கண்ணன்கள் - கவிஞன்கள் - நித்திய காதலன்கள்
ஓடு மீன் ஓட உறு மீன் வரும் வரையில்
காத்திருக்குமாம் கொக்கு
-சொலவடை
(குளக்கரையில்) நீளக் காலூன்றி
ஒரு கொக்கு தவமிருக்கு
-சேரன் (கவிதை, 'பிரிதல்')
அவனின் செம்பவள வாய் வேண்டி
“...மருப்பொசித்த மாதவன் தன் வாய்ச்சுவையும் நாற்றமும்
விருப்புற்றுக் கேட்கின்றேன் சொல்லாழி வெண் சங்கே” – என்றெல்லாம் உருகி உருகி அவள் பாடி நின்றதாக தமிழ் இலக்கியம் பதிவு செய்துள்ளது.
தம் காமத்தை பக்தியினூடாக வெளிப்படுத்தியவர்களாக இருந்த இப் பெண்டிரது கனவின் முழுமையான பிம்பம் ஆகிய கண்ணன் இன்றுவரையில் புனைவுகளில் ஆண்மையின், மயக்குதலின் நாயகனாகத் திகழ்கிறான். ஆண்மைக்கு அழகெனப் 'படுகிற' கார்மேக வண்ணம் தமிழ் சினிமாவிலும் 'கண்ணா கருமை நிறக் கண்ணா' எனப் பாடல்களாய் ஒலிப்பதாகிறது. (தமிழர்கள் தம் திராவிடத்தின் கறுப்பை ஆண்களிடம் மட்டுமே விரும்பிக் கொண்டும் இருக்கிறார்கள்!)
அவ்வாறாய் கண்ணன் மிக முக்கியமான பிம்பம் ஆண்மையின் சின்னம்.
பெற்றவர்கள்/தாய்கள் தமது ஆண் குழந்தையை கண்ணா என்றழைத்து அவனது குறும்புகளை விளையாட்டுக்களை இரசிப்பர், புளகாங்கிதமடைவர்.
பாரதியின் தீராத விளையாட்டுப் பிள்ளை ஒரு eve-teasing ஐ -பெண் மீதான பெரிய வீட்டுப் பையனான கண்ணனின் அத்துமீறலை- பெற்றவரின் புளகாங்கிதத்துடன் பாடப்பட்டிருக்கிறது. அப் பிம்பத்தை 'கண்ணா' என்ற பெண்ணாக மாற்றி அனைத்தையும் அவளது குறுப்பாக மாற்றினால் அதுவே சகிக்க முடியாது அபத்தமாகி விடும். அதற்கு அவசியமற்று ஆண்களாகிய 'அவன்'கள் தீராத விளையாட்டுப் பிள்ளைகளாக பல காதலிகளை இயல்பெனக் கொண்ட கவிஞர்களாக நித்திய காதலர்களாக உருவாக்கப்பட்டுவிட்டார்கள்.
அவனது அகன்ற தோள்களும் உயரமும் ஆண்டாளை கணவனை விட்டு ஓடி வரச் செய்த வசம் செய்யும் கானங்களும் அவன் பற்றிய எண்ணற்ற புனைவுகளும் ஆய் கவிதைகளில், பாடல்களில் என்றென்றைக்குமாக கண்ணன் ஒரு காதல் பிம்பமாக முன் வைக்கப் பட்டுள்ளான்.
2.0 கவிஞன்கள்
...எந்த நிலப்பரப்பும் வாழ்வியல் அம்சமும் இல்லாமல்தான் இங்கே ஆண் கவிஞர்கள் எழுதிக் கொண்டிருக்கிறார்கள். இருபத்திநான்கு மணிநேரமும் இவர்களுடன் படுத்துக் கொள்வதற்கான ஒரு பெண்ணைத்தான் இவர்கள் கவிதைகளில் தேடுகிறார்கள். இதுதான் ஒரு கவிஞனுடைய நோக்கமாக இருக்க முடியுமா?
-மாலதி மைத்ரி, (குமுதம்) தீராநதி அக்டோபர் 2003 இதழ் பேட்டியில்
கவிஞன்கள்! கவிஞன்கள் என்றதும் பலவிதமான பிம்பங்கள் மனதுள் எழும், புரட்சிகரமான மற்றும் மெல் இதயத்தை உடையவர்களாக, அவர்கள் எழுதிய கவிதைகளை விடவும், 'கவிஞர்கள்' குறித்ததே ஏராளம் பிரம்மைகள். அவர்களுக்கென ஒரு தேஜஸ், அங்கீகாரம், மேலதிக கவனம். அவர்கள் என்றும் இளமையானவர்கள் (அதிலும் என்றும் 16), இளமையான சிந்தனையை உடையவர்கள் எனப் பல மாயைகள்/அனுமானங்கள்@ அவை எல்லாவற்றினதும் பொதுஒற்றுமை அவர்களது இளமையும் காதலுணர்வும் காதலுறவுகளும் சார்ந்ததே.
சிற்றிதழ் ஒன்றில், யாரோ கவிஞர் கூறிய கருத்திற்கு விமர்சித்து எழுதுகையில் ஒரு வாசகர் எழுதுகிறார் ''இது கவிஞருக்கு அழகல்ல''. அவர் எழுதிய விடயம் சாதாரண மனிதர்களுக்கே 'அழக'ற்ற விடயமாக இருப்பினுங்கூட கவிஞருக்கு இது அழகா என அவர் உணர்ச்சிவசப்படுகிறார். தொடர்ந்தும் இத்தகைய கூற்றுக்களைக் கேட்கக் கூடியதாக உள்ளது “இது கவிஞருடைய அணுகுமுறையே அல்ல” “கவிஞரே இப்படிக் கூறினால் எப்படி?” இத்தியாதி என்று. அவையூடாக கவிஞர் குறித்த ஒரு மயக்கம், காவிய எண்ணம் வெளிப்படுத்தப்படுகிறது.
''கவிதைகளும்'' கட்டுரை, சிறுகதை, நாவல் போன்ற வடிவங்களில் ஏனைய ஒன்றே. ஏலவே கவிதைகள் எழுதுவதால் ''கவிஞன் என்பதால்'' மட்டும் எப்பேர்ப்பட்டவர்களும் மேம்பட்ட மனிதனென்றோ 'மேலான' உணர்வுதளத்தை, உயர்ச்சியை உடையவனென்றோ கொள்ள முடியாது. ஆனால் 0என்றென்றும் கவிஞர்கள் குறித்த மாயைகளில் குளிர் காய்பவராகவே ஆண் கவிஞர்கள் இருக்கிறார்கள். அவர்களுக்கு அதொரு தப்பித்தல், அவர்களது வாழ்விற்கு வர்ணம் பூசும் மேலதிக சலுகை. ஓரு இலவச இணைப்பு!
ஆனால் பெண்கவிஞர்களுக்கு கவிஞனுக்குரிய சலுகைகளிற்கே இடமில்லை. மற்றெந்த புனைவுகள் போலன்றி, கவிதைகள் பொதுவாகவே நேரடியாகப்பேசுவதால் அது கவிஞரின் அனுபவமாக எடுத்துக் கொள்ளப்படுகிறது. கவிதைகளிற்கும் கவிஞர்கட்குமான நேரடித்தன்மை காரணமாக -பெண் கவிஞர்கள்- தமதல்லாத அனுபவத்தை எழுத நேர்கையில் சங்கடமாக அமைந்துவிடுவதும் உண்டு. புகழ் பெற்ற புதுக் கவிஞர்கள் என்றொரு நு{லை அன்னம் வெளியிட்டது. அதில் மொPனா ஸ்வெட்டேவா என்கிற ரஷ்யக் கவிஞையை அறிமுகம் செய்கையில் “...கவிஞர் அகமட்டோவா விடமிருந்து இவள் வேறுபடுகிறாள். இலக்கியவாதிகள் அம்மடோவாவைப் ‘பாதிப் பரத்தை; பாதித் துறவி” என்பர், ஸ்வெட்டேவாவை “முழுப் பரத்தை” என்பர்.” என்று தொகுப்பாளரால் முன்வைக்கப்ட்டிருந்தது. இத்தகைய வர்ணனை அதில் இடம்பெற்ற (பாப்லோ நெருடா உள்ளடங்கலாக) ஆண் கவிஞர்களுக்கு இல்லை! மாறாக, “உணர்ச்சிவசப்படும் கவிஞர்கள், காதலைப் பொறுத்தவரையில் எப்போதும் கட்டுப்பாடற்றவர்கள். சந்த வேறுபாடுகளும், சாயல் மயில் வேறுபாடுகளும் அவர்களால் தவிர்க்க முடியாதவை, பைரன், ஷெல்லி, கெதே, போதலேர், பாப்லோ நெருடா எல்லாரும் காதல் மன்னர்களே! மாயயகோவ்ஸ்கி மட்டும் அதற்கு விதிவிலக்கா? மாயகோவ்ஸ்கியின் வாழ்க்கைப் பாதையில் எத்தனையோ பூந்தோட்டங்கள்! குளிர் அருவிகள்! இளமரக்காடுகள்!”
பாடசாலைகளில் சில இளைஞன்களைச் பெண்கள் கூட்டம் சூழும். விளையாட்டு வீரர்களைச் சூழ்ந்திருப்பதுபோல,; பாடகன்கள் இன்ன பிற பிரபலமானவரைச் சுற்றி இச் சூழல் இருக்கும். போதுவாக ஸ்திரிலோலர்களாயப் பெண்டாளர்களாய் இருக்கிற இவர்களைப் ‘பொறுக்கி” என்று வைதாலும் ரகசியமாய் ஆண் மனோபாவத்தில் “மச்சக்காரன்” எனத்தான் பலரும் சொல்லுவதுண்டு. (இதில் மச்சத்துக்குக் காரணமானது பல பெண் உடல்களைக் கூடுகிற “யோகம்” தான்) இந்த நாடுகளில் “கவிஞன்” களுக்கான கிளர்ச்சியுறல் “கண்ணன்” இத்தியாதி பிம்பங்கள் இல்லாத காரணத்தினால் அவர்கள் “play boy” (தமிழ் - மன்மதர்) களாக பார்க்கப்படுகிறார்கள்; அவர்கள்மீதும் சகஇளைஞன்களுக்கு பொறாமை இருப்பதும் இயல்புதான் (பெண்களுக்கு பெண்கள் மீதும் இப்படியான உணர்வு உண்டே. அதிலும் உயர்பாடசாலை சூழலில் ஒரு popular crowd உம் அதில் சேர்த்தியற்ற இன்னொரு குழாமும் என்று). மேற்கின் ஹோலிவூட் நடிகர்களுக்கு ஒப்பாக அல்லது மேலாக பாடகன்கள் பெண்களின் தீராத காதலராக கனவில் சூழுவதுண்டு.
வேடிக்கை என்னவென்றால் அத்தகைய சொல்லுக்கு ஈடாய் “நித்திய காதலன்” என சேரன் கவிதை நூலுக்கான தனது காலச்சுவடு மதிப்பரையில் திரு சுந்தர ராமசாமி அவர்கள் சேரனைச் சுட்டியிருககிறார்.
0
(...இன்னும்
வரும்)
6 Comments:
நியாயமான சில கேள்விகளை எழுப்பி இருக்கிறீர்கள். நடையை கொஞ்சம் எளிமைப் படுத்தினால் இன்னும் நன்றாக இருக்கும்.
பாரதியையும் ஒரு சாத்து சாத்தி விட்டீர்கள். பதிலில்லை என்னிடம்
நட்புடன்
ஒரே ஒரு திருத்தம். எனக்கு தெரிந்தவரை மீரா தன் கணவனை விட்டுவிட்டு கண்ணனுக்காக ஏங்கி ஓடினாள். ஆண்டாளை பொறுத்தவரை அவர் திருமாலை(மட்டும்) கணவனாய் அடைய சபதம் மேற்கொண்டு கடைசியில் ஒன்றுசேர்ந்தார்.
கண்ணன் ஆண் தன்மைகள் குறித்த உங்கள் விமர்சனத்தில் நியாயமிருந்தாலும், அன்றய சூழலில் தங்களின் இச்சையை வெளிபடுத்தியதற்காக இந்த இரு(ஆண்டாள் + மீரா) பாத்திரங்களும் எனக்கு முக்கியமாக தெரிகிறது. உங்களுக்கு தெரியவில்லையா?
சமீபத்தில்தான் உங்கள் பதிவை படிக்க நேர்ந்தது. விரிவாய் பிறகு வருகிறேன்.
நன்றி ராஜ்குமார், ரோசாவசந்த்,
மீரா ஆண்டாள் தொடர்பா எனக்கு எதிர் எண்ணம் இல்ல. இந்த விமர்சனம் நிறுவ முயல்றது ஆண்மை பற்றிய புனைவுகள்ல இருக்கிற ஆதிக்கத்தைத்தான். எழுத்து கொஞ்சம் இறுக்கமாத்தான் இருக்கு, இது திருத்தப்பட்ட பிரதி அல்ல. திருத்திய பிற்பாடு மீள பதிகிறேன்.
podichchi.
ஆண்டாளும் மிராவும் கண்ணனை மட்டும் காதலித்ததால்தான் தப்பித்தார்கள், அல்லது முக்கியமாகப்படுகிறஅளவுக்கு முனைப்புறுத்தப்பட்டிருக்கிறார்கள்.
மற்றது அவர்கள் உருகு உருகு என்று உருகியது பக்திப்பரவசத்தில் அல்லவா ;-)
அப்படிச்சொன்னதால் தான் அவர்கள் காமம் "பெண்களின் பாலியல் இச்சைகளின் வெளிப்பாடுகளுக்கு தடை விதிக்கப்பட்ட" காலங்களூடே அவர்களை காப்பாற்றிக்கொண்டுவந்து சேர்த்திருக்கிறது.
(மீரா பாத்திரம் வெறும் கற்பனையாக மட்டுமே இருக்கலாம். ஆண்டாளின் பிரதி ஆண் எழுதியதாகவும் இருக்கலாம்)
பொடிச்சி,
சொலவடையும் சேரனும் சேரும் இடம்,
நெத்தியடி..!
"உலகத்துக்கன்னிகளே, உங்களைச்சூழவுள்ள கட்டுப்பாடுகளை உடைத்துக்கொண்டு என்னுடன் புணரவாருங்கள்"
என்பதுதான் ஆண்களின் பெண்ணிய கருத்துக்கள் என்று எங்கேயோ படித்ததாகவும் யாருக்கோ எழுதியதாகவும் ஞாபகம்.
பெண் ஆணாக யோசிக்க இயல்வதை உலகம் ஒத்துக்கொள்ளும், ஆனால் ஆண் பெண்ணாக யோசிக்கமுயல்வதைச் சுலபத்தில் ஒத்துக்கொள்ளாது - அப்படி யோசிக்கமுயல்வது 'பொட்டைத்தனம்' என்ற இழியாகப் பயன்படுத்தப்பட்டாலும், அதனாலேயே ஆணின் பெண்யோசனைகள் சரியான முறையில், அதிலும் குறிப்பாக தற்காலத் தமிழ் எழுத்தில் பதியப்பட்டதாகத் தெரியவில்லை என்று நினைக்கிறேன். ஆணும் பெண்ணுமே இப்படி அடித்துக்கொண்டிருக்கும்போது, பாலின்மை, நபும்சகம் போன்றவற்றை யார் எழுதுவது! இன்னும் உதாரணம் சொல்லப்போனால், gays மீது உள்ள வெறுப்பு lesbians மீது இருப்பதில்லை. அது sexy என்பார்கள் - இது, ஆண்கள் சேர்ந்து உருவாக்கிய பிம்பம் என்றாலும், தவறிருக்கமுடிவதாகச் சொல்லமுடியாது. ஆணாதிக்கமானாலும் சரி, பெண்ணாதிக்கமானாலும் சரி, அவையிரண்டும் monogamous psychic hell என்ற நரகத்தைவிடச் சகித்துக்கொள்ளமுடிவதாயே யிருக்கும். எந்தெந்தக் கவிஞர்களை ஒப்புமை செய்யமுடியும்?பெண்கள் என்ற பாலையே எடுத்துவிடுகிறேன், பாப்லோ நெருதாவைக் கூட்டம் சுற்றி வந்தது. தமிழ்நாட்டில் வைரமுத்துவைத்தான் அதுபோலக் கூட்டம் சுற்றும், சுந்தர ராமசாமியைச் சுற்றாது. இதற்கு அர்த்தம் என்ன? தமிழ் வாசகர்களுக்கு விவரம் பத்தாதா, அல்லது வைரமுத்துதான் தமிழ்நாட்டின் பாப்லோ நெருதாவா, அல்லது நெருதாதான் சிலியின் வைரமுத்தா? அவர்தான் சிலியின் வைரமுத்து என்றால், சிலியின் சுந்தர ராமசாமிகளை நாம் இன்னும் கண்டுபிடிக்கவேயில்லையா? ஒரு நிஜமான feminist text ஐப் படிக்கவேண்டுமானால், சிமோன் த போவா இத்யாதிகளை விட்டுவிட்டு, 'Ulysses' ன் முற்றுப்புள்ளியற்ற இறுதி எழுபது பக்கங்களைப் படித்துப்பார்க்கலாம். எழுதிய ஜாய்ஸ் ஆண் என்பதால் அதன் பெண்தன்மை எவ்விதத்திலும் குறைந்ததாக எனக்குப் படவில்லை.
நீங்கள் ராதையை ஆண்டாளாக குழப்பிக் கொண்டிருக்கிறீர்கள். மீராவும் ராதையும்தான் கணவனை விட்டு வந்தவர்கள். ஆண்டாள் திருமாலைக் கணவனாக அடையத் தவம் இருந்து திருவில்லிப்புத்தூரில் கடவுளுடன் ஐக்கியமானார்.
Post a Comment
<< Home