@font-face { font-family: TSCu_InaiMathi; font-style:normal; font-size: 10pt; font-weight:normal; src:url(http://mathy.kandasamy.net/fonts/TSCUINA1.eot); }

Saturday, December 25, 2004

"Christmas in America"

ரொறன்ரோ மார்கழி 25, 2004.

இது பண்டிகைக் காலம்- இந்த வருட இறுதிவரையில் (இன்னும் ஆறு நாட்கள்!) விடுமுறை; கரீபியன் தீவுகளில் சில கிழமைகளிற்குப் பிறகு, இப்போ குடும்பத்தினருடன் ரொறன்ரோவில்... வன்கூவர் போன்றதொரு, யப்பானியர்களின் பழைய வீடுகளும் மரங்களும் சூழ்ந்த, இந்த மாதம் லேசான மழைக் குளிர் மட்டுமே அடிக்கிற அந்த நகரத்தில பாரமற்ற ஆடைகளுடன் திரிந்துவிட்டு, விடுமுறைக்கென்று, இந்தக் குளிர்காலத்தில் ரொறனோவில் வந்து மாட்டிய ஒரே ஆள் நானாகத்தான் இருப்பேன். என்றாலும் என்ன?! விழாக்கோலம் பூண்ட நகரம், அலங்கார விளக்குகள், கடந்த கிறிஸ்மஸ் போலல்லாமல் வஞ்சகமில்லாமல் கொட்டிக்கொண்டே இருக்கிற ஸ்நோ... திறக்கிற வானொலி நிலையங்கள் எல்லாம் Christmas carols களையே ஒலிபரப்பிய வண்ணம்.
கடந்தவருடங்களில் ‘இந்த முறை white christmas வராதா’ போன்ற ‘பெரும்’ கவலைகளில் ஊடகங்கள் ஆழ்ந்திருந்த நினைவு; இந்த முறை அந்தக் கவலைக்கு வேலையில்லை.

இந்தக் கனவு பூமிக்கு நானும் வந்து என் வயதில் பாதிக்கு மேலாகிறது. இந்தப் பூமியில் ஏலவே இருந்த கனவுகளை அழித்துத்தான் இதை உருவாக்கினார்கள். இந்த நாட்டின் நிலங்களடியில் நோய் பரப்பியும் துவக்குகளாலும் கொன்றழிக்கப்பட்ட பூர்விகக் குடிகளின் வரலாறு கிடக்கிறது. பின்னர், தாம் அபகரித்து, ‘எடுத்த’ நிலத்திலிருந்து, நுனவிற் (Nunavut) என்றொரு சிறு பகுதியை, ‘பாவம் பார்த்து’ ‘சரி வைத்துக் கொள்ளுங்கள்’ என்று, இந் நாட்டின் பூர்விகக் குடிகளுக்காகத் “தரப்பட்டாலும்” உயர்பாடசாலை புத்தகங்கள் அவர்களுடைய அந்த அழிக்கப்பட்ட வரலாறை சொல்லுவதில்லை. அவர்களுடைய அற்புதமான பாடல்கள், வழிபாட்டு முறைகள், கொண்டாட்டங்கள் தீண்டப்படவில்லை. வந்தேறுகுடிகளான இங்குள்ள இனங்களும் நாமும் வெள்ளையர்களின் கிறிஸ்தவ மத விழாவை, மதமற்ற ஒரு கொண்டாட்டமாய்க் கொண்டாடிக்கொண்டிருக்கிறோம்.
ஈழத்தின் குக்கிராமங்களில் எல்லாம் போரற்ற காலத்தே ‘நத்தார் பாப்பா’வாய் யாரோ ஒருவர் அலங்கரித்து இனிப்புகள் கொண்டுவருவார். வீட்டு வாசலில் நள்ளிரவில் சிறு பிள்ளைகள் எல்லாம் கனவுபோல ஒழுப்பப்பட்டு கையில் அவிச்ச சோளங்கள்(!!) திணிக்கப்பட்டு... வெள்ளைத் தாடியில் பெரிய வயிற்றில் நத்தார் பாப்பாவின் ஆட்டத்தை கண்டு களித்து, பின் உறக்கத்திற்கு அனுப்பப்படுவர். சிறு வயது நினைவுகளில் அது ஒரு மதக் கொண்டாட்டம் அல்ல!
மேற்கு நாடுகளில், சிறுவர் கதைகளில் புகைக்கூடு (Chimney) வழியே உள்ளே வருகிற சான்ரா வீட்டு கணப்படுப்புக்கு அருகில் தொங்க விட்டிருக்கிற பெரிய சிவத்தக் காலுறையுள் பிள்ளைகளுக்கான பரிசுகளைப் போட்டுவிட்டுச் செல்வார். கூடவே குழந்தைகள் அவருக்காய் வைத்திருக்கிற பாலையும் பிஸ்கட்களையும் உண்டுவிட்டும் செல்வார்! சில அப்பாவிப் பிள்ளைகள் தரம் 6, 7 வருமட்டுக்குங்கூட ‘சான்ரா என்றொருவர் வருவதில்லை’ என்பதை அறிவதில்லை (தம் வீடுகளிற்குப் புகைக்கூடு இல்லாவிட்டாலுங்கூட)!

நத்தாரின் அந்த நள்ளிரவு இது. Christmas Eve. சில தினங்களில், புதிய வருடமும் வரப்போகிறது. வழமைபோல புதுவருடத்திற்கான திட்டங்களை போட்டபடி சிறு பிள்ளைகள்... அனேகமாக அவர்களிற்கு மட்டுமே இது குதூகலமும் பரிசுகளும் நிறைந்த விடுமுறை. தம் துணைகளைக் குழந்தைகளைப் பிரிந்திருக்கிற மனிதர்களிற்கு இந்த விடுமுறை நாட்கள் (தொழிற்சாலைகளின் நிரந்தரமற்ற தொழிலாளர்கள் அதிகப்பேருக்கு ஊதியம் வழங்கப்படாத ‘விடுமுறை’!) மதுவுடனும் தனிமையுடனும்கழிகிற அன்றாட தினங்கள்தான். உடலுக்குமட்டும் ஓய்வு.

CHUM FM இல் ஒருநாளில் வெவ்வேறு சந்தர்ப்பங்களில் பல தடவைகள் நேயர் விருப்பமாகவும் அறிவிப்பாளர் தேர்வாகவும் ஒலிக்கிறது இந்தப் பாடல் (என் அற்புதமான மொழி 'பெயர்ப்பில்'!).

"Christmas in America" (length: 4:22)

Well, I picked out a tree
And I tied it to the car
There's a wreath upon our door
Eight tiny reindeer in the yard

...நான் ஒரு மரத்தை தேர்ந்தெடுத்தேன்
அதைக்காருடன் சேர்த்துக் கட்டினேன்
அலங்கார வளையம் எங்கள்வீட்டுக் கதவில்
எட்டுச் சின்ன கிறிஸ்மஸ் மான்கள் எங்கள் பின் தோட்டத்தில்

I drove under the downtown lights
Red and green and blue
The silver neon snowflakes
Only made me think of you

நான் டவுண்ரவுன் விளக்குகளுக்கு கீழே
வாகனமோட்டிச் சென்றேன்
சிவப்பும் பச்சையும் நீலமும்
சில்வர், நியோன் ஸ்நோ துளிகள்- எல்லாம்
என்னை
உன்னை மட்டுமே நினைக்கத் துர்ண்டின

It's Christmas all around me
You're in someone else's land
So I'm sending out my only wish
Hey, Santa, tell a man

Hey, Mister
Send my baby home
This December
I don't wanna be all alone

என்னைச் சூழவும் கிறிஸ்மஸ் கோலங்கள்
நீ, வேறுயாருடையவோ நிலத்தில்இருக்கிறாய்- ஆகவே
நான் என்னுடைய ஒரே அவாவை அனுப்புகிறேன்
ஹேய்ய்ய்ய் சான்ரா, ஒரு ஆணிடம் சொல்லுங்கள்:

ஹேய் மிஸ்ரர்
என் செல்லத்தை என்னிடம் அனுப்பு

இந்த டிசம்பர்
நான் மட்டுமான தனிமையில்
இருக்க விரும்பவில்லை

Oh, Christmas in America
I need you in my arms
Far away from home
Send my baby home

ஓ..!அமெரிக்காவில் கிறிஸ்மஸ்!
எனக்குஎன் கரங்களுக்குள் நீ வேண்டும்

வீட்டிலிருந்து தொலைவிருக்கும்
என் கண்மணியை இங்கனுப்பு


I hear someone singing "Jingle Bells"
No, wait, that's "Deck the Halls"
While the teenagers with candy canes
Ramble through the malls

The girls are down at Ruby's
Trying to find some Christmas cheer
There's not much to do
But drink too much
When every day's unclear

So here I am on Christmas Eve
This silent holy night
And I reach up to the stars for you
I pray that you're all right

பதின்மக்காரர்கள் கிறிஸ்மஸ்
இனிப்புகளுடன்
மோல்களுள் திரிகையில்
யாரோ '"Jingle Bells" பாடுவதைக் கேட்கிறேன்,
இல்ல, அது '
"Deck the Halls"

சிறு பெண்கள் உணவகங்களில்
கிறிஸ்மஸ் உற்சாத்தை பெற முயல்கின்றனர்
ஒவ்வொரு நாளும் தெளிவற்று இருக்கையில்
செய்வதற்கு ஒன்றுமில்லை
நிறையக் குடிப்பதைத் தவிர

ஆகவே இந்த Christmas Eve இல்
இந்த அமைதியான தெய்வீக இரவில்
நான் உனக்காய் நட்சத்திரங்களை நோக்கி
வேண்டுகிறேன்
‘நீ நலமாய் இருக்கவேண்டும்’



உச்சஸ்தாயியில் "என் கண்மணியை இங்கனுப்பு
என பாடுகிறபோது
தொலைதேசங்களில் காதலர்கள், பிள்ளைகள், நண்பர்கள், இருக்கிற அனைவருக்குமாக
குழந்தைகள் இராணுவத்தில் இருக்கிற முதிய பெற்றோருக்காக
ஒலிப்பதுபோல இருக்கிறது. தனிமையில், டவுண்ரவுணிலிருந்து வாகனத்தில் வருகையில், ஒளிரும் பண்டிகை விளக்குகளுடன், இந்தப் பாடல் துணையாகிறது.
தனிமை, ஏக்கம், தவிப்பு பாவிய காதல் உணர்ச்சிகளை இவ்வளவு உணர்ச்சிகரமாக, ஆன்மாவை தழுவிப் பாடிக்கொண்டிருப்பவர் மெலிஷா எத்திறிட்ஜ் (Melissa Etheridge). அமெரிக்க பாடகி. ஒரு பெண் ஓரினச்சேர்க்கையாளர் (Cruises இல்கூட இவரது பாடல்கள் Concert நடப்பதுண்டென சொன்னார்கள்) . தனது பெண் தோழியொருத்தியை நினைத்துப் பாடுவதுபோலமைந்த இந்தப் பாடல் வரிகளை இணையத்திலிருந்து இறக்கிவிட்டு கேட்டுக்கொண்டே இருக்கிறேன்...

அனைவருக்கும் -கிறிஸ்மஸ் மற்றும் புது வருட வாழ்த்துக்கள்!- முக்கியமாகத் தம் துணைகளைப் பிரிந்திருக்கிறவர்களுக்காய் இந்தப் பாடல்...

Hey, Mister
Send my baby home
This December
I don't wanna be all alone
Oh, Christmas in America
I need you in my arms
Far away from home
Mister, send my baby home

What happened to the peace on earth?
All that good will toward men
Oh, c'mon, oh you faithful
It's time to think again

Hey, Mister, send my baby home
This December
I don't wanna be all alone
Oh, c'mon, c'mon, c'mon


Hey, Mister
Send my baby home
Oh, this December
I don't wanna be all alone
Send my baby home
Send my baby home
Send my baby home
Send my baby home
C'mon
Send my baby home
Send my baby home
Send my baby home
Send my baby home

Yeah, yeah, yeah, yeah
Yeah, yeah, yeah
Yeah, yeah, yeah, yeah, oh
C'mon, c'mon
Yeah, yeah, oh
Yeah, yeah, yeah
Oh, oh, oh
Send my baby home
Send my baby home
C'mon, send my baby home
Send my baby home
0




Monday, December 20, 2004

இரண்டு தலைமுறைகள் - மரபும் எதிர்ப்பிசையும்

நான் இப்போது இருக்கிற வீட்டுப் பையன்கள் பதின்ம பருவத்தினர். முறையே 16, 17 வயதுகள். பதினெட்டிற்குப்பின் “அனுமதிக்கப்படுகிற” –கார், டிஸ்கோ, தோடு –மூக்குத்தி – பச்சை குத்துதல்- போன்ற விடயங்கள் எல்லாம் இவர்கள்முன் எதிர்பார்ப்புடன் மண்டியிட்டுள்ளன.

இவர்களது கீழ விழுகிற தொளதொள காற்சட்டையை விமர்சித்துப் போகாத உறவினர்கள் இல்லை. உறவினர் கூடும் இடங்களில் அது (இவர்கள்!) பேர்போன நகைச்சுவை! ‘என்ன இடுப்பில காச்சட்டை நிக்குதில்ல’ ‘எங்களுக்கேனடா உன்ர குண்டியைக் காட்டுற’. தகப்பனாரின் இந்த கதைகளால் வெறுத்துப்போயும், ‘அவருக்கு நாங்க எண்டா ஒரு நக்கல்‘ முணுமுணுத்தும், தங்களைப் புரிந்துகொள்ளாத பெரியவர்களைக் குற்றஞ் சாட்டுவார்கள்; முரண்டு பிடிப்பார்கள். ‘நாங்கள் தமிழர்களடா’ ‘ஏன்டா கறுப்பனப் போல உடுப்புப் போடுறியள்’ ‘கயானாக் காரன்களாடா நீங்க’ ‘அவங்கட பாட்டுக்கள், உடுப்புக்கள ஏன்டா கொப்பி பண்ணிறிங்கள்’ ‘உங்களுக்கெண்டு ஒரு சுய அடையாளம் இல்லையா’ “அவங்கட பாட்டுகளக் கேட்டுட்டு அவங்கள மாதிரி தூஸணங்கள்ல கதைச்செண்டு... சா!’
கூடவே அவர்களது வாயில் நுழையாத ல்,ழ் வேறுபாடுகளை நக்கல்அடித்துச் சுட்டிக் காட்டுதல் ‘தமில் இல்லையடா தமிழ். இள்ள் சொல்லுபாப்பம்’ வகை தகப்பனாரின் தினப்படி ரோதனை தாங்காமலோ என்னவோ, பள்ளி முடிந்து வந்ததும் வராததுமாய், வந்து “எனது” அறையில் அடைந்துகொண்டு, ‘எனது’ கணணியில் “தமது” பாடல்களைப் போட்டுவிட்டு, அறையிலுள்ள கதிரையில் அமர்ந்து, குஷாலாய்க் கட்டில் மீது கால்களை போட்டுக்கொண்டு, தலையை ஆட்டி ஆட்டி பாடல்களை இரசித்தபடி தம் பள்ளி வேலைகளில் ஈடுபட்டுக்கொண்டிருப்பார்கள். வெளியிலிருந்து வருகிற, பெருஞ் சத்தத்துள் படிக்கிற பழக்கமே இல்லாத எனக்கு, தொடக்கத்தில் இது பெருங் கரைச்சலாய் இருந்தது.

பிறகு கணணியில் வேலைகளிடையே, அவர்களின், அப் பாடல்களின் வரிகள் பிடிபட்டும், படாமலும் - சிறிதுசிறிதாய் அவ் எதிர்ப்பிசையிலிருந்த கோபம் பிடிபடத் தொடங்கிற்று. இவனுகளுக்குத் தெரியாமல் அப்பாடலின் முழு வரிகளையும் இணையத்தில் தேடிப் பிடிக்க முயன்று கொண்டிருந்தேன் - தற்செயலாய் அக் காட்சியைக் கண்ட அவன்களில் மூத்தவனுக்கு பேய்க் குஷி. நான் பயந்தபடியே, அவனுக்கு நேரங்கிடைக்கும்போதெல்லாம் அப் பாடகன்களின் புகழ் பாடி, அதே பாட்டை பாடிக் காட்டி, அவன் குடும்ப வரலாறு சொல்லி, பாடலின் வரிகளிலுள்ள கறுப்பர் பேச்சுவழக்கு சொல்லுகளை விளங்கோ விளங்கோ என விளங்கப்படுத்தி என்னைக் ‘குஷி’ப் படுத்துவதாய் எண்ணிப் பாடாய்ப் படுத்தத் தொடங்கிவிட்டான்.

இவர்களது வீட்டுக்கு நான் வந்தபோது இவர்கள் 14, 15 வயதுப் பிள்ளைகளாக இருந்தார்கள். மூத்தவனுக்கு பிறந்தநாள் என்றதும் The Black Eyed Peas இன் Elephunk என்ற ஒலிநாடாவை அவனுக்காய்க் கொணர்ந்திருந்தேன். அதிலிருந்த ஒரே ஒரு பாடல் Where is Love.. என்று, கேட்டிருந்தேன், பிடித்திருந்தது. அப்போது இவர்கள் எமனெம் (Eminem) என்கிற வெள்ளை றாப்பர் (rapper) இன் விசிறிகளாக இருந்தார்கள். பின், ‘எமனெம் ஒரு வியாபார பாடகன்’ என்றெல்லாம் அடையாளங்கண்டதுடன், அவனது ‘தடாலடிக் கருத்தெல்லாம் ஒரு வியாபார உத்தி’ (முன்பொருமுறை சாருநிவேதா தன்னை ஒரு நண்பர் எமனெத்துடன் ஒப்பிட்டதாக பூரித்துப்போய் எழுதியிருந்தார்) என்றெல்லாம் சொல்லுகிறார்கள். அவர்களைச் சதாய்க்க உங்களுக்கு அப்போது பிடித்ததே என்றால் ‘அதையெல்லாம் ஞாபகப்படுத்தாதே’ என கூட்டணிமாறிய அரசியல்வாதிகள் போல கொள்கை பேசிறார்கள்!
அன்றிலிருந்து இன்று பார்க்கிறபோது அவர்களது இசைத் தேர்வு –Tupac- போன்ற கறுப்பர்களதாய் வித்தியாசமானதாக இருப்பது சுவாரசியமாவும் மகழ்ச்சியாவும் இருக்கிறது. இந்த வயதுப் பிள்ளைகள் எல்லோரும் இத்தகைய தேர்வைச் செய்வதென்று இல்லை (இவர்கள் செய்தாலும் இதில் ஒரு அடிப்படையான பிரச்சினை இருக்கிறது, அதைப் பிறகு எழுதுகிறேன்). அதுபோய் இதுபொய், இப்ப கொஞ்சக் காலம் The Immortal Technique (இறவா நுட்பம்!) காய்ச்சலால் பீடிக்கப்பட்டுள்ளார்கள்.



இவர்களைப்போலவே, கறுப்பர்களது விசிறிகள்தான் அதிகமான பதின்மக்காரர்கள். ஏற்றாற்போல விளையாட்டு, இசையுலகம் இவற்றில் அதிகம் கறுப்பர்களது ஆதிக்கம்தான். BET (Black Entertainment Television) பார்க்காத உயர் பாடசாலை மாணவர் மிகக் குறைவு. உயர்பாடசாலையின் (தரம் 9 – 12 வரை) ஆரம்பங்களில் அது ஒரு மோஸ்தர். போன சில கிழமைகளிலேயே BET போன்றவ பற்றியதே பொதுஉரையாடல்களில் வரவேண்டியதான peer pressure சேர, அவர்களது பாடல்களைக் கேட்பது, அதில் வருகிற பிரபலங்களின் ஆடை அணிகலன்களை அணிவது... பெரிய வெள்ளிக் கழுத்துச்சங்கிலி, மோதிரம், brand name சப்பாத்து (அந்தப் பிரபலங்களுக்கு அந்த சப்பாத்து நிறுவனங்கள் ஏராளம் பணம் இறைத்திருக்கும் என்பது சொல்லவா வேணும்!) இன்ன பிற சந்தையில் தயாரா இருக்க, 50 இலிருந்து 100, 150 என அதற்குமேலவும் விலையில் பிள்ளைகள் பெற்றோர்களை நச்சரிப்பார்கள். இது இன்றைக்கு பொதுவாக எவ்விடமும் யதார்த்தமாயிருக்கும்.

எனக்கு இந்தக் குழந்தைகள் இந்த தொலைக்காட்சி ஊடகங்களில் தகவமைக்கிறவை தொடர்பாக நிறைய விமர்சனங்கள் இருந்தாலும், ஒருபோதும் தம் பிள்ளைகளை நெருங்கி, அவர்கள் பக்கத்தை உணரச் சிறிதும் தலைப்படாமல், தனியே, இந்த உடைகள் பற்றிய குற்றஞ்சாட்டலை, ஓயாத ரோதனைகளை; ‘எம்மிடம் மட்டுமே உயரிய பண்புகள் இருக்கின்றன’ என்கிற பெரியவர்களது அடாவடித்தனமாகவே நானும் உணர்கிறேன். அவை, மேலும் மேலும் இவர்களிடமிருந்து அத் தலைமுறை அந்நியமாதலையே செய்யும்.

மற்றப்படி, அபாரமான இணைவு (ஒத்திசைவு) கறுப்பர்களுடன் தமிழ் இளைஞர்களுக்கு சாத்தியப்பட்டிகிறது. ஒன்று மிகப் பிரதானமானது: நிறம் ("நாங்க ‘கறுப்போ?!’ இல்ல, பொதுநிறம்/வெள்ளை" எண்டெல்லாம் சொல்லிக் கொண்டாலும்!). அவர்களது எதிர்ப்புணர்வும் திடமும் வளரும் இளைஞர்களுக்கு மிக வசீகரமானவை, தம்முடன் அடையாளங்காணக்கூடியவை.

இந்த தலைமுறையினரை அணுகிறபோது, நாங்கள் வைத்திருக்கிற மதிப்பீடுகள், ஒழுங்குகளை தள்ளித்தான் வைக்கவேண்டும். சத்தத்துக்குள் படிப்பது எனக்கு சரிவராது. இவர்களும் அப்படிப் படிக்கிறபோது, மண்டைக்குள் ஒன்றும் ஏறாது என்று உறுதியாய் நம்புகிறேன். ஆனால் நல்லாவே ஏறுதே! Multi tasking generation. ‘காது பழுதாப்போகும்’ எண்டு எதிர்மறையாத்தான் பாக்கோணுமெண்டில்ல. பாட்டுக்கேட்டபடி, அதன் ஒவ்வொரு வரியையும் உள்வாங்கியபடி, பாடத்தையும் உள்வாங்க முடிகிறது அவர்களால்.

எனக்க இவர்கள் ‘தமிழர்கள்’ என்கிற தம் அடையாளத்தை, தமிழ் சினிமா பார்த்து நிரூபிக்க வேண்டுமாய் இல்லை. பெண்களை, முதியவர்களை, பிற இனத்தவரை மதிப்பது என்பது உடைகளைவிடவும் பிரதானமானது. இவர்கள் இன்னொரு இனத்திடமிருந்து பெறுகிற ஏராளமான விடயங்களை எழுதுவதற்காகவே இவர்கள் பற்றிய இந்த அறிமுகம்; இவர்களுாடாக அறிமுகமான எதிர்ப்பிசை பற்றி இனி எழுதுவதாய் உள்ளேன்.

தமிழில் ஏன் எதிர்ப்பிசை இல்லை? சினிமாப்பாடல்களின் சாயல்களை கொண்டிருக்கிற புரட்சிகர, விடுதலைப்பாடல்கள் தவிர, தனித்தன்மையுடன், எதிர்ப்பிசை ஏன் வீறுகொண்டெழவில்லை? அதற்குரிய சந்தை இல்லாததாலா? அதனால் மட்டுமுந்தானா? என்.டி.ராஜ்குமாரின் கவிதைகள்தான் சமகாலத் தமிழில் எனக்குத் தெரிந்த ஒரே எதிர்ப்பிசை. அவர் அதை இசைவடிவிலேயே (நேரடியாய்) வழங்குவாரென படித்திருக்கிறேன்; எனக்கு கவிதைகள்தான் படிக்கக் கிடைத்தன.


Sunday, December 12, 2004

ம்

ஒருநாளின் இரண்டு மணித்தியாலங்களும் கொஞ்சங் கூடவும் போதுமாயிருந்தது இதை வாசிக்க. 1999 ஆண்டில் பக்கத்துநாட்டில் ‘கொலராடோ உயர்பாடசாலை’ சூட்டுச் சம்பவத்தில், எதிர்ப்பட்ட மாணவர்களை துப்பாக்கிகளால் குறுகிய நொடியில் சுட்டு முடித்த இளைஞர்கள்போல், பிரதியின் ஒவ்வொரு பக்கங்களும் விரிய விரிய சூடு நடந்துகொண்டே இருக்கிறது, மரணமும். சுடுவதுகூடப் பறவாயில்லை, ஒரு சொட்டு நிமிடத்தில், நடந்துமுடிந்திடும். ஆனால் இதில் மரணம் அவ்வளவு கெதியில் நடப்பதில்லை. கோடாரிகள், தடிகள், கம்பிகள், கத்திகள், பென்சில்கள், இவற்றுடன் இதில் வருகிற கதாபாத்திரம் ஒன்று சொல்வதுபோல fucking weapons துவக்குகள் சகிதம் நேரம் மெனக்கெட்டுத்தான் செய்கிறார்கள் கொலைகளை ஒவ்வொருத்தரும்.
ஒரு காதுகுடிமி(!) (Qtip) ஆல் காதைக் குடைகிறபோது அதை வைத்து சுட்டியலால் காதுக்குள் அடித்தால் எப்படி இருக்கும் என்று நினைத்துப்பார்த்ததுண்டு(!). அதை எல்லாம் இதிலே செயலிலேயே காட்டுகிறார்கள்.
“நீதிமன்றம் பார்ப்பதுபோல -குற்றவாளியாவும் நிரபராதியாவும்- மனிதர்களைப் பார்ப்பது தவறு. இங்கே எல்லோரும் victims தான்’ என்று சொல்வதை ஏற்க நேரடி அனுபவங்கள் விடுவதில்லை. ‘அவனும் victim நானும் victim’ என்பது சொல்லத்தான் ‘பரந்த’ மனப்பாங்கே ஒழிய, அதால் தனிப்பட்ட ஒருவளு(னு)க்கு ஒரு ஆறுதலுமில்லை. ஒவ்வொரு மனிதர்க்கும் சார்புகள் உண்டு, எதிர்ப்புகள், எதிர் விமர்சனங்கள் உண்டு. இந்தப் பிரதியில்- மனிதர்கள் மற்றவர்களை கொல்வதற்கு சார்பும் சார்பின்மையும் மட்டுமே காரணங்களாகின்றன. தமிழன்களை சிங்களவன்கள், சிங்களவன்களைக் தமிழன்கள், தமிழ்க் கைதிகளை சிங்களக்கைதிகள், தமிழ்க்கைதிகளை தமிழ் இயங்கங்கள்... என்று அது விரிகிறது. இந்த இடத்தில், ஒற்றைப்படையான நீதி, நேர்மை, குற்றவாளி, சுற்றவாளி இந்தச் சொல்களிடமிருந்து பிரிந்து போய்விடுகிறது பிரதி.

குழந்தையை புணர்ந்தவனை பெடோபைல் (pedophile) எனச் சட்டம் தரம் பிரிக்கிறது; அவனும் இச் சமூகத்தின் victim என்பதாக ஷோபாசக்தி. அவனுக்கு, வாழ்நாளெல்லாம் தேடிப் பெறாத ‘பரிசுத்தமான காதல்’ அவனது குழந்தையிடம்தான் இருக்கிறது. அவன் நிறைய சொல்கிறான். சொல்லிக்கொண்டேட இருக்கிறான். சிறுமி தனது பக்கத்தைச் பேசவே இல்லை. ''அவளது இருஇதழ்களின் நடுவே தோல் வளர்ந்தது”

வன்முறையாளரின் நோக்கிலிருந்து இந்த பிரதி பேசுகிறது; -இதில், முதிர்ச்சியற்ற, பரிசுத்தமானவளாய் இருக்கிற, பிரதியாசிரியரால், பேசுவதற்கு எவ் வார்த்தையும் அனுமதிக்கப்படாத, அந்த சிறுமியுடைய பக்கத்தை அவள்தானே சொல்ல முடியும்? அந்தப் பக்கத்திற்கான பதில், பிரதியில் அவளது மெளனம் மட்டுமே.

பாலியல் துஸ்பிரயோகத்துக்குள்ளான சிறுவர்கள் குழுமி இருந்த அறையில், என் கண்முன்னால் உடைந்தழுத சிறுமியொருத்தி ‘அந்த ஆண்குறியை வெட்டவேண்டும்’ என்று சொன்னாள். அதையொத்த வலியைத்தான் ‘தன் குழந்தையைப் புணர்ந்தவனை’ நாம் (எமது ‘பொது’மனம்) கேட்க விரும்புகிற கேள்விகளைக் கேட்டுக் கேட்டு அடிக்கிறபோதும் எழுகிறது- Fucking system என்று சொல்லியபடிக்கு.

மற்றப்படி, ஒரே மூச்சில் படித்துமுடிக்கக்கூடியதாய் இருப்பதும், அவன் போன்றவர்களை, ஒரு பொதுக் கதையாடல் போல ‘மிருகமாய்'க் கட்டமைக்காததும், வாசிக்கையில் ‘அதை ஏற்காட்டிலும்’ ஒருவித உணர்வுக்கு ஆட்படச் செய்வதும்தான் ஷோ.சக்தியின் வெற்றியா தெரியவில்லை.
ஆனால்
தாஸ்தாவ்ஸ்கி (Dostoevsky) யின் மரணவீட்டின் குறிப்புகள் போன்ற படைப்புக்கள் மனிதர்களை வெறும் குற்றம் நிமித்தம் அளவிடாமல் சமூக, புறச் சூழல்கள் ‘கட்டி எழுப்பிற’ அவனிலிருந்து விடுவித்து, வேறாய் உலவவிட்டிருக்கின்றன. ஒரு ‘கொலைகாரன்’ எப்போதுமே கொலைவெறியை உடையவனாய் இல்லை. ராஜம் கிருஷ்ணன் கதைகள், மணிரத்தினம் படங்கள்போல வன்முறையாளர்கள் முகங்களில் என்றென்றைக்கமான நித்திய கொடூரம் இருந்ததில்லை. ஒருவளை(ன)க் கொன்றுவிட்டு அன்றேயோ பிறகோ அந்த ஒருவனோ ஒருத்தியோ தமது துணைகளைப் காதல் செய்யவோ, குழந்தைகளைக் கொஞ்சவோ செய்தார்கள். அந்த யதார்த்தமான ‘மனிதனைப் பற்றி’ பேசியபடியாற்தான் அவை தரமான இலக்கியப்பிரதிகளாக இன்றைக்கும் நிற்கின்றன; அத்தகைய பிரதிகள் தமிழில் இல்லை என்றே சொல்லலாம். மாறாக பாரபட்சமான கதாசிரியர்களின் எண்ணப்படி நகர்ந்தவைதான் பெருவாரியானவை.


முதலாய் உலக யுத்த்திற்குப் பின்பான ஒரு தலைமுறையை lost generation என குறிப்பிடுவார்கள். ஹெமிங்வேயின் முதல் நாவலான ‘சூரியனும் உதிக்கிறான்” (The Sun Also Rises) இல் ஒழுக்கம், மதம், காதல், பிம்பங்கள் சகலதும் மீதான நம்பிக்கையிழப்புக்குட்பட்ட அத் தலைமுறையின் கசந்த வாழ்வு வரும். அது ஒரு தொலைந்த தலைமுறை. இன்றைக்கு ஈழத்தில், இடைப்பட்ட யுத்த நிறுத்த அ(ன)ர்த்தப்படாத காலத்தில், தலைவரின் பாசையில் ‘அரசியல் வெறுமையில்’ இருக்கிற காலத்தில், அத்தகையதொரு தலைமுறையே யதார்த்தமாயிருக்கும். ஈழத்தில் ஒரு பாதி, அங்கிருந்து புலம்பெயர்ந்த தேசங்களில் பிற பாதி என- அத்தகையதொரு ‘தொலைந்த தலைமுறை’யின் வாழ்க்கைப்போக்கையே இந்தப் பிரதி பதிவுசெய்திருக்கிறது.

இது குறித்த தமிழக வாசகர்களது வாசிப்பனுபவம் எப்படியிருக்குமென்று தெரியவில்லை, இதில் இடம்பெற்றிருக்கிற பல விடயங்களுக்கு புதியவளா இருந்தாலும் ஒன்ற முடிந்தது, ஒன்ற முடிகிறதன்மை அவர்களுக்கும் இயல்பாய் வருமா தெரியவில்லை. வெலிகடை சிறையில் உறவினர் ஒன்றரை வருடங்கள் இருந்தார். இன்னமும் அச்சிறையில் இப்படிப் பலர் இருக்கிறார்கள். எந்த குற்றச்சாட்டும் இல்லை ‘சும்மா’ கைதானவர். அவர் காரணமாக, வெலிக்கடைச்சிறையின் விருந்தினர் அறையையும், தடிப்பான காக்கிச் சட்டைகளின் துவேசமான நடத்துதல் பற்றிய அச்சமும் அனுபவம். அதற்கப்பால், உள்ளே, சிறைக்கூடங்களுள் மனிதர்கள் நடத்தப்படுகிற விதம் பற்றிய காட்சி, எமது உலகத்திற்கு புதியது.

ஷோபாசக்திகளின் படைப்புகள்மீதான இன்னொரு விமர்சனம்: அவரது பிரதிகள் புனைவும் நியமும் கலந்தவை. ஒரு படைப்பிற்கு ‘புனைவு’ (Fiction) என அடையாளம்தந்துவிட்டு உள்ளே நிர்மலாக்கா, டேவிட் ஐயா, டக்ளஸ் என பெயர் தருவதில் உள்ள சிக்கல், பிரதியின் எல்லாத்திற்கும் ‘நியமுகம்’ தருவதாய் இருக்கும். எனினும் இந்தப் பெயர்களை பயன்படுத்துவதை, பொதுமனிதர்கள் என்ற அடிப்படையில், ஒரு காலத்தின் நடிகைகளின் பெயர்களை மற்றும் பெப்ஸி/கோலா என பொது உரையாடல்களில் வந்துவிட்ட பெயர்களைப் பயன்படுத்துவதுபோல எடுத்துக்கொள்ளலாம். ஒரே சிக்கல், பிரதி முழுமைக்கும் தரப்படக்கூடிய ‘உண்மைக் கதை’ சிக்கல்தான். இதிலும், அத்தகைய பிரச்சினைகள் உண்டு. சிறையில் இருந்ததாக எழுதப்பட்டிருக்கிற நியாமான சில நபர்கள், அங்கு இருக்கவில்லை என்று சொன்னர்கள்! இதுபற்றித் தெரிந்தவர்கள், இனிவரும் தங்கட விமர்சனங்களில் பதிவு செய்வார்கள் என எதிர்பார்க்கலாம்.

பெண்கள் தரப்பிலிருந்தும் விமர்சனங்கள் வருமென எதிர்பார்க்கிறேன்.
சிறுமியின் வயது குறிப்பிடப்படாதபட்சத்தே, தாயின் கூற்றுப்படி ’10 வயதுப் பெண்ணாய்’ இருப்பவள் மார்பு –காலில் அழுந்த உட்கார்ந்திருக்கம் காட்சி குறித்து தோழி விசனப்பட்டாள் “10 வயது சிறுமிக்கு மார்புவளர்ச்சி எங்க வந்தது?” என்று. மேற்குலக சிறுமி என்ற அடிப்படையிலோ, 14-15 வயது சிறுமியாக இருந்தாலுங்கூட, இத்தகைய ‘காட்சிப்படுத்தல்கள்’ தருகிற uneasy ஐ தவிர்க்க முடியாதென்றே தோன்றுகிறது. ஏனெனில் ஆண்களின் கதையாடல்களில் வருகிற பல சித்தரிப்புகள், குறிப்பறிவித்தல்கள் ஒரே மாதிரியானதாக ஒரே விடயத்தை மையங்கொண்டனவாய் இருக்கின்றது. பாலியல்சார் விடயங்களை எழுதுகிறபோது ‘பிரா கூக்கை களட்டினான், மார்பு அழுந்த உட்கார்ந்திருந்தாள்” போன்ற வரிகளைக் கடந்து எந்த தமிழ் எழுத்தாளனும் போனதில்லை. அது ‘நாகரீகமான’ ஆபாசத்தைத் தொடாத ஒரு நிலையென அவர்களுக்குத் தோணலாம், ஆனால் சிறுமியைப்பற்றி எழுகையில்கூட அப்படியொரு மார்பை முன்வைத்த குறிப்பறிவித்தல்தான் வருகிறது!

இன்னொரு சமயம் ‘ம்’ குறித்து எழுத முடியுமா தெரியவில்லை. தொலைந்த தலைமுறையிடமிருப்பது துயரமில்லை; கசப்புத்தான். எல்லாவிதமான –ஏன் தங்கள் மீதான கூட- கசப்பே. அது தருகிற மனநெருக்கடி கொஞ்ச நாட்களுக்கு ஒட்டியிருக்குப் என்று தோன்றுகிறது. அத்தோடு வழமையாய் விமர்சகர்கள் சிலாகித்துச் சொல்வதுபோல “ஷோபாசத்தியால் மட்டுமே இதை எழுத முடியும்” என்றும் சொல்லத் தோன்றுகிறது. தவிர ஒரு பெண்ணால் *இத்தகைய சார்பற்று இத்தகு பிரதியை எழுதமுடியும் என்றும் தோன்றவில்லை. இதை மிகவும் மனவருத்தத்துடன்தான் சொல்கிறேன் ஏனென்றால் இது ஒரு balanced ஆன பிரதி. இறுதி பகுதியின் அந்த கதாபாத்திரத்தின் ‘குரல்’ மற்றும் குதிரையை முன்வைத்த குறியீட்டுச் செய்தி தவிர (அநாவசியமா துரத்திக்கொண்டு!), நாவல், மிக இறுகிய, செப்பனிக்கப்பட்டெல்லாம் இருக்கிறது.

நிகழும் எல்லா அத்தியாயங்களுக்கும்/அநியாயங்களுக்கும்
‘ம்’ கொட்டிக்கொண்டிருக்கும் அவரது சனம், எல்லாவகையான வன்முறைகளாலும் ஊறிய இனம், இவையே இக்கதைப் புத்தகத்தின் பின்னணி.

போராளிகளால் கொல்லப்பட்ட ராஜினி திரணகம அடிக்கடி சொல்லுவாவாம்: ‘எங்கட மதம் வன்முறையாலானது. எங்கட கடவுள்கள் ஆயுதங்களுடன் இருப்பவர்கள். எங்கட இனம் வன்முறையாலானது”. இதை நினைவுகூர்ந்தவர், புலத்தில் இருக்கிற, ஒரு த.வி.புலிகள் ஆதரவாளர்.

இப்பிரதி குறித்த விமர்சனத்தை -முடிந்தால்- பிறகும் தொடரலா
ம்






*சிங்கள மக்கள் மீதான போராளிகளின் வன்முறை இதில் பதியப்பட்டிருந்தாலும், இது முற்றுமுழுதாக ‘சார்பற்ற’ பிரதி அல்ல. தமிழ் மக்கள் எதிர்கொண்ட வன்முறைதான் 99 வீதம். இதில் ‘சார்பற்ற’ என நான் கூறுவது ஒழுக்க ‘சட்டத்தினடிப்படையில்’ ‘உணர்ச்சிபூர்வமாக’ மனிதர்களை பார்க்காத தனத்தைத்தான் (உதாரணம்: சிறுமி மீதான தகப்பனின் பாலியல் தொடர்பு; அத் தகப்பனைக் கொடியவனாக காட்டாமல்விட்டது).
0000000000000000000000000000000000
தொடர்புகளுக்கு:
karuppu2004@rediffmail.com
shobasakthi@hotmail.com