@font-face { font-family: TSCu_InaiMathi; font-style:normal; font-size: 10pt; font-weight:normal; src:url(http://mathy.kandasamy.net/fonts/TSCUINA1.eot); }

Wednesday, July 27, 2005

பாப்லோ நெரூதா:

-"நீ" என்னை 'அரசி' ஆக்கினாய்
-"நீ" என்னை 'மகிழ்ச்சியற்ற ஒருத்தி' ஆக்கினாய்
-"நீ"என்னை 'கடினமானபோது உன்னுடன் வருபவள்' ஆக்கினாய்
-"நீ" என்னை 'காத்திருப்பவள்' ஆக்கினாய்
-"நீ" என்னை 'தீயவள்' ஆக்கினாய்
-"நீ" என்னை 'நிர்வாண அழகி' ஆக்கினாய்
-"நீ" என்னை 'மறுபடி வரும்வரை உனக்காய் பாத்துக் கொண்டிருப்பவள்' ஆக்கினாய்
-"நீ" என்னை 'ஒவ்வொருநாளும் "உன்னை" இழந்துகொண்டிருந்தவள்' ஆக்கினாய்
-"நீ" எனக்காய் 'மனைவி இழந்தவனின் டாங்கோ' ஆக்கினாய்
-"நீ" என்னை 'கைவிடப்பட்டவள்' என்றாக்கினாய் .............................


'நான்' உன்னை
'மாபெரும் மூத்திரக்குடுக்கை' ஆக்கினேன்


பாப்லோ நெருடாவை ஒருவள் பெற்றுக்கொள்ளுதல் என்பது, அவருடைய ஆணாதிக்க/வயமூட்டும்/தன்னல + தன்னகங்காரமிக்க கருத்துக்களை காவி வருகிற எழுத்துக்களை, ஒரு 'பெண்'ணாய் அக்கணம் தகவமைத்து பழக்கப்படுதல் என்பதுடன் இணைந்துதான் நிகழ்கிறது. அவரை ஒரு பெண் மொழிபெயர்ப்பது, அவரது 'புகழ்பாடலால்' (glorification) நெகிழ்ச்சிக்குண்டான மனோநிலையுடனேயே நிகழும். இதனால் ஒரு ஆண் அவரை உள்வாங்கி, அவரது உளத்தளத்தை –அரசியல், சமூக- பின்புலத்தை அடைந்து கவிதைகள் ஒருவனால் மொழிபெயர்க்கப்படுவது உகந்ததாய்ப் படுகிறது (அவரது அரசியலை/காதலை ஆண்கள்தான் தமிழில் பெயர்த்திருப்பார்கள்).

'பாப்லோ நெரூதா கவிதைகள்' தொகுதி (டிசம்பர் 2004) உயிர்மையால் - சுகுமாரனது மொழிபெயர்ப்பில் வெளிவந்துள்ளது. வாசகர்/தமிழ்மொழி பற்றிய அலட்சியத்துடன் கவிதைகள் மொழிபெயர்க்கப்படவில்லை என்பதை அவரது முன்குறிப்புகள் ஊடாக உணர முடிகிறது. சுகுமாரனது உழைப்பும் பா.நெ. மீதான அவரது ஈடுபாடும், கூடவே, தமிழில் நீண்ட கால வாசிப்பும் பரிச்சயமும், தானே ஒரு கவிஞராக இருப்பதும் அவருடைய மொழிஆளுமையும் இத் தொகுப்பிலுள்ள நீள் கவிதைகளை பெயர்த்தெழுதுவதற்கு நன்கு உதவியிருக்கின்றன.

இத்தகையதொரு தொகுப்பின் வரவு பல வகைகளில் முக்கியமானது, அதனால், மூலக் கவிதையின் அதி ஆழ உருக்கங்களை இப் பெயர்ப்புகள் இழந்திருக்குமாயின் மொழிபெயர்ப்பாளராய் மற்றும் பாப்லோ நெருடாவின் '...கவிதைகளின் மீதான விமர்சனம் தீண்டாத ஆர்வத்தின் விளைவாக அவரது முக்கியமான நூல்களில் பெரும்பான்மையானவற்றை வாங்கிச் சேர்த்திருந்த(பக். 09)' வாசகனாய் சுகுமாரனுக்கோ அவர் போன்ற வேறு யாருக்குமோ எழக்கக்கூடிய வருத்தங்கள் என்வரையில் சிறிதளவும் இல்லை; பா.நெருடாவே வந்து அந்த அற்புதக் கவிதைகளை தமிழில் மீள எழுதித் தருமாப்போல வேண்டுமென 0.0000000000.....1% அவா கூட இல்லை.

காதல் பற்றின கதையாடல்கள் சூழ் பதின்மத்தில் அருமையான சினிமாப் பாடல்களின் இடம்போன்ற ஒன்றை எடுத்த அவரது காதற் கவிதைகளிற்கு என்னால் செய்யக்கூடிய மரியாதை: அ.மார்க்ஸ் வாஸந்திக்கு மலம் துடைத்து அனுப்பியது போன்ற ஒன்றுதான். வாஸந்திக்கு அப்படி எதிர்ப்புத் தெரிவித்தது தொடர்பாக அன்றைக்கு சரியாக என்ன உணர்ந்தேன் என்பது மறந்துவிட்டது; அதில், மலம் குறித்த அருவருப்பு, கட்டாயம் இருந்திருக்கும். இப்போதாயின், அதை நினைவுகூர்ந்து, அ.மார்க்ஸிற்கு எதிர் தளத்தில் இருப்பவர்களே 'மலத்தை இழிவென எண்ணியதன் வெளிப்பாடு அல்லவா அது' என வாதிக்கக் எழுதக் கூடும். அப்படியல்லாமல், மலம்தான் இழிவின் குறியீடு, அவமானப்படுத்தலின் குறியீடு என்றானால், பாப்லோ நெருடா நூற்றாண்டின் பொருட்டு அவரது இந்தப் பக்கங்களை உபயோகித்துச் செய்ய நினைப்பதும் அதையே தான். இது சுகுமாரனை அவமானப்படுத்த அல்ல. மாறாக, Pablo Neruda is, indeed, a piece of shit என்பது -'குறைந்தபட்சம் சிலருக்கு' என்றாவது- பலருக்கும் தெரியவேண்டும் என்பதால்.

காலனியாக்கத்தில், மூன்றாமுலக நாடுகளை ஆக்கிரமித்த ஆங்கிலேய கனவான்கள், தம் பெண்களைக் கதிரைகளில் இருத்தியும், மார்புகளை கொர்செற் போட்டிறுக்கிய -அவர்களுக்கு- உயர்-ரகவான அக்காலத்தைய 'கண்ணியமான' ஃபாஷன் ஆடைகளுடன் புகைப்படங்கள் எடுத்தும், தம் வழிகளில் தம் நிலங்களில் எத் திக்கும் சுதந்திரத்துடன் திரிந்த 'மூன்றாமுலக' பெண்களது நிர்வாணங்களை, கேட்பாரற்று, காட்டு விலங்குகளைப்போல 'படம்' பிடித்ததும் போலத்தான், இந்த பாப்லோ நெருடா என்கிற புரட்சியாளனின் மூன்றாமுலக பெண்கள்மீதான பார்வையும் இருந்தது. he shows no remorse, no remorse என மரணதண்டனைக் கைதிகளை எல்லாம் பதட்டத்துடன் பார்த்துப் பழகிய மக்கள் குழாம் நூற்றாண்டுகளாக இந்த மனிதர்(கள்) தனது சுயசரிதத்தில் தானும் அத்தகைய remorse ஐ தான்(ம்) 'பாவித்த'வர்கள் குறித்துக் கொண்டிருந்தாரா என்பதை தேடிப் பார்த்ததில்லை. ஏதோ பாப்லோயியமே விமர்சனங்களிற்கு அப்பாற்பட்டதென்பதுபோல, 'புரட்சி' என்கிற சொல்லைப் படித்ததுடன் கிட்டும் இன்பத்துடன் பல் தேசங்களில் பா.நெருடாவின் வாலைப் பிடித்தபடி திரிகிறார்கள் முற்போக்கு இளைஞன்கள்; அலுக்காமல் சலிக்காமல் தூசுதட்டப் படுகிறார் அவர்.

காலச்சுவடில், பா.நெருடாவின் ஆணாதிக்கத்தை வெளிப்படுத்தும் தரவுடன், ரவிக்குமார், தனது சில அவதானங்களைக் குறித்து எழுதியிருந்தார்:

இலங்கையில் நெரூடாவுக்கு ஏராளமான பெண்கள் கிடைக்கிறார்கள். அவர்களில் பெருபாலானோர்
"காலனியத்தின் விளைபொருட்கள்". ...இப்படிப் பெண்கள் சுலபமாகக் கிடைத்தாலும் நெரூடா
திருப்தி கொள்ளவில்லை. அவரது உடல் பெரு நெருப்பாக இரவு பகல் இடையறாது எரிந்து
கொண்டிருந்தது. பல பெண்கள் தாங்களாகவே விரும்பி அந்த நெருப்புக்குத் தமது உடல்களைத்
தந்து சென்றனர். போயர் பெண்கள், ஆங்கிலேயப் பெண்கள், திராவிட ரத்தம் ஓடும் பெண்கள்.

நெரூடா கொழும்பில் வசித்த பங்களா மிகப் பெரியது. அதன்
கழிவறை வெளியே
தனியே அமைக்கப்பட்டிருந்தது. அந்தக் கழிவறையை யார் சுத்தம் செய்கிறார்கள் என்பது
நெரூடாவுக்குத் தெரியாது. ஒருநாள் அது யாரென்பது நெரூடாவுக்குத் தெரிய வந்தது.
"இலங்கையில் நான் இதுவரை சந்தித்திராத அழகி. ஒரு சிலையைப் போல இருந்தாள். அவள் ஒரு
தமிழ்ப் பெண், பறையர் சாதியைச் சேர்ந்தவள். அவள் சிவப்பும் பொன் நிறமும் கொண்ட
மட்டரகமான புடவையை உடுத்தியிருந்தாள். கைகளில் கனமான வளையல்கள். அவளது மூக்கின்
இருபுறமும் இரண்டு சிறிய சிவப்பு மூக்குத்திகள்
மின்னிக்கொண்டிருந்தன. அவை
வெறும் கண்ணாடிகள்தான் என்ற போதிலும் அவளது முகத்தில் ரத்தினங்களாய் மின்னிக்
கொண்டிருந்தன."

அவளை வசியப்படுத்த நெரூடா பலவித முயற்சிகளைச் செய்கிறார்.
எதற்கும் பலனில்லை. "ஒரு நாள் நேராகச் சென்று அவளது கையைப் பிடித்தேன், கண்களைப்
பார்த்தேன். அவளோடு பேச என்னிடம் ஒரு மொழியும் இல்லை. ஒரு சிறு புன்னகைகூட இன்றி
அவள் படுக்கையறைக்கு வந்தாள்.'' ஆயிரம் ஆண்டுகளுக்கு
முற்பட்ட தென்னிந்தியச்
சிற்பத்தைப் போல அவள் இருந்ததாக நெரூடா வர்ணிக்கிறார். "அவளைப் புணர்ந்தது ஒரு
சிலையைப் புணர்ந்ததுபோல இருந்தது. கடைசிவரை அவளது கண்கள்
திறந்தபடியே இருந்தன.
அவளிடமிருந்து ஒரு எதிர்வினையும் இல்லை.''

பறையர் என நெரூடா
குறிப்பிட்டிருப்பது அக்காலத்தில் (1929) கொழும்பில் துப்புரவுப் பணியில்
ஈடுபட்டிருந்த சக்கிலிய வகுப்பினரைத்தான். நெரூடாவின் வர்ணனையைப் படிக்கும்போது
ஏறத்தாழ நெரூடா அப் பெண்ணைக் கற்பழித்தார் என்றே சொல்லத்
தோன்றுகிறது.
(ரவிக்குமார், ஆகஸ்ட் 2004, காலச்சுவடு)


ஒருவருக்குத் தண்டனை தருவது, எச்சிலால், அனேகமாய் வசைச் சொற்களால் இடுப்புக்குக் கீழுள்ள உறுப்புகளைப் தொடர்புபடுத்தி -மலம், மூத்திரம்-, மிருக எச்சங்கள் (சாணியடித்தல் இத்தியாதி) இவை உடன்படக் கூடிய விடயங்கள் இல்லைத்தான். ஆனால் வெளிப்படையாக சொல்லப்படுகிற/அறியப்படுகிற 'குற்றவியலுக்கு அடங்குகிற மனிதர்கள் மீது
மட்டும் தம் விமர்சனங்களை, குற்றவியல் சட்டத்தை பிரயோகித்தபடி, 'பாப்லோ நெருடா'வை -மனிதனாக விட்டுவிடுமாறு கோரிக்கைகளோடு- நூற்றாண்டு கொண்டாடிக் கொண்டிருக்கிறது!
அப்படியாயின் அழகான வார்த்தைகளால் கவிதைகளால் "நாகரீகமாக" யாரையும் சுரண்டு அவமதி கீழ்நிலையில் வைத்திரு என்றுதான் அதற்குப் பொருள் கொள்ளலாம்.

சிலவேளை, நமது பொழுதுபோக்குப் படங்களில் பொதுமக்கள் ஒழுக்கம்/ஒழுங்கு கடைப்பிடிப்பதில் பின்னிற்பதே சமூகக் கேடுகள் எல்லாவற்றுக்குமான காரணமென்பதுபோல காட்டப்படுவதும், அவை 'ஒழுங்கு' படுத்தப்படுவதும், 'ஒழுங்கற்ற' அவர்கள் தண்டிக்கப்படுவதும், மூலகர்த்தாக்களான தலைவர்களும் அரசாங்கங்களும் நலமே
இருப்பதுமாய் எடுக்கப்படுகிறதன் உளவியல் நீட்சிதான் இந்த 'பிம்பங்கள்' மீதான மோகமும் என்று தோன்றுகிறது. கடவுளோ அரசாங்கமோ கேள்விக்குட்படுத்த(ப்படாமல்) முடியாமல் வீற்றிருக்க, பின்பற்றுவோர் தவற்றில்தான் சகல(ஒழுங்கு)மும் குலைவது என்பதான பிம்பத்தை ஏற்படுத்துவதும், கொண்டாடுவதற்கும் கேள்விகளற்று விசுவாசத்துடன்
இருக்கவும் அமைப்பு/கொள்கை/நபர்கள்/திருஉருக்கள் ஐ கொண்டலையும் மனித மனம், அதில், 'பாதுகாப்பை' உணருகிறது போலும்.


நெருடாவின் 'நான் உன்னை அரசியாக்கினேன்' எனும் வரி வருகிற குறிப்பிட்ட கவிதையை இப்போது எழுதினால், "நீ யாரடா நாயே என்னை
அரசி ஆக்குவது" எனத்தான் எகிற முடியும். ராஜாராணிக் கதைகளில் வருகிற மந்திரசக்தி உடைய கதாபாத்திரங்கள்போல, தமது மந்திரக் கோலை உபயோகித்து ஒருவளை உயர்ரக ஆடைகளுடன் அழகு நங்கையாக மாற்றிவிடுவதுபோல, நெருடா காதலனாக அப்படியான ஒரு சக்தி உடையவராகவே முன் வருகிறார். அது கவிஞன் (ஆண்) என்கிற உயர் ஆசனத்தில் உட்காருவது தருகிற போதையின் விளைவு, அதற்கு, மேலதிகமாக, 'புரட்சி' 'மனிதநேயம்' என பதாகைகளையும் தந்துவிட்டால்
சொல்ல வேண்டியதில்லை. இந்த 21ம் நூற்றாண்டில், நாங்கள் அந்த நாற்காலியை எடுத்துவிட விரும்புகிறோம், ஒரு நூற்றாண்டு முடிந்துள்ளது இல்லையா!

'சொல்லப்படுகிற' காதலின் உணர்ச்சிப் பெருக்கு அவருடைய கவிதைகளில் அற்புதமாக வந்திருக்கிறதுதான்; இன்றும் பேசப்படுகிற Twenty Love Poems and a Desperate Song நூல் அவரது இருபதாவது வயதில் வெளியானது (1924). இந்தக் காதல் கவிதைகளிற்கும் -இதைப் படித்திராத- வெகுசன ரசனையுடைய இளம்பெண் ஒருத்தியைப் பருவங்களிற் கவரக் கூடிய காதற் பாடல் வரிகளிற்கும் வித்தியாசம், முதலாவது, ஒரு புரட்சியாளரால் சொல்லப்பட்டதென்பதால் உள்ளதா என்றால் - இல்லை! இன்றும் தொலைபேசியின் அருகாமையில் தனது காதலனின் அழைப்புக்காக உட்கார்ந்திருக்கிற பதின்மக்காரிகளின் காத்திருப்பிற்கும் எங்கெங்கோ
தேசங்களில் எனக்காகக் காத்திரு என்று விட்டுவந்த இந்த காதலனின் காதலிகளின் காத்திருப்பிற்கும் -என்ன பாரிய- வேறுபாடுகளைக் கண்டுவிட முடியும்? சொல்லப் போனால், முன்னது, பின்னதைப் போல ஒருவளது காலத்தை -திரும்பியே போகப் போகாத ஒருவனால்- எடுக்கப்
போகின்றதல்ல என்கின்ற வகையில், உத்தமமானதுங்கூட.

எல்லாக் காதல்போலவும், எல்லாக் காதலர் போலவும், அற்புதமான கவிஞனால் (ஒரு ஆணால்) நீ நேசிக்கப்படுகிறாய் என்பதுதான் கவிதை மையம்; பின்னர் ஒரு புரட்சியாளனாய் ஆனபிற்பாடும், 'புரட்சியில் ஈடுபடுகிற' + காதலன் ஒருத்தன் வாறானே ஒழிய கவிதைப் பொருள், வழமையான எல்லாக் காதல்களதும் கருப்பொருள்தான்.

'தெருக்களூடே நீ நடக்கையில் யாரும் உன்னை கண்டுகொள்வதில்லை': "யாருமே பொருட்படுத்தாத உன்னை ''நான்'' பொருட்படுத்துகிறேன்" என்பதான, 'எல்லாப் பெண்களுக்குள்ளும் 'நான்' உன்னை தேர்ந்தெடுத்தேன்': "அதற்காய் பெருமைப் படு" என்பதான காதல் வரிகள், அவர் புரட்சிகரப் போராட்டத்தில் இணைகிறபோது கீழுள்ளவாறான மாதிரியாக மாற்றம் பெறுகிறது:

'எனது தேசத்தில் மலையிருக்கிறது
எனது தேசத்தில் நதி இருக்கிறது
என்னுடன் வா
...
போராட்டம்
கடினமாயிருக்கும்
வாழ்க்கை கடினமாயிருக்கும்
ஆனால் நீ என்னுடன் வருவாய்.'

(In my country there is a mountain./In my country there is a river./Come with me./…/the struggle will be hard,/life will be hard,/but you will come with me)
வருடைய காலம் (எச்சசொச்சங்கள் இன்றுவரை) நெருடா என்கிற
புரட்சியாளன் + கவிஞனின் வீட்டில் அவனுக்காய்க் காத்திருக்கிற, அவனை
ஏதிர்பார்த்திருக்கிற, (கஸ்ரத்தில்) துணைவருகிற பெண் வந்து போகிறாள், அதுவே அவளது பங்காக, கொடுப்பினையாக, பிறவிப் பெரும் பயனாக கவிதை கூறுகிறது. பெருவாரியாய், இத்தகு கவிதைகளில் உள்நாதமாய், கூடவே, பா.நெருடா என்கிற இப் பிம்பம், மாபெரும் பிம்பம், உயர்ந்த, புரட்சி நாயக பிம்பம் கட்டியெழுப்பப்பட்டிருக்கிறது. இதற்கு சுகுமாரன் குறிப்பிடுகிற காரணமொன்று: "...மானுட உறவுகளின் மாளாக் காதலர், இயற்கையின் தீவிர ஆராதகர், அயராத போராளி - இந்த மூன்று நிலைகளின் படைப்பியல் விரிவே அவரது கவிதை. ஆனால் தமிழில் அவர் அடையாளப்படுத்தப்பட்டது சிந்தாந்தச் சார்புடைய போராட்டக்காரராகவும் அரசியல் கவிதையாளராகவும்தான். அந்தக் காலத்தின் தேவை அதுவா இருந்தது. தவிர, புரட்சிகர அரசியல் என்ற கனவை பராமரிக்க நெரூதாவின் கற்பனைவாத ஆவேசம் உகந்ததாகவுமிருந்தது. ..."(பக். 11).

ஆனால், அவர்கள்போல, ஒரு கவிஞனின் கவி-மேன்மையில் –அவரது புரிகிற ஆதிக்கக் கூறுகளுடன்- தங்கி, மேலும் அவற்றை உன்னதப்படுத்த முடியவில்லை.

ஈழப் போராட்ட ஆரம்ப இலக்கியக் பங்களிப்புகளிலும், 'மரணத்துள்
வாழ்வோம்' (விடியல்) தொகுதியிலேயே அந்த மூன்று பெண் கவிகள் முன்வகித்திருந்த யுத்தகால தமது பாத்திரமே "காத்திருக்கும்" மனைவி, தானும் (கணவனைப்போல) போராட முனையிற மனைவி, புத்திரசோகத்தில் தோயிற தாய் ஆகிய பங்குகள்தான். இராணுவத்தினர் கண்ணோக்கில் இருந்து அவர்களது மனைவிகளுக்குத் 'திரும்பி வருதல்' பற்றிய கடிதங்களையும், விடுதலைப் போராட்டத்தின் முக்கியத்துவம் பற்றி மனைவிக்கும் தோழிகளுக்கும் கடிதமே கவிதையாய் எழுதி தாம் போரட்டத்தில் ஈடுபடுகிற தீரத்தை விவரித்தார்கள் கவிஞன்கள்; பிற்பாடு, பெண் போராளிகளின் முன்னெடுப்பில் அந்த era பறந்தது;
"அன்புக் காதலியே,
யுத்தத்தில் இணைகிறேன்

- நம் மண்ணை மீட்க
முடிந்தால் புரட்சி பூமியில் வாழ்வோம்-
இப்போது விடை தா"

என்று "விடைபெற்ற" பாடல்களும் ஒரு முடிவுக்கு வந்தன!
யுத்தத்தில் பெண்கள் இணைந்தார்கள், காதலன்களால் 'தூண்டப்பட்டு' அல்ல, அக் 'காலத்தால்' தூண்டப்பட்டு. இந்த மாற்றத்தை உள்வாங்காமல், இடையில், ஈழத்திலிருந்து 'புலம்பெயர்ந்த' கவிஞர்கள் அந்தக் காலத்திலையே தங்கியதோடல்லாமல், தாம் இன்னொரு பா.நெருடா என role play செய்யத் தொடங்கிவிட்டார்கள்.
'அவருக்கு'த் தெரிந்த இவர்கள் குறித்து, 'ஈழத்துக் கவிஞர்கள்' என பொதுப்படையாய் ராஜ்மார்த்தாண்டன் எழுதிய (காலச்சுவடு, நவ-டிச 2002, இதழ் 44) கருத்து: "ஈழத்துக் கவிஞர்கள் பலருக்கும் தாம் கவிஞர் என்ற தன்முனைப்பு அவர்களது கவிதைகளில் சற்றே தூக்கலாக வெளிப்படுவதுண்டு." சற்றே என்ன? மானியாக் என்று சொல்லக்கூடிய அளவுக்கே உண்டுதான்.
சாமிவந்ததுபோல 'நான் கவிஞன் நான் கவிஞன்' என flow வாய்ப் போய்க்கொண்டிருக்கிற கவிதைக்கிடையில் ஒரு துள்ளுத் துள்ளி உறுதிப் படுத்தாமல் இருக்க முடிவதில்லை அவர்களால். பாலஸ்தீனக் கவிதைகள், பாப்லோ நெருடா போன்ற 'புரட்சிக் கவிஞர்களின்' கவிதைகளிடம் அவர்கள் nostalgic ஆய் சரணடைந்தார்கள்; துர/அதிர்ஷ்டவசமாக பா.நெருடாவின் 'வாழ்க்கைமுறை' வசீகரிக்கப்பட்ட அளவுக்கு கவிதைதான் வாய்க்கவில்லை. IT இன் பாடல்வரிகளிலுள்ள -always trying to copy But when they tried to use her vocab, they sounded sloppy- ‘அவளைப்போல இருக்க முயன்று தோற்றனர்' என்பதான வரியாய்த்தான் ஆனது படைப்பிலக்கியத்தில் பா.நெருடா மாதிரிகளாக தங்களை மாற்றக் கண்ட ஈழத்து ஜாம்பவான்களின் பெருங்கனவு, நிலை. ஒன்றில் பழைய உன்னதங்களை மீள எழுத முயன்றபடி, அல்லது 'காதல்' என எழுதிவிட்டு, அதற்கு, பூக்கன்றுகளிற்குப் போலத் தண்ணியடித்து வித்தை காட்டிக்கொண்டு காதல் கவிதை என்றும் காதல் கவிஞர் என்றும் அறியப்படுவதைவிட, பிரச்சினைக்குரிய 'அசலாக' இருப்பது கௌரதை தான்.

இருபாலாரும் யுத்தத்தில் ஈடுபடுகிற ஈழத்திலுள்ள தலைமுறையோ, "டேய் பா.நெருடா புலுடா விடாதே" என்று கொடுப்புக்குள் சிரித்தபடி படிக்கத்தான் வாய்த்தன அவரது பிரேரிக்கப்படும் காதற் கவிதைகள். ஏனெனில், பின்னால் மனைவிகளும் காதலிகளும் போராட்டத்தின் பாரத்தை இறக்கி வைக்க இல்லாத ஏராளம் இளைஞர்கள் அதில் ஈடுபடத்தான் செய்தார்கள். அத்தகைய சூழல்களில், ஒருவகை 'கவிஞர்காள் குசும்புகள்' எனவே இவற்றை எண்ணியதுண்டு (கவிதைகளை இந்தப் புரிதல்களுடன் ரசிப்பது வேறு விடயம்). ஆனால் பா.நெருடா பற்றிய பதிவுகளையும் சிறு எதிர்வினைகளுக்கே எழும்புகிற வியாக்கியானங்களையும் பார்க்கும்போது, அந்த சகாப்தம் ஒரு நோய்போல பீடித்துள்ளதையே உணரமுடிகிறது. இங்கே, சுகுமாரன், "பெண் ஸ்பரிசங்களின் வளம் நிரம்பியது அவரது அந்தரங்கம். மூன்று மனைவியர். அநேக தோழியர். எண்ணிக்கையிலொடுங்காத படுக்கையறைப் பங்காளிகள். அயலிட வாழ்க்கை மேற்கொண்டிருந்த காலத்தில் நுகர் பண்டமாக அவர் துய்த்து வீசிய பெண்கள் பலர். ...வெவ்வேறு காலகட்டங்களில் பாப்லோ நெரூதா உறவுகொண்டு விலகிய பெண்களின் எண்ணிக்கை ஏராளம். முகமற்ற இந்த அனேகக் காதலிகளின் எண்ணிக்கையை ஒரே பெயரில் ஒளித்துவைத்துக் கவிதைகளில் நினைவு கூரவும் செய்திருக்கிறார். மாபெரும் மனிதநேயரான நெரூதா இந்த வஞ்சனைகளால் மனம் கொந்தளித்திருந்தார் என்பதை அவரது கவிதை வரிகளுக்கிடையில் உலர்ந்து கிடக்கும் கண்ணீர்க் கோடுகளையும் உறைந்திருக்கும் இரத்தக் கசிவுகளையும் உணர முடிந்தால் அறியவும் முடியும்" (பக். 25, 26) என எழுதுகையில், ஏலவே 'நெரூதா கவிதைகளின் மீதான விமர்சனம் தீண்டாத ஆர்வம் குறித்து' குறிப்பிட்டிருந்தார்தான் என்றாலும் கவிஞரின் கண்ணீர்க் கோடுகளை மட்டுமே அவரால்/பலரால் பார்க்க முடிவதையும், தான் மொ-பெயர்த்திருக்கிற இந்தக் கவிதைகளில்கூட -குறிப்பாகக் காதலில்- பா.நெருதாவின் கண்ணீர்க் கோடுகளை எப்படிக் கண்டடைகிறார்கள் என்பதும், முக்கியமாக காதலின் கண்ணீரால் -உலகத்தின் அ/சாதரண மகா ஜனங்கள் அனைத்தும் சிந்தும் ஒன்றை சிந்துகையில்- அவர் எப்படி மனித நேயராக ஆகிறார் என்பதும் மிகமிக ஆச்சரியமாய் இருப்பதையும் சொல்ல வேண்டும்.
பின் மட்டையில், 'இருபதாம் நூற்றறாண்டில் எந்த மொழியிலும் மகத்தான கவிஞர் நெரூதாதான்' என்று Gabriel Garcia Marquez சொன்னது போடப்பட்டிருக்கிறது. உணர்ச்சிவசப்படுபவர்கள் ஒன்றைக் கூறமுன் தமக்கெத்தனை மொழிகளில் புலமையுண்டு என்பதையாவது எண்ணி பார்த்துப் படவேண்டும். மாச்சுபிச்சுவின் சிகரங்கள் போன்ற நீள் கவிதைகளில் அவர் எளிய ஆனால் நுட்பமான கவிஞராகத் தென்படுகிறார். அப்பால், பா.நெருடாவின் கவிதையில்தான் இதற்குப் பதில் சொல்லவேண்டும்:
உன்னைவிட உயராமானவர்கள் உள்ளார்கள், உயரமானவர்கள்

உன்னைவிட தூய்மையானவர்கள் உள்ளார்கள், தூய்மையானவர்கள்

உன்னைவிட அழகுமிகுந்தவர்கள் உள்ளார்கள், அழகு மிகுந்தவர்கள்

(.../there are taller ones than you, taller./theree are purer ones than you, purer./there are lovelier than you, lovelier.)


மிழர்கள் (பொதுமைப்படுத்தல்தான்- 'மனிதர்கள்' என்றும் வாசிக்கலாம்) ஆண்களைக் கட்டி அழுபவர்கள், கொண்டாடுபவர்கள் (பட்டியலிடுதல் போல கொண்டாடுதலும் ஒரு சமூக நோய்).
'பழக்கப்பட்ட' பட்டியலிடலாளர்கள். அதை குறைந்தபட்சம் காலத்துக் காலம் ஆள்மாற்றமாவது செய்யவேண்டும். நடிகைகள்தான் மாறுகிறார்கள். ஆண்களால் ஆசனம்போட்டு அமர்வதுதான் வேலை; அசைவதே இல்லை. தமிழிலக்கியம் சில பெயர்களைத்தான் தொடர்ந்து ஒப்புவிக்கிறது.
ஜெயகாந்தன், சு.ரா, புதிய பெயர்கள், ஈழத்துக் கவிஞர்களோ எனில் சேரன், ஜெயபாலன், சேரன், ஜெயபாலன் தான், ம்ஹீம், அப்பால் இல்லை!
(இவர்களை தள்ள ஆவது 'எனக்குத் தெரிந்த' பட்டியலைத் தருகிறேன்: (இலங்கையிலிருப்பவர்கள்: றஷ்மி, தேவஅபிரா, அஸ்வகோஸ், கருணாகரன், நிலாந்தன், பா. அகிலன், எஸ்.போஸ் (சந்திரபோஸ் சுதாகர்), அமரதாஸ், ஆகர்ஷியா, உவைஸ் கனி, தானா.விஷ்ணு...)
பட்டியல்கள், இலக்கங்கள்- இவற்றையே
நேசிப்பவர்களால் ஆன இத்தனை வருட ந....வீ.......ன இலக்கியப் பாரம்பரியத்தை விரித்துப் பாருங்கள்.
1, 2, 3, 4...
நான் கடைத் தெருவில் நின்றிருந்தேன்.
குடைபிடித்தபடி, வெள்ளை நிறப் பெண் வந்தபடி இருந்தாள். அவள் கை பூனை முடிகூட வெள்ளை.

என ஆரம்பிக்கிற கதைகள் முதல், யூமா.வாசுகி தெருப்பெண் முதல் கடை
விற்பனைப் பெண் வரை உள்ளடக்கி 'அமுதபருவம் வலம்புரியாய் அணைந்ததொரு சங்கு' (தமிழினி 2001) என கவிதை செய்கிறார். மகுடேசுவரன் சித்தி முதல் கிழவி வரை புணர்ச்சிக் குறிப்புகள் எழுதுகிறார். அப்புறம், 1, 2, 3, 4 என காதலை இலக்கமிட்டு எழுதுவார்கள். இலக்கங்கள் பட்டியலிடல்களில் தான் என்ன பிரியமோ!

கேள்வி: 2005 ஆம் ஆண்டு இத் திகதி வரையில் தமிழ் இலக்கியத்தில் எவளாவது காதலன் 1, 2, 3, 4 என இலக்கமிட்டு எழுதினாளா? 'ஆபாசமாய்' எழுதியவள்களில் யாரேனும்? தெருக்களில் கவர்ந்த ஆண்களைப் பற்றி ஒவ்வொவ்வொன்றாக குறிப்பிட்டு ஒவ்வொவ்வொருவருக்கும் கவி/தைகள் உண்டா?
முடிவாக, குழந்தையை/பெண்ணை/மனைவி(/களை)யை வன்புணர்பவர்கள் போன்றவர்களுக்குத் தருகிற 'மரியாதை'யையே இந்த நாகரீகமான உபயோகிப்பாளர்களான இவர்களுக்கும் தரவேண்டும். அதனூடாக, உன்னுடையதல்லதாத ஒரு உடம்பை -அதற்குரிய காலத்தை- சுரண்டுதல் என்பதும், சொற்களாலான வன்முறையுமே மனித உரிமைகளிற்கு எதிரானதென்பது தொடர்ந்து வலியுறுத்த/பேசப்படவேண்டும். அப்படியாவது, இன்னும் எத்தனை நூற்றாண்டுகளுக்கு "காதல்" "புரட்சிகர காதல்" என்கிற வலு கலாதியான சோடிக்கப்பட் சொற்களூடே "காத்திருப்பு" என்கிற வன்முறையைப் போற்றிக் கொண்டு, பட்டியலிட்டபடி, அதால் பல
நலன்களைப் பெற்றபடி தம் சுரண்டலைத் தொடரப் போகிறார்கள் என்பதையும் பொறுத்திருந்து பார்க்கலாம். கவிதைகளை கவிஞரை விலக்கி வாசிப்பதும் ரசிப்பதுங்கூட பயிற்சிகளூடே சாத்தியப்படுத்திக் கொள்ளலாம். ஆனால், படு பயங்கர ---தனமான ஆதிக்கத்தை நியாய்ப்படுத்துவதைத்தான் இங்கே எதிர்க்கப்படவேண்டியதாகிறது.
---------------------------
(பா.நெருடாவின் ஒரு கவிதை சுகுமாரனால் 'மாபெரும் மூத்திரக்குடுக்கை' என மொழிபெயர்க்கப்படக் காரணமாய் அவர் எழுதுவது: "...இந்த நூறு கவிதைகளில் ஒன்றுக்கு மட்டும் புதிய தலைப்பு இடப்பட்டிருக்கிறது. நெரூதாவின் மறைவுக்குப் பின் வெளியான கவிதைகளில் ஒன்றான 'தி கிரேட் யூரினேட்டர்' 'மூத்திரக்குடுக்கை' யாகியிருக்கிறது. ஆத்திரக்குடுக்கை என்ற பொதுவழக்கிலிருந்து உருவாக்கப்பட்ட சோற்சேர்க்கை அது." நான் உபயோகிப்பது "பாப்லோ" = The Great Urinator என்கிற, அவரது சிந்தனை அவ்விடமே மையங் கொண்டிருப்பது என்கிற நேரடி அர்த்தத்திலேயே).
-----------------------
தொடர்புடையவை:

ரவிக்குமார்: "இந்த உதடுகள் ஒன்றுகூடும்போது"

Stephen Schwartz: Bad Poet, Bad Man

யமுனா ராஜேந்திரன்: "பாப்லோ நெருடாவின் துரோகம்"

எனது பதிவு: "பாப்லோ நெரூதா: ஒரு நூற்றாண்டுத் துரோகம்"

12 Comments:

Blogger Thangamani said...

காத்திரமான, புகழ்சிகள், கற்பிதங்கள் மறைக்காத நேரடியான பார்வையைக் கோருகிற பதிவு. நன்றி!

7/27/2005 12:58:00 p.m.  
Blogger KARTHIKRAMAS said...

பாப்லோ நெருதாவைப்பற்றி மாற்று பார்வையைத் தரும் / சிந்தனையைத் தரும் ஆழமான பதிவு. 30 களில் இப்படி பல பெண்களோடு உறவுகொண்டதை எழுதுவதற்கும் ஒரு துணிவு வேண்டும்தானே.

//நெருடாவின் 'நான் உன்னை அரசியாக்கினேன்' எனும் வரி வருகிற குறிப்பிட்ட கவிதையை இப்போது எழுதினால், "நீ யாரடா நாயே என்னை
அரசி ஆக்குவது" எனத்தான் எகிற முடியும்// இவ்வளோ யோசித்தும் 'நாய்' விட்டுபோகலையா? ;-)

/கடவுளோ அரசாங்கமோ கேள்விக்குட்படுத்த(ப்படாமல்) முடியாமல் வீற்றிருக்க, பின்பற்றுவோர் தவற்றில்தான் சகல(ஒழுங்கு)மும் குலைவது என்பதான பிம்பத்தை ஏற்படுத்துவதும், கொண்டாடுவதற்கும் கேள்விகளற்று விசுவாசத்துடன்
இருக்கவும் அமைப்பு/கொள்கை/நபர்கள்/திருஉருக்கள் ஐ கொண்டலையும் மனித மனம், அதில், 'பாதுகாப்பை' உணருகிறது போலும்/

முக்கியமான வரி.
நன்றி பதிவுக்கு.

7/27/2005 02:26:00 p.m.  
Blogger Mookku Sundar said...

பொதுவாக ஆண்களிடத்தில் உள்ள "மேல்"( male) மனோபாவம், இம் மாதிரியான நுண்கலை ஈடுபாடுகளால் விகசிக்கிறது.

ஆண் என்கிறவன் ஒரு முரட்டு ஜந்து என்று எண்ணக்கலவையில் தோய்ந்த பெண்கள், நுண்கலைகளை ரசிப்பவன்/பயில்பவன் மென்மையானவாக இருக்கக்கூடும் என்கிற எண்ணத்தில் அவனை நாடுகிறார்கள். ஏற்கனவே அவனுக்கு இருக்கக்கூடிய வித்யா கர்வம், பெண்களும் விரும்பி நாடுவதால் இன்னமும் பலம் பெற்று, "நான் உன்னை அது ஆக்கினேன்..இது ஆக்கினேன் என்று சொல்லிக் கொண்டு "உபயோகப்படுத்த" சொல்கிறது.

குறிப்பாக இலங்கை புணர்ச்சி சம்பவத்தில் நாம் தை கற்பழிப்பு என்று சொலவது போல நேருதா நினைக்கதிருந்திருக்க வாய்ப்பிருக்கிறது. காரணம் அவளிடமிருந்து வந்த குறைவான எதிர்ப்பும், கண்களை திறந்து கொண்டே அவள் அதை "அனுபவித்தௌம்" என்று குட கற்பிதம் செய்து கொள்ளலாம். ஆனால் எனக்கொன்று புரியவில்லை... மனிதாபிமானம் இல்லாமல் இப்படி நடப்பவர்கள் எப்படி மாப்ரும் கலைஞ்ர்கள் ஆகிறார்கள் என்பதுதான்.
தினவாழ்க்கைக்கு வேறு அகம். கலைவடிவத்துக்கு வேறு அகமா..??

சாதாரண ஆசாமி ஆரம்பத்திலேயே
இடுப்புக்கு கீழே யோகிக்கிறான். கவிஞன்/ கலைஞன் கவிதை சொல்லி, பெண்களுக்கு பிடித்த பொய்கள் சொல்லி, அவளை இதமாக்கி பிறகு இடுப்புக்கு கீழே தொடுகிறான். எல்லாம் ஒரே பூனைதான். கருவாடு மறுக்காத பூனைகள்- நான் உள்பட :-(

7/27/2005 04:31:00 p.m.  
Blogger Mookku Sundar said...

இப்போதுதான் பார்த்தேன். உங்களுடைய இன்னொரு வலைப்பூவில் ( Hypocrisy) என்னுடைய இரண்டு பதிவுகளை சேமித்து வைத்திருக்கிறீர்கள். அதன் காரணத்தை விளக்க முடியுமா..??

நன்றிகள் முன்கூட்டி.

7/27/2005 05:55:00 p.m.  
Blogger Narain said...

Just saw this. running for a meeting, will come back and post. Good one on Neruda.

7/27/2005 07:26:00 p.m.  
Blogger Balaji-Paari said...

நல்ல பதிவு. நன்றிகள்

7/28/2005 04:39:00 p.m.  
Blogger ஒரு பொடிச்சி said...

நன்றி தங்கமணி கார்த்திக் சுந்தர் நரேன், பாலாஜி.

சுந்தர்: அது எனது 'இன்னொரு' வலைப்பதிவல்ல. பலவிதமான எண்ணப்போக்குகளை அறிய குறிப்பிட்ட அந்த பதிவுகள் உதவியிருக்கின்றன. அப்படிச் சில பதிவுகள் தேடத் தேவையில்லை என்பதற்காக அதில் copy & paste செய்வது.. எனது தேவைக்காக மட்டும்.

30 களில் இப்படி பல பெண்களோடு உறவுகொண்டதை எழுதுவதற்கும் ஒரு துணிவு வேண்டும்தானே.

30களில் மட்டுமல்ல அதற்கு முன்னையும் இப்போதுவரை நிறையப் பெண்களோடு உறவுகொண்டதை எழுத ஆண்களுக்கு துணிவு தேவையில்லை.

நமனிதாபிமானம் இல்லாமல் இப்படி நடப்பவர்கள் எப்படி மாப்ரும் கலைஞ்ர்கள் ஆகிறார்கள் என்பதுதான்.
தினவாழ்க்கைக்கு வேறு அகம். கலைவடிவத்துக்கு வேறு அகமா..??


கிளிண்டன் பெண்ணின் பின்புறம் தட்டினால் 'குறும்பு' சாதாரண ஆள் தட்டினால் ஜெயில் அந்த கணக்குத்தான்.

கொண்டாடுபவர்கள் கொண்டாடட்டும். என்னுடைய பிரச்சினையெல்லாம் அதற்கெதிராக எழுகிற விமர்சனங்களையெல்லாம் உயரிய தத்துவங்களுள் நசுக்க முனைவதுதான்.

நன்றி

7/29/2005 01:14:00 p.m.  
Blogger Boston Bala said...

வழக்கம் போல் ரெண்டு மூணு தடவை படித்துப் (ஓரளவு) புரிந்து கொண்ட பதிவு. நன்றி.

---சாதாரண ஆள் தட்டினால் ஜெயில் அந்த கணக்குத்தான்---

அப்படியா? நான் பார்த்த மட்டும் இந்தியாவில் எந்தப் பிரச்சினையும் வந்ததில்லை. பேருந்துகள், சாலைகள், அலுவலகங்கள்.... என்று 'பாய்ஸ்' முதல் மூத்தகுடி வரை பார்த்திருக்கிறேன்.

மேற்கத்திய உலகில் (நான் கண்டது அமெரிக்கா மட்டுமே; சும்மா ஒரு பந்தாவுக்கு மேற்கத்திய உலகு என்று பொதுமைப்படுத்துகிறேன்) இந்த வழக்கத்தை நோயாக (சிண்ட்ரோம்) பாவித்து, சிகிச்சை அளிப்பார்கள். கொலை செய்தவர்களே மனம் பிழற்ந்த (இன்சானிடி) நிலையில் செய்ததாக நிரூபித்துத் தப்பித்துக் கொள்வார்களே :-)

8/03/2005 06:29:00 a.m.  
Blogger சுந்தரவடிவேல் said...

நல்ல பதிவு. புரட்சிக் காரன், கவிஞன் என்ற பட்டங்களோடு இருக்கிறவர்கள் மட்டுமல்லாது "சாதாரண" ஆண்களும் பலவிதங்களில் பெண்களின் மீதான வன்முறைகளை அறிந்தோ அறியாமலோ நிகழ்த்திய வண்ணமேயிருக்கிறோம் என்பதை இன்னொரு முறை உணர வைக்கிறது.
சிலவிடங்களில் 'தென்றல்' படத்தின் எழுத்தாளக் கதாநாயகனும் அவனுக்காகக் காத்திருந்தவளும் நினைவுக்கு வந்து போனார்கள்! இதோ வரிசையாய்க் கோப்பையும் கோலமயிலுமாய் நிறைய பேர் நிற்கிறார்கள்!
கவிதை,இத்யாதியெல்லாம் அலங்காரங்கள். இவற்றைப் பயன்படுத்திப் பெண்களை "வசீகரிப்பதை" ஏற்றுக்கொள்ள முடிகின்ற பலரால் இது மாதிரியான அலங்காரங்களைப் பயன்படுத்தி ஆண்களை மயக்கும் பெண்களைக் கதாநாயகிகளாக, நோபல் பரிசு வெற்றியாளர்களாகக் கொண்டாட முடியுமா என்ற கேள்வியை உணர முடிகிறது. இவ்விடத்தில்தான் கற்பில் சிறந்தவள் இவளா அவளா பட்டிமன்றங்கள் முக்கியத்துவம் பெறுகின்றன! இப்படியாகப் போய்க் கொண்டிருக்கும்...பதிவுக்கு நன்றி.

8/05/2005 07:14:00 a.m.  
Blogger sudarakan said...

This comment has been removed by a blog administrator.

10/06/2005 10:05:00 a.m.  
Blogger Thevaabira said...

நல்லதொரு பதிவு.
இதே கண்ணோட்டத்தில் ஈழத்து ஆண்கவிஞர்களின் மனோபாவத்தையும் அவர்களின் கவிதைகளினூடு விமர்சிக்கலாமே!
தேவ அபிரா

7/27/2007 01:57:00 p.m.  
Blogger Thangamani said...

பின்னூட்டத்தால் மேலெழுந்த இந்தப்பதிவை மீளவாசிக்கும் போது ரவிக்குமாரின் கட்டுரையைப்பற்றிய வேறொருவாசிப்பில் கிடைத்ததை இங்கு சொல்லலாம் என்று நினைக்கிறேன்.

ரவிக்குமார் 'பறையர்' இனப்பெண் என்று குறிக்கப்படுகிற பெண் உண்மையில் சக்கிலியர் என்று குறிப்பிடுவதன் அவசியம் பற்றியது. தலித்துகளுக்குள்ளேயே இருக்கும் பறையர்-சக்கிலியர் என்ற படிநிலையால் விளைந்த பெருமிதமே ரவிக்குமாரை அப்படியாக இங்கு குறிப்பிடச்செய்திருப்பதாய் ரவிக்குமாரைப் பற்றிய கட்டுரையாளர் குறிப்பிட்டுருந்தார். அந்தக் கட்டுரை/ஆசிரியர் பெயர் நினைவில் இல்லை. இன்றைக்கு விடுதலைச் சிறுத்தைகள் சக்கிலியர் உள்ளிட்ட பிற விளிம்புநிலை தலித்துகள் / பெண்கள் கற்புநிலை குறித்து எடுக்கும் நிலைப்பாடுகள் எல்லாம் அந்தக் கட்டுரைஆசிரியரின் கூற்றை வலுவக்குவதாகவே இருக்கிறதென நினைக்கிறேன்.

9/29/2007 03:27:00 p.m.  

Post a Comment

<< Home