@font-face { font-family: TSCu_InaiMathi; font-style:normal; font-size: 10pt; font-weight:normal; src:url(http://mathy.kandasamy.net/fonts/TSCUINA1.eot); }

Wednesday, June 01, 2005

ஜெயமோகனின் 'பின்தொடரும் நிழலின் குரல்'

இயலாமையின் புகலிடம் தாய்மையா?

-ராஜினி

நன்றி

தமிழக மற்றும் ஈழ இடதுசாரி வாசகர்கள் மத்தியில் அண்மையில் சர்ச்சையைக் கிளப்பியுள்ள நாவல், ஜெயமோகனின் பின்தொடரும் நிழலின் குரல். சிலர் இதை தமிழில் வெளிவந்துள்ள குரூரம் எனவும், ஜோர்ஜ் ஓவலின் ‘1984’ என்றும் விமர்சிக்கின்றனர். சிலர், இடதுசாரி முகாமை கேள்விக்குள்ளாக்கும் காலத்தின் தேவையாக இந்நூலைக் காண்கின்றனர். இன்னும் சிலரோ இதன் மீது இறுக்கமான மௌனத்தை சாதிப்பதன் மூலம் இதைப் பேசப்படாப் பொருளாக்க முயல்கின்றனர்.

ஒட்டு மொத்தத்தில் இந் நாவல் பற்றின எதிர்மறை, நேர்மறை விமர்சனங்கள், மௌனப் பகிஷ்கரிப்புக்கள் யாவும் கம்யூனிச கட்சிமுறைமையிலும், சோவியத் நாட்டின் சோசலிச பொருளாதார நிர்மாணத்திலும் வெளிப்பட்ட அதிகாரத்துவ போக்குகளையும், இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் பொய்மையையும் வன்மமாக சாடும் இந்நூலின் விமர்சன தன்மையின் மீதானவையாகும்.

கதையின் பிரதான பேசுபொருளான கம்யூனிச கட்சி முறைமை, சோசலிச பொருளாதார நிர்மாணத்தில் வெளிப்பட்ட சோசலிச விரோத போக்குகள் என்பனவே வாசகரின் கவனத்தையும் பிரதானமாக ஈர்ப்பதால், வாசகர்கள் இரு முகாமாகப் பிரிந்து விவாதங்களும் அதைச் சுற்றிச் சுற்றியே நடைபெறுகின்றன. இதைக் கடந்து, இக்கதையின் ஓட்டத்தில் வெளிப்படும் இஸ்லாமிய எதிர்ப்புணர்வு, தலித் விரோத மனோபாவம், சரணாகதி சமரசவாதம், புரட்சிகர வன்முறையைக் கொச்சைப்படுத்துதல், ஆன்மீகம் நோக்கிய அதீத சரிவு, ஆணாதிக்கம்...... என்பன மீதான விவாதங்கள் இரண்டாம் பட்சமாக்கப்பட்டு விடுகின்றன.

இந்நாவலை, பெண்ணிய வாசிப்புக்கு உள்ளாக்குவதன் மூலம் இதில் புதைந்துள்ள ஆணாதிக்க சிந்தனை ஓட்டத்தை அடையாளங் கண்டு அதை நிராகரிப்பதே இங்கு எனது நோக்கமாகும்.

இக்கதையின் பிரதான கதாபாத்திரம் அருணாச்சலம் எனும் தொழிற்சசங்கவாதி. அருணாச்சலம் எனும் இந்த ஆணின் அரசியல் வாழ்வு, தனிப்பட்ட வாழ்வு, ஆகிய இரு தளங்களையும் தொட்டு கதை பின்னப்பட்டுள்ளது. இவன் நேரில் உறவாடும் மனிதர்கள், இவனுள் பாதிப்பை ஏற்படுத்திடும் கடந்தகால வரலாற்றுப் பாத்திரங்கள் ஆகியோரது அரசியல் மற்றும் தனிப்பட்ட வாழ்வும் பிரதான கதாபாத்திரமான அருணாச்சலத்தின் வாழ்வுக்கு அக்கம்பக்கமாக சித்தரிக்கப்படுகின்றன. ஒப்பீட்டளவில் ஒத்ததன்மையுடைய அரசியல் மற்றும் தனிப்பட்ட வாழ்வை அநுபவித்த ஆண்களை மையப்படுத்தி கதையை புனைந்திருப்பதன் மூலம் தனது தர்க்கங்களைப் பலப்படுத்தி ஒரு சிந்தாந்தத்தை உருவாக்க முயல்கிறார் கதைசொல்லி.

குடும்பம்:

அருணாச்சலத்தின் முன்னோடியான மாதவ நாயர் இறுக்கமான ஸ்டாலினிஸ்ட். கட்சி மற்றும் சங்க விதிகளில் மிகக் கறாரானவர். தனது சொத்துக்களையெல்லாம் கட்சிக்கு அளித்துவிட்டவர். தனது இளமைக்காலத்தில் பொலிசின் கடும் அடக்குமுறைக்கு மத்தியிலும் இரகசியமாக இறப்பர் தோட்டங்களில் தொழிலாளர்களை திரட்டி தொழிற்சங்கத்தை உருவாக்கியவர். ஈற்றில், கட்சி மேற்கொள்ளப் போகும் புதிய சீர்திருத்த நிலைப்பாட்டுக்கு ஒத்துவரமாட்டார் என்பதால், மூப்பைக் காரணங்காட்டி அவரை தொழிற்சங்கத் தலைமையிலிருந்து நீக்கிவிட்டு அருணாச்சலத்தைத் தலைவராக்குகின்றனர். போக்கிடமற்ற அவர், தனது துணிப்பையுடன் தான் தங்கியிருந்த கட்சி தொழிற்சங்க காரியாலயத்திலிருந்து (ஒருகாலத்தில் அவருக்கு சொந்தமான நிலமும் கட்டிடமும்) வெளியேறுகிறார். அவருக்கென யாருமில்லை. இந்த தள்ளாத வயதில் இம்மனிதர் எங்கே போயிருப்பார் என இளகிய சிந்தையுள்ள அருணாச்சலம் கவலைப்படுகிறான். மாதவ நாயருக்கு முன்னர் ஒரு இரகசிய காதலி இருந்திருக்கிறாள். அவர்களது உறவில் ஒரு மகன் பிறந்தது இவருக்குத் தெரியாது. வயோதிப தொழிற்சங்கத் தலைவர் அவளை தஞ்சமடைகிறார். அப்பெண்ணும் மகனும் இவரை அன்புடன் ஏற்று பணிவிடை புரிந்து பாதுகாக்கின்றனர்.
ஒவ்வொரு ஆணையும் இறுதிக்காலத்தில் பாதுகாப்பதற்க்கு, மனஆறுதல் வழங்குவதற்க்கு அவனுக்கென குடும்பம், மனைவி, பிள்ளைகள் தேவை என்பதை கதாசிரியர் வலியுறுத்துகிறார். நாவலை வாசிப்பவரின் மனதில் எதிர்காலம் பற்றிய அச்சமூட்டும் எச்சரிக்கையை ஏற்படுத்திடுவதன் மூலமாக குடும்பம் பற்றிய சித்தாந்தத்தை மீள்ஸ்தாபிதம் செய்கிறார்.

நல்மனைவி:

அருணாச்சலத்தின் அனைத்து துயரங்களையும் தாங்குபவளாக அவனது மனைவி சித்தரிக்கப்படுகிறாள். அவனது பற்றாக்குறையான வருவாயில் மிகவும் சிக்கனமாக குடும்பத்தை நடாத்துகிறாள். குழந்தையை பராமரித்திடும் முழுப் பொறுப்பும் அவளைச் சார்ந்ததே. தொழிற்சங்க, கட்சி செயற்பாடுகளின் போது அவனுக்கு ஏற்படும் மன உபாதைகளுக்கு வடிகாலாக அப்பெண் இருக்கிறாள். அருணாச்சலம் அவளுடன் சீறிப் பாய்வான், அவளை மிகவும் உதாசீனப்படுத்துவான், சில சமயங்களில் அடிப்பான், அவர்களுக்கிடையே சண்டை மூழும். கோபித்துக் கொள்வார்கள். ஆயினும் அவன் வெளியே சென்று வருகையில் அவனுக்கான சேவைகளை வழங்க அவள் தயாராகவே இருக்கிறாள். அவனது துயரங்களை சுமப்பவளாக, அவனை தன்னலமற்று அன்பு செய்பவளாக, அரவணைத்து தைரியமூட்டுபவளாக, அவனது வீழ்ச்சியின் போது அவனைத் தாங்கி பலப்படுத்துபவளாக...

இந்தப் பெண் பாமரத் தன்மையானவள், மட்டுப்பட்ட உலக அறிவைக் கொண்டிருப்பவள், அவளுக்கென தனித்துவமான வாழ்க்கை கிடையாது, முற்றிலும் கணவனை சார்ந்து அவனுக்கூடாக தனது இன்ப துன்பங்களை இனங் காண்பவள். இத்தகைய பெண்தான் நல்மனைவிக்குரிய பண்பைக் கொண்டிருப்பவள் என்பதும் வரிகளுக்கிடையே புதைந்திருக்கிறது.

அருணாச்சலத்திற்க்கும் கட்சிக்குமிடையிலான முரண்பாடு கூர்மையடைந்து ஈற்றில் அவன் கட்சியிலிருந்து வெளியேற்றப்படுகிறான். அரசியல் வாழ்வில் ஏற்பட்ட தோல்வி அவனை மனநோயாளியாக்குகிறது. மருத்துவமனையில் அனுமதிக்கப்படுகிறான். மனைவியின் அன்பான பராமரிப்பால் குணமடைகிறான்.
ஒவ்வொரு ஆணினதும் வெற்றிகரமான வாழ்வுக்கு மாத்திரமல்ல அவனை வீழ்ச்சியிலிருந்து தூக்கிவிடுவதற்க்கும் “நல்மனைவி” அவசியம் என்பதாக கதை அமைந்துள்ளது.

பாலியல்:

உளப்பிறழ்விலிருந்து மீண்ட அருணாச்சலம், மனைவியின்(பெண்ணின்) வட்ட யோனிதான் தனக்கு புதுவாழ்வு அளித்ததாகக் கூறுகிறான். பெண்ணுடனான பாலுறவில் அவன் பலமடைகிறான். ஆணின் மனமகிழ்விற்கும், உளவியல் ஆரோக்கியத்திற்க்கும் பெண்ணுடல் அவசியம். மறுபுறம், பெண் தன்னை எக்கணமும் ஆணுக்கு அர்ப்பணிக்கத் தயாராக இருக்க வேண்டும் எனும் கருத்துகள் புதிய கோணத்திலிருந்து கூறப்படுகின்றன.
கட்சியுடனான முரண்பாட்டில் மனம் வெதும்பியிருந்த காலத்தில் ஒருநாள் கிராமக் கோயிலுக்கு செல்கிறான் அருணாச்சலம். அங்கு நிறுவப்பட்டுள்ள பெரிய சிவலிங்கம் அவனை ஈர்க்கிறது. ஆண் லிங்கம் நிமிர்ந்து நிற்கிறது அதன் கீழ் வட்டவடிவிலான பெண் இதழ்கள். பெண்குறியின் மீது பதிந்துள்ள ஆண்குறி. அருணாச்சலத்திற்க்கு மெய் சிலிர்க்கிறது. ஆணை பெண் தாங்குகிறாள். ஆணின் பலம் பெண்ணை சார்ந்து ஸ்தாபிக்கப்படுகிறதாக அவன் உணர்கிறான். பெண்ணை அடக்கிடும் லிங்கமைய கருத்தாக்கத்தை ஆசிரியர் மெதுவாக ஒதிக்கிவைத்துவிட்டு, புதிய கோணத்தில் லிங்க ஆதிக்கத்தை நியாயப்படுத்துகிறார்.

பெண்மை-தாய்மை:

ஆண்களின் உலகில் முரண்பாடுகள் சகித்துக் கொள்ள முடியாது போகும் போது அதற்க்கு தீர்வு தருபவர்களாக நூலாசிரியர் பெண்களைக் காட்டுகிறார்.

சோவியத் ஒன்றியத்தில் சோசலிசம் தோல்வியடைகிறது. சோசலிசத்தின் பெயரால் மக்கள் மீது அடக்குமுறைகள் மேற்கொள்ளப்படுகின்றன. இதன் வழியில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியும் அதிகாரத்துவமயப்பட்டு சீரழிகிறது. மனிதம் சிதைக்கப்படுகிறது. ஆண்களினால் தலைமை தாங்கப்படுவதனால் தான் வன்முறைகளும் அழிவுகளும் உலகில் நிகழ்கின்றன. கொடிய யுத்தங்கள் நடைபெறுகின்றன. இந்த அழிவிலிருந்து உலகை பெண்கள் தான் மீட்க வேண்டும். தாய்மை உணர்வுடைய, அன்பு, கருணை, இரக்கம், தியாகம் ஆகிய குணாம்சங்களைக் கொண்ட பெண்கள் புரட்சிகளுக்கு தலைமைதாங்கும் போதுதான் அழிவுகள் தடுக்கப்படும். மனித குலம் பாதுகாக்கப்படும். தமது தாய்மையின் மூலம் பெண்கள் தம்மையும் தமது பிள்ளைகளையும் ஆண்களையும் இரட்சிக்க வேண்டும் என கதாசிரியர் விபரிக்கிறார்.

எத்தனை இலகுவாக தமது ஆயிரமாயிரமாண்டு கால ஆணாதிக்க சீரழிவுகளை பெண்களின் தலையில் சுமத்திவிட்டு தப்பித்துக் கொள்ள முயல்கிறார். உண்மையில் இது ஒரு கேலிக்கூத்தாக தெரியவில்லையா? தமது ஆதிக்கத்தின் மூலம் ஆண்கள் உலகையே வன்முறைக் காடாக மாற்றியுள்ளனர். அதைப் பெண்கள் தான் மீள சீரமைத்து மனிதத்தைக் கட்டியெழுப்ப வேண்டும்... அதுவும் "பெண்களுக்கேயுரித்தான" தாய்மை, அன்பு, கருணை, தியாகம் ஆகிய குணாம்சங்களைப் பிரயோகித்து.

இவ்விடத்தில், கதாசிரியரை நோக்கி ஒரு அடிப்படைக் கேள்வியை எழுப்புகிறேன். சமூக ரீதியாக அதிகாரங்கள் மறுக்கப்பட்டிருக்கும் பெண்கள் சமூகத்திற்கு தலைமை தாங்குவதற்கு அவ்வளவு இலகுவில் ஆணாதிக்க உலகு சம்மதித்துவிடுமா?

இதிலுள்ள நகைச்சுவை என்னவென்றால், தம்மை அடக்குமுறைக்குள்ளாக்கி வரும் ஆண்களையும், அவர்களால் சீரழிக்கப்பட்டுவரும் சமூக அமைப்பையும் ஈற்றில் பெண்கள் தான் காப்பாற்ற வேண்டுமாம்.

கதையின் பிரதான அண் கதாபாத்திரத்தின் இயலாமை, மனச்சோர்வு, ஆத்திரம்... அனைத்துக்கும் அவனது மனைவி எப்படி வடிகாலாக அமைகிறாளோ, அதேபோல் ஆண் உலகின் தோல்விகள், இயலாமை, முரண்பாடு, பகைமை... அனைத்துக்கும் பெண்கள் வடிகாலாக இருக்க வேண்டுமென பெண்களிடம் கோரிக்கை வைக்கப்படுகிறது. இதைப் போன்ற கயமை வேறெதுவும் இருக்க முடியாதென்றே நான் கருதுகிறேன்.
சுருங்கக் கூறின் நவீனகால ஆணாதிக்க தமிழ் இலக்கியத்திற்கு இந்நூல் ஒரு வகைமாதிரியாகும்.

பி.கு:

தாயாகும் உள்ளாற்றலைக் கொண்டிருப்பவர்களாதலால் பெண்கள் இளகிய சுபாவமுள்ளவர்கள் எனும் ஆணாதிக்க ஐதீகத்தை மார்க்சியக் கொள்கையை நம்பும் ஆண்கள் பலரிடமும் காணக் கூடியதாயுள்ளது. அவ்வாறான குணாம்சங்களை வெளிப்படுத்தாத போது அதுவே பெண்கள் மீதான குற்றச்சாட்டாகவும் வெளிப்படுகிறது.
எனது ஆண் நண்பர் ஒருவருடன், இந்தியா டுடே வாஸந்தியின் ஈழப் போராட்டத்திற்கு எதிரான குரூர எழுத்துக்கள் சந்திரிகாவின் சர்வாதிகாரத்திற்கு துணைபோவது பற்றி உரையாடிக்கொண்டிருக்கையில் நண்பர் இந்த உரையாடலுக்கு புறம்பான ஒரு கருத்தையும் தெரிவித்தார். அதிகாரம் கைகளுக்கு வரும்போது ஆண்களிலும் விட பெண்கள்தான் சர்வாதிகாரிகளாவும் குரூரமானவர்களாகவும் இருக்கிறார்கள் என்றார். இதன் மறுபுறம், அவர்கள் தாய்மைக்கு உரித்தான தமது இளகிய சுபாவத்தை புதைத்துவிட்டார்கள் எனும் குற்றச்சாட்டும் அடியோடிக் கிடந்தது. மார்க்சியரும் சமூக ஆய்வலருமான எனது நண்பரின் இக் கருத்து எனக்கு அதிர்ச்சியூட்டியது.

பிரேமதாச சர்வாதிகாரியாக செயற்படுகையில் அது ஆச்சரியமூட்டவில்லை. துக்ளக் சோவும் இன்னபிற இந்து பார்ப்பனிய வெறி கொண்ட ஆண்களும் ஈழப் போராட்டத்தை அவமதிப்பது இயல்புக்கு மாறானதாகப் படவில்லை. அது அவர்களின் ஆதிக்க அரசியலாக அடையாளங் காணப்படுகிறது. ஆனால் சந்திரிகா சர்வாதிகாரியாக செயற்படுவதும், வாஸந்தி குரூரமாக சிந்திப்பதும், ஜெயலலிதாவின் மோசடிகளும் மாத்திரம் அதீதமானதாக தென்படுகிறது? இதை ஏன் உடனடியாக ஆதிக்க அரசியலுடன் தொடர்புபடுத்த முடியாது போகிறது? பெண் சுபாவம் பற்றிய கதையாடல்கள் எல்லாம் ஏன் அநாவசியமாக வெளிப்படுகின்றன?

எதற்காக பெண்களிடம் அதீதமான இளகிய தன்மையை, விசேட பண்புகளை எதிர்பார்க்க வேண்டும்? மறுபுறம் பெண்கள் அதிகாரித்துவவாதிகளாக, சர்வாதிகாரிகளாக, குரூர சிந்தனையுடையவர்களாக இருக்கிறார்கள் என்பதற்காக ஏன் அதிர்ச்சியடைய வேண்டும்? பெண்களை மனிதர்களாகப் பார்த்தால் இந்த தடுமாற்றம் ஏற்படாதல்லவா?

சமூக விஞ்ஞானத்தில் ஆண்கள் முழமையடைய முடியாதிருப்பதன் காரணம், பெண்கள் பற்றிய கண்ணோட்டத்தில் ஆண்கள் சமூக விஞ்ஞானிகளாக இல்லாதிருப்பதாகும்.
0


-ராஜினி
(நன்றி: சக்தி 2001 மே- இதழ்-26, நோர்வே)

14 Comments:

Blogger Jayaprakash Sampath said...

பி.தொ.நி.கு பற்றிய சுருக்கமான, தெளிவான அபிப்ராயத்தை இது வரை படித்ததில்லை. இப்போதுதான் படித்தேன். எடுத்துப் போட்டமைக்கு நன்றி பொடிச்சி.

6/01/2005 09:03:00 a.m.  
Blogger Badri Seshadri said...

Excellent analysis by Rajini! இவர் யார்?

6/01/2005 09:29:00 a.m.  
Blogger -/பெயரிலி. said...

ஒரு பொடிச்சி, நல்லதொரு பெண்பார்வை. எடுத்திட்டதற்கு நன்றி.

6/01/2005 09:45:00 a.m.  
Blogger SnackDragon said...

/இதை ஏன் உடனடியாக ஆதிக்க அரசியலுடன் தொடர்புபடுத்த முடியாது போகிறது? பெண் சுபாவம் பற்றிய கதையாடல்கள் எல்லாம் ஏன் அநாவசியமாக வெளிப்படுகின்றன?/
இது முழுமையாக பெண்களை விட்டு விலகிவிட்ட கருத்து என்று கொள்ளமுடியாது. ஒரு பெண் இளகியமனதுக்கு எடுத்துக்காட்டாய் இன்னொரு பெண்ணை பெண்களே சுட்டும் நிலைதான் இன்றும் உள்ளது. என்வே இந்தக்கேள்வி முழுதும் ஆண்களை நோக்கி / ஆண்களையே பொறுப்பாளிகளாக ஆக்க விழைவது கொஞ்சம் அபத்தமாக/தொடர்பற்றதாகப் படுகிறது. ஜெயலலிதாவின் அம்மா இளகிய மனதுடையவளாய் இருந்திருக்கலாம். ஜெயலலிதா போன்ற ஒருவரின் மகள் கூட இளகிய மனதுடையவராய் இருக்கமுடியும். பெண்மை என்பதை முழுவதுமாக துறந்துவிட வேண்டும் என்பது எத்தனை சரியான வாதம்?

/ஜெயலலிதாவின் மோசடிகளும் மாத்திரம் அதீதமானதாக தென்படுகிறது? /
ஜெயலலிதாவின் செயல்களில் ஒரு மரபு மீறிய வேகம்தான் இருந்துள்ளது. அதுவும் (அதுதான்?) பெரும்பாலும் விமர்சிக்கப்பட்டுள்ளது.

6/01/2005 11:59:00 a.m.  
Blogger SnackDragon said...

நல்ல கட்டுரை. சொல்ல விட்டுப்போனது. நன்றி பொடிச்சி

6/01/2005 12:01:00 p.m.  
Blogger மதி கந்தசாமி (Mathy Kandasamy) said...

நான் பின்தொடரும் குரல் வாசித்ததில்லை. சுருக்கமாக நன்றாக அறிமுகம் + பார்வை.

ராஜனியின் படைப்புகளைப் பற்றிக் கொஞ்சம் சொல்ல முடியுமா?

நன்றி பொடிச்சி.

-மதி

6/01/2005 12:42:00 p.m.  
Blogger Thangamani said...

நான் அந்தப்புத்தகத்தை வாசிக்கவில்லை; ஆனாலும் இந்தப் பதிவுக்கு நன்றிகள். தாய்மை, இரக்கம், அன்பு போன்ற குணங்களை பெண்களுக்கு மட்டும் உரியனவாகக் காட்டி அதன் அடிப்படையில் அவர்களைச் சுரண்டுவதையும், அந்த குணங்களை முன்வைத்து பெண்களின் முன்னேற்றத்தை கண்டனத்துக்கும் கேலிக்கும் உள்ளாக்கும் அரசியலை அறிந்திருந்தாலும், ஆண்களின் சிந்தனை முறையும் வாழ்க்கையின் வெற்றிகளைப் பற்றிய பார்வையுமே, இந்த உலகின் துன்பங்களுக்கும், அதன் சீரழிவுக்கும் காரணமென நான் நினைக்கிறேன். இதற்கு மாறாக பெண்களின் மாற்று சிந்தனை முறை, வாழ்வின் அர்த்தங்களை இங்கே இப்போதே கணத்துக்கணம் கண்டுகொள்ளும் தன்மை இவை இந்த உலகத்தை சீரழிவில் இருந்து காப்பாற்ற உதவும் என்று நினைக்கிறேன். ஆனால் இதன் பொருள் பெண்கள் மட்டும் இதைச் செய்யவேண்டும் என்பதல்ல.

நன்றி!

6/01/2005 04:03:00 p.m.  
Blogger எம்.கே.குமார் said...

பொடிச்சிக்கு இப்பதிவிற்காக நன்றி.

'பின் தொடரும் நிழலில் குரல்' கம்யூனிசயுகத்தின் அழிவைப் பறைசாற்றும் காரணங்களோடு கொண்டு செல்லும் நாவல்.

உயரமான இடத்திலிருந்த ஒரு கம்யூனிச அடிப்படை கொண்ட நாயகர் அடுத்தடுத்து வரும் 'சொந்தநல' 'தோழர்களால்' எவ்வாறு கீழே தள்ளப்படுகிறார் என்பதையும் அதைக் கண்கூடாக பார்த்துக்கொண்டிருக்கும் ஒருவனும் தானும் அவ்வாறு உயர்ந்த இடத்துக்கு வரும்பொழுது எவ்வாறு தகர்ப்படுகிறான் என்பதையும் சொல்லும் கம்யூனிசத்தின் தோல்வி பற்றிப் பேசக்கூடியது.

இதில் ஏன் பெண்ணீயத்தை இழுக்கிறீர்கள் என்று தெரியவில்லை.

எல்லாவற்றிலும் தலித்தியம் எல்லாவற்றிலும் பிராமனீயம் அல்லது எல்லாவற்றிலும் பெண்ணியம் என்று பார்ப்பது எப்போது நிற்குமோ தெரியவில்லை.

ராஜினி கேட்கும் கேள்விகள் நியாமாய் இருந்தாலும் அதை முன்னிலைப்படுத்தி கேட்பதற்கு பி.தொ.நி.கு சரியான இடமல்ல.

சந்திரமுகியில் ரஜினியப் பற்றியோ ஜோதிகாவைப்பற்றியோ பேசாமல் பிரபுவைப்பற்றி கேட்பது போலிருக்கிறது.

எனினும் ஆணாதிக்கம் கொண்டோர் இவரது கேள்விக்குப் பதில் சொல்லலாம். :-)

எம்.கே.குமார்

6/01/2005 08:55:00 p.m.  
Blogger ஈழநாதன்(Eelanathan) said...

ஒரு பிரதியை பல்வேறுவிதமான தளங்களில் விமர்சிக்கலாம்,பல்வேறுவிதமாகப் பார்க்கலாம்.ஒரு ஸ்டாலினிசவாதியோ மார்க்சியவாதியோ பின் தொடரும் நிழலின் குரல் நூலை தங்கள் செயற்பாடுகளைக் கேள்விக்குள்ளாக்கும் நூலாகப் பார்த்தால் அதை பெண் என்னும் தளத்தில் நின்று இன்னொருவர் கேள்விக்குள்ளாக்குவது தவிர்க்கமுடியாதது.
அந்தப் பிரதி எழுதப்பட்டது வெறுமனே இந்திய கம்யூனிஸ்ட்களின் செயற்பாடுகளை மட்டம்தட்டுவதற்காகத் தானென்று யாராவது சொல்வார்களானால் அது படு பயங்கர பிரச்சார நூலாக இருக்குமொழிய இலக்கியமாக கொள்ளப்படமுடியாது.அது இலக்கியமாகக் கருதப்படுமிடத்து பல்வேறு தளங்களிலும் வாசிப்புக்கு உட்படுத்தப்படவேண்டும் உதாரணமாக என்னைக் கேட்டால் நான் ஜெயமோகன் நூல்களை வாசிக்கும்போது நெருடும் மலையாளக் கதைமாந்தர் பற்றியும் யோசிப்பேன்.தனியே சொல்ல வந்த விடயத்தை மட்டும் சொல்வதற்கு பிரச்சாரக் கையேடுகள் போதுமே எதற்கு இலக்கியம்.

சந்திரமுகி படத்தை ரஜனி ரசிகன் பார்த்து விமர்சிப்பதற்கும்,பெண்ணியவாதி விமர்சிப்பதற்கும்,தமிழ்சினிமாவே பார்க்காத ஒருவர் விமர்சிப்பதற்கும் நிறைய வித்தியாசமுண்டு,ரஜனி படமென்றாலும் பிரபு ரசிகர் பிரபுவைத் தான் விமர்சிப்பார் அந்தப் படத்தில் ரஜனி பிரபுவை எவ்வாறு பயன்படுத்தியிருக்கிறார்,எப்படி பயன்படுத்தியிருக்கலாம்,தன்னுடைய செல்வாக்கை எங்கெல்லாம் பிரபு மீது செலுத்தியிருக்கிறார் என்றெல்லாம் கூட விமர்சிக்கலாம்

படத்தை சட்டகம் சட்டகமாக ஆராய்ந்து ஒவ்வொரு சட்டகத்தினதும் உட்கருத்து என்ன அதன் மூலம் என்ன சொல்ல வருகிறார் என்று கூட ஆராயலாம்.சந்திரமுகியை ரஜனியை மட்டும் வைத்து விமர்சித்தால் அது அப்பட்டமான ரஜனி பட விளம்பரம் அல்லது எதிர்ப்பு.ஒவ்வொரு கதாபாத்திரம் காட்சியமைப்பாக விமர்சித்தால் திரை விமர்சனம்.

குமார் ஒவ்வொரு படைப்பிலும் பென்ணியம்,பார்ப்பனியம் தேடிக்கொண்டிருப்பது ஒவ்வாததுதான் ஆனால் படைப்பையே தனது கருத்தை திணிப்பதற்கான ஊடகமாக பயன்படுத்துமிடத்து இவ்வாறான விசாரணைகள் தேவையே

பதிவுக்கு நன்றி பொடிச்சி

6/01/2005 11:14:00 p.m.  
Blogger ஒரு பொடிச்சி said...

அனைவருக்கும் நன்றி. நீங்கள் எல்லோரும் படித்ததும் நல்ல கட்டுரையொன்றின் தாக்கத்தை/கருத்து பகிர்ந்ததும் மிகவும் மகிழ்ச்சியாக இருக்கிறது.
1999 இல் வந்த நாவலுக்காக 2001 இல் வந்த கட்டுரையை இப்போ போடுவதில் கொஞ்சம் தயக்கமாயிருந்தது..

பெண்களுடையதென்பதில்லை, பொதுவாகவே, விமர்சனங்கள் வசையும் பாராட்டுக்களும்தான் என்றிருக்கையில்,சமநிலை குலையாது முன்வைக்கப்பட்டிருந்த விதம் இந்த விமர்சனத்தில் முக்கியமாப் பட்டது.

ராஜினி யாரென்பது தெரியவில்லை; நான் வேறு படைப்புள் இதே பெயரில் படிக்கவில்லை; புலம்பெயர் பிற தொகுப்புகளில் வரவில்லை என்றே நினைக்கிறேன், பிற சக்தி இதழ்களில் வந்திருக்கலாம்... சக்தி நோர்வேயிலிருந்து வருகிற பெண்கள் சஞ்சகை, இதன் தொடர்ச்சி பற்றித் தெரியவில்லை. இது அனேகமாக ஐரொப்பா தவிர பிற இடங்களுக்குக் கிடைப்பதில்லை.

ராஜினிக்கு தன் அடையாளம் அறியப்படுவது பிரச்சினையில்லை என்றால் 'சக்தி' ஆசிரியர் தயாநிதி அல்லது யாரும் அவர் பற்றிய விபரங்கள் இங்கே அல்லது எங்கேனும் எழுதினால் நாம் எல்லோரும் அறியக் கூடியதாய் இருக்கும்.
----------
பெண்மை ஆண்மை இரண்டுமே கற்பிதங்கள் என்றே நினைக்கிறேன். அப்படியென்கிறபோது, “பெண்மை என்பதை முழுவதுமாக துறந்துவிட வேண்டும் என்பது எத்தனை சரியான வாதம்?” என்கிற கேள்வியே அங்கில்லை என்று ஆகிறது.
ஏனெனில் பெண்மையை நிராகரி என்பதில் ஆண்மையை உள்வாங்கு என்கிற செய்தி இல்லை அதில் .
---
இது தொடர்பாகத்தான் டீ.ஜே.யின் 'ராப் பாடகர்கள்' தொடர்பான பதிவில் உரையாட நினைத்தது, தொடர முடியவில்லை. பெண்களும் இதில் Victims என்கிறபோது அவர்கள் புரிந்துகொள்வார்கள்/வேண்டும் என நினைப்பதும் ''அவர்கள் ஏன் புரிந்துகொள்ளவில்லை'' என யோசிப்பதும், தேவையில்லாதது. பெண்கள் பிரதிபலிப்பவர்கள் என்கிற வகையில் அவர்களிடம்தான் அதிக அளவு ஆணாதிக்கக் கருத்துக்கள் இருக்கும். இது இயல்பானது.

இந்த இயல்பை ஏற்க முடியாமைக்கும் பெண்மை பற்றியதான கற்பிதங்களும் காரணம்.
---

ராஜினிகளோட கேள்விகள் விடைகள் தேடி அல்ல. எந்த விமர்சனமும் வைக்கப்படுகிறவரிடம் 'இனிமேல் புரட்சிகரமான மனைவியை வைத்து கதை எழுது' என சொல்லுவது அல்ல. இந்த விமர்சனத்திற்கூடாக கதாசிரியரிடம் அப்படி ஒரு கேள்வியை முன்வைப்பதாய் எனக்குத் தோணவில்லை. அத்தோடு,
இப்படி ஒரு விமர்சனம் பார்த்து அப்படி ஒரு கதை எழுத ஜெயமோகன் ஒன்றும் தனக்கென அரசியல் இல்லாத எழுத்தாளர் அல்ல; அவருக்கென்றொரு தெளிவானதும் மாறாததுமான அரசியல் இருக்கிறது, அது அவரது புனைவு,அபுனைவு எல்லாவற்றிலும் வெளிப்படும்.
---
கதைசொல்லியின் மனைவி 'பாமரப்' பெண்ணாக இருப்பது பற்றிய ஆட்சேபனையல்ல இந்த விமர்சனம். ஒரு நூல் தருகிற ஒட்டுமொத்த செய்தி பெண்ணியத்திற்கு எதிரானதாக இருப்பது குறித்ததே இது. பெண்ணியப்பார்வை- அது ஏன் வரவேண்டும்? என்று கேட்டால், அதற்கு இப்படிக் கேட்கலாம்:
ஒற்றைப் பார்வைகளில் 'ஆஹாஓஹோ'கள் எழுத்தாளருக்கு தவிர யாருக்குத் தேவை?

தாலி போட்டுக்கொண்டும், புடவை கட்டிக்கொண்டும் ஒரு பெண் தன் பற்றின புரிதல்களை வளர்த்துக்கொள்ளலாம். அப்படி தாலியும் பிற அடையாளங்களையும் வைத்துக்கொண்டே, 'பெண் = நான் உடல் மட்டுமல்ல' என்கிற புரிதலை உடைய ஆண்/பெண் தோழர்களை எனக்குத் தெரியும். இதில் 'புரிதல்' தான் முக்கியம்; புரிதல் இல்லாமல், 'அடையாளங்களைக்' களைவதும், களையாமல் விடுவதும் ஒன்றுதான்.

நவீனக் கதையாடல்கள் பரப்பிற ஆணாதிக்கம்/ஆதிக்கம் எந்தவகைப்பட்டதாயினும் அதைக் வெளிப்படுத்திக்கொண்டு வாற இந்த மாதிரி கட்டுரைகள் ஊடாக அந்தப் 'புரிதல்கள்' சாத்தியமாகும்.



தமிழில், பெண்ணியம் என்று பார்த்தால்,
இலங்கையில், 'சரிநிகர்' பத்திரிகை இல் வந்த ரேவதியின் பல சிறுகதைகள்.. (ஈழத் தமிழிலக்கியம் என பேசுகின்றவர்கள் இவற்றைத் தட்டச்சிட்டுப் போட்டு புண்ணியம் தேடிக் கொள்ளக் கூடாதா?!)
அம்பையின் பேட்டி
பாமாவின் 'சங்கதி' நாவல் (ஆனந்தாயி – சிவகாமி)

இதில் ஒவ்வொரு தட்டுக்களையும் 'புரிய' இந்தப் படிநிலைகள் எனக்கு முக்கியமானதாய் இருந்திருக்கின்றன. ஆகவே அவற்றின் தேவையைக் கேள்விக்குட்படுத்துவது ஒரு வசதியான காரியம் மட்டுமே.

அம்பைய சாதியைக் கொண்டு நிராகரிக்க முடியாதென்பது எவ்வளவு உண்மையோ, அதுபோல ஒரு தலித் பெண்ணுடையதும் அவருக்குமிடையேயான வேறுபாடுகளை ஒரே மட்டத்தில் வைக்கமுடியாது என்பதும் முக்கியம். ஓரு வெள்ளைப் பெண்ணிலைவாதியை நிராகரிக்கவேண்டியதிலலை, ஒரு கறுப்பு பெண் எதிர்கொள்கிற அடக்குமுறைகள் இன்னுமும் ஆழமானது எனப் புரிய.

மாற்றுப் பார்வைகள் ஊடாக இன்னொரு பெண், இன்னொரு சாதி, இன்னொரு இனம் etc மீதான 'வன்மத்தைக்' களைவதுதான் நோக்கம், அதை வளர்ப்பது அல்ல.
இலக்கியங்களும் அப்படித்தான்.

வன்மத்தை வளர்க்கிறவை ஈழத்தில்/தமிழகத்தில் எங்கிருந்து வந்தால் என்ன? தானே இலக்கியம் மட்டும் 'வளர்ந்து என்ன செய்யும்?

ராஜினியின் விமர்சனத்தில் ‘மாதவ நாயருக்கு முன்னர் ஒரு இரகசிய காதலி இருந்திருக்கிறாள்.’- 'காதலி' என்றே வருகிறது. ஆனால் இதே வலைப்பதிவுகளில் தன் எதிர்வினையை எழுதுகிற பெணணிற்கு, அவரை, 'வப்பாட்டியாய்த்தான்' பார்க்க முடிகிறது. இதைத்தான் பெண்ணிடம் இருக்கிற ஆணாதிக்கம் என்பது. இதை நான் ஆட்சேபிக்கிறேன். 'எதற்கெடுத்தாலும் பெண்ணியம்' என ராஜினியின் பார்வையை முன்வைத்து கேட்கிற உங்களை அது உறுத்துமா? பேண்களை வப்பாட்டிகள்/வேசிகள்/பத்தினிகள் என்று வகைப்படுத்திக்கொண்டே இருக்கப் போகிறோமா?
புனைவுகளில் 'வப்பாட்டி' என விளிப்பதை நியாயப்படுத்தலாம், சமூகத்தில் உறைந்துகிடக்கிற விடயங்களைத்தான் எழுதமுடியும், அது இது என!
கதை/கவிதை/நாவல் இவைகளில் 'புரட்சிகரமான' பாத்திரப்படைப்பகள் அவசியமில்லை@ ஆனால் அபுனைவுகளில்(nonfiction) வீதியில் பெண்களை நோக்கி வீசிற வசைகள்போல 'வப்பாட்டி' என எழுதுவதை என்ன சொல்வது?

இந்த இடத்தில் கார்த்திக்ராமாஸ் எப்படி ‘பெண்ணே பெண்ணை புரிதல்' சரியா வரும்?
ஓரு பெண் சொல்வதால் இதில் மௌனமாய் இருக்க வேண்டிய தேவையோ (பிறகு 'பெண்ணே பெண்ணுக்கு எதிரி' 'பெண்கள் சண்டையிட்டுக்கொள்வார்கள்' = cat fight/பூனைச் சண்டை) அல்லது 'பெண்களே இப்படிச் சிந்திக்கிறார்களே' என மனம் வருந்தவோ என்ன அவசியம் வந்தது?

பிரேமதாச சர்வாதிகாரியாக செயற்படுகையில் அது ஆச்சரியமூட்டவில்லை. துக்ளக் சோவும் இன்னபிற இந்து பார்ப்பனிய வெறி கொண்ட ஆண்களும் ஈழப் போராட்டத்தை அவமதிப்பது இயல்புக்கு மாறானதாகப் படவில்லை. அது அவர்களின் ஆதிக்க அரசியலாக அடையாளங் காணப்படுகிறது. ஆனால் சந்திரிகா சர்வாதிகாரியாக செயற்படுவதும், வாஸந்தி குரூரமாக சிந்திப்பதும், ஜெயலலிதாவின் மோசடிகளும் மாத்திரம் அதீதமானதாக தென்படுகிறது? இதை ஏன் உடனடியாக ஆதிக்க அரசியலுடன் தொடர்புபடுத்த முடியாது போகிறது? பெண் சுபாவம் பற்றிய கதையாடல்கள் எல்லாம் ஏன் அநாவசியமாக வெளிப்படுகின்றன?
-Rajini

ஆண்கள்/பெண்கள் எல்லோரிடமும் இருக்கிற சர்வாதிகாரமும் குரூரமும் வன்மும் அழிய இப்படியான மாற்றெண்ணங்கள் வரவேண்டும். சொல்லப்படுவது என்ன யாருக்கு/எந்த சிறுபான்மையை ஒடுக்குகிறது என்பதே முக்கியம்.

ராஜினி பற்றி மேலும் விபரம் அறிய நானும் ஆவலாக உள்ளேன்.

6/03/2005 12:35:00 p.m.  
Blogger Mookku Sundar said...

//ஹாய் மதன்:

டாக்டர் பிரேம்குமார், கானகாவா, ஜப்பான்.

மாமேதைகள் எல்லாம் மகளிர் விஷயத்தில் ரொம்ப வீக்காக இருப்பது ஏன்? (எப்படியும் ஒரு செக்ஸ் கேள்விக்குப் பதில் அளிக்கப்போகிறீர்கள். அது என்னுடையதாக இருந்துவிட்டுப் போகட்டுமே?)

மேதைகள் எல்லோருமே தாங்கள் உருவாக்கும் படைப்பில் அத்தனை புலன்களையும் ஒரு சேரச் செலுத்து கின்றனர். அந்த ஆழ்ந்த கவனத்தின் போது, செக்ஸைப் பற்றியெல்லாம் சிந்திக்கவே மாட்டார்கள். உதாரண மாக, மகா சிற்பியான ரோடான், நிர்வாணமாக ஒரு பெண்ணை நிற்க வைத்துச் சிற்பம் வடிப்பார். பெண் சற்று நகர்ந்தால், கோபத்துடன் சென்று அவள் தலைமுடியை உலுக்கி சரியாக உட்காரு! என்று கர்ஜிப்பார். சிற்பம் முடிந்தவுடன், அப்பாடா! என்று ரிலாக்ஸ் பண்ணும்போது, அத்தனை செக்ஸ் எனர்ஜியும் கொப்பளிக்க ஆரம்பிக்கும்! அதே பெண்ணை ஆரத் தழுவி ஆவேசமாகக் காதல் புரிவார்.

பைரான் போன்ற பெருங் கவிஞர்களுக்கெல்லாம், செக்ஸ் ஒரு வடிகாலாகத் தேவைப்பட்டது. ஆனால், கவிதை எழுதும்போது காதலி வந்து முகத்தை வருடினால், பளார்தான்! //

ச்சும்மா..தகவலுக்கு.

6/03/2005 02:00:00 p.m.  
Blogger SnackDragon said...

/பெண்மை ஆண்மை இரண்டுமே கற்பிதங்கள் என்றே நினைக்கிறேன். அப்படியென்கிறபோது, “பெண்மை என்பதை முழுவதுமாக துறந்துவிட வேண்டும் என்பது எத்தனை சரியான வாதம்?” என்கிற கேள்வியே அங்கில்லை என்று ஆகிறது./
பொடிச்சி, நீங்கள் சொல்வது உங்கள் மேல் கொஞ்சம் ஆச்சரியத்தை வரவழைத்தாலும். இது போஸ்ட்-மார்டனிஸ பெண்ணியத்துக்கு லிபெரல் பெண்ணியத்துக்கும் உள்ள கேள்விதான்.
இதற்கு அறிவியல் மூலமாய் பதில் சொன்னவர்களைத்தான் என்னால் காட்ட முடியும். மேலும் நான் என்ன நினைக்கிறேன் என்பதும் பொதுவான பெண்ணியத்துக்கு உடன்பாடானதே. மேலும் தங்கமணி சுட்டியது போல் நான், "பெண்மை என்பது" பெண்களுக்கு மட்டும் என்று சொல்லவில்லை. பெண்களுக்குரிய அறிவியல் ரீதியான உணர்வுகளைத்தான் பெண்மை என்று சொல்வேன். அதைக்காரணம் காட்டி அடக்குமுறையை கட்டவிழ்ப்பதில் எனக்கு உடன்பாடில்லை.
இதையும் கொஞ்சம் வாசித்துவிடுங்கள் விவாதத்துக்கு வசதியாக இருக்கும்.
உங்கள் பின்னூட்டத்தை மீண்டும் ஒருமுறை வாசித்து பதில் சொல்கிறேன்.

6/03/2005 02:14:00 p.m.  
Blogger மு. மயூரன் said...

//இன்னும் சிலரோ இதன் மீது இறுக்கமான மௌனத்தை சாதிப்பதன் மூலம் இதைப் பேசப்படாப் பொருளாக்க முயல்கின்றனர்.//
ஜெயமோகனின் இந்த பிரதி மீதான இவ்வாசிப்பு வெளிவந்த காலத்தில் , பிரக்ஞை பூர்வமாக ஈழத்து சிற்றதழ் பரப்பில் இதைத்தான் செய்தோம்.

சி.சிவசேகரமாதியோரிடமிருந்து மிகச்சிறிய அளவில், "இதில் ஒன்றுமில்லை, இது முக்கியமுமில்லை" என்பது போன்ற அறிவுறுத்தல்கள் மட்டுமே வெளிவந்திருந்தன.
பிரதியின் அளவு, ஆற அமர விமர்சிப்பதற்கு தக்கதாய் இல்லை என்பதும் உண்மைதான்.
தன்னகத்தே ஒன்றுக்கொன்று முரணான பல செய்திகளை இது கொண்டிருப்பதால், ஒன்றை விமர்சிக்கப்போக, குர்ரானிலிருந்து பிறிதொரு வாசகத்தை எடுத்துக்காட்டி சமாளிப்பதுபோல, ஞெயமோகனும், அவர் முகாமை சேர்ந்தவர்களும் விதண்டாவாதம் புரிவதற்கான சந்தர்ப்பங்களும் சாத்தியங்களும் அதிகம்.
இப்பதிவுக்கு பின்னர் அத்தகைய விதண்டாவாதங்கள் வரும் என பொறுமையோடு காத்திருந்தேன். வரவில்லை.

மார்க்சீய அவநம்பிக்கையாளர்கள், இப்பிரதியை எனக்கு பரிந்துரை செய்திருந்தார்கள்.
பிரபாகரன் பற்றி வரும் பகுதிகளை திருப்பி அவர்களுக்கே சொன்னபோது, ஜெயமோகன் நேர்மையற்றவன் என்றார்கள்.

//இந்நாவலை, பெண்ணிய வாசிப்புக்கு உள்ளாக்குவதன் மூலம் இதில் புதைந்துள்ள ஆணாதிக்க சிந்தனை ஓட்டத்தை அடையாளங் கண்டு அதை நிராகரிப்பதே இங்கு எனது நோக்கமாகும்//

இப்பிரதி என்ன சொல்லவருகிறதென்பது மிக எளிய சமன்பாடு.

ஒட்டுமொத்தமாக அத்தனை இலட்சியவாதங்களையும் இது நிராகரிக்கிறது.
கொச்சைப்படுத்துகிறது.
அவற்றை அர்த்தமற்றதாக சித்திரிக்க முயல்கிறது.

இதன் அடிப்படை கருத்தியல் தளம், எதனையும் எதிர்கொள்ள இயலாதவர்களுக்கானது.
புரட்சிகர மாற்றங்களை, உள்வாங்கிக்கொள்வதற்கான புதிய வாழ்வியல் பொறிமுறைகளை பயிற்சிசெய்துகொள்வதற்கும், கண்டெடுப்பதற்கும் சக்தியற்றவர்களுக்கு ஆனந்தத்தை கொடுப்பது.

மார்க்சீய முகாமிலிருந்து, ஆன்மீகத்துக்கும் தமிழ் தேசியவாதத்திற்கும் (முற்போக்கான தேசியத்திற்கு அல்ல) தாவியவர்களின் உளவமைப்பே அதுதானே.

"என்னதான் இருந்தாலும், எங்கள் ஊர் மாட்டுவண்டிபோல் வருமா" என்பது போன்ற வெறும் கதைகளின் தொகுப்புத்தான் இப்பிரதி.

ஏற்கனவே நிலைபெற்றிருக்கும், வாழ்க்கை முறைகளை, வாழ்வுக்கான சமன்பாடுகளை, தத்துவங்களை, கேள்விக்குள்ளாக்காமல், அவற்றிடம் சரணடையும் கோழைத்தனம்தான் இது சொல்லும் செய்தி.

ஜெயமோகன் போன்ற அடிப்படையிலேயே நேர்மையற்ற எழுத்தாளர்களிடமிருந்து வெளிவரும் வெளிப்பாடு ஒன்றைப்பற்றி பெரிதாக அலட்டிக்கொள்ள எதுவுமில்லை என்றே தோன்றுகிறது.

ராஜினி யை அறிமுகப்படுத்துகிறது என்ற வகையில் , இதனை பதிந்தமைக்காக, பொடிச்சிக்கு நன்றி.

பி.நி.கு வில் வரும் கவிதையொன்று, (பிடிப்பிடியாக மண்ணள்ளிப்போடுவது) எனக்கு மிகவும் பிடித்திருந்தது.

6/08/2005 12:33:00 a.m.  
Blogger ஒரு பொடிச்சி said...

மூக்கன்! தகவலுக்கு நன்றி. என்ன சொல்லுங்கள், 'மேதைகள்' குறித்த stereotype கதைகளுடன் அடிப்படையிலேயே ஜெயமோகன் முரண்படுகிறார். ஜெயமோகன் பாய்ஸ் போன்ற படங்களை முன்வைத்துப் பேசுகையில்எல்லாம் முன்வைப்பது தனது ஒழுக்கத்தைத்தான். நீங்கள் குறிப்பிடுகிற கதைகள் பாலகுமாரன், ஜெயகாந்தன் இன்ன பிற பல எழுத்தாளர்களுக்கு பொருந்திக்கொண்டிருக்கலாம். ஆனால் ஜெயமோகன் அச்சட்டகத்துள் இல்லை. அவர், ஒழுக்கத்தை காமத்திற்கான கட்டுப்பாட்டை முன்வைக்கிறார். என்னளவில் அதில் ஒரு பிரச்சினையுமில்லை. ஆனால் தன்னுடைய ஒழுக்கத்தை மற்றவர்களும் வழிமொழிகையில் அப்படி அல்லாதவர்களை -அனேகமாக பெண்களை- சகிக்க முடியாதிருப்பதும் அவரிடம் அவரது எழுத்துக்களில் வெளிப்படுகிறது.
மதன் கூறிய இந்தக் கதை மிகச் சிறந்த உதாரணம் ஆண்கள் சக ஆண்எழுத்தாளர்களுடைய பெண் மீதானஅடக்குமுறைகளை, பெண்களை அவர்கள் வெறும் பாலியல் உறவு வைக்கும் கருவியாக 'உபயோகிப்பதை' எப்படி 'பெருமையாய்' (லீலை! குறும்பு! போல ஒரு செல்லத்துடன்)பொதுத்தளத்தில் முன்வைக்கிறார்கள் என்பதற்கு.
மகா சிற்பியான ரோடான் ஒரு பெண்ணை, அவள் அவரது படைப்பிற்கு மாடலாக இருக்கிறாள் என்பதற்காக இப்படி நடத்துவதை, அவர் மகா சிற்பி என்பதற்காக மதன்போல நாங்கள் ஏற்கவேண்டியதில்லை. அவளை பளார் என அடிக்க அவன் யார்? இன்றைக்கு பாப்லோ நெருடா 'நான் உன்னை அரசியாக்கினேன்' என எழுதினால், 'நாயே நீ என்ன
என்னை ஆக்குவது' என்பதே அரசிகளின் கேள்வி.

கார்த்திக், reshi, மு.மயூரன் நன்றி

6/14/2005 02:50:00 p.m.  

Post a Comment

<< Home