@font-face { font-family: TSCu_InaiMathi; font-style:normal; font-size: 10pt; font-weight:normal; src:url(http://mathy.kandasamy.net/fonts/TSCUINA1.eot); }

Friday, October 29, 2004

கண்ணன்கள் - கவிஞன்கள் - நித்திய காதலன்கள்

-ஒரு பெட்டை அலசல்


ஓடு மீன் ஓட உறு மீன் வரும் வரையில்
காத்திருக்குமாம் கொக்கு
-சொலவடை

(குளக்கரையில்) நீளக் காலூன்றி
ஒரு கொக்கு தவமிருக்கு
-சேரன் (கவிதை, 'பிரிதல்')


1.0 கண்ணன்கள்



கண்ணன் குழலூத ஆண்டாள்கள், மீராக்கள் (இருவரும் ஒன்றுதானா?) தம் கணவன்களையும் விட்டுவிட்டு அவனிடம் ஓடி வந்துவிடுவதாக,
அவனின் செம்பவள வாய் வேண்டி
“...மருப்பொசித்த மாதவன் தன் வாய்ச்சுவையும் நாற்றமும்
விருப்புற்றுக் கேட்கின்றேன் சொல்லாழி வெண் சங்கே” – என்றெல்லாம் உருகி உருகி அவள் பாடி நின்றதாக தமிழ் இலக்கியம் பதிவு செய்துள்ளது.
தம் காமத்தை பக்தியினூடாக வெளிப்படுத்தியவர்களாக இருந்த இப் பெண்டிரது கனவின் முழுமையான பிம்பம் ஆகிய கண்ணன் இன்றுவரையில் புனைவுகளில் ஆண்மையின், மயக்குதலின் நாயகனாகத் திகழ்கிறான். ஆண்மைக்கு அழகெனப் 'படுகிற' கார்மேக வண்ணம் தமிழ் சினிமாவிலும் 'கண்ணா கருமை நிறக் கண்ணா' எனப் பாடல்களாய் ஒலிப்பதாகிறது. (தமிழர்கள் தம் திராவிடத்தின் கறுப்பை ஆண்களிடம் மட்டுமே விரும்பிக் கொண்டும் இருக்கிறார்கள்!)
அவ்வாறாய் கண்ணன் மிக முக்கியமான பிம்பம் ஆண்மையின் சின்னம்.
பெற்றவர்கள்/தாய்கள் தமது ஆண் குழந்தையை கண்ணா என்றழைத்து அவனது குறும்புகளை விளையாட்டுக்களை இரசிப்பர், புளகாங்கிதமடைவர்.
பாரதியின் தீராத விளையாட்டுப் பிள்ளை ஒரு eve-teasing ஐ -பெண் மீதான பெரிய வீட்டுப் பையனான கண்ணனின் அத்துமீறலை- பெற்றவரின் புளகாங்கிதத்துடன் பாடப்பட்டிருக்கிறது. அப் பிம்பத்தை 'கண்ணா' என்ற பெண்ணாக மாற்றி அனைத்தையும் அவளது குறுப்பாக மாற்றினால் அதுவே சகிக்க முடியாது அபத்தமாகி விடும். அதற்கு அவசியமற்று ஆண்களாகிய 'அவன்'கள் தீராத விளையாட்டுப் பிள்ளைகளாக பல காதலிகளை இயல்பெனக் கொண்ட கவிஞர்களாக நித்திய காதலர்களாக உருவாக்கப்பட்டுவிட்டார்கள்.
அவனது அகன்ற தோள்களும் உயரமும் ஆண்டாளை கணவனை விட்டு ஓடி வரச் செய்த வசம் செய்யும் கானங்களும் அவன் பற்றிய எண்ணற்ற புனைவுகளும் ஆய் கவிதைகளில், பாடல்களில் என்றென்றைக்குமாக கண்ணன் ஒரு காதல் பிம்பமாக முன் வைக்கப் பட்டுள்ளான்.

2.0 கவிஞன்கள்

...எந்த நிலப்பரப்பும் வாழ்வியல் அம்சமும் இல்லாமல்தான் இங்கே ஆண் கவிஞர்கள் எழுதிக் கொண்டிருக்கிறார்கள். இருபத்திநான்கு மணிநேரமும் இவர்களுடன் படுத்துக் கொள்வதற்கான ஒரு பெண்ணைத்தான் இவர்கள் கவிதைகளில் தேடுகிறார்கள். இதுதான் ஒரு கவிஞனுடைய நோக்கமாக இருக்க முடியுமா?
-மாலதி மைத்ரி, (குமுதம்) தீராநதி அக்டோபர் 2003 இதழ் பேட்டியில்

கவிஞன்கள்! கவிஞன்கள் என்றதும் பலவிதமான பிம்பங்கள் மனதுள் எழும், புரட்சிகரமான மற்றும் மெல் இதயத்தை உடையவர்களாக, அவர்கள் எழுதிய கவிதைகளை விடவும், 'கவிஞர்கள்' குறித்ததே ஏராளம் பிரம்மைகள். அவர்களுக்கென ஒரு தேஜஸ், அங்கீகாரம், மேலதிக கவனம். அவர்கள் என்றும் இளமையானவர்கள் (அதிலும் என்றும் 16), இளமையான சிந்தனையை உடையவர்கள் எனப் பல மாயைகள்/அனுமானங்கள்@ அவை எல்லாவற்றினதும் பொதுஒற்றுமை அவர்களது இளமையும் காதலுணர்வும் காதலுறவுகளும் சார்ந்ததே.
சிற்றிதழ் ஒன்றில், யாரோ கவிஞர் கூறிய கருத்திற்கு விமர்சித்து எழுதுகையில் ஒரு வாசகர் எழுதுகிறார் ''இது கவிஞருக்கு அழகல்ல''. அவர் எழுதிய விடயம் சாதாரண மனிதர்களுக்கே 'அழக'ற்ற விடயமாக இருப்பினுங்கூட கவிஞருக்கு இது அழகா என அவர் உணர்ச்சிவசப்படுகிறார். தொடர்ந்தும் இத்தகைய கூற்றுக்களைக் கேட்கக் கூடியதாக உள்ளது “இது கவிஞருடைய அணுகுமுறையே அல்ல” “கவிஞரே இப்படிக் கூறினால் எப்படி?” இத்தியாதி என்று. அவையூடாக கவிஞர் குறித்த ஒரு மயக்கம், காவிய எண்ணம் வெளிப்படுத்தப்படுகிறது.
''கவிதைகளும்'' கட்டுரை, சிறுகதை, நாவல் போன்ற வடிவங்களில் ஏனைய ஒன்றே. ஏலவே கவிதைகள் எழுதுவதால் ''கவிஞன் என்பதால்'' மட்டும் எப்பேர்ப்பட்டவர்களும் மேம்பட்ட மனிதனென்றோ 'மேலான' உணர்வுதளத்தை, உயர்ச்சியை உடையவனென்றோ கொள்ள முடியாது. ஆனால் 0என்றென்றும் கவிஞர்கள் குறித்த மாயைகளில் குளிர் காய்பவராகவே ஆண் கவிஞர்கள் இருக்கிறார்கள். அவர்களுக்கு அதொரு தப்பித்தல், அவர்களது வாழ்விற்கு வர்ணம் பூசும் மேலதிக சலுகை. ஓரு இலவச இணைப்பு!
ஆனால் பெண்கவிஞர்களுக்கு கவிஞனுக்குரிய சலுகைகளிற்கே இடமில்லை. மற்றெந்த புனைவுகள் போலன்றி, கவிதைகள் பொதுவாகவே நேரடியாகப்பேசுவதால் அது கவிஞரின் அனுபவமாக எடுத்துக் கொள்ளப்படுகிறது. கவிதைகளிற்கும் கவிஞர்கட்குமான நேரடித்தன்மை காரணமாக -பெண் கவிஞர்கள்- தமதல்லாத அனுபவத்தை எழுத நேர்கையில் சங்கடமாக அமைந்துவிடுவதும் உண்டு. புகழ் பெற்ற புதுக் கவிஞர்கள் என்றொரு நு{லை அன்னம் வெளியிட்டது. அதில் மொPனா ஸ்வெட்டேவா என்கிற ரஷ்யக் கவிஞையை அறிமுகம் செய்கையில் “...கவிஞர் அகமட்டோவா விடமிருந்து இவள் வேறுபடுகிறாள். இலக்கியவாதிகள் அம்மடோவாவைப் ‘பாதிப் பரத்தை; பாதித் துறவி” என்பர், ஸ்வெட்டேவாவை “முழுப் பரத்தை” என்பர்.” என்று தொகுப்பாளரால் முன்வைக்கப்ட்டிருந்தது. இத்தகைய வர்ணனை அதில் இடம்பெற்ற (பாப்லோ நெருடா உள்ளடங்கலாக) ஆண் கவிஞர்களுக்கு இல்லை! மாறாக, “உணர்ச்சிவசப்படும் கவிஞர்கள், காதலைப் பொறுத்தவரையில் எப்போதும் கட்டுப்பாடற்றவர்கள். சந்த வேறுபாடுகளும், சாயல் மயில் வேறுபாடுகளும் அவர்களால் தவிர்க்க முடியாதவை, பைரன், ஷெல்லி, கெதே, போதலேர், பாப்லோ நெருடா எல்லாரும் காதல் மன்னர்களே! மாயயகோவ்ஸ்கி மட்டும் அதற்கு விதிவிலக்கா? மாயகோவ்ஸ்கியின் வாழ்க்கைப் பாதையில் எத்தனையோ பூந்தோட்டங்கள்! குளிர் அருவிகள்! இளமரக்காடுகள்!”
பாடசாலைகளில் சில இளைஞன்களைச் பெண்கள் கூட்டம் சூழும். விளையாட்டு வீரர்களைச் சூழ்ந்திருப்பதுபோல,; பாடகன்கள் இன்ன பிற பிரபலமானவரைச் சுற்றி இச் சூழல் இருக்கும். போதுவாக ஸ்திரிலோலர்களாயப் பெண்டாளர்களாய் இருக்கிற இவர்களைப் ‘பொறுக்கி” என்று வைதாலும் ரகசியமாய் ஆண் மனோபாவத்தில் “மச்சக்காரன்” எனத்தான் பலரும் சொல்லுவதுண்டு. (இதில் மச்சத்துக்குக் காரணமானது பல பெண் உடல்களைக் கூடுகிற “யோகம்” தான்) இந்த நாடுகளில் “கவிஞன்” களுக்கான கிளர்ச்சியுறல் “கண்ணன்” இத்தியாதி பிம்பங்கள் இல்லாத காரணத்தினால் அவர்கள் “play boy” (தமிழ் - மன்மதர்) களாக பார்க்கப்படுகிறார்கள்; அவர்கள்மீதும் சகஇளைஞன்களுக்கு பொறாமை இருப்பதும் இயல்புதான் (பெண்களுக்கு பெண்கள் மீதும் இப்படியான உணர்வு உண்டே. அதிலும் உயர்பாடசாலை சூழலில் ஒரு popular crowd உம் அதில் சேர்த்தியற்ற இன்னொரு குழாமும் என்று). மேற்கின் ஹோலிவூட் நடிகர்களுக்கு ஒப்பாக அல்லது மேலாக பாடகன்கள் பெண்களின் தீராத காதலராக கனவில் சூழுவதுண்டு.
வேடிக்கை என்னவென்றால் அத்தகைய சொல்லுக்கு ஈடாய் “நித்திய காதலன்” என சேரன் கவிதை நூலுக்கான தனது காலச்சுவடு மதிப்பரையில் திரு சுந்தர ராமசாமி அவர்கள் சேரனைச் சுட்டியிருககிறார்.
0



(...இன்னும்
வரும்)

Monday, October 18, 2004

காத்திருப்புக்களும் கனடாப் பெட்டையளும்

  • ஒரு நண்பர், முன்பொருமுறை, பிரான்சிலிருந்து வருகிற அம்மா இதழ், கொழும்பிலிருந்து வருகிற மூன்றாவது மனிதன் மற்றும் சில இதழ்களை அனுப்பி வைத்திருந்தார். மூன்றாவது மனிதன் (இதழ்: 6) இல் கவிஞர் சேரனின் பேட்டி இருந்தது. அதில், அதன் ஆசிரியர் பௌசருக்கும் சேரனிற்கும் பெரிய கவலை. அது என்னெண்டா (பௌசர் கேள்வி: தமிழ்க் கவிதை வரலாற்றில் பாரதி, பாரதிதாசனுக்குப் பிறகு ஒரு “major poet” தோன்றவில்லை என்கிறார்கள். அவனதோன்றாமலே போய் விடுவானா?) யாராவது ஒரு மேயர் பொயற தோன்றிருவானா? இவையட காலத்தில அவன் தோன்றியிருவானா இல்லையா? அதுக்கு சேரன் ஒரு பெரிய வியாக்கியானம் -இச் சந்தர்ப்பத்தில் அவரது சிஷ்யர்கள் யாராவது கூட இருந்திருந்தால் “தலைவரே (சேரனே) ஒரு major poet தானே, பிறகென்ன” என "மெய்சிலிர்ப்புடன்" சொல்லியிருப்பர்-. அவர்கள் இல்லாத சோகத்தை இந்த நீண்ட வியாக்கியானத்தில்தான் சேரன் ஆத்தியிருப்பார் போலும். (சேரன்: ...இன்றைக்குப் பாரதிக்குப் பின் ஒரு Major Poet வரவில்லை என்று சொல்லுவர்கள் மதிப்பீடுகளில் காலத்தின் பங்கைச் சரியாக எடை போடாதவர்கள் எனலாம். இவ்விடயங்களை நாம் 10 வருடத்திற்குள் அல்லது 20 வருடத்திற்குள் தீர்மானிப்பது சாத்தியமில்லை. சிலவேளைகளில் நுாறுவருடங்கள் கூடக் காத்திருக்க நேரலாம். தருமுவோ, யெயபாலனோ அல்லது சோலைக்கிளியோ ஒரு Major Poetஆ என்பதனை இன்றோ அல்லது சில வருடங்களிலோ தீர்மானித்துவிட முடியாது.) அதிலும் செயபாலன், சோலைக்கிளி போன்றவர்களை சொல்லுகையில் தன்னைச் சொல்ல முடியாதிருப்பது பெரும்சோகம், ஆனா அதுவே -வாசகர்களைப் பொறுத்தவரையில்- தன்னடக்கம். கவிஞருக்கென்ன, ஒரு கல்லில இரண்டு மாங்காய். ஆனா
    யோசித்துப் பாருங்கள். கேட்டவருக்கு -இனிமேற்தான்- தோன்றப்போகிற ஒருவர் ஒரு "ள்" ஆ இருக்கலாம் என்கிற உணர்வு கொஞ்சங் கூட இல்லை. உணர்ச்சிவசப்பட்டுப்போய் கேட்டிருக்கிறார். சரி, கேட்கிறவர் -எத்தகையர்- பெண்ணியம் பற்றி அவர் எழுதாதா? தனது உட்கவலைகளுக்குள் (அதான் “அந்த major poet ஏ நான்தான் பௌசர்!” என்று சொல்ல முடியாத) மூழ்கிக்கிடந்த அவராவது அத மறுத்தாரா? ம்ஹீம். இந்த லட்சணத்தில பேட்டி தொடர்ந்து போகும் பௌசர் கேட்பார் “பெண்ணியம் தொடர்பாக தமிழ் சூழலில் அதிக பிரக்ஞையுடன் செயலாற்றி வருபவர் நீங்கள்! ஆனால் உங்களுடைய கவிதைகளிலும் கூட ஆங்காங்கே ஆண் சிந்தனை வெளிப்படுவது குறித்து...”
    இவர் பதில் சொல்லுவார்: “என்னுடைய ஆரம்ப காலக் கவிதைகளில் ஆண் நிலைப்பட்ட படிமங்களும் “ஆண்மை” சார்ந்த மொழிப் பிரயோகமும் இடம்பெற்றிருக்கின்றன என்பது உண்மை. எனினும் அதிலிருந்து நான் விடுபட்டு விட்டேன். 87க்குப் பிற்பாடு வெளியான கவிதைகளில் இந்த மாற்றத்தை நீங்கள் உணர முடியும். ஆரம்பத்திலிருந்து எனது வாழ்வு அனுபவங்களும் எனது சூழலும் ஆணாதிக்கம் மேலோங்கிய பரப்பிலேயே இடம்பெற்றது. மேல்ல மெல்ல “ஆண்மை”, “பெண்மை” கரத்தாக்கங்களையும், கட்டமைப்புகளையும் நான் உதறிவிட்டேன். நுளினமும், மென்மையும் பால் பொது இயல்புகள்தானே?
    எனது வாழ்விலும் சிந்தனையிலும் கவிதையிலும் பெண்ணியம் ஏற்படுத்தியுள்ள தாக்கமும் மாற்றமும் முக்கியமானது”
    இதத்தான் ஊமைக் குசும்பு எண்டிறதா? இவர் விடுபட்டாரா இல்லையா, உதறினாரா இல்லையா அதன் லட்சணங்களைச் சொல்ல வேண்டியது யார், அதுவும் இவரேதானா?! மெல்ல! மெல்ல! ரெண்டு வேரும் வரிஞ்சு கட்டி கதைக்கிற கதையளப் பாத்தா பெட்டைக்கு சிரிப்பு வருமா வராதா? இந்த பேட்டி நடந்த 1999 இல இருந்து அத நினைச்சு சிரிச்சுக்கொண்டிருந்தா எனக்கென்ன பெயர்?
    (87 இற்குப் பிறகு சேரன் எழுதிய கவிதைகளில் அவர் ‘உதறிய’ ஆண்நிலைச் சிந்தனைகள் பற்றி இன்னொருமுறை விரிவாக எழுதுவேன்)
  • பிறகு அம்மா இதழ். அதில மனோகரன் எழுதியிருப்பார்.
    ‘(இலக்கிய உலகம்) ஒரு கலகக்காரனின் வரவுக்காக காத்துக்கிடக்கிறது’
    அதேன்ன ஒரே “ஒரு” கலகக்காரன்? ஏன் இந்தக் கஞ்சத்தனம்? ரெண்டு மூண்டுவேர் வந்தா என்னவாம்? சண்டையும் கூட வந்திருமா? இதொரு தனிநபர்வாதம் என்பதோட, காலங்காலமாக ஒரு வேலை மெனக்கெட்ட ‘காவியக்’ காத்திருப்பை வெளிப்படுத்துது. அனேகமா மனோகரன்ர அந்த கலகக்காரனும் சோபாசக்தியாகத்தான் இருக்கும்...!

  • சுராவோ தனது ஜே. ஜே. சில குறிப்புகள் எண்டொரு புதினத்த எழுதிப்போட்டு பாவம் கன வருசமா ஒரு சிறந்த விமர்சகனுக்காக காத்துக் கொண்டிருக்கிறார்!
    இப்ப உங்களுக்குள்ள -காத்திருப்புகள் பற்றிய-ஒரு காட்சி வந்திருக்கும். ஒப்பற்ற காட்சி!
    ஆனாப் பாருங்க, இப்பிடி-
    ''பெரிய எழுத்தாளர்கள்'' போல எமது படைப்பிற்கான ஒரு சிறந்த விமர்சகனை எதிர்பார்த்தபடியோ, அல்லது ஒரு ''கலகக்காரனை'' எதிர்பார்த்தபடியோ பெட்டைகளாகிய நாங்கள் எமது காலத்தைத் தள்ளுவதில்லை (எமது என்றிறது ஒரு மோறல் சப்போர்ட்தான்). அது, அதுவா தள்ளுப்பட்டுக் கொண்டிருக்கு.


    ஆனா? சும்மா கிடந்த சங்க ஊதிக்கெடுத்தான் என்னவோ எண்டிற மாதிரி ஏன் எங்கள வம்புக் கிழுக்கோணும்?

    இந்த ஈரோப் முழுக்கிலும் தம்பட்டம் அடிச்ச வச்சிருக்கிறாங்கள் எங்களப் பற்றி (அதுதான் கனடாப் பெட்டையளப்பற்றி). முந்தியொருக்கா எனக்கு மின்னஞ்சல்ல ஒண்டு வந்தது லண்டன்ல புலிகளத் தடை செய்ததப்பற்றி. “கனடாப் பெட்டையள் -புலிகள் தடை தொடர்பாக” (Canada Girls' Opinion on Tigers' Ban” எண்டொரு அறிவார்ந்த தலைப்போட. ரொம்ப கௌரதையா இருந்திச்சு, கொஞ்சம் பெருமையா இருந்திச்சு. அதோட, கொஞ்சம் அசந்துபோய் என்னடா சொல்லுறாளுகள் எண்டு போய்ப் பாத்தா அங்க புல்லில மூண்டு பெட்டையள் குந்தியண்டு இருக்கினம். அவையளுக்குமேல வட்டம்போட்டு அந்த வட்டத்துக்குள் அவையள் கதைக்கிற மாதிரி வசனம் போட்டிருக்கு. ஒருத்தி சொல்றா ‘என்னடி பசுமதி அரிசியை (b)பான் பண்ணிப்போட்டங்களாம்” எண்டு. எப்பிடி? இதென்ன நக்கல்! (சிரிப்பு வந்ததுதான்).
    பெடியள் சிலபேர் ரைம் செலவளிச்சி இப்பிடி எங்கள பரிசுகேடாக்கோணுமா? பெண்களுக்கும் அரசியலுக்கும் சம்மந்தமில்லையெண்டிறத எவ்வளவு அழகா சொல்லுறாங்கள்? அதிலும் சமையலோட முடிச்சுப் போட்டாங்கள் பாருங்க அதுதான் ஆகிலும் ehhhhhh (நற! நற!) !
    இப்படியெல்லாம் ஒரு பின்புலத்தில ஒரு மாதிரி வாழ்க்கை போகேக்க (அது தா...னாப் போகும்), என்ர தூரத்து சொந்த அண்ணாப் புள்ளையார் ஒருத்தர் ஈரோப்பில எங்கையோ ஒரு நாட்டில இருந்து என்னோட கதைக்கிறார். அவருக்கு பிடிச்ச சிநேகா, அவருக்க பிடிச்ச மும்தாசு, ... கூடவே “கனடாவில பெட்டையள் அவ்வளவு செரியில்லையாம் என?”. என்னட்டயே அபிப்பிராயம் வேற கேட்டா எனக்குள்ள இருக்கிற பெட்டைக்கு எப்பிடி இருக்கும்? அவள் பாட்டுக்கு நாசமே எண்டு பறையாமக் கிடக்கிறாள். அவளிட்டப்போய் இப்பிடி ஒரு கேள்வி கேட்டா...?
    பெடியங்கள் மட்டும் திறமோ எண்டு சுதி ஏறிச்சு அவளுக்கு. அவர் அதுக்குத்தான் “எங்கட தங்கச்சியாக்களப் பற்றித் தெரியும்தானே, ஆனா” எண்டார். இதுக்குப் பேர்தான் பிரிச்சு வைச்சு கதை எடுக்கிறதெண்டிறது. நான் நல்லமெண்டா எனக்கு வாறப் புளுகில அடுத்தவளவையப் பற்றி சொல்லுவன் எண்டு! இந்த தந்திரத்தையெல்லாம் ஒரு புத்திசீவியா உருவாகிக்கொண்டு வாற (தெரியும்தானே) ஒரு பெட்டையிட்ட விட்டா எப்பிடி? “ஆனாவும் இல்ல ஆவன்னாவும் இல்ல இங்க ஒரு பெட்டையளும் ஒருத்தரையும் துவக்கால சுடையில்ல” எண்டன். அதுக்குப்பிறகு அண்ணை ஒண்டும் பறையேல்ல.
    இப்பிடி ஆளாளுக்கு வருவாங்கள். கனடாப் பெட்டையளைப்பற்றி ஒரு “மாதியான” அபிப்பிராயம் (நீங்கள் ஏதும் கேள்விப்பட்டனிங்களா?)-
    கனடாப் பெட்டையள் பாலியல் தொழில் செய்யினம் (2000 ஆம் ஆண்டு ஒரு பெரிய பிரச்சினை வந்ததென்னெண்டா ரொறன்ரோவில இருக்கிற ஒரு துவேசப் பத்திரிகை ஒண்டு தமிழீழ.விடுதலைப்.புலிகள் காசு சேக்கிறது தமிழ் பெட்டையள தொழிலுக்கு அமத்தித்தான் எண்டு எழுதிப்போட்டுது. பெட்டையும் பஸ் பிடிச்சு எதிர்ப்புச் கோசம் போடப் போனவதான், ஆனா போய் முடியிறக்கிடல கூட்டம் முடிஞ்சுது (உண்மையா)); கனடாப் பெட்டையள் நீலப் படம் நடிச்சிருக்கினம் (சோபாசக்தியின்ர பகுத்தறிவு பெற்ற நாள் சிறுகதையில பொடிப்பிள்ளையார் ஒராள் போய் கேப்பர், அண்ணை கனடாப் பெட்டையள் நடிச்ச படம் ஏதும் வந்திருக்கோ எண்டு); கனடாப் பெட்டையள் கனபேரோட சுத்திறாளவை. அட! அட! அட! ஒவ்வொரு ஒவ்வொரு நாடுகள்ள இருந்து வாற தொலைஅழைப்புகளுக்குள்ளாலதான் எனக்கு இதெல்லாம் தெரிய வந்ததே (அதென்னமோ சமூக நலன்களத் தவிர வம்பெண்டிற சாமனே பெட்டைக்குப் பிடிக்கிற இல்ல).
    -மொத்தத்தில அண்ணைமாற்ற பிரச்சினை எங்கையிருந்தாலும் தங்கட இனப் பெண்ணோட கற்புப் பற்றித்தான். அவையள் தங்கட விருப்பத்துக்கு ஒரு பக்கம் மும்தாசுவையும் தங்கட பொண்டாட்டி சிநேகமா மாரி எண்டும் ஒரு போமிலா வச்சிருப்பினம். ஆனா தங்கட பெண்களோட கற்பப்பற்றி ஒரு பக்கத்தில நடக்கும் ஆராய்ச்சி. இதெல்லாம் பெட்டைக்கு ரென்சன்தாற விசயம் (இப்ப வந்து எனக்கு கார்ட் கொஞ்சம் வீக்).
    உண்மையா ஒரு பெட்டை அல்லது ஒரு பெடியன் அல்லது யாரோ அவையன்ர சொந்த வாழ்க்கையை வாழ்றதில (அல்லது வாழாம இருக்கிறதில) யாருக்கு என்ன வந்தது? ஒரு மகாகவிஞன் அவன் தோண்டாட்டி என்ன, தோண்டினா என்ன? ஜே.ஜே.க்கு ஒரு விமர்சகன் வந்து விமர்சிச்சாப் பிறகு என்ன நடக்கும்? கனடாவில பெட்டையள் எப்பிடி இருந்தா உங்களுக்கு என்ன?
    (கேட்டாளே ஒரு கேள்வி! போட்டாளே ஒரு போடு!)

Friday, October 15, 2004

.....சுணைக்கிது

-நிரூபா (சிறுகதை)


கறுப்பு. அதில வெள்ளப் புள்ளி.
சிவப்பும் நீலமும் கலந்தது.
கறுப்பில மஞ்சள் ஊத்திவிட்டமாதிரி.
எத்தின வித விதமா. வண்ணாத்திப்பூச்சி!
பஞ்சு போல செட்டயள். அடிச்சு அடிச்சு பறக்க எவ்வளவு வடிவாக் கிடக்கு.
'வண்ணத்திப் பூச்சி வண்ணத்திப் பூச்சி பறக்கிது பார். பறக்கிது பார். அழகான செட்டை அடிக்கிது பார். அடிக்கிது பார்"
ரீச்சற சுத்திச் சுத்தி ஓடுறது. ரண்டு கையும் செட்ட. நேசறி ரீச்சர் சொல்லித் தந்த பாட்டுகளில இப்பவும் பிடிச்சது இதுதான்.
சில நேரங்களில கும்பலா வரும். எதப் பாக்கிறது எண்டுதெரியாமல் இருக்குமென்ன?
வண்ணாத்தி எண்டால் நல்ல விருப்பம். அதப் பிடிச்சு கிட்டவைச்சுப்பாக்கவேணும்.
பின் வளவில் ஒரு நாள் ரண்டு சிறகுகள கண்டனான். நீலமும் கறுப்பும் கலந்தது. உடம்பக் காணேல. என்ன நடந்துதோ தெரியாது.
உயிரோட ஒருநாளைக்கு பிடிச்சுப்பாக்கத்தான்வேணும். செட்டயளக் எடுத்துக்கொண்டுபோய் சமயப்புத்தகத்துக்குள்ள வைச்சிருக்கிறன். எந்தநாளும் பாக்கிறனான். நல்ல வடிவு. இந்தமுற தீபாவளிக்குத் தச்ச என்ர சட்டமாதிரி.

'மாவெடி மாவெடி. புளியெடி புளியெடி. மாவெடி மாவெடி. புளியெடி புளியெடி......"

சரியான கவலையா கிடக்கு. எங்க திரியிதோ? பாவம். இனிமேல் அப்பிடியெல்லாம் பிடிக்கக் கூடாது. ரண்டு கையளையும் சேத்துப்பிடிச்சு கூடுமாதிரிவைச்சுத்தான் பிடிக்கவேணும்.
அண்டைக்கு அந்தச் செந்வந்தியில ஒண்டு வந்து நிண்டிது. நல்ல வடிவானது. பிடிப்பம் எண்டு போனன். பறந்திட்டிது. எப்பிடியும் இண்டைக்கு பிடிக்கத்தான் வேணும். பின்னால ஓடினன். முருங்க மரத்தில போய் நிக்கிது. ஓடிப்போய் பிடிச்சிட்டன்.
ஒரு துண்டு செட்டமட்டும் பிஞ்சு வந்;திட்டிது. ஐயோ. பாவம். அதுக்கு நொந்திருக்குமென்ன? பாவம். சிலநேரம் செத்துப்போயிருக்குமே? பிஞ்ச செட்டயோட ஒருநாளும் வண்ணாத்திய பாக்கேல்ல. செட்ட பிரிஞ்சா செத்திடுமெண்டுதான் நினைக்கிறன். வளவு முழுதும் தேடிப் பாத்திட்டன். காணேல்ல. கவலையாக் கிடக்கும். செத்துத்தான் இருக்குமென்ன? இனிமேல் அப்பிடிப் பிடிக்கக்கூடாதென்ன? பாவம்.

'மாவெடி மாவெடி. புளியெடி புளியெடி. மாவெடி மாவெடி. புளியெடி புளியெடி......"

வேளைக்கு வேலையள முடிச்சிட்டா அம்மாவோடயே போயிடலாம்.
ஒரே இழுவயில முத்தம் கூட்டீற்றன். இனிச் சாணி தெளிக்கிறதுதான்.

சின்ன விரல்களுக்கிடையில் சாணி பிசிறித் தெறித்தது. அவளது மஞ்சள் பச்சை கலந்த பூப் பூ சட்டையிலும் சில சிதறல்கள் ஓடிவந்து ஒட்டிக்கொண்டன. வாளி நிறையத் தண்ணீர் நிரப்பியபோது கரிய நிறத்தில் வண்டுப் பிணங்கள் மிதந்தன. சிலதுகளைமட்டும் துக்கி வெளியே வீசமுடிந்தது. றொக்கட் வேகத்தில் முற்றம் முழுவதும் சாணி மழை. சரியாகக் கரைபடாமல் ஒரு இடத்தில் கட்டியாய். உயிர்தப்பிய வண்டொன்று அதன்மேல் மெல்ல மெல்ல உடலசைந்தது.
ஜீவிக்கு என்ன நடந்தது? தண்ணி அள்ளச் சென்ற பக்கத்து வீட்டு கலா யோசித்தாள்.

ராசமணி நீத்துப் பெட்டியிலிருந்து நான்காவது தடவையாக புட்டைக் கொட்டிக்கொண்டிருக்கும் போது குசினிச் சுவரோடு தேய்த்துக் கொண்டு நின்றபடி கேட்டாள் 'அம்மா! முத்தம் கூட்டி சாணியெல்லாம் தெளிச்சிட்டன். உங்களோடயே வரலாம்தானே?"
'இண்டைக்கு இவா ஒருத்தி நல்ல அடிவேண்டப் போறா. எத்தினதரமெண்டு உனக்குச் சொல்லுறது. ஒரு பிள்ளைக்குச் சொன்னா சொல்லுவளி கேட்கவேணும். விக்கிஅண்ணை மத்தியானம் வருவான். அவனோட வரலாமெண்டெல்லே சொன்னனான்."
'அதுவரைக்கும் சும்மாதானே நிக்கவேணும்" அம்மாவின்ர இளகிய மனம் எங்க போனது? கல்லு. கருங் கல்லு. இண்டைக்கு ஏன் இப்பிடி இருக்கிறா?
'நீர் சும்மாவோ நிக்கப் போறீர். என்ன அப்போத சொன்னனான்? எலுமிச்சம் மரத்தடியில குப்ப குவிஞ்சுபோய்க் கிடக்கு. பின்கோடி வளவு கூட்டவேணும்."
பேசாமல் பள்ளிக்கூடமே போயிருக்கலாம். ஏன் வீட்ட நிண்டனெண்டிருக்கு.
'எனக்கு விக்க pஅண்ணயோட வரவிருப்பமில்ல. அவர் எந்த நேரமும் குட்டுவார்"
'காலுக்குக் கீழ ரண்டு போட்டனெண்டால்தான் சரிவரும்போல கிடக்கு. அவனுக்கு வாய்க்கு வாய் காட்டினால் குட்டுவன்தானே"
பெரியாக்கள் தாங்கள் நினைச்சதைத்தான் செய்விப்பினம்.
எனக்கு விக்கி அண்ணையோட போக விருப்பமில்ல.

'மாவெடி மாவெடி புளியடி புளியடி..... இறுக்கிப் பிடிக்காத. நந்தினி. இறுக்கிப்பிடிக்காத கண்ணோகுதெண்டெல்லே சொல்லுறன். அதுதானே இவ்வளவு இறுக்கிப் பொத்திறது எண்டு பாத்தன். எப்ப கைமாத்தினனீங்கள்? நந்தினி எங்க?"

விளக்குமாற்றை இழுத்தபடி குப்பைகளிடம் போனாள் கோடிப்பக்கமாக. இனி அவர்களுடன்தான் பேச்சு. கிணத்தடியில் முகம் களுவச் சென்ற ராசமணி மகளை அதிகம் திட்டிவிட்டதாய் உணர்ந்தாள் போலும். ஆதலால் சிறிய உடன்படிக்கைக்கு வந்தாள்;.
'பின்னேரம் பிள்ளைக்கு ஐஞ்சுரூபா தருவன்."
ஐஞ்சு ரூபாய்கு கலாக்கா கடையில எத்தின இனிப்பு வேண்டலாம்? எண்ணி முடித்தபோது மனம் பறந்தது. ரண்டு கல்பணிஸ், ஒர்று}பாய்க்கு இனிப்பு. மிச்சம் நாளைக்கு. பின்னேரம் விளையாடப் போகேக்க வேண்டலாம்.
மத்தியானம்! விக்கியண்ணை! நினைத்தபோது இனிப்புக் கனவில் பறந்த மனம் முள்முருங்கையில் விழுந்தது.
ஊசி குத்தினமாதிரி நோகுது.
பனங்கொட்ட. நீட்டு நீட்டு விரலுகள். எந்தநேரமும் குட்டும். அல்லது நுள்ளும்.
நானும் விசயாவும் சேர்ந்துதான் பட்டம் வைச்சனாங்கள். நாங்கள் பட்டம் தெளிக்கேக்க பிரபாவும் ஜெகதீசும் காதுக்குள்ள ஏதோ சொல்லிச் சொல்லிச் சிரிக்கினம். அவன்கள் ரண்டுபேரும் இப்பிடித்தான். அவன்களுக்கும் பட்டம் வைச்சிருக்கிறம். முறுக்குச் சட்டி! உரிச்ச கோழி!

மத்தியானச் சாப்பாடு கடைப் பார்சல். விக்கிக்கே அந்தப் பொறுப்பு.
தகுந்தநேரத்தில் ராசமணி, விலாசய்யாவின் சுமைகளைத் தோளில் தாங்கி ஆண் மகன் இல்லாத குறையை தீர்த்துவைப்பான் விக்கி. நல்ல 'மரியாதையான பெடியன்". உதவி என்று எளிமையாகச் சொல்லிவிடமுடியாது. கடமையாகக் கருதினான். ஏன் இவனுக்கு இவ்வளவு அக்கறை என்றுதான் கலா மண்டையைப் போட்டுடைத்தாள். அவன் சொந்தக் காரணாக இருக்கலாம். இல்லாமற் போகலாம். எனக்கேன் தேவையில்லாத வம்பு? கலா யோசித்தாளோ இல்லையோ ஊருக்குள் ஆங்காங்கே வம்பு நடந்துகொண்டுதானே இருந்தது.
ராசமணி படலையைச் சாத்தும் சத்தம் மெல்லிதாகப் பின்வளவில் கேட்டது. மனம் இன்னமும் முருங்கையில் கிடந்தது. ஐPவி யோசித்து ஒரு வழி கண்டுபிடித்தாள். இது மனதிற்கு திருப்பதியானதாக இருந்தது.

'முருகனே நான் வகுப்பில இந்தமுறை முதலாம் பிள்ளையா வராட்டிலும் பறவாயில்ல. அந்த வேண்டுதல அடுத்த முறை பலிக்கச்செய்து தா. புதுசா இப்ப ஒண்டு கேக்கிறன். இண்டைக்கு விக்கி அண்ணை வரக்கூடாது. நான் நடந்தெண்டாலும் தோட்டத்துக்குப் போவன்."
விளக்குமாறு ஒவென்ற சத்தத்துடன் விழுந்ததுகூட அறியாமல் இரண்டு கைகiயும் கூப்பி முருகனிடம் சென்றுவிட்டாள்.

ஒவ்வொரு வருடத்திற்கான முதலாம் பிள்ளை வேண்டுகோள்! மாற்றப்பட்டுவிட்டது. கடவுள் கோவிச்சுக் கொள்வாரோ? பயமாக இருந்தது. ஆனாலும் முள்ளில் சிக்கிய மனம் மீண்டும் பக்குவமாக இருப்பிடம் வந்துசேர்ந்ததே! ஊசி நோவும் மறைந்துவிட்டது.

மொனிற்ரர் கொப்பியின் கிளிந்த முன்மட்டை, தேயிலைச் சாயம் பூசப்பட்ட கமலகாசன் முகம், அவன் தோளில் கைபோட்டிருந்த ஸ்ரீதேவியின் பாதி கிளிக்கப்பட்ட மார்பு, மூக்குடைந்தும், நொருக்கப்பட்டதுமான சில ஊர் முட்டைக்கோதுகள், முழுச்சாறும் பிழிந்தெடுக்கப்பட்டபின் வீசப்பட்ட தேசிக்காய்த் தோல்கள் மாவிடமிருந்து பிரிய மனமில்லா கடுதாசிப் பைத்துண்டுகள். விளக்குமாற்றினால் தட்டி எடுத்தாள். வரமறுத்தவைகளை சின்ன விரல்கொண்டு பிடுங்கி எடுத்தாள். தண்ணீருடனும் மண்ணுடனும் பல நாட்கள் சங்கமித்திருந்தவைகளல்லவா? புpரிவு வேதனையில் அழுதவாறு குவிந்தன கடகத்தினுள். அவர்களுக்கு பின் வளவில் பெரிய கிடங்கில் இறுதியாக அடக்கம் நடந்தது.

உருளைக்கிழங்கு பிடுங்கிற நாள் எப்பவருமெண்டு பாத்திருப்பம். அந்தநாள் பெரிய கொண்டாட்டம்தான். கடைசியில வெட்டுப்பட்ட கிழங்குகள் பொறுக்கத்தான் விடுவினம்.
மத்தியானம் பார்சல் சாப்பாடு. அம்மா எவ்வளவு ருசியாச் சமச்சாலும் பார்சல் சாப்பாடுபோல வராது. பின்னேரம் வடை. வாப்பன். குழையள் குவிஞ்சிருக்கும். மலை போல. அதில ஏறி இருந்தனெண்டா எல்லாரும் வீட்டபோகேக்கதான் இறங்குவன். நான் விளையாடிக் கொண்டிருக்கிறதப் பாத்திட்டு அப்பா சொல்லுவார் 'ஆட்டுக்குப் புல்லுக் கொஞ்சம் பிடுங்கன்" எண்டு. எரிச்சல்தான் வரும். பெரியாக்கள் தாங்கள் நினைச்சபடிதான் செய்விப்பினம்.
ஓடி ஓடிப் பிடுங்கிறன். வேளைக்குப் பிடிங்கினனெண்டால்தான் விளையாடலாம். இன்னுங் கொஞ்சமெண்டா ஒரு கடகம் நிறம்பிடும். ஆரது? ஏங்கிப் போனன். நிமிந்து பாக்கிறன். நிக்கிது. பனங்கொட்ட. து}க்கிக் கட்டின சாரத்தோட.
'காலில முள்ளுக் குத்தீட்டிது. ஊசி ஒண்டு தாறியே."
களட்டிக் குடுப்பன்தானே. அதுக்குள்ள தானே வந்து களட்டிறார்.

'மாவெடி மாவெடி. புளியெடி புளியெடி. மாவெடி மாவெடி. புளியெடி புளியெடி......"


பசிக்கிது. வெள்ளப் புட்டும் சம்பலும் நல்ல விருப்பம். கால் மேல் கழுவீட்டுவந்து பாக்கிறன். போனவருசம் தீபாவளிக்குத் தச்ச சட்டையை எடுத்துவைக்கச் சொன்னனான். இந்தக் கட்டைப் பாவாடசட்டையை எடுத்துவைச்சிட்டுப் போயிருக்கிறா.
வெள்ளப் புட்டோடு கலந்த சம்பல் இவள் காலையில் அணிந்திருந்த பூப்புச் சட்டைமாதிரி தெரிந்தது. சின்னச் சின்ன விரல்கள் இறுக்கிபிடிக்க அதுகள் உள்ளே தள்ளப்பட்டுக்கொண்டிருந்தன. விக்கி அண்ணை வரமாட்டான். முருகன் எப்பிடியும் வேண்டுதலை நிறைவேற்றிவிடுவார். ஒரே ஒரு முறையைத் தவிர ஏனைய வேண்டுகோள்களை இதுவரையில் முருகன் செய்து முடித்திருக்கிறார்.
அந்த ஒரு முறை குளிக்காமல் கும்பிட்டதாலதான்.

அப்பவே சொன்னனான் வெள்ளப்புட்டெண்டால் விருப்பமெண்டு. இன்னுமொரு கோப்ப போட்டுச் சாப்பிடுவம்.
படலை திறந்து சத்தம் கேட்கிது. ஐயோ! வந்திட்டார். து}க்கிக் கட்டிய சாரம். நெடுகலும் இப்பிடித்தான் வரும். பெட்டி பெட்டி. அதுக்குக்கீழ ரண்டு பனமரம். பாவக்காய்க் கொட்டையள் மாதிரியெல்லே பனமரத்தில அடையாளங்கள். அதுக்கு செருப்பு வேற. முருங்கக்காய்மாதிரி விரலுகள். அதில ஒரு நாளைக்கு பாம்பு கொத்தவேணும். அப்பதான் சரி. பனங்கொட்ட. நாக பாம்புதான் கொத்தவேணும்.
குசினிக்குள்ளதான் வாறார். தண்ணி எத்தின முடர்குடிக்கிறன். புட்டு கீழ இறங்கிதில்ல. ஐயோ. அம்மா. நெஞ்செல்லாம் எதோ செய்யிது. மூச்சடைக்கிது. தண்ணி குடிக்கிறன்.....கீழ இறங்குதேயில்ல.

'காத்தடிக்கிது. புயலடிக்கிது. அக்கக்கா கதவத்திற."
'இப்பதான் பிள்ளைக்குக் குளிக்கவாத்துக் கொண்டிருக்கிறன்"

நாலரைக்கு எல்லாரும் கஜன் வீட்டில சந்திக்கிறது எண்டுதான் சொன்னவன். விசயா, சோதி, குமரன், ஜெகதீஸ்வரன், பிரபா எல்லாரும் வருவினமாம். பந்தெடுத்துக்குடுத்து உதவிசெய்து எவ்வளவு நாளுக்குப் பிறது இப்பதான் தாச்சியில சேக்கிறதெண்டு சொன்னவங்கள். நேற்றுப் போகேல்ல எண்டு கோபமாம். இண்டைக்கும் வராட்டி இனிமேல் சேர்க்கவே மாட்டினமாம். பிரபா வந்து நேற்றுச் சொல்லீற்றுப் போனவன். அவன் சொன்னால் அப்பிடியேதான் செய்வான்.

கோடிவளவில் பிலா இலைகள் உதிர்ந்து கிடந்தன. ஒரு கிழமைக்குள் திரும்பவும் இவ்வளவு குப்பைகள். ராசமணியும் விலாசய்யாவும் தோட்டவேலைகளில் ஓடித் திரிந்தனர். இந்த முறை பேவிளைச்சலாம் எண்டு கலாக்கா யாரிடமோ வாயைப்பிளந்ததை ஜீவி கேட்டாள். அக்காமார்களுக்கு சோதினை நெருங்கிவிட்டது. காலை மாலையென்று மொனிற்ரர் கொப்பிகளுக்குள் கிடந்தார்கள். பஸ்ஸில் போய்ப் படிப்பவர்களல்லவா? பெரிய படிப்புக்காரர்தான்.
கோடிவளவ இந்த முறையும் நான்தான் கூட்டவேணுமாம். ஐஞ்சு ரூபா தருவியளோ எண்டு கேட்டன். காலுக்குக் கீழ ரண்டுதான் தருவன் எண்டா. இப்பிடித்தான் சொல்லுவா ஆனா பிறக தருவா.
ஆரவோ நிண்ட மாதிரிக் கிடந்திது. ஏங்கீட்டன். நிண்டமாதிரித்தான் கிடக்கு. பிறகு காணேல்ல. சொறிநாய் மாதிரித்தான் கிடந்திது. பயந்திட்டன்.

மூத்திரம் வாறமாதிரிக் கிடக்கு. போயிருந்தால் வருகிதில்லை. எரியிது. திரும்பவும் ஒருக்கால் கழுவுவம். தண்ணீக்குள்ளயே கிடக்கவேணும் போல இருக்கு. கிணறு கிட்ட இருந்தால் இறங்கி நிக்கலாம். கரன் வீட்ட கிடக்கிற தொட்டி மாதிரி இருந்தா எவ்வளவு நல்லம்?

'ஜயோ எரியிது. ஜயோ எரியிது." ஜீவனா இரவில் கத்தினாள். ராசமணி நிறையச் சீனி போட்டு விரலால் கரைத்து ஒரு ரம்ளரில் தண்ணி கொடுத்தாள். 'சலக்கடுப்பு. குளிக்கிறதுக்குப் பஞ்சி"

எட்டு நாளாச்சு. ஒன்றை விட்ட ஒரு நாளாக ஜீவனா ஒன்டு ரண்டு என்று இருபத்தைந்து வரும்வரை எண்ண கிணற்றடியில் விலாசய்யா சூடுபறக்க தலைக்கு ஊற்றிவிட்டார். சூடு பறந்தது.

எரியிறதுதான் நிக்குதில்ல. சில நேரம் ஊசிகுத்திறமாதிரி. கொஞ்ச நேரம் அமத்திப் பிடிப்பம். சுகமாக்கிடக்கு.
'என்ன ஜீவி விளையாடப் போகேல்லையே?"
தண்ணி அள்ளப் போகேக்க கலாக்கா ஏதாவது கவனிச்சிருப்பபாவே? எரிவு நிண்டிட்டிதெண்டு அம்மாவுக்குச் சொல்லிப் போட்டன். 'கொக்காளவைக்கும் சலக்கடுப்பு வாறதுதான். உனக்குமட்டும் ஒரு கிழமையா நிக்கிதில்லை. என்ன இது புதினமாக்கிடக்கிது."

'காத்தடிக்கிது. புயலடிக்கிது. அக்கக்கா கதவத்திற."
"இப்பதான் பிள்ளைக்குச் சாப்பாடு தீத்துறன்"

நான் பின்னுக்கு ஏறுறன் எண்டுதான் சொன்னனான். சாப்பாடு ஏத்தவேணும் எண்டு முன்னுக் ஏறச் சொல்லீற்ரார். முந்தியும் ஒருநாள் இப்பிடித்தான். பனங்கொட்டை. பெரியாக்கள் தாங்கள் நினைச்சபடிதான் செய்வினம். பாறில இருந்து கனக்க நேரம் ஓடினால் குண்டி வெட்டும். அப்பான்ர சயிக்கிளில பின்னுக்கிருந்துதான் போறனான்.

குறுக்கு வளியால வேளைக்குப் போயிடலாம். இவர் சுத்திச் சுத்தித்தான் ஓடுவார். பனையன். அந்தத் தென்னந்தோட்டம் இருக்கெல்லே அது தாண்டி பிறகு பெரியப்பாக்களின்ர தோட்டமடியால போய். இவ்வளவு ஆறுதலா ஆராவது சயிக்கிள் ஓடுவினமே?
விடுங்கோ விக்கி அண்ணை.
எனக்குப் பயமாக் கிடக்கு. நான் வேண்டாம் வேண்டாம் எண்டு சொல்லத்தான் பாவாட ஊசியெல்லாம் களட்டிப்போட்டார். ஆரேன் வரேக்க வெளியால கையை எடுக்கிறார். இது கெட்டபழக்கம். ஆரேன் வரமாட்டினமோ? சொல்லச் சொல்லக் கேக்கிறார் இல்லியே. இது கெட்டபழக்கம். விக்கிஅண்ணை. நிகம் கீறிது. நோகுது விக்கி அண்ணை. கையை எடுங்கோ. எனக்கு அழுகதான் வருகிது. இதிலும்பாக்க பள்ளிக்கூடமே போயிருக்கலாம். முந்தியும் ஒருநாள் இப்பிடித்தான். எனக்கு சரியான அழுகதான் வருகிது.

'காத்தடிக்கிது. புயலடிக்கிது. அக்கக்கா கதவத்திற."
'இப்பதான் பிள்ளைய நித்திரையாக்கிறன்"

கலாக்கா ஒவ்வொரு செவ்வாயும் துர்க்கை அம்மனுக்குப் போட்டுவாறா. தன்ர புருசனோட சேரவேணுமெண்டுதான் வேண்டுதலாம். அம்மாவும் விரதம் இருக்கிறவா. வேண்டுதல மாத்தினது முருகனுக்குப் பிடிக்காமல் இருக்கலாம். சரஸ்வதி பூசைக்கு விரதம் இருக்கிறன் எண்டு வேண்டியிருக்கலாம். முருகன் கோவிச்சிருக்கமாட்டார்.

நேற்றும் விக்கியண்ணை அங்க வந்தவராம். நான் போமாட்டன். நாங்கள் விளையாடிக்கொண்டிருக்கேக்குள்ள நெடுகலும் வந்து சொறிதேச்சுக்கொண்டிருப்பார். சொறிநாய். ஒருநாள் இப்பிடிச் சொன்னதுக்கு கன்னத்தப்பொத்தி தந்திட்டிது. பத்துநாள் அவரோட கதைக்கேல்ல. 'கோவங் கோவங் கோவம். கண்ணக்கட்டிக் கோவம். செத்தாலும் பாவம். நடுச்சாமத்தில பாம்புவந்து கொத்தும்" பிறகு வலிய வலிய வந்து கதைக்சிது.
தாச்சி விளையாட்டில இனிமேல் என்னச் சேர்க்கவும்மாட்டிம்தானே. பிரபா விழுந்து நேற்றுக் கால் தேச்சிட்டுதாம்.

வீடெல்லாம் இண்டைக்கு நான் தான் கூட்டினான். கோடியும் கூட்டியள்ளீற்றன். இப்ப எரிவு கொஞ்சம் நிண்டமாதிரிக் கிடக்கு. மூத்திரம்பெய்யேக்குள்ள மட்டும்தான் எரியிது.

இவளுக்கு என்னதான் நடந்தது? கலா மட்டுமல்ல மொனிற்ரர் கொப்பிக்குள் கிடந்த அக்காமாரும் கண்களை வெளியெடுத்து அதிசயமாக பார்த்துக் கொண்டனர். போய்ஸ் பஸ் கேர்ள்ஸ் பஸ்சை முந்தியதா அல்லது நேற்றுப் போலவே தோற்றுவிட்டதா என்று அக்காமாரிடம் ஒட்டுக்கேட்டு அம்மாவுக்குக் கோழ் சோல்லும் ஜீவனாவுக்குத்தான் என்ன நடந்தது? நீண்ட நாட்களாக அவர்கள் ஆராயவில்லை. கிடைத்த சுதந்திரத்தை கொண்டு பெடியள்பற்றி சுவைத்தார்கள். சோதனைக்குப் படிக்கும் பிள்ளைகளுக்கு ஊர்முட்டை வாங்கியல்லோ கை உளை உளைய அடித்தாள் ராசமணி முட்டைக்கோப்பி!

மாதுளம்மரம். பலாவுக்குப் பக்கத்தில் நின்றது. இலைகள் மஞ்சள் அடித்துவிட்டிருந்தது. 'பட்டுப்போடும் போல கிடக்கு" எண்டு விலாசய்யா கவலைப்பட்டார். ஜீவியும்தான். இன்றும் ஒரு வாளி தண்ணீர் ஊற்றினாள்.
கறுப்பு நிறத்தில் சிகப்புப் புள்ளிகள். ஒரு வண்ணத்துப் பூச்சி. மாதுளையில் வந்து ஒய்யாரமாக அமர்ந்து கொண்டது. அது தன்னையே பார்ப்பதாக உணர்ந்தாள்.

மசுக்குட்டியிலிருந்துதான் வண்ணத்துப்ப10ச்சி வருகிறது என்பது அவளுக்கு அண்மையில் கிடைத்த செய்தி. பிரபா சொன்னது.
மசுக்குட்டி! முருங்கையில் அப்பிக்கிடக்கும். பார்த்துவிட்டாலே பத்து அடி தள்ளித்தான் போவாள்.
சனியன் பிடிச்சதுகள். என்னெண்டுதெரியாது ஒண்டு வெள்ளச் சட்டயால ஊர்ந்து களுத்தில வந்து கடிச்சிட்டிது. மண்ணெண்ணையைக் கொண்டுபோய் ஊத்திவிட்டன்.
வண்ணாத்திப்பூச்சிக்கும் மயிர்; இருக்குமே? அதுவும் சுணைக்குமே? தொட்டால் பட்டுப்போல. பாவம் அந்த வண்ணாத்திக்கு என்ன நடந்திதோ? சில நேரம் பிடுங்குப்பட்ட செட்டத்துண்டு வளந்திருக்கும்.

ஆர்வமுடன் இரண்டு கைகளையும் கோர்த்து வளைத்துப் பிடித்தபடி நெருங்கியபோதுதான் அது நிகழ்ந்தது.
இப்பிடித்தான் நெடுகலும் பறந்திடிது.

'காத்தடிக்கிது. புயலடிக்கிது. மரங்களெல்லாம் சுழண்டு ஆடுது. அக்கக்கா கதவத்திற."
தகர வீட்டுக்குள் சத்தம் இல்லை. தீடிரென்று நந்தினி திறந்துகொண்டு ஓடிவந்தாள். 'ஐயோ" எல்லோரும் தலைதெறிக்க ஓடினார்கள். 'பிடிச்சிட்டன். ஜீவியைப் பிடிச்சிட்டன்."

தோட்டவேலைகள் இப்போதைக்கு முடிந்தபாடில்லை. உருளைக் கிழங்கும், வெங்காயமும் பிடுங்கிய நாளிலிருந்து தொடர்ந்து தோட்டத்தில் ஏராளம் வேலைகள். சமையல் சாப்பாடுகள்;, குளிப்புமுழுக்குகள் தவிர்ந்து ஏனை நேரங்களை பெரும்பாலும் தோட்டத்திலேயே தம்பதியினர் செலவழித்தனர். முட்டைக்கோப்பியில் விழித்து காலை ரயூசன், பாடசாலை, பின்னேர ரியூசன் முடிந்து எட்டுமணியாகும் அக்காமார் வீடுவந்துசேர. இருவரும் கடினமாகப் படிப்பதாகத்தான் ராசமணி, விலரசய்யா மட்டுமல்ல கலாவும் நம்பினாள்.

தாச்சியில சேர்க்கவும் மாட்டாங்கள். போகவும் ஏலாதுதானே. ஒருக்கா வேலிக்குள்ளால பாத்தனான். அந்தச் சொறிநாய் நிக்கிது. போமாட்டன். கோவங் கோவங் கோவம் கண்ணக் கட்டிக்கோவம். செத்தாலும் பாவம் நடுச்சாமத்தில நாகபாம்பு வந்து கொத்தும். நாகபாம்பு போய்க் கொத்தத்தான் வேணும்.
அக்கக்கா அலுத்துப்போச்சு. எப்பவும் நான்தான் பிடிபடுறது. என்னால மற்றவயள்மாதிரி ஓடேலாது. அதுக்கு நான் என்ன செய்யிறது?

ஒருநாள் பொழுது பட்டுக்கொண்டிருந்தது...

இண்டைக்கு நட்சத்திரம் எண்ணலாம். இன்னுங் கொஞ்ச நேரம் போகவேணும். அப்பதான் இருட்டில வடிவாத் தெரியும். வெள்ளி நட்சத்திரம். வால் நட்சத்திரம். குட்டி நட்சத்திரம். குடும்ப நட்சத்திரம்.
தாச்சிச் சத்தம் து}ரத்தில் கேட்டது. பிரபாவின் சத்தம்தான். யாரோ அளாப்பியாக்கப்பட்டான்.
சிமிளியை பக்குவமாகத் துடைத்துவைத்துவிட்டு மாட்டுக்குப் புல்லுப் போடுவதற்காக கடகத்துடன் கொட்டில்பக்கம் வந்தாள். காய்ந்து போன புல்லுதான். ஆனால் இந்த மாடு என்னவென்றாலும் தின்னும்.

'ஜீவி இப்ப நீ ஏன் விளையாட வாறேல்ல?" விக்கியன் வந்த சத்தம் கூடக் கேட்கவில்லை.
கடகத்தைப் போட்டுவிட்டு ஓடுவதற்குமுன்......
விடுங்கோ..... விக்கி அண்ணை.....விடுங்கோ....
இறுக்கமான மாட்டுப்பிடி. இல்லையில்லை. ஐயோ! இது மோட்டுப்பிடி. இம்மியளவும் அசையமுடியவில்லை ஜீவியால். பனைமரத்திற்கு இடித்துப்பார்த்தது சின்னக் கால்கள். அசையவேயில்லை.
விடடா. விடு. என்ன இப்ப விடு. பனங்கொட்டை. சொறி நாய். இப்ப என்ன விடு. நாயே.

அவள் அள அள பூப் பூ யங்கியை கீழேவிழுத்திவிட்டு றோக்கற்வேகத்தில் மசுக்குட்டி....
0


நன்றி:
நிரூபா
(2000)
பெண்கள் சந்திப்பு மலர்' என்றுதான் நினைக்கிறேன், வெளிவந்த இதழ் மறந்துவிட்டது.

Monday, October 11, 2004

அந்த இன்னொரு பெண்ணைப் பற்றி... -6-

கள்ளப் புணர்ச்சி ஒன்று
ஊரறிந்துவிட்டது.
சந்திப்பின் மறைவிடங்களில்
தேம்பி அழுகிறது
அவர்கள் விட்டுச் சென்ற
அன்பு.
-மகுடேசுவரன்
(தொகுப்பு: ‘யாரோ ஒருத்தியின் நடனம்”)

நீங்கள் ஒருநாள் சாதாரணமாய்க் கடந்து சென்ற அனுபங்களாக அவை இருக்கலாம். அந்த அனுபவங்களில் வந்து சென்ற சொற்களாக அது இருக்கலாம். ஆனால் என்றைக்கோ நீங்கள் தட்டிச் சென்றிருக்கக்கூடிய -உங்களுக்குப்- பெறுமானம் அற்ற விடயம் அது!

எனது அப்பம்மாவோடு வசிக்கும் காலங்கள் எனக்கு வாய்த்தன. அவவிற்கு பிடித்தமான நாடகமொன்று: ‘மெட்டி ஒலி’. ‘மெட்டி, மெட்டி மெட்டி ஒலி- ஒரு குலமகள் வீட்டுக்குள்ள கொண்டு வரும் சீதனம் மெட்டி, மெட்டி, மெட்டி ஒலிதான்” என பாடலிலேயே ‘மங்களகரமான” விடயங்களைக்கொண்ட வெகுஜனங்களைக் கவர்ந்த ஒரு மெகாத் தொ...டர். அதை அவ வெகு ஆர்வமாப் பார்ப்பா. அப்படிப் பாக்கேக்குள்ள எப்பவும் அந்த நாடகத்தின் பிரதான பாத்திரம் மாணிக்கத்தோட ‘தொடுப்பு” வச்சிருக்கிற பெண்ணை வையோ வையெண்டு வைவா. நாடகம் போய்க்கொண்டிருக்கேக்குள்ளையே தொடர்ந்து நடக்கும் அது. இந்த நாடகத்தைத் தொடர்ந்திருந்து பாக்கிற அளவில்ல என்ர ஆர்வம், போக வரேக்குள்ள பாப்பன். அப்பிடி ஒருக்கா நாடகம் நடந்தெண்டு இருக்கிற இடத்த நான் கடக்கேக்குள்ள பாத்தா அப்பம்மா தொலைக்காட்சிக்குக் கிட்டவா நிண்டு அந்த “தொடுப்பு” வச்சிருக்கிற பெண்ணோட முகத்துக்கு நேர கையைக் காட்டிக் காட்டி “தோறை, தோறை” இன்ன பிறவாய் கடுமையாத் திட்டிக்கொண்டிருந்தா...
என்னோட யோசினையெல்லாம் இப்படியாய் இருந்தது: இந்தப் அப்பம்மா ஏன் சம்மந்தப்பட்ட ஆணை விட்டிட்டு அந்தப் பெண்ணைத் திட்டுறா?

இரண்டு மனைவியர் அல்லது அதற்கு மேலவும் பெண்களைக் கொண்டவர் கதைகள் எமக்குப் புதிதல்ல. பிடித்தமான எழுத்தாளர்கள் தொடங்கி சினிமா இயக்குநர்கள் வரை தெரியும் கதைகள். எமது தேசங்களிலும் பிற "முன்னேறாத" எனப்படுகிற தேசங்களில்தான் இவை "மனைவிகள்" அல்லது வப்பாட்டிகள் என "ஏற்றுக்"கொள்ளப்பட்டு நடைமுறையில் உள்ளது. மேற்குலகங்களில் இது ஒரு ("கள்ளத்") தொடர்புதான்.
இதில் அறா ீதியான பார்வை என்ன? ஒரு பெண் தனது மரபார்ந்த எண்ணங்களோடு மணமுடிக்கிறாள்; ஓரு குடும்பத்திற்கான வாரிசு மற்று
ம் குடும்ப வேலைகளை செய்வதுாடாக சொத்துடமை மற்றும் குடும்பத்தை உருவாக்குகிறாள். அப்போது அவளது கணவனுக்கு இன்னொரு பெண் தொடர்பு. அந்தக் கணவனால் முதலாவது பெண்ணை விட முடிவதில்லை. ஒரு சாதாரணமான, பிற்போக்கான, ஆண் மகனுக்க மட்டுமல்ல மிகவும் அசாதாரணமான சிந்தனைகளையுடைய ஒரு முற்போக்கான ஆண் மகனுக்குங்கூட. ஏனெனில் ஒரு குடும்பத்தைத் தாங்க, சமைத்துப் போட, "ஏற்பாடு" செய்யப்பட்ட ஒரு பெண் - அவளை 'இழக்க' அவர்கள் விரும்புவதேயில்லை.
இதில் மிகப் பெரிய கொடுமை தமது, இன்னொரு பெண்மீதான “காதலை” அல்லது ‘இயல்பாக வரக்கூடிய ப்ரியத்தை” மற்றப் பெண் “புரிந்துகொள்ள” வேண்டுமென நினைப்பது? ஓரு முற்போக்கானவனுக்கு இருக்கக்கூடிய அதே கொள்கைகள் கோட்பாடுகள், ஒரு பிற்போக்கான அல்லது மரபான சிந்தனையுடைய பெண்ணுக்கு இருந்தால் அதை மதிக்க வேண்டுமா வேண்டாமா?
இரண்டாவது மனைவியென்கிற, பல காதலிகளில் ஒருத்தி என்கிற, அங்கீகாரங்களிலும் இல்லை ஒரு தனி மனுசியின் வாழ்வு, அல்லது கள்ளத் தொடர்புகள் என்கிற துாற்றதல்களிலும் இல்லை அவளின் வாழ்வு. மாறாக, அவமானத்தில், குற்ற உணர்ச்சிகளில், தாழ்த்தப்பட்ட சுயமதிப்பில் தங்குகிறது அது.

ஆண்களும் பெண்களுமான நீங்கள் எல்லோரும்போலத்தான் நானும், அந்த இன்னொரு பெண்ணைப் பற்றி எனக்கு பெரிதாய் மனப்பதிவு இல்லை. என்னுடைய சொற்கள், நடத்தைகள் எல்லாமே ஆளப்பட்ட ஆண்களின் அதிகாரத்தின் சொல்லாடல்கள்தான். அதனால்தானோ என்னவோ, அந்த இன்னொரு பெண்ணைப் பற்றி எனக்கு பெரிதாய் மனப்பதிவு இல்லை. டயானா போன்ற சார்ல்ஸிலும் பல ஆண்டுகள் குறைந்த, மிக மிக இளமையான, அழகான சிறு பெண்ணுடன் ஒப்பிடுகையில் சார்ல்ஸிலும் பல வயதுகள் கூடிய, மிக முக்கியமாக "கன்னி" அல்லாத, இளமையின் பூச்சே படாத, மினுமினுப்பை உடலில் இழந்த, கன்னம் உள்ளே போன, அந்தப் பெண்ணில் யாருக்குத்தான் சிறந்த மனப்பதிவு ஏற்படும்? எம்மிடையே புழங்கிவரும் பல வாசகங்கள்போல "கிளிபோல பெண்டாட்டி இருந்தாலும் குரங்குபோல ஒன்று தேடும்" ஆண் மனதின் அடையாளமாகத்தான் கமீலா பார்க்கரை என்னால்ப் பார்க்க முடிந்தது. டயானாவின் துயரமான மனவாழ்விற்கு முழுமுதற் பொறுப்பாளனான சார்ல்ஸைவிட வசைபாட நேர்ந்தது கமீலாவைத்தான், மக்கள் மற்றும் ஊடகங்கள் உட்பட.
மிகவும் கலாச்சாரவாதிகளென மனதில் பதிந்த பிரித்தானிய மக்கள் பொது மேடையில் கமீலாவை எப்படி எதிர்கொள்வார்கள் என்றொரு எண்ணம் எனக்கு எப்போதுமே எழுந்ததில்லை, கமீலாவைப்பற்றி ஒரு பொருட்டே இல்லாதபோது அந்தத் திக்கில் மனம் ஏன் செல்லப் போகிறது...? மாறாக, ஊடகங்கள் தந்த, ஆரம்பத்தில் பெண்களுடன் மிகவும் கூச்சமாக இருந்த சார்ள்சிற்கு மன்மதக்கலையைக் கற்றுக்கொடுக்க அரண்மனையால் ஏற்பாடு செய்யப்பட்ட பெண் (அதுவும் அவரது கணவனின் ஒப்புதலோடு) போன்ற 'கிளுகிளுப்பான’ பிம்பங்களில்தான் மனம் நின்றது. சமீபத்தில் நான் பார்த்த ஒரு தொலைக்காட்சி நிகழ்ச்சி கமீலாவைப்பற்றிய பார்வையையே மாற்றிவிட்டது.

பொது இடங்களில் கமீலாவைக் காணும்போது மக்கள் எச்சிலால் துப்புவார்களாம். மோசமான வாசகங்களால் துாற்றுவார்களாம். இப்போதுதான் கமீலாவின் மீதான துவேசங்கள் "சற்றே" ஓய்ந்திருக்கின்றன என்றார் அந்தச் செய்தியாளர். அந்த "சற்றே" என்ற சொல் மிகவும் துன்புறுத்தி விட்டது.
உண்மையில் அப்படியொரு அவமானப்படுத்தலை பாரம்பர்யம்(?!) மிக்க பிரித்தானிய சமூகத்தினர் முடிக்குரிய இளவரசர் சார்ல்ஸிற்கு செய்திருக்கவே மாட்டார்கள், மாறாக பூங்கொத்துகளுடனும் சிலிர்ப்புடனும் “அவருடன்” கைகுலுக்கினர், படம் பிடித்தனர், ஆனால் அந்த இன்னொரு பெண்ணோ அவர்களது வெறுப்பிற்கு ஆளாக வேண்டி இருந்தது!
எனது அப்பம்மாவோ தலைமுறைகள் பின் தங்கியவர். ஒருவனையே கொன்றிருந்த(!) படியால் ஒரு ‘குலமகள்.’ வேசிகளையும் இரண்டாவது பெண்களையும் வைப்பாட்டிகளையும் தெருவில் வைத்து கேள்விகேட்க, கல்லெறிய, படுக்கைக்கு அழைக்க, யாரிடமும் அனுமதி தேவையற்ற “பின்தங்கிய” கண்டத்தைச் சேர்ந்தவர். பிரித்தானியாவோ ஒரு ‘வளர்ந்த’ நாடு.

உலகத்தின் நியாயங்களைப் பற்றி எனக்குப் பெரிதாய் ஒன்றும் ஏமாற்றங்கள் இல்லை, ஆனால் இந்த இரண்டாவது நபர்களைப்பறறி வாசிப்பவர்கள் ஏதாவது நினையுங்களேன்! குறைந்தபட்சம் துப்பாமல் ஆவது இருப்பீர்கள் அல்லவா!

IF YOU FORGET ME - Pablo Neruda

I want you to know

one thing.

You know how this is:

if I look

at the crystal moon, at the red branch

of the slow autumn at my window,

if I touch

near the fire

the impalpable ash

or the wrinkled body of the log,

everything carries me to you,

as is everything that exists,

aromas, light, metals,

were little boats that sail

toward those isles of yours that wait for me.

Well, now,

if little by little you stop loving me

I shall stop loving you little by little.

If suddenly

you forget me

do not look for me,

for I shall already have forgotten you.

If you think it long and mad,

the wind of banners

that passes through my lfie,

and you decide

to leave me at the shore

of the heart where I have roots,

remember

that on that day,

at that hour,

I sall lift my arms

and my roots will set off

to seek another land.

But

if each day,

each hour,

you feel that you are destined for me

with implacable sweetness,

if each day a flower

climbs up to your lips to seek me,

ah my love, ah my own,

in me all that fire is repeated,

in me nothing is extinguished or forgotten,

my love feeds on your love, beloved,

and as long as you live it will be in your arms

without leaving mine.

0

Saturday, October 09, 2004

எவளாவது ஒருத்...'தீ' கிடைப்பாளா? -5-

காத்திருப்புசார் பாடல்கள்



என் தமிழ் ஆசிரியர் மிகச் சுவாரசியமாகத் படிப்பிப்பார். இளைஞர்களுக்குப் பிடிக்கும்விதமாக இடையிடையே 'தமிழ்க் கவிஞர்களது' கவிதைகளையும் எடுத்துச் சுவைப் படச் சொல்லுவார். "...பொறுத்துப் பொறுத்தப் பார்த்தார் கவிஞன். ஒரு பெண்ணும் கிடைக்கேல்ல. காதலிக்க முடியேல்ல. கடைசியில பொறுமையிழந்துபோய்க் கேட்கிறான்: '...(எனக்கு) எவளாவது ஒருத்...தீ கிடைப்பாளா' எண்டு. அதாவது இதொரு குறியீட்டுக் கவிதைபோல... 'தீ' என்றது இளைஞன்ர மோகத்...தீயைக் காட்டுது"
இவர் சொல்லி முடிக்கையில் மாணவர் முகங்களில் சிரிப்பு. நவீன இலக்கியம், நவீன கவிஞர்கள் என அறிமுகமுடைய எனக்கு அன்று அந்தக் கவிஞரின் பெயரும் பதியவில்லை, அது 'கவிதை' என்கிற மனப்பதிவும் இல்லை; எனினும் அடிக்கடி அந்த வரிகள் மட்டும் வந்து சிறு புன்னகை தரும்.
எல்லோருக்கும் அப்படி ஒரு கணம் இருந்திற்று இருந்திற்று வாறதுதான். ஆண்களுக்கு எவளாவது ஒருத்..தீ என்றால், பெண்களுக்கும் 'எவனாவது ஒருத்..தன்' படிக்கும் காலத்தில், இளம் வயதில் (அதன் பின்புங்கூட தனிமையில் இருப்பவர்களுக்கு) துணை தேடலும் ஏக்கமும் வாழ்வில் ஒரு பகுதிகள்தானே...
அந்தவகையில் ஏராளம் பாடல்கள் அவரவர் மொழிகளில் எல்லோருக்குமே அவர்களது 'காலங்களுக்குரிய' பாடல்களாக இருக்கும். அதனாற்தானோ என்னமோ எந்தக் காலத்துப் பாடலென்றாலும் அதில் இலகுவாய் லயிக்கவும் உருகவும் எளிதாய் முடிகிறது. “இந்த மாளிகை வசந்தமாளிகை” அல்லது “ரோஜா மலரே! ராஜகுமாரி!" அல்லது "காலங்களில் அவள் வசந்தம்" போன்று அழகான வரிகளையுடைய இனிய குரலையுடைய பாடல்கள் அந்தக் கவிதையைப்போலவே மனதுக்குள் மகிழ்வைக் கொண்டு வரும்.
X எப்வ்.எம் இல் யாரும் தமக்குரிய பாடல்களை கெசற்றில் தள்ளி விடாதவரை... அந்தப் பாடல்கள் punk, rock n’ roll, reggae, r & b இதில் எதுவோ போய்க் கொண்டிருக்கும். அதிற் போகிற பாடல்கள் சந்தர்ப்பங்களுக்கேற்ப மனதை உருக்கிவிடும். பிறகு பார்த்தால் சாதாரணமானவையாய்க்கூடப் படும். நினைத்தபடியிருந்த வரிகள் வேறாக (இரண்டாவது மொழியல்லவா?), எனினும் உணர்வு கிட்டத்தட்ட ஒன்றாக இருக்கும். பாடியவர்களும் தொலைக்காட்சியில் பார்த்தபோது வெறுத்த, மனதுக்கு உவப்பளிக்காத பாடகர்களாய் இருப்பார்கள். எனினும் அந்தக் கணத்தில் பாடல் உருவாக்கிய மனஎழுச்சி மறுக்கவியலாது உட்தங்கியிருக்கும்.
ஒருமுறை வேலையால் வருகையில், மிகவும் அலுப்பான மனோநிலையில், கேட்ட ஒரு பாடல் ''Livin' my life in a slow hell/ Different girl every night at the hotel /I ain't seen the sun shine in 3 damn days” என்று ஆரம்பிக்கும். இதைத் தமிழ்ப்படுத்தினால்,
'எனது வாழ்க்கையை மெதுவான ஒரு நரகத்தில் வாழ்கிறேன்,
ஒவ்வொருநாளைக்கு ஒரு பெண் ஹோட்டல் அறைகளில் -
சூரியவெளிச்சத்தை மூன்று கொடிய நாட்களாய்க் காணவேயில்லை'
இப்படிச் செல்லும். விடியலை முழுவதும் தொழிற்சாலை வேலையில் கடத்திவிட்டு, வீடு வருகையிலும், எனது தமிழ் ஆசிரியரின் "எவளாவது ஓருத்.தீ கிடைப்பாளா" கணங்களிலும் இத்தகைய பாடல் பிடிப்பதொன்றும் பெரிய ஆச்சரியமல்லத்தான். அதிலும் 3 damn days என்ற வரியை அவன் பாடுகிற விதமும் ஏக்கமும் துயரமும் தருவதாய் இருக்கும். அந்த 3 சபிக்கப்பட்ட நாட்களே வாழ்நாள் பூரா பரவியுள்ளதோ என்றெல்லாம் மனம் கிளர்வுறும். அப்புறம் அந்த ஒலிபரப்பாளினி பாடியவர் Kid Rock ஆல்பம் Cocky எனவும் கொடுமையாய் இருந்தது அது. முன்பொருமுறை www.wsws.org இணையத் தளத்தில் Kid Rock பற்றி வாசித்ததில் மனதில் பதிந்த ஒரே ஒரு வர்ணணை: Untalented artist. அது தவிர, பத்திரிகைகள் ஊடாக, எனக்குத் தெரிந்த பிற விடயங்கள்: பிரபல நீலப் பட நடிகை பமீலா ஆன்டர்ஸனின் முன்னாள் காதலன். அது தனிப்பட்ட விடயம், ஆனால் போயும் போயும் ஒரு கேவலங்கெட்ட பாடகனினுடைய பாடலா மனதைக் கவரோணும்? அதுவும் ஒரு புத்திஜீவியாய் உருவாகிக்கொண்டிருக்கிற பெட்டைக்கு (அது நான்தான்!)? வீடு வந்து அந்தப் பாடல் வரிகளை யாஹீ வில் போட்டு தேடலோ தேடல். அவ் வரிகள் நினைவு வந்தாலும், கிட் றொக் கின் பெயர் தெரிந்தாலும், அவனுடைய எல்லா ஆல்பங்களும் வந்து தொலைக்க எதிலென்று குறிப்பிட்ட -அடிமுடி தெரியாப் பாடலைத்- தேடுவது? அந்தப் பாடலை அவனுடன் கூட ஒரு பெண்ணும் பாடியிருந்தாள். ஏனோ அந்தப் பெண் Dido என்று எனக்கு விளங்கியிருந்தது. டீடோ Eminem உடைய பாடல்களெல்லாம் பாடியுள்ளார், ஆகவே அவர்தான் என நினைத்தேன். Dido and Kid rock song என அடித்தேன்; அடித்தேன் விதவிதமாய், யாஹீ பதில் தருவதாய் இல்லை. பிறகுதான் பார்த்தேன் கிட் றொக் உடன் Sherly Crow என ஒரு லிங்க். அமத்தினால் கிட் றொக்கோடு கூடப் பாடியது எனக்குப் பிடித்தமான இன்னொரு பாடகி.
ஒரு வழியாகப் பாடல் வரிகளை அடைந்தேன்:



[Kid Rock]
Livin' my life in a slow hell 
Different girl every night at the hotel 
I ain't seen the sun shine in 3 damn days 
Been fuelin' up on cocaine and whisky 
Wish I had a good girl to miss me 
Lord I wonder if I'll ever change my ways 
I put your picture away 
Sat down and cried today
I can't look at you while I'm lyin' next to her 
I put your picture away, sat down and cried today
I can't look at you, while I'm lyin next to her





"எனது வாழ்க்கையை மெதுவான ஒரு நரகத்தில் வாழ்கிறேன்,

ஒவ்வொரு நாளைக்கு ஒரு பெண் ஹோட்டல் அறைகளில்

சூரியவெளிச்சத்தை மூன்று கொடிய நாட்களாய்க் காணவேயில்லை

கொகெயினிலும் விஸ்கியிலும் சுதிகூடியபடி...

எனக்காக ஒரு நல்ல பெண் இருந்தால் நல்லம் என்று எண்ணியபடி...

கடவுளே

என் பழக்கங்களை நான் மாற்றுவேனா

உன் படத்தை துாரே வைத்தேன்

உட்கார்ந்திருந்து அழுதேன் இன்று

அவளுக்கருகில் ப
டுத்திருக்கும்போது உன்முகத்தை என்னால் பார்க்க முடியாது

உன் படத்தை துாரே வைத்தேன்

உட்கார்ந்திருந்து அழுதேன் இன்று

அவளுக்கருகில் ப
டுத்திருக்கும்போது உன்முகத்தை என்னால் பார்க்க முடியாது..."




என்று கிட் றொக் பாடி முடிய,

சேர்ள் குறோ பாடுவா:




I called you last night in the hotel

Everyone knows but they wont tell

But their half hearted smiles tell me

Somethin' just ain't right

I been waitin' on you for a long time

Fuelin' up on heartaches and cheap wine

I ain't heard from you in 3 damn nights

I put your picture away

I wonder where you been

I can't look at you while I'm lyin' next to him

I put your picture away

I wonder where you been

I can't look at you while I'm lyin' next to him



"நேற்றிரவு உனக்கு அழைத்தேன் - உன் ஹோட்டல் அறைக்கு
எல்லோரும் அறிவார்கள் ஆனால் யாரும் சொல்லார்கள்
ஆனால் அவர்களது அரைமனப் புன்னகை எனக்கு எல்லாவற்றையும் சொல்கிறது
ஏதோ சரி இல்லை!
உனக்காக நான் நீண்ட நேரம் காத்திருக்கிறேன்
இதயவலிகளாலும் மலிந்த வைன்னாலும் சுதிகூடியபடி...
மூன்று கடும் நாட்களாக உன்னிடமிருந்து செய்தியில்லை
உன் படத்தை துரே வைத்தேன்
நீ எங்கிருக்கிறாய் என எண்ணினேன்
உன் முகத்தை என்னால் பார்க்க முடியாது அவனருகில் படுத்திருக்கையில்.."


கேட்கும்போது இருந்த தீவிரம் பிறகு குறைந்தாலும், அந்த இரண்டு குரல்களும் மாறி மாறி பாடியபோது எழுந்த உணர்வெழுச்சி குறைவில்லை. அதே சமயம், அதென்ன அவனது வரிகளில் மட்டும் “நல்ல பெண்” என்கிற வரி, அதன் உள்ளர்த்தம் என்றெல்லாம் எதிர்வினையாக அறிவுசார் கேள்விகள் எழவும் செய்யும்.

சமீபத்தில் நான் கேட்ட ஒரு பாடலும் அது தந்த அனுவமும்தான் இதை பகிரவே தூண்டியது. X-FM இல் கேட்ட பாடல்:


EVERY BREATH YOU TAKE

Every breath you take
Every move you make
Every bond you break
Every step you take
I'll be watching you

Every single day
Every word you say
Every game you play
Every night you stay
I'll be watching you

O can't you see
You belong to me
How my poor heart aches with every step you take

Every move you make
Every vow you break
Every smile you fake
Every claim you stake
I'll be watching you

Since you've gone I been lost without a trace
I dream at night I can only see your face
I look around but it's you I can't replace
I keep crying baby please

Every move you make
Every vow you break
Every smile you fake
Every claim you stake
I'll be watching you

(by: The Police)


இது யாஹீவில் தேடி எடுத்த வரிகள். வந்து அடித்துப் பார்த்தால் அது ஸ்ரிங் இனது என்றதும் சிறிது ஏமாற்றமாக இருந்தது. அது ஒரு புதுப்பாடலாக இருக்கும் என்று எதிர்பார்த்திருந்தேன்.
அந்தப் பாடல் ஒரு classic என்று போட்டிருந்தார்கள். உண்மையாகத்தான் இருக்கவேண்டும். இந்தப் பாடலிடை வருகிற வரிகள்-


O can't you see

You belong to me
How my poor heart aches with every step you take


ஓ... உனக்குத் தெரியவில்லையா
நீ எனக்கு ரியவள்
நீ எடுக்கும் ஒவ்வொரு அடியிலும் என் இதயம் நோகிறது


பாப்லோ நெருடாவின் கவிதையொன்று “நீ என்னை மறந்தால்” என்று... அதில் இப்படி ஒரு அனுபவம் வரும்: 'அன்புக்குரியவளே! சிறிது சிறிதாக, நீ என்னை மறக்கநேரின் நானும் உன்னை மறந்துபோயிருப்பேன் ஆனால் நீ என்னை தினமும் தினமும் நினைக்கிறாயெனில்...
நானும்... உனைவிட அதிகமாக, உன்னைவிடத் தீவிரமாக உன்னை நினைக்கிறேன்'
அதே அனுபவத்தை அந்த 'பொலிஸ்காரர்களின்' (The Police) ஆல்பத்தில் பெறக்கூடியதாக இருந்தது. ஸ்ரிங் தனியே பாடியதைவிட 1980 வரை The Police என்கிற ஒரு band ஆக இருந்தபோது பாடிய இப் பாடலில் இக் குறிப்பிட்ட வரிகள் உயிர்ப்பாக இருக்கிறது.


மற்றப்படி, அறிவுபூர்வமாகப் பார்த்தால் இந்தப் பாடலகள், இந்தக் கவிதைகள் எல்லாமே
ஓரு உறவில் இருந்து பிரிந்த பிற்பாடு அதைப் பாடல்களால் ,கவிதைகளால் கிளறுவானேன் ('நான் இன்னும் இருக்கிறேன்' என குரல் விடுவானேன்?) எனக் கேட்கத்தான் வைக்கிறது. பாப்லோ நெருடாவும் இன்ன பிற கவிஞர்களும் இந்தப் பாடகர்களும் இயல்பில் யதார்த்தத்தில் அதைத்தான் செய்த(வ)ார்கள். ஆனால் கவிதையிலோ (ஒருத்தியுடன்) மிகமிகக் காதல்வசப்பட்ட ஒருவராய் ஒரு பிம்பம் அவரை/அவர்களையிட்டு உருவாகிறது. நியத்தில் இந்தப் பாடல்கள், அவர்களுடன் சம்மந்தப்பட்ட, பெண்களை -தம் வாழ்க்கையில் தொடர்ந்து செல்ல முடியாதவாறு- மீண்டும் மீண்டும் அவர்களை நாடச் செய்திருக்கும்! எம்மைக் குறிப்பிட்ட அளவுக்குத்தான் இவை ஆதிக்கம் செய்கின்றன. அந்த குறிப்பிட்ட அளவில், வாழ்வில் ஒரு பங்காக, தெருவில், திரையில், இசை நிகழ்ச்சிகளில் பாப்லோ நெருடாவின் கவிதை தந்த அனுபவத்தை தரத் தயாராகின்றன.
0

Friday, October 08, 2004

பெருந்தலைகளை உருட்டல் -4-

கவிஞர்களைப் பற்றி பகரும்போது எனது உயர்பாடசாலை (high school) கால இறுதியாண்டு ஞாபகம் வருகிறது. நண்பர் வீடுகளிலிருந்து புத்தகம் வேண்டி இலக்கிய வாசிப்பு வேட்டை நடந்துகொண்டிருந்த சமயம்.
விக்கிரமாதித்யனின் கவிதைகள் ஏனோ எனக்கு கேலிக்குரியதாய்பட்டது. என்னாலும் அதை எழுத முடியும் இந்தாள் ஏன் இப்பிடி என்ன மினக்கெடுத்துது என்றொரு மிதப்பான நினைப்பு. அப்போது அவரது 'மாதிரி' க் கவிதை ஒன்றைத் தயாரித்தேன்.

விக்கிரமாதித்யன் மாதிரி 1

பூனை பானை
பாலை எடுக்கும்
காளி வாளி
மனசை அறுக்கும்
குரங்கு சிரங்கு
மூலம் அறியும்.
கோலம் சூலம்
இருவேறு வடிவம்.
வடிவம் படிமம்
சொல்வதை எழுது
கவிதை சமதை
நான் எழுதுவது மட்டும்
வாடா போடா
புண்ணாக்குத் தலையா
என் நாக்கு உன் நாக்கு
எதிலும் பாக்கு
நட்புக்கு போட்டி
மாட்டுக்குப் பட்டி
வட்டத்துள் வட்டம்
(காளி செயமாரிக்கு)

இந்த விளையாட்டு சுவாரசியமானதாகி திருவாளர் சேரன், செயபாலன் கவிதை என நீண்டது. அன்னார்கள் மானநஸ்ட வழக்குப் போடார்கள் என்ற நம்பிக்கையுடன் (ஆமா... போட்டுட்டுத்தான் அடுத்த வேலை பார்ப்பார்கள். உண்மையில பார்த்தால் அவர்கள் எழுதுகிறதைவிட இது எவ்வளவோ நல்லா இருக்கு, அவங்களே இது தாங்கள்தான் எழுதின எண்டு உரிமை கொண்டாடாட்டாத்தான் ஆச்சர்யம்!):


வ. ஐ. ச சேயபாலன் மாதிரி 1

பாலியாற்றின் அடியில்
புதைந்துள்ளதடி என் மூதாதையரின் வேர்கள்

அங்கே
பாலியத்தில் கூடி மகிழ்ந்து
ஆடிக் களித்த நீ
எங்கேயடி இன்று

இன்று இரவல் புலத்தில்
எந்தையும் தாயும் கூடி மகிழ்ந்த
நிலத்தையும்
என் பாலியத்தின் பெட்டை
உன்னையும் நினைத்தபடி
0



சேரன் உ மாதிரி 1

அன்று:

சமாந்திரமான பாலம்:
நடந்தோம்

பாலத்தருகே
தாழம் பூ
செவ்வரத்தம் பூ
மரங்கள் நிற்கும்.

எமைத் தொடரும் விழிகளிடமிருந்து
வெகு துாரம் வந்தோம்

தனித்த வெளியில் - உன் முலை
நுனியில்
பனிக்கும் காதல் இரவு

கண்ணீர் சுக்கிலம்
இரவே சிறந்தது
கன்னி முலையில்
கிளர்வே சிறந்தது
0
அவரது மாதிரி (தொடர்ச்சி) 2

இன்று:

காலங்கள் கடந்தோம்/கடந்து
நாப்பது கடந்தும் துணை தேடி
கையில் பூவுடன்
காத்திருப்போ தொடர்கிறது
வாழ்வு நீள்கிறது
0

இவற்றோடு இலக்கிய கிசுகிசு என ஒரு வலைத்தளத்தை ஆரம்பிக்கும் எண்ணம் கூட அப்போது இருந்தது: அதில் நாம் சில இலக்கியப் பிரமுகர்களுக்கிட்டிருந்த ஒப்பற்ற நாமங்கள்: சே!RUN, Sucks.வர்த்தி, Rock.சுறா, சே!None, Che(f). indian,… etc. அப் ப/பிணி கைகூடாமல் இளங்காலக் கனாவாகவே போய்விட்டது.


பிற்குறிப்பு: இந்த "மாதிரி"க் கவிதைகள் குறித்து: தமிழ்நாட்டில், நவீன கவிதைகளாக உள்ள அனைத்தும் “மாதிரிகள்” தான். பசுவையா மாதிரி, மனுஸ்யபுத்திரன் மாதிரி, சல்மா மாதிரித்தான், அதுபோல புகலிட கவிதைகளும் வ.ஜ.ச மாதிரி, சேரன் மாதிரித்தான்! அத்தோடு பின்னவர்களது கவித்துவமும் மிக வரண்டு இலகுவில் “பிடித்துவிடக்கூடிய” பாணியை உடையவாகத்தான் உள்ளன. இந்தத் தளத்திலேயே அடிக்கடி இவர்கள் மாதிரிகளையும் இவர்களது மாதிரிகளையும் இடுவதாய் உள்ளேன்.

இன்னுமொரு வெளி - ஆம்பிளைகளின் எழுத்து -3-

இன்னுமொரு வெளி

புலம்பெயர் இலக்கியம் என்றொரு களத்தில் தங்களது இடத்தினை இருள்வெளி, சனதருமபோதினி, கறுப்பு என்கிற தொகுப்புகள் ஊடாக வெளிப்படுத்தி வருகிறர்கள் ஷோபா சக்தியும் சுகனும் சேனனும். அவை ஊடாக, போலித்தனம், வக்குரொத்து அரசியல், குட்டி முதலாழித்துவவாதிகள், பெண் அடிமைவாதிகள், வெள்ளாள மனோபாவிகள்(!), தலித் விரோதிகள், பெண் விரோதிகள் நிறைந்த புலம்பெயர் எழுத்தாளர்களுள் இருந்து தாங்கள் வேறுபட்டிருப்பதை அவர்கள் வெளிப்படுத்தி வருகிறார்கள். ஒருவகையில் அப்படியான அவர்களுடைய தேவை கூட இந்த இலக்கிய உலகத்துள் இலக்கிய பிரமுகர்களுள் தம்மை வித்தியாசப்படுத்தும் அவர்கள் தேவையின் பிரகாரமாய் இருக்கலாம்.
அவர்களுடைய புத்தகமான சனதருமபோதினியை நான் எங்கோ தொலைவில், பசுமையான மரங்களும் அழகான வீடுகளும் நிறைந்த வன்கூவர் நகரில், -தமிழ் கடைகள், பத்திரிகைகள், கோயில் குளங்கள் திருவிழாக்கள் அற்று- நிம்மதியாக, இப்போதுதான் ஆற அமர வாசிக்கக் கிடைத்தது. எல்லோராலும் பிரஸ்தாபிக்கப்ட்ட அல்லது அர்ச்சிக்கபட்ட ~உன்னத சங்கீதம்~ மே முதல் வாசிப்பு. தாமிரபரணிப் படுகொலைகள் பற்றிய முதல் கட்டுரையை எல்லோரும் போலவே நானும் தொடவில்லை. சேனனை அவரது குறியைப் பிடித்தபடி படிக்கும் பாக்கியமும் கிடைத்தது.
குண்டிக்குப் பின்னால் சிரித்தும், படித்தும் முடித்துவிட்டு இத் தொகுப்பில் அதிகம் பேசப்பட்டிருக்க வேண்டிய -இதுவரை பேசவே படாத- இரு கட்டுரைகளான தாமிரபரணிப் படுகொலைகள் மற்றும் எழுத்தின் வன்முறை ஆகியனவையை விடுத்து நானும், சனதருமபோதினிக்கு பப்ளிசிட்டி கொடுத்த ஒரு கதையை எடுத்து விளாச விரும்புவதற்குக் காரணம், இல்லாவிட்டால், என் ஆத்மா சாந்தியடையாது என்பதே!!!
ஏனெனில் இந்த மாதிரி எழுத்துக்கள் ஏற்கனவே நொந்துபோன எமது புண்-களில் கொட்டானைப் பாய்ச்சுகின்றன...

ஆம்பிளைகளின் எழுத்து



கொட்டானின் கொட்டம் என எழுதப்பட்டிருக்க வேண்டிய சிறுகதை இன்னமும் உள்ளே எரிந்துகொண்டிருக்கிறது. இதற்கான எதிர்வினை என்று வந்தவைகளில் '13 வயது சிறமி முதிர்ச்சியானவளாய் இருந்தால் இப்படியான உறவுகளில் ஒன்றும் சொல்ல முடியாது' என்று பொருள்பட யாரோ எழுதியது ஞாபத்தில் அழுத்தியது.
...........

இதுவரை எழுதப்பட்ட/டு பிரபலமான சிறுவர் ஒடுக்குமறை எழுத்துக்கள் யாவும் ஆண்களாலேயே எழுதப்பட்டன என்பது ஒரு ஆர்வம் தருகிற விசயம் (அதாவது (2001) பெண்கள் சந்திப்பு மலரில் உமா (ஜேர்மனி) குறிப்பிட்டதுபோல ஒடுக்குமுறையாளரின் இடத்திலிருந்து எழுதப்பட்டவைகள்). நற்போக்கு சிங்கர் எஸ்.போ எழுதிய தரமான இலக்கியம் 'தீ.' அதைப்போலவே போர்னோகிராபி யாய் ஆகக் கூடிய கருவில் விளாமிடிர் நபக்கோவ் எழுதிய நாவல் 'லோலைரா' (Lolita). (வரிசைப் படுத்துவதற்கு வேறு நாவல்கள் தெரியாததால் இத்துடன் விட்டுவிடுகிறேன்!)
எஸ். போ 'தீ' யில் பெண் குறியை 'வெட்கம்' என்று எழுதுகிறார். பெண் உறுப்பை அப்போதுதூன் முதன்முதலாய் கண்டுவிட்ட சிறுவன் போல் குதுா கலிக்கிறார்: "அவளுடைய வெட்கத்தை நான் பார்த்துவிட்டேன்." அவரிடம் இன்னொரு சமயம் வருகிறேன். இப்போது நபக்கோவையையும் நம்ம பையன்களையும் பார்ப்போம்.
வெள்ளையர்களைப் பொறுத்தவரையில் ஆசியாவின் எல்லாத்திற்குமே அவர்கள் பார்வையாளர்களே. 'கற்பழிக்ககப்ட்ட' அவர்களது பெண் கதறுவததைவிட 'கற்பழிபட்ட' கறுப்பு, ஆசியப் பெண்கள் கதறுவது அவர்களுக்கு வித்தியாசமாக இருந்திருக்கிறது/இருக்கிறது. அவர்கள் தமது ஆதிக்கத்தினால் நொந்துபோய் ஒரு பெண் மண் எடுத்து துாற்றும்போதும் அதை படம் எடுத்துக் கொள்வார்கள் ''அது ஒரு கலைத்துவமான காட்சி'' என (இப்படி ஒரு காட்சி இமையத்தின் ~ஆறுமுகம்~ நாவலிலும் வருகிறது). சுற்றுலாப் பயணிகளான அவர்களுக்கு தமது வெள்ளைத்தோல் பெண்களைத்தவிர மீதி ஆபிரிக்க ஆசியா (மற்றும் செவ்விந்தியர்கள்) எல்லாம் படம்பிடிப்புக்கான களங்கள்தான். இவர்களே அத்தகைய படங்களையும் எடுத்தபடி, இலங்கை இந்தியா போன்ற ஆசியா மற்றும் ஆபிரிக்க நாடுகளுக்கு சுற்றுலாப் பயணிகளாய் செல்லுகையில் எதிர்க்கும் பொருளாதார வலுவற்ற சிறு பாலகர்கள்/பாலகிகளை கொட்டான்களால் குத்திவிட்டு வருவார்கள்.
இதில் நபக்கோவ் 13 வயதுவரையான பெண்களின் மீதான தனது ஆர்வத்தைக் கூறிக்கொண்டே போகையில் சொல்கிறான்:
...வரலாற்றில் எத்தனை மன்னர்கள் குழந்தைகளை மணந்துள்ளனர். இன்றைக்கும் இந்தியாவில் பெண்கள் பூப்படைய முதலே கலியாணம் செய்து கொள்கிறார்கள். அவர்களது தெய்வம் ராமன் சீதையை மணந்து கொண்டபொழுது சீதைக்கு வயது ஐந்து. (மொ-பெயர்பு- சேனன்)

நபக்கோவ் என்கிற கள்ளன் அல்லது நபக்கோவின் பாத்திரம் என்கிற கதைசொல்லி என்பவன் போய்ப் பார்த்தானா இந்தியாவில் கிழவன்களுக்குக் கட்டிக்கொடுக்கப்பட்ட சிறு குழந்தைகள் இவரைப் போல குதூகலித்ததை? ஆனால் தூரத்தில் இருந்து குழந்தைகள்மீது காதல்வசப்பட்டிருக்கும் அவருக்கு அந்த/அத்தகைய ஏற்பாடு(கள்) தூரத்துப் பச்சையாய் ஏக்கம் தருவதாய் உள்ளது.
இதை சேனன் தனது எழுத்தில்் எடுத்தாள்கிறார். அந்த பந்தி அவரால் மொழி பெயர்க்கப்பட்டும் இருக்கிறது. பிறப்பால் ஓரு கீழைத்தேயனான இவரிற்கு தோன்றியிருக்க வேண்டிய இந்த முரண்பாடு அவருக்குத் தோன்றவில்லை. (அவ் எழுத்தின்் பேசுபொருள் அது பற்றியதல்லாமல் இருக்கலாம்).
அதன்் பேசுபொருளுக்குள்ளேயே அதை நகர்த்தவேண்டுமென்கிற பிரச்சினை எனக்கில்லாததால், (சேனன்) பூபிக் கெயர் ஏ வளராத எட்டொன்பது வயதுப் பிள்ளையின் மெதுமையான விரியாத குறிக்குள் ஒரு மிகப்பெரிய கொட்டானைத் குத்துவது எந்தக் கலைத்துவமான படைப்பில் வெளிக்கொணரப்பட்டாலும் அது வக்கிரம், வக்கிரம், கலைத்துவமான வக்கிரம் என எழுத்தைக் குத்துகிறேன்.
அது எஸ்.போ வோ, நபக்கோவோ எந்தக் கொம்பனோ எவன் எழுதினாலும் அது அதுதான். மின்கம்பங்களில் கொல்லப்பட்டவர்கள், மனநோயர்கள் பற்றிக் கவலையுறுகிற நண்பர்கள், ஆண்களால் இந்தப் புத்தகம் என்னிடம் தரப்பட்டிருக்குமாயின் கொண்டான்களால் தாக்கப்பட்ட சிறுவர் சிறுமிகளுக்கே சமர்ப்பித்திருப்பேன்.
புலம்பெயர்ந்தபிறகும் சாதியைக் கடைப்பிடிப்பவராக ஐயரைப் பார்த்து குண்டியால் சிரித்தும், எஸ்.போவின் அரசியலுடன் அஞ்சுசோத்திற்கும் உடன்படவில்லை என்று முன்னுரையிலும் சொல்லிய நேர்மையாளர்களான சுகனும் ஸோபாவும் அடக்குமுறை வரிசையில் (குழந்தைகள் (வேண்டுமானால் உப பிரிவாக, முறையே, தலித், கறுப்பு, வெள்ளைக் குழந்தைகள்), சிறுவர்கள், தலித் பெண்கள், பெண்கள், தலித்துகள் ...) முதலாவதாக இருக்கிற உயிர்கள் மீதான அடக்குமறையை பிரதிபலிக்கிற ஒரு படைப்பிற்கான தமது எதிர்ப்பை பதியாதது அவர்களும் இதனை ஏற்றுக் கொள்கிறார்கள் என்ற அர்த்தத்தையே தருகிறது.
அதனாலோ என்னவோ இலக்கியத்தில் எல்லாக் கொம்பன்களையும் வெருட்டுகிறதாய்ச் சொல்கிற இவர்களும் அவர்கள்போலவே ஆம்பிளை எழுத்துக்களை கொண்டுவருகிறார்கள்.
சாநி யும் கூட இந்த கதையில் 13 வயது ஆண்குழந்தையை குறிப்பிடாமல் (குறிப்பிட்டிருந்தால் அவர் நினைக்கிற அதி அதி உன்னத இலக்கியப் பிரதி கிட்டியிருக்காதோ) பெண் குழந்தையைக் குறிப்பிடுவதுமூலம் மீண்டும் யோனி மையவாதத்திற்கே வருகிறார் 3(பார்க்க இவரது விவாதம் அடங்கிய அரசு- குடும்பம்- பெண்ணியம் (1994), விடியல் வெளியீடு பக்கம் 75). மச்சான் ஒரு பெரிய ஆணையும் குழந்தையையும் ஒரே கதையில ஒண்டடிமண்டடியா போட்டு ஒரு மிக்சிங் இல தன்ர புட்டம், வாய் ஆகியவற்றக்குக் கொடுக்க வேண்டிய முக்கியத்துவத்தையும் அதையும் இணைக்கத்தான் பார்த்தார். ஆனால் யோனியின் புகழ்பாடி கதையை முடிப்பதுாடாகவும் அதனுாடாக தான் 'உன்னத' சங்கீதத்தைப் பெற்றதாகக் கூறுவதுாடாகவும் உன்னதமான அதி அதி (fresh) மரு அற்ற, ஒரு குழந்தையின் மிருதுவான, சுருங்காத தோலைப்போலவே இன்னமும் மாசடையாத செக்ஸ் சை ஒரு பெண்ணிடமிருந்து (அவள் எத்தகைய வயதெனினும்) ஒரு ஆணாக தான் பெற விரும்புவதையே அவர் தெரிவிக்கிறார். அது குழந்தையின் (வசதிப்படி, முதிர்ச்சியான குழந்தையின்) ஜோனியூடாகவே ஈடேறியிருக்கிறது.
இந்த கதாசிரியரின் எழுத்து எப்பொழுதும் முரண்பாடுகளின் பின்னணியிலேயே இயங்குகின்றது.
ஒரு பெட்டையாய், மிஸ்டர் சாரு வின் எழுத்தைப் பற்றிய எனது அதிர்ச்சி என்னவென்றால் -அதை யாரோ பிரசுரித்தது அல்ல- அதைப் பலரும் ஏற்றக்கொண்டதுதான். இலங்கை போன்ற நாடுகளில் இருக்கிற நண்பர்கள்கூட, 'அதை எழுதக் கூடாது என்றில்லைத்தானே, அது நல்ல புனைவு' என சொன்னபோது நான் மிகுந்த ஏமாற்றத்துக்குள்ளானேன். இலங்கையில் கைதடி போன்ற சிறுவர் இல்லங்களில் எல்லாம் சிறு குழந்தைகள் இந்த வன்முறைக்கு வக்கிரத்துக்கு இரையாகிக்கொண்டிருக்கிறார்கள். எப்போதும்போல அவர்களுக்குப் பாதுகாப்பே இல்லை. “நம்பிக்கைக்குரிய” பெரியவர்களால் துஸ்பிரயோகம் செய்யப்படும் இந்தக் குழந்தைகள் பற்றிய ஒரு பிரசுரம் பொறுப்பின்றி (தமது அரசியலுக்கு முக்கியத்துவம் கொடுத்தவர்களால்) வெளியிடப்படுவது அவர்கள்சார் எல்லா நியாயங்களையும் கேள்விக்குட்படுத்துகிற ஒன்று.
இவற்றை எழுதக்கூடாதென்பதோ எழுதுபவன் கைகளைத் துண்டிக்க வேண்டும் என்பதோ எனது முறைப்பாடு அல்ல. அவரது எழுதுகிற உரிமையையும் எனது எதிர்க்கிற உரிமையையும் (அவரது ஆண்குறியை வெட்டவேண்டும் என்று சொல்லிக்கூட) அதனை சிலபேர் பிரசுரிக்கிற உரிமையையும் நான் மதிக்கிறேன். ஆயினும், இதுவும் ஒரு அடக்குமுறை என்பது (புலிகளின் அரசியல் போலவே) தொகுப்பாளர்களால் சொல்லப்பட்டிருக்க வேண்டியது ஒடுக்கப்பட்ட ஜனங்களைப்பற்றிப் பேசுகின்றவர்களது நேர்மையை வெளிக்காட்டியிருக்கும். ஆகவே அதை அடக்குமுறை என அறியாத சில அப்பாவிக் கோயிந்தர்களும் அறிந்திருப்பார்கள்!
நாளைய உலகத்தைக் பார்க்கப் போகிற இந்தக் குழந்தைகள் பாலியல் சுதந்திரத்தை (அதைப் பேசுகிறவர்கள்போலவே) வளர்ந்த பிறகு பேசட்டும். இப்போது அவர்கள் தம் உலகத்தில், தம் வயதுக் குழந்தைகளைப் புணர்ந்து வாழ்வைத் தொடரட்டும். உங்களது வக்கிரமான fantasy களை அடைய கொட்டான்களைத் துாக்கிக்கொண்டு அலையாதீர்கள்.

சிறுவர் துஸ்பிரயோகம், மதம் மற்றும் குடும்பங்களிலிருந்து


சமீபத்தில் வன்கூவர் சிறுவர் காப்பகத்திலிருந்து வெளிவந்த ஒரு படம் பார்க்கக் கிடைத்தது. நான் கடைசி எழுத்தோட்டம் போகுமட்டும் அதொரு சிறுவர் துஸ்பிரயோக எதிர்ப்பு அமைப்பால் வெளியிடப்பட்ட படம் என்கிற தகவல் தரப் பெற்றிராதபடியால் இயல்பாக எந்த முன் கருத்துமின்றிப் பார்த்துக் கொண்டிருந்தேன்.
நீதிமன்றத்தில் ஆஜரான பதினொன்றோ பதின்மூன்றோ (சாருவின் கதாநாயகியின் வயது) வயது சிறுமி தன் அப்பா தன்னோடு செக்ஸ் செய்தார் என்று சொல்கிறாள். அதை எதிர்த்தரப்பு வாதியும், குழந்தையின் அம்மாவும், அப்பாவும் அவள் வளர்கிற பருவத்தில் முகங்கொடுக்கிற பிரச்சினையான தன்மீது எல்லோருடைய கவனமும் இருக்க வேண்டும் என்பதற்காக அப்படி சொலகிறாள் என சொல்கிறார்கள். கூடவே அவளது வகுப்பில் புதிதாகச் சேர்க்கப்பட்ட 'சிறுவர் துஸ்பிரயோக விழிப்புணர்வு' பற்றிய வகுப்பும் அவளுக்கு குழப்பத்தை ஏற்படுத்தி சாதாரணமான (normal) அப்பாவின் கொஞ்சல்களை, குளிக்கவாட்டுதலை சந்தேகிக் வைத்திருக்கலாம் என்றும் எதிர் தரப்பினர் வாதாடுகிறார்கள். (இது மறைமுகமான அப் பாடத்திட்டத்திற்கான (பாலியல் கல்வி) எதிர்ப்பு வாதமுங் கூட!) பார்வையாளினியான நானும் அதையே நினைக்கிறேன். மிகவும் வாஞ்சையுள்ளவனாகவும் உருக்கமான கண்களை உடையவனாகவும் எல்லாவற்றுக்கும் மேலாக ஒரு தந்தையால் அப்படி தன் குழந்தைக்கு செய்ய முடியும் என்பதை என்னால் நம்ப முடியவில்லை.
செக்ஸ் பெண் குறியினுாடாகச் செய்யப் படாததாலும் அவள் இன்னும் கன்னி என்பதாலும் அவளுக்காக வாதாடும் வழக்கறிஞருக்குக்கூட இறுதியில் அச் சந்தேகம் வந்துவிடுகிறது, இவள் பொய் சொல்கிறாளோ என்று... ஆனால் (இது தெரியவரக்கூடாதென்பதற்காக?) தன் குழந்தைகளின் புட்டம் வழி உறவுகொண்டிருக்கிறான் அந்த தகப்பன். (அவரது குழந்தைகளில் ஆறோ ஏழோ வயது ஆண் குழந்தையும் அடக்கம்)
இறுதிக் கட்டத்தில் ஏற்கனவே அத் தந்தையால் முன்பு இதே வன்முறைக்கு உள்ளாக்கப்பட்ட இப்போது திருமணம் செய்து கொண்டு குழந்தையும் இருக்கிற மூத்த பெண் உண்மையை சொல்ல படம் முடிகிறது.
இந்தப் படத்தின்பின் கனடாவில் வந்த சிறுவர் துஸ்பிரயோக வழக்குகளை (படத்தின் பெயர் சரியாய் ஞாபகம் இல்லை) -Fallen angel - வழக்குகள் (cases) என்றுதான் குறிப்பிட்டார்களாம்...!

எங்களுடைய சமூகத்தில் இத்தகைய 'சம்பவங்கள்' இடம்பெறுகிறபோதும் அவை மறைக்கப்பட்டும் பேச மறுக்கப்பட்டும் வருவதை கேள்விப் படுகிறோம். இல்லாதவை பற்றியெல்லாம் கற்பனைகள் காவுகிற ஒரு சமூகம் நடப்பவை பற்றி எழுதத் தயங்குவது ஏன்? இந்த வகையில் மட்டக்களப்பிலிருந்து வெளிவரும் பெண் சஞ்சகை (சூர்யா பெண்கள் அபிவிருத்தி கழகத்தால் வெளியிடப்படுவது) அங்கு நடக்கும் இத்தகைய செயல்களை வெளிக்கொணர்வது மாத்திரமின்றி, அவைகள் குறித்த பெண்களின் எதிர்வினைகள், பதிவுகள், நாடகங்களையும் நிகழ்த்துகிறது.
குழந்தைகளின் யோனிகளிலிருந்து உன்னதமான சங்கீதத்தை பெறுவதாக எழுதுகிற உன்னதமான ஆண்களின் மனோபாவத்தை சற்றே மாறுபட்டு அடக்கப்படும் பெண்களின் பார்வையிலிருந்து தரும் ஆக்கங்கள் கீழே:





1நான்
உயர்ந்தவன், உன்னதமானவன்4
தனித்துவமானவன்
நான் ஆண்

ஆண் என்பதால்
ஆற்றல் உள்ளவன்
அனைத்தும் அறிபவன்
குற்றம் செய்ய முடியாதவன்

குற்றம் இருந்தாலும்
மன்னிக்கப்பட வேண்டியவன்
ஏனெனில்
நான் ஆண் குறியை உடையவன்

எனது ஆண்குறி
எப்போதும் எங்கு வேண்டுமானாலும்
யாரைக் கண்டாலும்
விறைக்கக் கூடியது

சகோதரியோ மகளோ
யாரும் விதிவிலக்கல்ல
எனது ஆண்குறி விறைக்கக் கூடியது
அது இயற்கை

பண்பாடு
எனக்கு நடிப்பிற்குரியது
நான் வேடம் போடக் கூடியவன்
சமுதாயத்திற்காக ...

இந்த விறைப்பை வளப்படுத்த
நீலப்படங்கள் உண்டு
புத்தகங்கள் உண்டு
அதனால் இது வளப்படுத்தப்பட வேண்டியது

நீ யார்?
வெறும் பெண்
இந்த விறைப்பைத் தீர்க்கப்
படைக்கப்பட்டவள்

நான்
உயர்வானவன்
உன்னதமானவன்
போற்றப்பட வேண்டியவன்

நான் ஆண்
கட்டுப்பாடுகள் அற்றவன்
சந்தோசமானவன்
எனது ஆண்குறி
விறைக்கக் கூடியது.


------------------------------------

2(நிசப்த இரைச்சல் என்ற நாடகப் பிரதியிலிருந்து இறுதிப் பகுதி)
...
{...நான் சொல்லப் போறது ஒரு சின்னப் பிள்ளையிடை கதை அவவையும், அவவிடை தங்கச்சியையும் அவையிடை அம்மம் மாவோட விட்டிட்டு தாய் வெளிநாட்டுக்குப் போய்ட்டா. தகப்பன் அம்மம்மா வீட்டுக்கு பக்கத்திலை தான் இருக்கிறார். அந்த மனுசன் இந்தக் குழந்தையோடை உடல் உறவு கொண்டிருந்திருக்குது.

இது எப்பிடித் தெரிய வந்ததெண்டா, அந்தப் பிள்ளை கக்காக்குப் போகப் பயப்பிடும், நிக்கரைக் கழட்டப் பயப்பிடும், அறையைப் பூட்டினா பயப்பிடுவா. அம்மம்மாக்காரி பிள்ளை தன்னோட செல்லம் கொட்டுதாக்கும் எண்டு நினைச்சு கூப்பிட்டு அடிபோட்டு கக்காக்கு இருக்கச் சொல்லி விட்டிருக்கிறா. பிள்ளை அழுதழுது இருக்கேக்குள்ளைதான் பார்த்தா அவவிடை குதம் விரிஞ்சு சிவந்து போய் இருந்தது தெரிஞ்சுது.

உனக்கு என்ன மகள் நடந்ததெண்டு கேக்க அவவுக்கு சொல்லக்கூடியதாயிருந்ததெல்லாம் ... அப்பாவிடை சாரத்துள்ளை ஒரு பொல்லிருந்தது அதாலை அவர் எனக்கு குத்திறவர்.

சமுதாயத்தின் நிசப்தமோ பயங்கர இரைச்சலாய்...
என் நிம்மதியைக் கெடுக்கிறது

வெளிச்சம் கூட வேண்டாம்
வெளியில் நான் தெரிவேன்
ஜன்னல் கூட வேண்டாம்
காற்று என்னைத் தொட்டு விடும்

அப்பா
அண்ணா
மாமா
தாத்தா
ஆண்

மூத்திரக் குழாய் தொங்கும்
யாரும் என் அருகில் வந்தால்
என் முடி முட்கம்பி
என் கண் நெருப்பு
என் வாய் வெட்டருவாள்
வெட்டி
வெட்டி
வெட்டி
வெட்டி

(ஒவ்வொரு வெட்டிக்கும் ஒவ்வொரு பெண்ணாக எழுந்து ஆண்குறியை எதிர்ப்பதான நிலையில் நிற்க- ஆண்களாக அவர்களைப் பிராண்டும் நிலையில் நிற்பவர்கள் மலைத்து நிற்றல்)

சமுதாயத்தின் நிசப்தமோ பயங்கர இரைச்சலாய்
என் நிம்மதியைக் கெடுக்கிறது
(மெல்லிய இரைச்சலாகத் தொடங்கி அலறலான இரைச்சலாக மாறும்)




----------------------------------------------------------------------------------
நன்றி:
1கல்யாணி
பெண் இதழ் இலக்கம் 2, 1999
2(நன்றி: பெண் இதழ் இலக்கம் 3, 1998)
3...பாலுறவு என்பது யோனி மைய வாதத்தை அடிப்படையாகக்கொண்டு தவறான புள்ளியிலிருந்து தொடங்குகிறது. ...
யோனி மைய வாதம் ஒதுக்கப்பட்டப் புட்ட உறவு, வாய் உறவு எனப் பாலுறவின் ஏனைய கூறுகள் முக்கியத்துவம் பெற வேண்டும். புட்டம், வாய் போன்றவற்றிற்குச் சமனான முக்கியத்துவமே யோனிக்கும் தரப்பட வேண்டும். (பக். 75) ... இறுதியாக யோனி என்பது இனப்பெருக்க மையமாக அமைந்து பெண்ணின் கார்ப்பம் குறித்த பயத்திற்கும் அடிப்படையாக உள்ளது."

எனப் பெண்களின் பயம் குறித்தெல்லாம் 'பெரிதாய்' அக்கறைப்படுகிறவர், இக் கதையில் வருகிற ஆணுடனான உறவையன்றி குழந்தையுடனான உறவையே 'உன்னத சங்கீதமாக' பகிர்கிறார். யோனியை -அதுவும் ஒரு சிறுமியினுடையது- ஒரு உறுப்பாக பார்க்க மறுத்து (glory) புகழ் பாடுகிறார். 'உன்னத சங்கீதம்' எனத் தலைப்பிட்டு அதனுாடாக எதிலும் (மாசுமறுவற்ற) 'உன்னதத்தைத்' (அதாவது இன்னும் சொல்வதானால் 'கன்னி' ப் பெண்களைத் தேடும்) தேடுகிற ஒரு ஆணை வெளிப்படுத்தி நிற்கிறார் (அந்த ஆணிற்கு எதற்கு பின்நவீனத்துவ முகம்?).
4 தன்னை உன்னதமான ஆண் என எண்ணுகிற ஒருவனாலேயே 13 வயது சிறுமியுடனான உறவை உன்னத சங்கீதம் என போற்றிப் பாடிட முடியும் என்பதைச் சொல்லவும் வேணுமோ?

Tuesday, October 05, 2004

முழக்கம்: எச்சரிக்கை! -2-

முதலில் ஒரு பெட்டையின் அச்சத்தைச் சொன்னேன், ஆனால் இனித்தான் ஒரு மிகப்பெரிய சமூகப் அச்சத்தைப் பற்றி சொல்லப் போகிறேன் (பெண்களின் அச்சம் என்ன பெரிசு!!!)

ரொறன்றோ எனது பிரச்சினைக்குரிய நகரமாவதற்கு நிறையக் காரணங்கள் உண்டு. முக்கியமானவை அங்குள்ள தமிழர் கடைகள், கலை நிகழ்ச்சிகள், முக்கியமாக கோடைகால சாமத்திய மற்றும் திருமண விழாக்கள்... கோடை விடுமுறை ரொறன்ரோவிலேயே கழிந்தது.
ரோறன்ரோவிற்கே உரிய சிறப்பம்சமான 'தமிழ்ப்' பத்திரிகைகளை பார்க்கக்கூடாதென்று நினைத்தபோதும் தாய் மொழியாம் தமிழைப் புறக்கணித்தல் முடியாது எனவே சும்மா கிடந்த பத்திரிகைகளை தாகத்துடன் படித்தேன் அத்தனையும் இலவசப் பத்திரிகைகள்தான்.

விதிவிலக்காக, நான் உலகத் தமிழரையும் வாங்கத்தான் செய்தேன் (அது முஸ்லிம்களை -எதிரிகளிடமிருந்து- எச்சரிக்கையுடன் இருக்கும்படி முன்பக்கத்தில் அடிக்கடி சொல்லுகிறது). உலகத்தமிழர் என்றதும் ரஸ்யா பற்றிய அரசியல் நகைச்சுவைத் துணுக்கு (அதன் இணையத்தளத்தில் உள்ளது) ஒன்றுதான் மனதுள் வருகிறது. ருவினோச்சிடம் நண்பன் கேட்டானாம் "நீ கமியூனிஸ்ட் கட்சிப் பத்திரிகை படிக்கிறனியோ" எண்டு. அதற்கு அவன் சொன்னானாம் "ஓம், பின்ன?! இல்லாட்டி எனக்கெப்பிடித் தெரியும் நான் எவ்வளவு சந்தோசமான வாழ்க்கையை வாழ்றன் எண்டு!" அது ஸ்டாலின் கால நகைச்சுவை... அதுபோலத்தான் உலகத்தமிழரும்... அதல்ல விசயம்!
உதயன், தமிழர் செந்தாமரை, சுதந்திரன் (இதழ்: 50), முரசொலி, முழக்கம், ஈழமுரசு ...ஒரே பால் திருமணம் நாளை பலதார மணத்துக்கு வழிவகுக்கும் அல்லவா, இடி அமீனும் பிடல் காஸ்ரோவும் இரண்டு சர்வாதிகாரிகள்... வகையறா செய்திகள். ஆனால் முரசொலி எல்லாவற்றையும் துாக்கி சாப்பிட்டுவிட்டது. அது நடிகை பிரதியுஸா நடிக்கிற புதுப் படம் ஒன்றைப்பற்றி அவவின்ர படமும்போட்டு செய்தி வெளியிட்டிருக்கு. வெகு விரைவில் வெளிவருமாம். சந்தோசம்தான்... ஆனா அந்த பெட்டை பாலியல் வன்முறைக்கு உட்படுத்தப்பட்டு கொலையும் செய்யப்பட்டு கடைசி ஒரு வருடமாவது இருக்கும். இப்பிடி முசுப்பாத்தி விட்டுக்கொண்டு இறந்தவர்களது ஆன்மாவையும் நிம்மதியா இருக்கவிடாம செய்துகொண்டு இப் பத்திரிகைகள் கிடக்க, இங்கால இன்னொரு பத்திரிகை புது ஸ்டன்டுகளோட வெளிக்கிட்டு நிக்குது.
தமிழ் சமூகத்தின் மீதும் தமிழ் மக்கள் மீதும் தமிழ் சிறார்களுக்கு தமிழில் பெயர் வைப்பதிலும் ஓயாத பற்றுக் கொண்ட இப்பத்திரிக்கை (அப்பெயர்களாவன மனுநீதிகண்ட சோழன், சங்கிலியன், இளஞ்சேரலாதன், இளஞ்செட்சென்னி, இத்தியாதி) தினமுரசுட நகல் (வெளி தோற்றத்தில) எடுவையை சமீப காலங்களில் எடுக்க வெளிக்கிட்டிருக்கிறது. 2 வருடங்களுக்கு முன்பு அது கலராய் எல்லாம் வந்ததில்லை. அதெல்லாம் ஓக்கே.
இடிபோல பெட்டையிட நெஞ்ச துளைச்ச விசயம் முழக்கத்தில் வெளிவந்த "கனடாத்தமிழரை விழுங்கும் பரப்புரை வலைப்பின்னல்" என்கிற கட்டுரை.
“பொதுவாக யுத்த நிறுத்த காலத்தில் தமிழ்த் தேசிய உணர்வு மழுங்கடிக்கப்பட்டு வருகிறது” என்று கவலைப்பட்டுக்கொண்டு, அதை முறியிடிக்கும் முகமான தமது வரலாற்றுக் கடமையை கூறிக்கொண்டுபோன அக்கட்டுரையாளர் (வானதி, பொறுப்பாசிரியர், முழக்கம்) துண்டுப் பிரசுரங்கள், எதிர்ச்செயற்பாடுகள் இவற்றின் நோக்கங்களை ஏழு (7) விதமாகப் பிரிக்கிறார். அவையாவன:
1. மொட்டைப் பிரசுரங்கள் மூலம் தமிழர்களின்
தலைமையாகத் திகழக்கூடியவர்களைக்
குறிவைத்துத் தாக்குதல்
2. ஊடகங்களைத் தமது கட்டுப்பாட்டுக்குள்
கொண்டு வந்து சோரம்போகும்
ஊடகவியலாளர்களைத் தமது கூட்டணிக்குள்
இணைத்துக்கொள்ளுதல்
3. காலத்தின் தேவையாக இருக்கக்கூடிய
முக்கியமான செயற்றிட்டங்கள், பணிகளில் இருந்து
மக்களையும், தொண்டர்களையும் திசை திருப்புதல்
4. தலைமை சரியில்லை என்ற கருத்தை நிறுவி,
புதியதொரு தலைமை இக்காலத்தின் தேவை என்று
வலியுறுத்தல்
5. தமிழ்த் தேசியத்துக்கு ஆதரவான வணிக
நிறுவனங்களின் சேவை குறித்து அவதூறுகளைப்
பரப்புதல்
6. மதரீதியாகத் தமிழர்களைப் பிரித்து மோதவிட்டு
இரசித்தல்
7. இணையத்தளம் ஊடாக மின்னஞ்சல்கள்,
திரைப்பாதுகாப்பு (Screen Savers) மூலம்
வைரஸ்களைப் பரப்பி கணணிகளைத் தாக்குதல்
இத் தலைப்புகளுக்குக் கீழே அவர் எழுதியவைகள் அநேகம். அதில் ஒரு தலைப்பின்கீழ் கீழ்க்கண்ட வாக்கியங்களைத் தருகிறார்: “தலைமை சரியில்லை என்ற கருத்தை நிறுவி, புதியதொரு தலைமை இக்காலத்தின் தேவை என்று வலியுறுத்தல் வலைப்பின்னலின் முக்கிய அங்கமாகப் புதிய கூட்டணி ஒன்று உருவாகுவதைத் தமிழ்த்தேசிய விரோத சக்திகள் விரும்புகின்றன. அதற்காக இந்தக் கனேடிய மண்ணில் தமிழர்களது பிரதிநிதிகளாக, தலைமையாக இருப்பதற்கு உலகத் தமிழர் இயக்கம் தகுதியற்றது என்ற பரப்புரையை முன்வைத்து தனிநபர்கள், வணிகர்கள், ஊடகங்கள் இணைந்த புதிய கூட்டணியை உருவாக்குவதில் இந்த சக்திகள் முனைப்போடு
இருந்து வருகின்றன. அண்மையில் இக் கூட்டணியைஉருவாக்குவதற்கான முயற்சி
ரொறன்ரோவில் அரங்கேறியதைப் பலர் அறிந்திருக்கமாட்டார்கள்.
...உணர்ந்த தமிழ்த்தேசிய எதிர்ப்புப் பரப்புரை சூத்திரதாரிகள், இதற்கான ஆரம்ப நகர்வுகளை இன்று ரொறன்ரோவில் மேற்கொண்டுள்ளனர். இது விரிவுடையும் என்று
எதிர்பார்க்கப்படுகிறது. உங்களுக்கு இது குறித்த செய்திகள் கிடைக்குமிடத்து இன்று கனடாத் தமிழர்களின் பிரதிநிதிகளாக விளங்கக்கூடிய உலகத்தமிழர் இயக்கத்தினருடன் தொடர்புகொள்ள வேண்டியது இன்றியமையாதது ஆகின்றது. எதிர்ப்புப் பரப்புரை விரிவடையும் இக் காலத்தில் உங்கள் தேசிய உணர்வைக் காட்டுவதற்கு தமிழ்த்தேசியத்
தொண்டு செய்தல் சிறந்ததொரு எதிர் நடவடிக்கையாகும்.”
உண்மையில் வேலையால வந்து பேப்பர ஒரு தட்டுத் தட்டிற களைச்சுப்போன தமிழர்களுக்கு அப் - பாவித் ரத்த்தில ஏதோ ஊடுருவலாம் இதைப் படிக்கையில். 'ச்சா, நம்முள்ள ஊடுருவிறாங்கள்" என்று ஒரு எச்சரிக்கை கலந்த தலையாட்டல் நிகழலாம். எந்தக் கேள்விகளையும் எழவிடாது "துரோகி" என்கிற ஒலி மட்டுமே அவர்களுள் ஒலிக்கும். - ஆனால்
யார் சோரம்போனவர்கள்? அதை நிர்ணயிப்பது யார்?
இவற்றையெல்லாம் தமிழ் மக்களை அச்சப் படுத்துதல், அட துரோகிகளின் செயல்களுக்கு நான் மயங்கிவிட்டோமா என்கிற மனஉளைச்சலுக்குள் உண்டாக்குதல் எனவிட்டாலும், உண்மையில் இவர்கள் குறிப்பிடுகிற இந்த அச்சங்கள் தெளிவான, சுயசிந்தனை உடைய மக்களை உடைய இயக்கத்திற்கு அவசியமற்றவை (அது சரி!). ஆனால் அது எந்தக் காலத்திலும் அப்படி அல்லாதபடியால், இப்படியான தமது பயங்களை மக்களுடைய தலையில் போட்டு இவ் ஊடகங்கள் தமது பிழைப்பையும் 'வரலாற்றுக் கடமையையும்' செய்கின்றன. ஈழமுரசும் தன் தேவை கருதி அதை மறுபிரசுரமும் செய்கிறது.
எனது கேள்வியெல்லாம் இவர்களுக்கெல்லாம் எங்கிருந்து வருகிறது சமூகத்தைப் பற்றித் தாம் பேசலாம் என்கிற உரிமை, தமது கவலைகளை சமூகத்தின் தலைகளில் போடலாம் என்கிற உரிமை? துாயதமிழ் பேர் வரிசையில் இவர்கள் தொடராய் வெளியிடுகிற பெயர்களை இவர்கள்தான் வைக்கவேண்டும்! சத்தியமாய் சொல்கிறேன் என் பிள்ளைகளுக்கு இவர்களது ஆண்ட பரம்பரை பெயர்களான கரிகாலன், அவன் இவன் (ஆண்பெண்) பெயர்களை வைக்கமாட்டேன். இருப்பில் இருக்கிற பெட்டைகளது தினி, யினி, செல்வி, எச்சங்களைவிட வேறு மொழிப் பெயர்கள் மிச்சம் நல்லம். அழகான சில்வியா, துரியன் (துரியோதனின் சுருக்கம்) மிக அர்த்தம் நிறைந்தவையும்.

இதை அறிவிக்குமாறு தெரிவித்திருந்தது: இது எந்த பத்திரிகா தர்மத்துக்கும் பொருந்தியது அல்ல, சரி அந்தக் கர்மம்தான் இல்ல, ஒரு பொலிஸ் இலாகாவோ சட்ட நிறுவனம் (அல்லது அதன் சம்மதத்துடன்) எதுவோ தந்தாலேயொழிய மற்றப்படி இப்படி ஒரு விண்ணப்பம் தாங்கிய கட்டுரையை வெளியிடுவது தவறானதாகும். முழங்குபவர்கள் முழங்கட்டும். ஆனால் இப்படி ஒரு வேண்டுகோளை ஒரு பத்திரிகையில் பொறுப்பான ஆசிரியராய் இருக்கும் ஒருவர் எழுதுவது இந் நாட்டின் சட்டப்படி குற்றம் என்றும் அதை நன்று அறிந்த, பேச்சுரிமை பற்றி (பம்மாத்துக்குத்தான் என்றாலும்) பேசுகிற ஒரு நாட்டில் ஒளிந்திருந்து அவர்களது சட்டங்களையும் அறிந்தவளாகிய என்னை ஒற்றள் (informer) வேலை செய்யச் சொல்லாதீர்கள். அதனால் உங்களுடைய பிரச்சாரத்தை அதன் எல்லைகளுக்குள்ளாற நடத்துங்கள்.
“...உங்களுக்கு இது குறித்த
செய்திகள் கிடைக்குமிடத்து இன்று கனடாத்
தமிழர்களின் பிரதிநிதிகளாக விளங்கக்கூடிய
உலகத்தமிழர் இயக்கத்தினருடன் தொடர்புகொள்ள
வேண்டியது இன்றியமையாதது ஆகின்றது. எதிர்ப்புப்
பரப்புரை விரிவடையும் இக்காலத்தில் உங்கள்
தேசிய உணர்வைக் காட்டுவதற்கு தமிழ்த்தேசியத்
தொண்டு செய்தல் சிறந்ததொரு எதிர்
நடவடிக்கையாகும்.”

அன்பர்களே உங்களுக்க யார் சொன்னார்கள் கனடாத்தமிழரின் பிரதிநிதிகள் இன்னார் என்று? அதை தாங்களே முடிவெடுத்து தகவல் தெரிவிக்குமாறு பரிந்துரைப்பது உங்களுக்கு அதிகமாய்ப் படவில்லையா?
நீங்கள் துரோகி என அழைக்க விரும்பினால் நானும் தமிழை தந்தைதாய் மொழியாய் கொண்டவள் ஆகையால் இந்த எச்சரிக்கைகளைத் தந்து எம்மை அச்சுறுத்த வேண்டாமென்று கண்டிக்கிறேன். எந்த மாடியால் குதிப்பதென எண்ணமிட்டிருக்கும் மக்கள் மனங்களில் நச்சாய் ஆண்ட பரம்பரைக் கதைகளைக் கூறி ரென்சன் படுத்தாதீர்கள். இன்னுமொன்று, அவர்களுக்கு(உலகத்தமிழருக்கு)த் தகவல் தந்தால் துரோகியில்லை சரி, ஆனால் அவர்கள் அத் தகவலை என்ன செய்வார்கள்? தகவல் தருமாறு கூறுகின்ற உள்ளர்த்தம் என்ன? கொலைக் கலாச்சாரம்தானே?

சுயபுத்திகொண்ட மக்கள் ஏன் துரோகிகளினதும், எதிரிகளினதும் கட்டுக் கதைகளை நம்பப் போகிறார்கள்? அது எந்த வலையில் வந்தால் என்ன? உங்களுக்கு எதிரிகளினைப்போலவே மக்களிலும் நம்பிக்கை இல்லையா?
(ஆனி 2003)

Monday, October 04, 2004

பெட்டை அலசல் (2003) -1-

ஒலியின் அடிப்படையிலும் சரி சுயமதிப்பின் அடிப்படையிலும் சரி பெட்டை என்கிற சொல் மகிழ்ச்சிகரமான சொல் இல்லை: பெட்டை என சொல்லுகிறவரோடு நான் நல்ல உறவைப் பேணியதில்லை- ஒரு குட்டிச் சாத்தனைத் தவிர! ஒரு நாள் இந்த குட்டிச் சாத்தான் "உங்களுக்கு எந்தப் பவர்ர்ர் றேஞ்சர் புடிக்கும்" என ஆரம்பித்தான். அவனது தொடர் அறுவையைக் கேட்க விருப்பமின்றி "blue" என்றேன்.
அவன் மிகவும் அப்சற் ஆகி "இல்ல, அது பெட்டக் கலர் இல்லையே. ஏன் உங்களுக்கு யெல்லோ பவர் றேஞ்சரும் பிங்க் பவர் றேஞ்சரும் பிடிக்காதா" என எதிர்க்கேள்வி கேட்டான்.
"ஏன்டா உனக்குப் பிடிக்குமா"
"சீய்ய்ய்...! அது பெட்டைக் கலர்! எனக்குப் பிடிக்காது"
உடனே நான் அப்சற் ஆகி கையை ஆட்டி ஆட்டி என்ர வயதால உறுக்கினேன்: "டேய் அடி வாங்கப் போற, பெட்டை கலர் எண்டு ஒண்டில்ல, அதென்ன பெட்டை எண்டிறது? நீ இனி பெட்டை எண்டு சொல்லக் கூடாது சரியா, கே(G)ள் (girl) எண்டுதான் சொல்லோணும், விளங்குதா"
"ம்? கே(G)ள் (girl) எண்டா பெட்டைதானே?" என்றொரு பொடிப்புள்ளையற்ற சிரிப்பு வேற...

இப்படி முடிந்த உரையாடலின் பிறகு பெட்டை பற்றிய என் கடுமையான நிலைப்பாட்டை மாற்றிக் கொண்டேன்: அது கடுமையானதாக, 'பொம்பிளைப் பிள்ளை'யைக் குறைத்து மதிப்பிடுவதாக உள்ளது என்றாலும் girl என்கிற ஆங்கில சொல்லுக்கு ஈடான தமிழ் சொல்லாக (பேச்சு மொழியில்) எனக்கு அதுதான் படுகிறது.
...
இந்தப் பெட்டைக்குப் பட்டவை என்கிற சுவாரசியமான பத்தியில் எத்தனையோ விசயங்களை எழுத நினைத்தாலும் பெட்டைக்கு என்ன பட்டிருக்கும் என்கிற இன்னும் சுவாரசியமான ஈடுபாட்டில் ஆண்கள் இருப்பர் என்பதால் அதையும் கொஞ்சம் சொல்லிவிடவேண்டும்.
பெட்டைக்கு படக் கூடியது பற்றிய ஒரு ஆணின் உடனடியான ஊகம் ஒரு ஆண் குறி!
இதை எமது ஆண்கள் நினைப்பதில் எனக்கொன்றும் வருத்தமில்லை. மேற்கில் பொப் பாடகி பிரிட்னி ஸ்பியர்ஸின் முதல் ஹிற் பாடல்: ஹிற் மீ பேபி வன் மோர் ரைம் (Hit me baby one more time) இன் அர்த்தமே இந்த ரியூப்் லைற் பெட்டைக்கு தெரியவந்து கொஞ்சக் காலம்தான்.
ஹிற் என்கிற ஆங்கில சொல் அடித்தல் என்று மொழிபெயர்க்கப்பட்டால் இந்தப் பாடகி தன் ஆண் நண்பனிடம் கேட்பது தனக்கு இன்னுமொருமுறை அடி என்றுதான்.
உடலுறவு என்பது ஆணின் குறி பெண்ணுக்கு அடிப்பதான ஒரு போர்னோகிராபிக் Vs. ஆணாதிக்க கருத்தோட்டதினடிப்படையில் ஹோலிவூட் தருகிற இந்த வியாபார சினிமா, இசை உலகம், என்பன இயங்கிக்கொண்டிருக்கின்றன. இந்த மாதிரி ஊடகங்களால் ஈர்க்கப்பட்டுள்ளவர்கள் இன்னொரு நாட்டில் நடக்கும் யுத்தம் மரணம் ஆக்கிரமிப்பு பற்றி அறிந்துகொள்ள இயலாதளவுக்கு பாலியல் அவஸ்தையுள் (Sexual tension) மூழ்கியுள்ளார்கள்.
இந்தப் பிரபல பொப் பாடகியின் முதல் ஹிற் பாடலான இது தொடக்கம் மிக சமீபத்தைய 'நான் உனக்கொரு அடிமையாக இருப்பேன்' (I am a slave for you) பாடல் வரை, 6, 7 வயது சிறுவர்களும் இவற்றின் இரசிகர்களாய் இருக்கிறார்கள். ஐந்தாறு வயதிலேயே தமது பிருஸ்டங்களை TV celebrities போலவே பின்னே தள்ளி நடக்கத் தொடங்கிவிட்ட இந்தக் குழந்தைகளே 11, 12 வயதுகளில் குழந்தைகளை பெறுகிறார்கள். பதின்ம பருவத்தில் கர்ப்பமாதல் (Teen Pregnancy), சீக்கிரம் முதிர்தல் -உதாரணம் 8 அல்லது பத்து வயதிலேயே மாதவிலக்கு தொடங்குதல்- (Aging Early) போன்றன மேற்கின் இன்றைய பாரிய பிரச்சினைகளாக இருக்கின்றன. குழந்தைகளின் முதிர்ச்சிக்கும் கர்ப்பமாதலுக்கும் ஊக்கிகளாய் ஊடகங்கள் பெரும் பங்கு வகிக்கின்றன. அல்லாதுவிடில், மிக இளவயதிலேயே ஆணுறை மற்றும் பாலியல் பற்றி பாடத்திட்டத்தில் இணைத்துள்ள நாடுகளில் குழந்தைகள் ஏன் குழந்தைகள் பெற வேண்டும்? ஆணாதிக்க சமூகத்தின் பிரதிநிதிகளான சக மாணவன்கள் உடலுறவின்போது ஏன் ஆணுறையைப் போடாமல் பெண்குழந்தைகளே மாத்திரைகள் பாவிக்கிறார்கள், கருச்சிதைவு பல தடவைகள் செய்து உடல் நலத்தைக் கெடுக்கிறார்கள், முடியாதபட்சத்தில் இளவயதிலேயே பிள்ளை பெற்றுக் கொள்கிறார்கள்?
இது இன்றைய தொழில்நுட்ப மற்றும் முன்னேற்றங்களின் பாலான எதிர்மறையான/நிலை நோக்கு அல்ல. எறிக்கா யோங் (Erica jong) ஒரு தொலைக்காட்சி நிகழ்ச்சியில் "பதினொரு அல்லது பன்ரெண்டு வயதுக் சிறுமிகள்் (ஆண்களுக்கு) Oral sex செய்வது ஒன்றும் பெண்களின் பாலியல் சுதந்திரம் அல்ல" என்றார். உண்மையில் இக் காலமும் எக் காலமும் போல ஆணுக்குரிய பாலியல் சுதந்திரத்தையே பேசுகிறது.

கொசுறு: அடித்தல் என்பது ஒரு வன்முறை. அதிலும் ஆண்குறியால் அடித்தல் என்பது வன்முறையின் உச்சம்! சமீபத்தில் அளவெட்டி. சிறீசுகந்தராசாவின் கதைத்தொகுப்பொன்று வாசிக்கக் கிடைத்தது. அதில் பெண்ணெனப்படுபவள் என்கிற ஒரு சிறுகதையில் ஒரு கிழவர் தனது காதலிகளை கொட்டிலுக்குத் துாக்கிச் சென்ற தன் இளமைக் காலத்து கதைகளை சிறுவர்களுக்குச் சொல்லுவார், சிறுவர்கள், கொண்டுபோய் என்ன செய்தீர்கள் என கேட்க அவர் சொல்லுவார்: "...பிறகென்ன குத்து குத்தெண்டு குத்தினதுதான்."
உண்மையில் இப்படி யோசித்துக்கொண்டும் வாசித்துக்கொண்டும் வளர்கிற பெட்டைகளுக்கு இந்த எழுத்துக்களை விட அச்சம் தருவதாய் வேறொன்றும் இருக்க முடியாது.