவுகளில் எழுந்து கடற்கரைப் பகுதியில் ஒரு இளம்பெடியனுடன் தனது பாலுணர்வை தீர்த்துக்கொள்ளும் அவன் வீடு திரும்புகையில் குற்றஉணர்ச்சியுடனே திரும்புகிறான். தனது பாலியல்தேர்வு குறித்த, தான் ‘தவறாய்’ நடப்பது குறித்த, தான் தனது துணையை துரோகிப்பது குறித்த, குற்ற உணர்ச்சிகள்... இப்போது இவனுடைய மகன் லண்டனில் படிக்கிறான். தம்பதிகளுக்கிடையே தனிமை. ஏதோ நிமித்தம் வருகிற ‘லண்டன் காதலன்’ அப்போது அவனை மீள சந்திப்பது குறித்த இவனது மனஓட்டங்கள், அந்தத் தவிப்பு ... (அது எமது காதலை நாம் சந்திக்கும்போது இருக்கிறதுபோலவே இருக்கிறதே...).
...
இதற்கிடையில் 20களில் வீட்டைவிட்டு, வேலைக்காரப் பெண்ணுடன் இந்தியாவுக்கு ஓடிப்போன தகப்பனால் ‘தலைமுழுகப்பட்ட’ அண்ணனிற்கு வருத்தம் என்று தகவல் வருகிறது. தன்னைமீறிப் போனவனைப் பார்க்க, தகப்பன் தான் போகப்போவதில்லை என்று அவனது உடலை மட்டும் இங்கே கொண்டு வா, இங்குதான் ‘முதலியார் பையன்’ புதைக்க வேண்டும் என இவனை அனுப்புகிறார். நீண்ட வருடங்களிற்குப் பிறகு சந்திக்கப் போகிற அண்ணன் -அவனுடனும் அவனுடைய ‘வேலைக்கார’ மனைவியுடனும் சிறுவயதில் அவனுக்கு நல்ல உறவு இருந்ததில்லை- அவனுடைய குடும்பத்தினர் - அவர்களுடன் அவனுடைய இறப்பின்பின் பிணத்தை இங்கே கொண்டு வருவது பற்றி எப்படிக் கதைப்பது? குழப்பங்களுடன் போகிறான்.
இவனை அழைத்துப் போக வரும் அண்ணனின் மகன், புலமைப்பரிசில்களின் துணையுடன், லண்டனில் வைத்தியருக்கு படித்துக்கொண்டிருக்கிறான், இப்போது அப்பாவைக் கவனிக்க வந்திருக்கிறான். ஏழ்மையின் நெரிசடி மிகுந்த அந்தக் குடியிருப்பில் காண நேர்கிற அண்ணன். அவனது மரணம்வரையில் அவனது அண்ணனுக்கும் அவனுக்குமிடையே நிகழ்கிற உரையாடல்கள்... அண்ணன் ‘உனது வாழ்க்கை எப்படி இருக்கிறது’ எனக் கேட்க, இவன் ‘அதற்கென்ன நன்றாகப் போகிறது’ எனுவான். ‘இல்லை. நான் கேட்பது அதையில்லை’ என்ற அண்ணன் பதில் சொல்லுவான், இவனுடைய கண்களை கூர்ந்து பார்த்தபடி. இவன் ‘எதைப் பற்றிக் கேட்கிறாய்’ எனக்கேட்க, ‘எனக்குத் தெரியும்’ என அவன் சொல்லுவான்! அதற்குப்பிறகான அண்ணனுடனான உரையாடல்கள் தகப்பன் பற்றிய பாலேந்திரனின் எண்ணற்ற கற்பிதங்களை உடைக்கிறது. ஒவ்வொருவிடுமுறையும், யாழ்ப்பாணம் செல்கையில், ஏழைப் பெண்களை நாடுவதும், அப்படி ஏழையான விதவைப் பெண்ணை வீடு அழைத்து வந்து, அவர்களை 'கவனிக்கும்' நல்ல பெயரும் வாங்கி, இயலாமையை பயன்படுத்தி அவளுடன் உறவு(?) வைத்தபடி, பின்னர் அவளது மகளையும் உறவுகொள்ள திட்டம்வைத்திருந்தார். அவரது மகனோ, அந்த மகளை ‘காதலித்து’ விட்டான். இதுதான் அவன் செய்த குற்றம். ‘அப்பாவிற்கு நான் அவளுடன் அவளுடைய அம்மாவுடன் அவர் செய்ததுபோல ‘கள்ள உறவு’ வைத்திருந்தால் ஒத்துக்கொள்ளக்கூடியதா இருந்திருக்கும் (சிரிப்பு) அவளை நான் ‘காதலித்ததே’ நான் செய்த தவறு. இதனால் முதலியார் வம்சத்திற்கே பெரும் அவமானம்!”
அண்ணனுடனான உரையாடலின் பின் அவர்கள் வீட்டருகே இருக்கிற கடற்கரையில் கடலைப் பார்த்தவண்ணம் நிற்பான் பாலேந்திரன். பயங்கர மௌனம் கவ்விற பக்கங்கள்...
அந்தக் கணங்கள் -பாலேந்திரன் என்கிற- அவனைவிட எனக்குக் கொடுமையானதாயிருந்தது. இறக்கப்போகிற அண்ணன் வாழ்வின் முழுமையுடன் இறக்கப்போகிறான். இடுங்கிய சிறு அறைகளிலோ ஏழ்மையிலோ அவன் வஞ்சிக்கப்படவில்லை, காதல் துணை, பிள்ளையின் கல்வி, எல்லாம் சாத்தியப்பட்டு முடியப்போகிறது. ஆனால் பாலேந்திரன்?!
ஒரு சமூகக் கள்ளனான முதலியாரை please பண்ண பாலேந்திரன் இழந்தது அவனது காதல், அவனது இயற்கையான பாலுணர்வுவேட்கை, அவனது வாழ்க்கை. சமூகத்தின் ஒழுக்க விழுமியங்களை கட்டி எழுப்புகிற முதலியார் போன்ற கள்ளன்கள் எதையும் இழப்பதேயில்லை, துணைக்குத் தொடர்ந்தும் வேறும் துரோகங்கள் பல செய்துகொண்டே இருக்கிறார்; அது குறித்து குற்றஉணர்ச்சி அவனுக்கு இருக்கப் போவதுமில்லை.

பாலேந்திரனோ தனது வாழ்வின் நடுப்பகுதியிலும் குற்றஉணர்ச்சியால் உழல்கிறான். அது அவனை ஒரு வதைபோல தொடர்கிறது. இயற்கையாய் வந்த தனது பாலியல் தேர்வுக்காய் தன்னையே தண்டித்துக்கொள்கிறான்.

மறுபுறத்தில், காலகாலமாக பாலியல்சார் ஒழுக்கங்களை (ஒன்றே திருமணம் ஒருவளே துணை என்றபடியும்) அதை மீறிக்கொண்டே இருக்கிறார்கள் ‘சமூகக் காவலர்கள்’ . இந்தக் கள்ளன்கள் வாழ்வில் எல்லாவித உல்லாசங்களையும் அனுபவித்து –மற்றவர்களுடையதை நிர்மூலமாக்கி- த்தான் மடிந்துபோகிறார்கள்.

அண்ணா இறந்துபோகிறபின்பு நாடு திரும்புகிற பாலேந்திரன், தனக்கும் தனது தகப்பனுக்குமான உறவில் ‘இனிமேல் எதுவும் முன்பு போல இருக்கப்போவதில்லை’ என உணர்கிறான். அப்பாவிடம் எதிர்ப்பாக நிற்கிறான். வீடுவந்து லண்டன் நண்பனுக்கு மன்னிப்புக் கடிதமும் எழுதுகிறான். அப்புறம் தனது துணையை காதலிக்கவில்லையே ஒழிய தான் அவளை நேசிப்பதை வாஞ்சையுடன் நினைத்துக்கொள்கிறான். அவனிடம் ஒரு நிம்மதி பரவுகிறது. செற்றியில் சாய்ந்து கொள்கிறான்.

அத்துடன் அவன் பற்றிய அந்தக் கதை முடிகிறது (வேறு உபகதைகள் தொடர்கின்றன).

இந்த முடிவில் எனக்கு தாங்கமுடியாத கோபம் வருகிறது. பாலேந்திரனுக்கு அவனுக்குரியதான தான் விரும்பியவனுடன் உறவுகொள்ளும் உரிமை கிடைக்கப் பெறவே இல்லை. அதுவோ 1920 ஆம் ஆண்டு. இப்போதும் உரையாடல்கள், விவாதங்கள், அவர்கள் மணமுடித்தலை சம்மதிக்க ஆக இரண்டே நாடுகள்!

ஆங்கிலத்தின் வந்த இப் புதினம் மனிதர்களின் (ஓரினப்புணர்ச்சியாளர்களின்) உளரீதியான வலியைச் சொல்லுகிறது. அவர்களுடைய துயரம், தங்களை பாலியல்ரீதியாக கவராத பெண்ணுடலுடன் வாழ வேண்டிய சமூக நியமனம் எம்மோடும் கூட ஏறி அறுக்கிறது. இத்தகையதொரு கருவை சியாம்போன்ற ஒருவரைவிட வேறு யாரால் அறுக்கும் வலியுடன் சொல்ல முடிந்திருக்கும்? அது ஒரு ஓரினப்புணர்ச்சியாளரால் எழுதப்பட்டிருப்பதால் ஏற்படக்கூடிய உணர்ச்சியல்லவா?
இந்தக் கதை படித்துக் கொஞ்ச காலத்துக்குப்பிறகு மீண்டும் ஒரு சமூகக் காவலரோடு பயணம் செய்தேன். அவர் எனது உறவினர். கனடாவில் முக்கியமான மாநிலங்களில் ஓரினப்புணர்சசியாளர்கள் மணம்செய்துகொண்டிருந்த, அவர்களது pride parade கள் வருடாவருடம் கோலாகலமாக நடந்துகொண்டிருந்த காலம். இவர் ஒரு பயண முகவராய் (இதைத் தவிர நான் வேற என்ன சொல்லவேண்டும்?) உலகமெல்லாம் சுற்றி, எல்லா நாட்டுப் பெண்ணுடலும் கண்டு, களைத்து நாடு வந்து சேர்ந்தார். அன்றைக்கு X.FM இல் ஓரினச்சேர்க்கையாளர் பற்றிய உரையாடல் நடந்ததா? தெரியவில்லை. ஏதோ ஒரு புள்ளியில் உரையாடல் அங்கு வந்து நின்றது. அவர் சொன்னார்: “ஓமடி முந்தி நல்ல நாடடி கனடா. இப்ப வந்து பார்த்தா என்னடி நடக்குது இங்க? கடவுளே! அமெரிக்காவில இந்த கூத்தெல்லாம் இல்ல. இங்க இருக்கவே வெட்கமா இருக்கு. இதுகளெல்லாம் ஊர்வலங்கூட்டி...”

“இங்க சியாம் செல்வதுரை எண்டொராள். அவர் நாவலள் எழுதியிருக்கிறார். அவரும் கே(G) தான்.”

‘ஓமாடி... (கேலிச் சிரிப்பு) ஐயோ!”

‘அவர் வந்து, தன்ர முதல் நாவல்ல 1983 கலவரத்த பற்றி எல்லாம் எழுதியிருக்கிறார்"

“(தொனி மாறல்) ஓ..”

"...ம். முக்கியமாக தமிழர்களுக்கு சார்பா எழுதியிருக்கிறார். இதுகள எழுத்தாளர்கள் சொல்லும்போது அங்கேத்தையான் பிரச்சினையளப் பற்றி ‘இங்கு’ கவனிக்கிறார்கள்”

(தொனி இன்னும் சீரியஸாய் மாறி) ”ஓமடி என? இங்க ‘எங்கட பிரச்சினையைப் பற்றி கவனிப்பாங்கள்’ என? ம்ம்ம்... அவர் எந்த இடம்?''
"கொழும்பு. தமிழ் தெரியாது ஆனா தமிழ் படிக்க இங்க try பண்ணினவர்”

அருகில் வந்தவர் பிறகு மலைப்புடன் வந்தார். நாங்கள் மனிதர்கள்தானே? ‘எங்கட பிரச்சினை’யை பேசினால் மட்டும் அவனது பால்உறவுத் தேர்வு பற்றிய ஆட்சேபனைகளை நிறுத்திவிடுவோம் என்ன! அவரது மௌனம்- அதை கொஞ்சநேரத்து வெற்றியாக உணர்ந்தேன். இறுக்கமாக அவருக்குப் பக்கத்தில் இருந்தபோது ‘சமூக அங்கீகாரத்தால்’ மட்டும் பாதுகாக்கப்பட்ட அந்த எழுத்தாளரின் மென்மையான முகம் கண்ணுக்கு முன்னால வந்து நின்றது. ஆனால் சமூகத்தில் அது எம்மாத்திரம்? துக்கமாய் இருந்தது.
என்னுடைய பயண முகவர் போல கள்ளன்கள் சமூகக் காவலன்கள் போல கேலிச்சிரிப்பும் நக்கலும் பண்பாட்டு கூவல்களும்தானே பத்திரிகைகளில்கூட வியாபித்திருக்கிறது? பத்திரிகைகள் ‘உலகத்தில என்னென்ன நடக்குதப்பா!!!’ போன்ற, கொச்சையாய், பொது இடத்தில் பேசுகிற விடயங்களையே, ஆசிரியர் தலையங்கமாய் போட்டால், பொதுப்புத்தியிடம் என்ன எதிர்பார்ப்பது? எமது பத்திரிகைகள் என்றில்லை, ஆங்கிலப் பத்திரிகைகள்கூட மத நிறுவனங்களின் ‘ஒரே பால் திருமணம் சரியென்பவர்கள் “இனி பலபேர்/தார திருமணத்தையும் (polygamy) ஏற்கச்சொல்வார்கள்” என எழுதுகின்றன. ஓரினச்சேர்க்கையாளர்களும், சுயநலமான, ‘உனக்கு நான் எனக்கு நீ’ மற்றும் பொறாமையுணர்ச்சிகள் சாதாரண உறவிலுள்ளதான சகலவும் உடைய ஜோடிகள் தான் என்பதை கவனங்கொள்ளாத இவைகளை என்னதான் செய்ய முடியும்?

பதிவுகள் இணைய இதழில், ரொறன்ரோவில் வருகிற விளம்பரம் என்கிற பத்திரிகையில் பரம்ஜீ என்பவர் இது தொடர்பாய் “மனித மிருகங்களையும் ஒரு கட்டுப்பாட்டுக்குள் வைத்திருக்க வேண்டும்” என்கிற சாராம்சத்தின் கீழ் எழுதியது தொடர்பாய் நிருபமா ராஜேந்திரன் எதிர்த்தெழுதியிருக்கிறார். அவருடைய மொழியில் உள்ள தலித் விரோதத்தன்மையை கற்சுறா கவனப்படுத்தியிருந்தார். எனக்கு, நிருபமா ரா., “திருமணம் என்ற பந்தமே தவறானது. இது எனது அடிப்படைக் கருத்து" என தனது எதிர்வினையை ஆரம்பிப்பது அநாவசியமாய்ப்பட்டது. இவர் திருமணத்தை ஆதரிக்கிறாரா இல்லையா என்பது இப்போது முக்கியமில்லை. திருமணம் பற்றிய விவாதங்களை பேசுகிற இடமுமல்ல இது. முதலில் அந்த உரிமை கிடைக்கவில்லை என்பதைப் பற்றிப் பேசுவோம் பிறகு அதன் உடைவுகளைப்பறறி, அதன் மாற்றைப் பற்றி. அடிப்படையில்லாமல் எப்படிப் பேசுவது? இணையத்தல் உள்ளவை தவிர பத்திரிகையில் வந்தவை படிக்காததால் சொல்லமுடியவில்லை. ஆனால் பொதுமனத்தில் இதனால் 'திருமணம் என்கிற பந்தமே தவறானது' என்கிற ஒரு அதிர்ச்சியில் மற்றொரு 'அதிர்ச்சியான' தலைப்பான -பேசப்படுகிற- ஒருபால்திருமணம் பற்றிய வாதம் கவனிக்கப்படாமற்போக வாய்ப்புள்ளது. மேலெடுத்துச் செல்லப்படாத இந்த கருத்தாடல்கள் பற்றிய ஒரு நல்ல விடயம், பொதுத்தளத்தில் சற்றேனும் பேசப்படுகிறது என்பது. தொடர்ந்தும், இது தொடர்பாய்; கனேடிய பாராளுமன்றம் மற்றும் ஊடகங்களில் விவாதிக்கப்படுகையில், புரிதலை ஏற்படுத்தும் விவாதங்களை உரையாடல்களை கனேடிய தமிழ் ஊடகங்களும் தொடர்ந்தார்களென்றால் நல்லது.

எல்லாவற்றுக்கும் அடிப்படையாய் ஒரு புரிதலோடு ஆரம்பிக்க வேண்டும்; -அவர்களை (யாரையும்) நாம் புரிந்துகொள்வது நிச்சயம் அவர்களுக்கு ‘நாம்’ செய்யிற ‘பெருந்தன்மையான’ விடயமல்ல. அது ‘எம்மை’ மனிதர்களாய் ‘ஆக்குகிற’ செயல்.
-குற்றஉணர்ச்சிகள் அடையவேண்டியவர்கள் அவர்கள் அல்ல, அவர்களைப் பற்றிய செய்திகளை, கீழ்த்தரமான பாலியல் கதைகளை பேசும் சுகம்போல பேசிக்கொள்வதை இட்டுத்தான், ஒவ்வொரு பத்திரிகைகளும் ஒவ்வொரு தனிமனிதர்களும் குற்றஉணர்ச்சி அடையவேண்டும்.
மறுபுறத்தில், இலக்கியங்களில், அவர்களது உளரீதியான, உணர்வுரீதியான ஓராயிரம் பகிர்வுகளை தம் பதிவுகளூடாக ஒரினச்சேர்க்கையாளர்கள்தான் முன்வைக்கவேண்டும். அவைகள்தான் உளவியல்ரீதியான தடைகளிலிருந்து மனிதரை விடுதலை
செய்யும். செய்ய வேண்டும்.

Saturday, February 19, 2005

I- யாருடைய துரோகம்?


thanks

‘வித்தியாசங்கள்’ உறுத்தலாக இருக்கின்றன; அவை கேலிக்கும் தனிமைப்படுத்தலுக்கும் உள்ளாகுகின்றன.


இந்த முறையும், ஒவ்வொருமுறையும் போல, விடுமுறையில் உறவுக்காரர் -ஆண்கள் குடிவகைளுடன் நிலக்கீழ்அறைகளுள்ளும் (Basement) பெண்கள் குழந்தைகளுடனும்- குழுமினார்கள். பலவகைப்பட்ட கதையாடல்கள். நீண்டநாளைக்குப் பிறகான சந்திப்பாகையால், இடையிடையே, ‘வியித்திரக்’ கதைகளை கேட்கமுடிந்தது. “சில கதையளக் கேட்க நம்பவும் முடியேல்ல’ என ஆரம்பிக்கின்றன அவை; இறுதியில் அவை, பெண்/ஆண் ஓரினச்சேர்க்கையாளர்கள், இருபாலுறவாளர்கள் (bisexuals), transgendered persons, நபுஞ்சகம் (hermaphrodite) (இவற்றுக்கான ‘அரசியல்ரீதியாகச் சரியான’ தமிழ் சொற்கள் தெரியவில்லை), இப்படி இவர்களில் யாரோ ஒரு சிறுபான்மையினர் பற்றியதாய் இருக்கும்.

இவற்றைச் சொல்கிறவர்களில் பலபேர் 20 வருடங்களாக கனடாவில் இருப்பவர்கள்கூட; தமது பிறந்த மண்ணைவிட, மேற்குலகவாசிகளாகவே உணர்கிற, சிறிய வயதில் கனடா வந்த மாணவ, மாணவியரும்கூட.

கொழும்பில் இருந்தபோது இந்த மனிதர்கள் பற்றி வருகிற கதைகளின் வியித்திரத்தன்மையில் மூழ்கியிருக்கிறேன்தான் - ஒரு நகைச்சுவையாய், புதினமாய், மிருகக்காட்சிசாலையின் வெவ்வேறு மிருகங்களைப் பார்வையிடுவதுபோல ‘இப்படியும் நடக்கிறது’ பகுதியிலோ ‘இப்படியும் உள்ளார்கள்’ என்றோ ‘முன்பு” “பின்பு’ என படங்கள் போடுவார்கள்; பார்த்து வியப்புற்றதுண்டு. அதே தொனிதான் எவ்வளவோ காலத்திற்குப் பிறகும் கனடாவில் உள்ள தமிழ் பத்திரிகைகளிலும் உள்ளது என்பதை என்னவென்பது?

கனடாவைப் பொறுத்தளவில், இவர்களை ஆங்கிலப் பத்திரிகைகளில் ‘பாரபட்சமாக’ சித்திரிப்பதில் அவதானமாக இருக்கின்றன (இருக்கின்றன என்றால் சம்மந்தப்பட்ட சிறுபான்மை ஆதரவுக் குழுக்கள் அதைக் கவனத்தில் கொண்டுவரும்/எதிர்க்கும் என்பது கருதி; அத்தகைய ‘சட்ட பலம்’ ஓரளவுக்காவது இருக்கிறது.) இவைகள்
Star, National post, Globe and mail போன்ற ‘படித்தவர்களது’ பத்திரிகைகளில்தான். பெரிதும் யூதர்களால் ஆளப்படுகிற பத்திரிகையுலகம் சிறுபான்மை அகதிக் குழுக்கள் மீது பாரபட்சமான பார்வைகளை தமக்குரிய தந்திரங்களில் வெளியிட்டுவந்தாலும், இத்தகைய சிறுபான்மைக் குழுக்கள் தொடர்பாய் கவனமாய் இருப்பார்கள். ‘தொழிற்சாலை’ அல்லது கீழ்த்தட்டு மக்களால் படிக்கப்படுகிற எனப்படுகிற (கொச்சையான மொழிப் பாவனை) Sun போன்ற பத்திரிகைகளில் இவற்றை எதிர்பார்க்க முடியாது. இவர்களது பத்திரிகையை பலர் எடுப்பதே மூன்றாவதோ நான்காவதோ பக்கத்தில் பெரிய அளவில் வருகிற அரைநிர்வாணப் பெண்உடலின் படத்திற்காகத்தான் (அந்தப் படம் ‘படிக்காத/கீழ்த்தட்டு’ மக்களுக்குத்தான் தேவை என நீங்களும் நம்பினால், கட்டாயம், இங்குள்ள பெருநிறுவனங்களின் ஆண்களின் கழிப்பறைக்கு ஒருமுறையாவது போய் வாருங்கள்!). Sun இலுங்கூட பாரபட்சமான செய்திகள் வந்தால் அதைத் தட்டிக் கேட்கிற உரிமை, நஸ்டஈடு கேட்கிற உரிமை இங்கே உள்ளதாகையால் முடிந்தளவு எதிர்க்கிற, போராடிற பலம் இன்றைக்கு உள்ளது. எங்களது நாடுகளில் இதற்கு எவ்வளவு காலங்கள் ஆகுமோ. முடிந்தவரையில் ஒவ்வொருவருக்கும் அறிவூட்டப்பட்டால் (இது உயிரியல்ரீதியானது, ‘இது ஒரு வருத்தம் அல்ல’, இயற்கையாகவே ஒருவர் ஒரே பாலான மற்றவரை நேசிக்கிறார் என்ப பற்றி முக்கியமாக) அதுவே பெரிய விடயம்.


உறவினர் கூடுகிற விருந்துவிழாக்களில் எப்போதும் இத்தகைய உறவுகள் பற்றிய உரையாடல்கள் 'இத்தகையவர்கள்' மற்றவர்களுக்கு இழைக்கிற 'துரோகங்கள்' பற்றியதாய்த் தொடரும்.

“எங்கடவீட்டு basement இல இப்ப இருக்கிற அக்காவ husband விட்டிட்டார். நல்ல அக்கா! அவட பிள்ளையைத் தரச் சொல்லி கொடுமைப் படுத்திறாராம்... அவர் வந்து... அவருக்கு வந்து ஒரு ... ஆம்பிளையோடைதான் தொடர்பாம்.’
இதைச்சொன்ன பெண், ஒரே பாலர்கள் திருமணம் செய்வது ‘நடக்கிற’ ஒரு நாட்டில் 15 வருடங்களிற்குமேலாய் வாழ்ந்து வருகிறார்.

நாங்கள்: எல்லாவிதமான துரோகங்களைப் பற்றியும் பேசலாம். எதுதான் துரோகமில்லை? காலங்காலமாக ஆண்களும் பெண்களுமாய் மனித இனமே தமக்கு நேர்ந்த துரோகங்களைப் பற்றிய வெஞ்சினத்தில்தான் ஆழ்ந்திருக்கிறது.

தற்சமயம் 50களில் இருக்கிற ஒரு பெண்மணி, கணவர்
தான் ஒரு ஓரினச் சேர்க்கையாளர் என அறிவித்துக்கொண்டபோது சொல்கிறார்: “ம்ம்ம்... நான் ஏமாற்றப்பட்டேனா? தெரியவில்லை. இ ப்போது என் 50களில் இருக்கிறேன். நான் இளமையாய் இருந்தபோது, துக்கமாய் இருந்தெனென்றும் இல்லை. பிள்ளைகள், இனிய கணவன்.. நான் மிகழ்ச்சியான பெண்தான். எனினும், எனது கணவருடான திருமண உறவில் ‘ஏதோ ஒன்று’ குறைவாய் இருப்பதுபோலவே இருக்கும். அவருக்கு நான் கவர்ச்சியாய் இல்லாததுபோல...! இந்த உணர்வுடன்தான் 25 வருடங்களிற்கு மேலாய் நான் அவருடன் இருந்தேன். இப்போது அதற்கான ‘காரணம்’ தெரிகிறது. வேறை என்ன சொல்ல?”

பார்த்துக்கொண்டிருந்தபோதே மிக வருத்தமாய் போய்விட்டது. அந்தப்பெண், அந்த 'ஏதோ ஒன்றை’யும் அனுபவித்தபடி, அவளை சர்வநிச்சயமாய் நேசித்தவனுடன், sexy ஆய் உணர்ந்தபடி வாழ்ந்திருக்க வேணாமோ?!

காதலித்து, தன்னுடன் கூடி இருந்து, பிள்ளைகள் பெற்று, பிறகு அவர்கள் வளர்ந்துவருகையில் -இவளது மத்திய வயதில்- பெண்ணாக பால்மாற்றம் செய்துவந்திருக்கிற கணவனை பார்த்துக்கொண்டிருந்த இன்னொரு பெண்ணினது முகத்தில் அதிர்ச்சி மறையவில்லை. அவர்கள் இன்னமும் ஒன்றாய்த்தான் வாழ்கிறார்கள். அவளில் 'புதிய அவளிற்கு' நேசமும் இருக்கிறது. ‘(பால்மாற்றத்திற்குப் பிறகு) எனது குறியற்ற உடலோடு உறவுகொண்டபோது எனது மனைவி அழுதாள்; எனக்கும் வலித்தது. என்ன செய்வது? அவள் லெஸ்பியன் இல்லையே.”

எதிர்பால் உறவாளர்களான இந்தப் பெண்கள், அவள்கள் விரும்புகிற ஒரு குடும்பத்தை சிருஸ்டிப்பதோ, தாம் காதலித்த ஆணை திருப்பப் பெறுவதோ, தன்னை ‘கவர்ச்சியாய்’ உணர்கிற ஒருவனுடன் வாழவோ இனிமேல்
அவர்களுக்கு கால அவகாசமில்லை, 'காதலிக்கப்பட்டதாய்' நம்பி , ஏதோ வகையில் ‘பயன்படுத்தப்பட்ட’ அந்தப் பெண்களது வலியை இவர்களது ‘தாமாக வாழ்தல்’ அழுத்துகிறது.

ஆனால் என்ன செய்வது?

இந்த சிறுபான்மையினரால் தாமாக வாழ முடிந்திருந்தால் இத்தகைய துரோகங்கள் நடந்திருக்கப் போவதில்லை. அவர்களைப் பற்றிய குற்றஉணர்ச்சிகள், வசைகளில், கேலிகளில் சமூகம் பிரித்து வைத்திருக்காதிருந்திருந்தால் அவர்கள் இதைச் செய்திருக்கப் போவதில்லை.

தன்னை ஒரு பெண்ணாக உணர்கிற கறுப்புப் பையனோ பொம்மைகளுடன் விளையாட விரும்புகிறான். கறுப்புத் தகப்பனார் அவனை ஒரு ‘விளையாட்டு வீரனாய்’ கொண்டுவர விரும்புகிறார் (விளையாட்டு ‘வீரன்’ என்றில்லாவிட்டாலும், ஆண் =‘வீரன்’ என்பதை அதற்கு அவர்கள்/நாம் ஒவ்வொருவரும் தருகிற முக்கியத்துவத்தை அவர்களது பண்பாட்டு வேர்களோடு பொருதிப் பார்க்கவேண்டும்). அந்த நிகழ்ச்சியில் ‘ஆணாய்’ வளர்க்கப்படுகிற அந்த –உள்ளே பெண்ணாய் உணர்கிற- குழந்தைகள் எப்படி அந்நியப்பட்டுப் போகிறார்கள் -தற்கொலை செய்துகொள்கிறார்கள்- என்பதை எல்லாம் காட்டினார்கள். இறுதியில் அந்தத் தகப்பனிடம் ‘இப்போது உன் மனோநிலை என்ன’ எனக் கேட்க, “வீட்டுக்குப் போகையில் அவனுக்கு சில கரடிப் பொம்மைகள் வாங்கிச் செல்லவேண்டும்’ என்றார். அவர் ஒரு சராசரியான, மத நம்பிக்கைகளும் ஒழுக்கக்கோட்பாடுகளும் உடைய தகப்பன்.
ஆனாலும் சொன்னார்: ‘எனக்கு கஸ்ரம்தான். ஆனால் எனது பிள்ளையின் மகிழ்ச்சி எதைவிடவும் முக்கியமானது”.


இங்கிருந்து தொடங்குவோம்.

Monday, February 07, 2005

சுகந்தி சுப்ரமணியம்

--------------------------------------------------------
தேர்ந்தெடுத்த கவிதைகள் (8 )
-------------------------------------------------------


உயிர்ப்பு

ஒவ்வொரு கணமும்
அழுதுகொண்டிருந்தேன்.
ஜன்னல்களும் கதவுகளும் மூடிக்கிடந்தன.
அறைகள் இருட்டியிருந்தன.
எல்லாம் மௌனமாய்.
கதவு மெல்ல அழைத்தது;
அழாதே சாப்பிடு என்றது.
எழுந்து போய்
திறந்தேன்.
பேரிரைச்சலுடன் நகரத்தை
அதிகாலை தந்தது.
புன்னகையுடன் தரையிறங்கினேன்.
என்னைக் கழுவு என்றது வாசல்
கோலம் போடு என்றழைத்தது மண்.
தண்ணீர்விடு என்றழைத்தன செடிகள்.
-0-


எனது உலகம்

உன்னால் எதுவும் செய்ய முடியாது
கேலியாய்ச் சிரித்தான்.
உண்மைதான். உண்மையில்லை.
இந்த உலகம் குறித்து
என் நம்பிக்கைகள் இன்னும் சிதைந்தபடி
ஆனால் நான் நம்பிக்கையுடன்.
இந்திய ஜோக் என்றான் ஒருவன்.
விரலை என் முன் நீட்டி
கண்களை உருட்டியபடி அவன்.
இருந்தாலென்ன?
நான் இன்னமும்
எனதுலகத்தைத் தொலைக்கவில்லை.
முரண்பாடுகளே வாழ்க்கை என்றானபின்
எதுதான் சரி?
எதுதான் தவறு?
-0-


எனது உலகம் 2

யாரைப் பற்றியும் பேச எனக்கு உரிமையில்லை.
ஆனால் என்னைக் குறித்துப் பேச எல்லோருக்கும்
உரிமையிருப்பதாக அவன் சொன்னான்.
யார்? எப்போது? ஏன்?
நிர்ணயித்தார்கள் என்றேன்
அது உனக்கு அநாவசியம் என்றான்.
எனக்கு மிகவும் அவசியமானதாக
என் உலகை உணர்ந்தேன்.
இவர்களின் செயல்கள் எனக்கு எரிச்சலூட்டää
கேள்விகளற்று உறைந்து போனேன்.
-0-


எனது தோழிகள்

அவ்வப்போது சண்டையிட்டாலும்
நாங்கள் நல்ல தோழிகளாகவே இருந்தோம்.
அஸ்மாவும், லூஸியாவும், வரலட்சுமியும், ஷோபாவும்.
அவர்களைப் பற்றி நான் பேசும்போது
என்னைப் பற்றி அவர்களும் பேசுவார்களென நினைத்தேன்.
பெரியவர்களின் மதச் சண்டைகள் எங்களுக்கு அநாவசியமாய்
தெரிந்தது
பெரும்பாலும் எங்கள் சமையல் அவர்களுக்கும்
அவர்களது எங்களுக்கும் பிடித்திருந்தது.
நகரத்தில் கலவரம் நேரும்போதெல்லாம்
நாங்கள் கவலைப்பட்டோம்.
அதைத் தவிர வேறு என்ன செய்யமுடியும்?
எங்களுக்கான நேரம் மிகக் குறைவாக இருந்தது.
தவிரவும்,
எங்களை எதுவும் செய்துவிடாதபடி
எல்லோரும் பாதுகாத்தனர்.
நாங்கள் நல்ல தோழிகளாக இருந்தோம்.
தோழிகளாக இருப்பதையே விரும்பினோம்.
ஒருவரின் கருத்து மற்றவருக்குப் பிடிக்காவிட்டாலும்.
-0-


பார்வையும் நானும் சமூகமும்

எனது பார்வை ஒன்றும் அவ்வளவு மோசமில்லை.
என்றாலும்
மிக முக்கியமாய் நகரில் நடப்பவை எல்லாம்
விடுபட்டுத்தான் போகின்றன.
காலங்கடந்து தெரிந்தாலும் ஏனோ
எதுவுமே பாதிப்பதில்லை.
இதுதான் சரியென எல்லோரும் சொன்னாலும்
எனக்குள் எப்போதும் வருத்தமாய் இருந்தாலும்
நானும் ஆக்ரோஷமாய் தடிகளைச் சுழற்றியபடி
வேகமாய் ஒவ்வொருவரையும் தாக்குவதாய் நினைக்கிறேன்
எதிரே வரும் தபால்காரரிடம் புன்னகையோடு பெறும்
கடிதங்களில் எந்த விசேஷமுமிருக்காது என்றாலும்
பெயர்ப் பட்டியலாய் நீளும் அவற்றை எப்போதும் விரும்புவேன்
வுளையல்கள் ஒலிக்க தோழிகள் வருவர்.
அவர்கள் முகம் பார்த்து மகிழ்வேன்.
எல்லாம் சில கணங்கள் வரைதான்.
மீண்டும்
என் உலகில் நான் நுழையவேண்டியிருக்கிறது.
நான் விரும்பாவிட்டாலும்
காற்று என்னை வருடிச்செல்வதுபோல.
அவளைக் குறித்து எந்த வருத்தமில்லை என்றாலம்
அவளுக்காய் இரக்கப்படுகிறேன்.
அவள் முகம் பார்க்கும்போதெல்லாம்
சுடுசொற்கள் வந்துவிடுகின்றன.
மிகவும் வேதனைதான்; என்ன செய்வது?
நான் ஏன் இப்படியாகிப் போனேன்?
எனக்கு ஒன்றுமே புரியவில்லை.
ஒன்று மட்டும் நிச்சயம்.
அது;
நானாக இருக்க முடியாதுபோன வருத்தம்தான்.
புதிய திரைப்படங்களின் பாடல்களை
மிகச் சத்தமாய் அவர்கள் ஒளிபரப்புகையில்
நானும் எனது தோழிகளும்
மெளனமாய் சங்கடத்துடன்
சேலையை சரிசெய்து கொள்ளநேர்கிறது.
-0-
எனது தனிமையைப் போக்க
எவ்வழியும் கிடைக்கவில்லை.
நானறிந்த சுற்றமும்
தோழிகளுடனான இருப்பும்
விலகலைக் கற்றுக் கொடுத்தது.
மீண்டும் தனிமையில் இருக்கையில்
என்னை இயல்பாக்க
முடியாமல்
ரயிலும் தண்டவாளமும் இணையும்
தருணத்தில்
சிக்கித் தவிக்கும் உயிராய்
நிமிடத்தை வருஷமாக்கி
வேவு பார்க்கிறது மனசு.
இன்னமும் தீரவில்லை
எனது உணர்வுகள்.
எதுவும் தேவையில்லை என
உதறித்தள்ள நானென்ன ஜடமா...
வீட்டிலிருக்கும் ஜடப்பொருளுக்கு
போட்டியாய் கிடந்து தவிக்கிறேன்.
எதுவாகவும் நானில்லை.
எனது நான்
வீட்டின் இருண்டமூலையில்
பதுங்கிக் கிடக்கிறது எலிகளோடு
-0-


எதைச் சார்ந்து இருப்பது?
ஆல்லது
எப்போது யாரைச் சார்ந்து இருப்பது?
திருமணமாகும்வரை பெற்றோரும்
ஆனபின் கணவனும் பாதுகாக்க
நடுநடுவே
மூக்கை நுழைக்கும் சமூகத்திற்கு
சொரணையே இல்லை.
என் மேல் ஆவியிருப்பதாக
எல்லோரும் நம்பினார்கள்;
ஏன் நீயும்தான்.
எனக்கு இரண்டு யோசனை.
இருந்தாலும்
பாட்டியுடன் துதிக்கையாட்டும்
யானை பார்க்க கோவிலுக்கு சென்றேன்.
அது தன் கப்பீரத்தை இழந்து
பத்து காசுக்காய் குனிந்தது.
எனது தோழிகள்
என்னை விரோதியாக்கினர்.
தோழர்களோ பத்தடி தள்ளி நின்று
பேசினர்.
எல்லாவற்றுக்கும் மேலாய்
எனது தனிமை என் வீட்டில்
எனைச் சார்ந்து இருக்கிறது
-0-


அறை

அறை மிகவும் பாதுபாப்பாக இருக்கிறது.
கோடைகாலம் குளிர்காலம்
எதுவும் பாதிக்காத வகையிலிருக்கிறது.
எனக்குத் தோவையானதை அறைக்குள்ளே பெறுகிறேன்.
இந்த அறை
எனது எதிர்ப்புகளை அலட்சியப்படுத்துகிறது.
உனது அடையாளமெங்கே என இளிக்கிறது.
இந்த அறையில் நான்
வாழ்ந்துகொண்டிருப்பதாகவும்
அவர்களால் அவர்கள் அறைகள் நிரம்பிவழிவதாகவும்
எனக்கு தகவல் வருகிறது.
இது என்ன விசித்திரம்!
அறைகளுக்கு எப்போது கண்கள் முளைத்தன?
இனி எனக்கு நிம்மதியில்லை.
நான் நானாக இருக்கவே முடியாது.
வெளியே எனது ஆடைகள் காய்கின்றன.
அறைக்குள் என் ஆடைகளை மீறி
கண்கள் என்னை ஒற்றறிகின்றன.
நேற்று அவளும் இப்படித்தான் என்றாள்.
-0---------------------
மீண்டெழுதலின் ரகசியம்
-சுகந்தி சுப்ரமணியம்

யுனைடெட் ரைட்டர்ஸ்
130/2 அவ்வை சண்முகம் சாலை, கோபாலபுரம், சென்னை – 86
முதல் பதிப்பு டிசம்பர் 2003
--------------------

குடும்பம் II

நான் இப்படியாகிப் போனேன் என்கையில்
என் தோழிகள் அவர்களும்
தெரிவித்தார்கள். ...
-சுகந்தி சுப்ரமணியம்
(தொகுப்பு: ‘மீண்டெழுதலின் ரகசியம்')
ஒவ்வொருநாளும், சப்வேயில் 1 1/2 மணித்தியாலங்கள் பயணித்தே வீடு திரும்புகிறேன்; சக பயணிகளாய் கூடவருகிற, யாருக்கும், ஆண்களும் பெண்களும் தூங்கி வழிந்தபடி களைத்து விழுந்து வருகிற- யாருக்கும், வீடு திரும்புதலின் மகிழ்வும் விடுதலையுணர்வும் தெரிந்திருக்கும். அதற்கு ஈடென்ன! உடல்உழைப்பற்ற வேலையாட்கள் முதல் தொழிற்சாலை ஊழியர்கள்வரை, கோப்புகளினதும், இயந்திரங்களதும் சகவாசத்திலிருந்து வெளியேறி, எப்போதும் உடலும் மனமும், களைப்பாறலை எதிர்பார்த்தே திரும்புகிறது.

அந்த நிம்மதிக்கு களைப்பாறலுக்கும் வீட்டிலிருக்கிற பெண் செல்வதில்லை. ஒவ்வொரு நாளும்,

“...
எல்லோர்க்குமான உதயம்
தினசரி நிகழ்கிறது.
நாமதைக் காண்பதில்லை.”

என்பதாய் அல்லவோ கழிகிறது.

அம்பை ஒருமுறை சொன்னதாக ஞாபகம், குடும்பங்கள் உடைவதைப் பற்றி ‘அது பற்றி என்ன நினைக்கிறீர்கள்’ எனக் கேட்கப்பட்டபோதோ என்னவோ, ‘குடும்பம் என்ன சட்டியா பானையா போட்டு உடைக்க’ என்று!
குடும்பம் பற்றிய விமர்சனங்கள் நவீனத் தமிழ் எழுத்துலகில் காணலாம் (லௌகீக வாழ்வை எழுதிச் செல்லுகிற எந்த நாவலில்தான் குடும்பத்தின் இறுக்கங்களும் உளச்சிக்கல்களும் அறவே இல்லாமற் போகும்?). ஆனால் 90களிற்கு முன்புவரை அவற்றில் பெண்களின் பங்களிப்பு அரிதாகவே இருந்தது. அம்பை போன்ற அறிவுஜீவிப் பெண்ணது விமர்சனம் ‘சிறகுகள் முறியும்’ போன்ற சிறுகதைகளளவில்தான் இருந்தது. அப்பால், அவருடைய படைப்புக்கள் தனிப்பட்ட -சுதந்திரமான- பெண்ணின் அனுபவங்களின் வெளிப்பாடுகளாக அமைந்தன.
இன்றைக்கு, நகரத்தின் இறுக்கத்துள் மூச்சுமுட்டும் தம் வாழ்வைப் பகிர்கிற தமிழ் ஆண் எழுத்தாளர்கள் போலவே பெண்களும் தமதைக் கூற ஆரம்பித்துவிட்டார்கள். குடும்பம் என்கிற ஒன்று ஒரு துடியான மகிழ்ச்சிகரமான மனித ஜீவியை கலைத்துவமற்ற ஒரு இயந்திரமாய், எப்படி மாற்றிப்போடுகிறது என்பதை இவர்கள் ஊடாகக் காண முடிகிறது.

உமா மகேஸ்வரியினுடைய கதைகளின் உலகு குடும்பத்தின் இறுக்கத்தை, பெண்ணிற்குத் தரப்பட்ட வெற்றிடத்தை, சுயஅழிப்பை, அவளின் அதற்குள்ளும் வாழும் முனைப்பையும் அயர்ச்சியையுமே வெளிப்படுத்துகின்றன. இதுவரையில் ஆணின் கண்ணோட்டத்தில் காட்டப்பட்ட குடும்பம் இன்றைக்கு அங்கேயே முழுநாளும் இருப்பவளாகிய பெண்ணின் பார்வையில் வெளிவருகிறது.
ஆண்கள் அச்சப்பட்ட காமத்தை மட்டுமன்று, இந்தக் குடும்ப அமைப்பு கொன்றுக்கொண்டிருக்கிற தனது தனித்துவத்தை, இயலுமைகளை தேடும் பிரதியாகவே சல்மாவின் ‘ஒரு மாலையும் இன்னொரு மாலையும்’ தொகுப்பு அமைந்தது. உமா மகேஸ்வரி
‘என் குழந்தைத்தனங்கள் மாற முன்னமே
வந்து பிறந்தன குழந்தைகள்’
எனச் எழுதுவதும் தனது பக்குவமடையாமையை கவனங்கொள்ளாமல் தன்மேல் ஏற்றப்பட்ட/படும் பொறுப்புகள் பற்றியதே.
குடும்பங்களின் உட்சிக்கல்கள், கட்டுக்கள் பற்றியெல்லாம் பெண்கள் பேசத் தொடங்கிறபோது, குடும்பங்கள் உடைவதான ‘புரிதலுடன்’ அத்திவாரத்தின் உடைவு பற்றிய அச்சமும் காக்கும் துடிப்பும் பல(வி)ரிடத்தே எழுவதைக் காணலாம்.

குடும்பங்களின் உடைவு பற்றிய ஆழ்ந்த மனவருத்தங்களை மேற்கில், (விவாகரத்து) ஷோப் ஒப்பறாக்களில், ‘கூட்டுக் குடும்பங்களின்’ உடைவு பற்றிய சோகத்தன்மையை நமது நாடகங்களில்/படங்களில் காணலாம். ‘உன்னதமான’ ‘ஒற்றுமையான’ குடும்பங்களை/கூட்டுக் குடும்பங்களை படைப்பதூடாக ‘பழையன குறித்த’ ‘சிறப்பானவை’ என்ற பிம்பத்தை தவறாமல் உண்டு பண்ணி விடுகின்றன இவை.
சமீபத்தில் சுகந்தி சுப்ரமணியத்தின் அனைத்து கவிதைகளும் அடங்கிய ‘மீண்டெழுதலின் ரகசியம்’ என்கிற சிறிய கவிதைத் தொகுதியை சப்வேயில் வந்துகொண்டிருந்தபோது படித்தேன். 80களின் நடுப்பகுதியில், ‘பெண் எழுத்துக்கான பரப்பு பண்படாததாயும் நீட்சியற்றதாயும் இருந்த காலகட்டத்தில்; சுகந்தி வலிமையுடன் தன் இருப்பை நிறுவியதாக’ நூலுள்ளே சொல்லப்பட்டிருக்கிறது. சுகந்தி பற்றிய நல்ல அறிமுகக் குறிப்பிது.
வீட்டிற்குள்ளேயே வாழ(?) ‘நேர்ந்து’விட்ட ஒரு பெண்ணினது வெளிப்பாடுகளே இவையும்.
சல்மா, உமா.மகேஸ்வரி ஆகியோர் எழுத்துக்களும் சுகந்தியின் எழுத்தின் தொடர்ச்சியாகவே தோன்றுகிறது... புத்தகத்தை விரிக்கும்போதே சுகந்தியின் ‘வாழ்வும் பார்வையும், “நானும் இந்த சமூகமும்/ எனக்கென என்ன வைத்திருக்கிறோம்?” போன்ற கேள்விகளும்” பேச ஆரம்பிக்கின்றன, மௌனமாக, யாருமற்ற தனிமையில், தமக்குள்ளாற பேசுவதுபோல... இனங்காணப்படாத வலியினால் சொற்கள் நெரிகின்றன.

...
எனது பார்வை ஒன்றும் அவ்வளவு மோசமில்லை.
என்றாலும்
மிக முக்கியமாய் நகரில் நடப்பவை எல்லாம்
விடுபட்டுத்தான் போகின்றன.
காலங்கடந்து தெரிந்தாலும் ஏனோ
எதுவுமே பாதிப்பதில்லை.
இதுதான் சரியென எல்லோரும் சொன்னாலும்
எனக்குள் எப்போதும் வருத்தமாய் இருந்தாலும்
நானும் ஆக்ரோஷமாய் தடிகளைச் சுழற்றியபடி
வேகமாய் ஒவ்வொருவரையும் தாக்குவதாய் நினைக்கிறேன்
...(பக். பக்32)

வாழ்க்கை பூராவும் தியாகம் செய்வதா?
நான் கேட்டேன் அந்தப் பெண்களை.
இதுதான் வாழ்க்கை என்றாள் ஒருத்தி.
எனக்குப் பிடிக்கவில்லையென்றாலும்
வாழ்கிறேன் என்றாள் மற்றவள்.
ஜடமாய் உணர்கிறேன் என்றாள் இன்னொருத்தி.
வெள்ளிக் கிழமையும், வியாழனும்
விரதமிருக்கிறேன் அம்மனுக்கு;
தீரும் என் கவலைகள் என்றாள்
மற்றுமொருத்தி.
(பக். 30)

... உங்களுக்குத் தெய்வம்
அவருக்கு மார்க்சியம்
எனக்கு கவிதை
(பக். 122)

நானும் எனது தலைமுறையும்
ஏற்கனவே
அடகு வைக்கப்பட்டிருக்கிறோம்
(பக். 44)

நான் கற்ற கல்வி
என் மகளுக்கு டியூசன் எடுக்கமட்டும்
உதவியானது. ...
(பக். 81)

... தோல்விகள் தொடர்கையில்
என்னுடனே நான் நட்புக் கொண்டேன்
(பக்.--)

...தவிரவும்
முக்கியமாய் எதுவமில்லை
என்னிடம்
தனிமை தவிர.
(பக்.56)

எதுவும் தேவையில்லை என
உதறித்தள்ள நானென்ன ஜடமா...
வீட்டிலிருக்கும் ஜடப்பொருளுக்கு
போட்டியாய் கிடந்து தவிக்கிறேன்.
எதுவாகவும் நானில்லை.
எனது நான்
வீட்டின் இருண்டமூலையில்
பதுங்கிக் கிடக்கிறது எலிகளோடு
(பக். 68)

முரண்பாடுகளே வாழ்க்கை என்றானபின்
எதுதான் சரி?
எதுதான் தவறு?
(பக். --)

... நான் ஏன் இப்படியாகிப் போனேன்?
எனக்கு ஒன்றுமே புரியவில்லை.
ஒன்று மட்டும் நிச்சயம்.
அது;
நானாக இருக்க முடியாதுபோன வருத்தம்தான்.
(பக். 32)


இவை யாரை, எதை எதிர்க்கின்றன என்பதற்கு தனிஅடையாளமில்லை. அவனாக, சமூகமாக, தானாக அவை வடிவங்கொள்கின்றன. தனது ஊரிலுள்ள ஒரு நதியின் முடிவையே பார்க்காத தன் வாழ்வு, சூழலின் நெருக்கடி, ஒரே சுழல் - சுருங்கிய தன்(ம்) வாழ்வுகுறித்தனவே இக் கவிதைகள்.

இன்றுங்கூட குடும்பத்திற்கு மாற்றோ, அது குறித்து பேசுவதில் அக்கறையோ கொள்ளாதபோது, 80களில் பிற பெண்களே எழுதாதகாலம், இதைவிட சிறப்பாக தனது உலகத்தை யாரும் பதிந்திருக்க முடியாது.
‘அதிர்ச்சி’யூட்டும் எழுத்துக்களைப் பற்றி பேசுகிற விமர்சகர்கள் இத்தகைய ‘அதிர்ச்சி’யூட்டாத பிரதிகளை எப்படி தாண்டிச் சென்றார்கள்?

சுகந்தி இப்போது என்ன செய்கிறார்?
நூலின் பின்அட்டையிலுள்ள சிறிய புகைப்படம்தான் இவரின் முகமா? என்ன துரொகம் செய்கிறது! ஒரு மெழுகுபொம்பமைபோல, சலனமற்று வெறித்தபடி, நிற்கிறார், 'புத்தகத்திலிருக்கிற நான் இப்ப வேறு யாரோ' என்பதுபோல. யாரேனும் பயணிகள் வாசித்து அசை போடட்டும்/இரை மீட்கட்டும் என்றோ என்னவோ! கண்களூடாக ஊடறுத்து பக்கங்களெல்லாம் அவரது உலகம் விரிந்தண்டே போகிறது. இந்த பயணம் போய்க்கொண்டிருக்கிறது. கமலா தாஸின் கதைகளில் வருகிற துரோகங்கள் மனதை அடித்துப்போடுவதுபோலான உணர்வு ஒட்டிக்கொள்கிறது. சுகந்தியோடதும் துரொகம்தான், ஏதோ சொல்வார்களே, ‘வாழும் துரோகம்’.


குடும்ப அமைப்புள், அதன் இறுக்கத்திற்கெதிரான ஓயாத போரை புரிந்துகொள்ளாமல் பெண்களது படைப்புகள், வாழ்வு பற்றிய எத்தகைய புரிதலை அடையலாம் என்பது தெரியவில்லை.
-0-


(வேலைக்குப் போகாத, வீட்டை 'நிர்வகிக்கிற', மேற்கின் உயர் மத்தியதரவர்க்க மற்றும் எமது மத்தியதரவர்க்கப் பெண்கள் என வாசிக்கவேண்டும்)

Sunday, February 06, 2005

குடும்பம் I - Desperate housewives


இடமிருந்து வலமாக, நடிகைகள், Nicolette Sheridan, Felicity Huffman,
Marcia Cross, Eva Longoria & Teri Hatcherபுதிதாக ஒரு தொலைக்காட்சித் தொடர் வந்திருக்கிறது Desperate housewives
என்று. முதல் எபிசோட்தான் பார்த்தேன். அதில்:
தொலைக்காட்சி விளம்பரங்களில் வருவதுபோல, ஒரு ideal ஆன வெள்ளை-இன குடும்பப் பெண் வெளியில வருவா, தோட்டத்துக்கு தண்ணியூற்றுவா, அழகிய தனது குடியிருப்பை பார்வையிடுவா, பிள்ளைகளை பள்ளிக்கு அனுப்புவா, அப்புறம்... அறைக்குள்ள வந்த துப்பாக்கி எடுத்து தலையில வைத்து...
...
அவட செத்த வீடு. துயர்முகம் போட்ட கணவன், பிள்ளைகள், வீட்டுக்கு வருகிற குடியிருப்பின் பிற பெண்கள், அவர்கள் கணவன்கள், பிள்ளைகள்...

அது கொலையா? தற்கொலையா? வீட்டுக்குப் பின்னால் அவட கணவன் ஏன் ஒவ்வொருமுறையும் இரவில் கிடங்கு கிண்டிறார்? நீச்சல்தடாகத்திற்குக் கீழ் உண்மையில் ஏதேனும் ரகசியம் உள்ளதா?
இத்தனை மர்மங்களும் அவிழ்க்கப்படுவதற்காய்த் தொடரப்போகிறது. அதற்குமுன் அக்குடியிருப்பில் இருக்கிற, இறந்த பெண்ணின் தோழிகளான, பிற பெண்களை அறிமுகம் செய்கிறார்கள்; அவர்கள் தம் சக தோழியான அந்தப் பெண்ணின் கொலையை அல்லது ரகசியத்தைக் கண்டுபிடிப்பார்களா?

இவர்களில் ஒருத்தி (Eva Longoria) businessman இன் ‘மொடல்’ மனைவி (வழமைபோல ஒரு லற்றினோ (latino)!). அவன் அவளை தனது வியாபார ரீதியான ஒன்றுகூடல்கள், விருந்து விழாக்கள் எல்லாத்துக்கும் ஒரு பொம்மை போல கூட்டியண்டு போவான், முக்கிய புள்ளிகள் ‘கண்டபடி’ தொடுவதை எல்லாம் அவள் கண்டுகொள்ளக்கூடாதென்றும் கேட்டுக்கொள்வான், பரிசாய் அவளுக்கு நெக்லஸ்களும் விலை உயர்ந்த கார்களும் கொடுப்பான். அவள் வீட்டின் தோட்டக்காரனுடன் ‘தொடுப்பு’ வைத்துக்கொள்கிறாள் (இந்தத் தொடரில் பையனின் வயது 17). அவர்களுக்கு இடையேயான உரையாடல் ஒன்று இவ்வாறு அமைகிறது:
அவன்: நீ உன்ர கணவனை நேசிக்கிறியா?
அவள்: ம்
அவன்: "So, why are we here? Why are we doing this?"
அவள்: "Becuase I don't wanna wake up one morning with the sudden urge to blow my brains out."

இன்னொருத்தி (Marcia Cross) Martha Stewart வகையறா. பூக்கன்றுகளிற்கு பசளையிடுகிறாள், கடையில் வாங்குவதற்குப் பதில் வீட்டிலேயே bபண்ணுகள் செய்கிறாள். perfectionist ஆய் குடும்பத்தினரை வீட்டுணவை உண்ணவைப்பதிலும், மேசைப் பழக்கவழக்கங்களின்படி உண்ண வைப்பதிலும் ஈடுபடுபவளாக இருக்கிறாள், மேலும் அவளது வீட்டில் மௌனமாக இருந்தே அனைவரும் சாப்பிடுகிறார்கள் (சாப்பிடும்போது பேசக்கூடாது), குளியலறையில் ஒரு ஒழுங்கில் துவாய்கள் தொங்குகிறது (ஒழுங்கு குலையக்கூடாது). பூக்கன்றுகள் கதிரைவிரிப்புகள் எல்லாம் ‘ஒழுங்கில்’. அவளது தலைமுடிகூட ஒரு கட்டுக்கோப்புடன் ஒழுங்காய் நிற்கிறது, அசையாமல். அவளது கணவன் ‘கல்லூரியில் பார்த்த துடியாட்டமான அந்தப் பெண் இல்லை நீ! உன்குறித்த எல்லாமே எனக்குப் பயமாயிருக்கிறது, முக்கியமான உன் தலைமுடி கலையாம, ஆடாம அசையாம நிக்கிற விதம்! இந்த 'தொலைக்காட்சி விளம்பர'பாணி வாழ்க்கை எனக்குத் தேவையில்லை!’ என்றெல்லாம்சொல்லி, அவளிடம் விவாவகரத்துக் கேட்கிறான். அவனுக்கு சிரித்து ‘ஓ! சரி சேர்ந்து முடிவெடுப்போம்’ என சம்பிரதாயப்பதில் கூறிவிட்டு, குளியலறைக்குள் போய்ப் பைப்பைத் திறந்துவிட்டு உடைந்துபோய் அழுகிறாள்.


இவர்கள் -கணவர்களின் உழைப்பில் வாழக்கூடிய- உயர்மத்தியதரவர்க்கப் பெண்கள். குழந்தைகளை மற்றும் வீட்டைப் பராமரிக்கும்பொருட்டு வீட்டில் தங்கியிருப்பவர்கள். –வெளியே தாம் ஓர் அற்புதமான வாழ்வை வாழ்வதாய் காட்டிக்கொண்டிருக்கிற (யாருக்கு?!)- இப் பெண்டிரைக் கொண்டு, செக்ஸ், திறில், அப்புறம் டிராமா இவைமூன்றும் கலந்த இது தற்போதைய முன்னணித் தொடராய் ஆகிவிட்டதில் ஆச்சரியமில்லை.
இதுவும் வழமையான, தொ.தொடர்களுக்குரிய போர்முலாக்கள் அடங்கிய ஒரு வியாபாரத் தொடரே. இருப்பினும் இந்தத் தொடரைப் பற்றி எழுதக் காரணம், ‘குடும்பம்’ என picture perfect ஆய்ப் பல தொடர்கள் காட்டி வருகிற சமாச்சாரங்களிலிருந்து விலகியதாக, முக்கியமாகக் குழந்தைகள், உடலுறவு பற்றிய புனைவுகளிலிருந்து இது ‘சற்றே வித்தியாசமாய்’ உள்ளது என்பதால். இதன் நகைச்சுவையான கதைசொல்லல் முறை காரணமாக, இம்முறை கோல்டின் குளோப் விருது BEST TELEVISION SERIES - MUSICAL OR COMEDY என்கிற வகைப்பிரிப்புக்குள் இதற்குத்தான் கிடைத்துள்ளது.

அந்த நிகழ்ச்சியிலும், இந்த தொடர் liberal ஆ conservative ஆ என்ன வகைப்பிரிவுக்கள் அடங்குமென கேள்வி கேட்கப்பட்டபோது, தனக்குத் தெரியவில்லை என்று இதன் தயாரிப்பாளரோ இயக்குநரோ கூறிக்கொண்டிருந்தார். கட்டுப்பட்டியான குடும்பங்கள் குறித்த liberal ஆன பார்வையாகவே எனக்குப் படுகிறது.
முதல் எபிசோட் மட்டுமே பார்த்திருந்தாலும் - ஆணால் எழுதப்பட்டிருக்கிற- இந்த தொடரின் இப் பெண்கள் பிடித்துப் போய்விட்டனர். காலகாலமாக, மிகவும் சீரியஸாகவும், இயந்திரகதியிலும் பெண்கள் தொடர்ந்துகொண்டிக்கிற பாத்திரங்களை ஆண் தனதுபார்வையில், அங்கதத்துடன் சொல்கையில் அத்தகு பெண்களது வாழ்வின் வரட்சி வெளிப்பட்டிருக்கிறது, சிறிதளவிலேனும்!

முக்கியமான இதில் வருகிற மற்ற மூன்று பெண்களில் (ஒருவள் (Teri Hatcher) இதில் கதாநாயகிபோல, விவாகரத்தானவள், பதின்மப்பருவ மகளையுடைய கவர்ச்சியான 30களில் உள்ள பெண்மணி; மற்றவள் (Nicolette Sheridan): ஹோலிவூட்வகை கவர்ச்சியான 40களிலுள்ள தொடர்-விவாகரத்துகளால் அறியப்பட்டவள்! இவளுடைய பாலியல் தொடர்புகள் குறித்து குடியிருப்பில் கதைகள் உலாவும்!) எனக்குப்பிடித்தது நாலோ என்னமோ குழந்தைகளை மேய்க்கிற ஒரு வலு சுவாரசியமான பெண்தான். பிள்ளைகளைப் பராமரிக்கும் பொருட்டு அவள் தனது அலுவலக வேலையை விட்டுவிட்டு நிற்கிறாள். இந்த நடிகை (Felicity Huffman) யோட முகமும் களைப்பு, சலிப்பு வெளிக்காட்டிற உடல்மொழியும் யதார்த்தம். மீதி நான்கு பெண்களிலும் அவ்வளவாய் கிளாமர் இல்லாத தோற்றம் இவருக்கு - அதுவும் பிடித்திருந்தது. அவளது கணவன் வியாபார tour கள் போகிற ஓய்வற்ற ஒருத்தன். இந்த முதலாவது எபிசோட்டில் ஒருக்கால் வீடு வருவான், இவள் பிள்ளைகளுடன் அலுப்புற்றுக்கொண்டிருந்தபோது... அவன் அவர்களை விளையாட அனுப்புவான். பிறகு அவளுடன் உடலுறவு கொள்ள முனைகையில், இவள் தான் கருத்தடை மாத்திரை உட்கொள்வதில் பிரச்சினை என்று சொல்லி அவனை ஆணுறை போடச் சொல்லுவாள் அவன் ‘என்ன பெரிய விசயம், றிஸ்க் எடுப்பம்’ என்றுவான். அவள், 'றிஸ்க் எடுப்போமோவோ?' என்றவிட்டு அவனத் தள்ளிவிட்டு, சீற்றத்துடன், அவன்ட முகத்தில ஒரு குத்து விடுவாளே....

சோப் ஒப்பறாக்களில் எல்லாம், குழந்தைகள் அழகே உருவாய், சத்தமே போடாதவர்களாய், வந்து போறதும், அவர்களை வீட்டின் அடுக்குகளைக் குலைக்காத கடவுளின் பரிசுகள்போல காட்டுவதும், செல்லமொழி பயிலுவதும், அதுகளை பாவித்து தங்களது ஆண்நண்பன்களை தங்களுடன் தக்க வைத்துக் கொள்ள பெண்கள் முனைவதாயும் காட்டிக் காட்டி பைத்தியமடிக்கும் தொலைக்காட்சி உலகம். அப்படிக் குழந்தைகள், பாலியல், மனிதஉடம்பு குறித்து ஆயிரம் புனைவுகளை உண்டாக்கித் தள்ளுவார்கள்.
அவற்றிலிருந்து மாறுபட்டு, இதில் இந்தப் பிள்ளைகள் தட்டிற ஒழுங்குகள், போடுற குப்பைகள், கணமும் தர்ற எதிர்பாராத ஆக்கினைகளும் என ஒரே களேபரம்.. தத்ரூபம்!
இப்படிப் பாக்கிறபோது அமெரிக்காவில் ஏன் ஒரு(பல!) பெண் தனது குழந்தையை பாத் ரப்புக்கள் நீரில் அமிழ்த்திக் கொன்றாள், ஏன் பெண்கள் மாடியிலிருந்து குழந்தைகளைக் கீழே போடுகிறார்கள், எதற்காக தமது மகவுகளைக் கொலைசெய்யத் துணிகிறார்கள் என்பதற்கெல்லாம் ஒரு காரணமும் நியாயமும் கிடைக்கிறது. குடும்பம் அமைப்பு, அதற்குள், பிள்ளைகள், கருத்தரிப்பு பற்றிய அச்சத்தில் மனங்கொள்ள இயலாத உடலுறவு, சுய அழிவு என பெண்ணிற்கு எவ்வளவு சுமை, எவ்வளவு சக்தி இழப்பு என்பன குறித்தெல்லாம் கவனம் குவிகிறது. மேலும் அவர்களது தனிமை, ஆற்றாமை, மனஉளைச்சல், boredom!

தொலைக்காட்சியில், ஓப்றா வின்பிறீ (Oprah Winfrey) இத் தொடரின் நடிகர்களை அழைத்து ஒரு நிகழ்ச்சி செய்திருந்தார். அதில் சாதாரண குடும்பப் பெண்களும் பங்குபற்றி அந்தத் தொலைக்காட்சித் தொடர் ஏன் தங்களுக்கு பிடித்திருந்தது, அதுடன் எப்படித் தாங்கள் தங்கள அடையாளங் காண்கிறார்கள் என்பன பகிர்ந்தார்கள்.
ஒரு வெள்ளைஇனப் பெண், வரண்டுபோன சுரத்தற்ற முகத்தோட பகிர்ந்தது இதை ஒத்த அனுபவம்:
“ஒவ்வொருநாளும் வீட்டக் கூட்டினன். அள்ளினன். பிள்ளையள சிரிச்ச முகத்தோட பள்ளிக்கு அனுப்பினன். குடும்பப் போட்டோகளில அதே சிரிப்போட போஸ் குடுத்தன். ஊருலகத்தில எல்லாரும் நினைச்சினம் ‘ஓ அவள் என்ன ஒரு முழுமையான வாழ்வை வாழ்றாள்!’ எண்டு. முழுமையான மனைவி, தாய், நல்ல நிர்வாகி. ஆனா எல்லாரும் போனாப்பிறகு, அந்த வெறுமையில, நான் தொலைஞ்சு போனன். அப்ப - என்ன செய்யிறது? எனக்குத் தெரியிறதே இல்ல. நான் என்ன எண்டிற கேள்வி விழேக்குள்ள, ஒருநாள்ள எத்தின தடவ தற்கொலையைப் பற்றி யோசிப்பனோ தெரியாது. குழந்தைகள நினைச்சு அது முடியிறதுமில்ல. கடவுளே! அந்த உணர்வில இருந்து விடுபடோணுமெண்டா நான் என்னவும் செய்யத் தயாரா இருந்தன். ஒரு இளம்பையனுடன் affair இருந்தது Desperate housewives தொடரில மாதிரியே! காரணமும்கூட அவளுடையதுதூன். சந்தோசமா இருந்திருப்பனா? தெரியேல்ல; ஆனா அடிப்படை அந்த இறுக்கத்தில இருந்ததான விடுதலை வேண்டியிருந்தது, சொட்டே நேரமெண்டாலும். அவ்வளவுதான்”
0