@font-face { font-family: TSCu_InaiMathi; font-style:normal; font-size: 10pt; font-weight:normal; src:url(http://mathy.kandasamy.net/fonts/TSCUINA1.eot); }

Saturday, November 20, 2004

எழுத்து வன்முறை

நீங்கள் கதை, கவிதை, கட்டுரைகள் அனுப்பலாம். தயவுசெய்து முலைக் கவிதைகளையெல்லாம் அனுப்பி எங்கள் தாலி அறுக்க வேண்டாம். அதற்கென்றே காலச்சுவடு, உயிர்மை போன்ற ஸ்பெசல் பத்திகைகள் நடத்தப்படு கின்றன. "முலைகளே இல்லாத, அல்லது சிறிதாக இருக்கிற நம் பெண் கவிதாயினிகள் அதைப் பற்றி எழுதுகிறார்கள், உங்களுக்கென்ன இவ்வளவு கோபம்' என்றார் நண்பர் ஒருவர்.
அது சரி, அதற்கு கவிதை எதற்கு எழுத வேண்டும். பேசாமல் நாயுடு ஹாலுக்குப்போய் ஒரு உருப்படியை வாங்கி மாட்டிக்கொண்டோ அல்லது தங்கள் பின்புறச்சதையை அறுத்து பிளாஸ்டிக் சர்ஜரி செய்துகொண்டோ ஒழிய வேண்டியதுதானே? என்றேன் நான்.

இன்னொரு நண்பர் சொன்னார், "போர்னோ எழுத்துகளைப் படிக்கும்போது என்ன விதமான உணர்வுகள் ஏற்படுகிறதோ அதே உணர்வுகள்தானே, பெண் விடுதலை, பெண் சமத்துவம் என்கிற ஹோதாவில் எழுதப்படுகின்ற இந்தவித முலைக்கவிதைகளைப் படிக்கும்போதும் ஏற்படுகின்றது. அப்படியிருக்க இப்படிப்பட்ட கவிதைகளை எழுதிவிட்டு எப்படி இவர்கள் விரும்பும் பெண் விடுதலை, பெண் சமத்துவபுரங்களை உருவாக்குவார்கள்?' என்று. எங்களுக்கும் இதே கேள்விகள்தான்? எனவே உங்கள் கேள்விக்கு நாங்கள் பதில் சொல்ல இயலாதவர்களாயிருக்கிறோம். ஒருவேளை யாராவது பெண் கவிதாயினிகள் பதில் வைத்திருக்கலாம். அல்லது உலக வரைபடத்திலேயே இல்லாத ஒரு கற்பனையான நாட்டின் பெயரைச் சொல்லி அந்தநாட்டில் இந்த மாதி முலைக் கவிதைகள் எழுதிய பின்னர்தான் மிகப்பெரிய சமூகப் புரட்சி ஏற்பட்டு பெண் விடுதலை, பெண் சமத்துவபுரங்களெல்லாம் ஏற்பட்டதென்று சொல்லலாம்.

செப். 2004 கசடதபற இதழின் தலையங்கத்திலிருந்து





குட்டிரேவதி கவிதைகள் எனக்குப் பிடிக்காது (இதை சொல்வதே ஒரு தற்காப்புப்போல தொனிக்கிறது!). தேவதேவனுடையதைப்போல படிமங்களால் நெய்து கண்முன்னே படிமங்களே மிதக்கிற வெறும் சொற்சித்திரங்கள்; மனதுள் ஊடுருவாது எளிதில் அயர்ச்சியைத் தந்துவிடுபவை. இத்தகைய கவிதைகளை தொடர்ந்து ‘ஒரே மூச்சில்” படிக்க முடியாதிருப்பது அதற்குரிய தகமையா பலவீனமா தெரியவில்லை (போர்னோ எழுத்துக்களை ஆண்கள் யாரும் ‘வைத்து வைத்து’ படிப்பார்களா?) 'முலைகள்' வெளிவந்தபின்னான, ‘பலத்த’ சர்ச்சைகளிற்குப் பிறகு தொகுப்பை மீண்டும் படித்தேன், அதிகம் பிடித்திருந்தது. விமர்சகர்கள், இந்தப் புத்தகத்திற்க வைத்திருந்த விமர்சனமும் இதுதான். ‘கவனம் பெற’ அல்லது ‘தடாலடியாக’ அல்லது ‘CATCHY’ யான தலைப்பிட்டதால் இந்தப் புத்தகத்திற்கு ‘மற்றத் திறமையானவர்களுக்குக்’ கிடைக்கவேண்டிய கவனம், அங்கீகாரமெல்லாம் கிடைத்துவிட்டது! (கிடைக்கவேண்டிய ஆக்கள் பாவமென?!)

என்னோட எண்ணம் என்னெண்டா, கிடைச்சா என்ன? ஒரு சடங்கு போல, குமுதம், ஆனந்தவிகடன், கல்கி போன்ற வெகுசன இதழ்களை தொடர்ந்து எடுப்பதை வழக்கமாய்க் கொண்டுள்ளவர்கள் நாங்கள் (இப்போது காலச்சுவடு, உயிர்மைகூட அப்படித்தான் வந்துவிட்டது வேறு விடயம்). அதுகளத் தொடர்ந்து எடுப்பம், படிப்பம், எறிவம் - அது இயல்பென வந்துவிட்டது. அப்ப, ஒரு தீவிர இலக்கிய சூழலில வாற கவிதை நூல் ஒன்றை, அதன், ‘கவர்ந்திழுக்கிற’ தலையங்கத்திற்காக ஒருக்கா வேண்டினாத்தான் என்ன? அதால தமிழ் கூறும் நல்லுலகத்திற்கு என்ன நஸ்ரம்?

ஏதோ இருக்குத் தான் போல.

முந்தியொரு காலத்தில, வானொலியொன்றில விமர்சனம் ஒன்று செய்தபோது ஏற்பட்ட அனுபவம்தான் ஞாபகம் வருது. அதில், இந்தியாவில், பன்னாட்டு அழகுசாதன உற்பத்தி நிறுவனங்களின் ஆதிக்கம், இந்தியாவிலேயே தொடர்ந்து உலக அழகிகள் தேர்வாகிறதற்கான உண்மையான காரணம் என்பனவற்றை உள்ளடக்கி ‘சிவப்பழகைப் பெற’ தமிழ்நாட்டின் நம்பர் ஒன் இதழ்கள் தருகிற ரிப்ஸ் இவற்றின் பின்புலம் என ஆராய முயன்றிருந்தேன். அப்போது படித்த இது பற்றிய கட்டுரையை ஒட்டி இருந்தது அந்த விமர்சனம்.
அந்தக் கட்டுரையில், சத்ய ஜித் ரே யின் திரைப்படம் ஒன்றில் வந்த ஒரு காட்சியை வர்ணித்திருந்தார்கள்: வறிய இந்தியக் கிராமமொன்றில், ஒரு ஏழைச் சிறுமி, கரித் துண்டினால் கண் மை இட்டுக் கொள்கிறாள் - ஆம் அதிலிருந்துதான் ஆரம்பிக்கிறது இந்திய (ஆசிய)ப் பெண்களின் அழகு பற்றிய கனவு. அந்தக் கனவை வளர்ப்பதில்தான் பன்னாட்டு நிறுவனங்களின் உற்பத்தி விற்பனை தங்கியுள்ளது என சொல்ல முயன்றிருந்தேன்.

இது நடந்து, நீண்ட நாளைக்குப் பிறகு, என் அத்தைக்காரி ஒருத்தி என்னைச் சந்திக்கும்போது அவள் கேட்டாள், ‘அடியே, றேடியோ கேக்கிற மனுசி ஒண்டிட்ட நீ என்ர மருமகள்தான் எண்டு சொல்ல, அவ நீ கறுப்போ எண்டு கேட்டாடி, ஏனடி?” சிரிப்புத்தான் வந்தது, அட பாவமே!

அதன்பிறகு நான் ரொறன்ரோவில் நின்றிருந்தபோது முழக்கம் பத்திரிகைஇல் கவிஞர் சக்கரவர்த்தியின் பேட்டி ‘வெள்ளாளர்களுக்கு எதிராக,’ ‘பார்ப்பனர்களுக்கு எதிராக’ என அதிரடியாக வந்திருந்து. இதுபற்றி நண்பர் ஒருவர் சொன்னார், சக்கரவர்ததி ஒரு வசனத்தை அதில் சொல்லியிருந்தார், அது ஒரு முக்கியமான வசனம் என்று. அது “என்னுடைய சொந்தக்காரர்கள் எல்லாம் சாதிமான்கள்தான். நான் இப்பிடி இதுவள எதிர்க்கிறது அவர்களுக்குப் பிடிப்பில்ல’ என்டிறாப்போல ஒண்டு. இதனூடே அவர் தனது சாதியை இன்வேர்ட்டக் கொமாக்குள்ள சொல்றார் என்றார் அந்த நண்பர்.

சக்கரவர்த்தியோ, அல்லது பிறரோ அதை நனவாக சொல்கிறார்கள் என்பது இல்லை, ஆனால் அப்படி ஒரு ஸ்ரேற்மன்ற் தேவையாத்தான் இருக்கிறது. அல்லது ஏலவே சொல்லப்படுபவற்றில் அப்படி ஒரு அர்த்தம் எப்படியோ வந்துவிடுகிறது.

அப்படி ஒன்றைச் சொல்லாதுவிட்டால், அந்த சொற்களுக்கு பெறுமதி இல்லையா, அந்த சொற்களுக்கப்பாலான ஆர்வம் ஏன் பிற விடயங்கள்மேலேயே வருகிறது?

தெரியாது.
ஆனா பொதுப்புத்தியில் (புத்திசீவிகள், சாதாரணமக்கள்) இதுதான் கேள்வி, ஒரு விமர்சனத்திற்கான பதில் விமர்சனம் இதுதான்.

வீட்டில் பிரச்சினை ஏதோ இருப்பதால் (மட்டுமே) பெண்கள் எழுதுகிறார்கள்; காமத்தில் திருப்தி இல்லாததால் காமத்தைப் பற்றி எழுதுகிறார்கள் அல்லது உடலுறவு தேவைப்படுகிறது அதனால் எழுதுகிறார்கள்; முலைகளைப் பற்றி எழுதுபவர்களுக்கு முலைகளே இல்லை –அந்த வயிற்றெரிச்சலில்தான் முலைகளைப் பற்றி எழுதுகிறார்கள்-; சாதியை எதிர்க்கிறார் ஆகவே இவர் சாதி குறைவு (அல்லது சாதி குறைவென்றதாலதான் சாதியை எதிர்க்கிறார்)...


இந்த ஒப்பற்ற முடிவுளால் மிக மிக பிற்போக்கான ஒரு கருத்தைத்தான் நாம் கொண்டிருப்போம் என்பது எங்களுக்குப் புரிவதில்லை.
தலித் விடுதலை பற்றி எழுதுகிற தலித்தல்லாத ஒருவர் ‘நீங்கள் தலித்தோ” என்று கேட்கப்படுகிறபோது விழுந்தடித்துக்கொண்டு ‘சீச்சி இல்ல இல்ல” எனலாம்; அத்தையும் ஒரு பெரிய சீயோட அவள் அவ்வளவு கறுப்பில்ல எண்டு ‘ரோசத்தோட’ சொல்லலாம்.

ஆனால் “அப்படித்தான் இருக்கவேணும்’ என்பவர்களது எண்ணப்பாடும், ‘இல்லை’ என மறுப்பவர்களது எண்ணப்பாடும் என்னவாக இருக்கிறது?
அப்படித்தான் இருக்கிறபோது (தலித்தாக, கறுப்பாக) என்னவிதமான ‘திருப்தியை“ பொதுப்புத்தி உணருகிறது?

குட்டி ரேவதியினது கவிதைகளைவிட அவர்மீது வைக்கப்பட்டிருக்கும் விமர்சனங்கள் முக்கியமானது. சல்மா, ‘'என்னுடைய நாவலுக்கு இப்படி ஏதாவது ஒரு தலைப்பை வைத்தால் அதிகமான கவனம் கிடைக்கும். அப்படிச் செய்யவேண்டாம் என்றே நான் நினைக்கிறேன். நான் எழுதியுள்ள விஷயங்களால் எனக்குக் கவனம் வந்தால் போதுமானது.''

எனச் சொல்லியிருந்தார். நல்லது. ஆனால் அதொரு ‘நான் தலித் இல்ல’ வகை பதில்தான். அது சல்மாவுடைய முடிவு, நிலைப்பாடு (இந்த நிலைப்பாட்டில், அடிப்படையில், எனக்கும் சம்மதம்தான், குட்டிரேவதியினுடையதைவிட லீனா மணிமேகலையின் கவிதைத் தொகுப்பில் முன் அட்டையில ஒரு நிர்வாணப் பெண்ணின் படம் இருந்தது. இருப்பதில் ஒரு பிரச்சினையும் இல்லை, ஆனால் இந்தப் புத்தகம் நிறையப் பெண்களால் சுதந்திரமாகப் படிக்கப்படவேண்டும் என்கிற நோக்கம் உண்டெனில், நிறையப் பெண்களுக்கு, அவர்கள் வீடுகளில், முன்னட்டையில் நிர்வாணப் பெண் அவ்வளவு ‘வசதியான’ ஒன்றாக இராதெனவே நானும் நினைக்கிறேன்). குறிப்பிட்ட பேட்டியில் பேட்டியாளர் கேட்கிறபோது இத்தகைய பதில்களையே எதிர்பார்ப்பதுபோலவும் தோன்றுகிறது. அவ்விடத்தில் சல்மா போன்ற பெண்கள் அத்தகைய பதில்களைத் தவிர்க்கலாம். முலைகள் தொகுதியில் முன்னட்டை மிகவும் பழைய, ஆர்வத்தை தூண்டாத, டல் லான, வியாபார தந்திரமே அற்ற ஒரு sketch ஐக் கொண்டிருந்தது. (தலைப்பே ஆர்வத்தைத் தூண்டுவதற்குப் போதுமானது என விமர்சகர்கள் நினைப்பதுபோல பதிப்பாளர்களும் நினைத்திருக்கலாமும்தான்!).

ஒரு கடையில் போய் ‘முலைகள் தொகுதி இருக்கிறதா’ எனக் கேட்பது உண்மையில் ஒரு தமிழ் ஆண்மகனைவிட, பெண்ணிற்கே சங்கடமான (விற்பனையாளர் ஆணாக இருக்கிற பட்சத்தில்) விடயமாக இருக்கும். ஆக, இது ஒரு பெண்களின் பிரச்சினை! அங்கே இதே விற்பனையாளர் பெண்ணாக இருந்தால் ஆண்களுக்கு அது ஒரு குறும்பாக, ஒரு அழகான சீண்டலாக, அன்றைய பொழுது முழுதும் நினைத்திருக்கக்கூடிய சம்பவங்களில் ஒன்றாகவே இருக்குமென தோன்றுகிறது (உதாரணம் கேள்வி: “முலைகள் இருக்கிறதா?”). ஆக, அவர்களுக்கு அது ஒரு கொண்டாட்டம். இது வந்த காலத்திலும் இதை ஒத்த நிறைய 'நகைச்சுவைகள்' அவர்களுக்குள் ஊடாடி இருக்கும் என்பதும் உறுதி. இருப்பினும், இத்தொகுதியால் சீண்டப்பட்டவர்கள் பெரும்பாலானவர்கள் ஆண்கள்தான்.

சுல்மாவினதும் எனதும் அபிப்பிராயத்தின்படிதான் ‘முலைகள்’ இருக்கவேண்டுமென்பதல்ல. கவர்ச்சியாக, போகப்பொருளாக, மேலதிக கவனத்துடன் நோக்கப்பட்ட ஒன்றை வெகு சாதாரணமாக ஒரு தொகுப்பிற்கு தலைப்பாகப் போடுவது ஒரு கலகமாகக் கூட இருக்கலாம். காலங்காலமாக அடக்கப்பட்ட சாதியினர் தம் சாதி அடையாளத்தையே எதிர்ப்பு சொல்லாக உபயோகிப்பதுபோல... மற்றது, தொகுப்பிலேயே சிறந்த கவிதையின் தலைப்பை தமது கவிதைத் தொகுப்பிற்கிடுவது ஒரு வழக்கம். அந்தவகையில் கு.ரேவதியின் கவிதைகளில் “முலைகள்’ சிறந்ததாய் இருக்கிறது, அந்த அடிப்படையில் அதைத் தலைப்பிட ஆட்சேபனை அவரிடம் இல்லாதபோது மற்றவர்கள் ஆட்சேபங் கொள்ள அங்கே என்ன இருக்கிறது?
ஆனால் விமர்சகர்கள் அப்படி எல்லாம் சாதாரணமாய் அதை எடுத்துக்கொள்ளத் தயாராய் இல்லை.

கவிஞர் சேரனை நித்திய காதலன் என கொண்டாடிய காலச்சுவடு இதழில் பிரம்மராஜன் குட்டி ரேவதியின் கவிதைத் தொகுப்புக்கு மதிப்புரை எழுதியிருந்தார். அவரது ஒற்றைப் பக்க மதிப்புரையில், அப்படித் தலைப்பிட்டமை, அவரைக் குத்தவே செய்கிறது. மதிப்புரையை எழுதியவர்கள் வேறுவேறு என்றாலும் சேரனின் கவிதைகள் 'கவனத்திற்காக' 'பெண்களை வசீகரிக்க ஒரு திரைப்பட நாயகன் போல் மாயைகளை உருவாக்கியபடி' எழுதப்பட்டவை என பிரம்மராஜன் ஒருபோதும் எழுதப் போவதில்லை என்பதும் உறுதி.
அதென்னவோ, குருதி சுக்கிலம் செம்மது என 'வலிந்துகட்டி' சேரன் நகைச்சுவையான கவிதைகளை எழுதலாம், ஆனால் குட்டி ரேவதி 'எனது பிரத்தியேக உறுப்புகளான ஜோனியும் முலைகளும்...' என எழுதக்கூடாது, ஏனெனில் அதைத் தெரிந்தே அவர் எழுத (முலைகள் என ஒரு தொகுப்பு விட) வந்திருக்கிறார்! என்ன நியாயம்! ஆனால் அது அப்படித்தான் இருக்கிறது.
சேரன் என்பவர் ஒரு ஆண் சக அரசியல் ஈடுபாடுள்ள கவிஞர். குட்டி ரேவதியோ வெறும் கவனிப்புக்காக ஏங்கி எழுதும் ஒரு பெண்மணி. வாழ்வின் எண்ணற்ற முக்கியமான விடயங்களை (சேரனுக்குக் கிடைக்கப் பெற்ற போராட்டம், வாழ்நாள் முழவதுமான அரசியல் ஈடுபாடு) உப்புசப்பற்றதாக்கி ஆக செக்சைபற்றி அவர் எழுதிவிட்டார். அது உண்மையில் அவரைப்போன்ற கவிஞர்களின் பாரதூரமான தவறு, அவற்றை எழுத வேண்டியவர்கள் ஆண்கள்தான்.

செப். 2004 கசடற இதழில் வந்தது மேலே தரப்பட்டிருக்கிறது; பலவிதமான கேள்விகள் எழுகிறது.


முலைகள் இல்லாத தாய்கள் எதனால் தம் மகவுக்கு பால் ஊட்டுகிறார்கள்? முலைகள் இல்லை என்பது எந்தக் கண்ணோட்டத்தில்? முலைகள் இல்லாமல் பாலூட்ட முடியாது போன தாய்கள் உண்டா?

குட்டி ரேவதியின் தலைப்புக் கவிதையிலும் சரி பிறவிலும் சரி போர்னோ எழுத்து எங்கு வந்தென்று எனக்குத் தெரியவில்லை. இப்படி ஒரு விதண்டாவாதம், வன்மம் எதற்கானது?

இந்த விமர்சனத்தை –ஏனையவற்றைப்போலவே- படித்தபோது ஒன்று புரிந்தது. இதை ‘கண்டதும் கேட்டதும்’ பகுதியில் காலச்சவடு எடுத்துப் போட்டிருக்கிறது. காலச்சுவடில் பிரம்மராஜன் முலைகளை வெறும் வியர்வைச் சுரப்பி என எழுதினார். இந்த நண்பர்கள் பின்புறச் சதைகளை அறுத்து வைப்பதைப்பற்றியும். வேண்டி மாட்டுவதைப் பற்றியும் எழுதியுள்ளார்கள்! வெறும் வியர்வைச் சுரப்பி இல்லை என்கிற அக்கறையிலா இதை அவர்கள் சொல்கிறார்கள்! ஒரு பாலியல்ஈர்ப்பு மையம் இல்லை (இல்லை என்பதன் அர்த்தம் ‘பெரிதாக’ இல்லை) என்கிற தாழ்வுணர்ச்சியை அல்லவா ஊட்ட முனைகிறார்கள்?! பின்புறச் சதை இல்லாதவர்கள் பாவம் என்ன செய்வார்களோ எனவும் ஒரு கவலை பிறக்கிறது..

ஒரு இதழின் தலையங்கமே இப்படி இருந்தால்- இதுபோன்று
இக் கவிதைத் தொகுப்பிற்கு, விமர்சனம் என ‘அதற்கு தமக்கு தகுதி இருக்கிறது’ என எழுதிய பலரதும் நோக்கமும், வெளிப்பாடும்தான் கீழ்த்தரமானவையாக, அருவருக்கத்தக்க முறையில் இருக்கின்றன. இத்தகைய தொகுப்பை எழுதியதற்காக அவர் ‘வெட்கப்பட்டு” விடவேண்டுமென்கிற ஆண் மனமும், பெண்ணை தாக்க இடம் தேடும் கீழ்மையும்தான் தெரிகிறது. நடு வீதியில் எரிக்கப்படவேண்டியது இவர்களது இந்த சிந்தனை (ஐயோ, அதுதானா அதற்குப் பெயர்?) கள்தான்.
இப்படி எழுதிய, எழுதிக்கொண்டிருக்கிற, ஒரு கூட்டம்தான் முற்போக்காளர்கள் என்றால் அந்த அறிவுலகத்தைக் கடவுள் காக்க!

3 Comments:

Blogger ROSAVASANTH said...

சரியாய்தான் சொன்னீர்கள். ஆனால் இந்த திலகபாமா மாதிரி எழுதுபவர்கள் குறித்து உங்கள் கருத்து என்ன? இந்த மாதிரி ஆக்களை எப்படி எதிர்கொள்ளுரது? உதாரணமாய் அவரும் எழுத்து வன்முறை என்று ஒரு கட்டுரை எழுதியிருக்கிறார்-இது போன்ற பெண் எழுத்துக்களை முன் வைத்து. ஆனால் பாருங்கள் இந்த வல்லின(கசடதபற) பத்திரிகை தலையங்கம் பற்றி எழுத்து வன்முறை என்று எழுத அவருக்கு தோன்றவில்லை.

11/22/2004 01:32:00 a.m.  
Blogger ஒரு பொடிச்சி said...

ஏற்கனவே திலகபாமாவின் கட்டுரையை படித்திருந்கிறேன். 'தலைப்பு'புலனில் இல்லை'! ஆனால் ரோசா வசந்த்! நான் உணர்கிறவற்றை (நர்னதான் உணரவேண்டும் என்பதும் இல்லை) நான் எழுத (அது போர்னோ எழுத்தாக இருந்தாலும்) 'அனுமதிக்க முடியாது' என்று இவர்கள் சொல்கிறார்கள். எதையும் 'அனுமதிக்க' இவர்களுக்கு எங்கிருந்து உரிமை வருகிறது? ஒரு சுய
புத்தியுள்ள மனுசருக்கு தம்மை எதற்கெதற்கு அனுமதிப்பதென்பது தெரியாதா? திலகபாமா ஒரு ஆசிரியரைப்போல காலச்சுவடில்கு கடிதம் எழுதி, 'அவர்கள் இன்னும் திருந்தவில்லை' என்றும் அங்கலாய்கிறார். பாருங்கள், 'திருந்துவதற்கு' யார்தான் பள்ளி மாணவர்கள்? நான் அந்த விமர்சனத்திற்குப் பிறகு திலகபாமாவுடைய கருத்துக்கைள விமர்சிக்கவோ அதால் disturb ஆகவோ இல்லை. அவரால் தாங்கிக்கொள்ள முடியாத ஒன்றை அல்லது அப்படி அவர் 'தர விரும்புகிற' image அவருக்கு தேவையானால் வைத்துக் கொள்ளட்டும். ஆனால் திலகபபாமாவினுடைய எழுத்துக்கள் அளவு இல்லை இந்த வல்லின (தலைப்பை தந்தமைக்குநன்றி! இணைத்தில் இருந்து copy பண்ணியபோது சில எழுத்துக்கள் காணாமற்போய்விடும், பிறகு அதுதான் தலைப்பென்று ஆகிவிடும்!) பத்திரிகையின் தலையங்கம் முழுக்க முழுக்க துவேசமும் வீதிப்பையன்கள் செய்கிற harassmentsபோல.. பெண்ணியவாதிகளை அல்லது 'சமூக மரபு மீறுகிற' பெண்களை சுவரில் எல்லாம் எழுதுவார்களோ நல்ல நல்ல பெயர்களில், அதுதான் இது. இந்த சந்தர்ப்பத்தில் குட்டி ரேவதியோ யாரோ அவர்களது நோக்கமும் நேர்மையீனமும் எனக்கு அவசியமாய்ப் படவில்லை. குட்டி ரேவதியினது 'போர்னோ' எழுத்தில்லை என்பதும் (அப்படி இருந்தாலும்) அதையிட்டு அவருக்கு புத்தி புகட்டல் என்ற பேரில் தண்டிக்கவோ யாருக்கும் உரிமை இல்லை. இது வெகுசன மட்டத்தில் உணரப்படாமலிப்பது வேறு, புத்திசீவிகள் என்போர் உணராமலிருப்பது வேறு. அந்த தலையங்கத்தைப் படிக்கும்போது எனக்கு'வெறுப்பு' மட்டும்தான் தெரிகறது. வேறொன்றுமேயில்லை.
அதிகாரத்திடமிருந்து/அதிகாரிகளிடமிருந்து எதிர்கொள்கிற வெறுப்பு 'நியாயமானதாக' இருக்குமென்று எதிர்பார்க்கேலா.
Maybe that is the reason, (since Thilagapama is a women) Thilagapama's comments are way better (naive) than of 'kasadathpara's.

11/22/2004 05:53:00 p.m.  
Blogger ROSAVASANTH said...

அய்யோ, நான் எந்த வகையிலும் வல்லின பத்திரிகையையும், திலகபாமாவையும் ஒப்பிடவில்லை. உங்கள் கருத்தை நிச்சயம் ஏற்று கொள்கிறேன். திலகபாமா இப்படி எதையாவது எழுத அதை இவர்கள் பயன்படுத்திகொள்வதை-உதாரணமாய் இந்த சூர்யா என்ற ஜெயமோகனின் உருப்படி(நன்றி-ஏழாம் உலகம்) ஒன்று விஷமத்தனமாக எழுதியிருப்பதை - பாருங்கள். இதை எப்படி எதிர்கொள்வது என்பது குறித்து உங்கள் கருத்தையே கேட்டேன். எல்லா தளத்திலும் இப்படி ஒன்று நடைபெறுவதை கவனிக்கலாம். ஒரு தலித்தை பிடித்து வைத்துகொண்டு தங்களுக்கு சாதகமாக பயன்படுத்தி கொள்வது ..etc.

11/23/2004 09:39:00 p.m.  

Post a Comment

<< Home