@font-face { font-family: TSCu_InaiMathi; font-style:normal; font-size: 10pt; font-weight:normal; src:url(http://mathy.kandasamy.net/fonts/TSCUINA1.eot); }

Sunday, July 03, 2005

மாற்றம் ஏ..மாற்றம் (1)

(ஒரு warm up தொடர்)


She came home running
Back to the mothering blackness
Deep in the smothering blackness
White tears icicle gold plains of her face
She came home running

here to the black arms waiting
now to the warm heart waiting

black yet as Hagar’s daughter
tall as was Sheba’s daughter…

-மாயா ஆஞ்சலோ, கவிதை: The Mothering Blackness



சின்னப் புள்ளியளுக்கு எல்லாமே அதிசயந்தான். அதுகளிட உலகமே ஒரு தனிதான். அதுகள் ‘பிப்பி’ இருக்குங்கள் அல்லது ‘வீவீ ' இருக்குங்கள்.. திடீரெண்டு ஒருநாள் தாங்களா வந்து 'டூ' எண்டுங்கள். அவர்களுக்கென்றிருக்கிற ரகசிய மொழிகளும் நம்பிக்கைகளும் ஆய், ஒரு பருவத்தை களங்கமின்மைகளுடன் (நிறைய கள்ளத்தனத்துடன்) வாழ்ந்தபடி...

கன நாளைக்குப் பிறகு, நான் என்னோட குட்டிச் சாத்தானக் கண்டன். கொஞ்சம் வளர்ந்திருந்தான். ஆனாலும் இன்னும் சின்னப் புள்ள. இப்ப அவனுக்கு வாசிக்கத் தெரியுது. நல்லா. அதுவும், படு வேகமா எனக்கு காட்டாப்புக் காட்ட படிச்சண்டு போகேக்குள்ள நான் திருத்தினா, கொஞ்சம் நிண்டு அவமானப்பட்டு தொடர்ற அளவுக்கு!! ஆனா 'சொதி'க் கதை போகேல்ல. புதிய 'புதினங்களா' நிறையச் சொன்னான். திடுப்பென, "நான் இப்ப டான்ஸ் பழகிறன் தெரியுமா" எண்டான். "ஓ! உண்மையாவா? ஆடறனியா" எண்டன். " "ஹாஹா" எண்டிட்டு சொன்னான்: "நான் என்ன பெட்டையா? தங்கச்சிதான் பழகிறவள்." நான், "டேய்ய்ய்ய்ய் எண்டிட்டு பெடியங்களும் பழகிறவங்கள்தானடா" எண்டன். அவன் ஒரு புத்தகம் கொணந்தான். அது சின்னப் பிள்ளைகளுக்கான pictionary (பட(அ)கராதி?!?). அவன் அறிமுகப்படுத்தின விளையாட்டு: அதில இருக்கிற ஒரு படத்துக்கு அவன் விளக்கம் தருவான் (உதாரணம்: அது ‘பறக்கும்’), நான் அந்த சொல்லக் கண்டுபிடிக்கோணும் (பறக்கும் = பறவை). பெரீய விளையாட்டுத்தான், ஆனா எனக்கு விளையாட வரேல்ல, ஒரு சொல்ல விபரிக்கவே மிகவும் திணறினன். சுலபமான விசயங்கள்தான் எவ்வளவு கஸ்ரம்? ஆனா அவன் ஒவ்வொரு சொல்லையும் டாண்டாண் என்று விவரிச்சான். நானும் டாண்டாண் என்று பதில மட்டும் சொல்லிக்கொண்டே இருந்தன் (விவரிக்கத்தான் வரேல்ல). நல்லாப் போச்சு. கடேசியா அவன் சொல்றான் "ஐயோ உனக்கென்னண்டு எல்ல்ல்..லாச் சொல்லும் தெரியுது (அச் சொல்லுகளாவன பறவை, பந்து, புல்லு, முயல், கோழி, இத்தியாதி – அவனது விளக்கங்களாவன: பறக்கும், சின்னப்புள்ளையள் பூங்காவில வைச்சு விளையாடுறது, இது வந்து வடீ..வான ச்சின்ன மிருகம் ம்ஹீம் ம்ஹீம் வேற எப்பிடிச் சொல்றது ம்? ஆ.. அது வந்து முதல் எழுத்து ஆர் கடைசி எழுத்து 'ரீ' இடையில..., தரையில இருக்கும் பச்சைக் கலர், முட்டை வாறது, இத்தியாதி) நீ செரியான கெட்டிக்காரி."
எனக்கு என்ன சொல்றதெண்டே தெரியேல்ல. அவனுக்கு அவ்வ்வ்வளவு அதிசயம். முட்டைக் கண்ண அகல விரிச்சுப பாக்கிறான்.
நம்ம அவ (எவ?) சொன்னதுமாதிரி இந்த வாழ்க்கையே ஒரு மிகப்பெரிய நகைச்சுவைதான். யோசிச்சுப் பாக்கிறப்போ சிலவேளை blossoming memories ya(மலரும் நினைவுகள்)... ஒவ்வொண்டா. ஒவ் வொவ் வொண்டா.

அப்ப சின்னப் புள்ள. ஓ! அவனை மாதிரியே. இந்தியாப் புத்தகமெல்லாம் வீட்டில கிடக்கும். அதில வாற ஆங்கிலச் சொற்கள தமிழில படிச்சா எனக்கு விளங்காது (சரீ சரீ ஆங்கிலத்தில தெளிவா எழுதி இருந்தாலும் விளங்காது தான்). தமிழ்ல அப்பிடி ஒரு வார்த்தையே இராதே? இல்லது இருக்குதோ? எனக்குத் தெரியேல்லையா.. அப்பரிட்டப் போயி, கேட்டா அவர், "'டூ வீலர்' எண்டா 'ரூ வீலர்' அதான் இரு சக்கர வண்டி - மோட்டர் சைக்கிள்" சொல்லுவார். அய்ய்ய்ய்யோ! அப்பர் எவ்வளவு கெட்டிக்காரர். ஆவருக்கு எல்ல்...லாமே தெரியுதே. ஐயோ…………………………….. எப்பிடி???? அதிசயம் தாங்காது. 'ஆ' வெண்டண்டு பெரீய்ய பெருமையோட திரிவன். அப்பர்! என்ர அப்பர்!

அந்த 'அதிசயிப்பு' விவரிக்க முடியேல்ல.
அழியாத கோலங்கள் இல அந்தக் கறுத்த வடீவான பெடியன் பாத்தண்டு இருக்கிற கொளுகொளு எண்டிருக்கிற அந்த வடீ...வான ஷோபா டீச்சர்
சவத்துக்குதவாத படு ஆங்கீலேயப் படமான the end of the affair இல் கன்னத்திலையோ என்னவோ தேமல் படர்ந்த தன்னம்பிக்கையற்றிருக்கும் அந்தப் பையனுக்கு ஒரு தேவதைபோல ஜீலியானா மூர் கொடுத்த இதமான அந்த முத்தம்
நட்சத்திரன் செவ்விந்தியன் கவிதைகளில் வந்த மஞ்சட் பூக்காடுகள்
இந்த ஞாபகங்கள் எங்கிருந்து வருகின்றன?


போன விடுமுறைக்கு வீட்ட வந்து நிண்டாள் ஒரு சுந்தரி. அண்டைக்கு அவளோட தோஸ்த்து அக்காமார் எல்லாம் வெளியே போனபடியா மாட்டீற்றன் அவளிட்ட. நேரத்த எடுக்கப் போறாளே எண்டு இருக்குது எனக்கு. ஆனா அவள் கற்றுத் தந்த விளையாட்டு ரொம்ப சுலபம் (தப்பினன்!). அவ போனில கதைக்கிற மாரீ பாவனை பண்ணுவா, ஒலிவாங்கியை கையில எடுத்து ஹலோ ஹலோ எண்டுவா, நான் பதிலுக்கு சொல்லணும். அவ்வளவுதான். அவள் கதை போற திசையில என் பதில் விரியணும், அட! அவ்வளவே! கடேசீயாத்தான் விளையாட்டிட தலை புரியுதெனக்கு. திகைப்பாயீட்டு!
அதென்னண்டா ஒவ்வொருமுறையும் தொலைபேசி ஒலிக்கும். அவள் எடுப்பாள். ஹலோ சொல்லுவாள். பிறகு...
நான் ஹோலண்டில நிக்கிறன்.
நான் சுவிஸ் இல நிக்கிறன்
நான். ம்... பிறான்ஸில நிக்கிறன்
ஓமிப்ப நான் கனடாவில நிக்கிறன்

இப்பிடியே போகும். அவளோட வயசில எனக்குத் தெரியாத தேசங்கள் எல்லாம் அவள் வாயில வந்து வந்து போனதா, ஒரே திகைப்பாயிற்றுது. அவளுக்கொரு ஆறு வயசுதான் இருக்கும். இடையில ஆள நிப்பாட்டி “நீ என்னெண்டு கனடாக்க வந்தனி" எண்டு விட்டா, "எப்பிடியோ வந்து சேர்ந்திட்டன்" எண்டாள். அப்புறம்தான் மரமண்டையை துளைச்சதில கால் புரிஞ்சது, அவளோட அம்மாட அண்ணன், தம்பி, அவளோட அப்பாட உறவுக்காரர்கள் எல்லோரும் பயணமுகவர் (Agency) ஊடா ஐரோப்பாவில எந்தெந்தவோ தேசங்களில் வந்து நிண்டு அவளோட வீட்ட தொடர்புகொண்டத பார்த்து வளர்ந்தவள், அதை பாவனை செய்யிறாள், நடிச்சுக் காட்டுறாள்! என்ர சுந்தரீ!

ஆனா ஒண்டு. எல்லாச் சின்னப் புள்ளியளும் அப்பாவிகள் எண்டில்ல, சிலதுகள பாத்தாக் கொல்லுற ஆத்திரம் வரும். செரியான ஒசிலாங்கம்!!!!!! அதிலும் காதலனோட பழைய காதலியிட பிள்ளைகள். ehhhhhhhhhhhhhhhhhhhhhhhhhhhhhhhhhhhhhhhhhhhhhhhhh! அதுகள் விதிவிலக்கு. நுள்ளோணும்போலத்தான் இருக்கும். இளங்காலத்தில், எரிச்சலைக் கிழப்ப, பழைய காதலிகள் பற்றித்தான் எத்தனை திரைப்படங்கள்! அவர்கள் கையிலிருக்கிற குழந்தைகள இவர்கள் பாக்கிறதும், ஏக்கம் கலந்த சிரிப்பும், இதுகளப் படங்கள்ல அவுக காட்டக் காட்ட இங்க மனசில வலு காட்டமா இருக்கும்! என்ன அநியாயம்! கண்டமேனிக்கு V.P ஏறும், CUT! CUT!


ஒருபோதும், நான், கலியாண வீடு சாமத்திய வீடு கொண்டாட்டங்கள் வழிய இரு கரங்களிலும் பிள்ளைகளை கொண்டு நடை பயலுகிற எனது உறவுக்கார சிறு வயதுப் பெண்களாய் இருந்ததே இல்லை; எனக்குள்ள, குழந்தைகள் எண்டா ச்சோ சுவீட் எண்டெண்டு உண்மைக்கும் பூரிச்சுப் போற அந்தப் பிள்ளைகள் இல்லை. ஒரு புதுவருடத்துக்கு, வாழ்த்தா அவர் சொன்னார் "எல்லாரும் பிள்ளை பெத்து எல்லாரும் குடும்பம் கட்டி அப்புறமென்ன பிள்ள?" செரியா பதிஞ்சு போயிற்று மனசில. அப்ப, வகுப்பறையில, "யாருக்கு சின்னப்பிள்ளைகள் பிடிக்கும்" "பெற்றோராகப் பிடிக்கும்" "பிடிச்சாக்கள் கையை உயத்துங்கோ" கேள்விக்கு, நான் மட்டும்தான் தயங்கித் தயங்கிக் கையை உயத்துவன், கடே..சியா, பிள்ளைகள் விநோதமாய்ப் பார்ப்பார்களோ என்ற பயத்தில (மனதுக்குள்ள: 'என்ன stupid கேள்வி இது! ரொம்ப முக்கியம் இப்ப!").
ஆனா இன்றைக்கு இந்தக் குழந்தைகளூடா என்-னென்-ன-மோ தோணுது. இழந்த innocence ஆ, எல்லாத்தையும் முழுமையா நம்பி எல்லாத்தையும் அதிசயிச்சு நிக்கிற பாதுகாப்பான வளையத்திலிருந்து விலக்கப்பட்டுள்ளதை உணர்தலாலா?
அப்பா ஒருநாள் என்னைக் கூப்பிட்டார். ஒரு கடிதத்தத் தந்து "பிள்ளை செரியாண்டு பாரு, பாத்திற்று ஒருக்கா மெயில் பண்ணி விடு" எண்டார். ம். பார்க்கிறன். அப்பரிட கடிதத்தில –என்ர அப்பாட கடிதத்தில- அற்பத்தனமான 'ழ' 'ள' பிழையள். எனக்குத் தாங்கவே முடியேல்ல. எப்பிடி?

எனக்குள்ள இந்த உலகத்தில உள்ள மலரெல்லாம் தன்னோட ரோஜா போல அழகாய் இராது என நம்பிய குட்டி இளவரசன் ஒரு ரோஜாத் தோட்டத்தை கண்டபோதான துக்கம். ஐயோ! அனேகமா அப்பர் இந்த 15-20 ஆண்டுகளுக்குள்ளாற தனது இளம் பராய வாசிப்புப் பழக்கத்தை தொழிற்சாலையும் முதலாம் உலக உளைச்சலுக்குள்ளும் தொலைத்துவிட்டதால வந்த எழுத்துப் பிழைகளா அவை இருக்கலாம். அடிக்கடி எழுதாத/எழுதுதல் அபூர்வமாகிவிட்டதன் கைப் பிறழ்வாகக்கூட இருக்கலாம். ஆனால் அவர் என்னுடைய அப்பர். எனது பிழைகள் எல்லாம் திருத்தப்பட்ட, கேள்விகளுக்கெல்லாம் பதிலாய் இருந்த, எனது கண்கள் தன்னால் முடிந்தளவு விரியக் காரணமான ஒருத்தர்.

அந்த நாளில் அவரோட எழுத்துப் பிழையையும் என்ர சாத்தானோட அதிசயிப்பையும் என்னையும் தோழரிடம் சொல்லச் சிரிக்கிறாள். பச்! எனக்கு விவரிக்கத் தெரியேல்ல. ஆனா ஒரே பீலிங்கா இருக்கு.

(...பீலிங் whenever I feel like it தொடருமாம், மன்னிக்க!).

4 Comments:

Blogger Jayaprakash Sampath said...

excellent....pls continue..

//எனக்குள்ள இந்த உலகத்தில உள்ள மலரெல்லாம் தன்னோட ரோஜா போல அழகாய் இராது என நம்பிய குட்டி இளவரசன் ஒரு ரோஜாத் தோட்டத்தை கண்டபோதான துக்கம்//

//அதுகள் ‘பிப்பி’ இருக்குங்கள் அல்லது ‘வீவீ ' இருக்குங்கள்.. திடீரெண்டு ஒருநாள் தாங்களா வந்து 'டூ' எண்டுங்கள். அவர்களுக்கென்றிருக்கிற ரகசிய மொழிகளும் நம்பிக்கைகளும் ஆய், ஒரு பருவத்தை களங்கமின்மைகளுடன் (நிறைய கள்ளத்தனத்துடன்) வாழ்ந்தபடி...//

/ நீ செரியான கெட்டிக்காரி."
எனக்கு என்ன சொல்றதெண்டே தெரியேல்ல. அவனுக்கு அவ்வ்வ்வளவு அதிசயம். முட்டைக் கண்ண அகல விரிச்சுப பாக்கிறான்.//

7/03/2005 12:39:00 p.m.  
Blogger `மழை` ஷ்ரேயா(Shreya) said...

//"எப்பிடியோ வந்து சேர்ந்திட்டன்" எண்டாள்//

அடிக்கடி கேட்பதையெல்லாம் சின்னப்பிள்ளைகள் அப்படியே கிரகித்துக் கொள்வார்கள்! பெரிய பெரிய பல சொற்கள் / கசக்கும் உண்மை சொல்லும் வசனங்கள் பல வெகு சுலபமாக இவர்கள் வாயிலிருந்து வந்து விழும். ஆனால் அதைச் சொல்லும் இடம்/காலம் தெரியாமல் சொல்லும்போது...

வெளிநாடு போகவென்று கொழும்பில் 1990களில் எங்களுடன் தங்கியிருந்த குடும்பத்தின் 5 வயதுச் சிறுவனின் அகராதியில் மிகச் சாதாரணமான ஒரு சொற்கள் & வசனம்: இடம்பெயர்ந்து வவுனியாவில போய் அகதிமுகாமில இருந்தனாங்கள். :o(

7/03/2005 09:21:00 p.m.  
Blogger ஒரு பொடிச்சி said...

(this didn't appear here, so am pasting from the email)
-podichchi

Posted by ஈழநாதன்(Eelanathan) to பெட்டைக்குப் பட்டவை அல்லது பெட்டை அலசல் at 7/03/2005 05:11:05 PM:
பொடிச்சி எங்கேயோ போயிட்டீங்கள்.ஒவ்வொரு வரியும்.கனமாகிக்கொண்டே போகிறதா அல்லது கனமான மனதை இலகுவாக்கிக்கொண்டு போகின்றதாவென்று சொல்லவே முடியவில்லை

7/04/2005 11:18:00 a.m.  
Blogger ஒரு பொடிச்சி said...

நன்றி பிரகாஷ், ஷ்ரேயா, ஈழநாதன்..

பிரகாஷ்,
எழுத வேண்டிய விசயங்கள் பல எழுத முடியாமற்போகிறபோது/எழுதுவதற்கான மனோநிலை இல்லாமலிருக்கிறபோது ஒத்தகையாய் ஒரு பயிற்சிக்காக இப்படி எழுத முயல்கிறேன். நன்றி...

7/04/2005 11:22:00 a.m.  

Post a Comment

<< Home