@font-face { font-family: TSCu_InaiMathi; font-style:normal; font-size: 10pt; font-weight:normal; src:url(http://mathy.kandasamy.net/fonts/TSCUINA1.eot); }

Friday, November 12, 2004

ஆப்ஸ்ரஸ்க்கா சரித்திரம்

முன் குறிப்பு: ராஜ்கௌதமனின் சிலுவைராஜ் சரித்திரம் ரசிச்சுப் படிச்ச புத்தகம் (தமிழினி வெளியீடு). ஒரு மனுசனோட கட்டற்ற அந்தக் கிராமத்து வாழ்க்கையையும், அதில ஒரு சிறுவனா (ராஜ்கௌதமன்) காற்சட்டையோட குளப்படி விட்டுத் திரிந்ததையும் அப்படியே மனதுள் பிடித்துக் காட்டியிருந்தது இந்த சுயசரித-நாவல். பெட்டையோட சிறும் பிராயமும் ஒரு கிராமத்திலதான் கழிஞ்சது, நிக்கர தலையில தொப்பிமாரிப் போட்டுக்கொண்டு, பனையடிவாரங்கள்ள வெளிக்கிருந்திற்று (இதெண்டா என்னண்டு தெரியாத நகரத்து மனிதர்கள் சி.சரித்திரத்தில பார்க்கலாம்), செம சுதந்திரத்தோட விச்ராந்தியா நட நடந்து வீட்ட வந்து கிணத்தடியில கழுவீற்று... விளையாடப் போன அந்தக் காலங்கள நினைச்சா... (பெருமூச்சு) ஒரே பீலிங்கா இருக்கு. பெடியங்களப்போல சிலிப்பாய் வெட்டில, “என்ன பிள்ளையள் கால் சுடேல்லையா” எண்டு ரீச்சர்மார் வழி மறிச்சுக் கேட்க “இல்லை” எண்டிட்டு அப்பிடியே அந்தச் சந்து பொந்தெல்லாம் நுழைஞ்சு, வெறுங்காலோட திரிஞ்சபடி வாய்க்கால், காடு, குளம் எண்டு சுத்தின- என்ன ஒரு காலம்! சிலுவைராஜ் கட்டற்று ஓடிக்கொண்டே இருக்கிறான், வயல்கள், காடுகள் என்று... தடைகளே இல்லை அவன்முன். நகரங்கள்தான் அவனை தடுத்து நிறுத்துகின்றன. அந்த நூலின் மொழிநடை தந்த மோகத்திலும் பாதிப்பிலும் எழுதியது இனி வரும் இரண்டு பதிவுகள்.

(1)
பெட்டை சின்னப் பெட்டையா இருந்தபோது –அது ஒரு சுதந்திர ஜீவிதம்- அப்பிடியே கோழியைப் பிடிக்கிறமாதிரி பிடிச்செண்டு கொழும்பில போட்டிட்டாங்கள். விச்ராந்தியா பனையடிவாரத்தில இருந்து கிணத்தடிக்கு வந்தவளுக்கு அது பெருங் கொடுமைதான். ‘A-B-C-D இடியப்பம் தாடி’ என்றிற அளவுக்குக் கூட இங்கிலிஷ் தெரியாதவளிட்ட ‘டெஸ்கத் தூக்கி வைப்பம்’ ‘டஸ்ற்(b)பின் ன தூக்கு” எண்டா அவள்தான் என்ன செய்வாள்? அவள் படிச்ச கலவன் பாடசாலையில் (அதக் ‘காட்டு’ப்பள்ளிக்கூடம் என்பினம்) இங்கிலிஸ் வாத்தி பெட்டையளுக்குச் சொல்லித் தந்தத விட அங்க இருக்கிற ஆசிரியைமாரோட வம்படிச்சதுதான் அதிகம். (இதப் பெட்டை சக தோழிகள் வம்பளந்துகொண்டிருந்ததை அவர் -ஒட்டுக்-கேட்டு அவரிடம் வேண்டிக் கட்டியது உப கதை) பெட்டையும் சக தோழிகளும் இங்கிலிஸ் புத்தகத்தில ஒவ்வொரு வரிக்கும் மேலால தமிழால எழுதி (ஐ ஆம் கீத்தா, ஐ ஆம் புறம் இன்டியா: ஐ ஆம் நிமல் ஐ ஆம் புறம் சிறீ லங்கா. ---> இந்த வரியில இருக்கிற ‘இனவாதம்” பற்றி பின்னர் இன்ரலெக்சுவல்ப் (வேற யார்?) பெட்டை படிச்சு, ஆச்சரியம் மிகப் பட்டாள். தமிழர்கள் இந்தியாவிலிருந்து வந்தவர்கள் என்றும், நிமல் (சிங்களப் பெயர்) இலங்கைக்குரியவன் என்றும் 1ம் 2ம் வகுப்பு நு}ல்களிலே ‘வரலாற்றைச்’ சொல்ல தொடங்கிவிட்டிருக்கிறார்கள்!) அவர் வாசிக்கச் சொல்லேக்குள்ள வாசிச்சுப்போட்டு, கம்மெண்டு இருக்கிறது, அவரும் ‘ஆங் சரி. அடுத்தாள் படி’ என்பார். அது ஒரு தந்திரம். பெட்டையோட பெரியப்பாக்கள், பெரியப்பாட மகன்கள், மாமன்கள், மச்சான்மார் எல்லாரும் தலைமுறை தலைமுறையா செய்து வந்த தந்திரம். அந்த ஆசிரியர்தான் பாவி அத எல்லாம் கவனிச்சாரா அல்லது கொழும்பில என்னக் கொண்ணந்து விட்டு, தலைமுறை பாரம்பர்யத்தைத் திசைதிருப்புவது பாவம் எண்டு சம்மந்தப்பட்டவர்கள் யாராவது நினைத்தார்களா? ம்ஹீம். விளைவு: கொழும்பில மாணவிகளால் சோதனைகளுக்கு ஆட்படுகிறபோது தவறாம அந்த ஆசிரியரைத் திட்டியபடி, அவளுகளிடம் சிரித்து மழுப்பியபடியும் குத்துமதிப்பா ஏதோ செய்தபடியும் இருந்தாலும் வீட்டப் போனோண்ண கடும் தலையிடி வந்திற்று. ‘பள்ளிக்கூடமே போகேலா(ஆ)தளவுக்கு அப்படி என்னடி தலையிடி’ அம்மாக்கு என்னதான் தெரியும்? இவள் குடுத்த நடிப்புகள் ஒண்டும் எடுபடாமா புஸ்பவாணமாப்போக திரு.குடும்பத் தலைவர்(!) நான் உளவியல் அறிந்தேன் பேர்வழி என்று, வந்து பெட்டையிட கிளாஸ் ரீச்சரோட (அவ, நல்ல வெள்ளையா, பறுவாயில்லாம இருப்பா, ஆனா நல்லவா) அவள ‘இஸ்பெஸலா கவனிக்க’ச் சொன்னாப்பிறகுதான் காய்ச்சல், தலையிடி, வயித்துக்குத்து இன்னபிறவும் கொஞ்சமாவது விட்டுது.
அதுக்கப் பிறகும் கொழும்புத் தமில்(!) மாணவ நெஞ்சங்களின் அதிசயத்தை கொஞ்சமாச்சும் அவள் து}ண்டியது மொழி வகுப்பில்தான். எங்கையோ (யாழ்ப்பாணம் அல்லாத) ஒரு குக்கிராமத்தில இருந்து வந்த பெட்டை, தமிழில் சொல்வதெழுதலில் ல, ழ, ள இன்னபிற இராட்சசர்களில் இருந்து தப்பி ‘மிக்க நன்று’ என்று ஆசிரியர் போட எழுதியிருப்பாள் எண்டாள், பெரிய ஆச்சரியம் அதுகளுக்கு. அடச் சீ! ழ விற்கும் ள வுக்கும் கொஞ்சம் பிரச்சினையிருந்தாலும் ‘ல’ வும்கூட யாருக்கும் பிரச்சினையாய் இருக்குமென்று யான் பெட்டை அறிந்ததில்லை- அதுவரை! ஒரு பென்னம்பெரிய கார்ட் போர்ட் மட்டையில, அதுக்குமெல பசை மாவ ஒட்டி, அதில பென்னால கொட்டைக் கொட்ட எழுத்தில எழுதி அரிவரிமட்டை செய்து தந்திருந்தவர் அப்பப்பா (அவர் மக ராசானாப் போய்ச் சேந்திட்டார்). அதில ஒவ்வவொருநாளும் தவறாம அ, ஆஆ...,ஈ, ஈஈ எண்டு –பலவந்தமா- பெட்டையள ஊர்சோலியளுக்கு விடாம மெனக்கெடுத்தியண்டு வீட்டுப் பெரிசுகள் ரிறெயினிங் தந்த பலன்.
எண்டாலும், அந்த சுதந்திரங்கள் எல்லாம் கொஞ்சம் கொஞ்சமா பறிபோயிற்றுது. நினைச்ச நேரம் ஒழும்பி அப்பிடியே பள்டத்த நோக்கி இவளவை நடப்பாளவ, வழியெல்லாம் ‘நந்தா போயிட்டாவ, அவள் போயிட்டாளா, இவள் போயிட்டாளா” எண்டு சலிக்காம விசாரிச்சண்டு, 8 மணிக்கு போற பள்டத்துக்கு ஒம்பது, ஒன்பதரைபோல போய்ச் சேருவாளவ. போற வழியெல்லாம் சொந்தக்காரர். சிறு புன்னகையோட நாடியில கைவச்சு, “என்னடி இப்பதான் போறிங்களா” எண்டுவினம். பள்ட அதிபர், அப்பாட நண்பர், ‘இப்பதான் மகாராணியளுக்கு விடிஞ்சுதா” எண்டு கேட்டு தாமதமா வந்த மற்ற பிள்ளையளோட சேர்ந்து நிற்க விட்டு, கையில செரியான லேசா –சும்மா ஒரு கடமைக்கு ஒரு தட்டு- புற் றூலரால அடிப்பார். நோகவே நோகாது. ஆனா குண்டம்மா ‘இப்பதான் இவையளுக்கு விடிஞ்சிருக்கு” எண்டா மட்டும் அவளக் குத்தோணும்போல இருக்கும்.

கதிரைதான் இராது. பள்டத்துக்க முன்னால இருக்கிற தோழியள் பிடிச்ச வச்சிருக்காட்டி முட்டுக்கால்ல இருந்து மேசையில கொப்பி வச்செழுதோணும். எண்டாலும் அது பெரிய கஸ்ரமே இல்ல. தோழி, குண்டம்மாவும் ‘அவனும்’ அம்மா அப்பா விளையாடின வம்பெல்லாம் காதுக்குள்ள குசுகுசுப்பாள்.
கொழும்பில பெட்டையளுக்கு இதெல்லாம் தெரியேல்ல. ஒருநாளெல்லாம் வாறன், இண்டைக்க வகுப்பில்ல, எண்டுதுகள். எனக்குப் பெரிய சந்தோசம் உள்ளூர எண்டாலும் ‘ஏன்’ எண்டு கேக்கிறன். “ஏப்ரல் பூல்ஸ்!” எண்டிட்டு ஓடுதுகள், சிரிக்குதுகள், ஆடுதுகள்... என்ன எழவோ. செரியான பனிக் கூட்டம்!
ஒவ்வொண்டையும் வீட்டில வந்து நுணுக்கி நுணுக்கி நாங் கேட்க, பாடம் நடத்தி அலுத்த குடும்பத் தலைவர் வெள்ளவத்தையில ஒரு இங்கிலிஸ் வகுப்புக்கும் அனுப்பினார்; (அரிவரியில இருந்து ஒரு புதிய மொழியைக் கற்பித்த அந்த இனிய ஆசிரியைக்கு என்றும் எனது வணக்கங்கள்!). வெள்ளவத்தை!
பெட்டையும் சகோதரிகளும் அப்படியே வெள்ளவத்தை hPசன் முடிஞ்சு, hPசன் ஒழுங்க திரும்பிற பக்கப் பெட்டிக் கடையில கோகுலம் அம்புலிமாமா வாங்கிக்கொண்டு, அப்பிடியே நேர பஸ் நிற்குமிட் போய், அந்த 141 பஸ்ஸேறி --- சந்தியில இறங்கேக்க, பின்னால பின்னால எண்டு சொல்லீற்று கடைசியா ஒருத்தி கொடுக்கேக்குள்ள யாராவது ஒருத்தியிட 75 சதத்த மடக்கீருவாளவ, மடக்கீற்றாளவ எண்டா, அண்டைக்க கடல வாங்கலாம்... பிறகு அதத் தின்னண்டு ஆடிப்பாடி வீடு போய்ச் சேரலாம்.
பெட்டை உருண்டை கடல சகோதரிகள் பருப்புக்கடலை, கச்சான்கடலை தின்னெண்டு குஷாலா வாற இந்த மகிழ்ச்சிக்கும் தாய்க்காரி வெட்டு வச்சா. ஊரில இருந்து கொழும்புக்கு வரேக்க, அவட்ட ஒரு சோடி காப்ப கடன் வாங்கின உறவுக்கார மனுசி ஒண்டு வெ.வத்தையில அப்ப இருந்தா. நல்ல விசயம்தான். ஆனா அவக்கு பாட்டு சொல்லிக்கொடுக்கிற ஒரு மகளும் கூட இருந்தாவே! வந்தது வினை. பெட்டையும் சகோதரிகளும் அவவிட்ட ஒவ்வொரு ஞாயிறு காலையும் சங்கீதம் படிக்க போக வேண்டியதாயிற்று. (அதென்னமோ தெரியேல்ல கடவுள் பெட்டையிட குடும்பத்துக்கே ஞானம்மேல ஞானமா அள்ளி அள்ளிக் கொடுத்திட்டான் பாவி.) வயிற்றுப் பிள்ளைத்தாய்ச்சியான அவவே, இவர்களது ஞானத்தில் புளகாங்கிதப்பட்டு, ‘நீங்கள் ஸா நி எண்டேக்குள்ள சாகலாம் போல இருக்கு” என்று வாழ்த்தியது இன்னமும் பசுமையாய் உள்ளது!

ஆப்ஸ்ரஸ்க்கா சரித்திரத்தில அதெல்லாம் ஒரு காலம்!

1 Comments:

Blogger ஈழநாதன்(Eelanathan) said...

அற்புதமான நனவிடை தோய்தல்.எனது பள்ளிக் காலங்களை கண் முன்னால் நிறுத்தியது.வழக்கமான பெட்டைக்குப்பட்டவைகளிடமிருந்து வித்தியாசமாக,பெட்டை பட்டவை

11/12/2004 05:04:00 p.m.  

Post a Comment

<< Home