@font-face { font-family: TSCu_InaiMathi; font-style:normal; font-size: 10pt; font-weight:normal; src:url(http://mathy.kandasamy.net/fonts/TSCUINA1.eot); }

Wednesday, November 24, 2004

Peddai is going on a leave

hi fellow readers,


thanks: photo

peddai is going on cruising to Caribbean Islands.
So there wouldn't be any posts posted here until the next year.
Don't be so happy abt me not writing anything-
Lets us meet here in the freshen year (too bad!)!
Until then,
Advance, greetings! Merry Christmas & Happy new year to U all.
buh-bye!





Saturday, November 20, 2004

எழுத்து வன்முறை

நீங்கள் கதை, கவிதை, கட்டுரைகள் அனுப்பலாம். தயவுசெய்து முலைக் கவிதைகளையெல்லாம் அனுப்பி எங்கள் தாலி அறுக்க வேண்டாம். அதற்கென்றே காலச்சுவடு, உயிர்மை போன்ற ஸ்பெசல் பத்திகைகள் நடத்தப்படு கின்றன. "முலைகளே இல்லாத, அல்லது சிறிதாக இருக்கிற நம் பெண் கவிதாயினிகள் அதைப் பற்றி எழுதுகிறார்கள், உங்களுக்கென்ன இவ்வளவு கோபம்' என்றார் நண்பர் ஒருவர்.
அது சரி, அதற்கு கவிதை எதற்கு எழுத வேண்டும். பேசாமல் நாயுடு ஹாலுக்குப்போய் ஒரு உருப்படியை வாங்கி மாட்டிக்கொண்டோ அல்லது தங்கள் பின்புறச்சதையை அறுத்து பிளாஸ்டிக் சர்ஜரி செய்துகொண்டோ ஒழிய வேண்டியதுதானே? என்றேன் நான்.

இன்னொரு நண்பர் சொன்னார், "போர்னோ எழுத்துகளைப் படிக்கும்போது என்ன விதமான உணர்வுகள் ஏற்படுகிறதோ அதே உணர்வுகள்தானே, பெண் விடுதலை, பெண் சமத்துவம் என்கிற ஹோதாவில் எழுதப்படுகின்ற இந்தவித முலைக்கவிதைகளைப் படிக்கும்போதும் ஏற்படுகின்றது. அப்படியிருக்க இப்படிப்பட்ட கவிதைகளை எழுதிவிட்டு எப்படி இவர்கள் விரும்பும் பெண் விடுதலை, பெண் சமத்துவபுரங்களை உருவாக்குவார்கள்?' என்று. எங்களுக்கும் இதே கேள்விகள்தான்? எனவே உங்கள் கேள்விக்கு நாங்கள் பதில் சொல்ல இயலாதவர்களாயிருக்கிறோம். ஒருவேளை யாராவது பெண் கவிதாயினிகள் பதில் வைத்திருக்கலாம். அல்லது உலக வரைபடத்திலேயே இல்லாத ஒரு கற்பனையான நாட்டின் பெயரைச் சொல்லி அந்தநாட்டில் இந்த மாதி முலைக் கவிதைகள் எழுதிய பின்னர்தான் மிகப்பெரிய சமூகப் புரட்சி ஏற்பட்டு பெண் விடுதலை, பெண் சமத்துவபுரங்களெல்லாம் ஏற்பட்டதென்று சொல்லலாம்.

செப். 2004 கசடதபற இதழின் தலையங்கத்திலிருந்து





குட்டிரேவதி கவிதைகள் எனக்குப் பிடிக்காது (இதை சொல்வதே ஒரு தற்காப்புப்போல தொனிக்கிறது!). தேவதேவனுடையதைப்போல படிமங்களால் நெய்து கண்முன்னே படிமங்களே மிதக்கிற வெறும் சொற்சித்திரங்கள்; மனதுள் ஊடுருவாது எளிதில் அயர்ச்சியைத் தந்துவிடுபவை. இத்தகைய கவிதைகளை தொடர்ந்து ‘ஒரே மூச்சில்” படிக்க முடியாதிருப்பது அதற்குரிய தகமையா பலவீனமா தெரியவில்லை (போர்னோ எழுத்துக்களை ஆண்கள் யாரும் ‘வைத்து வைத்து’ படிப்பார்களா?) 'முலைகள்' வெளிவந்தபின்னான, ‘பலத்த’ சர்ச்சைகளிற்குப் பிறகு தொகுப்பை மீண்டும் படித்தேன், அதிகம் பிடித்திருந்தது. விமர்சகர்கள், இந்தப் புத்தகத்திற்க வைத்திருந்த விமர்சனமும் இதுதான். ‘கவனம் பெற’ அல்லது ‘தடாலடியாக’ அல்லது ‘CATCHY’ யான தலைப்பிட்டதால் இந்தப் புத்தகத்திற்கு ‘மற்றத் திறமையானவர்களுக்குக்’ கிடைக்கவேண்டிய கவனம், அங்கீகாரமெல்லாம் கிடைத்துவிட்டது! (கிடைக்கவேண்டிய ஆக்கள் பாவமென?!)

என்னோட எண்ணம் என்னெண்டா, கிடைச்சா என்ன? ஒரு சடங்கு போல, குமுதம், ஆனந்தவிகடன், கல்கி போன்ற வெகுசன இதழ்களை தொடர்ந்து எடுப்பதை வழக்கமாய்க் கொண்டுள்ளவர்கள் நாங்கள் (இப்போது காலச்சுவடு, உயிர்மைகூட அப்படித்தான் வந்துவிட்டது வேறு விடயம்). அதுகளத் தொடர்ந்து எடுப்பம், படிப்பம், எறிவம் - அது இயல்பென வந்துவிட்டது. அப்ப, ஒரு தீவிர இலக்கிய சூழலில வாற கவிதை நூல் ஒன்றை, அதன், ‘கவர்ந்திழுக்கிற’ தலையங்கத்திற்காக ஒருக்கா வேண்டினாத்தான் என்ன? அதால தமிழ் கூறும் நல்லுலகத்திற்கு என்ன நஸ்ரம்?

ஏதோ இருக்குத் தான் போல.

முந்தியொரு காலத்தில, வானொலியொன்றில விமர்சனம் ஒன்று செய்தபோது ஏற்பட்ட அனுபவம்தான் ஞாபகம் வருது. அதில், இந்தியாவில், பன்னாட்டு அழகுசாதன உற்பத்தி நிறுவனங்களின் ஆதிக்கம், இந்தியாவிலேயே தொடர்ந்து உலக அழகிகள் தேர்வாகிறதற்கான உண்மையான காரணம் என்பனவற்றை உள்ளடக்கி ‘சிவப்பழகைப் பெற’ தமிழ்நாட்டின் நம்பர் ஒன் இதழ்கள் தருகிற ரிப்ஸ் இவற்றின் பின்புலம் என ஆராய முயன்றிருந்தேன். அப்போது படித்த இது பற்றிய கட்டுரையை ஒட்டி இருந்தது அந்த விமர்சனம்.
அந்தக் கட்டுரையில், சத்ய ஜித் ரே யின் திரைப்படம் ஒன்றில் வந்த ஒரு காட்சியை வர்ணித்திருந்தார்கள்: வறிய இந்தியக் கிராமமொன்றில், ஒரு ஏழைச் சிறுமி, கரித் துண்டினால் கண் மை இட்டுக் கொள்கிறாள் - ஆம் அதிலிருந்துதான் ஆரம்பிக்கிறது இந்திய (ஆசிய)ப் பெண்களின் அழகு பற்றிய கனவு. அந்தக் கனவை வளர்ப்பதில்தான் பன்னாட்டு நிறுவனங்களின் உற்பத்தி விற்பனை தங்கியுள்ளது என சொல்ல முயன்றிருந்தேன்.

இது நடந்து, நீண்ட நாளைக்குப் பிறகு, என் அத்தைக்காரி ஒருத்தி என்னைச் சந்திக்கும்போது அவள் கேட்டாள், ‘அடியே, றேடியோ கேக்கிற மனுசி ஒண்டிட்ட நீ என்ர மருமகள்தான் எண்டு சொல்ல, அவ நீ கறுப்போ எண்டு கேட்டாடி, ஏனடி?” சிரிப்புத்தான் வந்தது, அட பாவமே!

அதன்பிறகு நான் ரொறன்ரோவில் நின்றிருந்தபோது முழக்கம் பத்திரிகைஇல் கவிஞர் சக்கரவர்த்தியின் பேட்டி ‘வெள்ளாளர்களுக்கு எதிராக,’ ‘பார்ப்பனர்களுக்கு எதிராக’ என அதிரடியாக வந்திருந்து. இதுபற்றி நண்பர் ஒருவர் சொன்னார், சக்கரவர்ததி ஒரு வசனத்தை அதில் சொல்லியிருந்தார், அது ஒரு முக்கியமான வசனம் என்று. அது “என்னுடைய சொந்தக்காரர்கள் எல்லாம் சாதிமான்கள்தான். நான் இப்பிடி இதுவள எதிர்க்கிறது அவர்களுக்குப் பிடிப்பில்ல’ என்டிறாப்போல ஒண்டு. இதனூடே அவர் தனது சாதியை இன்வேர்ட்டக் கொமாக்குள்ள சொல்றார் என்றார் அந்த நண்பர்.

சக்கரவர்த்தியோ, அல்லது பிறரோ அதை நனவாக சொல்கிறார்கள் என்பது இல்லை, ஆனால் அப்படி ஒரு ஸ்ரேற்மன்ற் தேவையாத்தான் இருக்கிறது. அல்லது ஏலவே சொல்லப்படுபவற்றில் அப்படி ஒரு அர்த்தம் எப்படியோ வந்துவிடுகிறது.

அப்படி ஒன்றைச் சொல்லாதுவிட்டால், அந்த சொற்களுக்கு பெறுமதி இல்லையா, அந்த சொற்களுக்கப்பாலான ஆர்வம் ஏன் பிற விடயங்கள்மேலேயே வருகிறது?

தெரியாது.
ஆனா பொதுப்புத்தியில் (புத்திசீவிகள், சாதாரணமக்கள்) இதுதான் கேள்வி, ஒரு விமர்சனத்திற்கான பதில் விமர்சனம் இதுதான்.

வீட்டில் பிரச்சினை ஏதோ இருப்பதால் (மட்டுமே) பெண்கள் எழுதுகிறார்கள்; காமத்தில் திருப்தி இல்லாததால் காமத்தைப் பற்றி எழுதுகிறார்கள் அல்லது உடலுறவு தேவைப்படுகிறது அதனால் எழுதுகிறார்கள்; முலைகளைப் பற்றி எழுதுபவர்களுக்கு முலைகளே இல்லை –அந்த வயிற்றெரிச்சலில்தான் முலைகளைப் பற்றி எழுதுகிறார்கள்-; சாதியை எதிர்க்கிறார் ஆகவே இவர் சாதி குறைவு (அல்லது சாதி குறைவென்றதாலதான் சாதியை எதிர்க்கிறார்)...


இந்த ஒப்பற்ற முடிவுளால் மிக மிக பிற்போக்கான ஒரு கருத்தைத்தான் நாம் கொண்டிருப்போம் என்பது எங்களுக்குப் புரிவதில்லை.
தலித் விடுதலை பற்றி எழுதுகிற தலித்தல்லாத ஒருவர் ‘நீங்கள் தலித்தோ” என்று கேட்கப்படுகிறபோது விழுந்தடித்துக்கொண்டு ‘சீச்சி இல்ல இல்ல” எனலாம்; அத்தையும் ஒரு பெரிய சீயோட அவள் அவ்வளவு கறுப்பில்ல எண்டு ‘ரோசத்தோட’ சொல்லலாம்.

ஆனால் “அப்படித்தான் இருக்கவேணும்’ என்பவர்களது எண்ணப்பாடும், ‘இல்லை’ என மறுப்பவர்களது எண்ணப்பாடும் என்னவாக இருக்கிறது?
அப்படித்தான் இருக்கிறபோது (தலித்தாக, கறுப்பாக) என்னவிதமான ‘திருப்தியை“ பொதுப்புத்தி உணருகிறது?

குட்டி ரேவதியினது கவிதைகளைவிட அவர்மீது வைக்கப்பட்டிருக்கும் விமர்சனங்கள் முக்கியமானது. சல்மா, ‘'என்னுடைய நாவலுக்கு இப்படி ஏதாவது ஒரு தலைப்பை வைத்தால் அதிகமான கவனம் கிடைக்கும். அப்படிச் செய்யவேண்டாம் என்றே நான் நினைக்கிறேன். நான் எழுதியுள்ள விஷயங்களால் எனக்குக் கவனம் வந்தால் போதுமானது.''

எனச் சொல்லியிருந்தார். நல்லது. ஆனால் அதொரு ‘நான் தலித் இல்ல’ வகை பதில்தான். அது சல்மாவுடைய முடிவு, நிலைப்பாடு (இந்த நிலைப்பாட்டில், அடிப்படையில், எனக்கும் சம்மதம்தான், குட்டிரேவதியினுடையதைவிட லீனா மணிமேகலையின் கவிதைத் தொகுப்பில் முன் அட்டையில ஒரு நிர்வாணப் பெண்ணின் படம் இருந்தது. இருப்பதில் ஒரு பிரச்சினையும் இல்லை, ஆனால் இந்தப் புத்தகம் நிறையப் பெண்களால் சுதந்திரமாகப் படிக்கப்படவேண்டும் என்கிற நோக்கம் உண்டெனில், நிறையப் பெண்களுக்கு, அவர்கள் வீடுகளில், முன்னட்டையில் நிர்வாணப் பெண் அவ்வளவு ‘வசதியான’ ஒன்றாக இராதெனவே நானும் நினைக்கிறேன்). குறிப்பிட்ட பேட்டியில் பேட்டியாளர் கேட்கிறபோது இத்தகைய பதில்களையே எதிர்பார்ப்பதுபோலவும் தோன்றுகிறது. அவ்விடத்தில் சல்மா போன்ற பெண்கள் அத்தகைய பதில்களைத் தவிர்க்கலாம். முலைகள் தொகுதியில் முன்னட்டை மிகவும் பழைய, ஆர்வத்தை தூண்டாத, டல் லான, வியாபார தந்திரமே அற்ற ஒரு sketch ஐக் கொண்டிருந்தது. (தலைப்பே ஆர்வத்தைத் தூண்டுவதற்குப் போதுமானது என விமர்சகர்கள் நினைப்பதுபோல பதிப்பாளர்களும் நினைத்திருக்கலாமும்தான்!).

ஒரு கடையில் போய் ‘முலைகள் தொகுதி இருக்கிறதா’ எனக் கேட்பது உண்மையில் ஒரு தமிழ் ஆண்மகனைவிட, பெண்ணிற்கே சங்கடமான (விற்பனையாளர் ஆணாக இருக்கிற பட்சத்தில்) விடயமாக இருக்கும். ஆக, இது ஒரு பெண்களின் பிரச்சினை! அங்கே இதே விற்பனையாளர் பெண்ணாக இருந்தால் ஆண்களுக்கு அது ஒரு குறும்பாக, ஒரு அழகான சீண்டலாக, அன்றைய பொழுது முழுதும் நினைத்திருக்கக்கூடிய சம்பவங்களில் ஒன்றாகவே இருக்குமென தோன்றுகிறது (உதாரணம் கேள்வி: “முலைகள் இருக்கிறதா?”). ஆக, அவர்களுக்கு அது ஒரு கொண்டாட்டம். இது வந்த காலத்திலும் இதை ஒத்த நிறைய 'நகைச்சுவைகள்' அவர்களுக்குள் ஊடாடி இருக்கும் என்பதும் உறுதி. இருப்பினும், இத்தொகுதியால் சீண்டப்பட்டவர்கள் பெரும்பாலானவர்கள் ஆண்கள்தான்.

சுல்மாவினதும் எனதும் அபிப்பிராயத்தின்படிதான் ‘முலைகள்’ இருக்கவேண்டுமென்பதல்ல. கவர்ச்சியாக, போகப்பொருளாக, மேலதிக கவனத்துடன் நோக்கப்பட்ட ஒன்றை வெகு சாதாரணமாக ஒரு தொகுப்பிற்கு தலைப்பாகப் போடுவது ஒரு கலகமாகக் கூட இருக்கலாம். காலங்காலமாக அடக்கப்பட்ட சாதியினர் தம் சாதி அடையாளத்தையே எதிர்ப்பு சொல்லாக உபயோகிப்பதுபோல... மற்றது, தொகுப்பிலேயே சிறந்த கவிதையின் தலைப்பை தமது கவிதைத் தொகுப்பிற்கிடுவது ஒரு வழக்கம். அந்தவகையில் கு.ரேவதியின் கவிதைகளில் “முலைகள்’ சிறந்ததாய் இருக்கிறது, அந்த அடிப்படையில் அதைத் தலைப்பிட ஆட்சேபனை அவரிடம் இல்லாதபோது மற்றவர்கள் ஆட்சேபங் கொள்ள அங்கே என்ன இருக்கிறது?
ஆனால் விமர்சகர்கள் அப்படி எல்லாம் சாதாரணமாய் அதை எடுத்துக்கொள்ளத் தயாராய் இல்லை.

கவிஞர் சேரனை நித்திய காதலன் என கொண்டாடிய காலச்சுவடு இதழில் பிரம்மராஜன் குட்டி ரேவதியின் கவிதைத் தொகுப்புக்கு மதிப்புரை எழுதியிருந்தார். அவரது ஒற்றைப் பக்க மதிப்புரையில், அப்படித் தலைப்பிட்டமை, அவரைக் குத்தவே செய்கிறது. மதிப்புரையை எழுதியவர்கள் வேறுவேறு என்றாலும் சேரனின் கவிதைகள் 'கவனத்திற்காக' 'பெண்களை வசீகரிக்க ஒரு திரைப்பட நாயகன் போல் மாயைகளை உருவாக்கியபடி' எழுதப்பட்டவை என பிரம்மராஜன் ஒருபோதும் எழுதப் போவதில்லை என்பதும் உறுதி.
அதென்னவோ, குருதி சுக்கிலம் செம்மது என 'வலிந்துகட்டி' சேரன் நகைச்சுவையான கவிதைகளை எழுதலாம், ஆனால் குட்டி ரேவதி 'எனது பிரத்தியேக உறுப்புகளான ஜோனியும் முலைகளும்...' என எழுதக்கூடாது, ஏனெனில் அதைத் தெரிந்தே அவர் எழுத (முலைகள் என ஒரு தொகுப்பு விட) வந்திருக்கிறார்! என்ன நியாயம்! ஆனால் அது அப்படித்தான் இருக்கிறது.
சேரன் என்பவர் ஒரு ஆண் சக அரசியல் ஈடுபாடுள்ள கவிஞர். குட்டி ரேவதியோ வெறும் கவனிப்புக்காக ஏங்கி எழுதும் ஒரு பெண்மணி. வாழ்வின் எண்ணற்ற முக்கியமான விடயங்களை (சேரனுக்குக் கிடைக்கப் பெற்ற போராட்டம், வாழ்நாள் முழவதுமான அரசியல் ஈடுபாடு) உப்புசப்பற்றதாக்கி ஆக செக்சைபற்றி அவர் எழுதிவிட்டார். அது உண்மையில் அவரைப்போன்ற கவிஞர்களின் பாரதூரமான தவறு, அவற்றை எழுத வேண்டியவர்கள் ஆண்கள்தான்.

செப். 2004 கசடற இதழில் வந்தது மேலே தரப்பட்டிருக்கிறது; பலவிதமான கேள்விகள் எழுகிறது.


முலைகள் இல்லாத தாய்கள் எதனால் தம் மகவுக்கு பால் ஊட்டுகிறார்கள்? முலைகள் இல்லை என்பது எந்தக் கண்ணோட்டத்தில்? முலைகள் இல்லாமல் பாலூட்ட முடியாது போன தாய்கள் உண்டா?

குட்டி ரேவதியின் தலைப்புக் கவிதையிலும் சரி பிறவிலும் சரி போர்னோ எழுத்து எங்கு வந்தென்று எனக்குத் தெரியவில்லை. இப்படி ஒரு விதண்டாவாதம், வன்மம் எதற்கானது?

இந்த விமர்சனத்தை –ஏனையவற்றைப்போலவே- படித்தபோது ஒன்று புரிந்தது. இதை ‘கண்டதும் கேட்டதும்’ பகுதியில் காலச்சவடு எடுத்துப் போட்டிருக்கிறது. காலச்சுவடில் பிரம்மராஜன் முலைகளை வெறும் வியர்வைச் சுரப்பி என எழுதினார். இந்த நண்பர்கள் பின்புறச் சதைகளை அறுத்து வைப்பதைப்பற்றியும். வேண்டி மாட்டுவதைப் பற்றியும் எழுதியுள்ளார்கள்! வெறும் வியர்வைச் சுரப்பி இல்லை என்கிற அக்கறையிலா இதை அவர்கள் சொல்கிறார்கள்! ஒரு பாலியல்ஈர்ப்பு மையம் இல்லை (இல்லை என்பதன் அர்த்தம் ‘பெரிதாக’ இல்லை) என்கிற தாழ்வுணர்ச்சியை அல்லவா ஊட்ட முனைகிறார்கள்?! பின்புறச் சதை இல்லாதவர்கள் பாவம் என்ன செய்வார்களோ எனவும் ஒரு கவலை பிறக்கிறது..

ஒரு இதழின் தலையங்கமே இப்படி இருந்தால்- இதுபோன்று
இக் கவிதைத் தொகுப்பிற்கு, விமர்சனம் என ‘அதற்கு தமக்கு தகுதி இருக்கிறது’ என எழுதிய பலரதும் நோக்கமும், வெளிப்பாடும்தான் கீழ்த்தரமானவையாக, அருவருக்கத்தக்க முறையில் இருக்கின்றன. இத்தகைய தொகுப்பை எழுதியதற்காக அவர் ‘வெட்கப்பட்டு” விடவேண்டுமென்கிற ஆண் மனமும், பெண்ணை தாக்க இடம் தேடும் கீழ்மையும்தான் தெரிகிறது. நடு வீதியில் எரிக்கப்படவேண்டியது இவர்களது இந்த சிந்தனை (ஐயோ, அதுதானா அதற்குப் பெயர்?) கள்தான்.
இப்படி எழுதிய, எழுதிக்கொண்டிருக்கிற, ஒரு கூட்டம்தான் முற்போக்காளர்கள் என்றால் அந்த அறிவுலகத்தைக் கடவுள் காக்க!

Friday, November 12, 2004

அமெரிக்காவுக்குச் சவால் விடுதல்

(2)

நிறையப் பேர் நினைக்கினம், பேச்செண்டிறது ஒரு மைக் கிடைச்சோண்ண நிகழ்ற எண்டு. இங்ஙனேக்க சொற்பொழிவுகள் வெகு அபூர்வம்தான் என்றாலும் அப்பேர்ப்பட்ட அவஸ்தைகள அனுபவிச்சதுண்டு (ரொறன்ரோ வரும்போது நிச்சயமாக அனுபவிக்காமல் போனதில்லை). நீட்டி முழக்கி அப்பா, அப்பப்பா, சுரத்தே இல்லாமல் எப்படித்தான் பேசுகிறார்களோ.
முதுகு நோவு, தலையிடி, கால் விறைப்பு, பைத்தியம் பிடிக்கிறதிற்கு முதல் படி என்று இடையில எழுந்து போகிற வெளிப்படைத்தன்மை இல்லாததால் (அவர்கள் மனம் நோகுமாம்) நிறையவே சிரமம்தான்.

பேச்சு ஒரு மைக்குக்கு முன்னால நிகழ்ற விபத்து எண்டிறத ரொறன்ரோச் சூழல்ல தொடர்ந்து நிரூபிச்சு வாறவர் திரு. சாமி அப்பாத்துரை. அப்படியே சாஷ்டாங்கமா அவர்முன் விழத் தயார், ஒரே ஒரு சொற்-பொழிவு, போதும், சென்ம சாபல்யம் அடைய, அவரை விஞ்ச யாரும் இல்லை! சற்றே மிகையோ தெரியாது. ஆனால் திரு. துருவசங்கரி அவர்களின் என் மொழியின் கதை என்ற நூலுக்கான விமர்சனக் கூட்டத்தில் நூலைத் தவிர மிச்ச எல்லாவிடயங்களையும் பேசினாரே, ஐயோ, என்ர குரவாயூரப்பா, அதுவரை நான் பார்த்தேயில்லை இப்படியொரு அ! கோரத்தை! அவர் நு}லின் துறை சார்ந்தவராக (மொழித்துறை) இல்லாதிருக்கலாம், ஆனால் அவரது வாயில் சரஸ்வதி நிரந்தரமாக குடிகொண்டுவிட்டாள், சொற்கள் அவர் வாயில் களிநடனம் புரிவதென்ன, அல்லது அவர் சொற்கள் ஆலே களிநடனம் புரிவதென்ன, கடவுளே தொடர்ந்து பல நிமிடங்கள் மூச்சுவிடாமல் பேசினால் (அந்த நேரத்தையும் ஏன் விட வேண்டுமாம்) ஒன்றுமே ஆகாதா! எவ்வளவு மணிநேரம், ‘விசயத்துக்காகக்’ காத்திருப்பது? விசயம் -அது- வருமா வராதா?
போதாக்குறைக்கு ஒரே சொல்லை அவர் விதம்விதமானய் சொன்ன அழகிருக்கே, ஐயகோ ஐயகோ, ‘நிட்சயமா சொல்லுவேன், நிட்சயமாக, நிச்சயமாய, நிட்-சயமாக...” அம்மா! அவ்வளவுதான் எழுந்து ஓடி வந்துவிட்டோம். (அந்தக் கடுப்பில எழுதினதுதான் முதல் வரிகள்). தன்பாட்டில், அவர் எதையாவது சொல்லட்டும், ஆனால் மைக் முன் வேண்டாமே! பலருக்கு இந்த அவை நாகரீகம் இருப்பதாய்த் தெரியவில்லை.

மிகச் சின்னவயசில பெட்டையிட தகப்பனார் மரக் கதிரையின் கரைப் படிகள் இரண்டிலும் பெட்டை சக புத்திரரை இருத்திவைத்து, எத்தகைய போராட்டக் கவிதைகளாக இருந்தாலும், கையைக் காலை உயர்த்தி அழிச்சாட்டியம் பண்ணாமல் (அப்படி அவர் செய்திருந்தால் அப்பருக்கு ஏதோ வருத்தம் என்று பெட்டையும் பெட்டை சக புத்திரரும் அயர்த்துப்போயிருப்பார்கள், செய்வதறியாமல்!), கவிதைகள் சொன்ன விதம், இதமாக இருந்தது. அதனால் மட்டுமே அந்தக் கவிதைகளை இன்றும்கூட மறக்க முடியவில்லை என்று தோன்றுகிறது.

அந்த பழக்கம் பின்னர் இங்கு வானொலிகளில் வருகிற நபர்கள் குரல் உயர்த்தி முழங்கி, ‘ஒரு மாதிரி’ கவிதைகள் சொல்லுகையில் நமட்டுச் சிரிப்புடன் அதை ரசிக்கவிடாதிருந்திருக்கின்றது.

பேச்சு ஒரு வசீகரமான விசயம், மொழியை தமது இசைப்பில் வளைத்து, அதூடாக கேட்போரை வசீகரித்தல் அத்தனை எளிதல்ல. தனியே கத்துதலும் குரல் உயர்த்துதலும் அல்ல பேச்சு. உண்மையான பேச்சாளிகள் ஒரு வசீகரம்.
எந்த ஊடகங்களிலோ மேடையிலோ, யாரேனும், தமிழ் தமிழ் என்று கத்தினால் அவள் கொட்டாவி விட்டுட்டு நித்திரைக்குத்தான் போவாள். மாறா, உணர்ச்சிகரமாக அதையே ‘தமிழுக்கு உயிரென்று பேர்’ என்றால் ஆள் காலி. (இப்படி எல்லாருக்கும் தோதா ‘பிரச்சாரம்’ நடந்தெண்டுதானே இருக்கு.)
ஒவ்வொருத்தருக்கும் ஒவ்வொரு சென்சிற்றிவ் ஆன விசயங்கள் இருக்கும். அத மோந்துபிடிக்கிறவர்கள் சிறந்த பேச்சாளிகளா இருப்பார்கள். இப்படி என்னைக் கவர்ந்த ஒராளப் பற்றித்தான் எழுதப் போறன்: அந்தக் காலத்தில பெட்டையிட பெரியப்பா காறன் ஒருத்தர் துபாயில இருந்து வந்திருந்தார். அவர் அங்கிருந்து உடுப்புகள், வீடியோக்கள், தமிழ் சினிமாக்கள், இசை நிகழ்ச்சிகள், கார்ட்டூன்கள், சென்ற்ருப் போத்தில்கள் -அதுவும் சின்னச் சின்ன குப்பிகளில்- எதச் சொல்வது எத விடுவது? அந்த றேஞ்சில நிறைய சாமான்கள் கொணர்ந்திருந்தார்.
அதில ஒன்று ஒரு பென். அத அண்ணாக்காரங்கள் இரண்டுபேரும் பாக்க விடுகினம் இல்ல. அதென்னெண்டா அந்தப் பென்ன நிமித்தி வச்சிருக்கேக்க ஒரு பெரிய பெட்டை ஒருத்தி நீச்சல் உடை போட்டென்று அதுக்குள்ள நிக்கிறா, அவையள் அந்தப் பென்ன கீழ சரிச்சா அந்தச் உடையும் கொஞ்சம் கொஞ்சமா மேல மேல போய் கடைசியில ஒண்டாக் காணமப் போயிருது. இத காட்டினா சின்னப் பெட்டை (நான்தான்) கெட்டிருவாளாம். அண்ணைமார் கூத்தில வெறுத்துப்போய் எப்பிடியோ அந்தக் கண்ணறாவியைக் கண்டபடியாத்தான் இப்பிடி இண்டைக்கு விலாவாரியா எழுத முடிஞ்சுது. (இத யோசிச்சானுகளா அவன்கள்) இல்லாட்டி அதொரு பெரிய மர்மமா என்ர வாழ்க்கையில கிடந்திருக்கும். நல்லதாப் போச்சு.

விசயத்துக்கு வாறன், அப்படி அந்த பெரியப்பாக் காறன் கொண்டந்த சாமான்களுக்குள்ள தமிழ்நாட்டுத் தலைவர்களோட ஈழப்போராட்ட ஆதரவு மேடைப் பேச்சு ஒலிநாடாக்களும் அடக்கம். அப்ப கொழும்பில இதுவள எல்லாம் காணுறது பெரிய விசயம் (இப்பவும் அப்பிடி இப்பிடித்தானே?). புலிப்படம் போட்ட கலண்டர வச்சிருக்கவே என்ர சித்தப்பாக்காரன் ஒருத்தர் பயங்கரமாய் பயப்பிட்டவர் (பிறகு அத ரகசியமா கிழிஞ்செறிஞ்சாச்சு).

இப்பப்போல இந்த சக்தி hPவி இத்தியாதிகள் வர இல்ல.
அப்பிடி ஒரு பின்னணியில, சனி ஞாயிறுகள்ல ரூபவாஹினி மனசுவச்சுப் போடுற தமிழ் நிகழ்ச்சியளான -பொன்மாலைப்பொழுது, முத்துச் சரம்- போன்றனவையைப் பாத்தெண்டு போன அமைதியான வாழ்க்கை ஓட்டத்தில, ஒருநாள், பெட்டை பட அறைக்குள்ள இருந்து தானும் தன் பாடுமா புத்தகம் படிச்செண்டு இருந்தவள். அப்பத்தான் அது அவள்ட காதில விழுது. மெய்சிலிர்ந்து திக்குமுக்காடிப்போய் குந்தியண்டு இருந்தாள். அந்தக் குரல் பெலத்தண்டே இருந்துது: ‘எமது பெண்களை அங்கே கற்பழித்தபோது, நாங்கள் என்ன செய்தோம்~ ‘அங்கே எமது பெண்களை அவர்கள் கற்பழிக்கிறார்கள்~ ‘தமிழர்களே நீங்கள் என்ன செய்கிறீர்கள்’ அப்பா! பெட்டைக்கு அசைய முடியேல்ல. உணர்ச்சியெண்டா அப்பிடி ஒரு உணர்ச்சிக் கொந்தளிப்பு... இல்லப் பிளம்பு! . இல்ல வேற ஏதாவது... என்ன உணர்ச்சியடாப்பா அது! பெட்டை அந்தக் கொழும்பு பக்கத்தில அப்பிடி எல்லாம் பேச்சுக்கள அவள்ட மொழியில கேட்டதே கிடையாது. அறவே இல்லை. கிராமத்தில இருந்து வந்து இரண்டு வரிசமோ என்னமோ ஆகிக்கொண்டு கிடக்கு அப்ப.
எனக்கு விதிர்விதிர்த்து(!)ப்போச்சு. யார் பேசிறது? ஏன் எங்கட பெண்கள ‘கற்பழிக்கினம்’?
பேசினது வைக்கோ எண்டு அண்ணன் சொன்னான். யாரா இருந்தா என்ன? பெட்டைக்கு சுரத்தை வந்திற்றுது. இல்லாட்டில் கொழும்பில பராக்குப் பாத்தெண்டு திரிஞ்சுகொண்டிருந்த நான், சும்மா கிடந்த தமிழர்கள -பகலிலும்கூட- ''எழுப்ப” வெளிக்கிட்டிருப்பனா? ஆம். வீறுகொண்டெழுந்த நான் அண்டைக்கே மறத் தமிழன்களுக்கு காலம் காலமா அவங்களுக்கேயுரிய கடமையை உணர்த்த ஒரு கவிதை (அப்படித்தான் நினைத்தேன்) எழுதினன். சுப்பர்க் கவிதை (இதுகளில எல்லாம் தன்னடக்கம் கூடாது).
‘தமிழா! எழுந்திரு.”
“உன்னினப் பெண்கள் - அங்கே
கற்பழிக்கப் படுகையில்
நீ தூங்கிக்கொண்டிருக்கிறாயே,
தமிழா எழுந்திரு’
இப்பிடிப் போன அந்தக் கவிதை(!) உச்சம் பெற்றது ஒரு காவிய ஒப்பீட்டில்தான்! உபயம்: மகாபாரதம்! அப்ப ரூபவாஹினியில் இரவு 9 மணிக்கோ என்னவே மகாபாரதம் போனது. தினமுரசு அதன் மொழிபெயர்ப்பை ஞாயிற்றுக்கிழமைக்கு முன்னமே பேப்பரில போட்டிரும். சின்னன்கள் எல்லாம் அதப் பாத்திட்டு றெடியா இருக்குங்கள். திரையில அவையள் வாயசைச்சா இவையளுக்குத் தெரியும் கிருஷ்ணர் என்ன சொல்றார், தர்மர் என்ன சொல்றார், என்ன நடக்கது, என்ன கதைக்கினம் எண்டு. இதோட இன்னொரு குசும்பென்னெண்டா எதாவது சந்தேகம் எண்டா பெட்டையிட்டத்தான் கேப்பினை (பெட்டைக்கு முழுதும் பாடமா இருக்கும் ஆக்கும்). ஆகா. ஞானம், ஞானம். புராணத்தில் நிபுணியாகிவிட்டவளாய், அந்த ஆகர்ஸத்தில முத்தாய்ப்பாய்ப் பெட்டை எழுதினாள் ஒரு வரி, அசத்தலா.
அது:
‘அன்று துச்சாதனன் திரௌபதியின் சேலையை உரிய
மானம் காத்தான் கிருஷ்ணன்
உங்கள் இனப் பெண்கள் மானம் காக்க
தமிழனே எழுந்திரு’
எண்டு.
அண்டைக்கு இவள் இரவிலதான் என்றில்லாமல், பகல்களிலும் அவங்களை எழுப்போ எழுப்பெண்டு எழுப்பியும் அவங்கள் எழும்பேல்ல. வெறுத்துப்போன இவள் அந்த கெசற்ற அண்ணா போடேக்குள்ள எல்லாம் கண்ணீர் மல்கிக்கொண்டு துயரத்துடன் திரிந்தாள்.

அப்படி ஒரு வசீகரம் மிக்க பேச்சைப் பிறகு பெட்டை ஒருக்காலும் கேக்கேல்ல. அல்லது பின்னாளில் அப்படியொரு மயிர்க்கால்கள் புடைக்கும் வீறுகொண்டு எழும் உணர்வற்றுப் போய்விட்டது. எங்கையோ வேற தூரத்துக்கு வந்தாப்பிறகும், ரத்தம் சதை கொண்ட அவளைப்போன்ற பெட்டையளும் பெடியளும் சிதறி மடிவதை ‘நெருப்பாகி காற்றாகி” என்று கவிதை பாட முடியவில்லை. வெறுமனே கத்துகிற மனிதர்களோடு இணங்கவும் முடியவில்லை. அங்கையும் இல்லாம இங்கையும் இல்லாம, ஒத்தோடவும் ஏலாம, இறுதியில, பெட்டையோட கதை சோகக் கதையாப் போயிற்று.

ஆப்ஸ்ரஸ்க்கா சரித்திரம்

முன் குறிப்பு: ராஜ்கௌதமனின் சிலுவைராஜ் சரித்திரம் ரசிச்சுப் படிச்ச புத்தகம் (தமிழினி வெளியீடு). ஒரு மனுசனோட கட்டற்ற அந்தக் கிராமத்து வாழ்க்கையையும், அதில ஒரு சிறுவனா (ராஜ்கௌதமன்) காற்சட்டையோட குளப்படி விட்டுத் திரிந்ததையும் அப்படியே மனதுள் பிடித்துக் காட்டியிருந்தது இந்த சுயசரித-நாவல். பெட்டையோட சிறும் பிராயமும் ஒரு கிராமத்திலதான் கழிஞ்சது, நிக்கர தலையில தொப்பிமாரிப் போட்டுக்கொண்டு, பனையடிவாரங்கள்ள வெளிக்கிருந்திற்று (இதெண்டா என்னண்டு தெரியாத நகரத்து மனிதர்கள் சி.சரித்திரத்தில பார்க்கலாம்), செம சுதந்திரத்தோட விச்ராந்தியா நட நடந்து வீட்ட வந்து கிணத்தடியில கழுவீற்று... விளையாடப் போன அந்தக் காலங்கள நினைச்சா... (பெருமூச்சு) ஒரே பீலிங்கா இருக்கு. பெடியங்களப்போல சிலிப்பாய் வெட்டில, “என்ன பிள்ளையள் கால் சுடேல்லையா” எண்டு ரீச்சர்மார் வழி மறிச்சுக் கேட்க “இல்லை” எண்டிட்டு அப்பிடியே அந்தச் சந்து பொந்தெல்லாம் நுழைஞ்சு, வெறுங்காலோட திரிஞ்சபடி வாய்க்கால், காடு, குளம் எண்டு சுத்தின- என்ன ஒரு காலம்! சிலுவைராஜ் கட்டற்று ஓடிக்கொண்டே இருக்கிறான், வயல்கள், காடுகள் என்று... தடைகளே இல்லை அவன்முன். நகரங்கள்தான் அவனை தடுத்து நிறுத்துகின்றன. அந்த நூலின் மொழிநடை தந்த மோகத்திலும் பாதிப்பிலும் எழுதியது இனி வரும் இரண்டு பதிவுகள்.

(1)
பெட்டை சின்னப் பெட்டையா இருந்தபோது –அது ஒரு சுதந்திர ஜீவிதம்- அப்பிடியே கோழியைப் பிடிக்கிறமாதிரி பிடிச்செண்டு கொழும்பில போட்டிட்டாங்கள். விச்ராந்தியா பனையடிவாரத்தில இருந்து கிணத்தடிக்கு வந்தவளுக்கு அது பெருங் கொடுமைதான். ‘A-B-C-D இடியப்பம் தாடி’ என்றிற அளவுக்குக் கூட இங்கிலிஷ் தெரியாதவளிட்ட ‘டெஸ்கத் தூக்கி வைப்பம்’ ‘டஸ்ற்(b)பின் ன தூக்கு” எண்டா அவள்தான் என்ன செய்வாள்? அவள் படிச்ச கலவன் பாடசாலையில் (அதக் ‘காட்டு’ப்பள்ளிக்கூடம் என்பினம்) இங்கிலிஸ் வாத்தி பெட்டையளுக்குச் சொல்லித் தந்தத விட அங்க இருக்கிற ஆசிரியைமாரோட வம்படிச்சதுதான் அதிகம். (இதப் பெட்டை சக தோழிகள் வம்பளந்துகொண்டிருந்ததை அவர் -ஒட்டுக்-கேட்டு அவரிடம் வேண்டிக் கட்டியது உப கதை) பெட்டையும் சக தோழிகளும் இங்கிலிஸ் புத்தகத்தில ஒவ்வொரு வரிக்கும் மேலால தமிழால எழுதி (ஐ ஆம் கீத்தா, ஐ ஆம் புறம் இன்டியா: ஐ ஆம் நிமல் ஐ ஆம் புறம் சிறீ லங்கா. ---> இந்த வரியில இருக்கிற ‘இனவாதம்” பற்றி பின்னர் இன்ரலெக்சுவல்ப் (வேற யார்?) பெட்டை படிச்சு, ஆச்சரியம் மிகப் பட்டாள். தமிழர்கள் இந்தியாவிலிருந்து வந்தவர்கள் என்றும், நிமல் (சிங்களப் பெயர்) இலங்கைக்குரியவன் என்றும் 1ம் 2ம் வகுப்பு நு}ல்களிலே ‘வரலாற்றைச்’ சொல்ல தொடங்கிவிட்டிருக்கிறார்கள்!) அவர் வாசிக்கச் சொல்லேக்குள்ள வாசிச்சுப்போட்டு, கம்மெண்டு இருக்கிறது, அவரும் ‘ஆங் சரி. அடுத்தாள் படி’ என்பார். அது ஒரு தந்திரம். பெட்டையோட பெரியப்பாக்கள், பெரியப்பாட மகன்கள், மாமன்கள், மச்சான்மார் எல்லாரும் தலைமுறை தலைமுறையா செய்து வந்த தந்திரம். அந்த ஆசிரியர்தான் பாவி அத எல்லாம் கவனிச்சாரா அல்லது கொழும்பில என்னக் கொண்ணந்து விட்டு, தலைமுறை பாரம்பர்யத்தைத் திசைதிருப்புவது பாவம் எண்டு சம்மந்தப்பட்டவர்கள் யாராவது நினைத்தார்களா? ம்ஹீம். விளைவு: கொழும்பில மாணவிகளால் சோதனைகளுக்கு ஆட்படுகிறபோது தவறாம அந்த ஆசிரியரைத் திட்டியபடி, அவளுகளிடம் சிரித்து மழுப்பியபடியும் குத்துமதிப்பா ஏதோ செய்தபடியும் இருந்தாலும் வீட்டப் போனோண்ண கடும் தலையிடி வந்திற்று. ‘பள்ளிக்கூடமே போகேலா(ஆ)தளவுக்கு அப்படி என்னடி தலையிடி’ அம்மாக்கு என்னதான் தெரியும்? இவள் குடுத்த நடிப்புகள் ஒண்டும் எடுபடாமா புஸ்பவாணமாப்போக திரு.குடும்பத் தலைவர்(!) நான் உளவியல் அறிந்தேன் பேர்வழி என்று, வந்து பெட்டையிட கிளாஸ் ரீச்சரோட (அவ, நல்ல வெள்ளையா, பறுவாயில்லாம இருப்பா, ஆனா நல்லவா) அவள ‘இஸ்பெஸலா கவனிக்க’ச் சொன்னாப்பிறகுதான் காய்ச்சல், தலையிடி, வயித்துக்குத்து இன்னபிறவும் கொஞ்சமாவது விட்டுது.
அதுக்கப் பிறகும் கொழும்புத் தமில்(!) மாணவ நெஞ்சங்களின் அதிசயத்தை கொஞ்சமாச்சும் அவள் து}ண்டியது மொழி வகுப்பில்தான். எங்கையோ (யாழ்ப்பாணம் அல்லாத) ஒரு குக்கிராமத்தில இருந்து வந்த பெட்டை, தமிழில் சொல்வதெழுதலில் ல, ழ, ள இன்னபிற இராட்சசர்களில் இருந்து தப்பி ‘மிக்க நன்று’ என்று ஆசிரியர் போட எழுதியிருப்பாள் எண்டாள், பெரிய ஆச்சரியம் அதுகளுக்கு. அடச் சீ! ழ விற்கும் ள வுக்கும் கொஞ்சம் பிரச்சினையிருந்தாலும் ‘ல’ வும்கூட யாருக்கும் பிரச்சினையாய் இருக்குமென்று யான் பெட்டை அறிந்ததில்லை- அதுவரை! ஒரு பென்னம்பெரிய கார்ட் போர்ட் மட்டையில, அதுக்குமெல பசை மாவ ஒட்டி, அதில பென்னால கொட்டைக் கொட்ட எழுத்தில எழுதி அரிவரிமட்டை செய்து தந்திருந்தவர் அப்பப்பா (அவர் மக ராசானாப் போய்ச் சேந்திட்டார்). அதில ஒவ்வவொருநாளும் தவறாம அ, ஆஆ...,ஈ, ஈஈ எண்டு –பலவந்தமா- பெட்டையள ஊர்சோலியளுக்கு விடாம மெனக்கெடுத்தியண்டு வீட்டுப் பெரிசுகள் ரிறெயினிங் தந்த பலன்.
எண்டாலும், அந்த சுதந்திரங்கள் எல்லாம் கொஞ்சம் கொஞ்சமா பறிபோயிற்றுது. நினைச்ச நேரம் ஒழும்பி அப்பிடியே பள்டத்த நோக்கி இவளவை நடப்பாளவ, வழியெல்லாம் ‘நந்தா போயிட்டாவ, அவள் போயிட்டாளா, இவள் போயிட்டாளா” எண்டு சலிக்காம விசாரிச்சண்டு, 8 மணிக்கு போற பள்டத்துக்கு ஒம்பது, ஒன்பதரைபோல போய்ச் சேருவாளவ. போற வழியெல்லாம் சொந்தக்காரர். சிறு புன்னகையோட நாடியில கைவச்சு, “என்னடி இப்பதான் போறிங்களா” எண்டுவினம். பள்ட அதிபர், அப்பாட நண்பர், ‘இப்பதான் மகாராணியளுக்கு விடிஞ்சுதா” எண்டு கேட்டு தாமதமா வந்த மற்ற பிள்ளையளோட சேர்ந்து நிற்க விட்டு, கையில செரியான லேசா –சும்மா ஒரு கடமைக்கு ஒரு தட்டு- புற் றூலரால அடிப்பார். நோகவே நோகாது. ஆனா குண்டம்மா ‘இப்பதான் இவையளுக்கு விடிஞ்சிருக்கு” எண்டா மட்டும் அவளக் குத்தோணும்போல இருக்கும்.

கதிரைதான் இராது. பள்டத்துக்க முன்னால இருக்கிற தோழியள் பிடிச்ச வச்சிருக்காட்டி முட்டுக்கால்ல இருந்து மேசையில கொப்பி வச்செழுதோணும். எண்டாலும் அது பெரிய கஸ்ரமே இல்ல. தோழி, குண்டம்மாவும் ‘அவனும்’ அம்மா அப்பா விளையாடின வம்பெல்லாம் காதுக்குள்ள குசுகுசுப்பாள்.
கொழும்பில பெட்டையளுக்கு இதெல்லாம் தெரியேல்ல. ஒருநாளெல்லாம் வாறன், இண்டைக்க வகுப்பில்ல, எண்டுதுகள். எனக்குப் பெரிய சந்தோசம் உள்ளூர எண்டாலும் ‘ஏன்’ எண்டு கேக்கிறன். “ஏப்ரல் பூல்ஸ்!” எண்டிட்டு ஓடுதுகள், சிரிக்குதுகள், ஆடுதுகள்... என்ன எழவோ. செரியான பனிக் கூட்டம்!
ஒவ்வொண்டையும் வீட்டில வந்து நுணுக்கி நுணுக்கி நாங் கேட்க, பாடம் நடத்தி அலுத்த குடும்பத் தலைவர் வெள்ளவத்தையில ஒரு இங்கிலிஸ் வகுப்புக்கும் அனுப்பினார்; (அரிவரியில இருந்து ஒரு புதிய மொழியைக் கற்பித்த அந்த இனிய ஆசிரியைக்கு என்றும் எனது வணக்கங்கள்!). வெள்ளவத்தை!
பெட்டையும் சகோதரிகளும் அப்படியே வெள்ளவத்தை hPசன் முடிஞ்சு, hPசன் ஒழுங்க திரும்பிற பக்கப் பெட்டிக் கடையில கோகுலம் அம்புலிமாமா வாங்கிக்கொண்டு, அப்பிடியே நேர பஸ் நிற்குமிட் போய், அந்த 141 பஸ்ஸேறி --- சந்தியில இறங்கேக்க, பின்னால பின்னால எண்டு சொல்லீற்று கடைசியா ஒருத்தி கொடுக்கேக்குள்ள யாராவது ஒருத்தியிட 75 சதத்த மடக்கீருவாளவ, மடக்கீற்றாளவ எண்டா, அண்டைக்க கடல வாங்கலாம்... பிறகு அதத் தின்னண்டு ஆடிப்பாடி வீடு போய்ச் சேரலாம்.
பெட்டை உருண்டை கடல சகோதரிகள் பருப்புக்கடலை, கச்சான்கடலை தின்னெண்டு குஷாலா வாற இந்த மகிழ்ச்சிக்கும் தாய்க்காரி வெட்டு வச்சா. ஊரில இருந்து கொழும்புக்கு வரேக்க, அவட்ட ஒரு சோடி காப்ப கடன் வாங்கின உறவுக்கார மனுசி ஒண்டு வெ.வத்தையில அப்ப இருந்தா. நல்ல விசயம்தான். ஆனா அவக்கு பாட்டு சொல்லிக்கொடுக்கிற ஒரு மகளும் கூட இருந்தாவே! வந்தது வினை. பெட்டையும் சகோதரிகளும் அவவிட்ட ஒவ்வொரு ஞாயிறு காலையும் சங்கீதம் படிக்க போக வேண்டியதாயிற்று. (அதென்னமோ தெரியேல்ல கடவுள் பெட்டையிட குடும்பத்துக்கே ஞானம்மேல ஞானமா அள்ளி அள்ளிக் கொடுத்திட்டான் பாவி.) வயிற்றுப் பிள்ளைத்தாய்ச்சியான அவவே, இவர்களது ஞானத்தில் புளகாங்கிதப்பட்டு, ‘நீங்கள் ஸா நி எண்டேக்குள்ள சாகலாம் போல இருக்கு” என்று வாழ்த்தியது இன்னமும் பசுமையாய் உள்ளது!

ஆப்ஸ்ரஸ்க்கா சரித்திரத்தில அதெல்லாம் ஒரு காலம்!

நரகத்துக்குச் சென்றுகொண்டிருக்கிறவர் தொடர்பாக...


இன்று மிக, மிகத் துயரமான நாள். நான் பிறந்த கணம்முதல் அரபாத்தை எனக்குத் தெரியும்.

பலஸ்தீனியர்களது எல்லாச் சாதனைகளும், அவர் அவர்களுக்காகச் செய்து தந்தவை. அவரது வாழ்நாள் பூராவும் பாலஸ்தீனத்திற்காகவும் எமது விடுதலைக்காகவும் போராடினவர் அவர்.


அவரில்லாமல் ஒரு எதிர்காலத்தையும் என்னால் காணமுடியவில்லை- அது ... மிக மிகக் கடினமானதாயும் இருக்கும்.


---இகாப் ஜோஆன் (Ihab Joaan), 22 வயது பலஸ்தீனியன், வாகன ஓட்டி

நன்றி: BBC இணையத்தளம்


வகுப்புக்குச் சென்றுகொண்டிருந்த ஒருநாள், வாகன முன் இருக்கையில் கிடந்தது அன்றைய தினசரி. சக்கரநாற்காலியில் இருந்தபடி ஒரு வெளிர்நீல நோயாளி உடையில், முதியவர்களுக்குரிய அப்பாவம் பூசிய சிரிப்புடன் யசீர் அரபாத் - 40 ஆண்டுகளுக்கு மேலாய் உலகில் உள்ள விடுதலை இயக்கங்களின் போராளிகளதெல்லாம் ஆகர்ஸம். மிகவும் உற்றுப் பார்த்து எதையோ அறிய விரும்புவது போல வெறித்துக்கொண்டிருந்தேன். பயணத்தினூடே மேலோட்டமாக –பாரிஸ், சிகிச்சைக்காக, அவருக்கு உடல்நலக்கேடு என- வாசிப்பு முடிந்தது.

வகுப்புக்குச் சென்றபின்னும், தரப்பட்ட இடைவேளையின்போது, ஏதோ அருட்டலுடன், எடுத்துப் பார்த்தது அந்தப் படத்தைத்தான் (வழமையாக ஹோலிவூட் நடிகர்களைப் பற்றிய பக்கத்தைப் படிப்பேன்).


யசீர் அரபாத் மரணமெய்திவிட்ட செய்தியறிந்தபோது, (நவம்பர் 11) உலகப் போர்களில் மரணமெய்திய கனேடிய இராணுவ வீரர்கள் நினைவாக ‘Remembrance Day’ (நினைவுகூரும் நாள்) மரியாதை அணிவகுப்புகள் பிரிட்டிஷ் கொலம்பியாவின் பல நகர்ப்புற மையங்களில் இடம்பெற்றுக்கொண்டிருப்பதை தொலைக்காட்சியில் காட்டிக்கொண்டிருக்கிறார்கள். முதலாம், இரண்டாம் உலகப் போர்களிலும்; கொரிய யுத்தத்திலும் மரித்தவர்களை நினைவுகூர இவ் நாள் அனுஸ்டிக்கப்படுகிறது.

எனக்கு ஞாபகம் இருக்கிறது – ஒவ்வொரு ஆண்டும், இந்த குறிப்பிட்ட நாளில், தரம் 5 இல் ஆரம்பித்து தரம் 10 வரையேனும் John McCrae இன் புகழ்பெற்ற In Flanders Fields என்ற கவிதையை ஆசிரியர்கள் வகுப்பறைகளில் விநியோகிப்பார்கள். இங்கு படிக்கிற ஒவ்வொரு மாணவர்களுக்கும் அக் கவிதை ஏறத்தாள பாடமாயிருக்கும். அதை வாசித்தலும் ‘காலை அறிவித்தலில்” நினைவுகூரல் பற்றிய சிறு குறிப்புடனோ, அல்லது ஒரு அசெம்பிளியைக் கூட்டி, மேடையில் பழைய ‘வீரர்களை’ கொண்டுவந்து பேசவிட்டோ அன்றைய நாள் முடிவடையும். இந்தப் பரிவாரங்களின் துணையுடன், இதை ஒரு சம்பிரதாயமாக ஒவ்வோர் ஆண்டும் செய்துவருகிறார்கள், சோர்வின்றி.
வயது முதிர்ந்த அந்த இராணுவ வீரர்கள் பேசுகையில், அவர்கள் நீட்டி முழக்கி, இன்னும் அதிகமாகப் பேசினால் நல்லம் என மாணவ மனம் அவாவும், ஏனெனில் அப்பத்தான் அடுத்த பாட நேரம் சுருக்கப்படும்!

பிள்ளைகளிற்கும் தமக்குமான இடைவெளி தெரியாமல் அந்த ‘ஒருகால” வீரர்கள் பேசி ஓய்வர். அவர்கள் போட்டுவந்த பழைய இராணுவ உடையும், இடதுபுற(வலதுபுற?)த் தோளிலே குத்தியுள்ள நட்சத்திரங்களுமாய் ‘ஜம்’ என்றிருந்தாலும், இறுதியில், நடுங்கிய குரலில், வந்தவர்கள் யாரேனும், ‘யுத்தம் நீங்கள் நினைப்பதுபோல அல்ல” சொல்லாமல் போகார்கள். சரிதான், ‘அப்படியே.. அப்படியே இன்னுங் கொஞ்சம், கொஞ்சம்! பேசுங்கள்” என்பதுபோல உட்கார்ந்திருப்போம் நாம்.

-
உணர்வுரீதியான உறவற்றுப்போனால் நாட்கள், நினைவுகூரல்கள் எல்லாமே யந்திரக்கதிதான். யூதர்களது இங்குள்ள தளையெடுக்கிற தலைமுறைகள் ‘யூதப்படுகொலை’யை மறந்துவருவதால், அதை அவர்கள் நினைவு வைத்திருக்க பெரும் பிரயத்தனப்படுகிறார்கள் பழைய தலைமுறையினர் இங்கே. ‘வரலாறை மறந்தாலும் பறவாயில்லை ஏனெனில் அது திரும்பவும் திரும்பவும் வரும்’ என்று வரலாற்றாசிரியர் படிப்பித்தார். உண்மைதான். கொலைகள் தருகிற வன்மத்தை யூத இளம் தலைமுறையைவிட அதிகமாக –நிகழ்வாக, நேரடையாக, பலஸ்தீனிய இளந் தலைமுறையினர் அறிவார்கள்.

எனக்கோ அன்றைக்கு தினசரியில் பார்த்த அரபாத்தான் கண்முன் நிக்கிறார். சிவப்பு ‘பொப்பி’ (poppy) களை சட்டையில் குத்திக்கொண்டு தொலைகாட்சியில் செய்திகள் வாசிக்கிறார்கள்; “மகா யுத்தங்களில் இறந்தவர்களை மட்டுமல்ல சமீபத்தில் ஆப்கானிஸ்தானில் ‘அமைதிகாப்பு பணி’ யில் மரித்தவர்களையும் நினைவுகூருங்கள்” என வேண்டுகிறார்கள். “யுத்தம் மிகக் கொடூரமானது. நீங்கள் நினைப்பதுபோல அல்ல” ஏதோ சொல்லத் தொடங்குகிற பழைய ‘வீரர்’ தலையை ஆட்டிவிட்டு தன்னை கட்டுப்படுத்திக்கொள்கிறார். தொலைக்காட்சியில் சிலவற்றைச் சொல்லக்கூடாது (முக்கியமாக உண்மைகளை!).

அன்றைய தினம், அரபாத்தின் நோயாளி முகந் தந்த அருட்டலில், பெருந் தலைவர்களின் முதுமை, அவர்களுக்குத் தருகிற விநோத முகத்தைப் பற்றி எழுதத் எண்ணியிருந்தேன். இறுதிக் காலங்களில் அரபாத்தின் முகத்தில் தெரிந்தது வீரம் அல்ல. களைப்பாற ஒரு இடம். அந்த இடம் ஜெருசலேம் என்கிறார்கள்:

இணைய செய்தி ஒன்று இவ்வாறு சொல்கிறது:
வியாழன் இரவு அரபாத்தின் மரணத்தை இஸ்ரேல் ஊடகங்கள் அறிவித்தபிற்பாடு, பழமைவாத யூத இளைஞர்கள் சிலர் ஜெருசலேத்தில் பாடி, ஆடி, இனிப்பு விநியோகித்து அறிவித்துக்கொண்டார்களாம் ‘எமது மிகப்பெரும் எதிரிகளில் ஒருவர் நரகத்தை நோக்கிச் சென்று கொண்டிருக்கிறார்” என்று!


அரபாத்தோ இறுதிப் பயணத்தில் மிகவும் களைப்புடன் கையசைக்கிறார்.