@font-face { font-family: TSCu_InaiMathi; font-style:normal; font-size: 10pt; font-weight:normal; src:url(http://mathy.kandasamy.net/fonts/TSCUINA1.eot); }

Monday, December 20, 2004

இரண்டு தலைமுறைகள் - மரபும் எதிர்ப்பிசையும்

நான் இப்போது இருக்கிற வீட்டுப் பையன்கள் பதின்ம பருவத்தினர். முறையே 16, 17 வயதுகள். பதினெட்டிற்குப்பின் “அனுமதிக்கப்படுகிற” –கார், டிஸ்கோ, தோடு –மூக்குத்தி – பச்சை குத்துதல்- போன்ற விடயங்கள் எல்லாம் இவர்கள்முன் எதிர்பார்ப்புடன் மண்டியிட்டுள்ளன.

இவர்களது கீழ விழுகிற தொளதொள காற்சட்டையை விமர்சித்துப் போகாத உறவினர்கள் இல்லை. உறவினர் கூடும் இடங்களில் அது (இவர்கள்!) பேர்போன நகைச்சுவை! ‘என்ன இடுப்பில காச்சட்டை நிக்குதில்ல’ ‘எங்களுக்கேனடா உன்ர குண்டியைக் காட்டுற’. தகப்பனாரின் இந்த கதைகளால் வெறுத்துப்போயும், ‘அவருக்கு நாங்க எண்டா ஒரு நக்கல்‘ முணுமுணுத்தும், தங்களைப் புரிந்துகொள்ளாத பெரியவர்களைக் குற்றஞ் சாட்டுவார்கள்; முரண்டு பிடிப்பார்கள். ‘நாங்கள் தமிழர்களடா’ ‘ஏன்டா கறுப்பனப் போல உடுப்புப் போடுறியள்’ ‘கயானாக் காரன்களாடா நீங்க’ ‘அவங்கட பாட்டுக்கள், உடுப்புக்கள ஏன்டா கொப்பி பண்ணிறிங்கள்’ ‘உங்களுக்கெண்டு ஒரு சுய அடையாளம் இல்லையா’ “அவங்கட பாட்டுகளக் கேட்டுட்டு அவங்கள மாதிரி தூஸணங்கள்ல கதைச்செண்டு... சா!’
கூடவே அவர்களது வாயில் நுழையாத ல்,ழ் வேறுபாடுகளை நக்கல்அடித்துச் சுட்டிக் காட்டுதல் ‘தமில் இல்லையடா தமிழ். இள்ள் சொல்லுபாப்பம்’ வகை தகப்பனாரின் தினப்படி ரோதனை தாங்காமலோ என்னவோ, பள்ளி முடிந்து வந்ததும் வராததுமாய், வந்து “எனது” அறையில் அடைந்துகொண்டு, ‘எனது’ கணணியில் “தமது” பாடல்களைப் போட்டுவிட்டு, அறையிலுள்ள கதிரையில் அமர்ந்து, குஷாலாய்க் கட்டில் மீது கால்களை போட்டுக்கொண்டு, தலையை ஆட்டி ஆட்டி பாடல்களை இரசித்தபடி தம் பள்ளி வேலைகளில் ஈடுபட்டுக்கொண்டிருப்பார்கள். வெளியிலிருந்து வருகிற, பெருஞ் சத்தத்துள் படிக்கிற பழக்கமே இல்லாத எனக்கு, தொடக்கத்தில் இது பெருங் கரைச்சலாய் இருந்தது.

பிறகு கணணியில் வேலைகளிடையே, அவர்களின், அப் பாடல்களின் வரிகள் பிடிபட்டும், படாமலும் - சிறிதுசிறிதாய் அவ் எதிர்ப்பிசையிலிருந்த கோபம் பிடிபடத் தொடங்கிற்று. இவனுகளுக்குத் தெரியாமல் அப்பாடலின் முழு வரிகளையும் இணையத்தில் தேடிப் பிடிக்க முயன்று கொண்டிருந்தேன் - தற்செயலாய் அக் காட்சியைக் கண்ட அவன்களில் மூத்தவனுக்கு பேய்க் குஷி. நான் பயந்தபடியே, அவனுக்கு நேரங்கிடைக்கும்போதெல்லாம் அப் பாடகன்களின் புகழ் பாடி, அதே பாட்டை பாடிக் காட்டி, அவன் குடும்ப வரலாறு சொல்லி, பாடலின் வரிகளிலுள்ள கறுப்பர் பேச்சுவழக்கு சொல்லுகளை விளங்கோ விளங்கோ என விளங்கப்படுத்தி என்னைக் ‘குஷி’ப் படுத்துவதாய் எண்ணிப் பாடாய்ப் படுத்தத் தொடங்கிவிட்டான்.

இவர்களது வீட்டுக்கு நான் வந்தபோது இவர்கள் 14, 15 வயதுப் பிள்ளைகளாக இருந்தார்கள். மூத்தவனுக்கு பிறந்தநாள் என்றதும் The Black Eyed Peas இன் Elephunk என்ற ஒலிநாடாவை அவனுக்காய்க் கொணர்ந்திருந்தேன். அதிலிருந்த ஒரே ஒரு பாடல் Where is Love.. என்று, கேட்டிருந்தேன், பிடித்திருந்தது. அப்போது இவர்கள் எமனெம் (Eminem) என்கிற வெள்ளை றாப்பர் (rapper) இன் விசிறிகளாக இருந்தார்கள். பின், ‘எமனெம் ஒரு வியாபார பாடகன்’ என்றெல்லாம் அடையாளங்கண்டதுடன், அவனது ‘தடாலடிக் கருத்தெல்லாம் ஒரு வியாபார உத்தி’ (முன்பொருமுறை சாருநிவேதா தன்னை ஒரு நண்பர் எமனெத்துடன் ஒப்பிட்டதாக பூரித்துப்போய் எழுதியிருந்தார்) என்றெல்லாம் சொல்லுகிறார்கள். அவர்களைச் சதாய்க்க உங்களுக்கு அப்போது பிடித்ததே என்றால் ‘அதையெல்லாம் ஞாபகப்படுத்தாதே’ என கூட்டணிமாறிய அரசியல்வாதிகள் போல கொள்கை பேசிறார்கள்!
அன்றிலிருந்து இன்று பார்க்கிறபோது அவர்களது இசைத் தேர்வு –Tupac- போன்ற கறுப்பர்களதாய் வித்தியாசமானதாக இருப்பது சுவாரசியமாவும் மகழ்ச்சியாவும் இருக்கிறது. இந்த வயதுப் பிள்ளைகள் எல்லோரும் இத்தகைய தேர்வைச் செய்வதென்று இல்லை (இவர்கள் செய்தாலும் இதில் ஒரு அடிப்படையான பிரச்சினை இருக்கிறது, அதைப் பிறகு எழுதுகிறேன்). அதுபோய் இதுபொய், இப்ப கொஞ்சக் காலம் The Immortal Technique (இறவா நுட்பம்!) காய்ச்சலால் பீடிக்கப்பட்டுள்ளார்கள்.



இவர்களைப்போலவே, கறுப்பர்களது விசிறிகள்தான் அதிகமான பதின்மக்காரர்கள். ஏற்றாற்போல விளையாட்டு, இசையுலகம் இவற்றில் அதிகம் கறுப்பர்களது ஆதிக்கம்தான். BET (Black Entertainment Television) பார்க்காத உயர் பாடசாலை மாணவர் மிகக் குறைவு. உயர்பாடசாலையின் (தரம் 9 – 12 வரை) ஆரம்பங்களில் அது ஒரு மோஸ்தர். போன சில கிழமைகளிலேயே BET போன்றவ பற்றியதே பொதுஉரையாடல்களில் வரவேண்டியதான peer pressure சேர, அவர்களது பாடல்களைக் கேட்பது, அதில் வருகிற பிரபலங்களின் ஆடை அணிகலன்களை அணிவது... பெரிய வெள்ளிக் கழுத்துச்சங்கிலி, மோதிரம், brand name சப்பாத்து (அந்தப் பிரபலங்களுக்கு அந்த சப்பாத்து நிறுவனங்கள் ஏராளம் பணம் இறைத்திருக்கும் என்பது சொல்லவா வேணும்!) இன்ன பிற சந்தையில் தயாரா இருக்க, 50 இலிருந்து 100, 150 என அதற்குமேலவும் விலையில் பிள்ளைகள் பெற்றோர்களை நச்சரிப்பார்கள். இது இன்றைக்கு பொதுவாக எவ்விடமும் யதார்த்தமாயிருக்கும்.

எனக்கு இந்தக் குழந்தைகள் இந்த தொலைக்காட்சி ஊடகங்களில் தகவமைக்கிறவை தொடர்பாக நிறைய விமர்சனங்கள் இருந்தாலும், ஒருபோதும் தம் பிள்ளைகளை நெருங்கி, அவர்கள் பக்கத்தை உணரச் சிறிதும் தலைப்படாமல், தனியே, இந்த உடைகள் பற்றிய குற்றஞ்சாட்டலை, ஓயாத ரோதனைகளை; ‘எம்மிடம் மட்டுமே உயரிய பண்புகள் இருக்கின்றன’ என்கிற பெரியவர்களது அடாவடித்தனமாகவே நானும் உணர்கிறேன். அவை, மேலும் மேலும் இவர்களிடமிருந்து அத் தலைமுறை அந்நியமாதலையே செய்யும்.

மற்றப்படி, அபாரமான இணைவு (ஒத்திசைவு) கறுப்பர்களுடன் தமிழ் இளைஞர்களுக்கு சாத்தியப்பட்டிகிறது. ஒன்று மிகப் பிரதானமானது: நிறம் ("நாங்க ‘கறுப்போ?!’ இல்ல, பொதுநிறம்/வெள்ளை" எண்டெல்லாம் சொல்லிக் கொண்டாலும்!). அவர்களது எதிர்ப்புணர்வும் திடமும் வளரும் இளைஞர்களுக்கு மிக வசீகரமானவை, தம்முடன் அடையாளங்காணக்கூடியவை.

இந்த தலைமுறையினரை அணுகிறபோது, நாங்கள் வைத்திருக்கிற மதிப்பீடுகள், ஒழுங்குகளை தள்ளித்தான் வைக்கவேண்டும். சத்தத்துக்குள் படிப்பது எனக்கு சரிவராது. இவர்களும் அப்படிப் படிக்கிறபோது, மண்டைக்குள் ஒன்றும் ஏறாது என்று உறுதியாய் நம்புகிறேன். ஆனால் நல்லாவே ஏறுதே! Multi tasking generation. ‘காது பழுதாப்போகும்’ எண்டு எதிர்மறையாத்தான் பாக்கோணுமெண்டில்ல. பாட்டுக்கேட்டபடி, அதன் ஒவ்வொரு வரியையும் உள்வாங்கியபடி, பாடத்தையும் உள்வாங்க முடிகிறது அவர்களால்.

எனக்க இவர்கள் ‘தமிழர்கள்’ என்கிற தம் அடையாளத்தை, தமிழ் சினிமா பார்த்து நிரூபிக்க வேண்டுமாய் இல்லை. பெண்களை, முதியவர்களை, பிற இனத்தவரை மதிப்பது என்பது உடைகளைவிடவும் பிரதானமானது. இவர்கள் இன்னொரு இனத்திடமிருந்து பெறுகிற ஏராளமான விடயங்களை எழுதுவதற்காகவே இவர்கள் பற்றிய இந்த அறிமுகம்; இவர்களுாடாக அறிமுகமான எதிர்ப்பிசை பற்றி இனி எழுதுவதாய் உள்ளேன்.

தமிழில் ஏன் எதிர்ப்பிசை இல்லை? சினிமாப்பாடல்களின் சாயல்களை கொண்டிருக்கிற புரட்சிகர, விடுதலைப்பாடல்கள் தவிர, தனித்தன்மையுடன், எதிர்ப்பிசை ஏன் வீறுகொண்டெழவில்லை? அதற்குரிய சந்தை இல்லாததாலா? அதனால் மட்டுமுந்தானா? என்.டி.ராஜ்குமாரின் கவிதைகள்தான் சமகாலத் தமிழில் எனக்குத் தெரிந்த ஒரே எதிர்ப்பிசை. அவர் அதை இசைவடிவிலேயே (நேரடியாய்) வழங்குவாரென படித்திருக்கிறேன்; எனக்கு கவிதைகள்தான் படிக்கக் கிடைத்தன.


27 Comments:

Blogger ROSAVASANTH said...

கே.ஏ.குணாசேகரனின் `தொட்டாலே தீட்டுபடுமா?', இன்குலாபின் `மனுசங்கடா' கேட்டிருக்கீங்களா?

`தொட்டாலே தீட்டு படுமா' இடையில் சில வரிகள்

ஒரு காலத்திலே
தெரு ஓரத்திலே
நாங்க நடக்கவே முடியவில்லை.
எங்க எச்சுபட்டா தீட்டு பட்டுவிடும் என்பதாலே
கழுத்திலே கலயம் கட்டிகொண்டு
எச்சில் துப்பலாம் என்கின்ற நிலை,
இந்த கொடுமையை செய்தது இந்துமதம்
அதை குழிதோண்டி புதைக்கணும் அவசியம்-அவசியம்!

தொட்டாலே தீட்டுபடுமா?....

(உச்சஸ்தாயில் குணசேகரன் `ஒரு காலத்திலே' என்று கிளம்பி, ஒரு எல்லையில் நிறுத்தி `இந்த கொடுமையை செய்தது இந்துமதம்..' என்று வருவார். என்.டி.ராஜ்குமார் பாடி கேட்டதில்லை. நரம்புகள் அத்தனையிலேயும் உணர்சி ஏறும் விதமாய் தை கந்தசாமி பாடி கேட்டிருக்கிறேன்.

இவையெல்லாம் ஏன் பிரபலமாகவில்லை என்கிறீர்களா? சிரிக்கத்தான் முடியும்!

ஆனால் இவை அனைத்துமே நீங்கள் மேற்சொன்ன பாடல்கள் போல் அல்லாமல் ஒரு வெளிப்படையான அரசியல் தன்மையைகொண்டது. அப்படி இல்லாத ஒரு மாற்று இசையாக கானாப்பாடல்களை சொல்லலாம்.

12/21/2004 12:36:00 a.m.  
Blogger சுந்தரவடிவேல் said...

மதுரை சந்திரன் என்று ஒருத்தரின் இசை நாடாக்களிருக்கின்றன (மதுரை ராம்ஜி நாட்டுப்புற ஆராய்ச்சி மையத்தின் வெளியீடு). பட்டாசுத் தொழிற்சாலைப் பிள்ளைகள், கலெக்டருக்குக் கொடுக்கும் மனுவின் கதி, குடிசை கோபுர விரிசல்கள் என்று நீளும். இம்மையம் மேலும் பலரை/பல பாட்டுக்களைக் கொண்டுவருகிறது என நம்புகிறேன். ஊருக்குப் போனால் பார்க்க வேண்டும். ஆனால் இது கருப்பரினக் கலைகளைப் போன்றதொரு தாக்கத்தைப் பரவலாய் நம் பதின்மரிடம் ஏற்படுத்தியிருக்கிறதாவெனத் தெரியவில்லை. சினிமாவின் "காதல், அழகு" இத்யாதிகள் பெறும் மிதமிஞ்சிய விளம்பரங்களும், தமிழ் இளஞ்சமூகத்தின் மேல் படர்ந்திருக்கும் ஒரு மிதமிஞ்சிய கனவுநிலையும் இத்தகைய எதிர்ப்புணர்ச்சிப் பாட்டுக்களை அமுக்கிப் போட்டிருப்பதாக நினைக்கிறேன். இந்தப் பாட்டுக்கள் 'பார், நான் உடைந்து போகிறேன்' ரகமாக இருந்தாலும் வீறு கொள், எழுந்து நில், நிலாவைப் பிடி, வானத்தை மடி போன்ற வெற்று நம்பிக்கைப் பாடல்களை விடவும் உசத்தியானவை என்று எனக்குத் தோன்றுகிறது.

12/21/2004 02:41:00 a.m.  
Blogger ROSAVASANTH said...

சுந்தர் சொல்வது போன்று பலர் இருக்கின்றனர். தமுஎச, கலை இலக்கிய பெரும்னறம் சற்று தீவிரமாய் மகஇக பாடல்கள் சுந்தர் சொன்னதைவிட சற்று தீவிரமாய் இருகும். கரிசல் குயில் என்ற பெயரில் ஒருவர் சற்று பிரபலமாயிருந்தார், தென் தமிழ்நாட்டு டீக்கடைகளில் ஒலிக்கும் அளவிற்கு. PWG கதாரின் (சினிமா பாடல்களை விட இன்னும் கவர்சி கொண்டது இவர் பாடல்கள், ஆந்திராவை தாண்டி, உதாரணமாய் மகாராஷ்டிராவில் பூனாவில் இவர் அளித்து (தெலுங்கு) நிகழ்சிக்கு ஆயிரக்கணக்கில் கூட்டம் (முன்னறிவிப்பு தராமலேயே) கூடியது) பாதிப்பில் பலர் தமிழக நக்ஸல் இயக்கங்களிலும் உருவானார்கள்.

பொடிச்சி என்.டீ. ராஜ்குமார் பற்றி குறிப்பிட்டதால், மேலே சொன்ன மார்க்ஸிஸ்ட் லெனினிஸ்ட் போன்ற, ஆனால் அவ்ர்கள் பாடாத தலித் பார்வை பாடல்களை குறிப்பிட்டேன்.
ஆனால் இவை எல்லாமே ஒரு குறிப்பிட்ட அரசியலை பிரச்சாரம் செய்தே பாடுகின்றன (கதாரின் சில பாடல்கள் விதிவிலக்காக பொதுவான வாழ்க்கை பற்றியும் இருக்கும்). நம் சூழலில் ஒரு பாப் மார்லே உருவாகவில்லை என்றுதான் தோன்றுகிறது. ஒரு வேளை கதாரை அப்படி சொல்லலாம். கானாப்பாடல்/நாட்டுபாடல் உந்துதலில், திரை இசையை மீறி யாரேனும் எதிர்காலத்தில் வந்தால் உண்டு.

12/21/2004 04:06:00 a.m.  
Blogger ROSAVASANTH said...

சொல்லவிடுபட்டது. சென்னையில் பல (சாரு புரவலர் தயவில் வாசம் செய்யும்) பார்களில் பாடுபவர்கள், சென்னை சேரிகளில் இருந்து வந்து வளர்ந்தவர்கள். சிலமுறை கேட்டு நான் ரொம்பவே வியந்து போயிருக்கிறேன். மேற்கில் பிரபலமான பாடல்களை மாறாமல் அப்படியே பாடுவார்கள். அவர்களின் திறமை இப்படி பார்களில் பெட்டி பூர்ஷ்வாக்களுக்கு பாடி காலியாகி கொண்டிருக்கிறது. ஒரு வேளை அவர்களுக்கு வாய்ப்பு வந்து வளர்ந்தாலும், அது சினிமாவின் மூலமாகவே இருக்கும். அது எங்கே கொண்டுபோய் சேர்க்கும் என்று சொல்ல வேண்டியதில்லை.

12/21/2004 04:12:00 a.m.  
Blogger சன்னாசி said...

This comment has been removed by a blog administrator.

12/21/2004 08:11:00 a.m.  
Blogger சன்னாசி said...

This comment has been removed by a blog administrator.

12/21/2004 08:20:00 a.m.  
Blogger -/பெயரிலி. said...

BET is not an anti-establishment Channel ;-) It is owned by CBS targeting (or exploring & exploiting) black audience.
also for your interest
http://lefti.blogspot.com/2004_11_01_lefti_archive.html#110159938155730445

12/21/2004 01:30:00 p.m.  
Blogger இளங்கோ-டிசே said...

எதிர்ப்பிசை பற்றி கட்டாயம் எழுதுங்கள். Eminem பற்றி நீங்கள் சொல்வது எனக்கு ஒரு புதிய சேதி. Tupac வன்முறையில் வளர்ந்து, வன்முறையைப் பாடி, வன்முறையால் இளவயதில் இறந்துபோனவர். நீங்கள் சொல்வது போல் நான் அவதானித்த இந்த உயர்கல்லூரி மாணவர்களில் Tupacன் பாடலும் வாழ்வும் தாக்கம் செலுத்துவதைக் கண்டிருக்கிறேன். Rappersஜயும் அவர்களின் பாடல்களையும் கேட்டால், அவர்கள் தங்களுக்கு எதிரிகளை உருவாக்கி பாடல்களை அதிகம் பாடுகின்றனர் என்று நினைக்கின்றேன். Tupac vs Puff Diddy பாடல் மிகமுக்கியமான ஒன்று. இப்படி கறுப்பினமக்களின் கலாச்சாரத்தோடு நமது இளைஞர்கள், யுவதிகள் ஒத்திசையும்போது, இங்கே பரம்பலடைந்துவிட்ட இளைஞர் வன்முறையும் ஒரிடத்தில் சந்திக்கின்றது போல எனக்குத் தோன்றியது.

12/21/2004 06:08:00 p.m.  
Blogger ஒரு பொடிச்சி said...

நன்றி நண்பர்களே. எனக்கு தமிழில் நீங்கள் குறிப்பிட்ட எந்த பாடல்களுடனும் அறிமுகமில்லை. இந்த பாடல்களை இணையத்தில் எடுக்க முடிந்தால் சொல்லுங்கள் (முடியாதெனத்தான் தோணுகிறது). கதார்(?) எல்லாம் நான் கேள்விப்படவே இல்லை. தகவல்களுக்கு நன்றி. இந்தியா போகவும் வாய்ப்பில்லை, பார்க்கலாம்!

வெகுஜனஇசையில் 50 cent போன்றவர்களில் இருக்கிற பதின்மக்காரர்களின் ஆகர்சம் அதிகம் வன்முறையின் அடிப்படையில்தான். அவர்களது personality/ஆடைப் பாணி, எத்தனை தடவை அவர்களில் குண்டு பட்டது, போன்ற விபரங்கள் அவர்களை ஆகர்சிக்கின்றன. பாலியல்சார் சொற்களை வியாபார உலகிற்கேற்ப உபயோகிப்பதிற்தான் இந்தப் பாடகர்களது வெற்றியும் தங்கியுள்ளது. அதைமீறிப் போவதை அமெரிக்க அரசியலாளர்கள் விரும்பமாட்டார்கள். எதிர்ப்பிசை BET தருவது இல்ல.
தனிப்பட்ட ரீதியாக, என்னால அந்த channel ஐ சிலநிமிடமும் சகிக்க முடியாது. பெரும்பாலும் அதில் வாற பெண்களது தலையையே காட்டுவதில்லை. பாருங்கள், அதே எவ்வளவு குறியீடா இருக்கு?!
Montresor நீங்க குறிப்பிட்ட அந்த வார்த்தையாடலை, (Suck my dick or whatever) Eminemமோ 50centரோ தங்களுக்கள் சொல்வதற்குப் பதில் அமெரிக்காவை நோக்கிச் சொன்னால் அது எதிர்ப்பிசை எனலாம் இல்லையா. அதக் கேட்கவும் அவ்வளவு இதா இராதெனவே நம்பிறன்!
அமெரிக்காவைப் பொறுத்தவரை shake your booty என பாடிக்கொண்டிருக்கும் பாடகர்கள் குறித்து அதிகாரிகளுக்கு அச்சம் இல்லை. அமெரிக்க அரச இயந்திரத்தை கேள்விக்குட்படுத்துகிறபோதுதான் அவர்கள் ஆபத்தான திசையில் இயங்குபவர்களாக இருக்கிறார்கள். Tupac இன் மரணங்கூட அமெரிக்க புலனாய்வுஅதிகாரிகளால் நடத்தப்பட்டது என்று சொன்னார்கள் இளைஞர்கள் சிலர். எவ்வளவு உண்மையோ தெரியாது. ஆனால் அப்படி யிருந்தாலும் அதொன்றும் ஆச்சரியமில்லைத்தானே. அவனும் தனக்குள்ளும், வியாபார நிமித்தமும், sex sells, formula வின்படி இயங்கியிருந்தால் பிரச்சினையில்லை. விட்டு வைத்திருப்பார்கள். சில பேட்டிகளில் அமெரிக்க அமைப்பை, சிறைக்கூடங்கள் குறித்த நியாயமான கேள்விகளை எழுப்பியிருந்தார் Tupac. அதுகூட காரணமாய் இருந்திருக்கலாம் அவனோட மரணத்துக்கு.
மற்றப்படி, BET குறித்து =
exploiting என்பது சரியான சொல்லுத்தான், நம்மட பையன்கள், பொண்ணுகளும் exploited தான். ஆனால் இதனை தமிழ்சினிமா தமிழ்நாட்டின் இளைஞர்களுக்கு (என்னத்தைச் செய்யுதோ) எப்படியோ அப்படி என்றுதான் பார்க்கலாம். அவர்களுக்கு அதற்கு மாற்றான ஒன்றை அறிமுகப்படுத்த முடியாவிட்டால் அவர்களுடைய திறமையளும் இன்ன பிறவும் சுரண்டப்படத்தான் செய்யும்.

பொதுவாய் இந்த பகுதியில நான் எழுத நினைக்கிறது,
சில எதிர்ப்புமொழி(எனக்கு அறிமுகமாகிற) அல்லது அதுபோன்ற மாற்றுமொழி குறித்தே.

DJ நீங்கள் சொல்வது உண்மைதான்
Tupac கில் தமிழ் இளைஞர்களுக்கும் ஈடுபாடு இருக்கிறது. ஆனால் ஈடுபாடு ஏன் அவன்போடுற ஆடை, அவனது வன்முறை பின்புலம் என்பனவற்றில் மட்டும் உள்ளதென்பதுதான் அடிப்படையான முரண்பாடு. நீங்கள் பாட்டிற்கு பாடிக்கொண்டிருக்கிறீர்கள் வன்முறை மிக மோசமானது என்று சொல்லி, ஆனால் உங்களைக் கேட்பவரும் அதே வன்முறையால் கிளர்கிறார்கள். இது ஏன்?

note: where is love என்ற பாடலிற்கு நான் முதல் தந்திருந்த link தவறு.

12/21/2004 09:41:00 p.m.  
Blogger ROSAVASANTH said...

கதார் குறித்து கேளிவிபடவில்லை என்று சொன்னது கொஞ்சம் ஏமாற்றமாய் இருந்தது. கதார் ஆந்திராவின் People's War Group ஆதரவு பாடகர். இவர் பாடல்கள் ஏற்படுத்திய எழுச்சி அளவிற்கு வேறு எந்த பிரச்சார உத்தியும் ஏற்படுத்தவில்லை. ஒரு பக்கம் PWGஉடன் அவர் அடையாளம் காணப்பட்டாலும், அதை மீறிய பரவலான மக்கள் அங்கீகாரம் அவருக்கு உண்டு. அவர் (தெலுன்கில்) பாடிய பாடல்கள் ஆந்திராவை தாண்டி மகாராஷ்டிரா, கர்நாடகம், தமிழகம், பெங்காலில் (கேரளா சந்தேக லிஸ்ட்) கூட பிரபலமானது. இவர் மீது ஒரு கொலை முயற்சி நடந்து குண்டு பாயபட்டு, அதன் பாதிப்பு இன்றும் உண்டு என்று நினைகிறேன். கொலை முயற்சி அரசாங்கத்தால் நடத்தபட்டதாகவே பலருடைய கருத்து. ஆனால் நக்ஸல் இயக்கங்க்ஜளின் கோஷ்டிபூசலின் காரணமாய் அது நடத்தப்ட்டதாய் அரசு சொல்கிறது, என்றாலும் அதை எந்த அரசாங்க அடிமையும் கூட நம்பாது. எந்த கோஷ்டிக்கும் காதரை சுட காரணம் இருக்கமுடியாது.

ஒரு பெங்காலி நண்பனிடம் சுட்டு வத்திருந்த கதாரின் பாடல்கள் கொண்ட கேசட்டை இன்னொரு பெங்காலி நண்பன் என்னிடமிருந்து சுட்டுவிட்டான். இந்தியாவில் செட்டில் ஆக நேரும்போது, மீண்டும் கைவசபடுத்தி இணையமேற்ற முயற்சிக்கிறேன். சென்னையில் நான் தங்கியிருந்த கல்வி நிலயத்தின் விடுதியில் கதார் 4 நாட்கள் தங்கியிருந்தார். அவரை பார்த்தாலும், அவர் சென்றபிறகே அது கதார் என்று தகவல் தெரிந்தது. அப்போது கதாரை அங்கே தங்க வைத்த நண்பரை, ஒன்றரை ஆண்டுகள் முன்னால் இத்தாலியில் சந்தித்தேன் -உல்லாச பயணமாய் வந்திருந்தார். அமேரிக்காவில் ஒரு வேலையிலிருந்து. இன்னொரு வேலைக்கு தாவும் இடைவெளியில் இப்படி ஒரு சுற்றுலா. கதாரை பற்றி கேட்டேன். அது போன்ற விஷயங்களுடன் தொடர்புவிட்டு போய் பல ஆண்டுகள் ஆகிவிட்டதாக சொன்னார்.

12/21/2004 10:12:00 p.m.  
Blogger ஒரு பொடிச்சி said...

எனக்கும் ஏமாற்றமாகத்தான் இருக்கிறது!

நேரங்கிடைக்கும்போது அந்தப் பாடல்க்ள், அனுபவங்கள் குறித்து எழுதுங்களேன், மிகவும் பிரயோசனமா இருக்கும்.

12/21/2004 10:44:00 p.m.  
Blogger ROSAVASANTH said...

இணையத்தில் கதாரின் பாடல்கள் இருக்குமா என்று (எத்தனையோ இயக்கங்கள் அப்படி செய்திருப்பதால்) நப்பாசையுடன் தேடி பார்தேன். கதார் குறித்து செய்திகள் கூட அதிகமில்லை. சமீபத்திய அரசு-நக்சல் பேச்சுவார்த்தையில் அவர் சம்பந்தபட்டதால் பல செய்திகள் மட்டுமே கிடைத்தன. கதார் படத்துடன் ஒரு செய்தி.
http://www.hinduonnet.com/thehindu/thscrip/print.pl?file=2004072908221100.htm&date=2004/07/29/&prd=th&

தாடியுடன் கதார் (ஆயிரக்கணக்கான மக்கள் பிண்ணணியில்)பாடும் படம் ஒன்று இருக்கிறது. இணையத்தில்ருந்து ஒருமுறை இறக்கியதுதான். அதை எப்படி வலையேற்றுவது என்று தெரியவில்லை.

நான் கதாரின் பாடல்களை கேசட்டில்தான் கேட்டிருக்கிறேன். மேடையில் அவர் பாடி அது ஆயிரக்கணக்கான மக்கள் (மொழி புரியாத நிலையிலும் கூட) நரம்புகளை அடைவதை கற்பனை செய்யமுடிகிறது.

12/21/2004 11:38:00 p.m.  
Blogger ROSAVASANTH said...

காதாருக்கு கூடகூடிய கூட்டத்தை கோடிட்டு காட்ட அந்த பட்ம் உதவும்.

12/22/2004 05:11:00 a.m.  
Blogger மு. மயூரன் said...

"எதிர்ப்பிசை" கலைச்சொல் நன்றாக இருகிறது.

எதிர்ப்பிசை என்ன மக்களிசையையே இங்கே இலங்கையில் கேட்க முடிவதில்லை.
கிடைப்பிலில்லை அதுதான் பிரச்சனை.
தேசிய கலை இலக்கியப் பேரவையின் சில வெளியீடுகள் கேட்டிருக்கிறேன்.
அவற்றை எந்த வகையில் சேர்ப்பது என்று புரியவில்லை.

விடுதலைப்புலிகளின் பாடல்கள் பற்றி என்ன நினைக்கிறீர்கள்? (சிரிப்பு?)

இங்கு குறிப்பிடப்பட்ட தமிழ் பாடல்களை எங்கே பெறமுடியும்?
அவை வர்த்தக நோக்கத்தோடு வெளியிடப்பட்டவையாக இல்லாதிருக்கும் பட்சத்தில் அவற்றின் mp3 வடிவத்தை இணையத்தில் பெறக்கூடியதாக்க முடியுமா?

கானாப் பாடல்களைத்தான் இப்போ தென்னிந்திய வர்த்தக சினிமா நன்றாக காசாக்குகிறதே (அதன் வடிவத்தையும் சிதைத்து>)

//எதிர்ப்பிசை ஏன் வீறுகொண்டெழவில்லை? அதற்குரிய சந்தை இல்லாததாலா?//

சிந்திக்கவேண்டிய் கேள்விதான்
எதிர்பர்ப்புகள் எதுவாக இருந்தாலும் சந்தைதான் எல்லாவற்றையும் தீர்மானிக்கிறது

12/22/2004 07:59:00 a.m.  
Blogger சன்னாசி said...

//Montresor நீங்க குறிப்பிட்ட அந்த வார்த்தையாடலை, (Suck my dick or whatever) Eminemமோ 50centரோ தங்களுக்கள் சொல்வதற்குப் பதில் அமெரிக்காவை நோக்கிச் சொன்னால் அது எதிர்ப்பிசை எனலாம் இல்லையா. அதக் கேட்கவும் அவ்வளவு இதா இராதெனவே நம்பிறன்!//

தெரியலை. எனக்கு அவ்வளவு விவரம் பற்றாதோ என்னவோ. Speech is a sacred expenditure of energy என்பது என் அபிப்ராயம். அதைச் சொன்னேன். அதேபோல எல்லாருக்கும் இருக்கவேண்டுமென்று நான் எப்போதும் நினைப்பது் கிடையாது. 50 சென்ட்டும் எமினெம்மும் அமெரிக்காவை எதிர்த்து அப்படிப் பாடுவார்களா! :):):):) 'அமெரிக்காவை எதிர்த்து' என்பதுகுறித்தான அமெரிக்கரல்லாதவர்களின் கற்பிதங்கள் வேறு, அமெரிக்கர்களின் கற்பிதங்கள் வேறு. மைக்கேல் மூர் 'அமெரிக்காவை எதிர்த்து' F-9/11 எடுத்தார் என்று நினைத்துக்கொண்டிருக்கிறீர்களா என்ன?

முன்பு நான் இட்ட பின்னூட்டங்கள் எனக்கே பிடிக்காமல் போனதாலும், பெருமளவு irrelevantஆகத் தோன்றியதாலும் அதை எடுத்துவிட்டேன். வேறொன்றும் காரணமில்லை.

12/22/2004 10:17:00 a.m.  
Blogger ஆதிபன் சிவா said...

I read about kathar in Ananda Vikatan. If you check ananda vikatan you can get some information about him.

12/22/2004 10:42:00 a.m.  
Blogger ஒரு பொடிச்சி said...

The crowd for Gadar is unbelievable, would like to hear his songs sometimes.
Montresor that is why i called Eminem and 50cent commercial singers and i put 'if'. i will write later abt these, also will check the ananda vikatan.
thanks to u all.

12/22/2004 11:15:00 a.m.  
Blogger ROSAVASANTH said...

ஆனந்தவிகடன் கட்டுரை கிடைத்தால் இங்கே சுட்டி தரவும். நானும் படித்ததில்லை.

மயூரன், கே. ஏ. குணசேகரன், மற்ற நான் குறிபிட்ட தமுஎச, மகஇக பாடல்களை தமிழகத்தில் இருந்து முயற்சி செய்தால் பெறமுடியும் என்றே நினைக்கிறேன். தமுஎச CPI(M) கலைப்பிரிவு. அதன்பாடல்கள் மிக எளிதில் கிடைக்ககூடியது. மகஇக நக்ஸல் சார்புடையது. இவைகள் கேசட் வடிவில் கிடைக்ககூடுமா என்று தெரியவில்லை. பொதுவாக கிரமத்திற்கு சென்று கூட்டமாக அதன் உறுப்பினர்களால் பாடப்படுபவை. இவை மிக எதேச்சையாக என் குட்டிபூர்ஷ்வா வாழ்க்கையில் காணகிடைத்தவை. ஒரு தப்பட்டையால் (தப்பட்டைதானே?) பெரிய சத்தம் எழுப்பி தெருவில் வேகமாய் ஓடி மக்களின் கவனத்தை கவருவார்கள். கவனம் கவரப்பட்டு கூட்டம் கூடியதும், தெரு நடுவில் நின்று பாடத்துவங்குவார்கள். அன்பே சிவம் படத்தில் இது கொஞ்சம் சினிமாத்தனமாக கமலின் மிகை நடிப்புடன் இருந்தாலும், யதார்த்தமாய் காட்டப்பட்டிருக்கும். பாய்ஸ் படத்தில், மிகவும் கொச்சை படுத்தபட்டு கேவலப்படுத்த பட்டிருக்கும். ஏதோ ஒரு உந்துதலில், தங்கள் வாழ்க்கை திறமையை, அர்பணித்து ஊர் ஊராக சென்று, கிடைக்கும் காசில் எதையோ தின்று, மிக அற்புதமாய் பாடகூடியவர்களை, சென்னை பாய்ஸை நாடி அவர்களை பாடவைத்து (அதுவும் பெரிய தொகை கொடுத்து) சிக்கலில் மாட்டிவிடுவதாக, சுஜாதாவும் சங்கரும் காட்டியிருப்பது மகா அயோக்கியத்தனம்.

புலிகளின் பாடல்கள் நான் கேட்ட அளவில் இந்த வகைகள் எதிலும் சேராது என்று நினைக்கிறேன். 'தூரம் அதிகம் இல்லை, அதோ தெரியுதெதிரி எல்லை..' என்கிற ரீதியில், ஒரு போருக்கு தூண்டுவதாகாவோ, தன் (தமிழ்)இன பெருமையை, இயக்க பெருமையை அதீதமாக பேசுவதாகவோ தான் இருப்பதாக, நான் கேட்ட குறைந்த அளவில் என் எண்ணம். இது தவிர யதார்த்தமாய் ஈழமக்களின் சோகத்தையும், இன அழிப்பின் உக்ரத்தையும் காட்டகூடிய பாடல்கள் இருந்தால் அறிய தாருங்கள். நிச்சயம் தொடக்க கால கட்டத்திலாவது அப்படிபட்ட பாடல்கள் இருந்திருக்க் வேண்டும் என்று நினைக்கிறேன்.

கானா பாடல்கள் சினிமாவில் கொச்சைபடுத்த பட்டாலும், சினிமா வேறு எதையும் செய்யாது என்ற நிலையில், அதனுடன் ஓரளவு சமரசம் செய்துகொண்டு, கானாப்பாடல்கள் இடம் பெறுவதை ஆரோக்கியமான விஷயமாய் பார்க்கலாம் என்பது என் தனிப்பட்ட கருத்து. தேவா ஓரளவு கானாப்பாடலக்ளின் வடிவம், 'இலக்கணம்' மாறாமல் கையாண்டிருப்பார். உதாரணமாய் 'காத்தடிக்குது.. காத்தடிக்குது..' அவ்வாறு வெளிவந்த உன்னதாமான பாடல்களில் ஒன்று என்பது என் கருத்து. கானாப்பாடல்கள் குறித்து ஆசாத் என்பவர் புத்தகம் எழுதியிருப்பதாக கேளிவிபடுகிறேன். படிக்கவில்லை. எனக்கிருக்கும் சில கருத்துக்களை என் தளத்தில் எழுதும் எண்ணம் உண்டு.

12/22/2004 09:16:00 p.m.  
Blogger ROSAVASANTH said...

"எதிர்பர்ப்புகள் எதுவாக இருந்தாலும் சந்தைதான் எல்லாவற்றையும் தீர்மானிக்கிறது" என்பது 90% உண்மை மட்டுமே. கதார் போன்றவர்களின் பாடல்கள் சந்தையினால் இவ்வளவு பிரபலமடையவில்லை.

12/22/2004 09:26:00 p.m.  
Blogger ROSAVASANTH said...

http://www.hindu.com/thehindu/mp/2004/08/02/stories/2004080201670300.htm

12/23/2004 02:03:00 a.m.  
Blogger ROSAVASANTH said...

http://www.hindu.com/2004/07/29/stories/2004072907430400.htm

12/23/2004 02:10:00 a.m.  
Blogger R. Rajesh Jeba Anbiah said...

பொடிச்சி, nice to know you're back. I'd thought that you're on leave and didn't visit/comment in your blog as it wouldn't be appropriate.

Hope, you know Inkulab (his only poem available on the 'net-- கொலைக்கயிறுகள் குறித்து.... ).

12/26/2004 10:11:00 a.m.  
Blogger சுடரகன்: சிவா முருகையா said...

அண்மையில் புதவை இரத்தினதுரை அவர்கள் வல்லரசுக்களுக்கு எதிராக ஒரு எதிர்பிசை சார் கவிதை ஒன்ரை எழுதியுள்ளார். இக்கவிதை சுனாமி பற்றி எழுதப்பட்டதாகும்.

போக்கறுந்து போவாரே
கோண்டு வந்து கொட்டுங்கள்
உங்கள் அணுக்கழிவுகளை
எங்கள் கரைகளிலே.
உங்கள் புதுவகை ஆயதம்களை
பரிசோதனை செய்யுங்கள்
எங்கள் கரைகளிலே.

பின்னர் நீலிக்கண்ணீருடனும்
நிவாரணத்துடனும் வாருங்கள்.
உங்களை யார் கேட்பார்
நீங்கள் உயரத்தில் இருக்கிறீர்கள்
எங்களை யார் பார்ப்பார்
நாங்கள் கீழே கிடக்கிறோம்.


ஏனது பார்வையில் அரைவாசிக்கு மேற்பட்ட விடுதலைப் பாடல்கள் எதிர்பிசைப்பாடல்களே. நான் அரைவாசி என்பது போராளிகளின் வீரத்தைப் போற்றும் பாடல்கள் மற்றும் தமது சோகத்தைப் பாடும் பாடல்கள் தவிர்ந்த ஏனைய பாடல்கள் யாவும் எதிர்பிசைகளே. அரச பயங்கரவாதத்தை இனவாதத்தை மதவாதத்தை எதிர்க்கும் பாடல்களே. நீங்கள் குறிப்பிட்ட நக்சலைட்டுக்களின் பாடல்களும் இப்படி ஒரு சந்தர்பத்தில் வந்தவையே. மேலும் ஒரு இலங்கை வாசகர் விடுதலைப் பாடல்கள் பற்றி? என்று கேட்க்கும் போது (சிரிப்பு) எனப்போட்டிருந்தார். ஆவருக்கு நான் சொல்ல வேண்டியது விடுதலைப் பாடல்கள் சிரிப்பதற்கில்லை

1/11/2005 04:36:00 p.m.  
Blogger மு. மயூரன் said...

விடுதலைப்பாடல்கள் எப்போதுமே சிரித்துக் கேலி செய்வதற்கில்லை என்ற விழிப்புணர்வுடனேயே இருக்கிறேன்.

விடுதலைப்புலிகளின் பாடல்கள், தமது உள்ளமைந்த மனோபாவம் காரணமாக, சிலவேளைகளில் தூய்மையான விடுதலைப்பாதைக்கு எதிரானவையாக இருக்கின்றன.

சிரிப்பு கேலிச்சிரிப்பல்ல.

விடுதலைப்புலிகள் என் கேலிக்குரியவர்களுமல்ல.

நீங்கள் குறிப்பிட்ட பாடல் பற்றி, தீவிர இலக்கியப்பரப்பில் பிரபலமான விடுதலைப்புலி ஆதரவாளரான கவிஞர் ஒருவர் என்னிடம் சொன்ன கருத்து இது-

"எங்களிடம் அணுகுண்டு இருந்தால் நாங்களும் கடலில் தான் பரிசோதிப்போம்.
நாங்களும் எம்மிடமிருக்கும் ஆயுதங்களை கடலில் கரையில் சுட்டுத்தான் பழகினோம்."

1/12/2005 09:19:00 a.m.  
Blogger சுடரகன்: சிவா முருகையா said...

மயூரன் முதலில் என்னை மன்னிக்க வேண்டும். ஏன்னென்றால் நான் உங்கள் பெயரை நினைவில் வைத்திராததால் “ஒரு வாசகர்” என்று விழித்ததிருந்தேன். தட்டச்சு செய்வது ஓர் இடத்தில் ஏதாவது ஒரு நேரத்தில் பின்னர் இணையத்தில் ஏற்றுவது இன்னொரு இடத்தில் இன்னொரு நேரத்தில் என்பதால் இந்தநிலை ஏற்பட்டது. புரிந்து கொள்வீர்கள் என்று நினைக்கிறேன்.

இனி விடயத்துக்கு வருவோம். கருத்துரீதியான திறணாய்வு (விமர்சனம); என்பது எந்தப் படைப்புக்கும் இருக்கலாம். அது தேவையானதே. ஆனால் ஒருபடைப்பு கருத்துரீதியான திறணாய்வுக்கு உட்படுத்தப்பட்டது என்பதற்காக அந்தப்படைப்பை அந்த வகையைச் சேர்ந்த படைப்பு இல்லை என்று கூறமுடியாது.

எடுத்துக்காட்டாகää நீங்கள் குறிப்பிட்ட கவிஞர் முன்வைத்தது புதுவையின் கவிதைக்கான ஓர் திறணாய்வு. இருக்கட்டும். அதற்காக அந்தக்கவிதையை அமெரிக்க நவ காலணித்துவத்துக் (குளோபலைசேசன்) கெதிரான கவிதை இல்லை என்று சொல்லிவிட முடியாது. அப்படிப் பார்த்தால் அந்த நக்சலைட்டுப் பாடகருக்கோ அல்லது கறுப்பின கவிஞர்களுக் கெதிராகவோ திறனாய்வுகள் முன்வைக்கப் பட்டிருந்திருக்கலாம். அதற்காக அந்தப்படைப்புகளை நாம் எதிர்பிசை இல்லை எனக் குறிப்பிடமுடியுமா? இதே விளக்கம் எமது விடுதலைப் பாடல்களுக்கும் பொருந்தும் என நினைக்கிறேன்.

1/12/2005 06:26:00 p.m.  
Blogger மு. மயூரன் said...

என்ன நீண்ட நாட்களாக ஒரு குறிப்பையும் காணவில்லையே?

அடுத்த குறிப்பினை ஆவலோடு எதிர்பார்க்கிறேன்

1/17/2005 01:45:00 a.m.  
Blogger ஒரு பொடிச்சி said...

Hi Rajesh!
I was actually struked in Toronto in the last half of my leave! So i had some time to write.
I did read Inhulab's poetry collection, 'sanangalin kathai', not this poem though.. thanks for the link. i also heard of his stage plays.

1/20/2005 06:55:00 p.m.  

Post a Comment

<< Home